Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான்: பெங்களூரு உறவினர் திடுக் தகவல்

Featured Replies

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான்: பெங்களூரு உறவினர் திடுக் தகவல்

 

 
01CHDASJAYALALITHA-FINGERS

ஜெயலலிதா | கோப்புப்படம்   -  THE HINDU

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் என பெங்களூருவில் இருக்கும் அவரது உறவினர் லலிதா தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா (37), ‘நான்தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள். என்னை அவரது மகளாக அங்கீகரித்து, ரத்த வாரிசாக அறிவிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அம்ருதா, ‘‘கடந்த 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி ஜெயலலிதாவின் மகளாக நான் பெங்களூருவில் பிறந்தேன். ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார். ஜெயலலிதா தனக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால் சிறுவயதிலே என்னை பார்த்தசாரதி - ஷைலஜா தம்பதிக்கு தத்து கொடுத்துவிட்டார். எனது பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடைசி வரை என்னை மகளாக அறிவிக்கவில்லை''என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 

இந்நிலையில் பிரசவம் பார்த்ததாக சொல்லப்படும் ஜெயலட்சுமியின் உறவினர் மகள் லலிதா, ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா எனது அம்மாவின் அண்ணன் மகள். ஜெயலலிதாவின் குடும்பத்தார் எங்களுக்கு குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் என்பதால், சிறுவயதில் இருந்தே பல விஷயங்கள் எங்களுக்கு தெரியும். ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது, அவருக்கு ஒருவருடன் தொடர்பு இருந்தது. அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் எனவும் தெரிகிறது.

இதன்மூலம் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஜெயலலிதாவின் பேறுகாலத்துக்கு அருகில் இருந்து உதவியவர் என் பெரியம்மா ஜெயலட்சுமிதான். இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என ஜெயலலிதா என் பெரியம்மா ஜெயலட்சுமியிடம் சத்தியம் வாங்கி கொண்டார். இதனால் என் பெரியம்மா இதனை வெளியே சொல்லவில்லை. நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே இந்த விஷயம் தெரியும்.

ஜெயலலிதா தனக்கு பிறந்த பெண் குழந்தையை அவரது நெருங்கிய உறவினரிடம் வளர்க்க கொடுத்தார். அந்த குழந்தை அம்ருதாவா எனக்கு தெரியாது. சந்தேகம் இருந்தால் டிஎன்ஏ சோதனை செய்து பார்க்கலாம். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அம்ருதா என்னை வந்து சந்தித்தார். ஜெயலலிதாவின் மகள் என சொல்லும் அவர் என்னை அத்தை என்று அழைக்கிறார். அவருக்கு ஜெயலலிதாவின் சொத்துகள் மீது ஆசை இருப்பதாக தெரியவில்லை. ஜெயலலிதாவுக்கு மகள் பிறந்தது உண்மைதான். அவரது தாயார் சந்தியா இறந்ததால், மனிதாபிமான அடிப்படையில் ஜெயலட்சுமி அவரது பிரசவத்துக்கு உதவி இருக்கிறார்கள்'' என்றார்.

பெங்களூருவைச் சேர்ந்த ஜெயலலிதாவின் உறவினர் லலிதா தெரிவித்துள்ள தகவல், மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

http://tamil.thehindu.com/india/article21043364.ece?homepage=true

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவின் மகள் என கூறும் பெங்களூரு பெண் யார்? - ‘அப்போ பெரியம்மா.. இப்போ அம்மா' அம்ருதாவின் கதை

29chskopic

அம்ருதா

‘‘நான் தான் ஜெயலலிதாவின் மகள். சந்தேகம் இருந்தால் டிஎன்ஏ சோதனை செய்துகொள்ளுங்கள்'' என பெங்களூரு பெண் அம்ருதா உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இளம்வயது ஜெயலலிதா சாயலில் இருக்கும் அம்ருதாவை போயஸ் கார்டனுக்கு நெருக்கமான வட்டாரமே ஆச்சரியமாக பார்க்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மூதாதையர் ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாக கொண்டவர்களாக இருந்தாலும் மைசூருவிலும், மண்டியா அருகேயுள்ள மேல்கோட்டையிலும் வாழ்ந்தனர். மேல்கோட்டையில் பிறந்த ஜெயலலிதா, தந்தையின் மறைவுக்கு பிறகு பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்தார். சந்தியா நடிகையானதால், மகளுடன் சென்னைக்கு இடம்பெயர்ந்தார்.

கர்நாடகாவில் வசிக்கும் சிலர் அவ்வப்போது, ஜெயலலிதாவின் அண்ணன் என்றும், ஜெயலலிதாவின் தங்கை என்றும், உறவினர் என்றும் குரல் எழுப்புவது உண்டு. ஆனால் ஜெயலலிதா, ஜெயக்குமாரை தவிர வேறு யாரையும் தனது ரத்த உறவுகளாக ஏற்கவில்லை. அண்ணன் என்று கூறிய மண்டியா வாசுதேவனையும், பெங்களூரு சைலஜாவையும் பக்கத்தில் கூட சேர்த்துக் கொள்ளவில்லை.

 

முதலில் தங்கை

பெங்களூருவில் உள்ள கெங்கேரியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. மைசூரு ஐயங்காரான இவர் தன் மனைவி ஷைலஜா, மகள் அம்ருதாவுடன் (மஞ்சுளா) வசித்து வந்தார். கடந்த 2010-ல் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்துக்கொண்டிருந்தபோது பார்த்தசாரதி மனைவி ஷைலஜா, மகள் அம்ருதாவுடன் அங்கு வந்தார். ஜெயலலிதாவின் வழக்கறிஞர்களிடம், ‘‘என் மனைவி ஷைலஜா, ஜெயலலிதாவின் உடன் பிறந்த தங்கை. அவரைச் சந்திக்க அவரின் தொலைபேசி எண் கொடுங்கள்'' எனக் கேட்டார். அடுத்தடுத்த நாட்களில் தமிழ் பத்திரிகையாளர்களை அணுகி, அதே விஷயத்தை சொன்னார்.

தமிழ் பத்திரிகைகள் சைலஜா குறித்து செய்தி வெளியிடாத நிலையில், கன்னட பத்திரிகை கள் ‘‘ஷைலஜா ஜெயலலிதா வின் தங்கை'' என செய்தி வெளி யிட்டன.

 

அப்போ பெரியம்மா..!

ஜெயலலிதா பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரானபோதும், சிறையில் அடைக்கப்பட்டபோதும் அவரைச் சந்திக்க ஷைலஜா முயற்சித்தார். ஆனால் ஜெயலலிதா அவரை பார்க்க அனுமதிக்காததால் ஷைலஜா சிறை வாசலில் நின்று கொண்டு, ''நான் தான் ஜெயலலிதாவின் தங்கை. சந்தேகம் இருந்தால் டிஎன்ஏ செய்து பாருங்கள்'' என சவால் விட்டார்.

இன்னொரு பக்கம் அம்ருதா, ‘‘ஜெயலலிதா என் பெரியம்மா. சிறுவயதில் என்னைப் பார்க்க யாருக்கும் தெரியாமல் பெங்களூருவுக்கு வந்திருக்கிறார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எல்லாவற்றையும் சிலர் அழித்துவிட்டனர். இதை சொல்வதால் எங்களது உயிருக்கு ஆபத்து இருக்கிறது'' என பேட்டி கொடுத்தார். இதனால் கோபமடைந்த ஜெயலலிதா, ஷைலஜாவின் பேட்டியை வெளியிட்ட பத்திரிகைகள் மீது அவதூறு வழக்கு போட்டார். கடைசிவரை ஜெயலலிதாவை சந்திக்காமலே ஷைலஜா கடந்த 2015-ல் காலமானார். சில மாதங்களில் அவரது கணவர் பார்த்தசாரதியும் கால மானார்.

 

இப்போ மகள்..!

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை பார்க்க அம்ருதா முயற்சித்தார். அதற்கு சசிகலா குடும்பத்தார் அனுமதிக்கவில்லை. கடந்த டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது உடலை காண அம்ருதா சென்னைக்கு சென்றார். அங்கு சூழ்ந்திருந்த கூட்டதால் அவரால், ஜெயலலிதாவின் உடலைக் கூட பார்க்க முடியவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு அம்ருதா, ‘‘நான் ஜெயலலிதாவின் உண்மையான மகள். எனது தாயாருக்கு ஐயங்கார் முறைப்படி இறுதி சடங்குகள் நடைபெறாததால், என்னை இறுதி சடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும்''என கடிதம் எழுதி பிரதமர், குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு அனுப்பி வைத்தார்.

அதற்கு எந்த பதிலும் கிடைக்காததால் சென்னையில் உள்ள வழக்கறிஞர் நண்பர்கள் மூலமாக இப்போது உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியுள்ளார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது பெரியம்மா என சொல்லிவந்த அம்ருதா, இப்போது அவரை அம்மா என அழைக்க தொடங்கி இருக்கிறார்.

ஜெயலலிதா இறந்த பிறகு அவரது மகள் என கூறுவதில் உள்நோக்கம் இருப்பதாக அம்ருதாவை அறிந்தவர்கள் கருதுகிறார்கள். “ சொத்துக்கு ஆசைப்பட்டோ, விளம்பரத்துக்கு ஆசைப்பட்டோ அம்ருதா இதை செய்யலாம்.

உச்ச நீதிமன்றம் வரை செல்லும் விவரம் இல்லாத அம்ருதாவை யாரோ சிலர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள். இதன் மூலம் அம்ருதாவின் பின்னால் இருப்பவர்களுக்கு சொத்து ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ ஆதாயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது’’ என அம்ருதாவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.

http://tamil.thehindu.com/india/article21043348.ece?homepage=true

  • தொடங்கியவர்

``ஜெயலலிதா தாய்மை அடைந்திருந்தபோது அவசரமாக வரச் சொன்னார்!" - லலிதா

 
 

ஜெயலலிதாவுக்கு மகள் பிறந்தது உண்மை என்று பெங்களூருவில் உள்ள அவரின் உறவினர் லலிதா பேசியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Lalitha_18584.jpg

 
 


இது தொடர்பாக லலிதாவை பெங்களூரில் சந்தித்துப் பேசினோம். அவர் கூறுகையில், ‘சினிமாவில் இருந்தவரைக்கும் ஜெயலலிதாவுடன், எங்களுக்கு நல்ல தொடர்பு இருந்தது. ஆனால், அரசியலுக்கு வந்த பிறகு அவருக்கும் எங்களுக்குமான தொடர்பு நின்றுபோனது. அதன் பின்னர், எங்க பெரியம்மா ஜெயலட்சுமி மட்டும் அவருடன் அவ்வப்போது பேசிக்கொண்டிருந்தார். இந்தச் சூழலில், அவரின் தாயார் சந்தியா இறந்த பிறகு ஒரு சமயம் எங்க பெரியம்மாவை, ஜெயலலிதா அவசரமாக அழைத்திருந்தார். என் பெரியம்மா சென்று பார்த்தபோது ஜெயலலிதா தாய்மை அடைந்து இருந்துள்ளார். இதையடுத்து, ஜெயலலிதாவுக்கு, அவர்தான் பிரசவம் பார்த்துவிட்டு வந்துள்ளார்.
இதை பெரியம்மா, என் தாயாரிடம் சொன்னதும் அவர் கோபம் அடைந்துவிட்டார். ஏன் என்றால் எங்க மாமா ஜெயராமன் (ஜெயலலிதாவின் தந்தை) இறந்த பிறகு, எங்க அம்மாவுக்கு, ஜெயலலிதா குடும்பத்தினரைச் சுத்தமாகப் பிடிக்காது. அந்தக் குழந்தை சோபன்பாபுக்கும் ஜெயலலிதாவுக்கும் பிறந்த குழந்தை என்று பெரியம்மா எங்களிடம் கூறினார். அந்தக் குழந்தைதான் அம்ருதாவா என்று எனக்குத் தெரியாது. டி.என்.ஏ சோதனைதான் அதைத் தெளிவுபடுத்த வேண்டும்’ என்றார் தெளிவாக.
 

https://www.vikatan.com/news/tamilnadu/109296-jaya-had-a-daughter-says-her-relative-lalitha.html

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவின் வாரிசு என்று சொன்னவர்கள் யார்? ஒரு பரபர பயோடேட்டா

 
 

ஜெயலலிதா

'வின்னர்' திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். "வாரிசு இல்லாத சொத்துன்னு ஆட்டயப்போடலாம்னு பார்த்தா. இவன் வந்துட்டானே" என்று வடிவேல் புலம்புவதாக ஒரு நகைச்சுவை காட்சி இடம் பெற்றிருக்கும். இது நாள் வரை நேரடி வாரிசு யாரும் இல்லை என்று கருதப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, வாரிசாக சிலர் வரிசை கட்டி நிற்கின்றனர். ஜெயலலிதா இறந்து ஒரு வருடம் ஆன பின்னரும், அவரைச் சுற்றியே இன்னும் சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. என்னதான் நடக்குது..

 

முதல் வாட்ஸ்அப் வைரல் 


2016-ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்த பின்னர், அதே டிசம்பர் மாதத்திலேயே இவர் ஜெயலலிதா மகள் என்று சொல்லி வாட்ஸ்அப், முகநூல்களில் ஒரு பெண்ணின் படம் வைரல் ஆனது. அந்தப் பெண்குறித்து பாடகி சின்மயி தன் முகநூலில் ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். அவர் கேரளத்தைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கும் தமிழகத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றும், உலகத்தில் ஒரே முக ஜாடையில் ஏழு பேர் இருப்பதாகச் சொல்வார்கள். அதேபோல இவர் ஜெயலலிதா முகஜாடையில் இருக்கிறார் என்று சொன்னார். அதோடு இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.

இரண்டாவதாக வந்த கிருஷ்ணமூர்த்தி 

"நான் ஜெயலலிதாவின் மகன். என் பெயர் கிருஷ்ண மூர்த்தி" என்று உயர் நீதிமன்றத்தின் கதவை தட்டினார் ஒருவர். "நான் ஜெயலலிதாவுக்கும், சோபன்பாபுவுக்கும் பிறந்தவன். 1985-ம் ஆண்டு பிப்ரவரி 15-ல் பிறந்தேன். ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு 2016-ம் ஆண்டு செப்டம்பரில் போயஸ்கார்டனில் அவரை சந்தித்தேன். அந்த சமயத்தில், என்னை பொதுவெளியில் மகன் என்று அறிமுகம் செய்வதாக ஜெயலலிதா கூறினார். ஆனால்,  அப்படிச் செய்யக் கூடாது என்று ஜெயலலிதா உடன் இருந்த சசிகலா தடுத்துவிட்டார்" என்று ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்தார்.

சோபன்பாபுவும், ஜெயலலிதாவும் பிரிந்துவிட்டதால் தான் ஈரோட்டில் ஒரு குடும்பத்துக்குத் தத்துக் கொடுக்கப்பட்டதாகவும், அதில் எம்.ஜி.ஆர் சாட்சி கையெழுத்துப் போட்டிருந்ததாகவும் கூறினார். ஆனால், அவர் சொன்ன தேதியில் எம்.ஜி.ஆர் உடல் நலம் இல்லாமல் இருந்தார். மேலும், அவர் கொடுத்த ஆவணங்கள் எல்லாம் போலி எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை சிறையில் அடைக்கும்படி  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அம்ருதாமூன்றாவதாக வந்த அம்ருதா 

இப்போது பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்பவர், நான்தான் ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லி உச்ச நீதிமன்றத்தில் மனுசெய்தார். அவரை பெங்களூர் உயர்  நீதிமன்றத்தில் மனு செய்யும்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தி மனுவைத் தள்ளுபடி செய்தனர். அம்ருதா சில ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "நான் 1980-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்குப் பிறந்தேன். நான்தான் அவருடைய உண்மையான மகள். என்னை டி.என்.ஏ சோதனை செய்வதற்கும் நான் உடன்படுகிறேன். இந்த ஆண்டு மார்ச் மாதம்தான், நான் ஜெயலலிதாவின் மகள் என்பது எனக்குத் தெரியவந்தது" என்று சொல்லி இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க ஜெயலலிதாவின் உறவினர் என்று சொல்லும் லலிதா என்பவர், "ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்தது உண்மைதான். எனது பெரியம்மாதான் அவருக்குப் பிரசவம் பார்த்தார். 1980-ல் அவருக்கு குழந்தை பிறந்தது. யாரிடமும் இதைச் சொல்லக் கூடாது என்று ஜெயலலிதா சத்தியம் வாங்கிவிட்டார்"  என்று சொல்லி இருக்கிறார்.
இப்படி ஜெயலலிதாவின் வாரி யார் என்று நடக்கும் குழப்பங்களுக்கு எப்போது முடிவு வரும் என்று தெரியவில்லை. இன்னொரு புறம் நாங்கள்தான் ஜெயலலிதாவின் வாரிசு என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, மகன் தீபக் ஆகியோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சர்ச்சையில் சட்டம்தான் தன் கடமையைச் செய்ய வேண்டும். அதுவரை நமக்கு குழப்பமாகத்தான் இருக்கும்.

https://www.vikatan.com/news/coverstory/109331-biodata-of-three-people-who-claims-to-be-the-children-of-jayalalitha.html

  • தொடங்கியவர்

 

ஜெயலலிதாவுக்கு பிரசவம் நடந்தது உண்மைதான் ! - ஜெ. உறவினர் பகிரங்க வாக்குமூலம்

  • தொடங்கியவர்

'அன்று ஜெயலலிதாவுக்கு மகள் பிறந்தாள்!' லலிதா சொல்வது உண்மை தானா?

ஜெயலலிதா

ஜெயலலிதாவைப் பற்றிய ஒரு கட்டுரையில், முதல் முறையாக அவர் பெயரை 'ஜெ' எனக்குறிப்பிட்டிருந்தார் அந்தப் பத்திரிகையாளர். அந்தக் கட்டுரை வெளியானபோது, தன் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தியதாக அந்தப் பத்திரிகையாளருக்கு நோட்டீஸ் அனுப்பினார் ஜெயலலிதா. பொதுவாக தலைவர்களை அவர்களது பெயரின் முன்னெழுத்தைக் குறிப்பிட்டு சொல்லும் வழக்கத்தை அந்தப் பத்திரிகையாளர் சுட்டிக்காட்டிய பின்னரே ஜெயலலிதா அமைதியானார்.

 

இது ஓர் உதாரணம்தான். தன்னைப்பற்றிய விமர்சனங்களை ஜெயலலிதா இப்படித்தான் எதிர்கொண்டார். அப்படி ஜெயலலிதா மீது எழுந்த மிகப்பெரிய சர்ச்சை, அவருக்கு மகள் உண்டு என்ற சர்ச்சை. இந்த சர்ச்சை எழுந்த போதெல்லாம் அதீதமாகவே கோபப்பட்டார் ஜெயலலிதா. தனக்கு மகள் இருப்பதாக பேட்டிகொடுத்தவர்கள் மீதும், நான்தான் மகள் என்றவர்கள் மீதும், அதைப் பிரசுரித்த பத்திரிகைகள் மீதும் வழக்கு தொடரவும் செய்தார். ஆனால் இதைக்கடந்து இந்த விவகாரம் குறித்து அவர் எதையும் பேசியதில்லை. 

பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்த இந்தப் பிரச்னை, அவர் மறைவுக்குப் பின்னர் இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது கூட இதைப்பற்றி யாரும் பேசவில்லை. அவர் இறந்து ஓராண்டான நிலையில், இப்போது பரபரக்கிறது விவகாரம்.

ஜெயலலிதா உறவினர் லதா

'ஜெயலலிதாவின் மகள் நான் தான்' என அம்ருதா என்ற பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் தொடங்கிய பரபரப்பு, ஜெயலலிதாவின் உறவினர் லலிதா சொன்ன தகவல்களால் இப்போது உச்சம் பெற்றிருக்கிறது. "ஜெயலலிதாவுக்கு 1980-ல் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் தந்தை நடிகர் சோபன் பாபு" எனத் திட்டவட்டமாகச் சொல்கிறார் லலிதா.

"என் அம்மாவின் உடன்பிறந்தவர்தான் ஜெயலலிதாவின் அப்பா. ஜெயலலிதா எனது தாய் மாமனின் மகள்.ஜெயலலிதாவை நான் இரண்டு முறை சந்தித்துப் பேசியது எனக்கு  நினைவிருக்கிறது. சினிமாவிலிருந்து ஜெயலலிதா அரசியலுக்குச் சென்ற பிறகு, சசிகலா தரப்பினர் எங்களை நெருங்க விடவில்லை. ஜெயலலிதாவின் அப்பா ஜெயராமன் மறைவுக்குப் பின்னர் நாங்கள் ஜெயலலிதா குடும்பத்தோடு உறவைத் தொடரவில்லை. அப்போது ஜெயலலிதா மயிலாப்பூரில்தான் தங்கியிருந்தார். 

ஒரு முறை அவர் எனது பெரியம்மாவை போனில் அழைத்து சென்னை வரச்சொன்னார். என் பெரியம்மாவும் சென்னை சென்று வந்தார். ஜெயலலிதா குடும்பத்தோடு நாங்கள் உறவைத் தொடராத நிலையில், ஜெயலலிதாவை பெரியம்மா சந்தித்தது எங்கள் குடும்பத்தில் சர்ச்சையானது. அப்போது, ஜெயலலிதா பிரசவ வலியில் இருந்ததாகவும், பிரசவம் பார்க்கச் சென்றதாகவும் பெரியம்மா சொன்னார். அம்மா இல்லாமல் தனித்திருக்கும் ஜெயலலிதாவை இதுபோன்ற நேரத்தில் எப்படிச் சந்திக்காமல் இருப்பது என்றும், இதை வெளியில் சொல்லக் கூடாது என்றும் எங்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார். 

ஜெயலலிதா

சோபன் பாபுவுடன் ஜெயலலிதா ஒன்றாக வாழ்ந்தது எல்லோருக்கும் தெரியும். ஜெயலலிதாவுக்கு மகள் பிறந்தது உண்மை. ஆனால் அது அம்ருதாவா என்று தெரியாது. அதை நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும். இதை ஏன் இப்போது சொல்ல வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஜெயலலிதா எங்கள் உறவினர். அவர் மறைந்துவிட்டார். எங்கள் முறைப்படி அவருக்கு இறுதிச் சடங்கு செய்யவேண்டும் அதை அவரது மகள் செய்ய வேண்டும் என்பது மட்டுமே என் விருப்பம்," என்றார் அழுத்தமாக.

இந்தப் பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிற சூழலில், இது குறித்து கருத்துத் தெரிவித்திருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. இதைப்பற்றி தான் எதுவும் அறிந்திருக்கவில்லை. ஆனால் இதுப்பற்றி ஜெயலலிதாவிடம் தான் கேள்வி எழுப்பியதாக அவர் தெரிவித்திருக்கிறார். "1991ல் நான் அமைச்சராக இருந்தேன். அப்போது சென்னை வந்தபோது, ஜெயலலிதா விருந்து கொடுத்தார். ஜெயலலிதாவிடம் தனியாகப் பேசிக்கொண்டிருந்த போது, உங்களுக்கு மகள் இருப்பதாகச் சொல்கிறார்களே எனக்கேட்டேன். அவர் மிகவும் கோபப்பட்டார். இது 'கருணாநிதியின் பொய் பிரசாரம்' என்றார். அவர் சொன்னதை நான் நம்பினேன். அதன் பின்னர் இப்படியான எந்தத் தகவலையும் நான் கேட்கவில்லை," என்றார். 

Reporter Facebook post

"ஜெயலலிதாவுக்குக் குழந்தை பிறந்ததாகச் சொல்லப்படும் 1980 முதல் 81ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் பத்திரிகையாளர்கள் பலர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வந்தோம். இதழ்களுக்குத் தொடர் பெறுவதற்காக அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது," என மூத்த பத்திரிகையாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

 

ஜெயலலிதா பல பிரச்னைகளில் வீம்பாகவே இருந்திருக்கிறார். அதற்கான காரணங்களை அவர் கூறாமல் மெளனம் சாதிக்கவும் செய்திருக்கிறார். சில பிரச்னைகளில், யார் என்ன எரிச்சலூட்டினாலும் அதைப்பற்றி அவர் விளக்கமாகப் பேசியதில்லை. இது அவருக்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறது. ஆனால் இதுவே இப்போது மிகப்பெரிய பிரச்னையாக மாறியிருக்கிறது.

https://www.vikatan.com/news/coverstory/109405-jayalalithaa-gave-birth-to-a-girlchild-her-cousin-lalitha-asserts.html

  • தொடங்கியவர்

போயஸ்கார்டன் வீட்டில் சோபன்பாபுவிற்கு ஜெயலலிதா காட்டி மகிழ்ந்த படம்!

 
 

சோபன் பாபு

'உண்மை உறங்காது!.. அதை ஒளித்து வைக்கவும் முடியாது' என்பார்கள். ஜெயலலிதா விஷயத்தில் அப்படியே சம்பவங்கள் நிகழ்கின்றன. 
தமிழக அரசியல்  களத்தில் அக்காலம் முதல் இக்காலம் வரையில் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பொதுவெளியில் பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டதுண்டு. இந்நாளில் முக்கிய தலைவர்கள் பலர் இருமணதாரர்களாக  உலவுகின்றனர். ஆனால், ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாக அவை மக்களிடம் பேசுபொருளாக இருந்ததில்லை. அவர்களது பொதுவாழ்வை மட்டுமே அளவுகோலாக வைத்து விமர்சிக்கின்றனர் மக்கள். இருக்கும்போதே இவர்களுக்கெல்லாம் எழாத சிக்கல், ஜெயலலிதாவுக்கு மட்டும் அவர் இறந்தபிறகும் சிக்கல்கள் சிறகடிக்க ஆரம்பித்திருப்பது அதிர்ச்சியான ஒன்று!

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதா, 'தான் ஜெயலலிதாவின்   சொந்த மகள்' என பரபரப்பு கிளப்பியிருக்கிறார். ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் ஓரிருவர் இப்படி கிளம்பி வந்ததுண்டு. ஆனால், யாரும் சட்டரீதியாக தங்கள் கோரிக்கைக்கு வலு சேர்த்ததில்லை. நீதிமன்றத்தால் குட்டுப்பட்டனர். அரிதாக ஒரு 'மகன்' சிறையிலடைக்கப்பட்டார்.  இப்படி பத்திரிகைப் பரபரப்போடு அதன் ஆயுட்காலம் முடிந்துவிடும். ஆனால், முதன்முறையாக அம்ருதா, உச்சநீதிமன்றத்தின் கதவை வலுவாகத் தட்டி,  தமிழக அரசியல் களத்தின் பரபரப்பு பெண்மணியாக மாறியிருக்கிறார்.  இதுகுறித்து அவர்  ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதியிருப்பதும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. 

உச்ச நீதிமன்றத்தில், அம்ருதா தாக்கல் செய்த மனுவில், ‘1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி ஜெயலலிதாவின் மகளாக நான் பிறந்தேன். என் வளர்ப்பு தாய் சைலஜா 2015 இல் இறந்துவிட்டார். வளர்ப்பு தந்தை சாரதி இந்த ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இறந்துவிட்டார்.  ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்பதால், இந்த உண்மையை இதுநாள் வரையிலும் நான் வெளிப்படுத்தவில்லை. எனவே, ஜெயலலிதாதான் என் தாய் என்பதை நிரூபிக்க, மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது உடலைத் தோண்டி எடுத்து டி.என்.ஏ பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். வைஷ்ணவ  ஐயங்கார் பிராமண முறைப்படி ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட வேண்டும்’ எனவும்  கூறியிருந்தார். 

அம்ருதாஇம்மனுவை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அம்ருதாவுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உண்மையை கர்நாடக உயர் நீதிமன்றம் வெளிக்கொண்டுவரும் முன் உண்மையில் ஜெயலலிதா - சோபன்பாபு நட்பு எத்தகையது என்பதை இப்போது தெரிந்துகொள்வோம்....

திருச்சி ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதா பிறந்தது மைசூர். மைசூர் மகாராஜாவின் குடும்பத்தில் மணமகளாகச் சென்ற சந்தியாவுக்கு ; ஜெயக்குமார், ஜெயலலிதா என  இரு பிள்ளைகள் பிறந்தபின் கணவரை இழந்து வறுமைக்கு ஆளானார். சென்னையில் தங்கியிருந்து திரைப்படங்களில் நடித்துவந்த தங்கை வித்யாவதியின் வீட்டில் தஞ்சம் புகுந்தார். வித்யாவதி வீட்டுக்கு வந்த தயாரிப்பாளர்களின் கண்களில் சந்தியா தென்பட, மளமளவென படங்களில் நடிக்க ஆரம்பித்தார். திரைப்படங்களில் பிஸியானதால் பிள்ளைகளை  தனது தாயின் பாதுகாப்பில் பெங்களூருவில் படிக்கவைத்தார். நேரம் கிடைக்கும்போது பிள்ளைகளை சென்று சந்திப்பார். 8 வயதில் ஜெயலலிதாவின் முதல் சினிமா பிரவேசம் 'ஸ்ரீசைல மகாத்மியம்' என்ற படத்தில் நிகழ்ந்தது. வளர்ந்தபின் 'நன்னகர்த்தவ்யா' என்ற கன்னடப் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.  

தமிழில் அவரது முதற்படமாக 'வெண்ணிற ஆடை' வெளியானது. ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் ஜெயலலிதாவுக்கு நல்ல புகழைக் கொடுத்தது. பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடுத்தர வயதைக்கடந்த நடிகைகள் அப்போது நடித்துவந்ததால், இளமையான கல்லூரிப்பெண் போன்ற தோற்றம் கொண்ட ஜெயலலிதாவுக்கு தமிழக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கன்னடத்தில் அவரைக் கதாநாயகியாக அறிமுகம் செய்த பி.ஆர் பந்துலு, எம்.ஜி.ஆரை வைத்து தான் இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு கதாநாயகி ஆக்கினார். ஒரே இரவில் ஜெயலலிதாவின் சினிமா கிராப் உயரத்துக்கு வந்தது. சில வருடங்களில், ஜெயலலிதா தென்னகத்தின் புகழ்மிக்க நடிகைகளில் ஒருவரானார். பத்து வருடங்களில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என  பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துமுடித்தார். அந்தந்த மொழிகளில் புகழ்பெற்ற நடிகர்கள் அவருடன் நடிக்க ஆர்வம் காட்டினர். ஒருமுறை தனக்குப் பிடித்த நடிகரான திலீப்குமாரின் படம் ஒன்றில் அட்வான்ஸ் பெற்றபின்னும் படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லை எனக் கூறி நடிக்க மறுத்தார். அந்தளவுக்கு புகழடைந்திருந்தார். 

தமிழில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஜோடிக்கு பெரும் வரவேற்பு இருந்தது. எம்.ஜி.ஆருடன்  அதிகப்படங்களில் நடித்த கதாநாயகி ஜெயலலிதாதான். மொத்தம் 28 படங்களில் அவர்கள்  இணைந்து நடித்தனர். ஆனால், 'பட்டிக்காட்டுப் பொன்னையா' திரைப்படத்துடன் அவர்களது உறவில் கீறல் விழுந்தது. தனது  கனவுப்படமான 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில், ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு தராமல், அன்றைக்குப் புதுமுகங்களை அறிமுகம் செய்தார் எம்.ஜி.ஆர். இளமைப் பொலிவுள்ள கதாநாயகன் என்ற தனது இமேஜை தக்கவைத்துக்கொள்ள எம்.ஜி.ஆர்  இப்படி செய்ததாக சொல்லப்பட்டது. அதற்கு முன்னரே அவர்களுக்குள் பிரச்னை இருந்ததாகவும் பத்திரிகைகளில் செய்திகள் அடிபட்டன. எப்படியோ, பிரச்னை தொடங்கிய 1971 ஆம் ஆண்டு 3 படங்கள், 1972-ல் 2 படங்கள், 1973-ல் 'பட்டிக்காட்டுப்பொன்னையா' என்ற ஒரேயொரு படம் என எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா என்ற வணிக சினிமாவின் வெற்றி இணை நிரந்தரமாகப் பிரிந்தது. தனது வாழ்வில் முக்கிய ஆளுமை செலுத்திய இருவரில், ஒருவர் என எம்.ஜி.ஆரைக் குறிப்பிட்டவர் ஜெயலலிதா. 1971 நவம்பரில் தாயை இழந்த ஜெயலலிதா, 1973 ஆம் ஆண்டுடன்  எம்.ஜி.ஆரிடமிருந்தும் பிரிய நேர்ந்தது. இதன்பிறகு ஜெயலலிதா வாழ்வில்,  பெரும் சூன்யமான நாட்கள். வாழ்க்கையில் பிடிப்பின்றி காலம் கழித்தார். அரிதாகவே படங்களில் தலைகாட்டினார். 
இந்த காலகட்டத்தில்தான் சோபன்பாபு என்ற பெயர் தமிழ்த்திரையுலகில் ஜெயலலிதாவை நன்கறிந்த வட்டாரத்தில் பேசப்பட்டது.

அன்றைய தெலுங்குத் திரையுலகில் பெண் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்தவர் சோபன்பாபு. என்.டி.ஆர் நாகேஸ்வரராவ் போன்ற உச்சநட்சத்திரங்களுக்கு அடுத்த வரிசை நடிகரான அவருக்கு முந்தைய இரு நடிகர்களைவிட பெண் ரசிகர்கள் அதிகம். தனது துறுதுறு நடிப்பு நளினமான நடன அசைவுகளால் பெண் ரசிகர்களை கிறங்கடித்த கதாநாயகனாக வளர்ந்துவந்தார். அவருடன் ஜெயலலிதா தன் ஆரம்பகாலங்களில் ஒரு சில படங்களில் இணைந்து நடித்தார்.  பெரிய அளவில் அவர்களுக்குள் ஈர்ப்பு இருந்ததாக அக்காலத்தில் பேச்சு இருந்ததில்லை. ஜெயலலிதா அப்போது தமிழில் பெரும் பிரபல்யமாக இருந்ததால் அவர் திரையுலக வாழ்க்கை மட்டுமே பேசப்பட்டது. எம்.ஜி.ஆரின் சினிமா ஜோடி என்றளவில் மட்டுமே பேசப்பட்டார். 

 
 

சோபன்பாபுஆனால் பிற்காலத்தில் சினிமாவில் இருந்து துறவறம் மேற்கொண்டிருந்த காலத்தில்தான் ஜெயலலிதா சோபன்பாபு நட்பு குறித்து பேசப்பட்டது. 

எம்.ஜி.ஆருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தபின் ஜெயலலிதாவின் சினிமா கிராப் அப்படியொன்றும் ஏற்றமாக இல்லை. இளம் வயதைக்கடந்த நிலையில், வயதுக்கேற்ற படங்களை அவர் தேர்வு செய்யவேண்டிய சூழல்உருவானது. கதாநாயகி என்பதுபோய் கதைக்கு நாயகியாய் குணச்சித்திர பாத்திரங்கள் அவரைத் தேடி வந்தன. இந்தக் கோபத்தில், அப்போது வெளியான சில பத்திரிகைகளில் பெயரைக் குறிப்பிடாமல், எம்.ஜி.ஆரைத் தாக்கிப் பேட்டியளித்தார் ஜெயலலிதா. பத்திரிகைகளுக்கு எம்.ஜி.ஆர் போன் செய்து பேசவேண்டிய தர்மசங்கடம் வந்தது.

 1974 ஆம் ஆண்டு நூறாவது படமான 'திருமாங்கல்யம்' வெளிவந்தது. அடுத்த ஆண்டில் 3 படங்கள் என ஜெயலலிதாவின் திரைப்பட எண்ணிக்கை தேய ஆரம்பித்தது. 1975 ஆம் ஆண்டு திரையுலகிலிருந்து விலகப்போவதாக பத்திரிகை பேட்டி ஒன்றில் அறிவித்தார் ஜெயலலிதா. இந்தக் காலகட்டத்தில்தான் தெலுங்கில் பிரபல கதாநாயகனான சோபன்பாபுவுடன் ஜெயலலிதா நட்புடன் இருப்பதாகப் பேசப்பட்டது. எம்.ஜி.ஆரை வெறுப்பேற்றும் விதமாக தன் தெலுங்கு சகாவான சோபன்பாபுவுடன் ஜெயலலிதா வேண்டுமென்றே அப்படி ஒரு நட்பை வலிந்து ஏற்படுத்திக்கொண்டதாகச் சொல்லப்பட்டது. 1975 ஆம் ஆண்டு பிற்பகுதியில் திரையுலகிலிருந்து முற்றாக ஒதுங்கியிருந்த ஜெயலலிதா, சென்னை போயஸ் கார்டன் இல்லம், ஹைதராபாத் தோட்டம் இவற்றோடு இருந்து கொண்டார்.  பத்திரிகைகள் அரிதாகவே அவரைப்பற்றிய செய்திகளை வெளியிட்டன. அதுவும் அவரது புகழுக்கு எதிரானவை. 

அதாவது அதுவரை  கிசுகிசுவாக பத்திரிகைகளிலும், செவிவழியாக திரைவட்டாரத்திடம் பகிரப்பட்ட தகவல்கள் புகைப்பட சாட்சியாக வெளியானது. ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் எடுக்கப்பட்ட அந்த படங்களில் சோபன்பாபுவும் ஜெயலலிதாவும் மிக நேருக்கமாக கணவன் மனைவிபோல இணைந்து போஸ் அளித்து எடுக்கப்பட்டவை. தனது பிரத்யேக புகைப்படக்காரர் மூலம் ஜெயலலிதா எடுத்ததாக சொல்லப்பட்ட படங்களில் ஜெயலலிதா சோபன்பாபுவுக்கு உணவு பரிமாறுவது, வீட்டுச் சுவரில் மாட்டியுள்ள படங்களைக்காட்டி மகிழ்தல், ஜெயலலிதாவின் அலுவலக அறையில் சோபன்பாபு அமர்ந்து விருந்தினரிடம் பேச அருகில் சேரின் மற்றொரு முனையில் அமர்ந்து அதை ரசிப்பது, தனது பர்சனல் அறையில் ஜெயலலிதா வீணை வாசிக்க, அதை ரசித்துப்பார்க்கும் சோபன்பாபு, ஜெயலலிதா மாடியிலிருந்து காரில் கிளம்பிச்செல்லும் சோபன்பாபுவுக்கு ஒருமனைவியைப்போல் கையசைத்து அனுப்பிவைப்பது என ஒரு குடும்பத்தலைவியாக ஜெயலலிதாவை அடையாளம்காட்டும் படங்கள் அவை.

இதில் ஒரு படம் ஜெயலலிதா மிகவும் மகிழ்ந்து காட்டிய படம். மகிழ்ச்சிக்கு காரணம் அந்த புகைப்படத்தின் பின்னணி...சுவாரஸ்யமானது. 

ஜெயலலிதா சென்னை வந்தசமயம், மார்டன் யுவதியான அவரது சித்தி வித்யாவதி, அவரது தலைமுடியை சலுானுக்கு அழைத்துச்சென்று பாப் கட்டிங் போல கட் செய்து அழைத்துவந்தார். தன் முடியை கண்ணாடியில் பார்த்து விடிய விடிய அழுதுகொண்டிருந்தார் ஜெயலலிதா. அவரை சமாதானப்படுத்த புவனா சத்யம் என்ற புகைப்படக்காரரை அழைத்துவந்து புகைப்படம் எடுத்தார் வித்யாவதி. தன்னை அழவைத்த அந்த புகைப்படத்தை ஜெயலலிதா அடுத்த 2 மாதங்களில் தன் படுக்கை  அறையில் அழகு பார்த்தார் பெருமிதமாக. ஆம் இந்த புகைப்படத்தை புவனா சத்யம் சந்தியா குடும்பத்திற்கு தெரியாமல் அந்த ஆண்டு புதுடெல்லியில் நடந்த அகில இந்திய புகைப்படக் கண்காட்சிக்கு அதை அனுப்பிவைத்திருந்தார். ஆச்சர்யமாக அந்த படத்திற்குதான் முதல்பரிசான தங்கப்பரிசு கிடைத்திருந்தது. முதன்முறையாக தன் அழகு பற்றி ஜெயலலிதா பெருமைப்பட்ட தருணம் அதுதான். அந்த புகைப்படத்தை சோபன்பாபுவிடம் காட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்தார் ஜெயலலிதா. 

1979 ஆம் ஆண்டு 'ஸ்டார் அண்ட் ஸ்டைல்' என்ற பிரபல ஆங்கிலப் பத்திரிகையில், கிசுகிசு போல ஜெயலலிதா - சோபன் பாபு நட்பு குறித்த ஒரு செய்தி வெளியானது. கிசுகிசுவை உறுதிப்படுத்தும் வகையில், ஜெயலலிதா அந்தப் பத்திரிகைக்கு  ஒரு கடிதமும் எழுதினார். அதுதான் ஜெயலலிதா!

சோபன்பாபு

 

கடிதத்தில், 'உங்கள் நிருபர் சரியாக குழம்பியிருக்கிறார் என்றே நினைக்கிறேன். திரு சோபன்பாபுவுடன் நான் கடந்த 7 வருடங்களாக கோயிங் ஸ்டடி. அவர் எளிமையான பண்பான மனிதர் என்பதால், இந்த நட்பு என் ஆயுள்வரை நீடிக்கவேண்டும் என்பதே என் விருப்பம். அவர் ஏற்கெனவே மணமானவர் என்பதால் தற்சயம் என்னை மணக்கவியலாதவராக இருக்கிறார். அதனால் என் இறுதிக்காலம் வரை ஜெயலலிதா ஜெயராம் என்றே கழிக்கவிரும்புகிறேன். சோபன் பாபுவின் நட்பை நான் என்றைக்கும் மூடி மறைத்தது கிடையாது. தென்னிந்திய திரையுலகில் பலருக்கும் இது தெரியும். நடிகை என்ற இமேஜையோ மீண்டும் திரையுலகப்பிரவேசம் குறித்த எண்ணமும் இல்லாததால், இதுபற்றி நான் அலட்டிக்கொண்டு எதையும் மூடி மறைக்கவேண்டிய அவசியமில்லை' எனக்  காரசாரமாகப் போட்டுடைத்தார் தன் வாழ்க்கையை.

தமிழ் வார இதழ் ஒன்று இந்தக் கடிதத்தின் தமிழாக்கத்தை வெளியிட்டது. வழக்கமான கோபத்துடன் அதன் நிருபரை வரவழைத்த ஜெயலலிதா இன்னும் விரிவாக சோபன்பாபுவுடனான தன் நட்பு குறித்து பேட்டியளித்தார். அதில், “மாலைபோட்டு தாலி கட்டினால்தான் கணவன்-மனைவி என்ற உறவா? எந்தக் கன்னிப்பெண்ணும்  திட்டமிட்டு ஏற்கெனவே திருமணமான ஒருவரை காதலிப்பதில்லை. தனக்கென ஒருவர் வேண்டும். அவர் தனக்கானவராக மட்டும் இருக்கவேண்டும் என்றுதான் விரும்புவார்கள். நானும் அப்படித்தான் கனவு கண்டேன். ஆனால், நான் சோபன்பாபுவை சந்தித்தபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இது திட்டமிட்டு செய்த காரியமல்ல.  அவரையும் அதற்குப் பொறுப்பாக்க முடியாது. தவிர, நான் அவரைச் சந்தித்தபோதே அவருக்குத் திருமணம் ஆகியிருந்தது. அதேசமயம் 'மனைவியை விவாகரத்து செய்துவிட்டு உங்களை மணக்கலாமே' என பலர் என்னிடம் கேட்கின்றனர். அது தவறு.  ஒரு குற்றமும் செய்யாத அவரை ஏன் நிராகரிக்கவேண்டும்? அவர் ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாதவர். தவிர அவருக்கு 3 பெண்களும் ஒரு பையனும் உள்ளார்கள். அவர்கள் வாழ்க்கைக்கு என்னால் ஒரு பாதகமும் வந்துவிடக்கூடாது என்றே இதுவரை எங்கள் உறவைப்பற்றிப் பேசாமல் இருந்தேன்” என பேட்டியளித்திருந்தார். 

ஜெயலலிதாதமிழ்கூறும் நல்லுலகுக்கு ஜெயலலிதா - சோபன்பாபு நட்பு குறித்து இதன்பிறகே தெரியவந்தது. ஆனால், ஜெயலலிதாவின்  சில துடுக்குத்தனமான செயல்களினால் சில வருடங்களில் சோபன்பாபுவுடனான அவரது நட்பு முறிந்தது என்றார்கள். இந்த முறிவுக்குப் பின்னணியில், அன்று  சர்வ வல்லமை படைத்த நடிகர் ஒருவர் இருந்தார் என்பார்கள். இதன்பிறகு சோபன்பாபு - ஜெயலலிதா நட்பு குறித்து எதுவும் அலசப்படவில்லை. 

பின்னாளில் ஜெயலலிதா  1982 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மூலமே அரசியலுக்கு வந்தார்.  சத்துணவுத்திட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர், ராஜ்ய சபை எம்.பி... என  அரசியலில் வளர்ச்சியடையத் தொடங்கிய பின் சோபன்பாபு அவர் நினைவிலிருந்து முற்றிலும் மங்கிப்போனார். மறந்தும் எந்தக்காலத்திலும் தன் பழைய வாழ்க்கையைப் பற்றி அவர் மூச்சு விடவில்லை. அரசியல் அந்தஸ்துக்காக அவர் அதை மறக்கவே நினைத்தார். 

ஆனால், பின்னாளில் ஜெயலலிதா தீவிர அரசியலுக்கு வந்தபின் அது பெரும் சிக்கலை உருவாக்கியது. 1989 ஆம் ஆண்டு முரசொலி பத்திரிகை 4 பக்கத்துக்கு ஜெயலலிதாவும் சோபன்பாபுவும் நெருக்கமாக  இணைந்து காட்சியளிக்கும் படங்களை வெளியிட்டது. இந்த அந்தரங்கப்படங்களால், ஜெயலலிதா கொஞ்சம் ஆடித்தான் போனார். ஜெயலலிதா ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபின் அவரது இந்தப் பழைய அந்தரங்கம் அதிகம் அலசப்படவில்லை. ஆச்சர்யம் என்னவென்றால், சோபன்பாபு தன் இறுதிக்காலத்தில் ஜெயலலிதாவின் இல்லத்துக்கு வெகு அருகிலேயே வசித்து மறைந்தார். கூப்பிடும் தூரம்தான். ஆனால், சாதாரண நட்பைக்கூட அவருடன் தொடரவில்லை ஜெயலலிதா!

ஜெயலலிதா மறைந்தபின் இப்போது மீண்டும் அரங்கத்துக்கு வந்திருக்கிறது  அவரது அந்தரங்கம்.  தன் அரசியல் வாழ்வில் 'துணிச்சல்காரர்' என்றும் சர்வ வல்லமை கொண்ட 'இரும்பு மனுஷி' எனவும்  பிம்பங்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு பெண்மணி ஜெயலலிதா! அவரது வாழ்வின்  வெளிப்படையான வனவாசத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு  அவரது 'வாரிசுகள்' கிளர்ந்துவருவது, உண்மையில் ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு கொஞ்சம் அவமானமாகத்தான் இருக்கும். 

https://www.vikatan.com/news/tamilnadu/109401-jayalalithaa-talks-about-her-relationship-with-shobhan-babu-in-early-days.html

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவின் மகளை பற்றி சசி, நடராசனுக்கு தெரியும்! ஜெ. அண்ணன் பேட்டி

 
 

கர்நாடக மாநிலம் மைசூர் ஶ்ரீரங்கராஜபுரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன், “ஜெயலலிதாவிற்கு மகள் இருக்கிறார். அது பற்றிய முழு விவரம் சசிகலாவிற்கும், நடராஜனுக்கு தான் தெரியும்” என்று அதிர்ச்சி கிளம்புகிறார்.

vasudhevan_(5)_18334.JPG

 
 

இதுபற்றி வாசுதேவன் நம்மிடம், ''நான் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனுக்கும் அவரது முதல் மனைவியான ஜெயம்மாளுக்கும் பிறந்த ஒரே மகன் வாசுதேவன். அந்த முறையில் எனக்கு ஜெயலலிதா தங்கை ஆகிறார். என்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவி வேதம்மாள் என்கிற சந்தியா. அவர்களுக்கு பிறந்தவர்கள் ஜெயக்குமார், ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் அம்மா வேதம்மாளுக்கும் சினிமா ஆர்ட் டைரக்டர் தாமோதரப்பிள்ளைக்கும் பிறந்த மகள் சைலஜா என்று மீடியாவில் வந்தது. அதையடுத்து நான் சைலஜாவை சந்திக்க நினைத்தேன். ஆனால் ஏழ்மையும், வயது முதிர்ச்சியின் காரணமாகவும் அவரை நான் சென்று சந்திக்க முடியவில்லை. ஆனால் என்னை பற்றி அறிந்த சைலஜா குடும்பத்தோடு என்னை பார்க்க வந்திருந்தார்.  அவருடைய பிறப்பு, குடும்ப வரலாறு அனைத்தையும் என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்ன அனைத்தும் உண்மையாக இருந்ததால். அவர் நிச்சயம் ஜெயலலிதாவின் தங்கை என்பதை உணர்ந்தேன்.

அவரோடு அமிர்தாவும் வந்திருந்தார். சைலஜா தன்னுடைய மகள்  அமிர்தாவை என்னிடம் அறிமுகம் செய்தார். அதன் பிறகு என் குடும்பத்திற்கும், சைலஜா குடும்பத்திற்கும் நெருக்கம் ஏற்பட்டது. சைலஜா உடல் நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். அவர் மரணத்திற்கு என்னுடைய தம்பி சென்று அனைத்து காரியங்களையும் செய்து வந்தார். மார்ச் மாதம் அமிர்தாவின் தந்தை பார்த்தசாரதியும் மரணம் அடைந்தார். பார்த்தசாரதி மரணப்படுக்கையில் இருந்த போது 4 நாட்கள் பெங்களூரு அமிர்தா வீட்டில் இருந்தேன்.

அப்போது எங்கள் தந்தையின் உறவினர்களான ரஜினிநாத், லலிதாவை அமிர்தாவிற்கு அறிமுகம் செய்து வைத்தேன். ரஜினிநாத்தின் மகள் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் வீட்டிற்கு அமிர்தா சென்று வந்தார். தற்போது என்ன காரணமோ தெரியவில்லை. இவர்கள் அனைவரும் கூட்டுச் சேர்ந்து அமிர்தாவை ஜெயலலிதாவின் மகள் என சொல்லி இருக்கிறார்கள். இது தவறான தகவல். ஜெயலலிதாவிற்கு லலிதா பிரசவம் பார்த்தார் என்று சொல்லுவது தவறான தகவல் ஏனென்றால் ஜெயலலிதா எங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாரோடும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை.

 

ஆனால் இளமை காலத்தில் அடிக்கடி சென்னை வருவேன். நம்பியா -ருக்மணி, சிவாஜி -கமலா, நடிகை ராஜ சுலோக்‌ஷனா என சென்னையில் பலரையும் தெரியும். அவர்கள் என்னிடம் ஜெயலலிதாவிற்கும் ஷோபன்பாபுவிற்கும் ஹைதராபாத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்ததாக சொல்லி இருக்கிறார்கள். பிறகு ஹைதராபாத் திராட்சை தோட்டத்தில் வளர்க்கப்பட்டு பாரீனில் திருமணம் செய்து கொடுத்துள்ளதாக கேள்விப்பட்டேன்.

ஆனால் அனைத்து உண்மைகளும் சசிகலாவிற்கும், நடராசனுக்கும் நிச்சயம் தெரியும். அவர்கள் தமிழக மக்களுக்கும் ஜெயலலிதாவின் உறவினர்களாகிய எங்களுக்கும் சொல்ல வேண்டும்'' என்றார்.

https://www.vikatan.com/news/tamilnadu/109421-sasikala-and-nadarajan-knows-about-jayalalithaas-daughter.html

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்?

 

 
0000_jaya

 

ஜெயலலிதா உயிரோடு இருந்த போதும் சரி, இறந்த பின்னும் சரி அவருக்கு குழந்தை இருந்ததா? இல்லையா? என்பது குறித்த புரளிகளுக்குப் பஞ்சமே இருந்ததில்லை. தமிழகத்தில்  ஒவ்வொரு தேர்தலின் போதும் , பிரச்சாரங்களில் எதிர்கட்சியினரால் ‘ஜெயலலிதாவுக்கு குழந்தை இருப்பது’ குறித்த வதந்திகள் மிகக் கீழ்த்தரமாகப் மக்கள் மத்தியில் பரப்பப்படும். அந்த வதந்திகளுக்கு எல்லாம் ஜெயலலிதா உயிருடன் இருந்தது வரை தான் ஆயுள் என்று நினைத்தால். தற்போது அவர் இறந்த பின்னும் கூட எதை முன்னிட்டு அந்த வதந்திகள் மறு ஆக்கம் பெறுகின்றன எனில், ஒரு பக்கம் வாரிசற்றுக் கொட்டிக் கிடக்கும் ஜெயலலிதாவின்  கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமானமுள்ள சொத்துக்கள் மறுபுறம் ஜெயலலிதாவின் மகள் என்பதால் மட்டுமே தமிழக அரசியலில்  கிடைத்து விடப்போவதாக எதிர்பார்க்கும் பிரகாசமான அரசியல் எதிர்காலங்கள்... அனுகூலங்கள் இவையெல்லாமும் தான்.

0000_jaya_daughters.jpg

1996 ஆம் ஆண்டிற்குப் பின்னான காலகட்டங்களில் ஜெயலலிதா குறித்து  பிரபல தமிழ் புலனாய்வு வாரமிருமுறை இதழ் ஒன்று வெளியிட்ட செய்திக் குறிப்பொன்றில் ஜெயலலிதாவைப் போலவே முகச்சாயலிருந்த இளவரசியைக் கூட ‘இவர் தான் ஜெயலலிதாவின் வாரிசு’ என்று அட்டைப்படத்தில் கட்டம் கட்டி புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தார்கள். ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்திலும் ‘இவர் தான் ஜெயலலிதாவின் மகள்’ என அமெரிக்காவில் கணவர், குழந்தைகளுடன் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்மணியின் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்குள்ளும் கிலி பரப்பிய பெருமை தமிழ் வாட்ஸ் அப் வட்டாரங்களுக்கே உரியது. கடைசியில் அந்தப் பெண்மணியின் உறவினர் ஒருவர் இந்தியாவில் இருப்பவர்;  இது சாட்ஷாத் என்னுடைய அண்ணி, அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் ஸ்நானப் ப்ராப்தி கூட இல்லை என்று மன்றாடாத குறையாக அறிவித்த பிறகு தான் தற்போது அந்த வதந்தி ஓய்ந்திருக்கிறது.

0000jaya_daughter_rumour.jpg

அது மட்டுமா? ஜெயலலிதா, 70 களில் குமுதத்துக்கு அளித்த பேட்டியில், தான் தெலுங்கு நடிகர் ஷோபன் பாபுவுடன் ‘லிவிங் டுகெதர்’ முறையில் இணைந்து வாழ்வதாகப் பதில் அளித்ததால்... நிச்சயம் அவர்களுக்கு குழந்தை இருந்தே தீர வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு தேடி  அலைகிறது ஒரு கூட்டம்.

000_jaya_daughter3.jpg

சில ஆண்டுகளுக்கு முன்பு தன் தாய் ஷைலஜாவுடன் ஜெயலலிதாவைச் சந்திக்க அனுமதி கேட்டு அது கிடைக்காத பட்சத்தில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த இதே அம்ருதா எனும் பெண்... அப்போது ஜெவைத் தனது பெரியம்மா எனச் சொந்தம் கொண்டாடினார். அவரது தாயார் ஷைலஜாவோ... இன்னும் ஒரு படி மேலே சென்று; தன்னை ஜெயலலிதாவின் உடன் பிறந்த தங்கை எனக் கூறி இருந்தார் அந்த நேர்காணலில். ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவுக்கு கடைசியாகப் பிறந்த பெண் குழந்தை தான்,  தான் எனவும், அப்போது சந்தியாவுக்குப் பட வாய்ப்புகள் குறைந்து அவர் சிரமதசையில் இருந்ததால் தன்னை வளர்க்க முடியாமல் ஒரு பிரபலத் தயாரிப்பாளரிடம் வளர்ப்பு மகளாகத் தத்துக் கொடுத்து விட்டார் என்றும் கூறியிருந்தார். பின்னர் தனது வளர்ப்புத்தந்தை சொல்லித்தான் சந்தியா தனது தாயார் என்ற விவரம் தனக்குத் தெரிய வந்ததாகவும், விஷயமறிந்து தாயைக் காண வந்த தன்னிடம்; அம்மா சந்தியா... தூரத்தில் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்த ஜெயலலிதாவைக் காட்டி இவள் உன் அக்கா, இப்போது சினிமாவில் அவளுக்கு நிறைய வாய்ப்புகள் வருவதால் உன்னை என்னால் மகள் என அறிவிக்க முடியாது எனக்கூறி வளர்ப்புத்தந்தையுடன் திருப்பி அனுப்பியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதில் எது உண்மை?

இந்த அம்ருதாவின் அம்மா தன்னை  ஜெயலலிதாவின் உடன்பிறந்த தங்கை என்றார் அப்போது; இப்போது ஷைலஜாவும் உயிருடன் இல்லை. ஜெ இறப்பதற்கு முன்பே அவரும் உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாகத் தகவல். அந்த வதந்திக்கே மூலம் காண முடியாத போது; ஜெயலலிதா இறந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து இப்போது வந்து தன்னை ஜெயலலிதாவின் மகள் என உரிமை கொண்டாடுவது வேடிக்கையாக இருந்தாலும் அதை வதந்தி எனப் புறம் தள்ளி விடவும் முடியாத அளவுக்கு ஜெயலலிதாவின் வாழ்க்கை ரகசியம் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

000jaya_daugter2.jpg

 

2012 ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புறநகர்ப் பகுதி ஒன்றில் பங்களா ஒன்றை எடுத்துத் தனியே தங்கி; அங்கிருந்த மக்களையும், காவல்துறையையும் ஏமாற்றி மோசடி வேலைகளில் ஈடுபட்டுவந்த பிரியா மகாலட்சுமி எனும் பெண், தன்னையும் ஜெயலலிதாவின் மகள் எனக் கூறிக் கொண்டார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை அஞ்சியதைப் பற்றிக் கூட அப்போதைய தமிழ் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன. இது குறித்து அன்று உயிருடன் இருந்த ஜெயலலிதாவின் ரியாக்‌ஷன் என்னவாக இருந்தது என்பதைப் பற்றித் தெரியவில்லை. ஆனால் அதே பெண், ஜெயலலிதா இறந்த சூட்டோடு சூடாக கடந்த ஆண்டும் தன்னை ஜெயலலிதாவுக்கும், எம்ஜிஆருக்கும் பிறந்த மகளாக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டு ஊடகங்களுக்கு பேட்டியெல்லாம் கொடுத்து பரபரப்புக் கிளப்பினார். பிறகு காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டது தனிக்கதை.

0000_semmeen_sheela.jpg

ஜெயலலிதா மறைவை ஒட்டி பழம்பெரும் நடிகைகளான வாணிஸ்ரீ, ஷீலா, சச்சு, சரோஜாதேவி, உள்ளிட்டோர் நடிகைகள் ஊடகங்களில் அவரது நினைவுகளைப் போற்றிப் பேசுகையில். அந்நாளைய அவரது நெருங்கிய தோழியாகக் கருதப்பட்ட நடிகை ஷீலா,  தெரிவித்த விஷயத்தை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

‘ஜெயலலிதா வேதா நிலையத்துக்கு குடி வந்த புதிதில் அவரது அண்ணன் ஜெயக்குமார் குடும்பத்தினர் அவருடன் இணைந்தே குடியிருந்து வந்தனர். அப்போது ஜெயக்குமாரின் மகளான தீபா, அந்த வீட்டில் தான் பிறந்தார். தீபாவை ஜெயலலிதா வீட்டுக்கு வெளியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருப்பதைக் கண்ட இரண்டாம் தர செய்தி சேகரிப்பாளர்கள் சிலர், அந்தக் குழந்தை ஜெ வுக்குப் பிறந்த குழந்தை என வதந்தி பரப்பி விட்டனர். அப்படி ஒரு விஷயம் ஜெயலலிதா வாழ்வில் நிகழ சாத்தியமே இல்லை’.

- என ஷீலா குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இப்போது பெங்களூரைச் சேர்ந்த மறைந்த ஷைலஜாவின் மகள் அம்ருதா, தன்னை ஜெயலலிதாவுக்கும், ஷோபன் பாபுவுக்கும் பிறந்த மகளென உரிமை கோரி டி.என்.ஏ சோதனைக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடியிருப்பது மிகுந்த ஆச்சர்யத்தைக் கிளறுகிறது. மெரினாவில் புதைக்கப்பட்ட ஜெ வின் சமாதியைத் தோண்ட தமிழகத்தின் தற்போதைய அரசியல் அதிகார மையம் அனுமதிக்குமா? சோதனை நடந்தால் அல்லவோ தெரிய வரும் நிஜமாஜகவே இந்தப் பெண், ஜெயலலிதாவின் மகள் தானா? இல்லையா? என்பது! 

தற்போது அம்ருதாவின் உரிமை கோரல் வழக்கை விசாரிக்கும் பொறுப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் வாரிசு குறித்த வதந்திகளுக்கு நீதிமன்றத்தின் வாயிலாக ஒரு முடிவு கட்டப்படாவிட்டால், நாளை சிவப்பாக சுண்டினால் ரத்தம் தெறிக்கக்கூடிய நிறத்தில் புஷ்டியாக இருக்கும் பெண்கள்  யார் வேண்டுமானாலும் ‘நான் தான் ஜெயலலிதாவின் மகள்’ என உரிமைக்குரல் எழுப்பத் துணியலாம்.

http://www.dinamani.com/editorial-articles/special-stories/2017/nov/30/how-many-daughters-are-there-for-jayalalitha-2817944--2.html

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவின் மகள் என்று கூறும் அம்ருதாவை தூண்டிவிட்டது சசிகலாவா?: பரபரப்பு தகவல்

 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறும் அம்ருதாவை தூண்டிவிட்டது சசிகலாவா என்பது தொடர்பான பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

 
 
ஜெயலலிதாவின் மகள் என்று கூறும் அம்ருதாவை தூண்டிவிட்டது சசிகலாவா?: பரபரப்பு தகவல்
 
பெங்களூரு:

ஜெயலலிதாவின் மகள் என்று பெங்களூருவை சேர்ந்த பெண் அம்ருதா கூறி வருகிறார்.

அவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று அறிவிக்க வேண்டும், மரபணு (டி.என்.ஏ.) சோதனை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் கூறி இருந்தார். அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.

கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யும்படி அம்ருதாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய அம்ருதா தயாராகி வருகிறார்.

ஏற்கனவே அம்ருதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தபோது அவருக்கு ஆதரவாக அவரது உறவினர்கள் லலிதா, ரஞ்சனி ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர்.
 
201712051044465289_1_Lalitha._L_styvpf.jpg

லலிதா அளித்த பேட்டியில் ஜெயலலிதாவுக்கு மகள் பிறந்தது உண்மை தான் என்றும், அந்த பெண் அம்ருதா தான் என்பது தனக்கு தெரியாது என்றும், டி.என்.ஏ. பரிசோதனை நடத்தினால் உண்மை தெரியும் என்றும் கூறி இருந்தார்.

கடந்த 3மாதங்களுக்கு முன்பு ரஞ்சனி தான் அம்ருதாவை அழைத்து வந்து ஜெயலலிதாவின் மகள் என்று தன்னிடம் கூறியதாக லலிதா கூறி இருந்தார்.

அம்ருதாவின் மனுவில் கையெழுத்திட்ட ரஞ்சனி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அம்ருதா மூலம் ஜெயலலிதாவின் குடும்ப ரகசியங்களை வெளிப்படுத்தும் நடவடிக்கைக்கு அம்ருதாவை பயன்படுத்த ரஞ்சனியிடம் சசிகலா ஆலோசனை வழங்கி இருக்கிறார். அந்த ஆலோசனைப்படி தற்போது அம்ருதா செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அம்ருதாவை இயக்குவதால் சசிகலாவுக்கு என்ன லாபம் என்று பலர் கேட்கிறார்கள். ஏற்கனவே அ.தி.மு.க. கையை விட்டு போய்விட்டது. சொத்துக்களுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் உரிமை கொண்டாடி வருகிறார்கள்.

ஜெயலலிதாவின் நேரடி வாரிசு வந்துவிட்டால் கட்சியையும் சொத்துக்களையும் மீட்டெடுத்து விடலாம் என்று சசிகலா நினைப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

அம்ருதா தன்னை மீறி எதுவும் செய்யமாட்டார் என்றும் அவர் வெளியே வருவது நல்லதுதான் என்றும் சசிகலா நினைக்கிறார். ஜெயலலிதாவின் வாரிசு அம்ருதா என்று சொன்னால் கட்சிக்குள்ளும் குழப்பம் வராது, சொத்துக்கு சொந்தம் கொண்டாடி வரும் தீபக் மற்றும் தீபாவும் அமைதியாகிவிடுவார்கள் என்றும் சசிகலா நினைக்கிறார்.

தற்போது அ.தி.மு.க. நிர்வாகிகளும், தீபா - தீபக்கும் சசிகலாவுக்கு எதிராக கருத்துக்களை கூறி வருவதால் அவர்களுக்கு செக் வைக்கும் எண்ணத்துடன் அம்ருதாவை களத்தில் இறக்கி இருப்பதாக தகவல் உலா வருகிறது.

இதற்காகத்தான் ரஞ்சனி மூலம் சசிகலா காய் நகர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

ரஞ்சனி என்பவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவுக்கு உறவினர். இது ஏற்கனவே சசிகலாவுக்கும் தெரியும். மேலும் ஜெயலலிதாவின் உறவினரான லலிதா கூறும் போது ஜெயலலிதாவுக்கு 1980-ம் ஆண்டு பிரசவம் பார்த்தபோது ரஞ்சனி உடன் இருந்தார் என்றும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் ரஞ்சனி மூலம் அம்ருதாவை வைத்து அரசியல் எதிரிகளுக்கு பதிலடி கொடுத்து மீண்டும் அரசியலை கையில் எடுக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கு மற்றும் உறவினர் வீடுகளில் வருமான வரி சோதனை, தனது கணவர் நடராஜன், உறவினர் பாஸ்கரன் ஆகியோருக்கு சிறைத்தண்டனை, தினகரன் உள்ளிட்ட உறவினர்கன் மீது பல்வேறு வழக்குகள் என்று சிக்கலில் சிக்கி தவிக்கும் சசிகலா அம்ருதா மூலம் இதையெல்லாம் மாற்ற முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/12/05104439/1132719/Is-Sasikala-behind-Amrutha-claims-as-she-is-Jayalalitha.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.