Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகுபலி 2

Featured Replies

 

பாகுபலி 2

- ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

அந்த வீட்டு வாசல் அருகேயிருந்த வேப்ப மரத்தடியில், காரை நிறுத்தினேன். காரிலிருந்து இறங்கியவுடன், எனது கிளிப்பச்சை நிற சில்க் சட்டையை இழுத்துவிட்டுக் கொண்டேன். வேட்டியை இறுக்கிக் கட்டியபடி கார்க் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தேன். கால்வாசி வளர்ந்து, பின்னர் தனது வளர்ச்சியை நிறுத்தியிருந்த மீசையை ஒரு முறை தடவி விட்டுக்கொண்டேன் கழுத்தில் மாட்டியிருந்த செயினிலிருந்த புலிநக(?) டாலரை எடுத்து வெளியே விட்டுக்கொண்டு, புரோக்கரிடம், “எப்படி இருக்கேன்?” என்றேன். “உங்களுக்கு என்னண்ணே... அப்படியே ‘வின்னர்’ வடிவேலு மாதிரியே இருக்கீங்க...” என்று கூறிய புரோக்கரை முறைத்தபடி, “இந்தப் பொண்ணுக்காச்சும் என்னைப் பிடிக்குமாய்யா?” என்றேன்.

“அதெல்லாம் பிரச்னை இல்லண்ணே... உங்க தியேட்டர்ல பலான படம் ஓட்டறதுதான் பிரச்னை. அதனாலதான் உங்களுக்கு பொண்ணு கொடுக்கமாட்டேங்கறாங்க...” “அதுக்குதான பொண்ணு பாக்க, நூத்தம்பது கிலோ மீட்டர் தள்ளி வந்துருக்கோம்...” என்றபடி பின்சீட்டிலிருந்து என் சித்தப்பா இறங்கினார். அடுத்து, எப்போதும் என்னுடன் இருக்கும் என் நண்பர்கள் குமாரும், மனோகரும் இறங்கினர். “இப்ப தியேட்டர்ல என்ன படம்  போட்டுருக்கீங்கண்ணே?” என்று புரோக்கர் கேட்க... சித்தப்பா, “பாருக்குட்டி பார்ட்  டூ...” என்றார் சத்தமாக. கடுப்பான நான், “அய்யோ சித்தப்பு... கத்தாத. போன தடவை பொண்ணு பாக்கப் போன வீட்டுல, ‘உங்க தியேட்டர்ல என்ன படம்?’ன்னு கேட்டாங்க.
16.jpg
நீ பொசுக்குன்னு, ‘ராத்திரி தாகம்’னு சொல்லிட்ட. வெளிய அனுப்பிட்டாங்க...” என்றபடி வீட்டு வாசலைப் பார்த்த நான், “ஒருத்தரையும் வாசல்ல காணோம்...” என்றேன். குமார், “கார் சத்தம் கேட்டுருக்கும். வருவாங்க சரவணா. ஒரு தடவை பவுடர் அடிச்சுக்க...” என்று சிறிய பவுடர் டப்பாவை நீட்ட... நான் வாங்கி அடித்துக்கொண்டேன். மனோகர், “கூலிங் க்ளாஸ் போட்டுக்க...” என்று கண்ணாடியை நீட்டினான். நான் கூலிங் க்ளாஸைப் போட்டுக்கொண்டு நிமிரவும், பெண் வீட்டுக்காரர்கள் வெளியே வரவும் சரியாக இருந்தது. நான்கைந்து பேர் கும்பலாக வந்து, “இவ்ளோ நேரம் வாசல்ல நின்னுட்டு, இப்பத்தான் உள்ள போனோம்.

வாங்க...” என்று உள்ளே அழைத்துச் சென்றனர். ஹால் முழுவதும் காந்தி, நேரு... என்று தேசத்தலைவர்கள் படங்களும், சாமி படங்களும் மட்டுமே மாட்டப்பட்டிருந்தன. சம்பிரதாய உரையாடல்களுக்குப் பிறகு, நெற்றியில் பெரிய பட்டையுடன் இருந்த பெண்ணின் அப்பா ராமநாதன், “எனக்கு சினிமான்னாலே பிடிக்காதுங்க...” என்றார். “ஏங்க?” “நான் காலேஜ் படிக்கிறப்ப, ஒரு சரோஜாதேவி படம் பாத்தேன். அதுல அவங்க கால் கட்டைவிரலக் காட்டி, ஆபாசமா நடிச்சிருந்தாங்க. அதுலருந்து நான் படம் பாக்குறதே இல்லங்க...” என்றவுடன் நாங்கள் அதிர்ந்தோம். குமார் கண்களில் மிரட்சியுடன், “டேய்... கால் கட்டைவிரல காட்டுறதே ஆபாசம்ன்னா, நம்ம ‘பாருக்குட்டி’ படத்த எல்லாம் பாத்தா என்ன சொல்வாரு?” என்றான்

“டேய்... படத்துப் பேரச் சொல்லி கத்தாதடா...” என்று அவன் தொடையைப் பிடித்து அமுக்கினேன். “ஆனா, நீங்க தினம் பக்தி படமாப் போடுவீங்கன்னு புரோக்கர் சொன்னாரு. அதான் இந்த இடத்துக்கு சம்மதிச்சேன்...” என்று ராமநாதன் சொன்னவுடன் நான் புரோக்கரை முறைத்தேன். புரோக்கர் என் காதில், “ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த முடிக்கலாம்...” என்றார் கிசுகிசுப்பாக. பேச்சை மாற்ற விரும்பி நான் ராமநாதனிடம், “நீங்க வாத்தியாருன்னாங்க. என்ன வாத்தியாரு?” என்றேன்.. “நல்லொழுக்க வாத்தியாரா இருந்து ரிடையராயிட்டேன்...”“ம்க்கும்...” என்று தொண்டையைக் கனைத்தபடி, நான் சித்தப்பாவை பார்த்தேன்.

தொடர்ந்து ராமநாதன், “என் ஒய்ஃபும் நல்லொழுக்க வாத்தியாரா இருந்து ரிட்டயராயிட்டாங்க...” என்றவுடன் நாங்கள் நெளிந்தோம் “என் பொண்ணும்...” என்று ராமநாதன் ஆரம்பிக்க... குமார், “நல்லொழுக்க வாத்தியார்ன்னு தயவுசெஞ்சு சொல்லிடாதீங்க...” என்றான். அவர் சிரித்தபடி, ‘‘அப்படித்தான் ஆக்கணும்ன்னு நினைச்சோம். ஆனா, இப்ப அந்த போஸ்ட்டிங்கே போடுறதில்ல...” என்றார். அப்போது அந்தப் பெண் மகாலட்சுமி, உடம்பில் ஒரு பார்ட் கூடத் தெரியாமல், தழையத் தழைய புடவை கட்டிக்கொண்டு, உடம்பை இழுத்துப் போர்த்திக்கொண்டு வந்து அமர்ந்தாள். பெண் கொஞ்சம் குண்டுதான்.
16a.jpg
அதையெல்லாம் பார்த்தால் வேலைக்காவாது. எனக்கு ஏற்கனவே 33 வயதாகிவிட்டது. எனவே நான் நேரிடையாக எனது சம்மதத்தை சொல்லிவிட்டேன். “எங்கம்மா, அப்பால்லாம் செத்துட்டாங்க. நான் எடுக்கிற முடிவுதான். எனக்குப் பொண்ணு பிடிச்சிருக்கு. நீங்க சரின்னா, தெரு முக்குல பிள்ளையார் கோயில் இருக்கு. அப்படியே கல்யாணத்த முடிச்சு, அழைச்சுட்டுப் போயிடுவோம்...” என்று கூற அனைவரும் சிரித்தார்கள். “மாப்ள ரொம்ப வெள்ளந்தியா பேசுறாரு...” என்று ராமநாதன் கூற... அப்போது மகாலட்சுமி தன் அம்மாவின் காதில் ஏதோ கூறினாள். உடனே மகாலட்சுமியின் அம்மா, “அவளுக்கும் உங்கள பிடிச்சிருக்காம்...” என்றவுடன், நான் சந்தோஷத்துடன் நண்பர்களைப் பார்த்தேன்.

முகம் மாறிய ராமநாதன், “ரெண்டு பேரும் ரொம்ப அவசரப்படுறீங்க...” என்றவர் என்னைப் பார்த்து, “முதல்ல நாங்க உங்க வீட்டுக்கு வந்து பாக்கணும்...” என்றார். “அப்படியே அவங்க தியேட்டர்லயும் படம் பாத்துட்டு வந்துரலாம்ங்க...” என்று பெண்ணின் அம்மா கூற... நாங்கள் அத்தனை பேரும் அரண்டு போனோம். பதறிப்போன நான், “அய்யோ... அது அந்தக் காலத்து கண்றாவித் தியேட்டருங்க. பூரா பொறுக்கிப் பயலுகளா வந்து உக்காந்துருப்பானுங்க...” என்றேன். “இருக்கட்டும்ங்க. மாப்ள தியேட்டரப் பாக்காம எப்படி? இப்ப என்ன படம் ஓடுது?” என்றார். அடுத்த விநாடியே, சித்தப்பா “பாருக்...” என்று ஆரம்பிக்க... நான் வேகமாக அவர் தொடையைக் கிள்ளியபடி, “பாகுபலி... ‘பாகுபலி 2’” என்று சத்தமாகக் கத்தினேன்.

“நமக்கு இந்த சினிமாப் பத்தில்லாம் ஒண்ணும் தெரியாதுங்க. அதுல யாரு நடிச்சிருக்கா?” என்றார் ராமநாதன். நான் பதில் சொல்வதற்குள் குமார், “அர்ப்பனா, தர்ப்பனா...”என்று பாருக்குட்டியில் நடித்திருக்கும் நடிகைகளைக் கூற... நான் அவன் காலில் நச்சென்று மிதித்தேன். அதுவரையிலும் ஒரு வார்த்தையும் பேசாத மகாலட்சுமி, “எல்லாம் கேள்விப்படாத பேரா இருக்கு. அதுல அனுஷ்கா, தமன்னால்ல நடிச்சிருக்காங்க?” என்றாள்.‘‘இவன்... இவன்... படத்துல வர்ற மத்த பொம்பளைங்க பேரச் சொல்றான்...”“சரிங்க... நாங்க வர்ற வெள்ளிக்கிழமை வர்றோம். காலைக் காட்சி உங்க தியேட்டர்ல படம் பாத்துட்டு, மதியான சாப்பாடு உங்க வீட்டுலதான்...” என்றார் ராமநாதன்.

காரில் ஏறியதும் மனோகர், “டேய், நீ பாட்டுக்கு ‘பாகுபலி-2’னு சொல்லிட்ட. இப்ப என்ன பண்ணப் போற?” என்றான்..“அந்தப் படத்தையே வாங்கி, ஒரு வாரம் ஓட்டிட்டாப் போச்சு!” நான் தியேட்டரில், ஆபரேட்டர் அறைக்கு மேலிருந்த மொட்டை மாடியில் பீடி பிடித்துக்கொண்டிருந்தேன். கீழே ‘பாருக்குட்டி 2’  ஓடிக்கொண்டிருந்தது. தியேட்டரில் ஒரு சத்தமும் இல்லாமல் இருப்பதைப் பார்த்தால், அநேகமாக பாருக்குட்டி இப்போது குளித்துக்கொண்டிருப்பாள். அப்போது மாடிப்படிகளில் திடுதிடுவென்று ஓடி வந்த குமார், “சரவணா... தியேட்டருக்கு ரெய்டு வந்துருக்காங்க...” என்றவுடன் அதிர்ந்தேன்.

தொடர்ந்து குமார், “ஆர்.டி.ஓவும், தாசில்தாரும் வந்து, பாருக்குட்டி குளிக்கிற வரைக்கும் கம்முன்னு உக்காந்துட்டு, அப்புறம் ஆபரேட்டர் ரூமுக்கு வந்து படத்த நிறுத்தச் சொல்லிட்டாங்க. ஆபரேட்டரையும், உன்னையும் அரெஸ்ட் பண்ண போலீஸ் வருதாம்...” “அது உடனே ஜாமீன்ல வந்துடலாம். இப்ப தியேட்டர சீல் வச்சிடுவாங்களே... வெள்ளிக் கிழமை பொண்ணு வீட்டுக்கு ‘பாகுபலி 2’ படம் காமிக்கணும்டா. இன்னும் அஞ்சு நாள்தான்டா இருக்கு...” என்றபடி பதட்டத்துடன் கீழே இறங்கினேன். தியேட்டருக்கு வெளியே இருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள், பாருக்குட்டி குளித்து முடிப்பதற்குள் படத்தை நிறுத்திவிட்ட ஆத்திரத்தில், “ஏய்... படத்தப் போடுங்கடா...” என்று கத்திக்கொண்டிருந்தனர்.

நான் ஆபரேட்டர் அறைக்குள் நுழைந்தேன். அங்கே ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்த தாசில்தாரைப் பார்த்தவுடன், “டேய்... இவர நான் எங்கயோ பாத்துருக்கன்டா...” என்றேன். “போன வாரம் ‘ராத்திரி தாகம்’ படம் பாக்க, முத ஆளா வந்து  உக்காந்துருந்தாரு...” என்றான் மனோகர். “நன்றி கெட்ட பய...” என்ற நான் அவரை நெருங்கி, “வணக்கம் சார். நீங்க ‘ராத்திரி தாகம்’ படம் பாக்க வந்தப்ப உங்கள பாத்துருக்கேன்...” என்றேன். “ஹி... ஹி... அது... ஒரு ரசிகனா வந்தேன். இப்ப வேற வழியில்ல. கலெக்டருக்கு யாரோ கம்ப்ளைன்ட் பண்ணியிருக்காங்க. உடனே ரெய்டு பண்ணி, சீல் வைக்கச் சொல்லி ஆர்டர். நீங்க தப்பா நினைச்சுக்கக்கூடாது. போலாமா? கீழ போலீஸ் நிக்குது...” என்றார்.

அப்போது அங்கு வேகமாக வந்த குமார், “டேய்... லோக்கல் சேனல்லாம் கேமிராவோட வந்து இறங்கியிருக்காங்க...” என்றான்.“அப்ப அந்தப் பவுடரை எடு...” என்ற நான் பவுடரை வாங்கி அடித்துக்கொண்டு, ஜன்னல் வழியாகப் பார்த்தேன். ஒரு கான்ஸ்டபிள் ‘பாருக்குட்டி 2’ போஸ்டரைக் கிழித்துக்கொண்டிருக்க... பக்கத்தில் நின்று ஒரு போலீஸ் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார். “அதாரு?” என்றேன் முழுத் தலைமுடியும் நரைத்திருந்த ஆபரேட்டர் தேவராஜிடம். “இன்ஸ்பெக்டர். ரத்னவேலுன்னு பேரு. பக்கத்து ஊருதான். அவரு காலேஜ் படிக்கிறப்ப, இங்க ‘ஸிராக்கோ’ படம் போட்டப்ப, நாலு ஷோவும் வரிசையா பாத்தாரு...”

“நன்றி கெட்ட துரோகிகள்...” என்று நான் கூறிக்கொண்டிருக்கும்போதே, இன்ஸ்பெக்டர் ரத்னவேல் மேலே வந்துவிட்டார். நான், “குட்மார்னிங் மிஸ்டர் ஸிராக்கோ...” என்றவுடன், அவர் அதிர்ந்து போய் நின்றுவிட்டார். நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு வந்தவர், அப்படியே குழைந்து, “வணக்கம்ணே... இது நம்ம ட்யூட்டி. வேற வழியில்ல...” என்றார். “சரி போலாமா?” என்று நான் நடக்க ஆரம்பித்தேன். என் கைபேகை எடுத்து கக்கத்தில் செருகிக்கொண்டு கிளம்பினேன். நானும், ஆபரேட்டர் தேவராஜும் ஆபரேட்டர் அறையை விட்டு வெளியே வர... படிக்கட்டில் நின்று மனோகர் அழுதுகொண்டிருந்தான்.
16b.jpg
அவனை இழுத்துக் கட்டிப்பிடித்துக்கொண்ட நான், “இதெல்லாம் தொழில்ல சகஜம். இப்ப கோர்ட்டுக்கு போய்ட்டு, ஒன்னவர்ல ஜாமீன்ல வந்துடுவேன். அழக்கூடாது என்ன?” என்று கூறிவிட்டு படிக்கட்டுகளில் இறங்கினேன். கீழே வந்தவுடன் ரசிகர்கள், “செய்யாதே... செய்யாதே... சரவணக்குமாரை கைது செய்யாதே...” என்று கோஷமிட்டனர் இரண்டு கைகளையும் உயர்த்தி அவர்களை அமைதிப்படுத்திய நான், “உங்க ஃபீலிங்ஸ் எனக்குப் புரியுது. அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறது நமது கடமை. தயவுசெஞ்சு எல்லாரும் அமைதியா கலைஞ்சு போங்க...’’ என்றேன். அப்போது ஒருவன், “அண்ணே மீதிப் படத்த எப்பப் போடுவீங்க?” என்று கும்பலிலிருந்து குரல் கொடுக்க... “டேய்... எவன்டாவன்?” என்று இன்ஸ்பெக்டர் கத்த... கூட்டம் அமைதியானது.

லோக்கல் சேனல் நிருபர்கள் மைக்குடன் என்னை நெருங்கினர். நான் எனது ரோஸ் நிற சில்க் சட்டையை இழுத்துவிட்டுக் கொண்டு, அவர்களை நோக்கிச் சென்றேன். அப்போது இன்ஸ்பெக்டர், “இன்டர்வியூல்லாம் கொடுக்கக்கூடாது” என்று என் சட்டையைப் பிடித்து இழுக்க... நான் ஆவேசத்துடன் குரலை உயர்த்தி, “மிஸ்டர் ஸிராக்கோ...” என்றேன் சத்தமாக. அவர் அரண்டுபோய் கையை விட்டார். நான் மெதுவாக அவரிடம், “இந்த தியேட்டர் சரித்திரத்துலயே ஒரே படத்த தொடர்ந்து நாலு ஷோ பாத்த ஒரே ஆளு நீதான். ஞாபகம் வச்சுக்க...” என்று கூறிவிட்டு, “நீ கேளு பாப்பா...” என்றேன் ஒரு பெண் நிருபரை நோக்கி.

“இந்தக் கைதைப் பத்தி என்ன சொல்ல விரும்புறீங்க?”“இளைஞர்களுக்கு சேவை செஞ்சதுக்காக அரெஸ்ட் பண்ணியிருக்காங்க!”“ஆபாசப் படம் காமிக்கிறதுதான், இளைஞர்களுக்கு செய்ற சேவையா?”“இது ஆபாசப்படம் இல்ல. சென்சார் சர்டிஃபிகேட் வாங்கின படம்...”“இல்ல... நடுவுல ப்ளூ ஃபிலிம்ல்லாம் ஓட்டுறீங்களாமே?”“அது எதிரிகளின் சதி. ஃபிலிம் நடுவுல என் எதிரிங்க எப்படியோ பிட்ட சேர்த்து, என்னை மாட்டி விட்டுட்டாங்க...” “அண்ணே... போலாம்...” என்றார் இன்ஸ்பெக்டர்.
 

(அடுத்த இதழில் முடியும்)

www.kungumam.co

  • தொடங்கியவர்

பாகுபலி 2

 

சென்ற இதழ் தொடர்ச்சி...

அந்த சிறுநகர ஜுடிஷியல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட் ஹால், சினிமாவில் காண்பிப்பது போல் இல்லாமல், சந்தைக் கடை போல் இரைச்சலாக இருந்தது. ஜட்ஜிடம் அசிஸ்டென்ட் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் (ஏபிபி), “மை லார்ட்... ஒரு ரிமாண்ட்...” என்று ரிப்போர்ட்டை நீட்டினார். இன்ஸ்பெக்டர் எங்களை நோக்கி கண்களைக் காண்பிக்க... நானும், ஆபரேட்டரும் கூண்டில் ஏறி நின்றோம்.
10.jpg
ஜட்ஜ் என்னை லேசான கேலிப் புன்னகையுடன் பார்த்துவிட்டு ஏபிபியிடம், “கேஸ் ரிஜிஸ்டர் பண்ணியாச்சா? எஃப்ஐஆர் காப்பி?” என்றார். ஏபிபி எஃப்ஐஆரை நீட்ட அதைப் பார்த்துவிட்டு கீழே வைத்தார். பிறகு ஜட்ஜ் எங்களிடம் பெயர், வயது விபரங்களைக் கேட்டார். பிறகு கண்ணாடியைக் கழற்றி டேபிளில் வைத்துவிட்டு, “ம்... சொல்லுங்க. என்ன படம் காமிச்சீங்க?” என்றார்.

நான் ரகசியமான குரலில் கிசுகிசுப்பாக, ‘‘பாருக்குட்டி...” என்றேன். “காதுல விழல. சத்தமா...” “பாருக்குட்டி பார்ட் டூ யுவர் ஆனர்!” என்று நான் சத்தமாகக் கூற... கோர்ட்டில் அனைவரும் சிரித்தனர். ஒரு காகிதத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு, “ரிமாண்டட்!” என்றார் ஏபிபியைப் பார்த்து. அப்போது என் வக்கீல் எழுந்து, “மை லார்ட்... திஸ் இஸ் பெய்லபிள் க்ரைம். பெய்ல் பெட்டிஷன்...” என்று ஒரு மனுவை நீட்டினார். 

உடனே ஏபிபி ஆவேசமாக, “இவங்கள ஜாமீன்ல விடக்கூடாது யுவர் ஆனர். பரம்பரை பரம்பரையா இவங்களுக்கு இதான் தொழிலு. அக்யூஸ்டு சரவணக்குமாரோட தாத்தா தண்டபாணி, ‘சத்திரத்தில் ஒரு ராத்திரி’ படம் போட்டு அரெஸ்ட் ஆகியிருக்காரு. அப்பா சுந்தரமூர்த்தியும் ‘ரகசிய ராத்திரி’ படம் போட்டு அரெஸ்ட்டாயிருக்காரு. இவரும் ஏற்கனவே ‘விடியாத ராத்திரி’ படம் போட்டு அரெஸ்ட் ஆகியிருக்காரு...’’ என்று அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க... என் வக்கீல் ஒன்றும் பேசாமல் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்தார்.  கடுப்பான நான், “யுவர் ஆனர்...” என்றேன் ஜட்ஜை நோக்கி.

“சொல்லுங்க...” என்றார் ஜட்ஜ் புன்னகையுடன். “அய்யா... இவரு என்னை ஜாமீன்ல விடக்கூடாதுங்கிறாரு. அவருகிட்ட ஒரே ஒரு கேள்வி. அவரு தன் வாழ்நாள்ல, ஒரு தடவை கூட இந்த மாதிரி படம் பாத்ததில்லன்னு சொல்லச் சொல்லுங்க பாப்போம்!” என்று கூற... கோர்ட்டில் சிரிப்பு. “ஏன் சிரிக்கிறீங்க? உங்க எல்லாத்தையும் கேக்குறேன். நீங்க யாரும் ஒரு தடவை கூட, இந்த மாதிரி படத்த பாத்தது  இல்லன்னு கையைத் தூக்குங்க பாப்போம்!” என்று நான் கேட்க... ஒரு கை கூட உயரவில்லை.

“தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!” ஜட்ஜ் புன்னகையுடன் ஏபிபியை நோக்கி, “குருமூர்த்தி... ஜாமீன் தந்துடலாம். அப்புறம் ஊருல யாராரு, என்னென்ன படம் பாத்தாங்கன்னு சொல்வாரு. இந்த கேஸ்க்கு போய், எதுக்கு கொலைக் கேஸ் மாதிரி ஆர்க்யூ பண்றீங்க. எனக்கு ஜாமீன் கொடுக்கலாம்னு தோணுது!” “நோ மை லார்ட்... தி கலெக்டர் ஹேஸ் இன்ஸ்ட்ரக்டட் மீ. ஒன் மினிட். கலெக்டர் லெட்டரக் காமிக்கிறேன்...” என்ற ஏபிபி ஃபைலில் கலெக்டரின் கடிதத்தைத் தேடினார்.

ஜட்ஜ் பொழுதுபோகாமல் என்னிடம், “கைல என்ன பேக்? ரொம்ப பெருசா இருக்கு?” என்றார். “சும்மா... படிக்கிறதுக்கு புத்தகம் வச்சிருக்கேன்.” “என்ன புத்தகம்?” “நடிகை ஷகிலா மேடத்தோட சுயசரிதை யுவர் ஆனர்!” “ஷகிலா சுயசரிதையா?” அலறினார் ஜட்ஜ். “இத ஷகிலா மேடம் முதல்ல மலையாளத்துல ‘என்ட ஆத்மகதா’னு எழுதினாங்க. அதைத்தான் இப்ப மேடம் தமிழ்ல போட்டுருக்காங்க யுவர் ஆனர்!” கடுப்பான ஜட்ஜ், “ஸ்டாப்... ஸ்டாப்...” என்று கூற, நான் விடாமல், “சில்க் ஸ்மிதாவும், ஷகிலாவும் ‘ப்ளே கேர்ள்ஸ்’ படத்துல ஒண்ணா நடிச்சிருக்காங்க யுவர் ஆனர்.

ஓர் அத்தியாயத்துல சில்க் ஸ்மிதாவப் பத்தி ஷகிலா மேடம், ‘பிரியமான நட்சத்திரமே... நீ ஒரு பொன் வசந்தமாக இருந்தாய்’னு எழுதியிருக்காங்க பாருங்க... எனக்கு கண்ணு கலங்கிடுச்சு யுவர் ஆனர்...” என்ற நான் கண்களைத் துடைத்துக்கொண்டேன். ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற ஜட்ஜ், “இந்தாளுக்கு ஜாமீன் கிடையாது. முதல்ல ஜெயிலுக்கு அழைச்சுட்டு போங்கய்யா!” என்றார் சத்தமாக.

பதறிப்போன நான், “அய்யா... இனிமே நான் திருந்தி வாழலாம்னு இருக்கன்ய்யா. எனக்கு யாரும் கல்யாணத்துக்கு பொண்ணு கொடுக்கல. இப்பதான் ஒரு பொண்ணு சரின்னு சொல்லியிருக்கு. அவங்க வர்ற வெள்ளிக்கிழமை தியேட்டருக்கு ‘பாகுபலி 2’ படம் பாக்க வர்றன்னுருக்காங்க. நீங்க வெளிய விட்டாதான் என் கல்யாணம் நடக்கும்ய்யா. இந்த பாவிய மன்னிச்சு விட்டுடுங்கய்யா...” என்று கைகளைக் குவித்து கதறினேன்.

மனம் இரங்கிய ஜட்ஜ், “பெய்ல் க்ராண்டட்!” என்று  கையெழுத்து போட்டார். மறுநாள் காலை. மாவட்ட ஆட்சியர் அலுவலகம். நான் கலெக்டர் அறைக்கு வெளியே மனோகருடன் உட்கார்ந்திருந்தேன். தியேட்டர் சீல் ஆர்டரை ரத்து செய்வதற்கு கலெக்டர் உத்தரவு போடவேண்டும். பொதுவாக இந்த மாதிரி சீல் செய்தால், நான்கைந்து மாதங்கள் கழித்து, ஃபைன் போட்டுதான் மீண்டும் திறக்க அனுமதிப்பார்கள். ஆனால், இந்த கலெக்டர் மிகவும் இரக்க சுபாவமுடையவர் என்றும், நேரில் சந்தித்து கேட்டால் மனமிரங்க வாய்ப்புண்டு என்றும் பலரும் சொன்னதால் கலெக்டரைப் பார்க்க வந்திருந்தேன்.

எனது மொபைல் ஃபோன், ‘கண்ணே... கட்டிக்கவா... ஒட்டிக்கவா?’ என்று அடித்தது. மொபைலை ஆன் செய்தேன். ஃபோனில் குமார், “சரவணா... ‘பாகுபலி-2’ படத்துக்கு பேசி, அட்வான்ஸ் கொடுத்துட்டன். வர்ற வெள்ளிக்கிழமை பாஸ்வர்டு அனுப்பிடறன்னு சொல்லிட்டாங்க...” என்றான். அப்போது ‘‘நீங்க போங்க...” என்று பியூன் கூற... நான் ஃபோனை கட் செய்துவிட்டு நடந்தேன். கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த நான் அடுத்த வினாடியே, “அய்யா...” என்றபடி அப்படியே தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினேன். “நீங்கதான்யா எனக்கு வாழ்க்கை கொடுக்கணும்!” என்று கதறினேன்.

“யோவ்... என்னய்யா இது. முதல்ல எழுந்திரி...” என்று கலெக்டர் கூற, எழுந்தேன். “உனக்கு இப்ப என்ன வேணும்?” “‘பாருக்குட்டி’ படம் போட்டேன்னு தியேட்டர மூடி, சீல் வச்சுட்டாங்கய்யா. நீங்கதான்ய்யா மனசு வச்சு சீல எடுத்து விடணும்...” “க்ளோஸ் பண்ணி ரெண்டு நாள் கூட ஆவல. அதுக்குள்ள க்ளோஸிங் ஆர்டர ரிவோக் பண்ணமுடியாது!” “தெரியும்ய்யா. நான் இந்த மாதிரி படம் ஓட்டுறன்னுதான் 33 வயசாகியும், எனக்கு பொண்ணு கிடைக்கல.

இப்பத்தான் ஒரு பொண்ணு ஓகே சொல்லியிருக்கு. வர்ற வெள்ளிக்கிழமை அவங்க எங்க தியேட்டருக்கு படம் பார்க்க வர்றன்னுருக்காங்க...” என்றவுடன் கலெக்டர், “‘பாருக்குட்டி’ய பாக்கவா?” என்றார் கிண்டலாகச் சிரித்தபடி. “இல்லய்யா. ‘பாகுபலி-2’ படம் போடப் போறேன்!” “இப்படி சொல்லித்தான் மறுபடியும் தியேட்டரத் திறப்பீங்க. அப்புறம் மறுபடியும் ‘பாருக்குட்டி’ய அழைச்சுட்டு வந்துடுவீங்க!” “சத்தியமா அந்த மாதிரி பண்ணமாட்டேன்ய்யா. இது என் வாழ்க்கை.

முத முதல்ல ஒரு பொண்ணு முடியற மாதிரி இருக்கு. தியேட்டரத் திறந்தாதான் கல்யாணம் முடிவாகும்ய்யா...” கலெக்டர், “உன்ன எப்படி நம்புறது. ம்...” என்று யோசித்து விட்டு, ‘‘ஒண்ணு பண்றேன். நான் இப்ப ரிவோக் பண்றேன். ஆனா, முத நாளு நானே வந்து, நீ ‘பாகுபலி-2’ படம் போடுறியான்னு செக் பண்ணுவேன்!” “அய்யா... வாங்கய்யா... நீங்க எங்க தியேட்டருக்கு வர, நான் புண்ணியம் செஞ்சுருக்கணும்ய்யா!” “சரி, வர்ற வெள்ளிக்கிழமை காலைல பத்து மணிக்கு அங்க இருப்பேன்!” வெள்ளிக்கிழமை.

தியேட்டரே திருவிழாக் கோலமாக இருந்தது. வெளியே தோரணம் கட்டி, ‘பாகுபலி 2’ போஸ்டர் ஒட்டப்பட்டிருக்க... ஒரே ஜனக் கூட்டம். எனது அழைப்பின் பேரில், நான் திருந்தி வாழ்வதை ஊக்கப்படுத்தும் விதமாக ஜட்ஜ், இன்ஸ்பெக்டர், கலெக்டர் எல்லாரும் வந்திருந்தனர். மூவரும் கடைசி வரிசையில் தனியாக அமர வைக்கப்பட்டனர். நான் அவர்கள் அருகில், புது சிவப்பு நிற சில்க் சட்டை அணிந்து நின்றுகொண்டிருந்தேன். இரண்டாவது வரிசையில் பெண் வீட்டார் வரிசையாக அமர்ந்திருந்தனர்.

நியூஸ் ரீல் ஓடிக்கொண்டிருக்க... வெளியேயிருந்து கையில் மொபைலுடன் வந்த குமார், “சரவணா... நம்ம ‘பாகுபலி-2’ படத்தோட டிஸ்ட்ரிப்யூட்டர் விநாயகம்...” என்று ஃபோனை நீட்டினான். மொபைலை வாங்கிய நான், “ஹலோ... சொல்லுங்க. இருங்க... நான் வெளிய வரேன்...” என்று வெளியே வந்தவன், “உங்க தயவுல தியேட்டரே ஹவுஸ்ஃபுல்லு!” என்றேன்.

பதிலுக்கு விநாயகம், “உங்களுக்கு பயங்கர தில்லுங்க. அஞ்சே நாள்ல தியேட்டர மறுபடியும் திறந்து, மறுபடியும் அதே ‘பாருக்குட்டி’யப் போடுறீங்களே!” என்று கூற... எனக்கு பகீரென்றது. “‘பாருக்குட்டி’யா? என்னண்ணன் சொல்றீங்க? நான் ‘பாகுபலி’க்குல்ல அட்வான்ஸ் கொடுத்திருந்தேன்!” என்ற எனது கால்கள் பயத்தில் வெடவெடவென்று நடுங்கின.

“‘பாகுபலி’யா? அப்ப நீங்க நிஜமாவே ‘பாகுபலி’தான் கேட்டுருந்தீங்களா?” “ஆமாம்ணே!” “அய்யோ... ஒரு தப்பு நடந்து போயிருச்சு. மேனேஜர் ‘பாகுபலி 2’ன்னுதான் சொன்னாரு. ஆனா, 35 வருஷமா உங்க தியேட்டர்ல மலையாளப் படம் மட்டும்தானே போடுவீங்க.. தியேட்டருக்கு சீல் வச்சப்ப ‘பாருக்குட்டி பார்ட் டூ’ தானே ஓடிக்கிட்டிருந்துச்சு. அதனால தியேட்டரத் திறந்தவுடனே மறுபடியும் நீங்க ‘பாருக்குட்டி பார்ட் டூ’ கேட்டிருப்பீங்க.

இவனுங்க காதுல ‘பாகுபலி 2’ன்னு விழுந்திருக்கும்னு நினைச்சுகிட்டு...” என்று அவர் நிறுத்தினார். நான், “நினைச்சுகிட்டு...” என்றேன். “‘பாருக்குட்டி-2’ படத்தோட பாஸ்வேர்டதான் அனுப்பி வச்சேன்!” என்று விநாயகம் கூறி முடிக்க... எனக்குத் தலை சுற்றி, மயக்கம் வருவது போல் இருந்தது. “படம் இன்னும் போட லல்ல?” என்றார் விநாயகம். “நியூஸ் ரீல் ஓடிக்கிட்டிருக்கு...” “சீக்கிரம் போய் நிறுத்துங்க.

நான் வேற இந்தப் படத்துல, டைட்டிலுக்கு முன்னாடியே ஒரு குளிக்கிற சீன் சேத்துருக்கேன்!” “டைட்டிலுக்கு முன்னாடியே குளிக்கிற சீனா?” என்ற நான், “தேவராஜு…. தேவராஜு…”. என்று அலறியபடி ஆபரேட்டர் ரூமுக்கு படியேறினேன். வேகமாக வெளியே வந்த தேவராஜ், “என்னண்ணே... எடுத்தவுடனே தர்ப்பனா குளிக்கிற சீன் ஓடுது. ‘பாகுபலி’ படத்துலயும் தர்ப்பனா நடிச்சிருக்காங்களா?” என்றான்.

“‘பாகுபலி’ படத்துல தர்ப்பனாவா? பரதேசி நாயே...” என்று ஆபரேட்டர் அறைக்குள் ஓடி, சதுர ஓட்டை வழியாகப் பார்த்தேன். கீழே ஜனங்கள் இரைச்சலாக கத்திக்கொண்டிருந்தார்கள். “அய்யோ... நிறுத்துடா!” என்று நான் கத்த... தேவராஜ் நிறுத்துவதற்குள் திரையில் ‘பாருக்குட்டி-2’ என்று டைட்டில் ஓடியது!

www.kungumam.co

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.