Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டேம்ரூஸும் டிசம்பர் மாதமும்!

Featured Replies

Bild könnte enthalten: 2 Personen, Personen, die lachen, Personen, die sitzen
 

டேம்ரூஸும் டிசம்பர் மாதமும்!


 ஹேமி கிருஷ்

அதிகாலையில் ஜன்னல் திரையை விலக்கினேன்.பனிபடர்ந்த தோட்டத்தையும் ,பறவைகளின் சப்தங்களை கேட்கும்போதும் ,அந்த ரம்யமான பொழுது மிகவும் இனிமையாக இருந்தது.எனக்கு மிகவும் பிடித்த மாதம் இந்த டிசம்பர் மாதம்.ஏனோ டேம்ரூஸ் ஞாபகம் வருவதை என்னால் தவிர்க்க இயலவில்லை.இதே டிசம்பர் மாதத்தில்தான் தன் காதலை சொன்னான் டேம்ரூஸ்.

இள நிலை முடித்ததும் முது நிலை படிக்க விருப்பம்.ஆனால் அப்பா” என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. அடுத்த வருடம் சேர்த்து விடுகிறேன் என்றார்.ஒரு வருடம் சும்மா இருக்க பிடிக்கவிலை.எங்கள் ஊர்லே ஒரு பள்ளியில் ஆசிரயையாக செல்லும் வாய்ப்பு கிடைத்தது.முதல் நாள் இன்டர்வியூ சென்றேன்.அந்த மேடத்திற்கு முப்பத்தைந்து வயது இருக்கும்.அவர் பள்ளியின் நிர்வாக இயக்குனர்.அழகாக நேர்த்தியாக சேலை உடுத்தியிருந்தார். முகத்தில் கர்வமும் கண்டிப்பும் அளவிற்கு மிகுதியாகவே தென்பட்டது.சிரிப்பா? அப்படி என்றால் என்ன? என்பது போல் இருந்தது அவர் முகம்.

அது பழைய காலத்தில் கட்டிய மரத்தாலான அழகிய வீடு.இப்பொழுது அதை பள்ளியாக மாற்றியிருந்தனர்.பெரிய பெரிய அறைகளாக அடித்தடுது மூன்று அறைகள் இருந்தன.மூன்றாவது அறையின் வலப்பக்கம் சில படிகட்டுகள் இறங்கினால் மிக நீண்ட கூடமும் அறையின் இடப்பக்கம் ஒரு விசாலமான அழகான பூங்காவும் குழந்தைகள் விளையாட ஊஞ்சல் சீசா சறுக்கல் போன்றவைகளும் சில பெஞ்சுகளும் அமைத்திருந்தனர்.பூங்காவை ஒட்டினாற்போல் ஒரு பெரிய பங்களா இருந்தது..அதில் தனியாக மேடம் மட்டும் வசித்து வந்தார்.அது அவருடைய பரம்பரை வீடு.

அந்த பள்ளியில்மொத்தமே பத்து ஆசியர்கள் தான் இருந்தோம்.அங்கு இரண்டாம் வகுப்பு வரையில் மட்டுமே இருந்தது.என்னையும் ஸ்வேதா என்ற பெண்ணையும் தவிர அனைவருமே ஆங்கிலோ இந்தியர்கள்.அதில் ஒருவன் தான் டேம்ரூஸ்.

அவன் அழகையும் திறமையையும் நுனி நாக்கு ஆங்கிலத்தயும் பார்த்து பிரமித்தேன்.அவனிடம் பேசுவதற்கு மிகவும் தயங்கினேன்.ஸ்வேதா அவனை கண்டாலே முகம் மலர்வதை அடிக்கடி பார்த்து இருக்கிறேன்.டேம்ரூஸ் அப்பள்ளியின் நிர்வாக அதிகாரியாக பணி புரிந்து வந்தான்.

பள்ளிக்கு காலையில் ஏழரைக்கே அனைத்து ஆசிரியர்களும் வந்து விட வேண்டும்.எட்டு மணிக்கு ஆரம்பித்து ஒரு மணிக்குள் முடிந்து விடும்.நான்தான் பள்ளிக்கு முதலில் வருவேன்.டேம்ரூஸ் பள்ளியின் பின்புறத்தில் இருந்த ஒரு அறையில் தங்கி இருந்ததால் அவன் முன்னரே வந்து விடுவான்.டேப்பில் ஓம் என்ற ரீங்காரமும் ஊதுபத்தி வாசமும் எப்பொழுதும் என்னை வரவேற்கும்.

`.பிரான்ஸிஸ்கா மிகவும் அழகாக இருப்பாள்.வெள்ளை வெளேர் என்ற நிறத்தில் நீல நிற கண்கள்.ரோஜா நிறத்தில் உதடு பழுப்பு நிறத்தில் நீளமான முடி என வர்ணித்துக் கொண்டே போகலாம்.அவளது கணவன் கேப்ரியல் அவள் அளவிற்கு அழகில்லை..இருவரும் ஆதர்ச தம்பதிகள் என்றால் மிகையாகாது. இருவரும் தங்களுக்குள் பேசிக்கும் பொழுது சப்தமே வெளிவராது.அவ்வளவு மெதுவாக பேசிக் கொள்வார்கள். இருவரையும் அதிக சம்பளம் கொடுத்து மேடம் வட இந்தியாவிலிருந்து அழைத்து வந்திருக்கிறார்.இவர்களுடனே டேம்ரூஸ் எப்போதும் இருப்பான்.அவர்களை விட்டால் மேரி ஜோசப் என்ற மிஸ்ஸிடம் பேசுவான்.மற்றபடி யாருடனும் தேவை இல்லாமல் பேச மாட்டான்.

அந்த பள்ளிக்கு இரண்டரை வயதேயான ஒரு குழந்தை சேர்ந்தது.சுருள் முடியுடன் சிவப்பு நிறத்தில் சில பற்களே முளைத்து அவ்வளவு அழகாய் இருந்தது.அது தினமும் அழுது கொண்டே இருக்கும்.ஒரு நாள் மேடம்,ஸ்வேதா டேம்ரூஸ் முதற்கொண்டு அனைவரும் அக் குழந்தையை சமாதனப்படுத்த,மேடம் கொஞ்சம் பொறுமை இழந்து மிரட்ட ,அவ்வழியே வந்த என்னிடம் ஒரே பாய்ச்சலாக வந்து “அம்மா” என்று கட்டிக் கொண்டது.எல்லோரும் சிரித்தனர். பின்னர் எப்பொழுது பார்த்தாலும் என்னையே அம்மா அம்மா என்று அழைத்து நான் போகும் இடத்திற்கு எல்லாம் பின்னாடியே வந்தது.நான் இருந்தால் மட்டுமே அழாமல் இருந்ததால் மேடம் என்னையே சில நேரம் ப்ரிகேஜி யில் இருக்க சொல்வார்.

ஒரு சமயம ப்ரிகேஜி செல்ல தாமதமாகி இருந்தது.அந்த குழந்தை அழுது கொண்டிருந்தது.டேம்ரூஸ் சமாதானம் செய்து கொண்டிருந்தான்.நான் வந்ததும்”வந்துட்டாங்கடா உன் அம்மா இனிமே அழாதே’ என்று சொன்னான். என்னது நான் அம்மாவா? என்பது போல் பார்த்தேன்.டேம்ரூஸ் சிரித்துக் கொண்டே அலுவலக அறைக்குச் சென்றான்.

பின் காலை நேரம் நான் பள்ளிக்கு வந்ததும் ,மென்மையாய் ஹாய் என்று சொன்னான்.அவன் சொல்வது எனக்கு புதிதாகவும் திருப்பி சொல்வதற்கு எனக்கு கூச்சமாகவும் இருந்தது.

பள்ளியின் விளையாட்டு விழாவிற்கு குழந்தைகளுக்கு அணிவகுப்பு சொல்லிக் கொடுக்க நாங்க அனைவரும் அவர்களை மைதானத்திற்கு அழைத்துச் செல்வோம். மேடம் இருந்தால் ,டேம்ரூஸ் சுத்தமான ஆங்கிலத்திலும் மேடம் அந்த பக்கம் சென்றவுடன் லோக்கல் தமிழில் கலந்தடிப்பான்.குழந்தைகளுக்கு தமிழ் பேச்சு ஒரு விதமாக அந்நியமாக இருந்ததாலோ அல்லது வித்தியாசமாக இருந்ததாலோ அவர்கள் ரசித்து சிரிப்பார்கள்.

ஒரு சமயம் அவன் ஏதோ சொல்ல “ஐயோ மேடம்” என்று நான் கையை உதற்கிக் கொண்டே சொல்ல அவன் வெலவெலத்துப் போய் பார்த்தான்.அதைப் பார்த்து நான் சிரிக்க அவன் சின்னதாய் சிரித்து விட்டுச் சென்றான்.

மேடம் மிகவும் கண்டிப்பானவர்.வகுப்பு நேரத்தில் ஆசிரியர்கள் யாரும் பேசிக் கொள்ளக் கூடாது.முக்கியமாக நானும் ஸ்வேதாவும் தமிழ் பேசவே கூடாது என்று கூறியிருந்தார்.

அப்படித்தான் அன்று மைதானத்தில் குழந்தைகளுடன் பேசும் பொழுது மேடம் இல்லையென்று நினைத்து தமிழில் நானும் ஸ்வேதாவும் பேசிக் கொண்டிருந்தோம்.அதை அவர் கவனித்துவிட,அவரின் அறைக்கு என்னையும் அவளையும் அழைத்து நன்றாக “கவனித்தார்”. நாங்கள் அசடு வழிய வெளியே வர, டேம்ரூஸ்

“என்ன சாப்ட்டீங்க,ஸ்வீட்டா? இல்ல காரமா?” எனக் கேட்டு நக்கல் அடித்தான்.லேசாக நான் முறைக்க

“அன்னைக்கு நீ சொன்னப்போ நான் சீரியஸா எடுத்துகிட்டேனா? எனக் கேட்டான்.

“என்னைக்காவது உங்களை மாட்டிவிடறோம் பாருங்க” என் சொன்னேன்.அவன் பயந்தது போல் நடித்தான்..எங்களுக்கு சிரிப்பு வந்தது.

அதே போல் மற்றுமொரு தருணம் அனைத்து பள்ளி ஆசியர்களின் சந்திப்பு ஒரு விடுதியில் நடைபெற்றது.எங்கள் பள்ளியின் சார்பாக நான் .’.பிரான்ஸிஸ்கா மற்றும் டேம்ரூஸும்சென்றோம்., நான் செல்வது அதுவும் டேம்ரூஸ் கூட வருவது ஸ்வேதாவிற்கு எரிச்சலை கொடுத்திருக்க வேண்டும்.அவள் முகம் கொடுத்து என்னிடம் பேசவில்லை. நாங்கள் மூன்று பேர் சென்றோம். அப்பொழுது தேநீர் இடைவேளையில் எங்களுக்கு தேநீரும் ஒரு தட்டில் சில இனிப்பு வகைகளும் கொடுத்தனர். என்னால் முடிந்தவரை சாப்பிட்டு விட்டு ஒரு பால் கோவா பாதி மட்டும் சாப்பிட்டு மீதி வைத்திருந்தேன்..’.பிரான்ஸிஸ்கா எனைப் பார்த்து ”

“ஏன் மீதி வைத்து விட்டாய்” எனக் கேட்டாள்
போதும் எனக்கு ஸ்வீட் அவ்வளவா பிடிக்காது” என்றேன்.

என் தட்டிலிருந்து நான் மீதி வைத்த பால்கோவாவை எதிர்பாராவிதமாய் டேம்ரூஸ் எடுத்து சாப்பிட்டான்.நான் முழித்தேன்..’.பிரான்ஸிஸ்கா பார்க்காத்து போல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். கான்..’.பரன்ஸ் முடிந்ததும் படிக்கட்டில் கீழே இறங்கும் போது டேம்ரூஸ் என் மீது கை படும்படி நடந்தான்.அந்த சூழ்நிலை எனக்கு என்னவோ போலிருந்தது.மனம் சஞ்சலம் கொண்டது.

அது கோடைகால விடுமுறை.மேடம் தன் பாட்டி ஊருக்கு சென்றிருந்தார்.பள்ளி அட்மிஷன் மற்றும் பள்ளி கட்டணம் கட்ட பெற்றோர்கள் வருவதால்இந்த மாதம் இந்த ஆசியர்கள் வர வேண்டும் என அட்டவணை போட்டு கொடுத்து விட்டு போயிருந்தார்.எனக்கும் பதினைந்து நாட்கள் தரப்பட்டிருந்தது. நான் இருந்த நாட்களில் டேம்ரூஸ் அலுவலகத்தில் இருந்தான்.

ஆபிஸில் நானும் டேம்ரூஸும் மட்டுமே இருந்ததால் வேறு வழியின்றி அவனிடமே பேசி கொண்டிருக்க வேண்டும்.சில சமயம் பிஸியாகவும் சில சமயம் வெறும் பொழுதுகளாகவும் இருக்கும்.அவன் ஆங்கிலோ இந்தியனாக இருந்தாலும் தமிழ் நன்றாகவே பேசினான்.எனக்கும் அவனுக்கும் விருப்பங்கள் அலைவரிசை ஒரே மாதிரி இருந்தது ஆச்சரியத்தைக் கொடுத்தது.

இளையராஜாவின் இசை கோடை மழை, மண் வாசனை, நள்ளிரவில் கசியும் பழைய பாடல், மாலை நேரப் பயணம் என எது சொன்னாலும் அவனுக்கும் பிடித்த விஷயங்கள் என அவன் வியந்தான்

“நீங்க கொடைக்கானல்ல எங்கிருக்கீங்க” எனக் கேட்டேன்

கிரீன் .’.ஃபீல்ட் ல”

“என் அத்தை கூட கொடைக்கானல்லதான் இருகாங்க”

அப்படியா’ எந்த ஏரியா”

எங்கேன்னு தெரியல..வீட்டு முன்னாடி நிறைய டீ எஸ்டேட் இருக்கும்”

சிரித்தான்..

“கொடைக்கானல்ல எல்லா இடமும் அப்படித்தான் இருக்கும்”

நான் வழிந்தேன்.பின் ஞாபகம் வ்ந்ததாய்

“அவங்க வீட்டுக்கு கொஞ்சம் பக்கத்துல ஒரு தியேட்டர் இருக்கும்”

அவன் ஒவ்வொரு தியேட்டர் பெயரை சொல்லியவாறு அங்கேயே இங்கேயா என்று கேட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு மாணவனின் அப்பா பையனின் அடையாள அட்டைக்காக போட்டோவுடன் வந்தார்.

டேம்ரூஸ் போட்டோவைப் பார்த்துவிட்டு

“.’.பேஸ் கிளியராவே இல்லையே.எந்த தியேட்டர்ல எடுத்தது” என கேட்டான்

நான் குனிந்து அடக்க முடியாமல் சிரித்தேன்.

வந்திருந்தவர் என்னையும் டேம்ரூஸையும் மாறி மாறி பார்த்தார்.

முதலிம் டேம்ரூஸிற்கு புரியாமல் பிறகு உணர்ந்தவனாய்”ஸாரி எந்த ஸ்டுடியோவுல எடுத்தது” எனக் கேட்டான்
அவரை பேசி அனுப்பிய பிறகும் நான் குனிந்து சிரித்துக் கொண்டே இருந்தேன்.

” ம்ம் அப்புறம்” எனக் கேட்டான்

நான் நிமிர்ந்ததும் அவன் பார்வை என் கண்களை ஊடுருவியது.அதில் காதல் தேங்கி இருந்தது.முதன் முதலில் நான் காதலை உணர்ந்தேன்.அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டு எச்சிலை விழுங்கினேன்.பின் எழுந்து அடுத்த அறைக்குச் சென்றுவிட்டேன்.. மதியம் வரை அந்த அறைக்குச் செல்லவே இல்லை.பின் வந்த நாட்களின் தேவை இருந்தால் மட்டுமே அவனிடம் பேசினேன் அதுவும் அவன் கணகளை பாராமல்.

விடுமுறை கழிந்து பள்ளி தொடங்கிய போது அவனிடம் சுத்தமாக பேசுவதை நிறுத்திவிட்டேன்.காலை வணக்கங்கள் கூட சொல்லவில்லை..அதை அவன் ஜாடையாக எல்லாரும் இருக்கும் போழுது சொன்னான்.

“முதலில் எல்லா ஆசியர்களும் காலை வணக்கங்கள் சொல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டு பிறகு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்” என்று ஆங்கிலத்தில் கூறினான்.

வேறு வழியின்றி நான் தினமும் அவனுக்கு காலை வணக்கம் சொல்லும் போதெல்லாம் சிரிப்பான்.எனக்கு அவனிடம் ஏதோ ஒரு பயம் நம் தகுதிக்கு மீறி இருப்பதனாலோ அல்லது வாழும் சூழ்நிலையோ எதுவென்று சொல்ல தெரியவில்லை..அவனை அவன் கண்களை எதிர்கொள்ள ஒரு தயக்கம் இருந்தது..நான் பேசுவேனா என்று பார்ப்பான்.இல்லையென்றால் வேண்டுமென்றே ஸ்வேதாவிடம் பேசுவான்.அவளுக்கு ஒரே பெருமையாக இருக்கும்..கொஞ்ச நாட்களில் அழகழகாய் சுடிதார்கள் அணிந்து வந்தாள் அவள்.

அப்பள்ளியின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா நடைப் பெற்றது.ஒரு முக்கிய பிரமுகரை நிர்வாகம் அழைத்து இருந்தது.அதோடு நிறைய வெளிநாட்டவரும் வந்திருந்தனர்.விழா முடிந்ததும் இரவு விருந்து பூங்காவில் ஏற்பாடு செய்தார்கள்.டேம்ரூஸ் அழகாக கோர் சூட் போட்டு இருந்தான்.நான் அன்று நீல நிறத்தில் பச்சை பார்டர் போட்ட சேலை உடுத்தி இருந்தேன்.

இரவு விருந்து பரிமாறும் இடத்தில் அவனும் நின்று பரிமாறிக் கொண்டிருந்தான்.அதுவும் சைவ உணவு வழங்கப்படும் இடத்தில் நின்று கொண்டிருந்தான்..நான் ஸ்வேதா,.’. பிரான்ஸிஸ்கா மூவரும் ஒரு மேசையில் அமர்ந்து கொண்டிருந்தோம்..அவர்கள் இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.நான் எதுவும் சாப்பிடாமல் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.அவர்கள் இருவரும் எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தனர் சைவ உணவு தனியாகத்தான் பரிமாறுகிறார்கள் என்று.டேம்ரூஸ் அங்கு இருந்ததால் எனக்குத்தான் போக தயக்கம்.அவர்கள் கட்டாயத்தினால் எழுந்து சென்றேன். நடந்து செல்கையில் புதிதாக சேலை உடுத்தி இருந்ததால் ஒரு வித தயக்கம் முன் நின்றது.டேம்ரூஸ் முகத்தில் என்னைப் பார்த்ததும் புன்முறுவல் மேலிட்டது.

நான் அவனைப் பாராமல் தட்டை அவனிடம் நீட்டினேன்.அவன் மெதுவாக “ம்க்கும்” என்று செருமினான்.நான் உதடு பிரியாமல் சிரித்துவிட்டேன்.ஏதோ ஒரு சந்தோஷம் குடிபுகுந்தது.எங்கள் மூவருக்கும் ஐஸ்கிரீம் வைத்து விட்டுப் போனான்.ஐஸ்கிரீம் போலவே என் மனதும் தித்திப்பாக இருந்தது.அந்த மங்கிய மஞ்சள் வெளிச்சத்தில் அத்தனை முகங்களுக்கிடையே அவன் என்னை மட்டும் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான்.

அதற்குள் கிட்டத்தட்ட ஒரு வருடம் மேல் ஆகிருந்தது.அப்பா என்னிடம் வந்து” வருகிற வருஷம் உன்னை காலேஜில் சேத்து விடறேன்.அதுக்கு தேவையான பிரிபரேஷன் இப்ப இருந்தே பண்ணு.. இனிமே வேலைக்கு போக வேணாம்” என்றார்.மேற்படிப்பு படிக்க எனக்கும் மகிழ்ச்சிதான் என்றாலும் டேம்ரூஸ் ஞாபகம் என்னை ஏதோ செய்தது.ஆனால் பள்ளியிலிருந்து உடனடியாக நிக்க முடியாது ஒரு மாதம் முன்கூட்டியே சொல்ல வேண்டும்.அதலால் எப்படியும் ஒரு மாதம் இருப்போம் என்று ஆறுதல் அடைந்தேன்.

நான் மேடமிடம் சென்று தயங்கியபடி கூறினேன்.அவர் முகம் இறுகியது.

“மேற்படிப்பு படிக்க வேண்டுமென்றால் இங்கு எதற்கு வந்தாய்.உனக்கு பயிற்சி கொடுத்தது பள்ளியின் வளர்ச்சிக்கே தவிர உனக்கில்லை” என்று ஆங்கிலத்தில் சராமாரியாக திட்டிவிட்டு பின் சமாதானம் அடைந்தார்.

மதியம் குறிப்புகள் சரி செய்து கொண்டிருக்கும் பொழுது டேம்ரூஸ் என்னை கடந்து சென்றான்.அவன் முகம் வாட்டமாக இருந்தது.மேடம் சொல்லி இருக்கக் கூடும்.அந்த ஒரு மாதத்தில் எனக்கு பதிலாக வேறொரு பெண்ணை சேர்த்து இருந்தார்கள்,நான் முடித்த சிலபஸ் முடிக்க வேண்டிய பகுதிகள் அனைத்தும் விளக்கியிருந்தேன்.

விடைபெறும் கடைசி நாள் வந்தது.பூங்காவில் இருந்த மர பெஞ்சில் அமர்ந்தேன்.மேடம் அவர் பாட்டிக்கு சீரியஸ் என்று கிளம்பி சென்றிருந்தார். அதனால் அவரிடம் முன்னதாகவே விடை பெற்றுவிட்டேன். கை கடிகாரத்தைப் பார்த்தேன்.அது ஆறே முக்கால் என காட்டியது.இன்றுதான் கடைசி நாள் என்பதால் முன்னதாகவே வந்துவிட்டேன்.டிசம்பர் மாத குளிரில் மயிற்கால்கள் சிலிர்த்தன.கைகளை இறுக் கட்டிக் கொண்டேன்.சுற்றிலும் நோட்டம் விட்டேன்.அடர்ந்த புல்வெளிகள் சீராக வெட்டப் பட்டு வெளிர் மஞ்சள் பூக்கள் ஆங்காங்கே தலைக் காட்டிக் கொண்டிருந்தன.அழகான குல்முஹர் மரங்கள் பறவைகளின் கிரீச் என்ற சப்தம், நீர்திவளைகளை ஏந்தியபடி இருக்கும் புற்கள் என்று இயற்கை தன்னால் முடிந்த வரை தன் அழகை காட்டிக் கொண்டிருந்தது.
பெரு மூச்சு விட்டேன். இப்பள்ளி எனக்கு எவ்வளவோ அனுவங்களை பெற்று தந்தது உண்மை,அவை என்றுமே மறக்க முடியாத இனிமையான நினைவுகள். இன்னும் யாரும் வரவில்லை.டேம்ரூஸ் வந்து கொண்டிருந்தான்.பின் ஏதோ ஞாபகம் வந்தவனாய் பங்களாவின் பின்புறம் சென்றான்.திரும்பி வந்தவன் கையில் சிவப்பு ரோஜா இருந்தது. என்னிடம் நீட்டினான்.நான் நன்றி சொல்லி வாங்கி கையிலேயே வைத்து இருந்தேன்.

இன்னமும் அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.நான் என்ன என்பது போல பார்த்தேன் அவன் குரல் உடைந்து

“எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு உன் குணம் உன் கண்கள் கூந்தல்னு ஒவ்வொண்ணையும் ரசிச்சு இருக்கேன்.உன்னை வாழ் நாள் முழுதும் ரசிக்கனும் உங்கூட சண்டை போடனும், குறும்போட உன் கோபங்களை ரசிக்கனும் நீயும் என்னை பாத்துக்கணும்னு ஆசை,உனக்கும் என்னை பிடிக்கும்தானே..நீ இன்னையோட இங்க வேலை பண்றது கடைசி நாள் என்னால தாங்கிக முடியல..இங்க இருக்கற ஒவ்வொன்னும் உன்னை ஞாபகபடுத்தும் ..நான் என்ன செய்யட்டும் நீ சொல்லு..” மனதில் இருந்ததை படபடவென கூறினான்

நான் ஒன்றும் சொல்லாமல் கையிலிருந்த ரோஜாவை பார்த்துக் கொண்டிருந்தேன்.என் உதடுகள் துடித்தன.ஏறிய வெப்பத்தினால் கன்னம் சிவந்தது.கண்களில் மெல்ல நீர் எட்டிப் பார்த்தது.

அந்த நேரத்தில் புதிதாய் சேர்ந்த பெண் வரவே நான் அவளுடன் சென்று விட்டேன்.மதியம் அனைவரிடமும் விடைபெற்றுவிட்டேன் டேம்ரூஸ் தவிர.அவன் என்னிடம் எதிர்பார்த்து நின்றான்.நான் அவனை பாராமல் வெளியே வந்தேன்.

அதன்பின் மனம் மிகவும் வலித்தது.ஏன் நான் எதுவும் சொல்லவில்லை. நானும்தானே அவனை விரும்பினேன். அவன் தைரியமாக சொன்னது போல் ஏன் நான் சொல்லவில்லை.அட ஆமாம் என்று சொல்லி இருக்கலாமே.மடத்தனம் செய்து விட்டேனோ!

சில மாதம் கழித்து கல்லூரியில் சேர்ந்தேன்.நான் நம்பிக்கையுடன் இருந்தேன்..என்றாவது அவனை பார்க்கும் பொழுது அவனிடம் என் காதலை சொல்லலாமென்று.அந்த நம்பிக்கையும் சில நாட்களே நீடித்தது.மேரி ஜோசப் மிஸ்ஸை ஒரு முறை ரோட்டில் பார்த்த போது டேம்ரூஸ் வட இந்தியா பக்கம் சென்று விட்டதாக கூறினார்.அங்கு சென்றபின் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் சொன்னார்.இனி அவனை பார்க்க முடியாதா?என் இதயம் வெடித்துவிட்டாற் போலிருந்தது.

அவ்வபோது அவன் முகம் நினைவில் தோன்றும்.என் நினைவுகளும் பாரமாகும்.அவன் கொடுத்த ரோஜாவை என் டைரியில் வைத்திருந்தேன்.அந்த வாடிய ரோஜாவும் அதன் அச்சு பெற்ற பக்கமும் என் மனதை வாட்டி எடுக்கும் சில சமயம் யாருக்கும் தெரியாமல் அழுவேன்.

எனக்கும் அவனுக்கும் இருந்த உறவு புரியாமலே போய்விட்டது.வருடங்கள் கரைந்தது.

இன்னமும் என்னிடம் இருக்கிறது அவன் கொடுத்த காய்ந்து போன ரோஜாவும் அதன் அச்சு பெற்ற டைரியும் கூடவே அவனது நினைவுகளும். குழந்தைகள் எழுந்த சப்தம் கேட்கவே நான் அகன்றேன் அவ்விடத்திலிருந்தும், நினைவுகளிருந்தும்…

kalki

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.