Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் தடுமாற்றமும் பேரவையின் விழிப்புணர்வும்

Featured Replies

கூட்டமைப்பின் தடுமாற்றமும் பேரவையின் விழிப்புணர்வும்

 

 
 

கூட்டமைப்பின் தடுமாற்றமும் பேரவையின் விழிப்புணர்வும்

நரேன்-

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் சூடு பிடித்திருக்கும் நிலையில் கிராம, பிரதேச மட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் குறித்தும் தமது அதிகார வரம்பெல்லைக்குள் காலத்தின் தேவைக்கேற்ப நூதன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எத்தகைய அபிவிருத்திகளை செய்யப் போகின்றோம் என்பது குறித்தும் பேசுவதற்கு பதிலாக, தேசிய அரசியலும், இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட இருக்கின்ற அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கையும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. தேசியக் கட்சிகள் முதல் பிராந்திய கட்சிகள் வரை எந்தவொரு கட்சியும் அபிவிருத்தி குறித்தும் அதற்காக வைத்திருக்கும் திட்டங்கள் குறித்தும் இன்று வரை தமது பிரச்சார மேடைகளில் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை. மேலும் முதன்முறையாக சட்ட ரீதியாக பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஆசனப் பங்கீட்டில் தத்தமது கட்சிகளின் வேட்பாளர்களை முன்னுறுத்தியும், அவர்கள் வெற்றி பெற வேண்டியதன் அவசியம் குறித்தும் கூட எந்தவொரு கட்சியும் இதயசுத்தியுடன் பிரச்சாரங்களை முன்னெடுத்து இருப்பதாக தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் இப்படி ஒரு சட்டம் வராது இருக்குமாகவிருந்தால் பெண்களை வேட்பாளர் பட்டியலில் இணைத்துக் கொள்வது என்பது கேள்விக்குறியாகியிருக்கும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கில் சுமார் 80 ஆயிரம் பேர் யுத்த்தின் மூலம் தமது கணவர்மாரை இழந்துள்ளதாக மேடைகளில் வாய்கிழியப் பேசும் அரசியல் தலைமைகள் மனமுவந்து அவர்களின் ஆளுமையை சமுதாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ளக் கூடிய வகையில் பிரதிநித்துவம் வழங்குவதற்கு முன்வந்துள்ளதாகவும் தெரியவில்லை. இத்தகைய பெண்களில் பலர் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் தலைமைத்துவ பயிற்சிகளையும், ஆளுமைப்பயிற்சிகளையும், அரசியல் பிரதிநித்துவத்தில் பணியாற்றுவதற்கான பயிற்சிகளையும் பெற்றுள்ளவர்கள். இவர்களை தேடிக் கண்டுபிடித்து அரசியல் கட்சிகள் தமது ஆசனப் பங்கீட்டில் இணைந்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வலிந்து சென்று கேட்ட பொழுதிலும் கூட பல கட்சிகள் அவர்களுக்கு ஆசனம் ஒதுக்கி கொடுக்க மறுத்துள்ளது. இந்தவிடத்தில், வரவிருக்கின்ற உள்ளூராட்சித் தேர்தலானது அதன் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

TPC-Meeing-Jaffna-1கடந்தமுறை நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்கள் யுத்தம் முடிவடைந்தவுடன் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து நடைபெற்று இருந்தது. அந்த நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் புதிதாக இரண்டு கட்சிகளும் இணைந்து தமிழ் தலைமைகள் ஒன்றாக இருக்கின்றது. ஆகவே, மக்கள் அந்த ஒற்றுமையை அங்கீகரித்து சர்வதேச சமூகத்திற்கு எமது ஒற்றுமையை வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த ஒற்றுமையின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்டிருந்த யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள், மனிதவுரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கு உங்களின் இந்த அங்கீகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பக்க பலமாக இருக்கும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. அபிவிருத்தி குறித்து திரு சம்மந்தன் பேசுகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றக் கூடிய அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் வெளிநாட்டில் உள்ள எமது தொடர்புகளைக் கொண்டு நிதி உதவிகளைப் பெற்று அவிவிருத்திகளை மேற்கொள்வோம். இந்த விடயத்தில் நாம் அரசாங்கத்தை நம்பியிருக்கத் தேவையில்லை என்றும் கூறியிருந்தார். இதனைப் போன்றே கிழக்கு மற்றும் வடக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்களும் நடைபெற்றன. அதற்கும் இதே வாக்குறுதிகளே வழங்கப்பட்டிருந்தன. அதுமட்டுமன்றி, இணைந்த வடக்கு கிழக்கில் ஒரு சமஸ்டி அலகை உருவாக்குவதே அரசியல் இலக்கு என்றும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

வடக்கு – கிழக்கு வாழ் ஒட்டுமொத்த தமிழ் தேசிய இனமும் ஐக்கியத்திற்காகவும், தேர்தல் விஞ்ஞாபனத்திற்காகவும் தமது ஆணையை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியிருந்தது. இருந்தும் அவர் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில் தமிழ் தேசிய இனத்தின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லப்படுகின்ற மைத்திரி – ரணில் கூட்டாச்சியில் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு ஒரு புதிய அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கையும் வெளிவந்திருக்கிறது. ஆக, தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் எந்தவொரு தேர்தலும் அரசியல் உரிமையை பெற்றுக் கொள்வதற்கான தேர்தலாக இருந்ததேயன்றி, வெறுமனே அபிவிருத்தியை மட்டுமோ அல்லது வெறும் பொருளாதாரத்தை மையப்படுத்தியோ அல்லது தனிநபர் வருமானத்தை கூட்டுவதை நோக்கமாக கொண்டோ இருந்ததில்லை.

இந்த நிலையில், வெளிவந்திருக்கின்ற புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பான தெளிவு மக்களிடம் ஏற்படவில்லை. தென்னிலங்கை சமூகத்தை திருப்திப்படுத்தும் வகையில் தமிழ் மக்களது அபிலாசைகளை புறக்கணித்து இந்த இடைக்கால வரைவு வெளிவந்துள்ளதான குற்றச்சாட்டுக்கள் ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு தரப்புக்களாலும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றது. தமிழ் மக்களது அபிலாசைகளான வடக்கு- கிழக்கு இணைப்பு, சமஸ்டி என்பன புறக்கணிக்கப்பட்டு பௌத்திற்கான முதலிடம், ஒற்றையாட்சி என்பவற்றையே இடைக்கால அறிக்கை வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழரசுசுக் கட்சி தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்த இடைக்கால அறிக்கையில் சமஸ்டி ஒழிந்திருப்பதாகவும், தமிழ் மக்களது பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளதுடன், சொற்பிரயோகங்களை வைத்து எதுவும் பார்க்கக் கூடாது என்ற அடிப்படையிலும் மக்களிடம் ஆணையைக் கோருகின்றார்கள். மறுபுறத்தில், தமிழ் சட்டத்தரணிகள் சங்கம், தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசியப் பேரவை மற்றும் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்பன இந்த அறிக்கையை ஏற்க முடியாது எனக் கூறி அதிருப்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், வழிநடத்தல் குழுவில் அங்கம் வகித்து 73 சுற்று பேச்சுக்களை நடத்தி இணக்கம் கண்டு, அதனை அரசாங்கத்துடன் இணைந்து ஏற்றுக்கொண்ட ஈபிடிபிக் கட்சியும் இது ஒற்றையாட்சியையே குறிக்கின்றது. வடக்கு -கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்று தேர்தல் மேடைகளில் தற்போது பிரச்சாரம் செய்து வருகின்றது.

TPC-Meeing-Jaffna-3இத்தகைய குழப்பான சூழ்நிலையை கருத்தில் கொண்டு மக்களுக்கு உண்மையை விளக்கி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ் மக்கள் பேரவை கடந்த வாரம் செவ்வாய் கிழமை ‘இடைக்கால அறிக்கை மாயைகளை கட்டுடைத்தல்’ என்ற தொனிப்பொருளில் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது. தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரான முதலமைச்சர் சி.வீ.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த தெளிவுபடுத்தல் கூட்டத்தில் சர்வதேச ரீதியில் பிரசித்தி பெற்ற சட்டவல்லுனரான பேராசிரியர் முத்துக்குமாரசாமி சொர்ணராஜா மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவரும், விரிவுரையாளருமான குமாரவடிவேல் குருபரன் ஆகியோரும் கலந்து கொண்டு இடைக்கால அறிக்கை தொடர்பில் தெளிவுபடுத்தியிருந்தனர்.

தொடக்க உரையையும், தொகுப்புரையையும் நிகழ்த்திய வடக்கு முதல்வர் ‘ நிலைமாறுகால நீதி தொடர்பிலும், சர்வதேச சட்டங்களை எப்படி மக்கள் நலன்சார்ந்து பிரயோகிப்பது என்பது குறித்தும், இடைக்கால அறிக்கை குறித்தும்’ நீண்ட உரை நிகழ்த்தியிருந்தார். ஒற்றையாட்சியின் பலனாக தமிழ் தேசிய இனம் இதுவரை சந்து வருவதற்கும் மேலாக எத்தகைய விடயங்கள் நிகழப்போகின்றன என்பது குறித்தும் பின்வருமாறு விளக்கியிருந்தார். ‘ஒற்றையாட்சியால் எமது மீனவர்களின் பாராம்பரிய மீன்பிடி இடங்கள் பறிபோகப்போகின்றன. படைகள் தொடர்ந்தும் எமது மாகாணங்களில் நிலை நிற்கப் போகின்றன. எமது காணிகளின் வருமானங்கள் அவர்கள் கைவசம் செல்லப்போகின்றது. மகாவலி திட்டத்தின் கீழ் மேலும் மேலும் வெளியில் இருந்து மக்களை கொண்டு வந்து குடியேற்றப்போகிறார்கள். சுற்றுலாவை தமக்கு சார்பாக வளர்த்துக் கொள்ள இருக்கிறார்கள். எமது மக்களின் தொகை குறைவினால் திணைக்களங்களில் தென்னிலங்கையைச் சேர்ந்தவரை நியமித்து வருகின்றனர். இந்த நிலை தொடரும். முன்னேற்றம் என்ற போர்வையில், எமது காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். இன்னும் பலதையும் கூறலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் மக்கள் ஐக்கியத்திற்காகவும், அரசியல் தீர்வுக்காகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய ஆணைகளை சின்னத்தை கொடுத்தற்காக தமிழரசுக் கட்சி தன்னை வளர்த்துக் கொள்வதற்காக அவைகளை தவறாக பயன்படுத்தியிருக்கிறது என்பது 2010 இற்கு பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் எதிரொலித்திருக்கின்றது. இதன் உச்சபட்சமாக தற்போதைய உள்ளூராட்ச்சி தேர்தலில் அந்தக் கட்சி அங்கத்துவக் கட்சிகளுடன் நடந்து கொண்ட முறையின் மூலம் கூட்டமைப்பின் ஜனநாயக தத்துவத்தை கூட தூக்கியெறிந்து இருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. ஒட்டுமொத்தத்தில் மிகவும் தெளிவாக குறித்துரைக்கப்பட்ட ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் தொடர்பிலேயே நீதிமன்றத்தின் உதவியை நாடக்கூடிய நிலை இருக்கையில், தெளிவற்ற ஒரு இடைக்கால அறிக்கையில் சமஸ்டி இருப்பதாக சொல்லி இதனை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு மக்கள் ஆணையை கோருவதன் மூலம் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களை எங்கு நோக்கி அழைத்துச் செல்கின்றது என்ற கேள்வி பலமாக எழுந்து மக்களை குழப்பியிருக்கிறது. இந்தக் குழப்பத்தை தெளிவுபடுத்தும் முகமாகவே முதலமைச்சரின் உரை அமைந்திருந்தது.

TPC Meeting veerasingham Hall 1ஒரு குழப்பகரமான சூழலில் தனது சரிவை தடுத்து நிறுத்திக் கொள்ளும் முகமாக உள்ளக சுயநிர்ணம் குறித்தும், ஒரு முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில் தமது முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் தற்போது மேடைகளில் கூறி வருவதை அவதானிக்க முடிகிறது. அத்துடன், எங்களுக்கு எதிராக மஹிந்தாவையா கொண்டு வர விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை தமிழ் மக்களிடம் முன்வைத்து இருப்பதை பார்கின்ற போது அவருடைய தோல்வி பயம் தெளிவாக புலப்படுகின்றது. உள்ளூராட்சி தேர்தல் என்பது பாராளுமன்ற தேர்தல் இல்லை என்பதை புரிந்து கொள்ளாமல் அவர்தடுமாறுகிறாரா என்ற கேள்வியை அது எழுப்பியிருக்கின்றது.

இடைக்கால அறிக்கையைப் பொறுத்தவரையில் ஆட்சியில் இருப்பவர்களே இது ஒற்றையாட்சியைத்தான் குறிக்கின்றது என்றும் அங்கு பௌத்திற்கே முன்னுரிமை என்றும், வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றும் தெரிவித்துள்ள நிலையில், தமிழரசுக் கட்சி அதற்கு மக்கள் ஆணையைக் உள்ளூராட்சி தேர்தல் மூலம் கோருகின்றது. கூட்டமைப்பின் தலைவரிடத்திலேயே இந்த இடைக்கால அறிக்கை தொடர்பில் தெளிவின்மை இருப்பதையும் இதுவரை காலமும் எதுவும் செய்யாத குற்ற உணர்வும் அவரை சலனம் அடைய செய்திருப்பதையும் அண்மைய நிகழ்வுகள் எடுத்து காட்டுகின்றன. ஆகவே, தமிழ் மக்கள் நிலைமைகளை தெளிவாக அவதானித்து தங்கள் கைகளில் கிடைத்திருக்கின்ற அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்த முன்வரவேண்டும். இதுவே தமிழ் தேசிய இனத்தின் இருப்புக்கான அத்திவாரமாக அமையப் போகிறது.

http://www.samakalam.com/செய்திகள்/கூட்டமைப்பின்-தடுமாற்றம/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.