Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜே.வி.பி.யும் தேசிய இனப்பிரச்சினையும்

Featured Replies

ஜே.வி.பி.யும் தேசிய இனப்பிரச்சினையும்

 

 
 

ஜே.வி.பி.யும் தேசிய இனப்பிரச்சினையும்

வீரகத்தி தனபாலசிங்கம்  (எஸ்பிரஸ் பத்திரிகை நிறுவனத்தின் ஆலோசக ஆசிரியர்)

ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி)யின் கொள்கை பரப்புச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான  விஜித ஹேரத் சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு  ஆங்கில தினசரியொன்றுக்கு அளித்திருந்த நேர்காணலில்  தெரிவித்த கருத்துக்கள் தேசிய இனப்பிரச்சினைக்கான   அரசியல் தீர்வு தொடர்பில் அவரது கட்சியின் தற்போதைய  நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாக அமைந்திருந்தன.  அதுவும் குறிப்பாக அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்   தருணத்தில் இக்கருத்துக்கள் முக்கிய  கவனத்துக்குரியவையாகின்றன.

இனப்பிரச்சினைக்கான காரணங்கள் தொடர்பில் ஜே.வி.பி.க்கு சொந்த நிலைப்பாடுகள் இருக்கின்றன. அந்தப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு வழி முறையாக அதிகார பரவலாக்கம் நோக்கப்படுவது குறித்தும்  ஜே.வி.பிக்கு சொந்த அபிப்பிராயங்கள் இருக்கின்றன. இந்த விவகாரங்கள் தொடர்பில் தற்போதைய நிலைப்பாடு என்ன என்று ஹேரத்திடம் கேட்கப்பட்டபோது ‘இனப்பிரச்சினைக்கு  மாகாண சபைகள் முறை ஒரு தீர்வு அல்ல என்ற நிலைப்பாட்டில் கட்சி  இப்போதும் உறுதியாகவே இருக்கிறது. நாம் விரும்புகின்றோமோ இல்லையோ  மாகாண சபைகள் ஆட்சி முறை ஒழுங்கின் ஒரு அங்கமாகிவிட்டன. அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகளின்போது அவை தொடர்பில்  பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. முன்னர் தீவிரமான நிலைப்பாடுகளை  எடுத்து சமஷ்டி முறையைக் கோரிய தமிழ்க் கட்சிகள் இப்போது அவ்வாறு செய்வதில்லை. அவை மிதவாதமான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன. இலங்கையில் சமஷ்டி முறையை ஏற்படுத்துவதென்பது  நடைமுறைச் சாத்தியமற்றது. அத்தகையதொரு  பின்புலத்தில் இனப்பிரச்சினை மேலும் மோசமாவதற்கு  இடமளிக்காமல் தற்போதைய மாகாண சபைகள் முறையில்  குறிப்பிட்ட சில மாற்றங்களைச் செய்து தீர்வொன்றைக் காண்பதற்கு ஜே.வி.பி இணங்கும். இந்த நிலைப்பாட்டை  ஏனைய கட்சிகளினாலும் எட்டமுடியுமென்றால் மாற்றங்களைச் செய்வதற்கு ஜே.வி.பி யின் ஒத்துழைப்பு  கிடைக்கும்’ என்று பதிலளித்தார்.

மாகாண ஆளுநர்களின் அதிகாரங்களைக் குறைப்பதை நாம் விரும்பவில்லை. மாகாண சபைகளுக்குரிய காணி மற்றும்   பொலிஸ் அதிகாரங்கள் குறித்து நாம் ஆராய வேண்டிய  தேவை இருக்கிறது. இது விடயத்தில்  விட்டுக்கொடுப்பிற்கு இடமில்லாத கண்டிப்பான நிலைப்பாடொன்றை நாம் எடுத்திருக்கவில்லை. அவ்வாறு நாம் செய்தால் பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டையாகப் போய்விடும். நாட்டுப்பிரிவினைக்கு  இடந்தராத முறையில் மாற்றங்களை அல்லது  திருத்தங்களை எவ்வாறு செய்வதென்று நாம் ஆராய வேண்டியிருக்கிறது. மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண சபைகளுக்குமான அதிகாரங்கள் குறித்த பொதுப்பட்டியல் தொடர்பிலும் இதே அபிப்பிராயத்தையே நாம் கொண்டுள்ளோம். நாம் நெகிழ்வுப்போக்குடனேயே இருக்கிறோம். பொதுப்பட்டியல் இப்போதுள்ளவாறே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று நாம் கூறவில்லை. பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஒரு நடுத்தரமான நிலைப்பாட்டை எட்டுவதற்கு நாம் தயாராயிருக்கிறோம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

jvp-sri-lanka

முன்னர் உங்கள் கட்சி மாகாணசபை முறையை  நாட்டுப் பிரிவினை நோக்கிய ஒரு படிக்கல் என்று கருதியது. இப்போது உங்கள் நிலைப்பாடு என்ன என்று ஹேரத்திடம் கேட்கப்பட்ட  போது, ஆயுதமேந்திய பிரிவினைவாதக் குழுக்கள் செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே மாகாண சபைகளை நாம் அவ்வாறு நோக்கினோம். இன்று உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 9 வருடங்கள் கடந்துவிட்டன. சமுதாயம் மாறிவிட்டது. இறந்துபோன புலிகளையே நாம் தொடர்ந்தும் அடித்துக் கொண்டிருப்போமேயானால், முன்னோக்கிச் செல்ல முடியாது. பிரிவினைவாதிகளின் ஆயுதப்போராட்ட காலத்தில் இருந்ததை விடவும் எமது சிந்தனை இப்போது  வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்று நாம்  நம்புகிறோம். ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் நாம் மாற்றத்தை தழுவியிருக்கிறோம். எமது இந்த மாற்றத்தை  இன்றைய அரசாங்கத்துடனான புரிந்துணர்வின் ஒரு அங்கமாக சிலர் அர்த்தப்படுத்துகிறார்கள். அது உண்மையல்ல. உண்மையில் எமது சிந்தனையில் மாற்றத்திற்கான தேவை குறித்து ‘2009 போர் வெற்றிக்கு பிறகு உடனடியாவே நாம் ஆராய்ந்தோம்’ என்று தெரிவித்திருந்தார்.

ஜே.வி.பி யின் கொள்கை பரப்புச்செயலாளர்   அளித்திருக்கும் இந்த விளக்கங்கள் தேசிய   இனப்பிரச்சினை தொடர்பிலும் அதற்கான அரசியல் தீர்வு  தொடர்பிலும்   அவரது  கட்சியின்  முன்னைய நிலைப்பாடுகளில் இருந்து ஏதாவதுஅடிப்படையான மாற்றத்தை  பிரதிபலித்து நிற்கின்றனவா என்பதே இங்குள்ள  கேள்வியாகும். பிரிவினைவாதிகளின் ஆயுதப்போராட்ட காலத்தில் தங்களிடம் இருந்த சிந்தனையையும் விட வேறுபட்ட சிந்தனையே போரின் முடிவுகளுக்குப் பின்னரான இன்றைய காலகட்டத்தில் தேவை என்று  கூறுகின்ற ஹேரத், இனப்பிரச்சினைக்கு  அரசியல் தீர்வொன்றை காண வேண்டிய அவசியம் தொடர்பில்  தென்னிலங்கை மக்கள் மத்தியில் சிந்தனை மாற்றம்   ஏற்படுத்துவதற்காக ஜே.வி.பி. செய்திருக்கக்கூடிய   அரசியல் செயற்பாடுகள் எவை என்பதை விளக்கவில்லை. ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் மாற்றத்தை தழுவியிருப்பதாக கூறுகின்ற அவர் அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்காக பூர்த்தி செய்யப்பட வேண்டியவையாக இருக்கும் தமிழ் பேசும் மக்களின்  நியாயபூர்வமான  அரசியல் அபிலாசைகளில்  குறைந்தபட்சமானவை தொடர்பில் கூட தங்களது முன்னைய நிலைப்பாடுகளுக்கும் தற்போதைய  நிலைப்பாடுகளுக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது என்று நம்பக்கூடியதாக  நேர்காணலில் கருத்துக்களை முன்வைத்ததாகத் தெரியவில்லை.

vijitha herath

இனப்பிரச்சினை தொடர்பிலான ஜே.வி.பி. யின் முன்னைய கொள்கை நிலைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு  நோக்கும்போது மாகாண சபைகள் முறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய அவசியம் குறித்த அவரின் கருத்துக்கள் மாகாண சபைகளின் அதிகாரங்களை  அதிகரிப்பதை விரும்பும் தொனியில்  அமைந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது.

ஜே.வி.பி. யின் அரை நூற்றாண்டுக்கும் அதிகமான கால வரலாறு இனப் பிரச்சினைக்கான அரசியல்  தீர்வு தொடர்பிலான நிலைப்பாட்டை பொறுத்தவரை தமிழ்பேசும் மக்களின் நியாய பூர்வமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அதிகாரப் பரவலாக்க ஏற்பாடு  எதையும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாத தென்னிலங்கை  அரசியல் கட்சிகளில் ஒன்று என்றே அதை அடையாளப்படுத்தி நிற்கிறது. கடந்த நூற்றாண்டின் பின் அரைக்கூறில் இரு ஆயுதக் கிளர்ச்சிகளை நடத்திய ஜே.வி.பி  தன்னை மார்க்ஸிஸ – லெனினிஸ கோட்பாடுகளை பின்பற்றுகின்ற ஒரு அரசியல் சக்தியென்று உரிமைகோரிக் கொள்கின்ற போதிலும், தேசிய சிறுபான்மையினங்களின்  பிரச்சினைகள் தொடர்பில் முற்போக்கான கொள்கை ஒன்றைக் கொண்டிருந்ததில்லை என்பதே உண்மையாகும்.

1960 களின் பிற்பகுதியில் ஜே.வி.பி அதன் தோற்றத்தின் போது உறுப்பினர்கள் மத்தியில் பிரபல்யப்படுத்திய ஐந்து அரசியல் வகுப்புக்களில் ஒன்று தமிழர்களுக்கு எதிரானது,  அதுவும் குறிப்பாக மலையக இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் பகடைக் காய்களாகக் காண்பிக்கும் நோக்கிலானது என்று அரசியல்  வரலாற்றியலாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். 1971 ஏப்ரலில் ஜே.வி.பி. கிளர்ச்சியின்போது  தமிழ் பகுதிகளில் எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லை என்பதுடன்  அக்கட்சியின் தலைவர்களில் குறிப்பிடத்தக்கதாக  தமிழர் எவரும் இருந்ததில்லை.

ஜே.வி.பி. அதன் வரலாற்றில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு அரசாங்கங்களினால்  முன்னெடுக்கப்பட்டிருக்கக்கூடிய எந்தவொரு  முயற்சியையும் ஆதரித்ததில்லை. 1957 ஆம் ஆண்டில் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகமும்  உடன்படிக்கையில் கைச்சாத்திட்டபோது (பண்டா–செல்வா ஒப்பந்தம்) ஜே.வி.பி தோற்றம் பெற்றிருக்கவில்லை. ஆனால்,  அதன் ஸ்தாபக தலைவரான ரோஹண விஜயவீர ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்தில் 1966 ஆம் ஆண்டில் பிரதமர் டட்லி சேனாநாயக்கவும்  செல்வநாயகமும் கைச்சாத்திட்ட  ஒப்பந்தத்தை  (டட்லி–செல்வா ஒப்பந்தம்) எதிர்த்து ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியும்  பிரதான இடதுசாரி கட்சிகளான லங்கா சமசமாஜ கட்சியும்  கம்யூனிஸ்ட் கட்சியும் தலைநகர் கொழும்பில் நடத்திய  ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டார்.  என்.சண்முகதாசன் தலைமையிலான  சீனச் சார்பு  கம்யூனிஸ்ட் கட்சியின்  இளைஞர் கழகத்தின் முக்கிய  தலைவராக இருந்த விஜயவீர அந்த ஊர்வலத்தில் உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கக் கூடாது என்று கட்சி  எடுத்த முடிவை மீறியே அவ்வாறு செய்தார். இலங்கை தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த தேசிய மட்டத்திலான மிகச்சில அரசியல் தலைவர்களில் ஒருவரான சண்முகதாசனின் இனத்துவ அடையாளம் கட்சியை பிளவுபடுத்துவதற்கு விஜயவீரவினால் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டது. இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட, தனது அரசியல் வாழ்க்கையை கம்யூனிஸ்ட் கட்சியில் சண்முகதாசனின் தலைமைத்துவத்தின் கீழேயே ஆரம்பித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை தூக்கியெறிவதற்காக ஜே.வி.பி. 1971 ஏப்ரலில் ஆரம்பித்த ஆயுதக் கிளர்ச்சி கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டது. ஜே.வி.பி.யின் தலைவர்கள் நீதி விசாரணைகளுக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்கள். விஜயவீரவுக்கு ஆயுட்காலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு 1977 ஜூலை பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையில் பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் சிறையில் இருந்து ஜே.வி.பி.யினரை விடுதலை செய்தது. விடுதலைக்குப் பிறகு சில வருடகாலம் ஜனநாயக அரசியலில் ஈடுபட்ட ஜே.வி.பி இனவாத அரசியலைக்  கைவிட்டது போலத் தோன்றியது. 1982 அக்டோபர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட விஜயவீர பிரசாரத்துக்காக யாழ்ப்பாணத்துக்குச் சென்று தமிழர்களின்  உரிமைக்கோரிக்கைகளை ஆதரித்தார்.

ஆனால், இந்த நிலைமை 1983 ஜூலையில் நாடு பூராவும் தமிழர்களுக்கு  எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவாத  வன்செயல்களுக்குப் பிறகு முற்றாகவே மாறியது.

Rohana

அந்த வன்செயல்களுக்கு அரசாங்க சார்பு சக்திகளே பொறுப்பு என்ற உண்மையை மக்களிடமிருந்து மறைக்கும் ஒரு வஞ்சகத்தனமான நடவடிக்கையாக ஜெயவர்தன அரசாங்கம் இடதுசாரி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமஜமாஜ கட்சி மற்றும் ஜே.வி.பி.யை  தடை செய்தது.  கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை சில மாதங்களிலும் நவ சமஜமாஜ கட்சி மீதான தடை ஒருவருடத்துக்குப் பின்னரும்  நீக்கப்பட்டபோதிலும், புரிந்துகொள்ள முடியாத சில காரணங்களுக்காக ஜே.வி.பி. மீதான தடை தொடர்ந்தது.

தலைமறைவாக இயங்கிய அந்தக் காலகட்டத்தில் தான் ஜே.வி.பி. மீண்டும் அதன் இனவாத அரசியலுக்குத் திரும்பியது. சிங்களக் கட்சிகள் மத்தியில் மிகவும்  கடுமையான  இனவாத கட்சியாக வெளிக்கிளம்பிய  ஜே.வி.பி. தமிழ் தீவிரவாதிகளின் ஆயுதப் போராட்டத்துக்கான எதிர்வினையாக அரசாங்கத்தினாலும் வெகுஜன ஊடகங்களினாலும் கிளப்பிவிடப்பட்ட பேரினவாதத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது.  ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரானதாக இருந்த  அதேவேளை, தமிழர்களுக்கு எதிரான பேரினவாத  இயக்கத்துக்கு ஜே.வி.பி. தத்துவார்த்த தலைமைத்துவத்தை  வழங்கியது எனலாம். சுதந்திர இலங்கையில் அரசுக்கு  எதிரான இரு ஆயுதக் கிளர்ச்சியை நடத்திய ஜே.வி.பி. ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ் தீவிரவாத இயக்கங்களின்  ஆயுதப் போராட்டத்துக்கான எதிர்ப்பைப் பொறுத்தவரை  சித்தப்பிரமை பிடித்ததுபோன்று நடந்துகொண்டது. ஜே.வி.பி.யை பெரும்பான்மைச் சமூகத்தின் மிகவும்  பின்தங்கிய–  குறுகிய சிந்தனை போக்குடைய–   வெளிநாட்டவர் மீது பீதியுணர்வைக் கொண்ட பிரிவினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் இயக்கம் என்று அந்த நேரத்தில் முன்போக்குச் சிந்தனையுடைய அரசியல்  அவதானிகள் வர்ணித்தார்கள். தமிழர்களின்  போராட்டத்தை மிகவும் நாகரிகமற்ற முறையில்  கையாளுவதற்கு ஜே.வி.பி. விரும்பியது.

ஜே.வி.பி. அதன் முன்னைய ஜனநாயக செயற்பாட்டு காலகட்டத்தில் கூட, இனப்பிரச்சினைக்கு   தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை ஒருபோதும் ஆதரித்ததில்லை. ஜெயவர்தன அரசாங்கம் மாகாண சபைகள் முறையை அறிமுகம் செய்தபோது ஜே.வி.பி. அதை கடுமையாக எதிர்த்து தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தது. 1987 ஜூலையில்  இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் இந்திய– இலங்கை சமாதான உடன்படிக்கையை செய்துகொண்டபோது ஜே.வி.பி. தலைமறைவு இயக்கமாக இருந்தபோதிலும், தென்னிலங்கையை இரத்தக் களரியாக்கியது. அந்தக் கட்டத்தில் அதன் இந்திய விரோத அரசியல்  உச்சக்கட்டத்துக்குச் சென்றிருந்தது. சமாதான  உடன்படிக்கைக்குப் பிறகு அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தையடுத்து மாகாண சபைகள் முறை  அறிமுகப்படுத்தப்பட்டபோது அதை கடுமையாக எதிர்த்த ஜே.வி.பி. சமாதான உடன்படிக்கையையும் மாகாண சபைகள் முறையையும் ஆதரித்த தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலரை கொலை செய்தது. இதில்  முன்னாள் ஜனாதிபதி திருமதி.சந்திரிகா பண்டார நாயக்கவின் கணவர் விஜே குமாரதுங்க முக்கியமானவர்.

ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சியின் முதல் வருடத்திலேயே ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி  மிகவும் கொடூரமான முறையில் நசுக்கப்பட்டது.  தென்னிலங்கை படுமோசமான  அரச அடக்கு முறையைக் கண்டது.

ஆயிரக்கணக்கில் இளைஞர்கள்  கொல்லப்பட்டார்கள். விஜயவீரவும் அவரது முக்கிய சகாக்களும்  கொல்லப்பட்டனர். அதற்குப் பிறகு ஐந்து வருடங்கள்  ஒருவித அரசியல் உறங்கு நிலையில் இருந்த கட்சி மீண்டும் 1994 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜனநாயக  அரசியல் செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தியது. திருமதி குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் ஜே.வி.பி.யினர் மாகாணசபை தேர்தல்கள் உட்பட சகல தேர்தல்களிலும் போட்டியிட ஆரம்பித்தனர். இந்த நூற்றாண்டின்  தொடக்கத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்  நிர்வாகம் நோர்வே அனுசரணையுடன் முன்னெடுத்த  சமாதான முயற்சிகளுக்கு எதிராக தென்னிலங்கையில் முடுக்கிவிடப்பட்ட இனவாத அரசியல் போராட்டங்களின்  முன்னரங்கத்தில் நின்று ஜே.வி.பி. செயற்பட்டது. சமாதான முயற்சிகளுக்கு எதிரான பிரசாரங்கள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு எதிராக  தென்னிலங்கையில் மக்கள் மத்தியில்  முன்னென்றுமில்லாத உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.

ஒரு கட்டத்தில்  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன்  கூட்டணியை ஏற்படுத்திக்கொண்ட ஜே.வி.பி. திருமதி குமாரதுங்க தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திலும் பங்கேற்றது. அதன் முக்கிய  தலைவர்கள் அமைச்சுப் பதவிகளையும் ஏற்றுக்கொண்டனர். சுனாமி அனர்த்தத்துக்குப் பிறகு வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவேண்டிய மனிதாபிமான மற்றும்  புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் ஏற்பாடொன்றை  வகுத்துக்கொள்வதற்காக திருமதி குமாரதுங்க அரசாங்கம் விடுதலை புலிகளையும் சம்பந்தப்படுத்தி நடத்திய பேச்சுவார்த்தைகளை ஆட்சேபித்து அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய ஜே.வி.பி. பிறகு 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான  முயற்சிகளுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை  முன்னிலைப்படுத்தி பிரசாரங்களைச் செய்து போட்டியிட்ட மகிந்த ராஜபக் ஷவை ஆதரித்தது.

ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் பங்கேற்கவில்லையாயினும், அந்த அரசாங்கம் விடுதலை  புலிகளுக்கு எதிராக முழு மூச்சாக முன்னெடுத்த போரை  ஜே.வி.பி. ஆதரித்தது.

jvpmahinda

பிறகு ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள், அதிகார துஷ்பிரயோகங்கள், சட்டத்தின் ஆட்சியின் சீர்குலைவு மற்றும் குடும்ப அரசியல் ஆதிக்கத்துக்கு எதிரான இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்ட ஜே.வி.பி. 2010 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளரான   மைத்திரிபால சிறிசேனாவையும் ஆதரித்தது.

ஜனாதிபதி சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான தேசிய ஐக்கிய  அரசாங்கத்துக்கு ஆரம்பத்தில் விமர்சன ரீதியான ஒத்துழைப்பை வழங்கிய ஜே.வி.பி. இப்போது  அரசாங்கத்தின் போக்கு தொடர்பில் அதிருப்தியற்று கடுமையாகக் கண்டிக்கத் தொடங்கியிருக்கிறது என்றாலும்,  அரசியலமைப்பு சீர்திருத்தச் செயன்முறைகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்கிவருகிறது.

ஜே.வி.பி.யின் மேற்படி வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அக்கட்சி இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வைக் காண்பதை ஆதரிக்கின்ற சக்திகளின் அணியில், சிறுபான்மை தேசிய இனங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை ஏற்றுக்கொள்கின்ற அரசியல் சக்திகளின் அணியில்   ஒருபோதும் நின்றதில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

அரசியல் இணக்கத் தீர்வுக்கான  முயற்சிகளை ஆதரித்து நின்ற முற்போக்குச் சக்திகளுடன் ஜே.வி.பி. தன்னை  அடையாளப்படுத்தியதைக் காணமுடியவில்லை.

தற்போது புதிய தலைமைத்துவத்தின் கீழ் செயற்படுகின்ற ஜே.வி.பி. இனப்பிரச்சினை தொடர்பான அதன் வரலாற்று ரீதியான தவறான  போக்கில் இருந்து முற்றிலும் விலகி அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் ஊடாக அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு தென்னிலங்கை சிங்கள மக்களின்  ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்றுக்கொடுக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதற்கு தன்னைத் தயார்படுத்த வேண்டும்.கொள்கை பரப்புச் செயலாளர் நேர்காணலில் கூறிருக்கும் சிந்தனை மாற்றம் இதைப் பிரதிபலிப்பதாக அமைந்தால் மாத்திரமே ஜே. வி.பி யினால் உருப்படியான பங்களிப்பை  செய்யக்கூடியதாக இருக்கும்.

http://www.samakalam.com/blog/ஜே-வி-பி-யும்-தேசிய-இனப்பி/

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நவீனன் said:

ஜே.வி.பி.யும் தேசிய இனப்பிரச்சினையும்

. விடுதலைக்குப் பிறகு சில வருடகாலம் ஜனநாயக அரசியலில் ஈடுபட்ட ஜே.வி.பி இனவாத அரசியலைக்  கைவிட்டது போலத் தோன்றியது. 1982 அக்டோபர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட விஜயவீர பிரசாரத்துக்காக யாழ்ப்பாணத்துக்குச் சென்று தமிழர்களின்  உரிமைக்கோரிக்கைகளை ஆதரித்தார்.

 

Rohana

 

காலப்பொருத்தமான கருத்துகள் முன்வைக்கப்பட்டு சூட்டோடு சூடாகச் சுட்டுதல் அவசியமானது. கட்டுரையாளருக்கு நன்றி. இணைத்தவருக்கும் நன்றி

1982லே கிளிநொச்சியிலே தேர்தற் பரப்புரையிலே அவர்கள் தெளிவாகவே தாமொரு இனவாதக்கட்சியென உரைத்துள்ளார்கள். அதாவது ஒரே நாடு ஒரே தேசம். தமிழரது உரிமை மறுப்பின் அன்றைய கோசமே  இன்றைய மைத்திரி மகிந்த சந்திரிகா ரணில் சுமந்திர சம்பந்த எனத் தொடர்கிறது.  இன்றைய உள்ளுராட்சித் தேர்தலை இலக்குவைத்து முன்வைக்கும் கருத்தகளேயன்றி வேறில்லை. இவர்கள் ஆயுதக்குழுக்கள் இருந்தகாலத்தில் ஏன் ஒரு நியாயமான அரசியல் தீர்வுக்கு முன்வரவில்லை. தமிழரது அபிலாசைகளை  உள்வாங்கி ஒரு தீர்வை முன்வைத்திருப்பின் ஆயுதப்போராட்டத்தை இந்த மக்களே ஆதரித்திருக்கமாட்டார்கள் என்பதைக்கூடவா ம.வி.மு புரிந்துகொள்ள முடியவில்லை. வெறும் வெற்றுக்கூச்சலாக மாக்ஸ்ஸையும் லெனினையும் சொல்வதில் அர்த்தமில்லை. 

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.