Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! - கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை...

Featured Replies

ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! - கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை...

 
 

ப.திருமாவேலன்

 

‘நானே ராஜா, நானே ராணி, நானே மந்திரி, நானே மக்கள்’ என்ற எண்ணத்தில் வாழ்ந்த ஜெயலலிதா இறந்து போய் ஓராண்டு முடிந்துவிட்டது. அவரின் மறைவு உறுதியானதும், அவரால் புழுவைவிடக் கேவலமாக மதிக்கப்பட்டவர்கள், ‘நாங்களே ராஜா, நாங்களே ராணி, நாங்களே மந்திரி, நாங்களே மக்கள்’ என்ற எண்ணத்தில் வாழ ஆரம்பித்து ஓராண்டு முடிந்து இரண்டாவது ஆண்டு தொடங்கிவிட்டது. ராஜாக்கள் பஃபூன் வேடம் போடும்போது பவ்யம் அதிகமாக இருக்கும். ஆனால், பஃபூன்கள் ராஜா உடையைத் தாங்கும்போது பல் உடைபட்டுவிடும். அதைத்தான் இப்போது பார்க்கிறோம்.

ஜெயலலிதா இருந்தவரை எடப்பாடி பழனிசாமி எங்கோ இருந்தார். போயஸ் தோட்டத் தூதுவர்களாக ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், பழனியப்பன் ஆகிய நால்வரைத்தான் நியமித்திருந்தார் ஜெயலலிதா. ‘சொறி, சிரங்கு, படை, தேமல்’ என்று அவர்களை அன்றைய பெண் அமைச்சர் ஒருவர் கிண்டலடித்தது தனிக்கதை. இதில், பழனியப்பன் ஒரு விவகாரத்தில் சிக்கியபிறகு, அவருக்குப் பதிலாக அதே கொங்கு வட்டாரத்தில் ஆள் தேடியபோது அகப்பட்டவர்தான் எடப்பாடி பழனிசாமி. நால்வரில் ஒருவராய் உள்ளே நுழைந்தார். சசிகலா குடும்பத்தால் உருவாக்கப்பட்ட பன்னீர்  என்கிற மொண்ணைக் கத்தி, மோடியால் சாணை பிடிக்கப்பட்டதால் கூர்மை பெற்று அவர்கள்மீது பாய்ந்தது. அடுத்து, ஒரு துரு பிளேடு என எடப்பாடி பழனிசாமியைத் தேர்வு செய்தார்கள். எடுத்துப் பயன்படுத்திய விரலையே எடப்பாடி பிளேடு வெட்டிவிட்டது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ எம்.ஜி.ஆரின் வாள் வீச்சில் உருவான கட்சியை, பன்னீரும் எடப்பாடியும் கத்தி, பிளேடால் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

p44a_1512141833.jpg

‘ஜெயலலிதா இருந்தவரை இவர்களையும், இவர்களின் அமைச்சரவை சகாக்களையும் தரை டிக்கெட்கூட கொடுக்காமல் தள்ளிவைத்திருந்தது ஏன்’ என்பதை இப்போது இவர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெயக்குமாருக்கு 64 பற்கள் இருப்பது இப்போதுதான் தெரிகிறது. சட்டமன்ற சபாநாயகராக இருந்த ஜெயக்குமாரிடம் ராஜினாமா கடிதம் வாங்க வைத்து, வெலிங்டன் கொடுத்த சிம்மாசனத்திலிருந்து இறக்கி வெளியில் தூக்கிப் போட்டார் ஜெயலலிதா. இது ஏன் என்று அவர்தான் விளக்க வேண்டும். ‘‘கமல் அரசியல் ‘குணா’ படம்’’ என்று கமென்ட் அடிக்கும் ஜெயக்குமாரின் அரசியல் ‘அமைதிப்படை’யா? சீனியர் சயின்டிஸ்ட்டுகளாக ‘வண்டலூர் விலங்குகளை மழையிலிருந்து காப்பாற்ற மேடான பகுதிக்கு அனுப்பிய’ திண்டுக்கல் சீனிவாசன், ‘ஆற்றுநீரை தெர்மாகோல் கொண்டு மூடிய’ செல்லூர் ராஜு, ‘மக்கள் சோப்பு போட்டுக் குளிப்பதால்தான் ஆற்றில் நுரை வருகிறது’ எனக் கண்டறிந்து சொன்ன கருப்பணன் ஆகியோர் வலம்வருகிறார்கள். சென்னை சாலைகள் அமெரிக்காவாகத் தெரிகின்றன, அமைச்சர் வேலுமணிக்கு. இப்படி எல்லாம் மணிமணியாக இருப்பதால்தான், ஜெயலலிதா இவர்களை கஜானாவுக்குள் பூட்டியே வைத்திருந்தார். அவர் போனதும், இன்று சிந்தனை வானில் சிறகடித்துப் பறக்கிறார்கள். இது மைனாரிட்டி அரசுதான் என்பதையே உணராமல் மல்லுவேட்டி மைனர்களாக வலம்வருகிறார்கள்.

135 உறுப்பினர்கள் கொண்ட பெரும்பான்மை அரசைக் கொடுத்துவிட்டுப் போனார் ஜெயலலிதா. அதில் 12 பேரை உடைத்தார் ஓ.பன்னீர்செல்வம். அவர்கள் மீண்டும் உள்ளே போய்விட்டார்கள். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருக்கிறது. இறுதித் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். தேர்தல் ஆணையம் சமீபத்தில் அளித்த இரட்டை இலை தீர்ப்பின்படி, எடப்பாடி அரசுக்கு 111 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுதான் உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 117 உறுப் பினர்கள் ஆதரவு வேண்டும். இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் எடப்பாடிக்கு எதிராக இருக்கிறார்கள். இந்த வகையில் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால், ஆட்சி ஆட்டம் கண்டுவிடும். அதனால் தான், அம்மாவின் அநாதைப் பிள்ளைகள், பி.ஜே.பி-யின் தத்துப் பிள்ளைகளாக வலியப்போய் மாட்டிக்கொண்டார்கள்.

தமிழக சட்டமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் உட்கார மட்டுமே தகுதிபெற்ற பி.ஜே.பி-க்கு, இது குஷியை ஏற்படுத்திவருகிறது. ‘டம்ஜிக்கு... டம்ஜிக்கு... டம்ஜிக்கு...’ பாடுகிறார்கள். ‘நேர்வழியோ, குறுக்கு வழியோ, வீட்டுக்குள் போனால் போதும்’ என்பதுதான் அவர்களின் தேசிய - தெய்விகப் பாதை. இதற்குக் கணக்குப் போட்டுத் தருபவர்களே கவர்னர்கள். வித்யாசாகர் ராவின் மௌனங்களும் மகாராஷ்டிரா பதுங்கல்களும் இதற்கு சாட்சிகள். புதிய கவர்னர், இந்த பழைய மொந்தைகளை மோப்பம் மட்டுமே பிடித்து வருகிறார். சசிகலா குடும்பத்துக்கு ஜோசியம் பார்த்தவர் வீடுவரை புகுந்து புறப்படும் வருமானவரித் துறை, 89 கோடி ரூபாய் இடைத் தேர்தல் பட்டுவாடா ஆவணம் மாட்டிய விஜயபாஸ்கரையோ, அதில் குறிப்பிடப்பட்டிருந்த எடப்பாடி உள்ளிட்ட வர்களையோ இன்னும் கை வைக்காமல் இருக்கும் அரசியல் புரிந்துகொள்ள முடியாதது அல்ல; இரட்டை இலையை ரிலீஸ் செய்துவிட்டு, ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை அறிவிக்கும் சூட்சுமமும் அறிய முடியாதது அல்ல. அனைத்துமே அமித் ஷாவின் ஆட்டங்கள். அம்மா ஆட்சி நடத்துவதாக எடப்பாடி சொல்வதெல்லாம் சும்மா. இது, அமித் ஷா ஆட்சி.

‘இவர்கள் நடத்துவது அம்மா ஆட்சி அல்ல’ என்பதற்கு ஒரே ஓர் உதாரணமாக ஒரு நல்ல விஷயத்தைச் சொல்லலாம். அது, தி.மு.க - அ.தி.மு.க பங்காளிச் சண்டை ஒழிந்ததுதான். ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒண்டிக்கு ஒண்டி நிற்பார்கள். பன்னீரும் ஸ்டாலினும், எடப்பாடியும் ஸ்டாலினும் அப்படி நிற்கவில்லை. ‘ஆடும் நாற்காலியில் உட்கார்ந்து கால் ஆட்டக் கூடாது’ என்று எடப்பாடி நினைத்திருக்கலாம். சபாநாயகர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது ஏற்பட்ட களேபரங்களில் உரிமைக்குழு விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டு, இடைநீக்கம் செய்யப்படலாம் என்ற நிலைமைக்குக் கொண்டுபோய் நிறுத்தப்பட்ட தி.மு.க உறுப்பினர்களை எட்டுப்பட்டி சாமியாக நின்று காப்பாற்றினார் எடப்பாடி. ‘ஆறு மாதங்களுக்குமேல், சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாத உறுப்பினர் பதவி பறிபோகும்’ என்ற நிலையில் கருணாநிதிக்குச் சிக்கல் வந்தது. சிறப்பு அனுமதித் தீர்மானம் கொண்டுவந்து, அவரின் சட்டமன்ற சாதனை வரலாறு தொடரட்டும் என்று அனுமதித்ததும் எடப்பாடியின் பெருந்தன்மைதான்.

எல்லோரையும் வளைப்பதைப்போல, தி.மு.க-வையும் வளைக்க முயன்றார் முதல்வர். இதன்பிறகு அ.தி.மு.க-வை சட்டமன்றத்தில் விமர்சிக்கும் விஷயத்தில் தி.மு.க-வும் அடக்கிவாசித்தது. இது அ.தி.மு.க-வுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். தி.மு.க-வுக்குப் பெருமை அல்ல. செயலற்ற, திட்டங்களற்ற, கேட்பாரற்ற, அதே நேரத்தில் ஊழல் முறைகேடுகள் நிறைந்த கடந்த ஓராண்டுக் காலத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த தி.மு.க தவறிவிட்டது. ‘பி.ஜே.பி அருளாசியோடு நான்கு ஆண்டுகளை இவர்கள் ஓட்டிவிடுவார்கள், தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று தி.மு.க நினைக்கலாம். சட்டசபையில் பாதிக்கும் சற்றே குறைவான இடம்தான் தி.மு.க-வுக்கு. சட்டையைப் பிடித்து எடப்பாடி அரசாங்கத்தைச் செயல்பட வைக்கும் கடமை மற்ற கட்சிகளைவிட தி.மு.க-வுக்கே உண்டு.

p44_1512141810.jpg

மற்ற கட்சிகளுக்கும் எப்படி அரசியல் செய்வது என்றே புரியவில்லை. ‘அ.தி.மு.க-வை ஆதரிப்பதா, எதிர்ப்பதா’ என்பதே தமிழக பி.ஜே.பி-க்குக் குழப்பம். டெல்லி பி.ஜே.பி தலைமை செய்வது எதுவும் தமிழக பி.ஜே.பி-க்குத் தெரிவதில்லை. மாலத்தீவு கிளைக்கழகம்போல கமலாலயம் இருக்கிறது. அதனால், காலையில் எதிர்க்கிறார்கள்; மாலையில் ஆதரிக்கிறார்கள். இரவில் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். அர்ச்சனா ஸ்வீட்ஸ் விளம்பரம் மாதிரி எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இருக்கிறார். அவரது உடல்தான் கோபாலபுரத்தில் இருக்கிறதே தவிர, உயிரும் மனசும் அவ்வை சண்முகம் சாலையிலும் தினகரன் வீட்டிலும் இருக்கின்றன. ஸ்டாலினுக்கும் திருநாவுக்கரசருக்கும் ஒட்டவில்லை. அ.தி.மு.க-வை எதிர்க்கும் பா.ம.க., பி.ஜே.பி விஷயத்தில் அடக்கி வாசிக்கிறது. வழக்கம்போல் கேப்டன், மோடியை ஆதரிக்கிறார்; அ.தி.மு.க-வை விமர்சிக்கிறார்.

ரஜினி படம் எடுத்துவிடுவாரோ என்ற பீதியில், கமல் பெட்டிக்குள்ளிருந்து படம் எடுப்பது மாதிரி சீறிவருகிறார். அவர் மனத்திரையில் ஓடுவது கட்சியா, அமைப்பா, வழக்கம்போல் ‘இரண்டும் கலந்த கலவையா’ என்பதை இப்போது சொல்ல முடியாது. அவர் தேர்தலில் நிற்பாரா என்பதும் இதுவரை புரியாத புதிர்தான். 

தி.மு.க மேடைகளில் பங்கெடுத்து வந்த அத்தனை கட்சிகளும் ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க வேட்பாளரை ஆதரிக்கின்றன. ம.தி.மு.க-வும் அதே முடிவுடன் அரசியல் ஆலோசனைக் குழுக்கூட்டத்தைக் கூட்டியிருக்கிறது. ஆர்.கே. நகர் தேர்தல் என்பது தமிழ்நாட்டு அரசியல் தட்பவெப்ப நிலையை உணர்த்தலாம்; உணர்த்தாமலும் போகலாம்.

ஆனால், மொத்தத்தில் கடந்த டிசம்பர் 5-ம் தேதி தமிழ்நாட்டு அரசியலைத் தலைசுற்ற வைத்துவிட்டது என்பது மட்டுமே உண்மை. ஜெயலலிதா கல்லறையில்; சசிகலா சிறையறையில்; கருணாநிதி வீட்டறையில்; மொத்த தமிழ்நாடும் இருட்டறையில்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஜெயலலிதா இல்லாத தமிழக அரசியல்!

 

 
download%202

ஜெயலலிதா   -  கோப்புப் படம்

ஜெயலலிதா மறைந்து ஓராண்டு முடிந்த நிலையில், ஜெயலலிதா இல்லாத தமிழக அரசியல் களம் குறித்த ஒரு பதிவு.

கடந்த ஆண்டு செப்.22-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, உடல் நலம் தேறிவந்த நிலையில் டிச.4 அன்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக டிச.5 அன்று மரணமடைந்தார்.

இன்றுடன் ஜெயலலிதா மறைந்து ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், இந்த ஓராண்டு ஜெயலலிதா இல்லாத தமிழக அரசியல் கடந்து வந்த பாதையை சற்றே திரும்பி பார்க்கும் நோக்கில் இந்தப் பதிவு.

எம்ஜிஆரின் எழுச்சி

தமிழக அரசியலில் திமுகவின் வளர்ச்சி காங்கிரஸை வீழ்த்தியது. அதன் முக்கிய காரணகர்த்தாக்களில் அண்ணா, கருணாநிதி, திமுகவின் மூத்த தலைவர்களை அடுத்து எம்ஜிஆருக்கும் முக்கிய பங்கு உண்டு. அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் தமிழக முதல்வராக கருணாநிதி பங்கேற்றதிலும், அதன் பின்னர் 1971-ல் திமுகவின் அமோக வெற்றிக்கும் கருணாநிதியுடன் எம்ஜிஆர் துணை நின்றார்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, கே.ஆர்.ராமசாமி. எஸ்.எஸ்.ஆர் என்று வரிசைப்படுத்தினாலும் முன்னணியில் மக்களிடம் பிரபலமானவர் எம்ஜிஆர். ஆனால் அவரே 1973-ல் வெளியேற்றப்பட்டபோது அவரை நடிகராக மட்டுமே விமர்சனம் செய்தனர்.

ஆனால் மக்கள் எம்ஜிஆரை அரசியல் தலைவராக ஏற்று அதிமுகவை அங்கீகரித்து 1977-ல் அவரை ஆட்சியில் அமர்த்தினர். எம்ஜிஆருடன் திமுகவிலிருந்து பல பெரிய தலைவர்கள், இளம் தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர், குழந்தைவேலு, கே.ஏ.கே என பலரும் உருவானார்கள். எம்ஜிஆருக்குப் பின்னால் யார் என்று யாரையும் காட்டாத நிலையில் 1982-ல் திடீரென அறிமுகப்படுத்தப்பட்டார் ஜெயலலிதா.

பல ஆண்டுகள் திமுகவின் ஸ்தாபன ரீதியான வளர்ச்சியுடன் வளர்ந்த எம்ஜிஆரை அரசியல்வாதியாக ஏற்க மறுத்தவர்கள் மத்தியில் திரையுலகிலிருந்து நேரடியாக அரசியலுக்கு வரும் இவர் என்ன செய்யப்போகிறார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் தனது அடிகளை மெல்ல எண்ணி வைக்க ஆரம்பித்தார் ஜெயலலிதா.

தனித்துவ ஆளுமை ஜெயலலிதா

நடிகை என்ற பிரபலம், அவரது புத்தக அறிவு, மொழி அறிவைத்தாண்டி தனிப்பட்ட ஆளுமை கட்சியில் அவரை தனி இடத்திற்கு உயர்த்தியது. எம்ஜிஆரும் அதை அனுமதித்தார். கட்சியில் வளரும் போதே எதிர்ப்புகளும் வளர்ந்தன. ஆனால் திருப்புமுனையாக 1984-ல் எம்ஜிஆர் அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் தமிழகம் முழுதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு அதிமுக வெற்றிக்கு துணையாக இருந்ததன் மூலம் அரசியலில் தனது இடத்தை தக்கவைத்தார் ஜெயலலிதா.

1987-ல் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் கருணாநிதி எனும் மிகப்பெரும் அரசியல் சக்தி முன் அதிமுகவை வழிநடத்த செல்வாக்கு மிக்க தலைவராக ஜெயலலிதாவை சில தலைவர்களும், வி.என்.ஜானகியை சில தலைவர்களும் தேர்வு செய்து இரு அணிகளாக தேர்தல் களம் கண்டனர். மக்கள் ஜெயலலிதாவை அங்கீகரித்தனர். அது சரியான முடிவுதான் என்பதைதான் இறக்கும் வரை அதிமுகவை வழிநடத்திச் செல்வதில் ஜெயலலிதா நிரூபித்தார்.

1991-96-ல் பதற்றமான ஒரு அரசியலை நடத்திய ஜெயலலிதா 1996-ல் பெற்ற படுதோல்விக்கு பிறகு மாற்றிக்கொண்டார். அதன் பின்னர் அவரது அரசியலில் ஓரளவு மாற்றம் தெரிந்தது. தமிழகத்தில் தனது நிலையை ஒரு நாளும் விட்டுக்கொடுக்காத தனித்துவமான தலைமையாக ஜெயலலிதா விளங்கினார்.

அவசரப்பட்டு எடுத்த பல நடவடிக்கைகள் காரணமாக ஜெயலலிதா மீது விமர்சனம் உண்டு. ஆனால் அதையும் தாண்டி சாதாரண மக்களிடம் எம்ஜிஆர் போன்று செல்வாக்கும் அவருக்கு இருந்தது. திமுக எதிர்ப்பு அரசியல் மட்டுமே அதிமுகவை நிலைத்து நிற்க வைக்கும் என்பதில் கடைசிவரை உறுதியாக இருந்தார். மத்திய அரசுகளுடன் இணக்கமாக இருப்பது போல் காண்பித்துக்கொண்டாலும் மாநிலத்தில் தனக்குரிய உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் அரசியல் நடத்தினார்.

2014-ல் மோடி அலை இந்தியா முழுதும் வீசிய போதும், சகோதரி என்ற அளவுக்கு பிரதமர் மோடியுடன் நெருக்கமானவர் என்று அறியப்பட்டாலும், 'இங்கு மோடி அல்ல இந்த லேடி தான்' என்று துணிச்சலுடன் அறிவித்து வென்றும் காட்டினார். திமுகவும் அந்த தேர்தலில் தோற்றது. பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு என்று பேட்டி அளித்த ஒரே காரணத்துக்காக முன்னணி பிரமுகர் ஒருவரை கட்சியை விட்டு ஓரங்கட்டினார்.

2016 தேர்தலிலும் மீண்டும் வென்ற ஜெயலலிதா தேர்தலுக்குப் பின்னர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெறலாம் என்ற நினைப்பிலிருந்தார், ஆனால் அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் அவரை அசைய விடவில்லை என்று தகவல் உண்டு. ஆட்சியில் அமர்ந்து நான்கே மாதத்தில் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு 75 நாள் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஆண்டு டிச-5-ம் தேதி மறைந்தார்.

அரசியல் வெற்றிடம்

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என்பதை அரசியல் அறிந்த அனைவரும் அறிவர். ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் ஓய்வு என இரு பெரும் சக்திகள் இல்லாத தமிழக அரசியல் இதற்கு முன்னர் பார்க்காத பல காட்சிகளை பார்த்து வருகிறது.

ஜெயலலிதா இல்லாத தமிழக அரசியல் களத்தினால் தமிழகத்துக்கு பாதிப்பு உண்டா என்றால் கண்டிப்பாக உண்டு என்று பல உதாரணங்களை அடுக்கலாம்.

ஜெயலலிதா மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தாலும் மாநில உரிமைகள் சார்ந்த விஷயங்களில் விட்டு கொடுக்காத ஒரு தலைவராகத்தான் இருந்தார். மாநிலம் சார்ந்த விஷயங்களில் ஜெயலலிதாவை பகைத்து எந்த முடிவையும் எடுக்கவும் மத்தியில் உள்ளவர்களும் யோசித்தனர். ஜெயலலிதா இருக்கும் வரை, மாநில சுயாட்சி தெரிந்தோ தெரியாமலோ தமிழக தலைவர்கள் கையில் இருந்தது.

அதற்கு உதாரணம் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு, உதய் மின் திட்டம், ஜி.எஸ்.டியில் மாநில பங்கு குறித்த நிலைப்பாடு, துறைமுகம் - மதுரவாயல் திட்டம், கடலோர மேம்பால நெடுஞ்சாலை திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற திட்டங்களை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். இதில் பல திட்டங்கள் மக்களைப் பாதிக்கும் திட்டங்கள் அல்லது மாநில நலனைப் பாதிக்கும் திட்டங்கள் என்று அவர் உறுதியாக நம்பினார்.

அவரது தேர்தல் உரையில் சில திட்டங்களுக்கு அனுமதி அளிக்க மாட்டேன் என்றும் அறிவித்து அதில் உறுதியாக இருந்தார். ஆனால் அவர் சிகிச்சையில் இருக்கும்போதே பல திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் மாநில உரிமைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை எதிர்காலம்தான் சொல்லும்.

ஜெயலலிதா இல்லாத தமிழகம்

ஆனால் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு விஷயத்தில் ஜெயலலிதா அனுமதிக்காமல் உறுதியாக இருந்தது ஏன் என்பதை சிலமாதங்களிலேயே தமிழகம் சந்திதது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் சாதாரண மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படாதவரை அவர்களுக்கான தேவைகளில் கை வைக்கக்கூடாது என்று ஜெயலலிதா நம்பினார். அந்த திட்டத்திற்கும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கிடைத்த அனுமதியும் அதை அடுத்து உடனடியாக நடைமுறைக்கு வரும் நிகழ்வுகளும் சாதாரண அடித்தட்டு மக்களை உடனடியாக பாதிக்கப்போகும் அறிகுறிகள் நன்றாக தெரிய ஆரம்பித்துவிட்டன. மீனவ மக்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தும் கடலோர மேம்பால நெடுஞ்சாலை திட்டமும் அனைவராலும் எதிர்க்கப்பட்டு வருகிறது.

இவை அனைத்தையும் ஜெயலலிதா எதிர்த்தார். அவர் சரியான பாதையில் பயணித்தாரா என்பதை வருங்கால நடைமுறைதான் நமக்கு உணர்த்தும் என்றாலும், மாநில உரிமைகளை பாதிக்கும் விஷயம் என்றால் அதை சமரசமில்லாமல் எதிர்த்தார் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் ஜெயலலிதா இல்லாத ஓராண்டில் அவர் எதிர்த்த திட்டங்கள் அவரது அடுத்தகட்ட தலைவர்களால் அனுமதி அளிக்கப்படுகிறது.

ஜெயலலிதா மறைந்த உடன் நடந்த ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டம் பெரும் இளைஞர் போராட்டமாக மாறியது. ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி ஏற்பட்டிருக்காது என்ற பேச்சு அப்போது பலராலும் பேசப்பட்டது. ஆனாலும் மக்கள் சக்தி சில அவசர சட்டங்களை இயற்ற வைத்தது.

காவிரி பிரச்சினையில் துணிச்சலாக சட்ட ரீதியாக போராடி நடவடிக்கைகள் எடுக்கும் அளவுக்கு கொண்டு சென்றதில் ஜெயலலிதாவுக்கு முக்கிய பங்குண்டு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அவர் நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவு அவரது மரணத்திற்குப் பின்னர் தீர்ப்பாக கிடைத்தது. ஆனால் மத்திய அரசு முடிவை அமல்படுத்துவதில் நாடாளுமன்றம் மூலம் தீர்மானிப்போம் என்று எடுத்த முடிவினால் அது பின்னுக்கு தள்ளப்பட்டது.

ஜெயலலிதா எனும் அழுத்தம் அன்று இருந்திருந்தால் ஒருவேலை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்கலாம் என்பது அரசியல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. அதன் பின்னர் மாநில உரிமை சார்ந்த விஷயங்களில் மத்திய அரசின் தலையீடு உள்ளதாக கூறும் அளவுக்கு பல விஷயங்கள் நடந்துள்ளது. சமீபத்தில் ஆளுநர் மாவட்ட வாரியாக நடத்திய ஆய்வுகளும், அதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தபோதும் எதிர்க்க வேண்டியவர்கள் அதை சரிதான் என வாதிட்டபோது ஜெயலலிதா இருந்திருந்தால் என்ற கேள்வி பரவலாக எழுந்தது.

பொதுவாக மாநிலத்துக்கு தலைமைச்செயலாளர் இருப்பார், ஆனால் தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருக்கும் போதே ஆளுநருக்கே தலைமைச் செயலாளரை நியமிக்கும் ஒரு புதிய முன்னுதாரணம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட போது ஒரு முணுமுணுப்புக்கூட எழாதது ஜெயலலிதா இல்லாத அரசியலை அனைவர் கண் முன்பும் கொண்டு வந்து நிறுத்துவதாக எதிர்க்கட்சியினரே விமர்சனம் செய்யும் அளவுக்கு செல்கிறது.

மேற்கண்ட உதாரணங்கள் அரசு சார்ந்த விஷயங்களில் ஜெயலலிதா இல்லாததால் கடந்த ஓராண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள். இனி வரப்போவது அரசியல் ரீதியாக தமிழகத்தில் கடந்த ஓராண்டில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகும். இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவைகளே. ஒன்றின் பாதிப்பு அடுத்ததையும் பாதித்தது. ஜெயலலிதா இல்லாத அரசை வழிநடத்திச்செல்ல அரசியல் ரீதியாக ஏற்பட்ட எதிர்ப்புகளை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றித்தான் மேலே பார்த்தோம்.

அரசியல் ரீதியாக ஜெயலலிதா இல்லாத ஓராண்டில் பல மாற்றங்கள்

தகர்ந்தது ராணுவக் கட்டுப்பாடு

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக தலைமை வழக்கம் போல் சசிகலாவின் கைகளுக்குச் செல்ல ஓபிஎஸ் முதல்வரானார். கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட இடைப்பட்ட காலத்தில் ஆட்சியை முறையாக வழி நடத்திச் செல்வதை விட சசிகலாவின் அபிமானத்தை பெற்று அவரை முதல்வராக்கி அதன் மூலம் தங்கள் இருப்பைப் பலப்படுத்தி வளர சிலர் கட்சிக்குள்ளே எடுத்த முயற்சி சசிகலா ஓபிஎஸ்ஸை நீக்க அவர் முதல்வராக எடுத்த முயற்சிகள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்தார் கட்சிக்குள்ளும், கார்டனுக்குள்ளும் வர அதை சிலர் விமர்சிக்கவும் சிலர் ஆதரிக்கவும் செய்தனர்.

நீருபூத்த நெருப்பாக இருந்த விவகாரம் ஓபிஎஸ் நடத்திய தியானத்தால் வெளிவர கட்சி பகிரங்கமாக இரண்டானது. முதன்முறை நேரடியாக ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக கருத்தைகளைக் கூற சசிகலாவும், ஆதரவு அமைச்சர்களும் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக பேட்டி கொடுக்க அதிமுக இரண்டானது. சசிகலா முதல்வராவதற்கு முன்னரே சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வர நான்காண்டு சிறைத்தண்டனை காரணமாக நிலைமை தலைகீழ் ஆனது.

ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தத்தில் சசிகலா குடும்பம், ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகங்கள் எடுத்து வைக்கப்பட்டது. அடுத்து வந்த இரண்டு மூன்று வாரங்களுக்கு மீடியாக்களுக்கு பேட்டி மேல் பேட்டி அளித்தார் ஓபிஎஸ். ஜெயலலிதா மறைவுக்கு சில நாள் கழித்து அவரது அண்ணன் மகள் தீபா வெளிச்சத்துக்கு வந்தார். அவரும் ஜெயலலிதா சிகிச்சை, உயில் குறித்து சந்தேகம் எழுப்ப தினமும் அவரது வீட்டு வாசல் முன் தொண்டர்கள் குவிய ஆரம்பித்தனர்.

தன் பங்குக்கு அவரும் சில கருத்துக்களை கூறி எம்ஜிஆர் அம்மா ஜெ.தீபா பேரவை என்று கட்சியை தொடங்கினார். ஆனால் ஜெயலலிதா போல் அவர் அரசியல் நடத்த முடியாது என்பதை அவரது நடவடிக்கைகள் நிரூபித்ததால் அவர் சோபிக்க முடியாமல் போனார். ஓபிஎஸ் பக்கம் சில மூத்த தலைவர்கள் இணைய சில எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் இணைந்தனர். சசிகலா இல்லாவிட்டாலும் ஆட்சியை தக்கவைக்க கூவத்தூரில் அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்கவைக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானார்.

சசிகலா சிறைக்குச் செல்லும் முன் ஜெயலலிதாவால் அரசியல் களத்திலிருந்து ஒதுக்கப்பட்ட தினகரன் துணை பொதுச் செயலாளராக்கப்பட்டார். ஓபிஎஸ் கையில் கட்சி உள்ளது என்று பரவலாக பேசப்பட்டது. ஆட்சியை கைப்பற்ற இரண்டு தரப்பும் முனைப்பு காட்ட அதிமுக ஆட்சியை கவிழாமல் நீடிக்க செய்ய வேண்டுமென்ற முனைப்பில் மத்திய அரசும் இருந்தது.

ஓபிஎஸ் தரப்பு உ.பி.யில் நடத்தியது போல் சட்டசபையில் யாருக்கு ஆதரவு என்று மறைமுக ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரியபோது மத்திய அரசின் எண்ணம் வேறாக இருந்தது. இதனால் அந்த முடிவை கைவிட்டு திடீரென எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். அனைத்து எம்.எல்.ஏக்களும் பாதுகாத்து அழைத்து வரப்பட நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வென்றார்.

அதன் பின்னர் நடந்த அரசியல் மாறுதல்களில் ஓபிஎஸ் மத்திய அரசின் பக்கம் நெருக்கமாக இருப்பதை வெளிப்படையாக காண முடிந்தது. முதல்வருக்கு கிடைக்காத பிரதமரின் அப்பாயின்மெண்ட் ஓபிஎஸ்ஸுக்கு உடனே கிடைத்தது. ஆர்.கே.நகர் இடைதேர்தலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் எதிரெதிரே நிற்க 12 எம்.எல்.ஏக்கள் கொண்ட ஓபிஎஸ் அணியின் வேண்டுகோளை ஏற்று இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

கட்சியும் முடக்கப்பட்டு இரண்டு அணிகளானது. அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித்தலைவி அணி என பிரிந்தது. ஆர்.கே.நகர் தேர்தலில் யார் வெல்கிறாரோ அல்லது யார் அடுத்த இடத்தைப் பிடிக்கிறாரோ அவரே மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அதிமுக என்பதால் வெல்வதற்கான அனைத்து வழிமுறைகளும் கையாளப்பட்டது. இதனால் ஏற்பட்ட புகாரினால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

மத்திய அரசிடம் ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் நெருக்கத்தை குறைக்க தாங்களும் நெருங்க ஆரம்பித்தனர். இதன் விளைவு மாநிலம் சார்ந்த ஜெயலலிதா எதிர்த்த பல திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளித்தனர். வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு செய்த மத்திய அரசு மாநில அரசு கேட்ட நிதியை ஒதுக்காத போதிலும் எதிர்ப்பு காட்டவில்லை. நீட் நுழைவுத்தேர்விலும் எதிர்ப்பு காட்டாமல் நமக்கு வேறு வழியில்லை என ஒப்புக்கொண்டனர். ஜி.எஸ்.டி விவகாரத்திலும் மத்திய அரசோடு இணக்கமாக எதிர்ப்பின்றி முடித்து கொடுத்தனர்.

இரட்டை இலையை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்தார் என்று கூறி தினகரனை டெல்லி போலீஸார் கைது செய்தனர். தினகரனை ஒதுக்கவும் கட்சி, ஆட்சியை தங்கள் வசம் வைத்துக்கொள்ளவும் அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியினர் முடிவெடுத்தனர். இதற்கு ஒரே தீர்வு ஓபிஎஸ்ஸை மீண்டும் அணியில் இணைக்கவேண்டும் என்பதே என்ற முடிவுக்கு வந்த அவர்களுக்கு உதவியாக ஓபிஎஸ்ஸுக்கும் சிக்னல் தரப்பட அறைகுறை மனதோடு சம்மதித்தார்.

இரட்டைத்தலைமை, இருவருக்கு அமைச்சர் பதவி என்ற நிபந்தனையுடன் கட்சி இணைந்தது. இதில் ஓபிஎஸ்ஸுடன் உறுதுணையாக இருந்த பலருக்கும் இதுவரை எந்த லாபமும் இல்லை என்பதன் வெளிப்பாடுதான் சமீபத்தில் பகிரங்கமாக வெளியான விமர்சனங்கள். பொதுக்குழுவில் ஒருவழியாக இரட்டைத்தலைமை அங்கீகரிக்கப்பட, வழிகாட்டுக்குழு அமைப்பது என்றும் முடிவெடுத்தனர்.

ஆனால் வழிகாட்டுக்குழு இதுவரை அமைக்காமல் இருப்பது ஓபிஎஸ் ஆதரவாளர்களால் கடுமையாக பார்க்கப்படுகிறது. அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்று மைத்ரேயனின் விமர்சனம் அவரது சொந்தக் கருத்து மட்டுமல்ல ஓபிஎஸ் அணியினர் அனைவர் மனதிலும் உள்ள கருத்துதான் என்பதை பல இடங்களில் காண முடிகிறது. சாதாரண முடிவைக்கூட எடுக்க முடியாத துணை முதல்வராகத்தான் இருக்கிறார் ஓபிஎஸ் என்பதே அவரது அணியினர் எண்ணமாக உள்ளது.

திமுகவுக்கு சாதகமான அரசியலாக மாறிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் நடக்கும் காய்நகர்த்தலும், அடுத்து வரும் மூன்றரை ஆண்டு ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற பதைபதைப்பையும் இரு பக்கமும் காண முடிகிறது. மாநிலத்தில் ஒற்றுமையில்லாத கட்சியும், எந்நேரமும் ஆட்டம் காணும் அரசும் இருக்கும் வரை அது மத்திய அரசைச் சார்ந்தே இருக்கும் என்பதற்கு தமிழக அரசியல் சூழல் சிறந்த உதாரணமாக உள்ளது.

இரட்டை இலை கைக்கு வரட்டும் கட்சி நம் கையில் என ஓபிஎஸ் அணியினர் கணக்குப்போட இரட்டை இலையை முதலி பெறுவோம் மற்றதை பிறகு பார்ப்போம் என இபிஎஸ் அணி கணக்குப்போட இரட்டை இலையும் கிடைத்துள்ளது. ஆனாலும் ஒற்றுமை இல்லை என்பதை ஆர்.கே.நகர் வேட்பாளர் தேர்வில் காண முடிகிறது.

ஜெயலலிதா இல்லாத ஓராண்டு அரசியலில் அதிமுகவில் காணாமல் போனது இரண்டு முக்கிய விஷயங்களில் ஒன்று ராணுவ கட்டுப்பாடு. கட்சியில் தலையே போனாலும் தலைமைக்கு எதிராகவோ, கட்சி நடவடிக்கைக்கு எதிராகவோ யாரும் பேச மாட்டார்கள். இரண்டு ஒரே தலைமை, ஒரே குரல் என்ற நிலையும் மாறிப்போனது. விளைவு விமர்சனம், கண்டனம் என அதிமுகவின் அடையாளத்தையே தொலைத்துவிட்டு நிற்கிறது கட்சி.

ஆட்சி என்ற நூல் ஒற்றுமை என்னும் முத்துக்களை கோத்து வைத்துள்ளது. ஆட்சி எனும் நூல் அறுந்தால் ஒற்றுமை சிதறிப் போகும் என்பதே தற்போதை அதிமுகவின் நிலை. தலைவன் இல்லாத படைக்களம் இருக்கும் நிலைதான் இன்றைய அதிமுகவின் நிலையாக உள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிமுக எதிர்ப்பு அரசியல்

ஜெயலலிதா இருந்த அரசியலில் எதிர்த்து களம் காண பலரும் தயங்கினர். அரசியலிலும், திரையுலகத்திலும் ஜெயலலிதா என்ற ஆதிக்கம் இருந்ததைக் காண முடிந்தது. அவரது மறைவுக்கு பின்னர் எதிர் கருத்துகள், அதிமுக எதிர்ப்பு அரசியல், நடிகர்கள் களத்தில் குதிப்பது என்ற நடைமுறைகள் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரே அதிகரித்து வருகிறது.

அதிமுக அமைச்சர்கள் பற்றிய பிம்பங்களும் ஜெயலலிதா என்ற ஆளுமையின் காரணமாக கட்டிக்காக்கப்பட்டது, அவரது மறைவுக்கு பின்னர் வெளிப்படையாக பேச ஆரம்பிக்க அதுவும் பொதுமக்களாலும், வலைதளங்கள், முகநூல்களில் விமர்சிக்கப்பட ஆரம்பித்துள்ளது.

ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகம், மாணவர்களுக்கான உதவித் திட்டங்கள், பொதுமக்களுக்கான பயன் தரும் திட்டங்கள் பலவற்றைத் தொடர்ந்து அமல்படுத்துவதாக கூறினாலும் அதில் சுணக்கம் காணப்படுகிறது. கருணாநிதி எனும் மாபெரும் அரசியல் சக்தி இல்லாத அரசியல் களத்தில் இறங்கி கம்பு சுற்ற வேண்டியவர்கள் ஒருவருக்கொருவர் எதிரெதிரே கொண்டுள்ள அரசியல் எதிர்ப்பால் வேறொரு தலைமையிடம் சரணாகதி அடைந்து ஆட்சியைத் தொடரும் நிலைதான் இன்றைய தமிழக நிலை.

இதன் விளைவு தமிழகத்தின் பல உரிமைகள் கேட்டுப்பெறப்படாமலே முணுமுணுப்பு கூட இல்லாமல் முடிகிறது. அடுக்கி வைக்கப்பட்ட சீட்டுக்கட்டுபோல் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலையில்தான் ஜெயலலிதா இல்லாத இந்த ஓராண்டு அரசும், அதிமுகவின் ஒற்றுமையும் உள்ளது. எம்ஜிஆருக்குப் பிறகு தனித்துவமான தனது தலைமையால் 28 ஆண்டுகள் கட்சியை வழிநடத்தினார் ஜெயலலிதா. ஆனால் ஒராண்டுக்குள் துணிச்சலான தனித்துவமான தலைமையில்லாமல் தள்ளாடுகிறது அதிமுக.

http://tamil.thehindu.com/tamilnadu/article21259791.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவுக்குப் பிந்தைய அ.தி.மு.க: குமுறும் எரிமலை

 
ஜெயலலிதாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தனது அரசியல் வாரிசையோ, அடுத்த கட்டத் தலைவர்களையோ அடையாளம் காட்டாமல் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், மாநில அரசும் ஆளும் கட்சியும் சரியான தலைமையின்றி தவிக்கின்றன. அதிகாரத்திற்கான போட்டி தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.

நினைவிழந்த நிலையில் செப்டம்பர் 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. முதலமைச்சரின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மாநில அரசு நிர்வாகம் உடனடியாக வேறு ஒரு மூத்த அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த நிலையிலும் அரசு தொடர்பான முடிவுகளை ஜெயலலிதாவே எடுப்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டது. வாழ்வின் இறுதி நாட்களில்கூட, இந்த விவகாரம் குறித்து ஜெயலலிதா முடிவெடுக்காததே அக்கட்சி தற்போது எதிர்கொண்டிருக்கும் சிக்கல்களுக்கு முக்கியக் காரணம்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சுமார் 20 நாட்களுக்குப் பிறகு, அரசு தொடர்பான முடிவுகளை யார் எடுப்பது என ஊடகங்களில் தொடர்ச்சியாக விமர்சனங்கள் வெளியான நிலையில், நிதியமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் முதல்வரின் பொறுப்புகளைக் கவனித்துக்கொள்வார் என அக்டோபர் 11ஆம் தேதியன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கு முன்பும் இரண்டு முறை முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் இருந்திருக்கிறார் என்பதால், இந்த அறிவிப்பு பொருத்தமானதாகவே இருந்தது. டிசம்பர் 5ஆம் தேதியன்று ஜெயலலிதா காலமான நிலையில், சில மணிநேரங்களிலேயே புதிய முதல்வராகப் பதவியேற்றார் ஓ. பன்னீர்செல்வம்.

ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகள் மிக விரைவாக முடிவடைந்த நிலையில், பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளில் பெருத்த மாற்றம் தென்பட்டது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நடந்திருக்காத பல காட்சிகள் அதற்குப் பிறகு நடக்க ஆரம்பித்தன. முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் உடனடியாக நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றும் தோற்றத்தை ஏற்படுத்தினார். குறிப்பாக வார்தா புயல் சென்னையைப் புரட்டிப்போட்டபோது பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் நேரில் வந்து பார்வையிட்டது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. சரளமாக ஊடகங்களிடமும் பேச ஆரம்பித்தார்.

ஜெயலலிதாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த வரவேற்பு கட்சியை அப்போது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சசிகலா தரப்பிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக கட்சியைக் கட்டுப்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டன. பொதுக்குழுவைக் கூட்டிய சசிகலா, தன்னைக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்க வைத்தார்.

கட்சி அலுவலகத்திற்கு வந்து டிசம்பர் மாத இறுதியில் சசிகலா நிகழ்த்திய உரை, ஆட்சியதிகாரத்தை நோக்கி அவர் நகர்வதைக் காட்டியது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை சசிகலாவின் குரலை யாருமே கேட்டதில்லை.

இந்த நகர்வுகள் குறித்து ஓ. பன்னீர்செல்வம் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ஆனால், கட்சிக்குள் பன்னீர்செல்வத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமடைந்தன. ஒருகட்டத்தில் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்யவைக்கப்பட்டார்.

இதற்குப் பிறகு கட்சியும் ஆட்சியும் பெரும் குழப்பத்திற்குள் விழுந்தன. சசிகலாவின் வீழ்ச்சியும் இந்தப் புள்ளியில் துவங்கியது.

ஒரு புறம், தர்மயுத்தம் என்ற பெயரில் ஓ. பன்னீர்செல்வம் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருடன் பிரிந்துசெல்ல, கூவத்தூரில் மீதமிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை ஒன்று சேர்த்த சசிகலா தன்னை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென ஆளுநரிடம் கோரினார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ய, எடப்பாடி கே. பழனிச்சாமியை முதல்வராக்கினார் அவர்.

இதற்குப் பிறகு சசிகலாவின் உறவினரான டிடிவி தினகரன் தன்னை முன்னிறுத்த முயற்சித்த நிலையில், கட்சியின் பெயரும் சின்னமும் முடக்கப்பட்டன.

1972ல் துவக்கப்பட்ட அ.தி.மு.க. இதுபோன்ற சிக்கலை எதிர்கொள்வது இது முதல்முறையல்ல. 1987 டிசம்பரில் அப்போதைய முதல்வரும் அ.தி.மு.கவின் தலைவருமான எம்.ஜி. ராமச்சந்திரன் திடீரென உயிரிழந்தபோதும் கட்சி இதேபோன்ற நெருக்கடியை எதிர்கொண்டது. மறைந்த முதல்வரின் மனைவி வி.என். ஜானகி தலைமையில் ஒரு பிரிவும் கொள்கைபரப்புச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் ஒரு பிரிவுமாக கட்சி உடைந்ததில் ஆட்சியே சில நாட்களில் கவிழ்ந்தது.

ஜெயலலிதாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

எம்.ஜி.ஆர். மறைந்து ஒரு வாரத்திற்குள் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதாவின் பின்னால் பல சட்டமன்ற உறுப்பினர்கள் திரள, நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த 1987 டிசம்பர் 28ஆம் தேதியன்று தமிழக சட்டப்பேரவை பெரும் ரகளையை சந்தித்தது. காவல்துறை உள்ளே புகுந்தது.

2017ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி வரலாறு மீண்டும் திரும்பியதைப் போல இருந்தது. எடப்பாடி கே. பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டப்பேரவையில் மீண்டும் ஒரு ரகளை அரங்கேறியது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி கே. பழனிச்சாமி அரசு வெற்றிபெற்று, தற்போதும் தொடர்ந்துவருகிறது.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது ஒருபோதும் ஊடங்களிடம் பேசாத தமிழக அமைச்சர்கள் தற்போது தனித்தனியாக, ஸ்டுடியோக்களுக்கே வந்து பேட்டியளிக்கிறார்கள். 'அம்மாவின் வழியில்' என்று சொல்லித்தான் ஒவ்வொரு அறிவிப்பையும் செய்கிறார்கள்.

ஆனால், ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது கடுமையாக எதிர்த்த 'உதய்' திட்டம் (மின்வாரியத்தின் கடன்களை அரசே ஏற்கச் செய்யும் திட்டம்), வறுமைக்கோட்டிற்குக் கீழிருப்பவர்களுக்கு மட்டுமான பொதுவிநியோகத் திட்டம், நீட் தேர்வு உள்ளிட்டவற்றை எந்த எதிர்ப்புமின்றி ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அரசும் தற்போதைய அரசும் நிறைவேற்றிவருகின்றன.

2016ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதியன்று சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா , "எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காக இயங்கும்" என்று குறிப்பிட்டார்.

கட்சியின் எதிர்காலம் குறித்து பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்த ஜெயலலிதா, தனக்குப் பிறகு யார் என்பதை ஒருபோதும் பூடகமாகக்கூட வெளிப்படுத்தியதில்லை.

ஜெயலலிதாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இக்கட்டான சூழல்களில் ஓ. பன்னீர்செல்வத்தை இரண்டு முறை முதலமைச்சராக பதவியேற்கச் செய்தாலும், அவரை அ.தி.மு.கவின் வாரிசாகவோ, முக்கிய முடிவுகளை எடுக்கும்போது கலந்தாலோசனை செய்யும் அமைச்சராகவோ ஜெயலலிதா ஒருபோதும் கருதியதில்லை.

ஜெயலலிதா மரணமடைந்து சரியாக ஓராண்டு கழிந்திருக்கும் நிலையில், அவர் தலைமை தாங்கியிருந்த அ.தி.மு.கவும் அக்கட்சியின் ஆட்சியும் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றன. கட்சியின் பெயரும் சின்னமும் மீண்டும் கிடைத்துவிட்டன என்றாலும் டிடிவி தினகரன் தரப்பு கட்சியைக் கைப்பற்றாமல் விடுவதில்லையென கங்கனம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீண்டும் கொண்டுவரப்பட்டால், எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அரசு மீண்டும் வெல்லுமா என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.

ஜெயலலிதாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், ஓ. பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு. ஜெயலலிதா இருந்தவரை விசுவாசத்தின் மறுபெயராக, சசிகலா குடும்பத்தினருக்கு நெருக்கமானவராகக் காட்சியளித்த பன்னீர்செல்வம், அவர் மறைந்த பிறகு சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். முதல்வர் பதவியிலிருந்து தன்னை இரு முறை ராஜிநாமா செய்யச்சொன்னபோது அமைதியாக விலகிக்கொண்ட ஓ. பன்னீர்செல்வம், சசிகலா அதே காரியத்தைச் செய்யச் சொன்னபோது கட்சியை உடைத்தார்.

ஜெயலலிதாவுக்கு மக்கள் செல்வாக்கு இருந்தது என்பதும் சசிகலாவுக்கு அது இல்லை என்பதுமே ஓ. பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளுக்குக் காரணம். இப்போது மத்திய அரசு எடப்பாடி கே. பழனிச்சாமியின் பின்னால் இருப்பதால் அமைதியாக துணை முதல்வராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம், காட்சிகள் மாறும்போது மீண்டும் போர் வாளை உயர்த்தக்கூடும்.

மற்றொரு புறம், 1995க்குப் பிறகு அ.தி.மு.க. அரசு மீது மிகப் பெரிய அதிருப்தி உருவாகியிருக்கிறது. நீட் விவகாரத்தில் ஏற்பட்ட தோல்வி, ஜி.எஸ்.டி வரி விவகாரம், மாநில அரசின் விவகாரங்களில் மத்திய அரசு பெருமளவில் தலையிடுவதான் தோற்றம் உருவாகியிருப்பது ஆகியவை சேர்ந்து, கட்சியை வீழ்ச்சிப் பாதையை நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கின்றன.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள், சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதியிழப்பு குறித்து உள்ள வழக்குகள், ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் முடிவுகள் ஆகியவை கட்சிக்கும் ஆட்சிக்கும் உள்ள நெருக்கடியை மேலும் தீவிரமாக்கலாம்.

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை ஒவ்வொரு நகரத்திலும் பிரம்மாண்டமாக கொண்டாடுவது மட்டும் இதற்கு வெறும் தீர்வாக அமையாது என்பதை ஆட்சியில் இருப்பவர்கள் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

http://www.bbc.com/tamil/india-42230459

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.