Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏ.ஆர். ரஹ்மான் – புதிய இசையின் மெசையா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏ. ஆர். ரஹ்மான் – புதிய இசையின் மெசையா / பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

download-2.jpg

ஏ.ஆர். ரஹ்மான்

ஒரு மாதம் முன்பு முடிந்த வருடம் ஏ.ஆர். ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசையமைக்க வந்து கால் நூற்றாண்டு. வருடங்களை நூற்றாண்டுகளாகச் சொல்வது அவற்றை ஒரு காலகட்டமாகத் தொகுக்கிறது. ரஹ்மானை இந்திய சினிமா இசையில் ஒரு காலகட்டமாகத் தொகுத்து, தனித்து உள்வாங்கிக் கொள்ளவும், புரிந்துகொள்ளவுமான கால அளவை அவரது இசைப்பயணம் எட்டிவிட்டிருக்கிறது. ஆனால் பாப்புலர் இசையை தீவிரமாக அணுகுவதில் தொடர்ந்து தவறுகின்றவர்களான நாம் இக்கால் நூற்றாண்டு முடிவை குறைந்தபட்சம் கொண்டாடவும், பரிசீலனை செய்யவும், அவருடைய ஆக்கங்களின் அழகியல் நுட்பங்களை, பன்மையை, ஈர்ப்பை, விலகலை ஒரு தலைமுறையின் இசை நுகர்வின் மீது அவர் செலுத்திய செல்வாக்கை இசைத் துறையிலும் அறிவுத் துறையிலும் உள்ளவர்கள் தயாராகவில்லை என்பது துயரகரமானது. 

ஜூலியன் பா(ர்)ன்ஸின் The Sense of an Ending நாவலில் காலகட்டங்களை உள்வாங்குவதைக் குறித்து ஒரு சித்திரம் இவ்வாறாக அளிக்கப்பட்டிருக்கும்: “people did not experience the “Sixties” until the Seventies. Which meant, logically, that most people in the Sixties were still experiencing the Fifties or in my case, bits of both decades side by side. Which made things rather confusing.

கடந்த காலத்திற்குத் திரும்பும் ஏக்கத்தின் காய்ச்சல் குறையவே குறையாதவர்களான நமக்கு இக்குழப்பம் மிக அதிகம். கால் நூற்றாண்டுகளின் பாதி வருடங்கள் வரை அதாவது 2000ங்களின் துவக்க வருடங்கள் வரை நாம் இளையராஜாவோடு ஐய்க்கியப்பட்டிருந்தோம். அதே சமயத்தில் ரஹ்மானின் இசை நமது உறைநிலையில் பெரிய உடைவுகளை உருவாக்கியது. இளையராஜா எனும் பனிமூட்டத்தை விலக்கிக் கொண்டிருந்தது. 2010களின் இறுதிப் பகுதிகளில் ரஹ்மான் அவருக்குப் பின்னெழுந்த இசையமைப்பாளர்களின் புகை மூட்டத்தால் சூழப்பட்டவராகிவிட்டிருக்கிறார். 

அறிவுப்புலத்தில் நாம் ரஹ்மானின் இசையை விவாதிக்கவே இல்லை. நமக்கு ஆராதனைக்கு மேலாக ஒன்றுமே தெரியாதென்பதோடு, இசையை தத்துவார்த்தமாக, விமர்சனப் பூர்வமாக அணுகும் விற்பன்னர்கள் பற்றாக்குறையும் உடையவர்களாக இருக்கிறோம். இசையின் நோக்கங்களில் ஒன்று நமது உணர்வுகளைக் கையாளுதல். இசையை அணுகுவது என்பதே இசைக்கும் நுகர்கின்றவர்களின் உணர்வுகளுக்கும் இடையே நிகழும் உறவை சிந்தனைக்கு உட்படுத்துதல். கட்டுப்பாடுகளை உடைத்து உணர்வுகளில் எதிர்பாராத சலனங்களை தோற்றுவிப்பதே இசை எனும் பட்சத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை மில்லினியல் தலைமுறையின் உணர்வுகளில் ஏற்படுத்திய சலனங்களை நமது சிந்தனையால் அளவிடுவது அவருடைய கால் நூற்றாண்டுப் படைப்புகளுக்கு அளிக்கும் மரியாதையாகவும், அறிவார்ந்த பணியாகவும் இருக்கும். 

இசையை நுகர்பவர்களுக்கும், அறிந்தவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடே வெறுமனே கடந்து போவதற்கும், தீவிரமாக அணுகுவதற்கும் உள்ள வேறுபாடு. தமிழ்நாட்டில் இசையை அதிலும் குறிப்பாக சினிமா இசையைத் தீவிரமாக அணுகும் இசை அறிந்தவர்கள் மிகக் குறைவு. பாப்புலர் ஊடகங்களில் அப்படியொரு விமர்சனக் கண்ணோட்டமே வளர்த்தெடுக்கப்படவில்லை. நாமறிந்த இசை விமர்சகர்களென இருக்கும் ஒன்றிரண்டு பேர் சாஸ்திரிய இசையோடு நிறுத்திக் கொள்கிறார்கள். “பார்த்தாலே பரவசம்” ஆல்பத்திற்கு ஆங்கில இந்து நாளேட்டில் வந்த விமர்சனமே அந்த ஆல்பத்தில் ஏ.ஆர். ரஹ்மான் ஜாஸ் இசையமைப்பை பயன்படுத்தியிருக்கிறார் என எனக்கு அறிமுகம் செய்தது இன்னும் நினைவில் உள்ளது. அறிவுப்புலத்தில் பிரேம்:ரமேஷ் எழுதிய “இளையராஜா: இசையும் தத்துவமும்” என்கிற ஒரு நூலைத் தவிர என்னால் எதனையும் சுட்ட முடியவில்லை. ரஹ்மானின் இசைக்கு அப்படியொரு தலைப்பைக் கூட நம்மால் இந்த கால் நூற்றாண்டின் இறுதியில் கூட அளிக்க முடியவில்லை என்பது நமது இயலாமை. இரண்டாயிரங்களில் இருப்பவர்கள் தொண்ணூறுகளில் இருக்க, தொண்ணூறுகளின் மீது எண்பதுகளின் ஆதிக்கம் இன்னுமே நீங்காமல் இருக்கிறது. 

ரஹ்மானின் கால் நூற்றாண்டை ஒட்டி இரண்டு மாதங்களுக்கும் மேலாக அவருடைய படைப்புகளைத் தொடர்ந்து கேட்க அந்த அனுபவம் ஒன்று மட்டுமே சொல்கிறது. அவர் தொண்ணூறுகளின் இடையில் இரண்டாயிரங்களில் நின்றவர். இரண்டாயிரத்துப் பத்துகளின் பின்பகுதியில் தனது கால்கள் பாவிய நிலத்தில் எழும் அதிர்வுகளோடு போட்டியிடுகிறார். மாடர்னிடி என்பது ஒரு தொடர்ச்சியிலிருந்து முழுதுமாக விலகி புதிய ஒன்றைப் படைத்தல் என்றால் தமிழ் சினிமா இசையின் மாடர்னிடி ரஹ்மானிலிருந்தே துவங்குகிறது. அவருடைய “தீ தீ தித்திக்கும் தீ”, “வீரபாண்டி கோட்டையிலே” பாடல்களைக் கேட்கையில் Kraftwerk குழுவினரின் இசையில் உணரக் கூடிய எதிர்காலத் தன்மையை என்னால் உணர முடிகிறது. இது ஓர் அவசர உதாரணம் மட்டுமே. அந்தப் பாடல்களில் மட்டுமல்ல அவருடைய இசையின் துவக்க வருடங்களில் இந்த எதிர்காலத்தன்மையே முக்கியமான ஒன்றாகத் தெரிகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க வந்த ஆண்டுகளில் நம்மில் பொரும்பாலோனிரடத்தில் நல்ல இசைக்கேட்புச் சாதனங்கள் கூட இல்லை. ஆனால் அவரிடம் சிறந்த இசையமைப்புத் தொழில்நுட்பச் சாதனங்கள் இருந்ததாக இசையமைப்பாளர் தாஜ் நூர் “தமிழ் இந்து” தொடரில் குறிப்பிடுகிறார். அவருடைய இசையின் துவக்க காலத்தில் நாம் உணர்ந்த அந்நியத்தன்மைக்கும், கட்டுக்கடங்காத மனவெழுச்சிக்கும் தொழில்நுட்ப இடைவெளியும் ஒரு காரணம். Bass என்ற ஒன்றையே நாம் அப்போதுதான் எட்ட முடிந்தது. Intel நிறுவனத்தின் Curie தொழில்நுட்பத்தை ஒரு நேரடி இசைநிகழ்ச்சியில் பயன்படுத்துகிறார். 

இணையம் நம்முடைய அழகியல் நுகர்வில் ஏற்படுத்திய மாற்றங்களின் தாக்கத்தோடு நாம் ரஹ்மானின் இசையை அணுகினால் அவருடைய இசையை ஆங்கிலப் பாப் இசையோடு ஒப்பிடலாம். ஆனால் பாப் இசையின் நுட்பக்குறைவான மேலோட்டமான உணர்வுத்தளத்தை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர்களாக இருந்தால் ரஹ்மானின் இசையில் ஆழமில்லை என்று அவசரப்பட்டு சொல்லி விடலாம். நுட்பக்குறைவான மேலோட்டமான உணர்வுத்தளமென்பது ஒரு குறையல்ல. செவ்வியல் இசையின் அழகியல் வேறுவகை. பாப் இசையின் அழகியலை அதற்கு இணைவைத்து வாதிப்பதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பூமி ஒரு பாதையில் சுற்றினால் வியாழன் வேறொரு பாதையில்தான் சுற்றும். 

ரஹ்மானின் இசையின் உள்ளார்ந்த தன்மையென்பது அமைதிதான் என்று நினைக்கிறேன். பீறிட்டுத் தெறிக்கும் இசையின் பின்னே அமைதியை எட்ட முனையும் ஓர் உள்ளார்ந்த தொடர்ச்சி அவருடைய படைப்புகளில் நிறைந்திருக்கிறதென்றும் நம்புகிறேன். பீறிட்டுத் தெறித்தலுக்கும் உள்ளார்ந்த அமைதியை எழுப்ப முனைவதற்குமான முயற்சிகளே அவருடைய படைப்புகள். மனதையும் உடலையும் ஒருங்கே அணுகுவதாகத் தோன்றினாலும் மனதை மட்டுமே எழுச்சியுறவும், அமைதி பெறவும் முயலுகின்ற ஒன்று அவருடைய இசை. EDM இசையின் கூறுகளை அவர் பயன்படுத்தியிருந்தாலுமே கூட அவருடைய படைப்புகள் நிச்சயமாக ஹவுஸ்பார்ட்டிகளில் ஆடுவதற்கானவையல்ல. மாறாக மார்த்தா கிரஹாமின் நடனக் காட்சிக்கு ஒப்பிடலாம் (ஸ்ட்ராவின்ஸ்கியின் Rite of Spring இசைக்கோர்வைக்கு மார்ஹ்த்தா கிரஹாம் அமைத்த நடனத்தை அல்லது Take me to Church பாடலுக்கான Sergei Polunin நடனத்தையும், புகழ்பெற்ற மின்னணு நடன இசையின் ஆரம்பகால அணுக்களில் ஒன்றான Hot Butter குழுவினரின் Popcorn பாடலுக்கான நடனத்தையும் ஒப்பிட்டால் நான் ஓரளவாவது நெருக்கமான ஒன்றைச் சொல்கிறேன் என்று எடுத்துக் கொள்ளலாம்). தாளத்தின் பின்னணியிலும், இணையாகவும் தந்தி வாத்திய, பியனோ, குழல் ஒலிகளை ரஹ்மான் அதிகமாகப் பயன்படுத்துவதும் இதன் காரணமாக இருக்கலாம். ஒருவேளை இசையின் நோக்கமே அமைதியை எழுப்பக்கூடியதாக இருக்கும். ஆங்கிலப் பாப் பாடல்களில் அடையாளம் காணப்பட முடியாத ஆழத்தில் இருப்பதாகப் படும் அமைதி ரஹ்மானின் இசையின் மெலடியில் சட்டென காண முடிவது முக்கிய வேறுபாடு (இத்தருணத்தில் சாம் ஸ்மித்தின் I am Not the only one பாடலும் Passengerன் Let Her Go பாடலும் நினைவுக்கு வருகின்றன). கூடுதலாக மென் ராக் இசையோடு பாப் இசைக் கலைப்பையும் ஒத்திருப்பது என்றும் சொல்லலாம். 

இசையைப் பொறுத்தவரை தன்னிலைப்பட்ட அணுகுமுறை மட்டுமே நம்மில் பெரும்பாலானோருக்கு சாத்தியம் என்றாலும் அதனையும் கடந்து ஒரு சமூகத்தின் பொதுத்தளத்தில் இசை விமர்சனம் முக்கியமான ஒன்றாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். ஏனெனில் சுந்தர ராமசாமி சொன்னதைப் போல தமிழர்களால் ஏதேனும் சாதனை செய்ய முடிந்தால் அது இசையில் மட்டுமே சாத்தியம். அச்சாதனையை ரஹ்மான் செய்ததற்கான ஓர் ஒப்புதலே ஆஸ்கர் விருது. நம்மால் அச்சாதனையை முறையாக உள்வாங்கவும், அதனால் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாமலும் போய்விட்டது. 

ரஹ்மானின் இசையமைப்புப் பாணியென்பது ஓர் இசை ஒலித்தொடரை உருவாக்கி அது முதிர்ந்து மறையும் நிலையை எழுப்ப முனைவதே. ஆர்க்கெஸ்ட்ரா பாணியில் பல்வேறு இசை ஒலித்தொடர்களின் கலவைக்குப் பதிலாக முன்னணியில் நகரும் ஓர் இசை ஒலித்தொடருக்கு துணை செய்வதாகவே கலப்பிசையைப் பின்னணியில் பயன்படுத்துவார். அதுவே அவரது படைப்புகளில் மெலோடியை எழுப்பும் நுட்பம். மெட்டுக்களைக் குறித்துப் பேசுகிற அளவிற்கு நான் துணியப்போவதில்லை (இவ்வளவு துணிந்ததே என்னுடைய இசையறிவிற்கு அதிகம்). இந்திய சினிமா இசையில் ரஹ்மான் ஏற்படுத்திய மாற்றம் அதற்கு முன்பு அறியப்படாதது. “ரங்கீலா” திரைப்படத்தின் இசைக்குப் பிறகு, “ரங் தே பசந்தி”யின் இசைக்குப் பிறகு முழு இந்தியாவிலும் ஆதிக்கம் செலுத்தும் இந்தி சினிமா இசை அடைந்த மாற்றத்தைப் பாருங்கள். பெரும் திரையிசைக் கலைஞர்கள் பென்சனோ, பத்ம விருதுகளோ வாங்கும் நிலையை அடைந்தனர். 

என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தையும் இங்கே அளிக்க விரும்புகிறேன். என்னுடைய தங்கையிடம் ரஹ்மானின் இசை, ராஜாவின் இசையைக் குறித்து சொல்லச் சொன்னால் அவள் இப்படி பதில் அளித்தாள்: “முழு நிலவின் அழகிற்கும், பிறையின் அழகிற்கும் அளவைத் தவிர அழகில் ஒன்றும் வேறுபாடில்லை”. ஆனால் என்னுடைய அம்மாவிடம் இதே கேள்வியைக் கேட்க அவரோ ராஜாவின் இசை பிடிக்கவேயில்லை என்கிறார். எனக்கு அது ஆச்சரியம்தான். நானோ ரஹ்மானின் ஆதிக்கத்தாலும், அவருடைய மாயாஜாலத்திற்கான ஏக்கத்தோடு பொறுமையில்லாமலும் இருப்பவன். ரஹ்மானும் நாஸ்டால்ஜியாவாக மாறிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு மனதும் ஒவ்வொரு விதத்தில் இசையை உள்வாங்க ஒரு சமூகமோ வேறொரு வகையில் உள்வாங்கிக் கொள்கிறது. இந்த இடைவெளியை அவ்வளவு எளிதாக நம்மால் அறியவோ அளக்கவோ முடியாதென்பதே இசையின் மாயம். 

•••••••••••••••••

http://malaigal.com/ஏ-ஆர்-ரஹ்மான்-புதிய-இசைய/

 

  • கருத்துக்கள உறவுகள்

பல குற்றச்சாட்டுக்களோடு ஆரம்பிக்கும் பாலசுப்பிரமணியம் பொன்ராஜ் நிறைய எதோ சொல்ல வாரார் ஆனால் அதை தெளிவாக சொல்லவில்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது.
ரஹ்மானின் இசை நுணுக்கங்களை அலசாமல், வெறும் வார்த்தைகளை இறைத்து இருக்கிறார்.   
ஏ ஆர் ரஹ்மான் போற்றப்படவேண்டிய தமிழ் இசை அமைப்பாளர் இதில் மாற்றுக்கருத்து இல்லை.
படைக்கும் இசையில் இவர் தரம் உயர்வா இல்லை அவர் தரம் உயர்வா என்ற கேள்விக்கும் அர்த்தம் இல்லை.
நவீன உலகின் புதிய யுக்திகளை மிகவும் லாவகமாக கையாளுகிறார். புதிய பாடகர் , பாடகிகளை உள்வாங்கி தளம் அமைத்து கொடுத்துள்ளார். தமிழுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

"ரஹ்மானின் இசை நமது உறைநிலையில் பெரிய உடைவுகளை உருவாக்கியது. இளையராஜா எனும் பனிமூட்டத்தை விலக்கிக் கொண்டிருந்தது. 2010களின் இறுதிப் பகுதிகளில் ரஹ்மான் அவருக்குப் பின்னெழுந்த இசையமைப்பாளர்களின் புகை மூட்டத்தால் சூழப்பட்டவராகிவிட்டிருக்கிறார்" முதலில் இந்த வாதமே தவறு.  

Jazz இசையை விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்ற இசை பிரம்மாக்கள் ஏற்கனவே தமிழிசைக்கு அறிமுகப்படுத்தி விட்டார்கள்.

"Bass"- இவர் இப்போது தான் இதை கேட்கிறாரோ. 
“முழு நிலவின் அழகிற்கும், பிறையின் அழகிற்கும் அளவைத் தவிர அழகில் ஒன்றும் வேறுபாடில்லை”
எது அழகு என்பதை அவரவர் உணரட்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.