Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆர்ஜென்டீனா: அம்மம்மாக்களின் உறுதி

Featured Replies

ஆர்ஜென்டீனா: அம்மம்மாக்களின் உறுதி
 

மரணம் என்பது கொடுமையானது. காணாமல் போவதென்பது மிகவும் கொடுமையானது. அது நிச்சயமின்மைகளையும் எதிர்பார்ப்பையும் ஒருங்கே கிளறிவிடும் அபத்தத்தை எளிமையாகச் செய்துவிடும்.   

காணாமல் போதல்கள் உலகெங்கும் தொடர்ந்து நடக்கின்றன. அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும் துயரமும் அவலமும் சொல்லி மாளாது.   

அண்மையில் ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்ற இரண்டு நிகழ்வுகள், இக்கட்டுரையை 
எழுதத் தூண்டின.  முதலாவது, ஆர்ஜென்டீனாவில் பதவிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம், குற்றவாளிகளுக்கு விடுப்பு அளித்தமைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, இளவயது மற்றும் வயதுமுதிர்ந்த பெண்கள் வீதிகளில் இறங்கி, பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.  

image_8d4ed08b9b.jpg

 இரண்டாவது, 125ஆவது குடும்ப இணைப்பை, ஒருதொகுதி அம்மம்மாக்கள் சாத்தியமாக்கினர். இவை, ஊடகக்கவனம் பெறாதபோதும், இரண்டும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளாகும். இரண்டும், 1970ஆம் ஆண்டு காலப்பகுதியில், ஆர்ஜென்டீனாவில் நடைபெற்ற சர்வாதிகார ஆட்சியை நினைவு கூர்வன.   

1970களில் ஆர்ஜென்டீனாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது. இலத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளில், அக்காலப்பகுதியில் சர்வாதிகார ஆட்சிகள் நிலைகொண்ட காலம் அது.  

 ஆர்ஜென்டீனா, சிலி, ஹொன்டூரஸ், டொமினிக்கன் குடியரசு, எல் சல்வடோர், உருகுவே, பிரேஸில், பெரு, பாரகுவே எனக் கிட்டத்தட்ட இலத்தீன் அமெரிக்காவின் அனைத்து நாடுகளிலும், சர்வாதிகார ஆட்சிகள் 1960 முதல் நிலைபெற்றன.   இதற்கான பிரதான ஆதரவையும் நிதியுதவியையும் அமெரிக்கா வழங்கி வந்தது. அக்கதையை இன்னொரு முறை பார்க்கலாம்.   
ஆர்ஜென்டீனாவில் 1976 முதல் 1983 வரை இடம்பெற்ற மிக மோசமான ஆட்சியில், ஆட்கள் வரன்முறையின்றிக் காணாமல் போனார்கள். அவ்வாறு காணாமல் போனவர்கள், வெறுமனே அரசாங்கத்துக்கு எதிராகக் கருத்துரைப்பவர்கள் மட்டுமல்ல, சாதாரண மக்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோருமே காணாமல் போனார்கள்.  இதற்கெதிராகக் குரல் கொடுப்பவர்கள், காணாமல் போனவர்களைத் தேடுபவர்கள் என அனைவரும் காணாமல் போனார்கள்.   
1977 - 1983 காலப்பகுதியில், ஆர்ஜென்டீனாவில் புகழ்பெற்ற இன்னுமோர் அம்சம், மரண விமானப் பயணங்களாகும் (Death Flights). கொலை செய்யப்பட வேண்டியவர்களை, “விடுவிக்கிறோம்” என்று சொல்லி, விமானத்தில் ஏற்றி, அழைத்துச் சென்று, அவர்களுக்கு மயக்க ஊசி கொடுத்து நிர்வாணமாக்கி, உயிருடன் அத்திலாந்திக் கடலில் தள்ளிவிடுவது ஒரு செயற்பாடாக இருந்தது. இது ‘மரண விமானப் பயணம்’ என அழைக்கப்பட்டது.  
 இராணுவ ஆட்சிக் காலத்தில் 200 - 250 வரையிலான இவ்வாறான பயணங்கள் இடம்பெற்றதாகச் சொல்லப்படுகின்றது.   
இவ்வாறான ஒரு மோசமான சூழலில், ஆர்ஜென்டீனாவில் காணாமல்போன தங்கள் பிள்ளைகளைத் தேடுவது என்ற ஒரே இலக்கைக் கொண்ட தாய்மார்கள் ஒன்றுசேர்ந்து, இதற்கெதிராகக் குரல் கொடுப்பது என்று முடிவெடுத்தார்கள். அவர்கள், தங்கள் கோரிக்கையை முன்வைப்பதற்காக, வெள்ளைநிறத் தலைப்பட்டியை அணிந்தபடி, மௌன ஊர்வலங்களை மேற்கொண்டனர்.   
அடுத்த கட்டமாக அவர்கள், ஆர்ஜென்டீனாவின் தலைநகரான பொனஸாரிஸில் உள்ள ‘பிளாசா டி மாயோ’ என்ற சதுக்கத்தில் கூடத் தொடங்கினர். இதன்விளைவாக அவர்கள், ‘பிளாசா டி மாயோவின் அம்மாக்கள்’ (Mothers of the Plaza de Mayo) என்று அழைக்கப்பட்டார்கள். இது மிகப்பெரிய இயக்கமாக மாறியது.   
காணாமல்போன தங்கள் பிள்ளைகளைத் தேடி, 14 தாய்மார்கள் ஒன்று சேர்ந்து இவ்வியக்கத்தை உருவாக்கினார்கள். இவர்கள் எல்லோரும், ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை வேளையில் ‘பிளாசா டி மாயோ’ என்ற சதுக்கத்தில் கூடி, அரைமணி நேரம் அமைதியாக அந்நகரைச் சுற்றி வந்தனர்.  குறுகிய காலத்திலேயே காணாமல்போன பலரது தாய்மார்களும், இவ்வியக்கத்தில் இணைந்துகொண்டனர். 1977 ஏப்ரல் 30ஆம் திகதி, ஜனாதிபதி மாளிகையை நோக்கிய அவர்களது முதலாவது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.  1977 டிசெம்பரில் இவ்வியக்கத்தை தோற்றுவித்த Azvcena Villaflor என்பவர் காணாமல்போனார். இராணுவ ஆட்சிக் காலப் பகுதியில், இவ்வியக்கத்தைத் தொடக்கிய மேலும் இருவர் காணாமல் போயினர்.  

image_3dcee3823b.jpg
 ‘Dirty War’ என்று சொல்லப்படுகின்ற 1976 - 1983 காலப்பகுதியில், 9,000 பேர் காணாமல் போனதாக அரசாங்கம் சொன்னது. ஆனால், 30,000 பேர் வரையில் காணாமல் போனதாகச் சொல்கிறது ‘பிளாசா டி மாயோ’வின் அம்மாக்கள் இயக்கம்.   
1983 இல் இராணுவ சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்த பின்னரும், இவர்களது போராட்டம் தொடர்ந்தது. காணாமல்போன தங்கள் பிள்ளைகளைப் பற்றிய தகவல்களை வெளியிடுமாறு இவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தார்கள்.   
1980களின் இறுதிப் பகுதியில், ஆர்ஜென்டீனிய அரசாங்கம், காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு உதவித்தொகை அளிப்பதாகச் சொல்லியது. உதவித் தொகையை மறுத்த தாய்மார், தங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று அரசாங்கம் சொல்ல வேண்டும் என்றும் காணாமல் போதல்களுடன் அரசாங்கத்துக்குத் தொடர்பிருக்கிறது என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.   
இந்தத் தாய்மார்களது இயக்கம், ஆர்ஜென்டீனிய அரசியல் பண்பாட்டில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தியது. மக்கள் மயப்படுத்தப்பட்ட இயக்கங்கள் உருவாகின.  அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் துணிந்து வீதிகளில் இறங்கித் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர். இந்நிலையில் 1986இல் இவ்வியக்கத்திலிருந்து ‘Mothers of the Plaza de Mayo - Founding Line’ என்ற பிரிவொன்று உருவானது.   
இது காணாமல் போதல்களுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தி போராடி வருகிறது. இறுதியாக 2006இல் ஆர்ஜென்டீன அரசாங்கம் காணாமல் போதல்களுக்கும் அரசாங்கத்துக்கும் தொடர்பிருந்ததை ஒத்துக்கொண்டு, மன்னிப்புக் கேட்டது. இன்றுவரை இவர்களது வியாழன் ஒன்றுகூடல்கள் தொடர்கின்றன.   
இவ்விரு அமைப்புகளின் தொடர் போராட்டங்களின் விளைவால், காணாமல் போதல்களுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். ஆனால், இப்போது பதவிக்கு வந்துள்ள ஜனாதிபதி, தண்டனை பெற்றவர்களின் தண்டனையைக் குறைத்ததுடன் அவர்களில் பலரை விடுவித்தும் இருக்கிறார்.   
இன்று வயதாகிவிட்ட போதும், அந்த அம்மாக்கள், இன்று அம்மம்மாக்கள் நூற்றுக்கணக்கில் ஒன்றுதிரண்டு, வீதிகளில் இறங்கிப் போராடியிருக்கிறார்கள். இது ஆர்ஜென்டீனாவில் இன்னொரு மக்கள் போராட்டத்துக்கான தொடக்கமாக இருந்துவிடுமோ என ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள். 40 ஆண்டுகளாகப் போராடும் இந்த அம்மாக்கள், இன்னமும் மனஉறுதியுடன் போராடுவது, ஒருபுறம் அவர்களின் மனவுறுதியையும் போராட்டக் குணத்தையும் வெளிப்படுத்தினாலும் மறுபுறம், நீதியின் விலை குறித்த கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.   
சர்வாதிகார ஆட்சிக்காலத்தில் காணாமல் போதல்களுடன் தொடர்புடைய இன்னொரு முக்கிய அம்சத்தை இங்கு குறிப்பிடல் தகும்.   
இக்காலப்பகுதியில் கர்ப்பிணிப் பெண்கள் பெருமளவில் கடத்தப்பட்டுக் காணாமல் போயினர். அப்பெண்களுக்குக் குழந்தை பிறந்தவுடன், அக்குழந்தை தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு, குழந்தை இல்லாத ஒரு தம்பதிகளுக்குக் கொடுக்கப்படும்.   
அத்தம்பதியினர் இராணுவம் அல்லது பொலிஸ் துறையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்; அல்லது அந்த அமைப்புகளுக்கு உடந்தையாக இருக்கும் நீதிபதியாகவோ, பத்திரிகையாளராகவோ கூட இருக்கலாம்.  அவர்கள் கைதிகளிடமிருந்து திருடப்படும் குழந்தையை எடுத்துச் செல்லக் காத்திருந்தனர். ஒவ்வொரு வதை முகாமிலும் இப்படிக் காத்திருப்பவர்கள் இருந்தார்கள். கைதிகளில் ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் அனைவருமே அநேகமாகக் குழந்தை பிறந்த உடனேயே கொல்லப்பட்டனர்.
இதேபோல, பிறந்த குழந்தைகள், சிறார்கள் ஆகியோரும் கடத்தப்பட்டனர். இவர்களும் குழந்தையற்ற அல்லது குழந்தையை வேண்டுகிற அரசாங்கத்துக்கு ஆதரவான குடும்பங்களுக்கு வழங்கப்பட்டார்கள்.  இதனால் பல குழந்தைகள் வலுக்கட்டாயமாக குடும்பங்களில் இருந்து பிரிக்கப்பட்டனர். இவ்வாறு பிரிக்கப்பட்ட குடும்பங்களை மீளச் சேர்க்கவும் இக்குழந்தைகளையும் அவற்றின் குடும்பங்களையும் கண்டுபிடிக்க, 1977 இல் பிளாசா டி மாயோவின் அம்மாக்கள் அமைப்பிலிருந்து, ‘பிளாசா டி மாயோவின் அம்மம்மாக்கள்’ (Grandmothers of the Plaza de Mayo) அமைப்பு உருவாகியது.  
 இது காணாமற்போன குழந்தைகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காகவும் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப் பட்டிருந்தபோது, பிறந்த குழந்தைகளை அவர்களது குடும்பத்தில் சேர்ப்பதற்காகவும் உருவாக்கப்பட்டது.   
இவ்வாறான குழந்தைகளைக் கண்டுபிடிப்பதும், கண்டுபிடித்த குழந்தையின் குடும்பத்தைக் கண்டுபிடிப்பதும் அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. அதற்குச் சட்டரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாரிய தடைகள் இருந்தன. இதனால், இவர்களால் தொடக்கத்தில் வெற்றிகரமாக இயங்க முடியவில்லை. இவர்களது அயராத போராட்டத்தின் விளைவால் ‘Argentine Forensic Anthropology Team’ என்ற அமைப்பு 1986இல் தோற்றம்பெற்றது. இவ்வமைப்பு, உயிரியியல் ரீதியான பரிசோதனைகள் மூலம், ஆட்களைக் கண்டறியும் பணியை மேற்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது.  1997இல் சேகுவேராவின் உடலின் பாகங்களை, பொலிவியாவில் பரிசோதனைகள் மூலம் கண்டெடுத்தது இவ்வமைப்புக்கு உலகளாவிய ரீதியில் ஓர் அங்கிகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.   
உலகில் முதன்முதலாக விஞ்ஞான ரீதியாக, மனித உரிமை மீறல்களையும் காணாமல் போதல்களையும் கண்டுபிடிக்கவும் உறுதிசெய்யவும் இந்த அமைப்பும் இந்த முறையும் உதவின.  
 இன்று உலகெல்லாம் இந்த உயிரியியல் முறை பயன்படுத்தப்படுகின்ற போதும் உலகில் முதன்முதலாக இவை அறிமுகமானதும் செயற்படுத்தப்பட்டதும் ஆர்ஜென்டீனாவில் ஆகும். இவ்வமைப்பு இதுவரை 30க்கும் அதிகமான நாடுகளில் பணியாற்றியுள்ளது.  
இவ்வமைப்பின் உதவியோடு பல குழந்தைகள் அவர்களின் குடும்பங்களிடம் மீண்டும் சேர்ந்தன. குறிப்பாகக் கைதாகியிருந்த நிலையில் பிறந்த குழந்தைகள், தங்கள் குடும்பங்களுடன் மீள இணைவது ஆர்ஜென்டீனிய சமூக அரசியற்பரப்பில் மிகுந்த நெருக்கடியை உருவாக்கியது. 
இருந்தபோதும், அம்மம்மாக்கள் இதுவரை இப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார்கள். அதன் ஒருபகுதியாக, இவ்வாறு பிறந்த 125ஆவது குழந்தையை அண்மையில் வெற்றிகரமாகக் குடும்பத்துடன் இணைத்து வைத்தனர். இவை இவ்வம்மம்மாக்களின் உறுதியை காட்டுகிறது.   
ஒருவகையில், இவ்வமைப்பு உலகளாவிய ரீதியில் காணாமல் போனவர்களைத் தேடி அறிவதற்கான தாய்மார்களின் போராட்டத்துக்கு ஒரு முன்னுதாரணமாகும்.   
இதேபோல ஓர் அமைப்பு, இந்தியாவில் மணிப்பூரில் செயற்படுகிறது. ‘மணிப்பூர் தாய்மார்கள்’ என்று அழைக்கப்படுகின்ற அமைப்பு, இந்திய இராணுவம் மணிப்பூரில் நடத்திவரும் கொடூரமான பாலியல் வன்முறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றது. 2004ஆம் ஆண்டு இராணுவத் தலைமையகம் முன்பு இவ்வமைப்பைச் சேர்ந்த தாய்மார்கள் ‘இந்திய இராணுவமே எங்களையும் வன்புணர்வுக்கு உட்படுத்து’ என்ற பதாகையை ஏந்தியபடி நிர்வாணப் போராட்டம் நடத்தினார்கள். இப்போராட்டம் இந்திய இராணுவம், மணிப்பூரில் அரங்கேற்றும் அநியாயங்களை உலகறியச் செய்தது.   

image_876751bb7c.jpg
அன்னையர்கள் போராடுவது இலங்கைக்குப் புதிதல்ல என்பதை இங்கு சொல்லியாக வேண்டும். 1990களில் வடக்கில் தோற்றம் பெற்று, வீரம்மிகு போராட்டங்களை நிகழ்த்திய ‘அன்னையர் முன்னணி’யாகட்டும், தெற்கில் 1988-1990 காலப்பகுதியில் காணாமல் போன தங்கள் பிள்ளைகளைத் தேடி உருவான ‘அன்னையர் அமைப்பு’  ஆகட்டும், இலங்கையில் காணாமற்போனவர்களுக்கான தாய்மார்களின் போராட்டம் முன்மாதிரிகளைக் கொண்டுள்ளது.   
ஆர்ஜென்டீனாவின் ‘பிளாசா டி மாயோவின் அம்மாக்கள் ’காட்டி நிற்கிற வழி யாதெனில், போராடுவதைத் தவிர போக்கிடம் வேறில்லை என்பதாகும். இவ்விடத்தில் காணாமற்போதல்கள், சித்திரவதைகள் பற்றிய முக்கியமான படைப்புகள் பலவற்றைத் தந்த இலத்தீன் அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஏரியல் டோர்ஃப்மனின் கவிதையொன்றுடன் இதை நிறைவுசெய்வது பொருத்தம்.   

இம்மனுவை அனுப்புதற்காக என்னை   
மன்னியுங்கள் கடவுளே  
ஆனால், எமக்கோ போக்கிடம் வேறில்லை  
இராணுவ ஆட்சி பதில் சொல்லாது  
பத்திரிகைகள் பகடியாக்கிவிட்டு மௌனிக்கின்றன  
மேன்முறையீட்டு நீதிமன்றமோ   
பிரதிவாதித் தரப்பின் வேண்டுதலைக் கேளா  
உயர் நீதிமன்றமோ இதை நிறுத்திவிட்டு  
ஒதுங்கியிருக்குமாறு எமக்கு ஆணையிட்டது  
அவனது குடும்பத்தின் இம்மனுவை ஏற்க  
எந்தக்காவல் நிலையமும் துணியாது.  
கடவுளே, எங்கும் நிறைந்திருப்பவரே,  
நீர் விலாக்ரிமல்டியிலும் இருந்துள்ளீரா?  
கொலோனியா டிக்டினிடாடிலிருந்தோ   
லோண்ட்றெஸ் தெருவிலுள்ள அறையிலிருந்தோ  
இராணுவக் கல்லூரியின்   
மேல் மாடியிலிருந்தோ  
எவரும் என்றும் வெளியேறியதில்லை என்கிறார்கள்  
அவ்வாறெனின்   
மெய்யாகவே நீர் எங்கும் நிறைந்துள்ளீரெனின்  
தயதுசெய்து எமக்குப் பதில் கூறும்  
நீர் அங்கு இருந்தபோது  
எங்கள் மகன் ஜெராடோவைக் கண்டீர்களா?  
கடவுளே, அவன் உமது தேவாலயத்தில்   
ஞானஸ்நானம் பெற்றான்.   
எமது நான்கு குழந்தைகளில் ஜெராடோதான்   
அதி கிளர்ச்சியாளனும் அதி இனியவனுமாவான்   
உமக்கு அவனை நினைவில்லையெனில்   
ஞாயிற்றுக்கிழமைகளில் பூங்காவில் எடுப்பதுபோன்ற  
புகைப்படமொன்றை எம்மால் அனுப்பமுடியும்  
இராப்போசனத்தின் பின்னர்   
அவர்கள் கதவைத்தட்டிய இராப்பொழுதில்   
அவனை இறுதியாக நாங்கள் கண்டபோது  
அவன் நீல மேற்சட்டையும்   
சாயம் போன டெனிமுமே அணிந்திருந்தான்.  
இப்போதும் அவற்றையே அணிந்திருக்க வேண்டும்  
கடவுளே, அனைத்தையும் காண்பவரே,  
அவனை நீர் கண்டீரா?  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆர்ஜென்டீனா-அம்மம்மாக்களின்-உறுதி/91-210745

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.