Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!

Featured Replies

எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!

   
title_horline.jpg
 
இந்திரா பார்த்தசாரதி
white_spacer.jpg

வா சல் கதவைத் தட்டிவிட்டுப் போய்விட்டான் எமன். நாடகத்துக்கு முதல் விசிலா?

டாக்டர்கள் ஆச்சர்யப்பட்டார்கள்... ‘‘இவ்வளவு பெரிய அட்டாக்... நீங்கள் தப்பிச்சது மிராக்கிள்தான்!’’

தப்பித்தது எதற்காக என்று யோசித்தார் நடேசன்.

p94c.jpg

உலகத்தில் நடப்பன அனைத்துக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று சிலர் சிலர் சொல்கிறார்கள்; யதேச்சையாக அமைகின்ற ஒற்றுமையை வைத்துக்கொண்டு, அதைக் காரணம் என்று குழப்பிக்கொள்வது முட்டாள் தனம் என்று கூறுகிறவர்களும் இருக்கிறார்கள்.

காரணம் இருக்கிறது என்று நம்பினால், தப்பித்தது அவர் இருப்புக்கு ஓர் அர்த்தம் கற்பித்து, அவருக்கு ஓர் அடையாளத்தைத் தருகிறது.

‘இனிமேல் என்ன சாதனை சாத்தியம், எண்பது வயதுக்கு மேல்? சரி, இதுவரையிலும் தான் என்ன சாதித்திருக்கிறேன்... உண்பது, உறங்குவது, இனப் பெருக்கம் தவிர?’ என்று சிந்தித்தார் நடேசன்.

நல்லவேளை, இனப் பெருக்கம் ஒன்றோடு நின்றுவிட்டது. இதுவே மனித சமுதாயத்துக்குப் பெரிய உதவி இல்லையா?

அவர் தப்பித்தது, எதேச்சையாக நிகழ்ந்துவிட்ட ஓர் ஒற்றுமையாக இருக்கக்கூடும். எமன் ஒரு முக்கியமான ஃபைலைக் கொண்டு வர மறந்திருக்கலாம். எடுத்து வரத் திரும்பிப் போயிருப்பானோ என்னவோ!

‘‘அறுவை சிகிச்சை செய்ய இயலாது. நீங்கள்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’’ என்று டாக்டர்கள் சொன்னது, எதுவும் எப்பொழுது வேண்டுமானாலும் நிகழலாம் என்ற காரணத்தால் என்பது இப்போது புரிகிறது. ஒரே வாரிசு, போன மாதம் அமெரிக்காவிலிருந்து மூன்று வார விடுப்பில் வந்தபோது, ஆரோக்கியமாக இருந்துவிட்டு, அவன் திரும்பிப் போனவுடன் அவருக்கு இப்படி மாரடைப்பு வந்தால், மகன் மனத்தில் ஓடும் எண்ணங்களை என்னவென்று சொல்ல முடியும்?

‘போன மாதம் நான் வந்திருந்த போதே இது வந்திருக்கக் கூடாதா? மறுபடியும் நான் இப்பொழுது ‘லீவ்’ எடுத்தாக வேண்டும்!’

அப்படி அவன் நினைத்தாலும் தப்பில்லை. அவன் ‘பாஸ்’ எப்படிப் பட்டவனோ?

ரயில், விமானம் இவற்றுக்குக் கால அட்டவணை இருப்பது போல், மனிதனுடைய பிறப்புக்கும் இறப் புக்கும் ஒரு அட்டவணை ஏன் இருக்கக் கூடாது? வெளிநாடுகளில் இருக்கும் மகன்களும் மகள்களும் ‘லீவ்’ எடுத்துக்கொண்டு வர எவ்வளவு சௌகர்யமாக இருக்கும்? இரண்டாம் தடவை லீவி¢ல் வந்திருக்கிறான், பாவம்... அவருடைய பிள்ளை!

p94b.jpg

ஆனால், டாக்டர்களாலேயே எதுவும் உறுதியாகச் சொல்ல முடிய வில்லை! கால அட்டவணை இருந் தால் நிச்சயமற்ற தன்மையும், கால னின் வருகையில் ஒரு சஸ்பென் ஸும் இருக்காது! அல்லது, பீஷ்மரு டைய அதிர்ஷ்டம் இருந்தால், அவர் உத்தராயணம் வரை மரணத்தை தள்ளிப் போட்டது போல், மகனுடைய விடுமுறையை ஒட்டி அவர் தம்மு டைய மரணத் தேதியைத் தள்ளிவைத் துக்கொள்ளலாம்.

“நான் பத்து வருஷத்துக்கு முன்னாடியே சொன்னேன், அம்மா போனவுடனே எங்ககூட அமெரிக்காவுக்கு வந்துடுங்கன்னு. நீங்க பிடிவாதமா கேக்கலே!” என்றான் அவர் மகன் பிரபு, மருந்து மாத்திரையை அவரிடம் கொடுத்துக்கொண்டே.

“என்ன ஆகியிருக்கும்... அங்கே‘ அட்டாக்’ வந்திருக்காதா?” என்றார் நடேசன்.

“வந்திருக்கலாம். ஆனா, உதவிக்கு நாங்க கூடவே இருப்போமே? டாக்டர் இப்போ உங்ககூட ஒரு ஆள் இருந் துண்டே இருக்கணும்கிறாரே?”

அமெரிக்காவில், கூடவே ஆள் இருந்திருக்க முடியுமா? கணவன், மனைவி இருவரும் வேலைக்குப்போகி றார்கள். அவர்களுடைய இரண்டு மகள்களும் வெளியூர் கல்லூரிகளில் படிக்கிறார்கள். இதைப் பற்றிக் கேட்டால், இதற்கு பதில் கூற இயலாமை அவன் மனச் சங்கடத்தை அதிகரிக்கும்.

அவனும் இதைப் பற்றி யோசிக்காமல் இருந்திருக்க மாட்டான். தன் மனச் சமாதானத்துக்காக இப்படி ஏதோ சொல்லிக்கொள்கிறான்.

“இப்போ என்ன செய்யறதுன்னு தெரியலியே! பத்து வருஷத்துக்கு முன்னாடியே வந்திருந்தீங்கன்னா, இந்நேரம் அமெரிக்கன் சிட்டிஸனாகவே ஆகியிருக்கலாம்!” என்றான் பிரபு.

“அப்போ புஷ்ஷ§க்குப் பயந்துண்டு ‘ஹார்ட் அட்டாக்’ வந்திருக்காதா?”

“அப்பா... உங்க குதர்க் கத்துக்கு என்னால பதில் சொல்ல முடியாது. நீங்க இனிமே தனியா இந்த வீட்டிலே இருக்க முடியாது. அமெரிக்காவுக்கு என்கூட வர்றதும் சாத்தியமில்லே. டோன்ட் யூ ரியலைஸ் தி சிச்சு வேஷன்?”

“நீ சொல்றது புரியுது. ஆனா, சொல்யூஷன் என் கையிலே இல்லியே! உனக்கே இப்போ புரிஞ்சிருக்கும். எவ்வளவு பெரிய அட்டாக்! அண்ட் ஐ ஹவ்ஸர் வைவ்ட்!”

“மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா? குற்ற உணர்வினாலே நான் கஷ்டப்படணும்னே பேசறீங்களா?”

“நோ! இப்போ என்ன செய்யணும்கிறே... சொல்லு, கேக்கறேன்!”

அவன் சோபாவில் உட்கார்ந்தான். சிறிது நேரம் பேசாமல் உத்தரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தான். சொல்லத் தயங்குகிறான் என்று தோன்றிற்று நடேசனுக்கு.

“சொல்லு, என்ன யோசிக் கிறே?”

‘‘ரிட்டையரிங் ஹோம்ஸ் பத்தி என்ன நினைக்கறீங்க? ஸம் ஆஃப் தெம் ஆர் ரியலிகுட்!’’

‘‘சரி, இந்த வீட்டை என்ன செய்யறது?”

“பூட்டி வெச்சுக்கலாம். வாட கைக்கு விடலாம். விக்கணும்னாலும் விக்கலாம்... வீடு ஒரு பெரிய விஷயமில்¬லை!’’

“மூணு தலைமுறை இந்த வீட்லே இருந்திருக்கு!”

“இது உங்களோட சென்டி மென்ட்டல் சப்ஜெக்ட்! நான் அதைப் பத்திப் பேச விரும்பலே. உங்களைப் பத்திதான் என் அக்கறை!”

அவருக்கு எது நல்ல ஏற்பாடு என்பதைப் பற்றி அவன் ஏற் கெனவே தீர்மானித்துவிட் டான்... சில இடங்களைப் பார்த்துவிட்டும் வந்திருக் கிறான் என்று தெரிந்தது.

“நான் நம்ம வீட்டிலேயே இருக்கிறதிலே உனக்கென்ன ஆட்சேபனை?” என்றார் நடேசன். எழுந்து, சோம்பல் முறித்துக்கொண்டே உலாவ ஆரம்பித் தார்.

“வீட்டை மேனேஜ் பண்ண றது அவ்வளவு சுலபமில்லே, அப்பா! அந்த ‘ஸ்ட்ரெஸ்’ உங்க ஹார்ட்டுக்கு அவ்வளவு நல்ல தில்லேங்கிறார் டாக்டர். “ஹோம்’லே நீங்க நிம்மதியா இருக்கலாம். வேளச்சேரியைத் தாண்டி ஒரு இடத்திலே ஒரு பியூட்டிஃபுல் ஹோம் இருக்கு. அஞ்சு நட்சத்திர ஓட்டல் வசதி. இதைத் தவிர வசதி வேணும்னாலும் நாமே பண்ணிக் கலாம். மொஸைக் தரை, கார்ப்பெட் இல்லே! போட்டுக்கலாமான்னு கேட்டேன். சரின்னுட்டான். உங்க ளுக்கு என்ன... புத்தகம்தானே படிக்கணும்? உங்க ‘பர்சனல் லைப் ரரி’யை அங்கே ‘மூவ்’ பண்ணிக் கலாம். இப்பெல்லாம் கம்யூனி கேஷன் பத்திக் கவலையே இல்லே. இன்டர்நெட், வீடியோ கான்ஃப் ரன்ஸிங் அது, இதுன்னு வந்தாச்சு.. வி கேன் ஆல்வேஸ் பி இன் டச்! உங்களுக்கு என்ன ஆச்சோன்னு எங்களுக்கும் கவலையில்லாம இருக்கும். ‘கம்யூனிட்டி லைஃப்’, ஒருத் தரை ஒருத்தர் பார்த்துக்க முடியும். யோசிச்சுச் சொல்லுங்க. எனக்கு நாலு வாரம்தான் ‘லீவு’. அதுக்குள்ள ஏதானும் ஏற்பாடு செய்தாகணும்!”

“நான் என்ன யோசிக்கிறதுக்கு இருக்கு? எனக்காக நீ நிறைய யோசிச்சு வெச்சிருக்கே போல் இருக்கே?”

“அங்கே முழு நேர டாக்டர் ஒருத் தர் இருக்கார். இரண்டு நர்ஸ். கிளினிக், பார்மஸி எல்லாம் இருக்கு. ஸ்பெஷலிஸ்ட் டைப் பார்க்கணும்னாலும் உடனே ஏற்பாடு செய்து தருவா. நீங்க இடத்தைப் பாருங்க, யூ வில் லைக் இட்!’’

நடேசன், உலவிக்கொண்டு இருந்தவர், சோபாவில் உட்கார்ந்தார். கண்களை மூடிக் கொண்டார்.

“என்னப்பா சொல்றீங்க?” என்றான் பிரபு.

இன்னும் இருக்கிற மூணு வாரத்துல இந்த வீட்டை உன்னால வித்துட முடி யுமா?”

“ஏன் முடியாது? ஷகரான இடம், பெரிய வீடு, போட்டி போட்டுண்டு வருவாங்க!’’

“யாரையானும் பாத்து வெச்சிருக்கியா?”

‘‘என்னப்பா இப்படிப் பேசறீங்க, நீங்க ‘யெஸ்’னு சொல்லாம நான் விக்கிறதுக்கு ஆளைப் பார்ப்பேனா?” என்றான் பிரபு சற்று கோபத்துடன்.

“உன் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, வாழ்ந்த வீட்ல இருக்கணும்கிற ஆசையே இல்லையா உனக்கு?” என்றார் அவர் கண்களைத் திறந்துகொண்டே.

“அப்பா, நாம கொஞ்சம் பிராக்டிகலா பேசுவோம். நான் திரும்பி வந்து இங்கே இருப்பேனான்னு எனக்கு இப்போ தெரி யலே. உலகம் மாறிண்டே இருக்கு. உங்க சென்டிமென்ட் எனக்குப் புரியறது. அதே சமயம் என்னையும் நீங்க புரிஞ்சுக்க ணும்...”

நடேசன் ஒன்றும் கூறாமல் அவனையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்தார். ‘சென்டிமென்ட்டைக் கொன்றுவிடு, அல்லது மூச்சை நிறுத்திவிடு’ என்று பாரதி பாடி யிருக்க வேண்டும்.

பிரபுவின் நிலையில் நின்று பார்த்தால் அவனைப் புரிந்துகொள்ள முடிகிறது.

‘‘நாளைக்கு நான் சொன்ன இடத்தைப் பாக்கலாமா, அப்பா?” என்றான் பிரபு.

அவர் ‘சரி’யென்று தலை அசைத்தார்.

நகரத்தை விட்டுத் தள்ளி இருந்தாலும் துப்புரவாக இருந்தது அந்த இடம்.

பிரபு சொன்னது போல எல்லா வசதிகளும் இருந்தன. ஏ.சி, டி.வி, ஃபர்னிச்சர், எல்லாம் முதல் தரத்தில் இருந்தன. நூல் நிலையத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பிரபல பத்திரிகைகள் எல்லாம் இருந்தன. புத்தகங்களும் இருந் தன. ‘குறுகிய காலத்தில் வெற்றி பெறுவது எப்படி?’ என்ற புத்தகத்தை நடேசனின் வய துள்ள ஒருவர் படித்துக் கொண்டு இருந்தார்.

இந்த நம்பிக்கை தமக்கும் வரக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்ற எண்ணம் வந்ததும் புன்னகை செய்தார் நடேசன்.

ஒரு கோயில் இருந்தது. சிவன், விஷ்ணு, முருகன், பிள்ளையார், துர்க்கை ஆகிய எல்லா தெய் வங்களுக்கும் சந்நிதி. நவக்கிரக வழிபாட்டுக்கும் வசதி இருந்தது. அவர்கள் போனபோது ருத்ர ஹோமம் நடந்துகொண்டு இருந் தது.

மாதிரி இல்லத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக நிர்வாகி, அவர்கள் இருவரையும் ஒரு அப்பார்ட்மென்ட் டுக்கு, அங்கிருப்பவரின் அனுமதி கேட்டு அழைத்துச் சென்றார்.

அவருக்கு 85 வயது இருக்கும். முதுகு கூனி யிருந்தது. கூர்மையான பார்வை. “வாங்கோ’’ என்று முகமெல்லாம் புன்னகையாக வரவேற்றார்.

“கொள்ளுப் பேத்தி அழுதுண்டிருந்தா... நீங்க வந்தேள்” என்றார் அவர்.

நடேசன் சுற்றுமுற்றும் பார்த் தார். யாருமில்லை.

“என்ன பார்க்கறேள், யாரை யுமே காணோம்னா? இதோ பாருங்கோ” என்று சொல்லிக் கொண்டே கிழவர் கையிலிருந்த ரிமோட்டை இயக்கினார்.

டி.வி-யில் படங்கள் வந்தன. ஒரு குழந்தை தொட்டிலில் இருந்தது.

அதைச் சுற்றிச் சிலர் குனிந்து அதைப் பார்த்துக்கொண்டு இருந் தனர். “வலது பக்கம் நிக்கிறானே, அவன்தான் என் பிள்ளை. அவன் பக்கத்திலே என் பேரன். இந்தப் பக்கமா நிக்கறது, என் மாட்டுப் பொண்ணு. அவ பக்கத்திலே அவ மாட்டுப் பொண்ணு. தொட் டில்லே என் கொள்ளுப் பேரன். சவுண்ட் போடட்டுமா?” என்றவாறு ரிமோட்டை அழுத்தி னார் அவர். குழந்தை காலை உதைத்துக்கொண்டு அழுதது. “என் பிள்ளையும் இப்ப டித்தான் அழு வான், சின்ன வய சிலே” என்றார் கிழ வர். அவர் கண்கள் கசிந்திருந்தன.

அவர்கள் வீட் டுக்குத் திரும்பிய தும், பிரபு கேட் டான்... ‘‘எப்ப டிப்பா இருக்கு?”

“குட்! ஆனா, இது ‘அப்பர் மிடில் கிளாஸு’க்குதான்னு நினைக்கிறேன். சரி தானே?” என்றார் நடேசன்.

“அஃப்கோர்ஸ்... முக்கால்வாசிப் பேரின் குழந்தைகள் வெளிநாடுகள்ல இருக்காங்க. அந்தக் கிழவர் வீட்டுக்குப் போனோமே, அவர் எவ்வளவு சந்தோஷமா இருக்கார் பார்த்தீங்களா? அதுதான் அவருக்கு ‘ரியா லிட்டி’ இல்லியா?” என்றான் பிரபு.

நடேசன் பதில் ஒன்றும் கூறவில்லை.

“உங்களுக்குப் பிடிச்சிருக்கான்னு கேட் டேன்... நீங்க பதிலே சொல்லலியே?”

“நம்ம நாட்டிலேயே இருக்கிற வசதி இல் லாத ஏழை அப்பா, அம்மா எல்லாரும் என்ன பண்ணுவா? மாட்டுப்பொண்ணு போட்டதுதான் சோறுன்னு இருப்பாளா?” என்றார் நடேசன்.

“நீங்க என்ன கேக்கறேள்னு எனக்குப் புரியலே. நான் கேட்டதுக்கும் நீங்க சொல்ற பதிலுக்கும் என்ன சம்பந்தம்?” என்றான் பிரபு சற்று உரத்த குரலில்.

“சம்பந்தம் இருக்கு. நீயே சொன்னே நம்ம வீடு பெரிசு, வாங்குறவங்க கொத்திண்டு போயிடுவாங்கன்னு. வீட்டை விக்கணும்னு அவசியமில்லே!” என்று சொல்லிவிட்டு நிறுத்தினார் நடேசன்.

“ஓ.கே! விக்க வேண்டாம்... என்ன பண் ணணும்கிறீங்க?”

‘‘நம்ம வீட்டையே ‘ஹோம்’ ஆக்கப் போறேன். நாலு ஏழைக் குடும்பம் தாராளமா இங்கே இருக்கலாம். துணக்குத் துணையும் ஆச்சு... நீயும் அமெரிக்காவிலே உன் அப்பா வைப் பத்திக் கவலைப்படாம இருக்கலாம்.

நான் இந்தத் தடவை ஹார்ட் அட்டாக் லேர்ந்து ஏன் தப்பிச்சேன்னு எனக்கு இப்போ புரியறது. எல்லாத்துக்கும் காரணம் இருக்கத்தான் வேணும். அது ஈஸ்வர சித்தமோ என்னவோ... என்னன்னு எனக்குச் சரியா சொல்லத் தெரியலே.

இன்னொரு விஷயம்... உனக்குப் பேரனோ பேத்தியோ பொறந்தா, வீடியோ எடுத்து அனுப்பு..! மறந்துடாதே!” என் றார் நடேசன்.

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.