Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரைப்பட விமர்சனம்: பத்மாவத்

Featured Replies

திரைப்பட விமர்சனம்: பத்மாவத்

திரைப்பட விமர்சனம்: பத்மாவத்

அவதி ராஜ்ஜியத்தைச் சேர்ந்த சூஃபி கவிஞரான மாலிக் முகமது ஜயஸி எழுதிய 'பத்மாவத்' என்ற காப்பியத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படம். 1540ல் எழுதப்பட்ட இந்தக் காப்பியம், 13ஆம் நூற்றாண்டில் தில்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜியையும் தற்போதைய ராஜஸ்தானில் உள்ள சித்தோட் ராஜ்ஜியத்தையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.

 
படம் பத்மாவத்
   
நடிகர்கள் தீபிகா படுகோன், ஷாஹித் கபூர், ரண்வீர் சிங், அதிதி ராவ், ஜிம் ஷர்ப்
   
ஒளிப்பதிவு சுதீப் சாட்டர்ஜி
   
இசை சஞ்சித் பலரா, சஞ்சய் லீலா பன்சாலி
   
இயக்கம் சஞ்சய் லீலா பன்சாலி

13ஆம் நூற்றாண்டில் சிங்கள தேசத்திற்குச் செல்லும் மேவாடின் அரசன் ரத்தன் சிங், அந்நாட்டு இளவரசியான பத்மாவதியைக் காதலித்து, திருமணம் செய்து நாடு திரும்புகிறான். அதே நேரம், தில்லியில் சுல்தான் வம்சத்தை நிறுவிய ஜலாலுதீன் கில்ஜியை கொலைசெய்துவிட்டு, தானே சுல்தானாகிறான் அலாவுதீன் கில்ஜி. அப்போது ரத்தன் சிங்கால் ஒரு தவறுக்காக நாடுகடத்தப்பட்ட ராஜகுரு ராகவ் சேத்தன், பழிவாங்கும் எண்ணத்தில் அலாவுதீன் கில்ஜியைச் சந்தித்து பத்மாவதியின் அழகைப் பற்றிச் சொல்கிறான்.

இதனால், மேவாட் மீது படையெடுக்கும் அலாவுதீன் கில்ஜி, ரத்தன் சிங்கைச் சிறைப்படித்துச் செல்கிறான். தில்லி சென்று சூழ்ச்சியால் அவனை மீட்டுவருகிறாள் பத்மாவதி.

PADMAVATI

ரத்தன் சிங் மேவாடில் இல்லாத நேரத்தில் பத்மாவதியை மணக்க விரும்புகிறான் கும்பனேரின் அரசனான தேவ்பால். தில்லியிலிருந்து திரும்பும்போது இதனைக் கேள்விப்படும் ரத்தன் சிங், தேவ்பாலுடன் துவந்த யுத்தத்தில் ஈடுபடுகிறான். இதில் இருவருமே மடிகிறார்கள். ரத்தன் சங்கின் சதியில் விழுந்து உயிரிழக்கிறாள் பத்மாவதி. இதற்கிடையில் பத்மாவதியை அடையும் நோக்கத்தோடு மீண்டும் மேவாடின் மீது படையெடுக்கிறான் அலாவுதீன்.

அவனுடன் ரஜபுத்திரப் படைகள் போரிட்டுக்கொண்டிருக்கும்போது, கூட்டம் கூட்டமாக தீயில் இறங்கி மடிகிறார்கள் ராஜபுத்திரப் பெண்கள். போரில் வென்றாலும் அலாவுதீன் நினைத்தது நடக்காமல் போகிறது என்பதுதான் பத்மாவதி காவியத்தின் கதை.

ஆனால், இந்தப் படத்தின் முடிவில் ரத்தன் சிங், கும்பனேரின் அரசனுடன் சண்டையிட்டு மடிவதற்குப் பதிலாக அலாவுதீன் கில்ஜியுடன் சண்டையிட்டு மடிவதாகவும் அலாவுதீன் கில்ஜியின் கையில் கிடைக்காமல் போவதற்காக பெண்கள் அனைவரும் தீயில் விழுந்து உயிரிழப்பதாகவும் படத்தை முடித்திருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி.

சஞ்சய் லீலா பன்சாலியின் படங்களுக்கே உரிய பிரம்மாண்டம், துல்லியமான காட்சிப்படுத்தல்கள், சிறப்பான ஒளிப்பதிவு, இசை ஆகிய அம்சங்கள் இந்தப் படத்திலும் உண்டு.

மேவாடின் கோட்டை, அரண்மனைகள், கில்ஜியின் அரண்மனை, போர்க்களக் காட்சிகள் என்று நம்மை காலம்கடத்தி 13ஆம் நூற்றாண்டில் உலவச் செய்கிறார் பன்சாலி. இதற்காக கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதே தெரியாமல் இருப்பது, படத்தை வெகுவாக ரசிக்கவைக்கிறது.

PADMAVATIபடத்தின் காப்புரிமைPADMAVATI

நாயகியாக வரும் தீபிகா படுகோன், ரத்தன் சிங்காக வரும் ஷாகித் கபூர், அலாவுதீன் கில்ஜியாக வரும் ரண்வீர் சிங் ஆகியோர் பாத்திரங்களுக்குச் சரியான தேர்வாகப் பொருந்துகிறார்கள். குறிப்பாக ரண்வீன் சிங் வெகுவாக ரசிக்கவைக்கிறார்.

சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் ஓடக்கூடிய இந்தப் படம், சலிப்புத்தட்டவில்லை என்றாலும் படத்தின் பல காட்சிகள் பிரதான கதையோடு ஒட்டாதவை. அதேபோல ஒரு சில பாடல்களும் படத்தின் வேகத்தைத் தடைசெய்கின்றன.

பன்சாலியின் முந்தைய படமான பாஜிராவ் மஸ்தானி படத்தை ஒரு கிளாசிக் என்று சிலர் குறிப்பிடக்கூடும். ஆனால், பத்மாவத் படத்தைப் பொறுத்தவரை, பல பிற்போக்கான கருத்துக்களை விதந்தோதும் ஒரு சாகஸம் என்று மட்டுமே சொல்ல முடியும்.

இந்தப் படத்தைப் பார்க்கும் ஒருவர், ஏன் இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன என்று ஆச்சரியமடையக்கூடும். இந்தியக் கலாசாரம் என்று எந்த அம்சங்களையெல்லாம் இந்து அமைப்புகள் முன்வைக்கின்றனவோ அவற்றில் பலவற்றை இந்தப் படமும் முன்னிறுத்துகிறது.

PADMAVATIபடத்தின் காப்புரிமைPADMAVATI

கணவர் இறந்த பிறகு அவரது சிதையிலேயே மனைவியும் குதித்து உயிரிழக்கும் சதி வழக்கத்தை ஆதரிக்கும் நோக்கம் இந்தப் படத்திற்கு இல்லை என படம் துவங்கும் முன்பாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், படத்தின் உச்சகட்ட காட்சியாக, அலாவுதீன் கில்ஜி பத்மாவதியை அடையும் முன்பு அவள் தீயில் இறங்கி உயிர்துறக்கிறாளா என்பதுதான் மனம் பதைபதைக்க காட்டப்படுகிறது.

வெகு நீளமாக, நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தும் விதத்தில் இந்தக் காட்சி, படத்தின் துவக்கத்தில் சொல்லப்படும் அறிவிப்புக்கு மாறாக அமைகிறது.

முப்பரிமாணத்தில் திகைக்க வைக்கும் தொழில்நுட்பத்துடன் வெளியாகியிருக்கும் பத்மாவத் படத்தை, ஒரு வரலாற்று சாகசமாக மட்டும் பார்த்தால், குறிப்பிடத்தக்க படம்தான். ஆனால், அப்படி மட்டும் பார்க்க முடியுமா என்பதுதான் கேள்விக்குறி.

http://www.bbc.com/tamil/arts-and-culture-42799684

  • தொடங்கியவர்

வரலாறு, அரசியல், பிரமாண்டம் ... இவற்றுக்கிடையே 'அது தேவையா’?! - 'பத்மாவத்' விமர்சனம் #Padmaavat

 
 

பல்வேறு எதிர்ப்புகள் தடை முயற்சிகளுக்குப் பிறகு வெளியாகியிருக்கிறது ‘பத்மாவத்’ திரைப்படம். 'பத்மாவத்' எனும் காவிய நூலைத் தழுவி படம் எடுக்கப்பட்டிருப்பதாக தொடக்கத்தில் குறிப்பிடப்படுகிறது. படத்தின் பொறுப்புத் துறப்பு வரிகள், ‘படம் எந்த ஒரு வரலாற்றையும் சம்பவத்தையும் பண்பாட்டையும் மனிதர்களையும் பெயர்களையும் குறிப்பிடவில்லை’ என்கிறது. அதுவே, படத்தைக் கூடுதல் கவனத்தோடு பார்க்கச் செய்கிறது.

பத்மாவத்

 

படத்தின் விமர்சனத்துக்குள் போவதற்கு முன், படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியைப் பாராட்டியே ஆகவேண்டியிருக்கிறது. தான் ஒரு ரசனைமிகு கலைஞன் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் ஓவியம்போல அத்தனை அழகு. கலை இயக்கமும், இசையும் கைகொடுக்க, கண்கொள்ளாக் காட்சிகளாக ஒவ்வொரு காட்சியையும் இழைத்து இழைத்துப் படைத்திருக்கிறார் சஞ்சய்.

பத்மாவதி ஒரு சிங்கள இளவரசி. மனைவியின் கோபத்தின் பொருட்டு முத்துக்களுக்காக சிங்களம் செல்லும் ராஜஸ்தானின் சித்தூர் பிரதேச அரசன் ரத்தன் சிங், காட்டில் பத்மாவதியைச் சந்திக்கிறான். இருவருக்குள்ளும் காதல் உருவாக, பத்மாவதியை இரண்டாவது மனைவியாக மணந்து உடன் அழைத்துச் செல்கிறான். ஒரு சம்பவத்தில் அரண்மனை ராஜகுரு சித்தூரிலிருந்து நாடுகடத்தப்பட, பத்மாவதி ‘காரண’மாகிறாள். அரசனைக் கொன்று தனக்குத்தானே முடி சூட்டிக்கொண்டு ஆண்டுவரும் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியினைச் சந்திக்கிறான் ராஜகுரு. பத்மாவதியையும் சித்தூர் சாம்ராஜ்ஜியத்தையும் பழிவாங்கும் நோக்கத்தோடு கில்ஜியிடம், ‘பத்மாவதியின் அழகைக் குறித்தும், அவள் உடனிருந்தால் இன்னும் பல ராஜ்ஜியங்களை நீ அடைய முடியும்’ எனவும் பொய் ஆருடம் சொல்கிறான் ராஜகுரு. அதை நம்பி பத்மாவதியைத் தேடி சித்தூருக்குப் படையெடுத்து வருகிறான் அலாவுதின் கில்ஜி. கில்ஜி சித்தூர் அரசனை வென்றானா? பத்மாவதியை அடைந்தானா? ராஜகுருவின் சதிச்செயல் வெற்றிபெற்றதா? என்பதைக் கலையழகும் பிரமாண்டமுமாய் காட்சிப்படுத்தியிருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி.

பத்மாவதியாக அழகின் கம்பீரம் காட்டுகிறார் தீபிகா படுகோனே. ராஜ உடைகளும் நடையும், கில்ஜி காதல் வெறிகொண்டதற்கு நியாயம் சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. அலாவுதின் கில்ஜியாக மிரட்டும் ரன்வீர் சிங், படம் முழுவதும் வியாபித்துக் கலக்குகிறார். அதிகார மமதையையும், தீராப் பெண்ணாசையையும் சிறிய உடலசைவில்கூடக் காட்டியிருக்கும் அவரது நடிப்புக்கு விருதுகள் நிச்சயம். அதுவும் ‘கரை புரண்டோடுதே கனா’ என்ற பாடலில் ஒரு ஆட்டம் போடுகிறார் பாருங்கள்... வாவ்! நிதானமான ரத்தன் சிங்காக ஷாஹித் கபூர், தேசம் ஒருபுறம், மனைவி பத்மாவதி மீதான பாசம் மறுபுறம் என்று உணர்ச்சிகளைக் கண்களிலேயே வரைகிறார். கில்ஜியின் மனைவி மெஹ்ருன்னிசாவாக வரும் அதிதி ராவ் உணர்வற்ற நிலைத்த பார்வையால், கண்ணீரால், மௌனத்தால் தனியே கதை சொல்கிறார்.

திரைக்கதை, கதாபாத்திரத் தேர்வு, தொழில்நுட்பம் எனக் கச்சிதமாக படத்தின் அடிப்படைகளை உருவாக்கியிருக்கிறார்கள். ஓர் அரச கதைக்கான பின்னணி இசையைக் கொடுத்து படத்தின் ஆதார பலமாக நிற்கிறார், இசையமைப்பாளர் சஞ்சித் பல்ஹாரா. இயக்கம், இசை என இரண்டிலும் இந்த முறையும் அசத்தியிருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி.

Padmavat

பாலைவனம், நீண்ட கோட்டை மதிற்சுவர்கள், பெரிய அரண்மனைகள், சிங்களக் காடு, ராஜ படுக்கை அறை, போர்ப்படை அணிவகுப்பு, போர்க்களம்... எனக் கலையிலும் ஒளிப்பதிவிலும் கவனமாக அழகாக உழைத்திருக்கிறார்கள். அவ்வளவு டீட்டெய்லிங். திரையின் ஓர் ஓரத்தில் தெரியும் ஓவியத்தில்கூட நுட்பமான கலைத்தன்மை. ஒளிப்பதிவு சுதீப் சட்டர்ஜி, ஒவ்வொரு ஃபிரேமிலும் அத்தனை துல்லியம். ஒலிக்கலவை (Sound Mixing) படத்தில் மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறது. அரண்மனையில் அத்தனை பெண்கள் நடக்க, அவர்களின் நடை ஆகட்டும், ஷாஹித்தும் - ரன்வீரும் மோதிக்கொள்ளும் காட்சி ஆகட்டும் ஒலியின் துல்லியம் அபாரம். ஆடை வடிவமைப்பு, ஒப்பனை படத்திற்குக் கூடுதல் பலம். போர்க்களப் புழுதிக்குள் கில்ஜி நுழைவது, எதிரியின் தலைகுத்தப்பட்ட ஈட்டியோடு புழுதிக்குள்ளிருந்து வெளியே வருவது என இரண்டே ஷாட்டில் ஒரு போரைக் காட்டிய விதத்தில் எடிட்டர் மிளிர்கிறார். 3டி-க்கான விஷயங்கள் படத்தில் மிகக்குறைவே!

படத்தில், போருக்குப் புறப்படும் ரத்தன் சிங்குக்குத் தன் கையால் தலைப்பாகை அணிவித்து, ஊசிநூலால் அதைத் தைத்துக்கொண்டிருப்பாள் பத்மாவதி. கிட்டத்தட்ட அதே பாசத்தோடு உழைத்திருக்கிறார்கள், காஸ்ட்யூம் டிசைனர்கள். சிங்களம், மேவாட், டெல்லி என்று அனைத்து வகை உடையலரங்காரமும் தனித்துத் தெரிகிறது. தீபிகாவின் உடைகள், மற்ற அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல இருக்கிறது. 

கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, ‘சுல்தான் ஆவதற்கு நோக்கமும், கழுத்தும் வலிமையாக இருக்கவேண்டும்’ என்று கில்ஜி சொல்கிற இடம், தனது அடிமையான மாலிக்கிடம் கையை நீட்டி, ‘என் உள்ளங்கைகளைப் பார் மாலிக்... இதில் காதலுக்கான ரேகை இல்லையா’ என்று கேட்கிற இடம் எனப் பல முக்கியக் காட்சிகளில் கச்சிதமான வசனம். 

படத்தில், 'அழகு என்பது என்ன' என்ற கேள்விக்கு, 'அது பார்ப்பவர்களின் கண்களைப் பொறுத்தது' என்ற வசனம் வரும். அதேபோல், இந்தப் படம் என்னமாதிரியான அரசியலைப் பேசுகிறது என்பதும் பார்வையாளர்களைப் பொறுத்ததே. இது ஒரு வரலாற்றுப் புனைவு. ரசிகர் மனநிலையில் ஒரு சினிமாவாகப் பார்த்தால், 'பத்மாவத்' பிரமிக்க வைக்கும் படைப்பு. அதேவேளை, படத்தில் பேசப்பட்டிருப்பதை நிகழ்கால அரசியலோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், 'இது இப்போது தேவைதானா' என்பதோடு, பல்வேறு கேள்விகளும் எழுகின்றன. வரலாற்றுப் புனைவுதான் என்றாலும், சில யதார்த்த மீறல்களும் நெருடுகின்றன. இங்கேதான், 'பத்மாவத்' விவாதத்திற்குரிய படமாக மாறுகிறது. விரிவாகப் பேசவேண்டிய விசயங்களும் நிறையவே இருக்கின்றன.

 

திரையில் மட்டுமே பார்த்து ரசிப்பதற்கான பிரமாண்ட, கவித்துவமான, நுட்பமான காட்சிகளைக்கொண்ட விதத்தில் ‘பத்மாவத்’ தவிர்க்க முடியாத காட்சி அனுபவம்.

https://cinema.vikatan.com/movie-review/114444-padmavath-movie-review.html

  • தொடங்கியவர்

ஒரு பெண்ணின் பார்வையில் 'பத்மாவத்' திரைப்படம்

 

சர்ச்சைகளை ஏற்படுத்திய பத்மாவத் திரைப்படத்தில் அரசி பத்மாவதி சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் ஆழமான கவலைகளை ஏற்படுத்துகிறது.

தீபிகாபடத்தின் காப்புரிமைVIACOM18MOTIONPICTURES Image captionபத்மாவதியாக திரையில் தோன்றும் தீபிகா படுகோன்

பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய பத்மாவத் திரைப்படத்தை பார்த்துவிட்டு திரையரங்கில் இருந்து வெளியே வரும்போது தீக்குள் நிற்பதைப் போல உணர்ந்தேன்.

சில குழப்பங்களும் சில வன்முறை காட்சிகளும் மனதை சீற்றமடையச் செய்கின்றன.

படத்தின் கடைசி பதினைந்து நிமிடங்களில் ராணி பத்மாவதி உடன்கட்டை ஏறும் காட்சி மூளையை சூடேற்றுகிறது. நூற்றுக்கணக்கான ராஜபுத்திர மங்கைகளும் பத்மாவதியை தொடர்ந்து செல்வது மனதை பதைபதைக்கச் செய்கிறதுச் செய்கிறது.

செந்நிற புடவை அணிந்து, பொன்னாபரணங்களை அணிந்த பெண்கள், உடன்கட்டை ஏறுவதற்காக செந்தழலை நோக்கிச் செல்கின்றனர். அவர்களில் ஒருவர் கர்ப்பவதி. அவர்களை வெறியுடனும் கடுங்கோபத்துடன் தொடர்கிறார் அலாவுதீன் கில்ஜி.

கருப்பு வண்ண உடை உடுத்தி விரித்த முடியுடன் கோட்டையின் படிக்கட்டுகளில் பைத்தியம் போல் மூச்சிரைக்க ஓடும் காட்சி மனதை விட்டு அகலாது.

சரித்திர பதிவு

சமூக கட்டுப்பாடுகளையும் கணவரின் பெருமையையும் காப்பாற்றுவதற்காக தீயில் இறங்கும் ராணி பத்மாவதியை பார்ப்பதற்கும், பாலியல் வல்லுறவு போன்ற பாலியல் வன்முறைகளைக் நேரடியாக பார்ப்பதற்கும் எந்தவித வித்தியாசமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

பத்மாவத் Padmavati

உண்மையில் கடும்போக்காளர்கள் கூறியது போல இந்த திரைப்படம் ராஜபுத்திரர்களை தவறாக சித்தரிக்கவில்லை, பழம்போக்கு சித்தாந்தங்களை தவறு என்று கூறவில்லை. மாறாக அவற்றை மதிப்பதாகவும், அதுவே பெரும் தியாகம் என்றும் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதிகாசங்களில் இடம்பெற்றிருந்த உண்மையாக இருந்தாலும் கூட, யுத்தத்தில் வெற்றியடைந்தவர்களிடம் இருந்து பரம்பரை மானத்தை காப்பாற்றுவதற்காக, தோல்வியடைந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்களின் 'கற்பை' பாதுகாக்க அவர்களை தீயில் குதிக்க கட்டாயப்படுத்துவதுதான் தியாகமா?

உடன்கட்டை ஏறும் நடைமுறை பெண்ணின் சுயமான விருப்பமாக இருக்கமுடியாது அதுவொரு சமூக கட்டுப்பாடு, ஏன் சமூக அழுத்தத்தின் விளைவு என்றே சொல்லலாம்.

இந்த திரைப்படம் உடன்கட்டை எனப்படும் 'சதி'யின் பெருமையை தூக்கிப்பிடித்து சதி செய்வதாகவே எனக்கு தோன்றுகிறது.

ரண்வீர்படத்தின் காப்புரிமைPADMAVAT/FACEBOOK

அந்தக் கொடுமை இனி இல்லை...

பத்மாவத் திரைப்படத்திற்கு காட்டப்பட்ட எதிர்ப்பு, 'உடன்கட்டை' என்ற நடைமுறைக்கு எதிராக இல்லை, 'குடும்ப கெளரவம்' என்ற கடும் சுமையை பெண்ணின் கற்பில் மட்டுமே ஏற்றி, அவர்களின் உயிரை பறிப்பதற்கு எதிராக இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

மரியாதை, குடும்ப கெளரவம், கற்பு என்ற வார்த்தைகளுக்கான `தவறான` புரிதல்களுக்கு முன்பு, பெண்ணின் உயிருக்கு மதிப்பில்லை என்ற கருத்தை பிரம்மாண்ட திரையில் பார்க்கும்போது மனதில் எழும் ஆயாசம், உடன்கட்டை ஏறுவதற்காகக்கூட கணவனிடம் ராணி பத்மாவதி உத்தரவு கேட்கும்போது ஆவேசமாக உருமாறுகிறது.

உண்மையில் இந்த திரைப்படத்தில் ராணி பத்மாவதி சித்தரிக்கப்பட்டுள்ள முறை பற்றியே விவாதிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், இதுவே குறைவான சித்தரிப்பு என்றா கர்ணீ சேனை அமைப்பு போர்க்கொடி உயர்த்தியது?

உடன்கட்டை ஏறுவது சிறப்பான செயலாக காட்டப்பட்டுள்ளது ஒருபுறம் சீற்றத்தை ஏற்படுத்துகிறது. மறுபுறம் ஒரு ராஜா பெண்ணை அழகான பொருளாக நினைத்து அடைய விரும்புகிறான், மற்றொருவன் தோற்கடிப்பட்டவரின் மதிப்புற்குரிய உடமையான அவனது 'மனைவியை' அபகரிக்க விரும்புகிறான் என்பது வேதனையை பன்மடங்கு அதிகமாக்குகிறது.

பெண் ஒரு உடமையா? திருமணத்திற்கு பிறகு அவளின் உலகமும் உயிரும் கணவன், குடும்பம், சாதி மற்றும் சமூகத்திற்கு அடிமைப்பட்டதா? கணவனை அவமானப்படுத்த வேண்டுமெனில் அவனது மனைவியை மானபங்கப்படுத்தினால் போதுமா?

ஷாஹித் கபூர்படத்தின் காப்புரிமைPADMAVAT/FACEBOOK

ராஜபுத்திரர்களின் பெருமையை காப்பாற்றிய இந்த திரைப்படம் உண்மையில் யாருக்கு பங்கம் ஏற்படுத்துகிறது?

அவதி ராஜ்ஜியத்தைச் சேர்ந்த சூஃபி கவிஞரான மாலிக் முகமது ஜயஸி 1540இல் எழுதிய காப்பியத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படம் பத்மாவத். 13ஆம் நூற்றாண்டில் தில்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜியையும், தற்போதைய ராஜஸ்தானில் உள்ள சித்தோட் ராஜ்ஜியத்தையும் மையமாக வைத்து எழுதப்பட்ட காப்பியம் 'பத்மாவதி'.

பத்மாவத் திரைப்படத்தில் இந்து ராணிக்கும், இஸ்லாமிய பேரரசனுக்கும் இடையில் அந்தரங்க உறவு இருந்ததாக கர்ணீ சேனை குற்றம் சாட்டியது போல் எந்த காட்சியும் திரைப்படத்தில் இல்லை.

தீபிகாபடத்தின் காப்புரிமைPADMAVAT/FACEBOOK

ராணி பத்மாவதி அலாவுதீன் கில்ஜி அல்லது வேறு யார் முன்பும் நடனமாடுவது போலவோ, உடல் அங்கங்களை காட்டுவது போலவோ எந்த காட்சியும் காட்டப்படவில்லை.

உண்மையில் ராஜபுத்திரர்களை பெருமைப்படுத்தும் வகையில் அத்திரைப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெண்ணின் மரியாதை

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ரூப் கன்வர் எனும் ராஜபுத்திர இளம் பெண் ராஜஸ்தானில் உள்ள தியோரலா கிராமத்தில், தனது கணவரின் சிதையுடன் வைத்து எரிக்கப்பட்டதை ராஜபுத்திர அமைப்புகள் ஆதரித்ததை நினைத்தால் என்று மாறுமோ மனிதர்களின் மனம் என்று என் மனம் பதறுகிறது.

பத்மாவத் Image captionகிலோ கணக்கிலான ஆபரணங்களை சுமக்கும் ராணி

இந்த திரைப்படத்திற்கு இத்தனை எதிர்ப்பும் சீற்றமும் எதற்கு என்று வியப்பாக இருக்கிறது. உண்மையில் கடும்போக்காளர்களின் சீற்றத்திற்கு காரணம் அச்சமே என்பது திரைப்படத்தை பார்த்த பின்பே புரிகிறது.

தங்களது பாரம்பரியத்தின் தவறான நடைமுறையை தங்களின் சொந்த கைக்கண்ணாடியில் பார்க்க விரும்பாததே இத்தனை பெரிய ஆர்ப்பாட்டங்களுக்கு காரணம் என்றும், இன்றைய தலைமுறையினரின் முன் எடுத்து வைக்க விரும்பாததுதான் காரணமோ என்றும் எனக்கு தோன்றுகிறது.

உடலை மறைக்கும் ஆடைகள், தலையில் முக்காடு, உடலை அழுத்தும் கனமான ஆபரணங்களை சுமக்கும் கட்டுப்பாடுகளுடன் உடன்கட்டை என்ற சுமையும் கூடுதலானால் உண்மை அழகு வெளிப்படுமா அல்லது புழுக்கம் ஏற்படுமா?

திரைப்படங்கள் பலவிதங்களில் எடுக்கப்படலாம், அவை விமர்சனத்துக்கும், விவாதத்திற்கும் உள்ளாக்கப்படலாம்.

ஆனால் அபலைகளாக அழுத்தங்களுடன் வாழ்ந்த பெண்களை திரைப்படங்களில் மரியாதையுடனும் சிறப்புடனும் காட்டுகிறேன் என்ற முகமூடியில் மறைந்துக்கொண்டு, உண்மையை திரைபோட்டு மறைக்கக்கூடாது.

http://www.bbc.com/tamil/india-42820900

  • தொடங்கியவர்

பிரமாண்ட தொழில்நுட்பமும் பிற்போக்குத்தன நெருடல்களும்! பத்மாவத் உறுத்தல்கள்

 
 

                                                                               Padmavathi

சரியாக ஒரு வருடம். இடைவிடாமல் நடைபெற்று வரும் களேபரம் இன்னும்கூட ஓயவில்லை. 

 

டிசம்பர் 2016 - இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி பத்மாவதி படப்பிடிப்பைத் தொடங்குகிறார்.

ஜனவரி 2017 - ஜெய்ப்பூரில், பத்மாவதி திரைப்படத்திற்காக வடிவமைக்கப்பட்ட படப்பிடிப்பு செட்டை, கர்னி சேனா அமைப்பினர் சேதப்படுத்துகிறார்கள். இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தாக்கப்படுகிறார்.

மார்ச் 2017 - ராஜஸ்தானில் இருக்கும் பத்மினி மஹால் சேதப்படுத்தப்படுகிறது. படப்பிடிப்பு செட் கோல்ஹாப்பூருக்கு மாற்றப்படுகிறது. அந்த செட்டுக்கும் பெட்ரோல் குண்டு வீசுகிறார்கள். ”ராணி பத்மாவதிக்கும் அலாவுதின் கில்ஜிக்கும் இடையே எந்தவிதமான கனவுக் காட்சிகளும் வைக்கப்படவில்லை. ராஜ்புத்திர வம்சத்தை இழிவுபடுத்தும் காட்சிகளும் வைக்கப்படவில்லை” என்று விளக்கமளிக்கிறார் இயக்குநர் சஞ்சய்.

செப்டம்பர் 2017 - பத்மாவதி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்படுகின்றன. ஜெய்ப்பூரில் இருக்கும் ராஜ்மந்திர் சினிமா ஹாலுக்கு வெளியில் போஸ்டர்களைக் கொளுத்துகிறார்கள் கர்னி சேனா அமைப்பினர். மேலும், ரிலீஸுக்கு முன்பாக படத்தைப் பார்க்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

அக்டோபர் 2017 - சூரத்தைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் வரைந்த தீபிகாவின் ஓவியக்கோலம் அழிக்கப்படுகிறது. பத்மாவதியாக நடித்திருக்கும் தீபிகா படுகோனே, வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானிக்கு ட்வீட் செய்கிறார். திரைப்படம் வெளியாவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தணிக்கைத் துறைக்குப் பரிந்துரை செய்கிறது ஆளும் பாஜக அரசு.

நவம்பர் 2017 - தீபிகா படுகோனேவின் மூக்கை அறுக்கப்போவதாக கர்னி சேனா அமைப்பு அச்சுறுத்தல் விடுக்கிறது. மீரட்டைச் சேர்ந்த தாக்கூர் இனத் தலைவர் ஒருவர், தீபிகா, இயக்குநர் பன்சாலி ஆகிய இருவரது தலைகளையும் கொண்டு வந்தால் 5 கோடி ரூபாய் பரிசளிப்பதாக உறுதி கொடுக்கிறார்.

பத்மாவதியைப் படமாக்கும்போது, ராஜ்புத்திரர்களின் புகழையும் மதிப்பையும் மனதில் வைத்து கவனமாகச் செயல்பட்டிருப்பதாக உருக்கமாக வீடியோ ஒன்றை மீண்டும் வெளியிடுகிறார் இயக்குநர் பன்சாலி. தணிக்கைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட படத்திற்கான விண்ணப்பம் முழுமையாக இல்லை என்பதைக் காரணமாகச் சொல்லி, விண்ணப்பத்தைத் திருப்பி அனுப்பி வைக்கிறது தணிக்கை அமைப்பு. ஹரியானாவைச் சேர்ந்த பாஜக தலைவர், செய்தித் தொடர்பாளர் சுராஜ்பால் அமு என்பவர், தீபிகா, சஞ்சயின் தலைகளுக்குப் பத்து கோடி தருவதாகவும்,  ரன்வீர் சிங்கின் கால்களை உடைப்போம் எனவும் அச்சுறுத்தல் விடுக்கிறார். மிரட்டல்களுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தீபிகா,  "நாங்கள் ஒடுக்கப்படுகிறோம், மன உளைச்சலைத் தருகிறார்கள்" எனக் குற்றம் சாட்டினார்.

பத்மாவதி திரைப்படத்துக்குத் தடை வேண்டும் என ராஜஸ்தான், குஜராத், பீஹார், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறார்கள். சித்தூர்கார், கும்பல்கார் கோட்டைகளுக்குச் சுற்றுலா அனுமதி மறுக்கப்படுகிறது. போராட்டங்கள் வலுவடையவே, திரைப்பட வெளியீட்டை ஒத்திவைக்கிறார்கள் பத்மாவதி படக்குழுவினர். 

                                                                                                        shahid_15334_15355.jpg

டிசம்பர் 2017 - தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதியில் (டிசம்பர் 1) மாநிலம் முழுவதற்கும் பந்த் அறிவிக்கிறார்கள் கர்னி சேனா அமைப்பினர். படத்திற்கான சான்றிதழ் அளிப்பதற்கு முன்பாக, வரலாற்று ஆசிரியர்களிடமும், மேவார் ராஜ குடும்பத்தினரிடமும் கருத்து கேட்கிறது தணிக்கை குழு. U சான்றிதழ் வழங்கவேண்டுமென்றால், 5 காட்சிகளில் மாற்றம் செய்யவேண்டும் என்றும், படத்தின் தலைப்பை ‘பத்மாவத்’ என மாற்றிவிடவேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார்கள் தணிக்கைக் குழுவினர். 

2018 - ஜனவரி 25-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கிறது தயாரிப்பாளர் தரப்பு. திருத்தங்கள் செய்யப்பட்டதையும், பெயர் மாற்றியதையும், கற்பனைக் கதையென்றும் முழு நீள பக்கத்துக்குச் செய்தித்தாள் விளம்பரங்கள் வெளியாகின. இருந்தாலும் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேச அரசுகள் 'பத்மாவத்' திரைப்படத்துக்குத் தடையை அறிவித்தன. தடையை நீக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மனு செய்தது தயாரிப்பாளர் தரப்பு. தடை செய்யப்பட்ட நான்கு மாநிலங்களிலும், தடையை நீக்கி படத்தை வெளியிட உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். திரைப்படம் வெளியானால் ராஜ்புத்திர பெண்கள் ஜவ்ஹார் (தீக்கிரையாதல்) செய்துகொள்வார்கள் என அச்சுறுத்தல் விடுக்கிறது கர்னி சேனா அமைப்பு. பத்மாவதி திரைக்கு வரவேண்டும் என்பதற்காக, அக்‌ஷய்குமாரின் திரைப்படமான 'பேட்மேன்', (Padman) அதன் தயாரிப்பாளர்களால் பிப்ரவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

ஜனவரி 24-ம் தேதி, 'பத்மாவத்' திரைப்படத்தைப் பார்த்து வெளியிட ஒப்புக்கொண்டதாக வந்த தகவல்களை மறுக்கிறார்கள் கர்னி சேனா அமைப்பினர். ஜனவரி 24-ம் தேதி மத்தியப் பிரதேசத்திலும், ஹரியானாவிலும் போராட்டங்கள் தீவிரமடைகின்றன. ஹரியானா மாநிலம் குருகிராமில் கர்னி சேனா அமைப்பினர் பேருந்துக்குத் தீ வைத்ததால் அங்கு பதற்றம் நிலவியது. பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து கல்வீசி தாக்கப்பட்டது. 

ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கு முன்பாகவே, ஒரு வருடமாக நடத்தப்பட்ட போராட்டங்கள் இவை. வட இந்தியத் தொலைக்காட்சிகளில் விவாதங்கள், வரலாற்றுத் திரிபுகள், அச்சுறுத்தும் வன்முறைகள், மிரட்டல்கள் என ஒரு நாளுக்கு ஒரு சேதி சொன்ன திரைப்படத்தை, வெளியான அன்றே பார்த்து முடித்துவிடவேண்டும் என சபதம் எடுத்துக்கொண்டேன். படத்தைப் பார்த்து முடித்ததும் ’மதிப்பை சிதைப்பதாக வருத்தப்பட்ட ஸ்ரீ ராஜ்புத்திர கர்னி சேனா அமைப்பினர், சஞ்சய் லீலா பன்சாலியால் உருவாக்கப்பட்ட ’பத்மாவத்’தை பார்த்தவுடன், கர்னி சேனா கற்பனை செய்த அளவிற்கு, இயக்குநர் சஞ்சய் தீமை செய்யவில்லை என்று தானாகப் புரிந்துவிடும் என்பதே முதலில் தோன்றிய எண்ணம். 

                                                                      ranveer singh

சூஃபி கவிஞரான முகமது ஜயசி எழுதிய கவிதையைத் தழுவி படம் எடுக்கப்பட்டிருப்பதாக தொடக்கத்தில் குறிப்பிடப்படுகிறது. படத்தின் பொறுப்புத் துறப்பு வரிகள், ”படம் எந்த ஒரு வரலாற்றையும், சம்பவத்தையும், பண்பாட்டையும் மனிதர்களையும், மதங்களையும், பெயர்களையும் குறிப்பிடவில்லை” என்று ’நான் அவன் இல்லை’ தொனியில் 2 நிமிடங்களுக்குக் காட்டப்படுகிறது. ஒளிப்பதிவிலும், நுட்பமான கலைத்தன்மையிலும், அபாரமான தொழில்நுட்பங்களிலும், அசர வைக்கும்  காஸ்ட்யூம் டிசைனிலும் உழைப்பின் நேர்த்தியைக் காட்டியிருந்தாலும், பாத்திரப் படைப்பில் - குறிப்பாக இஸ்லாமிய மன்னர் அலாவுதின் கில்ஜியின் பாத்திரப் படைப்பை சித்திரித்திருக்கும் விதம், நிகழ்கால அரசியலோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் கண்டிக்கத்தக்கதாக இருக்கிறது. 

நெருப்பைத் தீண்டுவார்கள் ராஜ்புத்திரர்கள், காயமடைந்தவருடனும், ஆதரவற்றவருடனும் போர் செய்ய மாட்டார்கள் ராஜ்புத்திரர்கள், போரிடத் துணை தேவையில்லை, வாளைப் போல வீரியமானது நமது நிறம்,  என்று அடிக்கடி ராஜ்புத்திரப் பெருமை பேசுகிறார் அரசர் ரத்தன் சிங். (ஸ்பாய்லர்தான்) போர் விதிகள் பேசும் அரசன் ரத்தன் சிங், அவர் பேசிய வார்த்தைகளுக்கு முரணாக, சுல்தான் கில்ஜியின் படைகள் தூங்கிக்கொண்டிருக்கும் வேளையில் கூடாரங்களை தீக்கிரையாக்குகிறார். பெண்களை அழைத்துவருவது போல, முக்காடு போட்டு ஆண் வீரர்களை அழைத்து வரும் ராணி பத்மாவதி, சிறையிலிருந்து பாதாள சுரங்கம் வழியே கணவருடன் தப்பிக்கிறார். பூப்போல மனைவியைக் காக்கும் ரத்தன் சிங், தீக்குளிக்க அனுமதி கேட்டுக்கும்போது கவலையாக இருந்தாலும் சரிசரி என தலையாட்டுகிறார். இப்படி மாறி மாறி சித்திரிக்கப்பட்டாலும், அரசர் ரத்தன் சிங்கின் முகத்தில் மட்டும் அமைதி குடிகொண்டிருக்கிறது. 

மாறாக, அலாவுதின் கில்ஜி விரித்துப்போட்ட கூந்தலை சிலுப்புகிறார், முகத்தை அகோரமாக்கிக் கொள்கிறார், மொத்த நேரமும் பெண்களே கதியென கிடக்கிறார், போர் வீரர்கள் செத்துக்கிடந்தாலும் கறி, மீனை தட்டுதட்டாக தின்கிறார், ராணி பத்மாவதியை அடைவதற்காக மட்டுமே பிறந்துவிட்டதைப்போல சுற்றிக் கொண்டிருக்கிறார். முகலாய, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக பின்பற்றிய அலாவுதின் கில்ஜியின் நிதி நிர்வாக, சுங்க, நிர்வாக மேலாண்மை குறித்து மருந்துக்கும் குறிப்பிடாமல், வில்லனாக மாற்றியதற்காக கருப்பான வெளிச்சத்தில் காட்டுவதுதான் பொறுப்புத்துறப்பின் நோக்கமா? என்று எண்ணத் தோன்றுகிறது. 

இது ஒரு வரலாற்றுப் புனைவு. நிலவும் இந்திய சமூகத்தின் சூழல், இந்த படத்தை, இதன் காட்சிப் படிமங்களை, வசனங்களை, சாமான்ய ரசிகர்களுக்குள் எப்படிப் பதிய வைக்கும் என யோசித்திருக்கலாம். புனைவே என்றாலும், யதார்த்த மீறல்கள் புனிதப்படுத்தப்படுவது நெருடலைத் தருகிறது. ஹிந்து அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, ராஜ்புத்திரர்களையோ ராணி பத்மாவதியையோ 'மட்டும்' எந்த விதத்திலும் இழிவுபடுத்தவில்லை. இத்தனை தடைகளைத் தாண்டி தனது படைப்பை வெளியிட்டிருக்கும் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்.  கிபி.13ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கூறப்படும் ராணியின் மதிப்பைக் காப்பாற்றுவதற்காக போராட்டங்கள் நடத்தப்பட்டன. நடத்தப்படுகின்றன. சிறுதெய்வமாக இன்றளவிலும் வழிபடப்படும் பத்மாவதி என்ற பெண் உண்மையில் இருந்தாரா இல்லையா என்னும் சர்ச்சை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. வரலாற்று ஆய்வாளர்கள் பலர் , பத்மாவதி என்ற பெண் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மறுத்து இருக்கின்றனர் என்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டியதிருக்கிறது. இதற்கிடையே, ராஜபுத்ர வீரர்களை படம் பெருமைப்படுத்தியுள்ளது எனக்கூறி, பத்மாவத் படத்தின் மீது தொடுத்த வழக்கை ஒரு கட்சி வாபஸ் வாங்கி இருக்கிறதாம். 

 

 3,644 பாலியல் வன்புணர்வு வழக்குகளுடன், இந்தியாவில் பாலியல் வன்புணர்வுகள் அதிகமாக நடக்கும் மாநிலங்களுள் 2-வது இடத்தைப் பிடித்திருக்கிறது ராஜஸ்தான். புனைவு கதாப்பாத்திரத்துக்குள் புதைந்து கொள்ளாமல்,  சமகாலத்தின் இந்த அவலத்தை எதிர்த்துப் போராடுமா ராஜ்புத்திரர்கள் சமூகம்? 

https://www.vikatan.com/news/india/114627-in-padmaavat-dont-expect-to-see-the-real-alauddin-khilji-in-it.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.