Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீன அடிமைகள்

Featured Replies

நவீன அடிமைகள்

 

2agrwg8.jpg
 
நவீன அடிமைகள் (சிறப்பு கட்டுரை)
 

அடிமைமுறை என்பது முதலாளித்துவ மேலாதிக்கத்தால் ஒரு பகுதி சமூகத்தினரை கொடூரமான முறையில் அடக்கியாள்

வதாகும். ஆண்டாண்டு காலமாக பல இனங்கள் அடிமைப்பட்டுக்கிடந்தாலும், தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட அடிமைக்கு எதிரான புரட்சிகளால் அந்த இனம் தலைநிமிர்ந்து நடப்பதை நாம் காணமுடிகிறது.

மலையகத்திலும் அடிமைத்தனத்தை  இல்லாதொழிக்க போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டாலும், இறுதியில் அது தொழிற்சங்கங்களில் சங்கமமாகிய வரலாறே பெரிதும் உள்ளது.

தொடர்ந்து மலையகத்தில் நிலவிவரும் தொழிற்சங்கங்களுக்கிடையிலான அற்பத்தனமான போட்டி அரசியலால் உரிமைகளை வென்றெடுப்பதில் பின்தங்கியவர்களாயுள்ளனர். போட்டி அரசியல் என்பது அபிவிருத்திகளுக்கும் அரசியல் உரிமைகளுக்கானதாய் இருந்தால் அதனை வரவேற்கவேண்டும். ஆனால், மலையகத்தில் அப்படியான போட்டி அரசியலாக இருக்கிறது?  அண்மைக்காலமாக மலையகத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் அதனை இல்லை என்றே எமக்கு உணர்த்துகின்றன.

மலையக மக்கள் இக்காலத்தின் நவீன அடிமைகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்கு பல தனியார் தோட்டங்களில் வாழும் மக்களே சாட்சி.

குடிக்க ஒழுங்கான குடிநீர், தங்குமிட வசதியில்லை, அடிப்படை சுகாதாரவசதிகளென எதுவும் இல்லை. பிள்ளைகளுக்கு ஒழுங்கான கல்வியை வழங்கமுடியவில்லை. அவர்களின்  எதிர்காலம் என்னவாகும் என நினைத்து நினைத்து நாங்கள் தினமும் செத்துக்கொண்டிருக்கின்றோம்''  என லெமன்மோரா தோட்ட மக்கள் "சுடர் ஒளி'யிடம் தெரிவித்தார்கள்.

மஸ்கெலியா, ஹப்புகஸ்தன பிரதேசத்திற்கு அருகிலுள்ள லெமன்மோரா தோட்டம் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமானது. இத்தோட்டத்தின் மக்கள் அடிமைகள்போல நடத்தப்பட்டு வருகின்றமை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியுலகுக்குத் தெரியவந்துகொண்டிருக்கிறது. அதனை முழுமையாக முடியாவிட்டாலும் ஓரளவேனும் வெளிச்சம் போட்டுக்காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

ஆரம்பகாலங்களில் சுந்தரலிங்கம் என்பவருக்கே லெமன்மோரா தோட்டம் உடைமையாகவிருந்தது. பின்னர் 1994ஆம் ஆண்டு மக்கள் வங்கியில் அடகுவைக்கப்பட்டு 1997ஆம் ஆண்டு  ஏலமிடப்பட்டு அமல சூரியகே என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 188 ஏக்கர் நிலப்பரப்புக்கொண்ட லேமன்மோரா தோட்டம் இன்றுவரை 20 வருடங்களாக அவரின் நிர்வாகத்தின் கீழேயே இயங்கிவருகின்றது.

மஸ்கெலியா நகரிலிருந்து 16 கிலோமீற்றர் தொலைவில் மவுசாகலை 320/ஆ கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட லெமன்மோரா தேட்டத்தில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 150இற்கும் மேற்பட்ட மக்கள் தனியார் நிர்வாகத்தின்கீழ் நவீன அடிமைகளாக வாழ்ந்துவரும் அவலம் இடம்பெறுகின்றது.

ஆரம்பத்தில் 188 ஏக்கர் நிலப்பரப்பு முழுவதிலும் தேயிலை பயிரிடப்பட்டு வந்திருந்த போதிலும், பின்னர் நிர்வாகத்தினரால் உரியமுறையில் பராமரிக்கப்படாமல் இருந்து ஏறத்தாழ 38 ஏக்கர் நிலத்திலேயே தற்போது தேயிலை காணப்படுகின்றது. ஏனைய நிலங்கள் தரிசுநிலங்களாகவே காணப்படுகின்றன.

லெமன்மோரா தோட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்களாக 3 ஆண்களும் 8 பெண்களுமே உள்ளனர். ஏனையோர்  கைக்காசு (இச்ண்தச்டூ) முறையில் தொழில்புரிகின்றனர். அவர்களுக்கு குறித்த தோட்டத்தில் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி போன்ற தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திவந்திருந்தபோதிலும், அந்தத் தோட்ட நிர்வாகம் எதனையும் கண்டுகொண்டதாகவும் கண்டுகொள்ளப்போவதாகவும் தெரியவில்லை.

ஊழியர் சேமலாப நிதி என்பது அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வுகால வாழ்க்கையை சிறப்புற அமைத்துக்கொள்வதற்காக ஊழியர்கள் மற்றும் தொழில் வழங்குநர்களின் பங்களிப்புடன் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு திட்டமாகும்.

ஆனால், இந்தத் தோட்ட நிர்வாகம் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிச் சட்டங்களை பின்பற்றியதாகத் தெரியவில்லை. சுமார் 20 வருடங்களாக தொழில்புரிந்து வருபவர்களுக்கு வெறும் இரண்டு இலட்சம் ரூபா மாத்திரமே ஊழியர் சேமலாப நிதியாக வழங்கியுள்ளது. ஊழியர் நம்பிக்கை நிதித் தொடர்பில் தெரியாதவர்களாக லெமன்மோரா தோட்டமக்கள் வாழ்கின்றார்கள்.

2vifodj.jpg

946964_446421905446117_1604765787_n.jpg

 

வாட்ஸ்அப், வைபர், பேஸ்புக் என அறிவியல் உலகில் மூழ்கிக்கிடக்கும் எமது இளைஞர்களுக்கு மத்தியில், முறையான பாடசாலை வசதிகளையோ அல்லது ஆகக்குறைந்தது முன்பள்ளி வசதிகள் எதனையுமே கொண்டிருக்காத இத்தோட்டத்தில் வாழ்கிறார்கள். இளைஞர், யுவதிகள் மற்றும்

சிறுவர்கள் வாழ்கிறார்கள் என்பது கவலையளிக்கிறது.  லெமன்மோராவுக்கு அருகிலுள்ள ஓர் ஊரில் 8 வயது சிறுமியொருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள பெற்றோர்கள் மத்தியில் ஒருவித அச்சநிலைமை உருவாகியுள்ளது. இதனால், லெமன்மோரா மக்களும் தங்களது பிள்ளைகளைத் தொலைவிலுள்ள பாடசாலைகளுக்கு அனுப்புவதற்குத் தயங்கி வருகின்றார்கள். தோட்ட நிர்வாகத்தால் எங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச்சென்று கூட்டிவருவதற்கு ஒரு காவலாளியை நியமிக்கவேண்டும் எனக் கோரப்பட்டுள்ளபோதிலும், நிர்வாகத்தினரால் மறுக்கப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு இங்கு காணப்படும் இரண்டு லயன் குடியிருப்புக்களுக்கான கூரைத்தகடுகளை மாற்றி சீர்செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு இ.தொ.க. தலைவர் முத்துசிவலிங்கம் பிரதியமைச்சராக இருந்த காலத்தில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. "வேல்ட் விஷன்' நிறுவனத்தால் சனசமூக நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டு அதற்கான தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இவைகளே இந்தத் தோட்ட மக்கள் கண்ட அபிவிருத்திகள். இவற்றை  அபிவிருத்தியாகக்கொள்ள முடியாத நிலையில் இவை இரண்டு மட்டுமே தங்களுக்குக் கிடைத்த அபிவிருத்தியாக அந்த மக்கள் பார்க்கின்றனர்.

முறையான போக்குவரத்து வசதிகள் கூட இல்லாத இந்த ஊரில் அவசரத் தேவைகளுக்கு 16 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மஸ்கெலியா வைத்தியசாலைக்கே செல்லவேண்டியுள்ளது. மஸ்கெலியாவுக்கு ஓட்டோவில் சென்று வருவதானால் 1,500 ரூபா  என்பதால் நெஞ்சுவலிகளைக் கூட சிறிய தலைவலிகள் என நினைத்துக்கொண்டு வாழ்வதைத் தவிர, வேறு வழியில்லை என்கிறார்கள் தோட்டவாசிகள்.

மாதச்சம்பளம் கூட 1,500 ரூபாவைத் தாண்டாது என்கிறபோது அவசரநேரங்களில் வைத்தியசாலைக்குச் செல்வது எப்படி?

வறுமையால் இங்குள்ள ஆண்கள் பலரும் தொழில் தேடி கொழும்பு, கண்டி போன்ற வெளிமாவட்டங்களுக்குச் சென்று வருவதால் இங்குள்ள பெண்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. தனியாருக்குச் சொந்தமான தோட்டம் என்பதால் பல்வேறு அபிவிருத்திகளை இருட்டடிப்புச் செய்யும் அரசியல்வாதிகள் அத்தோட்டத்திலுள்ள சுமார் 100 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொள்ள மறக்காமல் தேர்தல் காலங்களில் வந்துசெல்கின்றார்கள்.

இந்த நாட்டில் வாக்குரிமை பெற்ற தோட்டத் தொழிலாளர்களில் வாக்களிக்கும் உரிமையுடையவர்களாக இவர்களும் இருந்துவருகின்றபோதிலும், இவர்களின் உரிமைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுத் தராத அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுகின்றார்கள்.இத்தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு 15 நாட்களுக்கும் குறைவான வேலைகள் வழங்கப்பட்டுவருகின்றன.

பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு நாட்கூலியாக 450 ரூபாவையும், பதிவுசெய்யப்படாத தொழிலாளர்களுக்கு நாட்கூலியாக 500 ரூபாவையும் தோட்ட நிர்வாகம் வழங்குகின்றது. ஏனைய தோட்ட மக்களுக்கு தீபாவளி முற்பணமாக 8,500 ரூபா  வழங்கப்படுகின்றபோதிலும், இத்தோட்ட மக்களுக்கு வெறும் 2,500 முதல் 4,500 ரூபாவே வழங்கப்பட்டுள்ளது. இத்தனை கொடுமைகளுக்கு மத்தியில் வாழும் இந்த மக்களை மேலும் வதைப்பதற்காக அத்தோட்ட நிர்வாகத்தால் பாரிய மாட்டுப்பண்ணை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதனால் அங்குள்ளவர்களுக்கு தொழில்வாய்ப்புகள் கிடைக்கும் என்ற எந்தவொரு உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. அத்தோடு, இந்த மாட்டுப்பண்ணை மக்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கு மேல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. இதனால், அவர்களின் குடிதண்ணீர் வசதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதோடு, குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக தோட்ட மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இவர்களுக்கான நிரந்தரத் தீர்வாக தரிசு நிலங்கள் அங்கு வாழும் மக்களுக்கு குறிப்பிட்ட அளவேனும் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.

இது தொடர்பில் தொழில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளபோதும், உரிமையாளர் வழக்கு தினத்தில் கலந்துகொள்வதில்லை. கடந்த காலத்தில் இதுபோன்ற பிரச்சினை பூதாகரமாக வெளிக்கிளம்பிய சந்தர்ப்பத்தில் அங்கு வாழும் குறிப்பிட்ட 10 பேருக்கு மாத்திரம் ஒரு ஏக்கர் அளவில் வழங்க இணக்கம் தெரிவித்திருந்தபோதும், இதுவரையும் அதற்கான எந்த ஒரு முன்னெடுப்புகளும் இடம்பெறவில்லை.

எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன

எங்கள் இமைகள் கவிந்துள்ளன

எங்கள் உதடுகள் அண்டியுள்ளன

எங்கள் பற்களும் கண்டிப்போயுள்ளன

நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக

எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக

எங்கள் முதுகில் கசையால் அடிக்குக

எங்கள் முதுகுத்தோல்

பிய்ந்துரிந்து போகட்டும்

தாழ்ந்த புருவங்கள் ஒருநாள் நிமிரும்

கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்

இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும்

கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்

அதுவரை நீங்கள் எங்களை ஆள்க

அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக

 என்ற ஈழத்துக் கவிஞரின் கனவு மலையகத்தில்

நனவாகும் நாள் தொலைவில் இல்லை.

 - என்ற ஈழத்து கவிஞரின் கனவு மலயகத்தில் நனவாகும் தொலைவில் இல்லை.

பா.நிரோஸ்

https://www.sudaroli.com/special-articles/item/2507-2017-12-12-06-42-10

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.