Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டெங்குவை வென்ற கியூபாவின் கதை

Featured Replies

சுகாதாரத்துறை கொசுக்களை விரட்டிய யுக்தி...! - டெங்குவை வென்ற கியூபாவின் கதை - அத்தியாயம்-1

 
 

டெங்கு

பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு, உயர்தரச் சிகிச்சை ஆகியவற்றுக்கு ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்காவையும் உதாரணமாகப் பேசுவது இந்தியா போன்ற நாடுகளில் ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. இதேசமயம், லட்சக்கணக்கான மக்களைப் பாதித்த ’டெங்கு’ ஆபத்தை, தங்கள் நாட்டிலிருந்து விரட்டியடித்து சத்தமில்லாமல் சாதித்துக்காட்டியுள்ள கியூபாவின் வழிமுறையை, முன்மாதிரியாகப் பின்பற்றுமாறு ஐநா அமைப்புகளே கேட்டுக்கொண்டிருக்கின்றன. 

 

இதையெல்லாம்விட, கியூபாமீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை அரை நூற்றாண்டுகளாக இன்னும் முழுமையாக நீக்கப்படாதநிலையில், கியூபாவுடன் அமெரிக்கா அரசு ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது. 

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அந்த உடன்பாடு கையெழுத்தானது. அப்போது பேசிய அமெரிக்க அரசின் சுகாதாரம் மற்றும் மானுடசேவைகள் துறையின் செயலாளர் சில்வியா மேத்யூஸ் பன்வெல், “ சுகாதாரத்துக்கும் அறிவியலுக்கும் கியூபா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. தாய் மூலம் குழந்தைக்கு எய்ட்ஸ் பரவுவதை ஒழித்த முதல் நாடாக ஆனது, மேற்கு ஆப்பிரிக்காவில் பரவிய எபோலா வைரஸைக் கட்டுப்படுத்தியது ஆகியவற்றின் மூலம் சமீபமாக கியூபா தன்னை நிரூபித்துக்காட்டியுள்ளது” என்று பாராட்டினார். 

அமெரிக்க சுகாதார மற்றும் மானுடசேவைகள் உலக விவகார அலுவலகத்தின் தலைவர் ஜிம்மி கோல்கர்,” டெங்குக் காய்ச்சல் மற்றும் உலகம் முழுக்க பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள ஜிகா வைரஸ் ஆகியவற்றை எதிர்கொள்ள, உலக சுகாதார நிறுவனம் அமைத்துள்ள ஒத்துழைப்பு மையங்களுக்கு கியூபா ஒரு வீட்டைப் போன்றது. ஏடிஸ் எஜிப்டி கொசுவால் உண்டாகும் வெப்பமண்டல நோய்களை கியூப அரசு கையாண்ட அனுபவத்தை, இந்த உடன்பாட்டின் மூலம் அமெரிக்கா பெறமுடியும்” என்று குறிப்பிட்டது, வரலாற்று முக்கியத்துவம் உடையது! 

இந்த உடன்பாட்டுக்கு முன்னர்வரை, அமெரிக்காவில் மூட்டுமுடக்குவாத அபாயத்தில் இருந்த ஆயிரக்கணக்கான சர்க்கரை நோயாளிகள் நோயாளிகள், கியூப நாட்டுத் தயாரிப்பான ஹெபெர்பிராட்- பி எனும் மருந்தை சட்டரீதியாகப் பெறமுடியாமல் இருந்தனர். இத்துடன், தலை மற்றும் கழுத்துப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு நிமோடுசுமாப் எனும் கியூப மருந்து ஒரு வரப்பிரசாதம் போல அருமையாக வேலைசெய்யக்கூடியது. இந்த மருந்துமே அமெரிக்க நோயாளிகளுக்குத் தேவைப்பட்டபோதும், கியூபாமீது அமெரிக்க அரசு விதித்திருந்த தடையால் கிடைக்காமல் இருந்துவந்தது. 

இந்த நிலையில்தான், புதிய உடன்பாட்டின் மூலம் இவ்விரண்டு மருந்துகள் உட்பட பல்வேறு மருத்துவ சிகிச்சைமுறைகளையும் இரு நாடுகளும் முறைப்படி பகிர்ந்துகொள்ள வழி ஏற்பட்டது, குறிப்பிடத்தக்கது. 

இதெல்லாம் சரி. டெங்குவை விரட்ட அப்படி என்னதான் செய்துவிட்டது, கியூபா? 

வெப்பமண்டலப் பகுதி நாடுகளுக்கான பிரச்னைகளில் ஒன்றான டெங்கு, கியூபாவையும் விட்டுவைக்கவில்லை. டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் எஜிப்டி கொசுக்களை அழிப்பதற்கு மட்டுமல்ல, அவை உருவாகாமலேயே தடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை கியூபா அரசு எடுத்தது. 

கியூபாவில் 35 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட சுகாதாரத் துறை கவனிப்பும் கண்காணிப்புத் திட்டமுமே கொசு ஒழிப்பில் நல்ல பலனை அளித்தது என்கிறார், அறிவியல்/ நுட்பவியல் துறையின் இயக்குநர் லியனா மொரால்ஸ். 

பொதுசுகாதாரத் துறையில் அக்கறையோடு இயங்கிவரும் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் கூறும் ஒரு சங்கதி, கியூப மாடலைப் பற்றி எளிமையாகப் புரிந்துகொள்ள உதாரணமாக இருக்கும். 

நம் நாட்டில் கொசுமருந்தை எப்படி அடிக்கிறார்கள் எனக் கேட்டால் சிறுவர்களும்கூட விளக்கிச் சொல்வார்கள். கியூபாவிலோ, (சென்னை போன்ற) ஒரு நகரத்தில் மருந்தடிக்கவேண்டும் என்றால், முதலில் நகரத்துக்கு வெளியிலிருந்து அதன் மையப்பகுதியை நோக்கி தொடர்ச்சியாக மருந்தடித்தபடி செல்வார்கள்; இடைவிடாமல் மீண்டும் நகரின் மையத்திலிருந்து புறநகர்ப் பகுதிகளில் தொடங்கிய இடம்வரை மருந்தடித்துக்கொண்டுவருவார்கள். 

”இப்படிச் செய்வதால் முதல்முறை மருந்தில் தப்பிய கொசுக்கள் இரண்டாம் முறையில் தப்பமுடியாது; பெரும்பாலான கொசுக்கள் அழிக்கப்பட்டுவிடும்” என விளக்குகிறார், டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத். 

மருத்துவக் கட்டமைப்பு:

சிறிய நாடான கியூபா, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சுகாதாரத்துறையில் சாதித்துவருவதற்கு முக்கியக் காரணம், அதன் அடிப்படைக் கட்டமைப்பு. பத்து ஆண்டுகளுக்கு முந்தைய கணக்குப்படி, ஒரு கோடியே 10 இலட்சம் மக்கள்தொகை கொண்ட கியூபாவில், 200 பேருக்கு ஒருவர் எனும் அளவில் மருத்துவர்கள் இருக்கின்றனர். அதாவது 10 ஆயிரம் பேருக்கு 55 மருத்துவர்கள். 

 

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/105788-how-cuba-won-over-dengue-issues.html

  • தொடங்கியவர்

பொது சுகாதாரம் அடிப்படை உரிமை! - டெங்குவை வென்ற கியூபாவின் கதை - அத்தியாயம் -2

 
 

டெங்கு கியூபா

 

 

கியூபா நாட்டின் மருத்துவக் கட்டமைப்பானது உலக அளவில் குறைந்த செலவிலும் சிறப்பானதாகப் போற்றப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் மார்கரெட் சான் 2014-ல் ஹவானாவுக்குப் பயணம் செய்தபோதுதான், கியூபாவின் மருத்துவ வழிமுறைகளை மற்ற நாடுகள் பின்பற்றவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். குறிப்பாக அதன் நோய்த்தடுப்பு முறையை உள்ளடக்கிய சிகிச்சைத் திட்டத்தை, தரமான மருத்துவ சேவையை உலக நாடுகள் எல்லாமும் பெறவேண்டும் என்ற அவாவை முன்வைத்தார். அவரின் இந்தப் பாராட்டு மட்டுமல்ல, அதே ஆண்டில் உலக சுகாதாரப் பேரவையின் 67-வது கூட்டத்தொடரை கியூபாவில் நடத்தியதும் அந்த நாட்டின் மருத்துவத் துறைக்குப் பெருமை சேர்ப்பதாகும். 

இந்த நிலையை மந்திரமாயாஜால வித்தையைப்போல கியூபா ஒரு கணத்தில் அடைந்துவிடவில்லை. அதற்கு உதவிசெய்தது, அமெரிக்க அரசுதான். ஆம், 1959-ல் கியூபாவில் புதிய அரசைப் படைத்த பிடல் காஸ்ட்ரோ-சேகுவேரா கூட்டணியின் கொள்கையால், அமெரிக்க அரசு அதன் மீது பொருளாதாரத் தடையை விதித்தது. அறுபது ஆண்டுகளை நெருங்கப்போகும் அந்தத் தடையின் காரணமாக கியூபா அரசும் மக்களும் வேளாண்மை, தொழில், கல்வி ஆகியவற்றுடன் மருத்துவத் துறையிலும் தற்சார்புக்கு மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

காஸ்ட்ரோ தலைமையில் 1959 ஜனவரி முதல் தேதியன்று புதிய கியூபா அரசு பதவியேற்பதற்கு முன்னர், அந்நாட்டில் தலைநகர் ஹவானாவில் இருந்த பல்கலைக்கழகத்தைத் தவிர வேறு எந்த மருத்துவக் கல்லூரியும் இல்லை. அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மொத்தம் சேர்ந்தே 6 ஆயிரம் பேர்தான் இருந்தார்கள். அவர்களில் பாதிப்பேர், பாடிஸ்டா ஆட்சி அகற்றப்பட்டதை அடுத்து, நாட்டைவிட்டு வெளியேறினர். அந்தப் புள்ளியிலிருந்தே அடுத்த புள்ளிக்கு நகரவேண்டிய நிர்ப்பந்தம், கியூபாவுக்கு! 

டெங்கு கியூபா

1960 தொடங்கி பத்தாண்டுகளுக்குள் 4,907 மருத்துவர்கள் உருவாக்கப்பட்டனர். அடுத்த பத்தாண்டுகளில் உருவாக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை 9,410. 1980-89 காலத்தில் 22,490 மருத்துவர்கள், 90-99 காலத்தில் 37,841 மருத்துவர்கள் என கியூபாவில் படிப்பை முடித்தவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போனது. இதில் கியூபா நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, உலகெங்குமிருந்து மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடக்கம். 

ஒரு கட்டத்தில் கியூபா மக்களின் தேவைக்கு அதிகமான அளவில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரப்படி கியூபாவின் மருத்துவப் பட்டதாரிகள் எண்ணிக்கை 75 ஆயிரம். இவர்களில் 20% பேர் உலகம் முழுவதுமுள்ள 70 நாடுகளில் மருத்துவப் பணி செய்துவருகின்றனர். 

1997-ல் மத்திய அமெரிக்கா, கரீபியன் தீவுகளைக் கடுமையாக பாதித்த சூறாவளியை அடுத்து, வெளிநாட்டு மாணவர்களுக்காகவே தனியாக, புதிதாக இலத்தீன் அமெரிக்க மருத்துவப் பள்ளி உருவாக்கப்பட்டது. இதன்மூலம் மூன்றாம் உலக நாடுகளுக்கு மருத்துவர்களை கியூபா உருவாக்கித்தருகிறது. இதுவரை 20 ஆயிரம் மருத்துவர்கள் இதன்மூலம் உலகின் பல திசைகளிலும் கியூப மருத்துவ சிகிச்சையை அளித்துவருகின்றனர். 

முதல் காரணம், பொது சுகாதாரம் என்பது கியூப மக்களின் அடிப்படை உரிமையாக ‘புரட்சி’ அரசாங்கத்தின் புதிய அரசியல்சாசனத்தில் வைக்கப்பட்டது. எழுத்தில் மட்டுமில்லாமல் அதைச் செயல்படுத்தியும் காட்டியது, அமெரிக்காவால் ரெட் கார்ட் போடப்பட்ட கியூப அரசாங்கம். 

1960-ல் ஊரக சுகாதார சேவைப் பணி தொடங்கப்பட்டது. அடுத்த பத்தாண்டுகளில் நூற்றுக்கணக்கான மருத்துவப் பட்டதாரிகள் ஊரக சுகாதார சேவையில் அமர்த்தப்பட்டனர். ஊரக மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. 1974-ம் ஆண்டு மகப்பேறு, குழந்தைநலம், பெண்கள் மருத்துவம், பல் மருத்துவம் உட்பட்ட சிகிச்சைகளை அளிக்கும் பாலிகிளினிக்குகள் அதிக அளவில் அமைக்கப்பட்டன. அவரவர் வசிக்கும்பகுதியிலேயே உரிய சிகிச்சை பெறுவதை நோக்கமாகக் கொண்டு திட்டங்கள் தீட்டப்பட்டன. மருத்துவப் பணியாளர்கள், மருத்துவமனைப் பகுதியில் உள்ள மக்களுடன் கலந்துரையாடுவதைக் கட்டாயமாக ஆக்கும்வகையில் சுகாதார சேவை முறை மாற்றியமைக்கப்பட்டது. 

மருத்துவக்கல்வி முறையானது முன்பிருந்தபடி புத்தகங்களை மையப்படுத்தியதாக இல்லாமல், மருத்துவப் பணிகளை அங்கமாகக் கொண்டதாக மாற்றப்பட்டது. இதன்மூலம் சுகாதாரப் பிரச்னைகள் தொடர்பாக மட்டுமின்றி அதோடு தொடர்புடைய சமூக, பொருளாதார, பண்பாட்டுக் காரணிகளைப் பற்றியும் அறிந்துகொள்ளும்படி ஆனது. வளரும்நிலையில் இருந்த கியூப தேசிய சுகாதாரக் கட்டமைப்பின் முதுகெலும்பாக ஆரம்ப சுகாதார மையங்கள் உருவெடுத்தன. இந்த முயற்சிகளின் மூலம் மகப்பேறு மற்றும் குழந்தைநலம், தொற்றுநோய்கள், நாள்பட்ட தொற்றாநோய்கள், முதியோர் மருத்துவம் ஆகியவற்றில் தேசிய அளவிலான திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தமுடிந்தது. 

அடுத்த பத்தாண்டுகளில் பிரதேசரீதியாக மருத்துவசேவையை மேம்பாட்டுக்கும் ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 55 பிரிவுகளில் தேசிய அளவிலான சிறப்பு மையங்களாக அவை உயர்த்தப்பட்டன. 1976-ல் மருத்துவப் பணியாளர்களுக்கான பயிற்சி வழங்கலானது புதிதாக அமைக்கப்பட்ட பொதுசுகாதாரத் துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. நாட்டின் தலைநகரில் பணியாற்றுவதைவிட அவரவர் பயிற்சிபெறும் மாகாணங்களிலேயே பணியாற்றுவதை ஊக்கப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இவ்வாறாக வளர்த்தெடுக்கப்பட்ட கியூப மருத்துவத் துறையானது, நாட்டையே மாற்றியமைத்த தேசிய சுகாதாரத் திட்டத்தின் அடிப்படையாக அமைந்தது என்பது மிகவும் பொருத்தமானது. 

அடுத்தகட்டமாக, உலகத்தையே உற்றுகவனிக்கக்கூடியவகையில் உருவாக்கப்பட்ட தனிச் சிறப்பான  திட்டமான ‘குடும்ப மருத்துவர்- செவிலியர்’ முறை கொண்டுவரப்பட்டது.

அது என்ன?.... 

http://www.vikatan.com/news/coverstory/105973-how-cuba-won-over-dengue-issues-part-2.html

  • தொடங்கியவர்

‘கு.ம.செ.’ குழுவிடமிருந்து யாரும் தப்பமுடியாது! - டெங்குவை வென்ற கியூபாவின் கதை! - அத்தியாயம் - 3

 

cuba1017_12099.jpg

 

 

குடும்ப மருத்துவர் - செவிலியர் திட்டமானது கியூபாவில் வந்திருக்காமலும் போயிருக்கலாம் அல்லது இந்த வடிவில் வராமல் போயிருக்கலாம். குடிமக்களின் நலவாழ்வில் பொதுவாக காஸ்ட்ரோ அரசானது அக்கறையோடும் விழிப்போடும் இருந்ததானது, புதியத் திட்டங்களின் உருவாக்கத்துக்கும் காரணமாக அமைந்தது இதைப் பொறுத்தவரை மெய்யோ மெய்! 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கியூபாவுக்குள் தங்கத்தைத் தேடவந்த ஐரோப்பியர் உட்பட்ட அயலவர்கள், கையோடு புதுப்புது நோய்களையும் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போனார்கள். சில பத்தாண்டுகளுக்கு முன்னர்வரை அதன் துயர விளைவுகள் கியூப மக்களைப் பீடித்திருந்தன. அதிக அளவு புகையிலை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக மாற்றப்பட்ட கியூபாவில், சுவாச நோய் பரவலாக இருந்தது. இதைப்போல இன்னும் சில இறக்குமதி செய்யப்பட்ட நோய்களும் பட்டியலில் இடம்பிடித்தன. நோய்கள் பரவிய அளவுக்கு சிகிச்சை வசதிகள் இல்லை. ஹவானா போன்ற நகரங்களில் மட்டுமே மருத்துவ வசதி கிடைத்தது. இதைக் கருத்தில்கொண்ட புதிய அரசு, ஊரகப் பகுதிகளுக்கும் நகர்ப்புறத்தில் எளிய மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க முன்னுரிமை அளித்தது. 

தேசியச் சுகாதாரச் சேவையில் 70-களிலும் 80-களின் தொடக்கம்வரையிலும் செய்த பணிகளால், வளர்ந்த நாடுகளின் நிலையை எட்டியது. குடிமக்களின் நலவாழ்வை உறுதிப்படுத்த முடிந்த அதேசமயத்தில் சிறப்பு மருத்துவர்களின் சேவையை தொடக்கநிலை மருத்துவர்கள் ஒருங்கிணைக்காமல் இருக்கின்றனர் எனப் புகார்கள் எழுந்தன. தொடர்சிகிச்சை பெறுவது சிரமமாகவும் அவசரசிகிச்சைப் பிரிவை கூடுதலாகப் பயன்படுத்துவதுமாக நிலைமை மாறியது. நாடு முழுவதும் உண்டான இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண்பதில் கியூப அரசு இறங்க, ’குடும்ப மருத்துவர்- செவிலியர்’ திட்டம் உருவானது. 

ஹவானாவில் உள்ள ஒரு பகுதியில் 1983-ம் ஆண்டு உள்ளூர் பாலிகிளினிக்கை மையமாகக் கொண்டு, 15 மருத்துவர்-செவிலியர் குழுக்களை வைத்து தொடங்கப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பும் வெற்றியும் கிடைக்கவே நாடு முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதன்படி, கன்சல்ட்டோரியோ எனப்படும் குடும்ப மருத்துவர் - செவிலியர் அலுவலகத்திலேயே, அதில் பணியாற்றும் மருத்துவரும் செவிலியரும் வசிக்க வேண்டும். ஒவ்வோர் அலுவலகமும் 120 முதல் 150 குடும்பங்களின் அதாவது 500- 800 பேரின் நலத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.

டெங்கு

காலை முதல் மதியம்வரை அலுவலகத்தில் இருக்கும் இந்தக் குழுவினர், பிற்பகலில் முதியோர், அவதியுறும் நோயாளிகளைக் கவனிக்க அழைப்பின்பேரில் அவர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். இதன்மூலம் கிராமப் பகுதியினர் தொலைவாகச் சென்றுதான் மருத்துவரைப் பார்க்கவேண்டும் எனும் அவதி இல்லாமல் போனது. இத்துடன், அந்தந்தப் பகுதிக்கு உட்பட்ட தொழிற்சாலைகள், பள்ளிகள், கப்பல்கள், குழந்தைப் பராமரிப்பு மையங்கள், முதியோர் இல்லங்களிலும் கு.ம.செ. குழுவின் முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்தக் குடும்ப ம./செ. குழுவினர் அந்தந்தப் பகுதியில் உள்ள தனி நபர்களின் நல விவரங்களைப் பதிவுசெய்வார்கள். குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட்ட விவரப் பதிவைப் போல, எல்லா வயதினருக்குமே அவர்களின் சத்துக்குறைவு உட்பட உடலின்நிலை, தொற்றும்-தொற்றா நோய் பாதிப்பு நிலவரம், வாய்ப்பு, சிகிச்சைத் தேவைகள் உட்பட உரிய விவரங்கள் அனைத்தும் ஆவணமாகப் பதியப்படும். ஒவ்வொருவரையும் ஆண்டுக்கு இரு முறையாவது கு.ம.செ. குழுவினர் கட்டாயம் சந்தித்து, நிலவரத்தைப் பதியவேண்டும். பிள்ளைப்பூச்சி பயம் கண்டு மிரளும் குழந்தைகளைப் போல, கு.ம.செ. குழுவினரைச் சந்திக்க விரும்பாத புகைப்போர், மதுக்குடிப்போர் இருந்தாலும், இவர்களைச் சந்திக்காமல் இருக்கமுடியாது. யாரேனும் அடம்பிடித்தால்கூட, அவர்களை விரட்டிப்பிடித்தாவது கு.ம.செ. குழுவினர் சுகாதாரச் சந்திப்பை நிகழ்த்திவிடுவார்கள் என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.

டெங்கு

சுற்றுமுறைப்படி ஒவ்வொருவரையும் சந்திக்கும் கு.ம.செ. குழுவினர், நோயறிதல், ஆய்வகச் சோதனை, பிசியோதெரப்பி, பல் மருத்துவம், குழந்தை மருத்துவம், மகப்பேறு/ பெண்கள் மருத்துவம், மனநல மருத்துவம் ஆகியவற்றுக்காக, பாலிகிளினிக்குகளுக்குப் பரிந்துரைசெய்து அனுப்பிவைப்பார்கள். ஒவ்வொரு கன்சல்ட்டோரியாவிலிருந்து வருவோருக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமன்றி, தலா 30 கன்சல்ட்டோரியாக்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பும் பாலிகிளினிக்குகளுக்கு உண்டு. இதற்காக, பாலிகிளினிக்கின் ஒரு மருத்துவர் தலைமையில், வட்டார அளவில் அடிப்படைப் பணி குழுக்கள் அமைக்கப்பட்டன. அதில் செவிலியர் மேற்பார்வையாளர், குழந்தை மருத்துவர், மகப்பேறு மருத்துவர், உளவியல் ஆலோசகர்,  சமூகப் பணியாளர் இருப்பார்கள். மாதம்தோறும் ஒவ்வொரு கன்சல்ட்டோரியாவின் பணிகள் குறித்தும் அடிப்படைப் பணி குழுக்கள் கூடி ஆலோசனையும் ஆய்வும் செய்யும். 

ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய கணக்குப்படி, கியூபாவின் மொத்த பாலிகிளினிக்குகளின் எண்ணிக்கை 488. இவை ஒவ்வொன்றும் 20 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேரின் நலத்தை கவனித்துக்கொண்டது. 

இத்துடன், புதிய மருத்துவக் கல்வி முறையில், ஆறு ஆண்டுகள் இளநிலை மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவர்கள் கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் குடும்ப மருத்துவக்கல்வி/பயிற்சியையும் கற்க வேண்டும்; இதை முடித்தபிறகே அவர்கள் முதுநிலைப் பட்டத்துக்கு விண்ணப்பிக்கவே முடியும் என மாற்றியமைக்கப்பட்டது. இதற்கான காரணம், சுவாரஸ்யமானது. 

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/106085-no-one-can-escape-from-family-doctor-nurse-program-how-cuba-won-over-dengue-issues-part-3.html

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக இருக்கே.

  • தொடங்கியவர்

“மக்களின் தேவைக்கு மருத்துவப் படிப்பை மாத்துவோம்” - டெங்குவை வென்ற கியூபாவின் கதை! அத்தியாயம் - 4

டெங்கு

 

 

கியூபாவில் பாடிஸ்டா ஆட்சியில் இருந்ததற்கு நேர்மாறாக, காஸ்ட்ரோவின் புரட்சிகர அரசாங்கம் வந்த பின்னர், குடிமகள்/ன் யார் ஒருவரும் தாங்கள் விரும்பும் எந்தப் படிப்பையும் படிக்கமுடியும் என்பது அரசியல்சாசனத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் புதிய அரசின் ஊக்குவிப்பால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்து, ஆறு ஆண்டுகளில் மருத்துவர் ஆனார்கள். அலைஅலையாக அதிகம் பேர் மருத்துவக் கல்விக்கு வந்துசேர்ந்தார்கள். அவர்களில் கணிசமானவர்கள் குறிப்பிட்ட சிறப்பு மருத்துவத் துறைகளில் மட்டுமே, மேற்படிப்பு அதாவது இரண்டாம் பட்டம் பெறுவதில் ஆர்வம் காட்டினர். இதனால் குடும்ப மருத்துவத் துறையில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. புதிய புரட்சிகர அரசாங்கத்தின் ஒரு முடிவினால் மக்களுக்குக் குறை உண்டாகிவிட்டதே என நாடு முழுவதும் விமர்சனம் எழுந்தது. குடும்ப மருத்துவம் எனப்படும் பொது மருத்துவத்துறையை வலுப்படுத்தவேண்டியது அரசுக்கு உடனடிச் சவாலாக அமைந்தது. 1984-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ‘ஒருங்கிணைந்த பொது மருத்துவத் திட்டம்’ இப்பிரச்னைக்கு முடிவுகட்டியது. 

புதிய பாடத்திட்டத்தின்படி, இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பில், முதலாம் ஆண்டிலிருந்து ஆறாவது ஆண்டுவரை, குடும்ப மருத்துவத் துறைப் பயிற்சியைப் பெறுவது கட்டாயம் ஆனது. அதாவது ஒருவர் எந்த மருத்துவத்துறையிலும் சிறப்புப் பட்டம் பெற விரும்பினாலும் குடும்ப மருத்துவத் துறையை ஒதுக்கிவிட்டு படிப்பை முடிக்கமுடியாது. மேலும், சிறப்பு மருத்துவத் துறையில் பொது (குடும்ப) மருத்துவமும் ஒரு துறையாக உருவாக்கப்பட்டது. 

இந்தத் தொடக்கநிலை மருத்துவக் கட்டமைப்பின் மூலம், உள்நோயாளிகளின் எண்ணிக்கை இருபது ஆண்டுகளில் பாதி மடங்கு குறைந்தது. 1984-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் ஆயிரத்துக்கு 15.1% என்பது 2003-ல் 10.8% ஆனது. ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளின் இறப்புவீதமானது, 1960-ல் ஆயிரத்துக்கு 39 ஆக இருந்தது 2004-ல் ஆயிரத்துக்கு 6 ஆகக் குறைக்கப்பட்டது. 

குடும்ப மருத்துவர்-செவிலியர் (கு.ம.செ.) குழுவைப் பொறுத்தவரை, ஒரு பக்கம் சிகிச்சையளிக்கும் அமைப்பாக மட்டுமில்லாமல் பாலிகிளினிக், நகராட்சி, மாகாண மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வீடுதிரும்பியவர்களின் நிலவரத்தைக் கவனித்து, தேவையையொட்டி தொடர் சிகிச்சைக்கு அனுப்பவும் பரிந்துரைக்கிறது. இத்துடன் அந்தந்த பகுதிகளின் பொதுசுகாதாரத்தைக் கண்காணிப்பதிலும் கு.ம.செ. குழு ஈடுபடுகிறது. எடுத்துக்காட்டாக, ஓரிடத்தில் குப்பையைக் கொட்டியிருக்கிறார்கள் என்றால், அதை அகற்றச்செய்வது கன்சல்ட்டோரியாவின் பொறுப்பும் ஆகும். நோய் வரும்முன் தடுப்பதற்கு பொதுசுகாதாரத்தைப் பாதுகாப்பது முக்கிய வழிமுறை என்பதில் கியூபப் புரட்சிகர அரசின் உறுதி கீழ்மட்டம்வரை எதிரொலித்தது.

கியூபா டெங்கு

நோய்த்தடுப்பு நடவடிக்கையின் இன்னொரு பகுதியாக, பொதுசுகாதாரம் பற்றிய விவரத்தொகுப்புப் பணியும் உள்ளது. ஒவ்வொரு கன்சல்ட்டோரியாவிலும், ஒவ்வொருவரைப் பற்றிய தனிப்பட்ட நலவிவரங்கள் தனித்தனியாகச் சேகரிக்கப்படும். இது, தனிநபர்களைப் பற்றிய விவரமாக மட்டுமில்லாமல், அந்தப் பகுதி அளவிலான விவரத் தொகுப்பாகவும் அந்தப் பகுதியைப் பற்றிய பொதுசுகாதாரச் சித்திரமாகவும் இருக்கும்.

எடுத்துக்காட்டாக, வயதுவாரியாக, ஒரு வயதுக்கும் கீழே, 1-9 வயது, 10-14, 15-29, 30-49, 50-69, 70-79, 80-ம் அதற்கு மேலும் எனப் பிரிக்கப்பட்டிருக்கும். கல்விநிலையைப் பள்ளிக்குச் செல்லாதோர், தொடக்கப்பள்ளிக்குச் சென்றவர், தொடக்கக்கல்வி முடித்தவர், நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொழில்நுட்பப் பட்டம், பல்கலைக்கழகப் பட்டம் என்கிறபடி வகை பிரிக்கப்பட்டுள்ளது. 

நாள்பட்ட - தொற்றாநோய் பாதிப்பு உள்ளவர்களில், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, முதல்வகை சர்க்கரை நோய், 2-ம் வகை சர்க்கரை நோய், உடல்பருமன் நோய், புகைப்பழக்கம், குடிநோய், புற்றுநோய், பால்வினைத் தொற்று, பெருமூளை அழற்சி நோய் பாதிப்பு விவரங்கள் விவரக்குறிப்பில் பதியப்படுகின்றன. 

இந்த விவரங்களை வைத்து, தனிநபர்களின் நலநிலையானது, நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. 1. பொதுவாக நலமாக இருப்பவர்கள், 2. வீட்டிலோ பணியிடத்திலோ சுகாதாரப் பிரச்னைவர அதிக வாய்ப்புள்ளவர்கள், 3. நாள்பட்ட, தொற்றும்- தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் 4. உடல், மனத்திறன் குறைவால் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ சராசரியாக இயங்கமுடியாமல் இருப்பவர்கள் என அனைவரின் விவரங்களும் ஒரு பட்டியலுக்குள் கொண்டுவரப்படும். 

இவ்வாறு ஆவணப்படுத்தப்படும் கன்சல்ட்டோரியாக்களின் சுகாதார விவரங்களை, அந்த வட்டாரத்தின் பாலிகிளினிக் புள்ளியியலாளர், தொகுத்துவைப்பார். அடுத்தடுத்து நகராட்சிகள், மாகாணங்கள், தேசிய அளவில் விவரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒட்டுமொத்த கியூபாவின் சுகாதாரத் தகவல்தொகுப்பு உருவாக்கப்படுகிறது. அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களும் உடனடியாகப் பதிவுசெய்யப்படுகின்றன. 

கியூபா டெங்கு

இவை எல்லாம் சரி, இதனால் என்ன சாதிக்கப்பட்டது எனும் கேள்வி எழுவது இயல்பு! 

நடப்பு சுகாதார விவரத்தொப்பு எப்போதும் தயாராக இருப்பதால், குறிப்பிட்ட கால இடைவெளியில் அதைப் பற்றிய பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் எந்தெந்தப் பகுதிகளில் பொதுசுகாதாரம் மோசமாக இருக்கிறது, எங்கெங்கு தொற்றுநோய் பாதிப்புக்கான வாய்ப்பு இருக்கிறது, குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்டவகை பாதிப்புகள் மட்டும் இருப்பது, குறிப்பிட்ட தொழில்செய்பவர்களுக்கென, குறிப்பிட்ட வயதினருக்கென, குறிப்பிட்ட இனப்பிரிவினருக்கென உண்டாகும் உடல்நலக் குறைபாடுகள், குறிப்பிட்ட நோய்கள் வருவது, மருத்துவ வசதியளிக்கும் நிலைமை எப்படி இருக்கிறது எனக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும், தொற்றுநோய்கள் பரவுவதற்கு முன்பே உரிய நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிந்தது.

நாடெங்கும் கொள்ளைநோய் பரவும் சமயங்களில், எந்தப் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்க, இந்தச் சுகாதாரத் தகவல்தொகுப்பு மிகவும் உதவியாக இருந்துவருகிறது. கியூபாவில் கொள்ளைநோயாக டெங்குக் காய்ச்சல் பரவியபோதெல்லாம் பாதிப்பைத் தடுப்பதில் கியூப மருத்துவக் கட்டமைப்பும் அதன் சுகாதாரத் தகவல்தொகுப்பும் முழுமையாகப் பயன்பட்டது. 

கியூபா முழுவதையும் பாதிக்கச்செய்த கொள்ளை டெங்குவின் உயிர்ப்பலிகளை, படிப்படியாகக் குறைத்து ஒரு கட்டத்தில் அதை முற்றிலுமாகத் தடுத்துநிறுத்தி சாதனை படைத்தது, கியூபா. அது எப்படி சாதித்துக்காட்டப்பட்டது? 

(அடுத்து வரும்..)

http://www.vikatan.com/news/coverstory/106141-how-cuba-won-over-dengue-issues-part-4.html

  • தொடங்கியவர்

‘கொசு வளர்த்தால் அபராதம்’ எப்போது வந்தது? - டெங்குவை வென்ற கியூபாவின் கதை- அத்தியாயம் 5

 

கியூபா டெங்கு

 

 

மெரிக்கக் கண்டத்தைப் பொறுத்தவரையில் 1699-ல் பனாமா நாட்டில் டெங்கு கண்டறியப்பட்டாலும், கொள்ளைநோயாக டெங்கு பரவியது 18-ம் நூற்றாண்டில் அறியப்பட்டது. 1780-ம் ஆண்டில் பிலடெல்ஃபியாவில் கொள்ளைநோய் தாக்கியபோது டெங்குவைப் பற்றி பேசப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியிலும் தென் அமெரிக்க நாடுகள் மற்றும் கியூபா உள்பட்ட கரீபியன் நாடுகளில் டெங்கு பரவியது பற்றியே அதிகமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 

அமெரிக்க நாடுகளில் டென் 2 எனும் டெங்கு வைரஸ் பாதிப்பானது முதல் முறையாக 1950-களில் கண்டறியப்பட்டது. 1960 முதல் 1980வரை, மூன்று முறை கொள்ளைநோயாக டெங்கு தாக்கியது. 63-64 காலகட்டத்தில் டென் 3 வைரசும், 68-69 காலகட்டத்தில் டென் 2, டென் 3 வைரஸ்களும், 77-78 காலகட்டத்தில் டென் 1 வைரசும் கொள்ளைநோயைப் பரப்பிவிட்டன. 

மற்ற நாடுகளைவிட கியூபாவானது கொசு ஒழிப்பில் அதிரடியான நடவடிக்கைகளில் இறங்கியது. 

கியூபாவில் கொசு ஒழிப்புக்காக தேசிய அளவில் தகவல்தொகுப்பு மையம் அமைக்கப்பட்டது. அதுவே அரசின் பல்வேறு அமைப்புகளுக்கும் பொதுப் பிரச்சார இயக்கங்களுக்கும் ஒரு பாலமாகச் செயல்பட்டது. 16 மாகாணங்களிலும் அவற்றின் கீழ் உள்ள அனைத்து நகராட்சிப் பகுதிகளிலும் அதையடுத்து ஒவ்வொரு ஊர் அளவிலும் கொசு ஒழிப்பு இயக்கம் அமைக்கப்பட்டது. இந்த இயக்கமானது  மருந்து அடிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் கொசுப்பிரச்னை பற்றி தனிநபர் கண்காணிப்பையும் ஊக்குவித்தது. குறிப்பாக இது பற்றி குழந்தைகளுக்கு உணரவைத்தது. 

டெங்கு கியூபா

கசிவை உண்டாக்கும் குடிநீர்க் குழாய்களைப் பழுதுபார்க்கவும் மாற்றவும் அரசே நிதியளித்தது. வீடுகளில் திறந்தபடி இருந்த தண்ணீர்த் தொட்டிகளை மூட இலவசமாக கவர்களும் விநியோகிக்கப்பட்டன. கொசுக்களின் இருப்பிடமாக இருந்த ஆயிரக்கணக்கான டன் குப்பைகளைக் கண்டறிந்து, அகற்றப்பட்டன. கொசு ஒழிப்புக்காக கியூபாவின் தலைநகரான ஹவாணாவிலேயே தினசரி ஆறு மணி நேரம் மின்சாரத்தை நிறுத்திவைக்கவும் செய்தது. 

தேசிய அளவிலான இந்த இயக்கத்தில் யாருக்கும் தயவுபார்க்கப்படவில்லை. ஒழுங்கு என்பது மேலிருந்து கீழ்வரை கறாராகக் கடைப்பிடிக்கப்பட்டது. மருந்தடிக்கவிடாமல் தடுப்பவர்களுக்கு அபராதமும் சிறைத்தண்டனைகூட விதிக்கப்பட்டது.  மர்டா பீட்ரிஸ் ரோக் எனும் பொருளாதார வல்லுநர், அவருடைய வீட்டுக்கு மருந்தடிக்கவந்த பணியாளர்களை அனுமதிக்கவிடாமல் வம்புசெய்ததால் அவர் நான்கு முறை கைதுசெய்யப்பட்டார். 

கியூப நாட்டவரில் பெரும்பாலானவர்கள் தங்களின் ஆப்ரோ கியூபக் கடவுளர்களுக்காக அல்லது கத்தோலிக்கப் புனிதர்களுக்காக டம்ளர்களில் தண்ணீரை வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். இதைப் புனிதநீராகக் கருதி வைக்கப்படும் இத்தண்ணீரை அப்படியே பல நாட்களுக்கு விட்டுவிடுவார்கள். அதையும் குறைந்தது இரு நாட்களுக்கு ஒரு முறையாவது மாற்றியாக வேண்டும் என கொசு ஒழிப்புத் திட்டத்தில் உத்தரவிடப்பட்டது. 

இதையெல்லாம் செய்தபின்னர், கொசுக்கள் உற்பத்தியாகும்படியாக தம்முடைய இடத்தை வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் முறையையும் கியூபா கொண்டுவந்தது. 

இது மட்டுமின்றி, பேசில்லஸ் துரிஞ்சியன் எனும் பாக்டீரியாவைப் பயன்படுத்தி ஏடிஸ் கொசுவின் லார்வாவை ஒழிப்பதையும் கியூபா கண்டறிந்தது. இதைப் பயன்படுத்தி, பிரேசில் நாட்டில் நோய்த்தொற்றின் அளவை 1.8% -லிருந்து 0.4% ஆகக் குறைத்துள்ளனர். நோய்த் தொற்றின் அளவு ஒரு சதவீதம் இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள நிலையில், இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 

இந்தப் புள்ளிவிவரம் அனைத்துமே உலக சுகாதார நிறுவனம் உட்பட்ட ஐநா அமைப்புகளின் ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
”கடைசி கொசு இருக்கும்வரை அதைத் துரத்திச்சென்று வேட்டையாடுவோம்” என்ற கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவின் வாசகத்தை, செயல்படுத்திக் காட்டினார்கள், கியூபாவின் குடிமக்கள். 

மூன்று முறை கியூபாவைத் தாக்கிய டெங்கு கொள்ளைநோயை வென்றது எப்படி?

(அடுத்து வரும்...)

http://www.vikatan.com/news/coverstory/106296-fine-for-those-refuse-to-control-vector-in-cuba-how-cuba-won-over-dengue-issues-part-5.html

  • தொடங்கியவர்

கொசுவுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்! - டெங்குவை வென்ற கியூபாவின் கதை- அத்தியாயம் 6

 
 

கியூபா டெங்கு

 

 

ஆண்டு முழுவதும் 20 முதல் 34 டிகிரிவரை வெப்பநிலை நிலவக்கூடிய கியூபாவானது, டெங்கு நோய் பரவுவதற்கான வெப்பமண்டல தட்பவெப்பத்தைக் கொண்டது. கியூபாவில் 1828-ம் ஆண்டில் முதலில் நான்கு டெங்கு பாதிப்புகள் பதிவாகின.

டெங்குக் காய்ச்சல் கியூபாவில் தொடங்கியபோது அதற்கு இந்தப் பெயர் இல்லை. கேடட், சிவப்புக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல் என பல பெயர்கள் சூட்டப்பட்டன. டெங்குவின் பாதிப்பால் கழுத்து இறுக்கத்துடன் புடைத்தபடி நிமிர்ந்து நடக்கவேண்டிய நிலைக்கு நோயாளி தள்ளப்படுவார். இயல்பாக இப்படியாக கழுத்து புடைக்க நடக்கும் மேட்டுக்குடியினரை டேண்டி எனப்பட்டதால், கியூபாவில் டெங்கு பாதிப்பு உண்டானபோது, ஸ்பானிய மொழியில் டெங்கு என்ற பெயர் வந்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவின் ஸ்வாகிலி மொழியில் உள்ள ‘கி டிங்க பெபோ’ எனும் சொல் மூலத்திலிருந்து ஸ்பானியத்துக்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 1869-ல் லண்டன் ராயல் மருத்துவர் கல்லூரியானது டெங்குவின் பெயரை அங்கீகரித்தது. 

1971 டெங்கு கொள்ளை நோய் 

கியூபாவில் புரட்சிகர அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தபின்னர் 1977-ல் முதல்முதலாக கொள்ளை நோயாக டெங்கு பரவியது. சாண்டியாகோ டி கூபா நகரில் முதல் டெங்குக் காய்ச்சல் பாதிப்பு பதிவாகின. ’டென் - 1’ வைரஸ்தான் அப்போதைய டெங்கு தாக்கத்துக்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டது. 

டெங்குவைப் பரப்பும் கொசுக்களை அழிக்க விமானம் மூலம் கடலோரப் பகுதிகளில் மருந்தடிக்கப்பட்டது. நீர்நிலைகளில் பட்டவுடன் சிதறும்படியான மருந்து ஏவுகணைகள் விமானம் மூலம் செலுத்தப்பட்டன. 1977 செப்டம்பரில் 241 முறைகளும், அக்டோபரில் 14 முறைகளும், நவம்பரில் 146 முறைகளும் 1978 ஜனவரியில் 136 முறைகளும் என விமானம் மூலம் மருந்தடிக்கப்பட்டது. 

வீடுகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் மருந்து தெளிப்பதும் கொசுக்களை அழிக்கும் பிற நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டன. 12, 13, 323 கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் தேடி அழிக்கப்பட்டன. 

கட்டடக் கூரைகள், மழைநீர் வடிகால்கள், கொசுக்கள் தங்கி, இனப்பெருக்கம் செய்யக்கூடிய நீரோடிகளில் பூச்சிக்கொல்லி மருந்தடித்து ஆயிரக்கணக்கான தூய்மைப்படுத்தும் இயக்கங்கள் நடத்தப்பட்டன. 

1981 டெங்கு கொள்ளை நோய்

மூன்றாண்டுகள் இடைவெளியில் கியூபாவில் அடுத்த டெங்குக் கொள்ளை நோய் ஆகஸ்ட் 26-ம் நாள் தொடங்கியது. அந்தக் கொள்ளையில் அப்போதைய ஓரியண்ட் சர் மாகாணத்தில் (இப்போதைய கிரான்மா, சாந்தியாகோ டி கூபா, குவாண்டனாமோ மாகாணங்கள்) மொத்தம் 23, 887 டெங்கு பாதிப்புகள் பதிவாகின. அதாவது ஒரு லட்சத்துக்கு 2618.9 பேருக்கு பாதிப்பு. இதில் ‘டென் - 2’ வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ஆசியாவுக்கு வெளியில் முதலாக இந்தக் கொள்ளை பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 

அப்போது வைரசைப் பரப்பும் கொசுக்களை ஒழிக்க தீவிரமாகவும் அதிகமான ஆட்களைக் கொண்டும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. டிராக்டர்கள், இழுவை வண்டிகள், சிறிய மற்றும் முதுகில் சுமந்து செல்லக்கூடிய மருந்து தெளிப்பான்கள் என ஏராளமான கருவிகள் இதில் பயன்படுத்தப்பட்டன. 

கொசு

ஒரு லட்சத்துக்கு 42 ஆயிரத்து 424 குடியிருப்புப் பகுதிகள் பசூக்கா எனும் கருவிகளைக் கொண்டும் 74,436 ஆப்பிள்கள் மோட்டார் சைக்கிள்களைக் கொண்டும், 33,493 ஆப்பிள்கள் லெகோ எனும் கருவிகளைக் கொண்டும், 3,469 ஆப்பிள்கள் டிஃபா கருவிகளைக் கொண்டும் மருந்தடிக்கப்பட்டன. 16 லட்சத்துக்கு 73 ஆயிரம் மீட்டர் நீளம் கால்வாய்ப் பணிகள் செய்யப்பட்டன. நாட்டின் உள்பகுதிகளிலும் அதே ஆண்டில் இரண்டு முறைகள் வான்வழி மருந்து தெளிப்பும் மேற்கொள்ளப்பட்டது. 

இந்த நடவடிக்கைகளையும் மீறி, 1981 டெங்குக் கொள்ளையால் 3 லட்சத்து 44 ஆயிரத்து 203 பேர் பாதிக்கப்பட்டனர். 158 பேர் உயிரிழந்தனர். 

ஏற்கெனவே நன்றாகச் செயல்பட்டுவரும் மருத்துவக் கட்டமைப்புடன் டெங்கு ஒழிப்புப் பணியில் அரசுத் துறையினருடன் பொதுமக்களின் பங்கேற்பும் இணைந்ததால், அதிக பாதிப்பு நிகழாமல் கட்டுப்படுத்த முடிந்தது. சிறிய ஊரகப் பகுதி முதல் மாகாணம், தேசிய மட்டம்வரை அரசுத் துறையினரின் செயல்பாடுகளைக் கண்காணிக்க, மக்கள் பிரதிநிதிகள் மாதத்துக்கு ஒரு முறை கூடி, பணிகளைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களை வைத்தே ஆய்வுசெய்தனர். பணிகளின் சாதகம், பாதகம், வெற்றி, முன்னேற்றம், பின்னடைவு போன்ற நிலைகள் அலசி ஆராயப்பட்டு, அடுத்த கட்டத்துக்கான பொதுமுடிவும் உருவாக்கப்பட்டது. 

கியூபா பெண்கள் கூட்டமைப்பு, புரட்சியைத் தக்கவைப்பதற்கான குழுக்கள் ஆகியவை இதில் முக்கியப் பங்கு வகித்தன. மாதம்தோறும் அந்தந்தப் பகுதிகளின்  பொதுநிர்வாகம், ஆட்சி செயல்பாடு, அடிப்படை வசதிக் குறைபாடுகள், நிறைவேற்றவேண்டிய தேவைகள் ஆகியவைகுறித்து இவர்கள் ஆலோசித்து முடிவுசெய்தனர். கொசு ஒழிப்பிலும் இந்த முறை பெரிதாகக் கைகொடுத்தது. 

அமெரிக்காவின் சதி!

(அடுத்து வரும்..) 

http://www.vikatan.com/news/coverstory/106402-how-cuba-won-over-dengue-issues-part-6.html

  • தொடங்கியவர்

‘அமெரிக்காவின் உயிரியல் ஆயுதம்’ - டெங்குவை வென்ற கியூபாவின் கதை! அத்தியாயம் - 7

 

டெங்குவை வென்ற கியூபா

 

 

கியூபாவின் 1981 டெங்கு கொள்ளைக்குப் பலியான 158 பேரில், 101 பேர் குழந்தைகள் என்பது அந்த நாட்டையே உலுக்கி எடுத்துவிட்டது. பொதுசுகாதாரத் துறையின் வியத்தகு செயற்பாடுகளைத் தாண்டி இயற்கையின் பாதிப்பா அல்லது கியூபாவின் எதிரித் தரப்பிலிருந்து உருவாக்கப்பட்ட செயற்கை நோயா என கியூப அரசு, ஆட்சிசெய்யும் பொதுவுடைமைக் கட்சி, மருத்துவர் வல்லுநர்கள், உயிரிநுட்பவியலாளர்கள் என பல தரப்பிலும் கடுமையாக எடுத்துக்கொண்டனர். 

அந்த சமயத்தில் நடந்த அரசு விழாவில் பேசிய கியூபாவின் மறைந்த தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் பேச்சு, இன்றளவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

“இந்த ஆண்டு கியூபாவில் ரத்தக்கசிவு டெங்குக் காய்ச்சலை நம் நாட்டுக்குள் பரப்ப சி.ஐ.ஏ. உளவு அமைப்பு வேலைசெய்திருக்கிறது. புரட்சியின் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த தொடர்ந்து முயற்சிசெய்வதைப் போல, நமது மக்கள், விலங்குகள், சர்க்கரை போன்ற தாவரங்கள் மீது நோய்க்கிருமியை ஏவிவிடுவதையும் உறுதியாகச் சொல்லமுடியும். இந்த முறை டெங்குவை உண்டாக்கிய வைரஸ், நம் நாட்டில் இதற்கு முன் இங்கு இருந்ததே இல்லை” என்பதைக் குறிப்பிட்டார், காஸ்ட்ரோ.

மேலும், “டெங்கு கொள்ளையை அழிக்கப் போராடிக்கொண்டிருக்கும் நமக்கு, முதலில் மாலத்தியான் பூச்சிமருந்தைக் கொள்முதல்செய்ய வேண்டிவந்தது. மெக்சிகோவில் உள்ள லுக்காவா நிறுவனத்திடமிருந்து வாங்குவது நமது திட்டம். அது ஓர் அமெரிக்க - மெக்சிகோ கூட்டு நிறுவனம். கியூபாவில் பயன்படுத்த எனத் தெரிந்துகொண்டு அந்த மருந்தை நமக்கு விற்க அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. அதையடுத்து, பேயர் நிறுவனம் நமக்குத் தேவையான மருந்துகளை விற்க விருப்பம் தெரிவித்தது. ஒருவழியாக 20 டன் மருந்தை கிளாரிட்டா கப்பல் மூலம் மெக்சிகோவின் டாம்பிகோ துறைமுகத்திலிருந்து அனுப்ப வேண்டும் என உடன்பாடும் செய்துகொண்டோம். ஆனால், பேயர் நிறுவனமானது ஏற்றுமதி செய்யும்போது, அது பற்றிய விவரங்களைத் தெரிவிக்கவேண்டும்; ஏனெனில் அந்த நிறுவனம், அமெரிக்காவிலிருந்து தனக்கு மூலப்பொருளாக மாலத்தியான் பூச்சிமருந்தை இறக்குமதி செய்துவருகிறது. லுக்காவா நிறுவனத்தின் ஒப்புதல் இல்லாமல் பேயர் நிறுவனம் நமக்கு பூச்சிமருந்தை ஏற்றுமதிசெய்ய முடியாது. முன்பைப் போலவே பேயரின் பூச்சிமருந்தை கப்பல் மூலம் ஏற்றுமதிசெய்ய பேயருக்கு லுக்காவா நிறுவனம் ஒப்புதல் தரவில்லை. மிக மோசமான கட்டத்துக்குத் தள்ளப்பட்டோம். 

கியூபா டெங்கு

லுக்காவாவின் மறுப்பை அடுத்து, மெக்சிகோ அரசுக்கு நெருக்கமான நபர்களையும் அரசு அதிகாரிகளையும் தொடர்புகொண்டு பேசினோம். நமது தொடர் முயற்சிகளின் விளைவாகவும், பேயர் நிறுவனமானது நமக்கு மருந்தை விற்க விரும்பியதாலும், 30 டன் லுக்காத்தியான் பூச்சிமருந்தை (அதாவது பேயரின் மாலத்தியான்), விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. 

ஐரோப்பாவிலிருந்து மாலத்தியானை விமானத்தில் கொண்டுவருவதற்கு மட்டும் டன்னுக்கு 5 ஆயிரம் டாலர் செலவானது. அதாவது அதன் உற்பத்திச்செலவைவிட மூன்றரை மடங்கு தொகையை நாம் செலவழித்துள்ளோம். உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்த பரந்த அமெரிக்க சுகாதார அலுவலகத்தின் மூலம், ஐ.நா விதிகளுக்கு அமைய, அமெரிக்காவிலிருந்து நேரடியாக இந்த மருந்தை இறக்குமதிசெய்ய முயற்சிகள் நடந்தபோதும், வேண்டுகோள் மறுக்கப்பட்டதால், இதுவரை நாம் ஒரு டன் மருந்தைக்கூடப் பெறமுடியவில்லை” என்று காஸ்ட்ரோ கூறினார். 

இது மட்டுமல்ல, “கொசு ஒழிப்புக்கான 90 லெக்கோ மருந்துதெளிப்பான்களைக் கொள்முதல் செய்யக்கூட நம்மால் முடியவில்லை. அமெரிக்காவில் தயார்செய்யப்பட்ட இந்த தெளிப்பான்களை இரு வெவ்வேறு நாடுகளில் முயற்சிகள் செய்தபோது, ஒரே நாளில் அவை மறுத்துவிட்டன என்பது வியப்பளிக்கிறது” என்று கூறிய காஸ்ட்ரோ, ஆதாரமாக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த விவாதக் குறிப்புகளையும் அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள், வல்லுநர்களின் கருத்துகளையும் குறிப்பிட்டுக் காட்டினார். 
கியூபாவின் முக்கிய வருவாயான சர்க்கரை உற்பத்தியைப் பாதிக்க, அமெரிக்க அரசு உயிரியல் ஆயுதங்களைத் தயாரிப்பதாகவும் சொன்ன காஸ்ட்ரொ, அதனுடன் சேர்ந்துதான் டெங்குவைப் பரப்பும் கொசுக்களைத் தயாரிக்கும் ரகசிய ஆலைகள் இயங்குகின்றன என்றும் கூறினார். 

“ஏற்கெனவே கியூபாவின் சர்க்கரை உற்பத்தி, கால்நடைகளுக்கு எதிராக உயிரியல் ஆயுதமாக நச்சுக்கிருமிகளை சி.ஐ.ஏ மூலம்  ஏவ காரியங்கள் நடக்கின்றன. சோவியத் ரஷிய ஒன்றியத்தில் வேதியியல், உயிரியல் ஆயுதங்களை உருவாக்கி, பரப்புவதற்காக ரகசியத் தளங்களை அமெரிக்க அரசு நடத்திவருகிறது. பால்ட்டிமோர் தீவில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் 4 ஆயிரம் படையினர் அல்லாத பணியாளர்களும் ஆயிரம் படையினரும் பணியாற்றுகின்றனர். வியட்நாம் போரில் செலவழித்ததைவிட அதிகமாக இதற்கு அமெரிக்க அரசு நிதியை ஒதுக்கியுள்ளது. 

Fidel Castro

மேரிலாண்ட் தீவில் உள்ள போர்ட் டெட்ரிக் தளம், 1,300 ஏக்கர் பரப்பைக் கொண்டது. 2,500 படையினர் அல்லாத பணியாளர்களும் 500 படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தத் தளத்தின் முக்கியப் பணி, பலவகையான உயிரியல் ஆயுதங்களை உருவாக்குவதே! இரண்டாம் உலகப்போர் காலத்தில் இது பல ‘வேலை’களைச் செய்தது. அப்போதிருந்து தொடர்ந்து இதில் வளர்ச்சி அடைந்துவருகிறது. இத்துடன் உயிரியல் ஆயுதங்களைக் கொண்டு ஒரு தற்காப்புப் போரை நடத்துவதற்கான அனைத்து கருவிகளையும் தயாரிப்புகளையும் கட்டுப்படுத்தவும் செய்கிறது. நாலு சுவர்களுக்குள் அனைத்துவகையான வேதியியல், உயிரியல் ஆயுதங்களை உருவாக்கும் விஞ்ஞானிகள் அமெரிக்காவின் ஆறு படைத்தளங்களிலும் உலகம் முழுவதும் 70 பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுசாரா அமைப்புகளில் பணியாற்றுகிறார்கள். இவர்கள், நிறமில்லாத, வாசனை இல்லாத கூருணர்வை உருவாக்கும் வாயுக்கள், ஆண்டிபயாட்டிக்குகளுக்கு எதிரான பாக்டீரியாக்கள் போன்ற உயிர்க்கொல்லிகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் செய்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை, சீமெர் ஹெர்ஷ் எனும் அமெரிக்க எழுத்தாளர் ஒரு கட்டுரையில் எழுதியவைதான்!” என, தான் வைத்த குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களாக பலவற்றையும் அடுக்கிய காஸ்ட்ரோ, 

“இவ்வளவை எல்லாம் செய்தவர்கள் இதுவரை கியூபா கேள்விப்பட்டிராத, ஆசியாவில்- இந்தியாவின் லாகூரில் தோன்றியுள்ள புதிய வைரஸை இங்கு பரப்பி, உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது” என்று அழுத்தமாகச் சொல்லவும் செய்தார். மறுநாளே, இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் எந்தவித அடிப்படையும் இல்லாதவை என மறுத்தது, அமெரிக்க நாட்டின் அரசுத் துறை. 

இது ஒரு புறம் நடக்க, இன்னொரு பக்கம், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் கியூப வல்லுநர்கள் நடத்திய ஆய்வுகளில், புதிய முடிவுகள் கிடைத்தன. அவை என்ன? 

(அடுத்து வரும்..)  

http://www.vikatan.com/news/coverstory/106499-was-dengue-a-part-of-biological-warfare-of-usa-on-cuba-how-cuba-won-over-dengue-issues-part-7.html

 

  • தொடங்கியவர்

சிறு குழந்தைகள் மட்டும் தப்பியது எப்படி? - டெங்குவை வென்ற கியூபாவின் கதை- அத்தியாயம் 8

 
 

Dengu_8_12286.jpg
 

வரலாறு தரும் படிப்பினைகளைக் கருத்தில்கொள்ளாமல் எத்தனையோ நாடுகள் பெரும் இன்னல்களைச் சந்தித்துவருவதை சமகாலத்தில் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது. கியூபாவைப் பொறுத்தவரை, 1981 டெங்கு கொள்ளையிலிருந்து சரியாகப் பாடம் கற்றுக்கொண்டது. அதற்கான தரவு அறிவியல் (data science) முறையானது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்த்தெடுக்கப்பட்டது, இக்கட்டான நேரத்தில் கியூபாவுக்கு உதவியது. 

 

1977-ல் தாக்கிய டெங்கு கொள்ளையை அடுத்து, எடுக்கப்பட்ட தேசிய உடல்நீர்மவியல் சர்வேயின்படி, 44.4% நகர்ப்புற கியூப மக்கள் ’டென் 1’ வைரசால் தாக்கப்பட்டனர் என்றும் புதிய வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால் இவர்கள் அதன் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு இருக்கிறது என்றும் கண்டறியப்பட்டது. அந்த எதிர்வுகூறல் அப்படியே 1981-ல் கியூபாவில் நடந்தேறியது. 

அந்த ஆண்டு மே மாதம் மழைக்காலத் தொடக்கத்தில் கியூபாவின் கிழக்கு, நடு, மேற்குப் பகுதிகளை டெங்கு தாக்கியது. சில நாள்களில் அது நாடு முழுவதும் பரவியது. மொத்தம் பாதிக்கப்பட்ட 3,44,203 பேரில், 10,312 பேர் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். அந்தச் சமயம் நல்லவேளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை காலமாக அமைந்ததால், அவை அனைத்தும் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டன. முன்கூட்டியே பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்தது, நீரிழப்பைச் சரிசெய்தது போன்ற நடவடிக்கைகள் டெங்கு பாதிப்பைக் குறைத்தது. ஒரு லட்சத்துக்கு 16 ஆயிரத்து 143 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

தொடக்கத்தில் குடிமைப் பாதுகாப்புத் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பிரசாரப் பணிகள், பின்னர் பொதுசுகாதாரத் துறை வசம் மாற்றப்பட்டது. நான்கு மாதங்களில் டெங்கு முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. 101 குழந்தைகள் டெங்குவால் உயிரிழக்க நேர்ந்தபோதும், 1 முதல் 2 வயதுவரையிலான டெங்கு பாதித்த குழந்தைகளுக்கு உயிரிழப்பு அபாயமோ தீவிரபாதிப்போ இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. ஏனெனில் அவர்கள் முந்தைய 1977 டெங்குக் கொள்ளைக்குப் பின்னர் பிறந்தவர்கள் என்பதால் ‘டென் 2’ வைரசால் மட்டுமே பாதிக்கப்பட்டனர். அதாவது பெரிய குழந்தைகளுக்கு மட்டுமே முன்னர் தாக்கிய ‘டென் 1’ வைரசின் பாதிப்புடன் புதிய இரண்டாம் வைரசும் சேர்ந்துகொள்ள, அவர்களுக்கு உயிருக்கு அபாயம் ஏற்பட்டது என்பதும் பகுப்பாய்வில் தெரியவந்தது.
இதைப்போல டெங்கு தாக்கியவர்களில் கடும் பாதிப்புக்கும் உயிரிழப்புக்கும் வாய்ப்புள்ள பல காரணிகளும் வகைப்படுத்தப்பட்டன.

அவை: டெங்கு வைரசுக்கு எதிரான எதிர்ம (antibody)ங்கள், வயது (குழந்தைகளில் அதிக பாதிப்பு), பாலினம் (இளம் பெண்களில் அதிகபாதிப்பு), மரபினம் (வெள்ளையர்களுக்கு அதிக பாதிப்பு), நாள்பட்ட நோய்கள் (ஆஸ்துமா, சிக்கில் செல் ரத்தசோகை, சர்க்கரைநோய் ஆகியோருக்கு அடிக்கடி பாதிப்பு வருவது) 

கியூபா டெங்கு 8

எதிர்மங்களைப் பொறுத்தவரையில் இரண்டாவது வைரஸ் தாக்கிய குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரிடம் உடல்நீர்மவியல் ஆய்வு செய்யப்பட்டது. அதில், முதல் டெங்கு தாக்குதலில் குறிப்பிட்ட நோயாளிகளுக்கு உடல் தானாகவே உருவாக்கித் தந்த எதிர்மமானது, அப்போதைக்கு வைரசை எதிர்த்துநின்றது; அதுவே, இரண்டாவது வைரஸ் தாக்கியபோது முன்னர் உடலைப் பாதுகாத்த எதிர்மமானது, இந்த முறை டெங்கு பாதிப்புக்குச் சாதகமானதாக மாறுகிறது. இதனால்தான், 1977-78 டெங்குக் கொள்ளையின்போது பாதிக்கப்பட்ட பதின்பருவத்தினர், இரண்டாவது வைரஸ் தாக்கியபோது கடுமையான டெங்கு பாதிப்புக்கும் உயிரிழப்புக்கும் ஆளானார்கள். முந்தைய கொள்ளையில் பிறக்காத குழந்தைகளுக்கு ‘டென் 2’ வைரஸ் தாக்கியும், அவர்களுக்கு டெங்குவின் ஆரம்பநிலைப் பிரச்னைகள் மட்டுமே காணப்பட்டன. 

மரபினத்தைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட குழந்தைகளில் வெள்ளை இனத்தவர் 86%, கறுப்பினத்தவர் 6%. இதேபோல, பதின்பருவத்தினரில் 81% பேர் வெள்ளை இனத்தவர், 6% கறுப்பு இனத்தவர். நோய் ஏற்புத்திறன் அளவு மரபினரீதியாக இப்படி இருப்பது பகுப்பாய்வில் தெரியவந்ததால், டெங்கு தாக்குதல் கறுப்பினத்தவர் எனப்படும் நீக்ரோக்களின் நோய் என்பது இல்லையென நிரூபிக்கப்பட்டது. 

நாள்பட்ட நோய்களும் தொந்தரவுகளும் உடையவர்களை ஆய்வுசெய்ததில், மூச்சுக்குழாய் ஆஸ்துமா உடைய குழந்தைகளுக்கும் வயதுவந்தோருக்கும் பெரியவர்களுக்கும் மற்றவர்களைவிட இரண்டு மடங்கு அளவுக்குக் கடும் டெங்குவும் உயிரிழப்பும் ஏற்பட்டது. 

சிக்கில் செல் பிரச்னை உள்ளவர்களிடமும் சர்க்கரை நோய் உள்ளவர்களிடமும் டெங்கு பாதிப்புக்கு அதிக வாய்ப்பு இருப்பதும் உயிரிழந்தவர்கள் தொடர்பான ஆய்வில் தெரியவந்தது. 

மேலும், வைரஸ் மற்றும் நோய்ப்பரவல் குறித்த பகுப்பாய்வு முடிவுகளிலும் புதிய முடிவுகள் கிடைக்கப்பெற்றன. 
(அடுத்து வரும்) 

http://www.vikatan.com/news/coverstory/106610-how-12-yr-children-saved-from-second-dengue-epidemic-how-cuba-won-over-dengue-issues-part-8.html

  • தொடங்கியவர்

46 கூட்டங்கள், 83 ஒப்பந்தங்கள்! - டெங்குவை வென்ற கியூபாவின் கதை - அத்தியாயம் 9

 

டெங்கு

 

 

கியூபாவில் இரண்டாம் டெங்கு கொள்ளைக்குக் காரணமாக இருந்த ‘டென் 2’ வைரசின் தாக்கம், அதற்கு முன்னர் அங்கு இருந்ததே இல்லை. ஆனால், அமெரிக்கக் கண்டத்தின் பிற பகுதிகளில் 1950-களிலும் 60-களிலும் ’டென் 2’, ’டென் 3’ வைரஸ்களின் தாக்கம் வந்துபோயிருந்தது. 

கியூபாவில் 81-ல் வந்த டெங்கு ரத்தக்கசிவுக் கொள்ளையில் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பானது, சமகாலத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட பாதிப்பைப் போலவே இருந்தது. ஆனால் வயதுவந்தோருக்கு உண்டான பாதிப்பானது முதல் முறையாக அவர்கள் எதிர்கொண்டதாகும். இதேசமயத்தில் டெங்கு அதிர்ச்சி பாதிப்பானது குழந்தைகளுக்கு அதிகமான அளவிலும் வயதுவந்தோருக்கு தன்மையில் கடுமையாகவும் இருந்தது. 

இவற்றைப் போன்ற பல அம்சங்களை எடுத்துக்கொண்டு, டெங்கு உறுதிசெய்யப்பட்ட அனைத்து வகை நோயாளிகளிடமும், பாதிக்கப்படும் வாய்ப்புகள் குறித்து முழுமையான ஆராய்ச்சி செய்யப்பட்டது. இவ்வளவும் டெங்கு பாதிப்பு முடிந்த நான்கு மாதங்களுக்குள் செய்துமுடிக்கப்பட்டது. அதையடுத்து ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்குப் பிறகே கியூபாவில் டெங்கு எட்டிப்பார்க்கமுடிந்தது. 

1997 டெங்கு கொள்ளை

1997 ஜனவரி 28-ம் தேதியன்று சாண்டியாகோ டி கூபா மாகாண மருத்துவமனையில் டெங்குக் காய்ச்சலுக்குச் சிகிச்சைபெற ஒருவர் சேர்ந்தார். மாகாண மருத்துவ ஆய்வகத்திலும் தேசிய அளவிலான பெட்ரோ கௌரி மருத்துவக் கழக ஆய்வகத்திலும் ஜனவரி 30-ல் ஐந்து பேரின் டெங்கு உறுதிப்படுத்தப்பட்டது. அடுத்த நாளே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதானது. 

பெட்ரோ கௌரி மருத்துவக் கழகத்தின் தொடர் கண்காணிப்பின் விளைவாக, ஆரோக்கியம் மற்றும் கொள்ளைநோயியல் துறையின் துணை அமைச்சரும் அனைத்து மாகாண சுகாதார இயக்குநர்களுக்கும் அபாய நிலைமை தெரிவிக்கப்பட்டது. அவசரநிலைக்காக மாகாண அளவிலான ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு, அதில் அரசு மற்றும் அந்த மாகாணத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள், மக்கள்திரள் அமைப்பினர், சமூக அமைப்பினர் இணைக்கப்பட்டனர். இந்த இணைப்பின் தொடர்ச்சியாக, சூட்டோடுசூடாக 46 கூட்டங்களை நடத்தி, 83 ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டன. இதில் 11 ஒப்பந்தங்கள் நிரந்தரமானவை; 71 ஒப்பந்தங்கள், நேரடியாகக் கொள்ளைநோய் தொடர்புடையவை. 

டெங்கு

இன்னொரு முக்கிய அம்சமாக, வானொலி, தொலைக்காட்சி, செய்திஏடுகள் மூலம் சமூகத் தகவல்தொடர்பு மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் டெங்குவுக்கான புதிய சிகிச்சைமுறைக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது. குறிப்பாக டெங்கு அதிர்ச்சிக்கான சிகிச்சைக்கு கவனம் தரப்பட்டது. 

கொசு ஒழிப்புக்கான பெரும் திட்டமானது தீவிரத்தாக்குதல் முறையில் மேற்கொள்ளப்பட்டது. மற்ற மாகாணங்களில் இருந்தும் நன்கு பயிற்சி பெற்றவர்கள் அழைத்துவரப்பட்டு, சாண்டியாகோ டி கூபாவின் மாவட்டவாரியாக கொசு ஒழிப்புப் பணி முடுக்கிவிடப்பட்டது. 

அதிகபட்சமாக, பாதிப்புக்குள்ளான 3012 பேரின் உடல்நீர்மங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் டெங்கு ரத்தக்கசிவும் டெங்கு அதிர்ச்சியும் உள்ளவர்கள் 205 பேர். அவர்களில் வயதுவந்த 12 பேருக்கு உயிரிழப்பு நேரிட்டது. 

2001-02 டெங்குக் கொள்ளை

2001-02 டெங்குக் கொள்ளையானது கியூபாவின் தலைநகரான ஹவானாவையே அதிகமாகப் பாதித்தது. புதிய ‘டென் 3’ வைரஸ் கிருமியானது அந்த டெங்குக் கொள்ளைக்கு வித்திட்டது. 

தலைநகர் ஹவானாவில் உண்டான கொள்ளைநோயைக் கட்டுப்படுத்த, உண்மையான போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டது. ‘தலைநகரைத் தூய்மைப்படுத்த ராணுவத்தின் எத்தனை டிரக்குகளையும் எடுத்துக்கொள்ளலாம்’ என்று கியூபாவின் மறைந்த தலைவர்  காஸ்ட்ரோ கூறினார். 

கொசு ஒழிப்புக்கான போருக்காக தலைமை அதிகாரியாக டாக்டர் எலியா ரோசா லீமஸ் என்பவர் நியமிக்கப்பட்டார். நாடு முழுவதும் பணியாற்றிவரும் குடும்ப மருத்துவர்-செவிலியர்களுடன், நூற்றுக்கணக்கான கொள்ளைநோயியலாளர்களுடன், மாகாண அளவிலான ஆரோக்கியம் மற்றும் கொள்ளைநோய்த் தடுப்புக்கான மையங்களும் தேசிய அளவிலான ஆராய்ச்சிநிலையங்களும் இருக்க, சுற்றுச்சூழல் சுகாதாரத்துக்கான பிரசாரத்துக்காக நூற்றுக்கணக்கானவர்கள் இணைக்கப்பட்டு, ’சிறப்பு பிளாஸ்ரோக்கா பிரிகேட்’ எனும் படை உருவாக்கப்பட்டது. 

(அடுத்து வரும்)

http://www.vikatan.com/news/coverstory/106705-46-meetings-83-agreements-how-cuba-won-over-dengue-issuespart9.html

  • தொடங்கியவர்

’மூன்று மந்திரங்கள்!' - டெங்குவை வென்ற கியூபாவின் கதை - அத்தியாயம் - 10

 
 

கியூபா டெங்கு 10

 

 

ஏற்கெனவே கியூபா நாடு முழுவதும் அன்றைய கணக்குப்படி, 24,221 பேர் சுகாதார அமைச்சகத்தின் கீழ் கொசு அழிப்புக்கான பணியில் பணியாற்றிவந்தனர். அதில், 221 துறைத் தலைவர்கள், 311 உயிரியலாளர்கள், பூச்சியியலாளர்கள் உட்பட 434 நுட்பவியலாளர்கள், 130 மெக்கானிக்குகள், 18,556 ஆப்பரேட்டர்கள் உட்பட பல தரப்பினரும் இடம்பெற்றிருந்தனர். 

இத்துடன் 1981 கொள்ளை பாதிப்புக்கு முன்னரே பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட சுகாதாரத் துறைப் பணியாளர்களைக் கொண்ட, ’தடுப்பரண் படை’யும் அமைக்கப்பட்டது. மாணவர்கள், இளம் தொழிலாளர் ராணுவம், சமூகப் பணியாளர்கள் பயிற்சிப் பள்ளி, செவிலியர் பயிற்சிப் பள்ளி ஆகியவற்றிலிருந்து தொண்டர்களைத் திரட்டுவதும் நடந்தது. 

மூன்றாவதாக, இளம் கம்யூனிஸ்ட்டுகள் சங்கம், புரட்சியைத் தக்கவைப்பதற்கான குழு போன்ற அமைப்புகளிலிருந்து தொடக்கத்திலேயே 10,737 பேரைக் கொண்ட பெரும் கொசு அழிப்புப் படை அமைக்கப்பட்டது. 

பிரிவுகளின் தன்மைக்கு ஏற்ப சீரான தன்மை கொண்டுவரப்பட்டது. உடையும் தொப்பியும் வெவ்வேறு நிறங்களில் ஒவ்வொரு குழுவுக்கும் அளிக்கப்பட்டது. சிறப்பான பணியைச் செய்தவர்களுக்கு உரிய அங்கீகாரமும் கௌரவமும் முக்கியத்துவமும் அளிக்கப்பட்டது. 

காஸ்ட்ரோ அப்போது, இந்தப் பணி குறித்து, “ இது கடுமையானதும் சிக்கலானதுமான வேலை; கியூபாவின் புரட்சிகர ஆண்களும் பெண்களும் எங்கு இருக்கிறார்களோ அங்கு பேயோபிசாசோ இருக்கமுடியாது” எனக் கூறியது, அப்படியே பொருந்தும்.

பொதுவாக, கொசு ஒழிப்பில், புழு நிலை, வளர்ந்த நிலை ஆகிய இரண்டிலுமே தீவிரம் காட்டப்பட்டது. குப்பைகளை அகற்றல், கொசு முட்டையிடும் இடங்களை அழிப்பது, கொசுப்புழுக்களை அழிப்பது, நச்சுவாயு அடிப்பது, மூடப்பட்ட வீடுகளில் தடுப்புமுயற்சிகள், கட்டுப்பாடான- தொடர்ச்சியான மதிப்பீடு ஆகியவை அடிப்படைப் பணிகளாக இருந்தன. 

டெங்கு கியூபா 10

முதன்மை அதிகாரி தினமும் கூட்டங்களை நடத்தினார். இந்தக் கூட்டங்களில் என்ன நடக்கிறது என்பது வானொலி, தொலைக்காட்சி, பிற ஊடகங்களில் அலசப்பட்டன. இது ஒரு முக்கியக் கருவியாக மாறி, நகராட்சி அளவில் எடுத்துக்கொண்டால், பொதுமக்கள், தொண்டர்கள், அரசு ஊழியர்களுக்கு என ஊடகச் செய்திகள் செயல்பாட்டுக்கான தகவல்களாக இருந்தன. இது முகத்துக்கு முகம் ஆளுக்கு ஆள் என ஒருவகையான நேரடிக் கற்பித்தலாகவும் எதிர்பார்க்காத பலனையும் உண்டாக்கியது. 

உள்ளூர் அளவில் பாலிகிளினிக்குகளில், நகராட்சி அலுவலகங்களில் மாகாண சபைகளின் வழிகாட்டலில் ஒவ்வொரு 12 மணி நேரத்துக்கும் ஒரு முறை பகுப்பாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. 

2001 கடைசி வாரக் கணக்குப்படி அந்த ஆண்டு டெங்குக் காய்ச்சலால் 11,432 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது; அதில் 69 பேர் டெங்கு ரத்தக்கசிவால் பாதிக்கப்பட்டு, இரண்டு பேருக்கு உயிரிழப்பும் ஏற்பட்டது. அடுத்த ஆண்டில், பாதிக்கப்பட்ட 3,012 பேரில் 12 பேருக்கு ரத்தக்கசிவு உண்டாகி, ஒருவர் உயிரிழந்தார். 
அதைத் தொடர்ந்த இரண்டு ஆண்டுகளில் பாதிப்பும் இல்லாமல், உயிரிழப்பும் நிகழாமலும் தடுக்கப்பட்டது.  

கியூபா டெங்கு 10

2005-ல் 75 பேருக்கு பாதிப்பு பதிவாகியிருந்தாலும் ஆய்வகத்தில் உறுதிசெய்யப்படவில்லை. 2008-ல் 28 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. ரத்தக்கசிவு பிரச்னை அறவே இல்லை. 2009-ல் 70 பேர், 2014-ல் 1,430 பேர், 2015-ல் 1,691 பேர், 2016-ல் 1,836 பேர் , நடப்பு ஆண்டில் கடந்த மாதம் 27- ஆம் தேதிவரை 270 பேர் என டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. ஆனால், உயிரிழப்பு நிகழாமல் கியூபா அரசு தொடர்ந்து தன் மக்களைக் காத்துவருகிறது. 
கொள்ளைநோய்க்கு எதிரான கியூபாவின் போரில், ஒரு மந்திரத்தைப் போல, ’அமைப்பு - ஒழுங்கு - செயல்பாட்டில் ஒற்றுமை’ ஆகியன ஒரு மும்மணிமொழியாக இருந்துவருகிறது எனப் பாராட்டுடன் மதிப்பீடும் தருகிறார்கள், உலகளாவிய வல்லுநர்கள். 

இது மட்டுமன்றி, கியூபாவின் தலைநகர் ஹவானா அருகில் உள்ள பெட்ரோ கௌரி மருத்துவ ஆய்வுக்கழகத்தை, உலக சுகாதார நிறுவனமானது(WHO) தன்னுடைய ’பரந்த அமெரிக்க சுகாதாரக் கழகத்தின்’(PAHO) ஒத்துழைப்பு மையமாக இணைத்துக்கொண்டு, அதன் மூலம் பல்வேறு சர்வதேச பயிற்சிப் பட்டறைகளையும் ஆய்வரங்குகளையும் பல ஆண்டுகளாக நடத்திவருகிறது.  

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த மருத்துவக் கழகத்தின் மூலமான 15 ஆவது சர்வதேச டெங்கு பயிற்சிப் பட்டறையை உலக சுகாதார நிறுவனம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதில், உலக சுகாதார நிறுவனம், அமெரிக்கா, வெனிசுலா, கனடா, கொலம்பியா, சிங்கப்பூர், சுவீடன், பெல்ஜியம், ஜெர்மனி, அர்ஜென்டினா உட்பட்ட பல நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் பூச்சியியல், கொள்ளைநோயியல், சுகாதாரவியல், நுண்ணுயிரியியல் போன்ற துறைகளின் வல்லுநர்கள் இதில் கலந்துகொண்டனர்.  

அமெரிக்கா போன்ற நாடுகளின் ராணுவ வல்லமையை வைத்து, உலக அளவில் வல்லரசுகள் என மதிப்பிடப்பட்டாலும், அவற்றின் பொதுச்சுகாதாரம், மருத்துவ சிகிச்சை வழங்கலானது உலக அளவில் முன்மாதிரியாக இல்லை என்பதை, வேறு எந்த அமைப்பும் அல்ல, சாட்சாத், அமெரிக்காவால் ஆதிக்கம்செலுத்தப்படும் ஐ.நா.வின் அமைப்புகளே சொல்லாமல் சொல்லுகின்றன. 

டெங்குக் கொள்ளையைப் பொறுத்தவரை, வந்த பின்னர் தரப்படும் மருத்துவ சிகிச்சையானாலும் வரும்முன் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளானலும் கியூபாவை மருத்துவ வல்லரசு எனக் கூறுவது பொருத்தமாகவே இருக்கும்! 

தரவுகளுக்கான சான்றாதாரங்கள்:

உலக சுகாதார நிறுவனம்(WHO), பரந்த அமெரிக்க சுகாதார அமைப்பு(PAHO) ஆகியவற்றின் வெளியீடுகள், லான்செட், மெடிக் ரிவ்யூ ஆகிய மருத்துவ ஆய்விதழ்கள், தற்சார்பான மருத்துவ ஆய்வாளர்களின் ஆய்வேடுகள் மற்றும் கட்டுரைகள்.   

(நிறைவடைந்தது)

http://www.vikatan.com/news/coverstory/106804-three-words-express-the-cuban-model-dengue-cuba-part-10.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.