Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவுகள்

Featured Replies

உறவுகள்

 

 
kd3

"பார்த்தீங்களா...எங்கண்ணான்னா அண்ணாதான்...'' தேவகி அவள் கணவன் ஸ்ரீநிவாசனிடம் துள்ளலோடு சொன்னாள். கையில் அந்தச் சேலை பளபளத்துக் கொண்டிருந்தது. எவ்வளவு அற்புதமான டிசைன்...? புடவை தேர்வு செய்யவும் ஆழ்ந்த ரசனையுடன் கூடிய ஒரு கற்பனை வளம் வேண்டும்தான். நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் தேவகி. பெண்களுக்கு எத்தனை சேலை வாங்கினாலும் திருப்தியே வருவதில்லை. புதிது புதிதாய்க் கட்டிக் கொள்வதில் அப்படியொரு உற்சாகம். பீரோவைத் திறந்தால், காத்திருந்ததுபோல் ஒன்வொன்றாய் வழுக்கி வழுக்கிக் கீழே விழும் புடவைகளைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். ஸ்ரீநிவாசன், கண்ணாடி முன் நிற்கும் அவளைப் பார்த்தான். புடவையினால் அவளுக்கு அழகா? அவளால் புடவைக்கு அழகா? கண்கள் ஒரு கணம் மயங்கிப் போனது. என்னானாலும் தங்கையல்லவா? அவளுக்குப் பிடித்த நிறம், டிசைன் எது என்று அவள் அண்ணனுக்குத் தெரியாதா? என்று நினைத்துக் கொண்டான்.
 மாடியில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தான் சுந்தர். மனசுக்குள் இனம் புரியாத ஒரு
 துக்கம். சற்று முன் அதைக் கொட்டித் தீர்த்தது விட்டேற்றியாய் இருந்தது. கண்களில் கசிந்த கண்ணீர் இன்னும் நிற்கவில்லை.
 தங்கை வீட்டிற்கு வந்தாலே அந்த மாடியில் தங்குவதுதான் அவன் வழக்கம். அந்தத் தனிமையும் அமைதியும் அவன் வீட்டில் கிடைப்பதில்லை.
 "எப்பயும் போல நான் மேலே போயிடுறேன்'' என்றான் இடம் ரிசர்வ் செய்பவனைப் போல.
 "ஏன், எங்களோட கீழேயே இருக்கக் கூடாதா?'' இது ஸ்ரீநிவாசன்.


 "அய்யய்ய... என்னங்க நீங்க... அந்த வித்தியாசமெல்லாம் எனக்குக் கிடையாது... சோறு கண்ட எடம் சொர்க்கம்னு இருக்கிறவன் நான்... ராத்திரிப் படுக்கிறதுக்கு எனக்குப் பிடிச்ச இடம் அதுன்னு சொல்ல வந்தேன்... அவ்வளவுதான்... அத்தோட ஒரு பிரைவசி கிடைக்கும் அங்கே... அப்டியே மொட்டை மாடிக்குப் போய் வானத்தப் பார்த்துட்டுக் கொஞ்ச நேரம் இருக்கலாம். உங்க வீட்டச் சுத்தி இருக்கிற சூழல் பிடிக்கும் எனக்கு. அப்படி ஒரு சந்தோஷம் இங்கே உங்க வீட்லதான் கிடைக்குது. பகல்ல பூராவும் இங்கதானே கிடக்கப் போறேன்'' யதார்த்தமாய்ப் பதிலிறுத்தான் சுந்தர்.
 அவ்வப்போது நினைத்தால் வந்து விடுவது இவன் வழக்கம். அவனுக்கு மூன்று தங்கைகள். ஒவ்வொருவரும் ஒவ்வோர் ஊரில். ஒன்று நெல்லை. ஒன்று சென்னை, ஒன்று திருச்சி. எங்கு எப்போது இருப்பான் என்று யாராலும் கணிக்க முடியாது. நினைத்தால் அலுவலகத்திற்கு லீவு போட்டு விட்டுக் கிளம்பி விடுவான். தங்கைகள் யாரும் "வராதே!' என்று இன்றுவரை தடை போட்டதில்லை. சீர் கொண்டு வந்தால் சகோதரி என்ற நிலையெல்லாம் இல்லைதான். ஆனாலும் பெரிய தட்டு நிறைய பழங்களை நிரம்ப அடுக்கி, நடுவே ஒரு புதிய புடவையை வைத்து, அதற்கு மேட்ச்சாக ஒரு ப்ளவுஸ் பீûஸயும் வைத்து, அதன் மேலே கமகமக்கும் மல்லிகைப் பூப் பந்தோடு ஒரு ஐநூறு ரூபாயையும் கண்காண நுழைத்து, தங்கைகளை நமஸ்கரித்து வாங்கிக் கொள்ளச் சொல்வான். அப்போது அந்த முகத்தில் தவழும் மகிழ்ச்சியையும், நிறைவையும் பார்க்க வேண்டுமே... நிச்சயம் பத்து நாளைக்குத் தாங்கும் அது. ஆனால் நாலு நாளில் கிளம்பி விடுவான். மதிப்போடு போய் மதிப்போடு புறப்படும் லாவகம்.
 "நீ பாட்டுக்குத் தனியாப் புறப்பட்டு வந்துடுறியே... அண்ணியக் கூட்டிட்டு வரக் கூடாதா?'' தேவகியின் அக்கறையான கேள்வி.
 ""நானா வரவேண்டாம்னு சொன்னேன். அதெல்லாம் அவுங்கவுங்க இஷ்டம். ஒரு இடம் போகணும், வரணும்ங்கிற இன்ட்ரஸ்ட் அவுங்கவுங்களுக்கே வேணும்... ஒருத்தர் ஊட்ட முடியாது. நாலு பேரைப் பார்க்கணும் பழகணும்ங்கிறங்கிற எண்ணமெல்லாம் சின்ன வயசிலேர்ந்து வரணும். அவுங்கவுங்க வளர்ந்த சூழல்தான் எல்லாத்துக்கும் காரணம்னு நினைக்கிறேன்''
 "உடம்பு முடியாதவங்க... நீதான் சொல்லிக் கூட்டிட்டு வரணும்... நா பார்த்துக்கிறேன்னு சொன்னீன்னா உற்சாகமாக் கிளம்புவாங்க. உன் பொண்டாட்டிய நீதானேண்ணா கவனிக்கணும்''
 "உடம்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு... மனசுதான் சரியில்லை''

 


 "என்ன சொல்றேண்ணா'' - இவனைக் கூர்ந்து பார்த்தாள் தேவகி. ஸ்ரீநிவாசன் வேறு வேலையில் கவனமாய் இருந்தான். எதையாவது சாக்கு வைத்துப் பேச்சு ஆரம்பிக்க வேண்டுமே...! இந்த முறை இந்த சப்ஜெக்ட் போல்ருக்கு...நினைத்துக் கொண்டான்.
 "இங்க வா...அடுப்படிக்கு வந்து சொல்லு...அவர் காதுல விழப் போகுது'' என்பதாய் சைகை காண்பித்தாள் தேவகி.
 "உன் பெண்டாட்டியபத்தி நீயே வேறே எடத்துல இப்படிப் பேசலாமா?'' என்பதான தங்கையின் சைகையையும் புரிந்து கொண்டான் சுந்தர்.
 அவன் எப்பவும் வெட்ட வெளிச்சம். இந்த மறைப்புச் சோலியெல்லாம் ஆகாது. பிடிக்கவும் பிடிக்காது. எதுக்கு மனுஷங்க இப்டி இருக்காங்க? என்று அலுத்துக் கொள்வான். உறவுகளே இப்டி ஆரம்பிச்சிட்டாங்களே? கல்யாணம் ஆகி, குழந்தை குட்டிங்கன்னு வந்துட்டா எல்லாம் மாறிடும் போலிருக்கு... மெüன பாஷை பேசிக்கிறாங்க... சொந்த அண்ணன், தம்பிகளே மாறில்ல போயிடுறாங்க... நாம அப்பா, அம்மாட்ட வளர்றவரைக்கும் இதெல்லாம் எதாச்சும் இருந்ததா?
 "எனக்கு அந்த வித்தியாசமெல்லாம் கிடையாது... நா எல்லாத்தையும் பட்டவர்த்தனமாத்தான் பேசுவேன். எல்லாரும் ஒண்ணுதான் எனக்கு. பெண்டாட்டிக்காக மறைச்சுப் பேசத் தெரியாது. பூசி மெழுகத் தெரியாது. எது சரியோ அதுதான்''


 சுந்தர் இதைச் சொன்னபோது ஸ்ரீநிவாசனின் கவனம் திரும்பியது. என்ன கேள்விக்கு இந்த பதில்? அவனின் பார்வை தொடர்ந்து உள்ளே அடுப்படியை நோக்கிப் போனது.
 ""மாப்ள சார்... நீங்க ஒண்ணும் நினைச்சிக்காதீங்க... நாங்க அண்ணா, தங்கை பேசிக்கிறோம்''
 ""தாராளமாப் பேசுங்க...இப்டி வெளிப்படையாப் பேசுறவங்களைத்தான் எனக்கும் பிடிக்கும். யோசிச்சு, யோசிச்சுப் பேசுறவங்க, தொண்டைக்குழிக்குள்ள முழுங்குறவங்களை நல்லாத் தெரிஞ்சு போகும். கண் ஜாடையெல்லாம் பண்ணிக்கிறாங்க...நினைச்சா சிரிப்புத்தான் வருது...பலதையும் பேசிக்கலாம்தான்...ஆனா அப்டி அப்டியே விட்ரணும். பகையா எதையும் நினைச்சிறக் கூடாது...அப்புறம் உறவு நிலைக்காது.''
 " கரெக்ட் நீங்க சொல்றது....மனுஷங்க மாறுபட்டு வித்தியாசமாத்தான் இருக்காங்க... ஒரே குடும்பத்துல பத்துப்பேர்னா, அந்தப் பத்துப் பேருக்கும் பத்துவிதமான குணம்...ஒண்ணு ஆட்டுக்கிழுக்கும்...ஒண்ணு மாட்டுக்கிழுக்கும்...அதெல்லாம் பெரிசுபடுத்தக் கூடாதுங்கிறது சரிதான்...ஆனாலும் வீட்டுப் பொம்பளைங்கதான் அரவணைச்சுக் கொண்டு போகணும்...இல்லைன்னா குடும்பங்கள் பிரிஞ்சு போயிடும். குடும்ப உறவுகள் அப்பத்தான் நிலைக்கும்''
 ""நீங்க என்ன சொல்றீங்க...? புரியும்படியாச் சொல்லுங்க...'' இப்படிக் கேட்டதன் மூலம் அவரும் அந்த விவாத வளையத்துக்குள் வந்து விட்டதாய் சுந்தர் நினைத்தான். இருப்பது அவர் வீடு. அவரை ஒதுக்கிவிட்டுப் பேச முடியுமா? எப்பொழுது இந்தக் குடும்பத்தில் அவர் மாப்பிள்ளை ஆனாரோ, அப்பொழுதே அவரும் கூடிக் கலந்து விட்டார் என்றுதானே பொருள்?


 ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் ஏதேனும் ஒரு பொருளில் விவாதம் தொடங்கி விடுகிறது. அவசியத்தின்பாற்பட்டோ, அல்லது மனத் தாக்கத்தினாலோ...! இப்போது இந்தப் பேச்சு துவங்கியிருப்பது எதனால்? நினைத்துப் பார்த்தான் சுந்தர். உள் மன வருத்தங்கள்தான் என்று விடை கிடைத்தது. அது
 தாக்கம்தானே...!
 "அதாவது, நான் என்ன சொல்ல வர்றேண்ணா, நம்ம அம்மா, அப்பா, பெரியப்பா, சித்தப்பா, தாத்தா, பாட்டி, அண்ணி, அக்கா, தங்கை இவங்களெல்லாம் கூட்டுக் குடும்பமா இருந்தாங்க... எல்லா சுக துக்கங்கள்லயும் பங்கு கொண்டாங்க. ஆம்பளைங்களுக்குள்ளே எப்பயாச்சும் பிரச்னை வந்ததுன்னா, பொம்பளைங்க தலையிட்டு, அவங்க அரவணைப்புல, பக்குவமான பேச்சுல அது பெரிசாகாமத் தடுத்து, ஒற்றுமையை நிலை நாட்டினாங்க... பெரியவங்க பேச்சை சின்னவங்க கேட்டாங்க...
 மதிச்சாங்க... இப்போ அப்டி இல்லைன்னு சொல்ல வர்றேன்... பெரியவங்க பேருக்குத்தான் பெரியவங்களா இருக்காங்க... சின்னவங்ககூடப் பரவால்லன்னு தோணுது... ஏன்னா அவுங்க இந்த மாதிரி சென்டிமென்ட் விஷயத்துக்குள்ளயே போகுறதில்லை... எல்லாருமே டேக் இட் ஈஸின்னு ஆயிட்டாங்க''
 ஸ்ரீநிவாசன் சுந்தரையே பார்த்தான். அதை தேவகி கவனித்தாள். என்னவோ சங்கடத்தில் அவன் இருக்கிறான் என்று தோன்றியது. அதன் அடையாளம்தான் இந்தப் பேச்சு.
 ""காலம் மாறிப் போச்சு... அவுங்கவுங்க இருக்கிற இடத்து வசதிப்படி இருந்துக்கிறாங்க... உடம்பும் முடியணும்ல... ஒண்ணா இருந்தா, இந்தக் காலத்துல யாருக்குப் பாடுபட முடியுது?'' என்றாள் பொதுவாக.


 "உடம்பு முடியுதோ இல்லையோ...மனசு முடியலை. அதத்தான் சொல்லியாகணும். வரப்போறது நம்ம ப்ரதர் தானே, சிஸ்டர்தானேங்கிற ஒட்டுதலான எண்ணம் இல்லை...எடுத்த எடுப்புல எப்போ வர்றே? எத்தனை நாள் இருப்பே? ன்னா ஒருத்தர்ட்டக் கேட்குறது? அப்டிக் கேட்டா அங்க போகத் தோணுமா? வர்றேன்றவங்களை முதல்ல, வாங்க...வாங்கன்னு மனசு நிறைஞ்சு கூப்பிடணும்...தாராளமா வாங்கங்கணும்...இங்கயே தங்கிக்கலாம்...வேறே எங்கயும் போக வேண்டாம்ங்கணும்... அதுதான் மனம் ஒப்பின வரவேற்பு... அதெல்லாம் போச்சு''
 ""யாரு உன்னை அப்படிச் சொன்னா? எதுக்கு இப்டிப் புலம்புறே? உனக்கு எப்பத் தோணுதோ அப்பல்லாம் நீ தாராளமா இங்க வரலாம். நாங்க ஒண்ணும் சொல்ல மாட்டோம். எத்தனை நாள் வேணாலும் நீ
 இருந்துட்டுப் போகலாம். போதுமா?''
 "உன் மனசு தெரிஞ்சுதானேம்மா வந்திருக்கேன்...எங்க போனா நமக்கு மதிப்பும், மரியாதையும் இருக்குமோ அங்கேதானே போக முடியும்? விருப்பமில்லாத இடத்துக்குப் போய் வலிய உட்கார்ந்துக்கிட்டு, ஒரு வாய்ச் சோறு சாப்பிட முடியுமா?''
 பெரிதாகச் சிரித்தான் ஸ்ரீநிவாசன். "வந்த விருந்தினரை யாராச்சும் அப்டிக் கேட்பாங்களா? அதிலயும் உறவுகளை யாரும் அப்டிக் கேட்க மாட்டாங்க. நீங்களா எதுக்கு இப்டி நீட்சியாக் கற்பனை பண்ணிக்கிறீங்க?''
 ""நீங்க சொல்றீங்க மாப்ள...கற்பனையெல்லாம் இல்லை. அத்தனையும் நிஜமாக்கும்..கேட்குறவங்க இருக்காங்கன்னு சொல்ல வர்றேன்...இன்னைக்குக் கிளம்பி வர்றேன்னு சொன்னீங்கன்னா...மதியச் சாப்பாடு ரெடி பண்ணனுமான்னு கேட்டா உங்களுக்கு எப்டியிருக்கும்? இங்க சாப்டுக்கலாம்...நேரா வீட்டுக்கு வந்திருங்கன்னுல்ல சொல்லணும்... அதுதான
 மரியாதை? விரும்பி அழைக்கிறதுங்கிறது என்ன? சோத்துக்கு வர்றீங்களான்னு கேட்குறது மூலமா ராத்திரி தூங்கிறதுக்கு வாங்களேன்னு சொல்றாப்புலல்ல இருக்கு. அபத்தமாயில்லே? அப்டிக் கேட்குறவங்களோட மனசைக் கொஞ்சம் நினைச்சுப் பாருங்களேன். அதுதான் இங்க முக்கியம். உள் மனசுல இருக்கிறதுதானே வாய்ல வரும். மனுஷாளுக்கு வயசு மட்டும் ஆனாப் போதாது சார். மனசும் விசாலமடையணும்.''
 விடாமல் சிரித்தான் ஸ்ரீநிவாசன். எங்கயோ ஆளு நல்லா மாட்டியிருக்கார் போலிருக்கு...குத்துப் பட்டுட்டு வந்திருக்கார்னு தெரியுது... - நினைத்துக் கொண்டான்.
 ""பார்த்தியாம்மா தேவகி...உன் வீட்டுக்காரர் சிரிக்கிறதை? அவருக்கு இதுல ஒப்புதல்னு நினைக்கிறதா, மறுப்புன்னு நினைக்கிறதா? நீதான் சொல்லணும்'' சொல்லிவிட்டு தேவகியைப் பார்த்தான் சுந்தர்.

 


 ""நான் சிரிக்கிறது, மனுஷாளைக் குறிப்பா நோட் பண்ணியிருக்கீங்களே அதை நினைச்சு''
 ""பின்னே என்னங்க...ஒரு வீட்டுக்கு உறவுகள், அதுவும் நெருங்கிய சொந்த பந்தங்கள் அப்பப்போ வந்திட்டும், போயிட்டும் இருந்தாத்தானே அது வீடாயிருக்கும்...புருஷனும் பெண்டாட்டியும் மூஞ்சிய, மூஞ்சியப் பார்த்திட்டு இஞ்சி தின்ன குரங்காட்டம் உட்கார்ந்திட்டிருந்தா... அது நல்லாயிருக்குமா? எல்லாம் அம்மா, அப்பாவோட போச்சுங்க....மருமகள்கன்னு ஒவ்வொருத்தரா எப்ப உள்ளே நுழைய ஆரம்பிச்சாங்களோ...அப்பவே இந்த வித்தியாசமெல்லாம் வர ஆரம்பிச்சிடுச்சுங்க''
 "அப்போ அதுல உங்க ஒய்ஃப்பையும் சேர்த்துக்கலாமா? அண்ணியத்தான் சொன்னேன்'' அடக்க முடியாமல் சிரித்தான் ஸ்ரீநிவாசன்.
 "அதுலென்னங்க சந்தேகம்... பெண்கள் பெரும்பாலும் அந்த மனநிலைலதான் புகுந்த வீட்டுக்கு வர்றாங்கன்னு சொல்றேன்...நாமதான் அதை மாத்தணும்...நீ இப்டி இருக்க முடியாது...என்னைத் தனியாப் பிரிக்க முடியாது உன்னால... இந்தக் குடும்பத்துல எல்லாரோடையும் நீ சேர்ந்துதான் வாழ்ந்தாகணும்... நாம இருக்கிற இந்த வீட்டுக்கு என் அண்ணன்மார், தம்பி தங்கைகள்ன்னு எல்லாரும் வரப் போகத்தான் இருப்பாங்க.


 அதை நீ தடுக்க முடியாது...சேர்ந்து, கலந்து, சுமுகமா இருக்கப் பழகிக்கோ...அதுதான் உனக்கு நல்லதுன்னு எடுத்துச் சொல்லணும்''
 அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான் ஸ்ரீநிவாசன். விஷயம் எதில்தான் போய் முடிகிறது பார்ப்போம் என்று காத்திருப்பது போலிருந்தது அவன் அமைதி.
 "இப்போ யாரு உன்னை என்ன சொன்னாங்க...? எதுக்கு இப்டிப் புலம்புறே...? வெளிப்படையாப் பேசணும்னுட்டு நீயே மறைமுகமால்ல பேசுற...யாரைச் சொல்றே நீ? அத முதல்ல பளிச்சின்னு சொல்லு'' கூறிவிட்டு ஓரக் கண்ணால் பார்த்தாள் தேவகி. அவன் வாயிலிருந்தே வரட்டும் என்று.


 ""யார்ன்னும்மா குறிப்பிட்டுச் சொல்லச் சொல்றே? எல்லா மனுஷங்களுக்கும் மனசு மாறிப் போச்சு...கல்யாணம் ஆயிட்டா, மாறிடணும்னு இருக்கா? பிள்ளை குட்டி பெத்து, பேரன் பேத்திகள் எடுத்திட்டா மத்த உறவுகளோட பந்தம் அறுந்து போகுமா? யாரும் யார் வீட்டுக்கும் போகக் கூடாதா, வரக்கூடாதா? பெரிய சம்சாரி ஆனவனும் சரி, சம்சாரம் மட்டும்தான்னு கதியா இருக்கிறவனும் சரி, எல்லாப் பயலுக மனசும் மாறித்தானே போய்க் கிடக்குது... அவனவனப் பார்த்தா பயங்கர சுயநலமா இருக்கானுங்க... எப்பயாச்சும் சந்திச்சா, என்ன நீ பேசறதேயில்ல?... அப்டிங்கிறது...எடுத்த எடுப்புல எதிராளியக் கேள்வி கேட்டுட்டா அவன் முழிச்சிப் போவான்ல...? இந்த டெக்னிக்கெல்லாம் எனக்குத் தெரியாதும்மா...! ஃபோன் எல்லார்ட்டயும்தானே இருக்கு...? ஏன், இவன் பேசறது? இன்கமிங், அவுட்கோயிங் ரெண்டும் உண்டு ஃபோன்ல... அப்டீன்னா... திமிரு பிடிச்சவன்ங்கிறது......பாசமுள்ளவன், ப்ரதர்ங்கிற பிடிப்பு இருந்தா யார் வேணாலும் பேசலாமுல்ல...ரெண்டு வார்த்தை பேசிட்டா எங்க வந்து ஒட்டிக்குவாங்களோன்னு நினைச்சா? ஆனா நா அப்டியில்லம்மா...என் பொண்டாட்டியும் அப்டியில்ல... என் வீட்டுக்கு யார் வேணாலும் எப்ப வேணாலும் வரலாம், போகலாம்... தி டோர்ஸ் ஆர் ஆல்வேஸ் ஓப்பன் ட்டு ஆல்...! இந்த விஷயத்துல என் மனைவியே என்னைத் தடுக்க முடியாது... ஜால்ரா போடுறவன்தான் தயங்கணும்... பயப்படணும்... நான் ஜால்ரா இல்லை... ஆனா என் வீட்டுக்குத்தான் யாரும் வர மாட்டேங்கிறாங்க...அது எங்களோட முகராசியோ என்னவோ? அதான் சொன்னனே...கட்டன்ரைட்டாப் பேசுறவன எவனும் விரும்ப மாட்டாங்கிறதை...! வேண்டி விரும்பி நின்னா, விலகிப் போகும்னுவாங்க... அது எங்க அளவுல ரொம்பச் சரியா இருக்குது''


 "இப்பச் சொன்னியே அது நூத்துக்கு நூறு உண்மை... உடம்பு முடியாதவங்கதான் அண்ணி... ஆனா எல்லாரும் வரணும் போகணும்னு இருக்கிறவங்க... யாராச்சும் வீட்டுக்கு வந்துட்டா, அவுங்க முகத்துல சிரிப்பப் பார்க்கணுமே... அடிக்கடி சிரிக்காதவங்க முகம் மலர்ந்து சிரிச்சா அம்புட்டு அழகா இருக்குமாக்கும்... சந்தோஷம் அப்டித் துள்ளும்...கெüரி அண்ணி மனசே மனசு...வடிச்சிக் கொட்டிடுவாங்களே...வித விதமாக் காய்கறி வைப்பாங்களே...போன தடவை வந்திருந்தப்ப வெஜிடபிள் பிரியாணி செய்து போட்டாங்களே...புட்டு, ஆப்பம், குழிப்பணியாரம், வற்றல், வறுவல்னு அமர்க்களப்படுத்திட்டாங்களே...!.என்னா பிரமாதம்...அவுங்க செய்ததை விட, நீ உட்கார்ந்து அத்தனை காய்கறியையும் பாங்கா, பொறுமையா நறுக்கிக் கொடுத்த பாரு...அத மறக்க முடியுமா? அண்ணி உனக்கு நல்லாத்தான் ட்ரெயினிங் கொடுத்து வச்சிருக்காங்க...சரியான பொண்டாட்டிதாசன் நீ...! இதுல கெத்து வேறெயாக்கும்'' சொல்லிவிட்டு வெடிச் சிரிப்புச் சிரித்தாள் தேவகி.
 "அவ சொல்ற நல்லதுக்கு தாசன்...ஒத்துக்கிறேன்...எல்லாத்துக்கும் பெருமாள் மாடுமாதிரித் தலையாட்டுற சோலி நம்மகிட்டக் கிடையாது... ஆனா ஒண்ணு...உடம்பு முடியுதோ இல்லையோ, வடிச்சிக் கொட்டிருவா...திருப்தியா போட்ருவா எல்லாருக்கும்...உடல் நோவுனால முக்கி முனகிட்டே செய்வா...அது நாம இருக்கிறது பிடிக்கலையோன்னு பார்க்குறவங்களுக்குத் தோணும்...பொதுவா, உடம்பு படுத்துறவங்களே அப்டித்தான்...சிடு சிடுன்னு இருக்கிற மாதிரி இருக்கும்... முகத்துல சிரிப்பு, சந்தோஷம் தெரியாது... பார்க்கிறவங்களுக்கு வித்தியாசமாத் தெரியும்...நாம வந்தது பிடிக்கலையோன்னு நினைக்கக் கூட வாய்ப்பிருக்கு... நானே நினைச்சு பயந்திருக்கேன்...இப்டிச் சில குறைகள் உண்டுதான்... எம் பொண்டாட்டியானாலும் சொல்றதைச் சொல்லித்தானே ஆகணும்...'' சிரித்தான் சுந்தர். வெளிப்படையாய்,
 மனசு விட்டு எல்லாவற்றையும் பேசிக் கொள்வது எத்தனை ஆரோக்கியம்? இதை மொத்தக் குடும்பமும் புரிந்து கொண்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்? ஒவ்வொருவரையும் ஒவ்வொருவர் சரிவரப் புரிந்து கொள்வது நீடித்த, நிலைத்த குடும்ப ஒற்றுமைக்கு அடித்தளமல்லவா? அவரவர் இருப்பை அப்படி அப்படியே ஏற்றுக் கொள்வது வம்பில்லாத பாடாயிற்றே...!


 நிலைமை சற்று லகுவாவதை உணர்ந்த ஸ்ரீநிவாசனும் அந்தச் சிரிப்பில் பங்கு கொண்டான்.
 "உண்மைதான்... நான் கூட இங்க அப்டியெல்லாம் செய்றதில்ல...எனக்குக் காலைல பேப்பர் முழுக்கப் படிச்சாகணும்... இவ காயை நறுக்குங்கன்னா எனக்குக் கோபம்தான் வரும்... அபூர்வமா என்னைக்காச்சும் செய்திருப்பேன்... அது பேப்பர் வராத நாளாயிருக்கும்''
 "வருஷங்கூடி பொங்கல், தீபாவளி, சுதந்திர தினம், குடியரசு தினம்னு லீவு விடுவாங்களே...அதுக்கு மறுநாள் பேப்பர் வராதே...அதச் சொல்றீங்களா?
 நல்லாக் கேளுண்ணா...கொஞ்சம் கூட இரக்கமே கிடையாது இவருக்கு... அடுப்படி வேலைல பக்கத்துலயே வரமாட்டாராக்கும்... எனக்கு உதவியா துரும்பை நகத்த மாட்டார்... ஒரு தேங்காய்த் துருவல்ன்னாக்கூட நானேதான் செய்தாகணும்.''
 "இது ரொம்ப அபாண்டம்டீ... எத்தனை நாள் வீடு சுத்தப் படுத்தியிருக்கேன்... பெருக்குமார் எடுத்துக் கூட்டியிருக்கேன்... தினசரி வாசல் தெளிச்சனே... அதெல்லாம் கணக்கில்லையா? எத்தனை நாள் வாஷிங் மெஷின் போட்டிருக்கேன்...எதையுமே சொல்ல மாட்டேங்கிறியே...?''
 சுந்தர் பேசாமலிருந்தான். அவன் இதில் கருத்துச் சொல்வது உகந்ததில்லை என்று தோன்றியது. வந்த இடத்தில் புருஷன் பெண்டாட்டிக்குள் சண்டை மூட்டி விடுவதா வேலை?


 "அதெல்லாம் செய்வார்ம்மா...மாப்பிள்ளை செய்யாம உனக்கு வேறே யார் செய்யப் போறா? அவர்தானே உனக்கு எல்லாம்'' -
 ""நானும் செய்வேன்... ஆனா உங்கள மாதிரி என்னால செய்ய முடியாது... நீங்க வீட்டையே தூக்கில்ல நிறுத்துறீங்க... நமக்கு அந்தளவுக்கு ஆகாது... நான் வீட்டு வேலைகளுக்கெல்லாம் சின்ன வயசிலேர்ந்து அவ்வளவாப் பழகலை... வெளி வேலை சொல்லுங்க... எல்லாம் செய்திடுவேன்... கேட்டுப் பாருங்க... வீட்டுக்குத் தேவையானது அத்தனையும் ஒண்ணு விடாம வாங்கிப் போட்டிடுவேன்... அவ எதுக்கும் வெளிலயே போனதில்லை. எதுவும் குறை வைக்க மாட்டேன்... என்ன ஒரு சங்கடம்னா, இவ நச்சு...நச்சுன்னு, ஒவ்வொண்ணா தினசரி சொல்லிட்டிருப்பா... அதுதான் எனக்குப் பிடிக்காது... மொத்தமா எல்லாத்தையும் குறிச்சு ஒரு லிஸ்ட் கொடு...ஒரே ஸ்ட்ரோக்குல வாங்கிப் போட்டுடறேன்... பிட்டு பிட்டாச் சொல்லாதேன்னுவேன்... அதுதான் எனக்கு இவள்ட்டப் பிடிக்காதது...''
 புன்னகையோடு அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்தான் சுந்தர்.
 வந்த இடத்தில் எதையோ தொட, எதுவோ ஆரம்பித்து எங்கெங்கோ சென்றுவிட்டது தெரிந்தது. எல்லாமும் பலவாறாய்த்தான் இருக்கிறது உலகில். மனிதர்கள் பலவிதம் என்பதுபோல், மனசுகளும் பலவிதமாய் மாறி நிலைத்து விட்டது அங்கங்கே. அதனால் உறவுகள் தனித்து நிற்கின்றன. ஏதோ அவ்வப்போது சந்தித்துக் கொள்ளும்போது ரொம்பவும் இஷ்டம் போல் கை குலுக்கிக் கொள்கிறார்கள். கட்டிக் கொள்கிறார்கள். முத்தம் கூடக் கொடுத்துக் கொள்கிறார்கள். ஒன்றாய்ச் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். காரியம் முடிந்தது என்று பிரிந்து விடுகிறார்கள். அத்தனையும் வேஷம். வெளி வேஷம். உள்ளே புகுந்து புறப்பட்டால்தான் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறுவது தெரியும்.


 ஆனாலும் இந்த அளவுக்காவது உறவுகள் நிலைத்து நிற்கின்றனவே என்றுதான் சொல்ல வேண்டும். நீ யாரோ, நான் யாரோ என்ற நிலை இன்னும் வரவில்லை!....காலம் போகிற போக்கைப் பார்த்தால் அந்த நிலையும் எட்டுமோ என்னவோ? ஆனாலும் கூட்டுக் குடும்பங்களுக்கான மகிமையே தனிதான். எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், எல்லாரும் ஒன்று, ஒருத்தருக்கொருத்தர் உதவி, உனக்காக நான், எனக்காக நீ, நமக்காக நாம் என்ற நிலை இருந்தது. இன்று அது அழிந்து போனது பெரிய துரதிருஷ்டம்தான்... நினைத்துக் கொண்டே மாடியை நோக்கிப் போனான் சுந்தர்.
 "உங்க அண்ணா தம்பிகளுக்குள்ளயே அத்தனை சுமுகம் இல்லைன்னு சொன்னனே...இப்பத் தெரியுதா?'' மெல்ல தேவகியின் அருகே சென்று அவள் காதைக் கடித்தான் ஸ்ரீநிவாசன்.


 "எல்லாரும் வேணும்னு நினைக்கிறவர் சுந்தர் அண்ணா... தன்னோட உடலுழைப்பை வித்தியாசமில்லாம, கெüரவம் பார்க்காம, அத்தனை பேர் குடும்பத்துக்கும் கொடுத்திருக்கார்... பணம்னாலும் அஞ்சமாட்டார். தயங்க மாட்டார். இன்னும் கொடுக்கிற மனசும் அவருக்குண்டு...சாகுற வரைக்கும் மத்தவங்களுக்கு உதவியா இருக்கணும்னு நினைக்கிறவர் அவர். எந்தவொரு பதட்டமான நேரத்துலயும் அவரைக் கூப்பிட்டாப் போதும். ஆபத்பாந்தவன். அதுக்கு பங்கம் வந்ததுதான் அவர் மனசைப் பாதிச்சிருக்கு. பாவந்தான்...நாலு நாளோ, ஒரு வாரமோ, அவரிஷ்டம் போல சந்தோஷமா, இங்க இருந்திட்டுப் போகட்டும்...சரியா? திருப்தியாச் செய்து போட்டு அனுப்பி வைப்போம்... மனசுக்கு ஆறுதலாயிருக்கும்... என்னைக்கானாலும் அவர் நமக்கு அணுக்கம்... மலையே கவுந்தாலும் ஒரு வார்த்தை சொல்லிக் கூப்பிட்டு விட்டா, மறு நிமிஷம் வந்து நிற்பார்... அவ்வளவு சப்போர்ட்டு. அம்புட்டு நல்ல மனுஷன்''
 மாடிப்படி ஏறும்போது லேசாய்க் காதில் விழுந்த தங்கையின் இந்த ஆதரவான வார்த்தைகள் கேட்டு சுந்தரின் நெஞ்சு விம்ம, கண்களில் நீர் கசிந்தது.

 

http://www.dinamani.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.