Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது கதையல்ல கலை

Featured Replies

இது கதையல்ல கலை - 1

பல வருடங்களாகச் சரித்திரக் கடலில் ஆழ்ந்து, வரலாற்று உண்மைகளென்னும் பல விலை மதிக்க முடியா முத்தெடுக்கும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினருடன் வரலாற்று ஆய்வின் முதல் படியில் காலெடுத்து வைக்க விழையும் வரலாறு.com குழுவினராகிய நாங்கள், இந்த வருடம் ஜூன் - 12,13 தேதிகளில் சென்று, கண்டு களித்துத் தெரிந்து கொண்ட பல விஷயங்களை, இணைய வாழ் தமிழ்ப் பெருங்குடியினரிடம் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியே இந்த கட்டுரை.

முனைவர். கலைக்கோவனின் (தட்ட்ச்சு வசதிக்காக இக்கட்டுரை முழுவதும் இவரை டாக்டர் என்று குறித்திருக்கிறோம்) கிளினிக்கில் பல்லவர்களைப் பற்றிய உரையாடலிலேயே ஜூன் - 12-ம் நாள் முழுதும் கரைந்தது. மகேந்திரரின் மகோன்னதத்தைப் பற்றி டாக்டர் விவரித்த பொழுது எங்களுக்கு எழுந்த பிரமிப்பையும், 'அட! எங்க ஆளு ஒருத்தன் என்ன எல்லாம் பண்ணி இருக்கான்' என்ற பெருமிததையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. குறிப்பாக, மண்டகப்பட்டில் ஒரு கல்வெட்டில், "இதற்கு முன் கோயில் கட்ட உபயோகித்த மரமில்லாமல், சுதையில்லாமல், செங்கல் இல்லாமல், உலோகமில்லாமல் மும்மூர்த்திகளுக்கு ஒரு கோயில் எழுப்பியிருக்கிறேன்", என்று கூறியிருப்பதை டாக்டர் எங்களுக்குக் கூறியபொழுது என் கண்முன் தனி உலகம் விரிய ஆரம்பித்தது.

அந்த உலகத்தில், வரலாற்றுக் கண்டுபிடிப்புகளுள் முதன்மையான சக்கரத்தை கண்டுபிடித்த முகம் தெரியாத மனிதனும், மனிதனுக்குச் சிறகளித்த ரைட் சகோதரர்களும், ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களில் ஓடிய ரோஜர் பேனிஸ்டரும், எத்தனையோ விஷயங்களை முதல் முதலில் உலகுக்குக் கொடுத்த நியூட்டனும், ஐன்ஸ்டீனும், எடிசனும், பல PhD thesis-க்களை சில கந்தல் காகிதங்களுக்குள் நிரப்பி முப்பத்திரண்டு வயதுக்குள் முத்திரை பதித்துச் சென்ற இராமனுஜனும், இன்னும் எத்தனை எத்தனையோ பல்துறைப் பேரறிஞர்களும் அமர்ந்திருக்க, அவர்களுக்கிடையில் கம்பீரமான இரண்டு சிம்மாசங்களில் மகேந்திரனும் ராஜராஜனும் அமர்ந்திருந்தனர்.

மண்டகப்பட்டு கல்வெட்டைப் பற்றிப் பேசுகையில் கிடைத்த சில தகவல்கள்:

உலோகமில்லாமல் கட்டியதாக மகேந்திரன் கூறியிருப்பதால், அதற்கு முன் உலோகத்தில் கோயில் கட்டியிருக்கிறார்கள் என்று தெளிவாகிறது. செங்கல்லும், சுதையும், மரமும் பல நூற்றாண்டுகளுக்கு நிற்காது என்றாலும், உலோகக் கோயில்கள் நின்றிருக்க வேண்டுமே என்ற கேள்வி எழ, "அப்படியொரு கோயிலும் இன்று இருப்பதாகத் தகவல் இல்லை" என்றார் டாக்டர். அந்தப் பதிலால் நிறைவடையாததால், "உலோகக் கோயில்கள் திருடு போயிருக்கலாம்" என்றும் கூறினார். அந்த கருத்தை வலியுறுத்தும் வண்ணம், " இன்று சிதம்பரத்தில் இருக்கும் கூரை கூடப் பொன் இல்லையே" என்றதும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. பராந்தகன் வேய்ந்த பொன் கூரை இன்று நாம் காணும் கூரை இல்லை என்று நம்பவே முடியவில்லை. ஸ்ர்ரங்கம் கோயிலிலும் இருப்பது சுந்தர பாண்டியன் வேய்ந்த கூரையல்ல என்று இன்னொரு அதிர்ச்சியயும் தந்தார். இப்பொழுது இருப்பது, தீ விபத்துக்குப் பின் பழுது பார்க்கப் பட்ட கோபுரம்தான்" என்றார். தீ விபத்துக்கு முன் சுந்தர பாண்டியன் வேய்ந்த கூரை இருந்ததா என்று நான் கேட்கவில்லை. இல்லை என்றுதான் பதில் வரும் என்று எனக்குத் தோன்றியது.

இப்படியாகப் பல பேரரசர்களின் தலையை உருட்டியபடி சனிக்கிழமையைக் கழித்த நாங்கள், அடுத்த நாள், தமிழகத்தின் அந்த பகுதியிலிருக்கும் ஒரே பல்லவர் காலக் கோயிலான, திருச்சிராப்பள்ளி- சென்னை நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து சில கி.மீ தூரத்திலிலுள்ள திருப்பட்டூருக்குச் செல்வதாக முடிவெடுத்தோம்.

ஜூன் 13-ம் தேதி எங்களது குழுவின் ஆஸ்தான ஹோட்டல் ஆகிவிட்ட 'விஜய் லாட்ஜிலிருந்து' நமது ஆஸ்தான டிரைவர் முருகனின் அம்பாசதர் வண்டி திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் ஊட்டத்தூரை நோக்கிப் பறந்தது. 'தொகு மாமணி ஈஸ்வரர்' அருள் பாலிக்கும் இந்த ஸ்தலத்தில் சில அழகிய 'later chola bronzes'-ஐக் கண்டோம். (ஒரு சிலையைப் பார்த்ததும் அது எந்த காலத்தைச் சேர்ந்தது என்று கண்டுபிடிப்பதைப் பற்றி ஒரு தனிக் கட்டுரை சீக்கிரமே உங்களை வந்து சேரும்). குறிப்பாக ஒரு உமாவின் திருவுருவும், ஒரு சோமாஸ்கந்தரின் திருவுருவமும் மனதைக் கவர்ந்தன. இரண்டுமே 'later chola'-வாக இருக்கக்கூடும் என்றாலும், சோமாஸ்கந்தர் சிலையில் இருக்கும் உமாவின் வடிவத்தில் இருக்கும் 'ease' இன்னொன்றில் சற்றுக் கம்மியாக இருப்பது தெளிவாகத் தெரிந்தது. டாக்டர் கலைக்கோவன், சிலைகளைக் குறிப்பிடும் பொழுது 'stiffness' என்ற வார்த்தையை அதிகம் உபயோகிப்பார். அந்த சோமாஸ்கந்தர் சிலையில் இருக்கும் சிவனின் posture-க்கும் உமாவின் posture-க்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தால் இந்த stiffness என்பது என்ன என்று நன்றாக விளங்கும். இருவரும், ஒரு காலை மடித்தும் ஒரு காலைத் தொங்கவிட்ட படியும் அமர்ந்த நிலையில் இருக்கிறார்கள. (இதற்கு 'சுகாசனம்' என்று பெயர்) சிவனின் மடங்கிய காலைப் பார்த்தால், படத்தின் 'plane'-க்கு parallel-க இருக்கிறது. இப்படி அதிக நேரம் உட்கார்ந்தால் கால் வலிக்க ஆரம்பித்துவிடும். உண்மையில் இது சுகாசனமாகாது. உமையவளின் உட்கார்ந்த நிலையைப் பார்த்தால் எந்த 'conciousness'-உம் இல்லாது 'casual'-க அமர்ந்துள்ளது தெரிகிறது.

இந்த அழகிய வெண்கலச் சிற்பங்களைப் பார்த்தபின் 'தொகுமாமணி ஈஸ்வரரை' தரிசித்தோம். கற்பூர ஆரத்தி காண்பித்த பொழுது, அந்த தீபத்தின் ஜ்வாலையின் பிரதிபலிப்பு அந்த லிங்கத்தினுள் உறையும் ஜோதிப் பிழம்பினைக் காட்டுவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது.

சிவனை நோக்கி இருந்த நந்திகேஸ்வரரைத் தவிர, கிழக்கை நோக்கி இன்னொரு நந்திகேஸ்வரர் வீற்றிருந்தார். 'நர்மதை', 'காவேரி', 'கோதாவரி' போன்ற நதிப்பெண்களுள் யார் பெரியவர் என்ற சர்ச்சை எழும்ப, சிவன்,அந்நத்¢களை இந்த நந்தியின் மேல் பாய்ந்து அவரைக் கடக்குமாறு கூறினாராம். எந்த நதியும் அவர் உடலின் நீளத்தையும் அகலத்தையும் கடக்க முடியாமல் போக, "கங்கைதான் பெரிய நதி" என்று மற்ற நதிகளுக்குக் கர்வ பங்கம் செய்தாராம். அந்தக் கோயில் குருக்கள் சொன்ன சுவாரஸ்யமான ஸ்தல புராணக் கட்டுக்கதை இது:-)

f_stonenataram_54beccc.jpg

நாம் பொதுவாக நடராஜரை வெண்கலத்தில் செய்த உற்சவராகத்தான் காண்கிறோம். சுமார் ஏழடி உயரத்தில் அமைந்த கல்-நடராஜரைக் காண்பது மிகவும் அரிது. இவ்விடத்தில் அப்படிப்பட்ட ஒரு அரிய நடராஜரைக் காணக் கிடைத்தது. நடராஜரின் தூக்கிய இடதுபதமும், ஒரு கையில் கஜ-ஹஸ்தத்தைக் காட்டியும் (யானையின் துதிக்கையைப் போல வளைந்து இருக்கும் இடது கைதான் கஜ ஹஸ்தம்), ஒரு கையால் அபயமளித்தும், மற்ற கைகளில் அக்னி மற்றும் உடுக்கையைச் சுமந்தும், விரித்த சடையும், அந்தச் சடையில் அடங்கிய கங்கையும், அசைந்தாடும் ஆடையும், சிரித்த முகமும், கைகளில் பரணங்களும், கால்களில் சதங்கைகளும், ஒரு சதங்கையின் கீழ் முயலகனும் தெள்ளத்தெளிவாய் ஒரு பெரிய பாறையிலிருந்து செதுக்கப்பட்ட பிரம்மாண்ட நடராஜராகக் காட்சியளித்தது. அவர் தூக்கி ஆடும் இடதுபதத்தை இலேசாக தட்டினால் ஒரு தீர்க்கமான metallic sound எழுந்ததைக் கண்டு ஆச்சர்யத்தில் மூழ்கினோம்.

இந்தச் சிற்பங்களைத் தவிர, கும்பாபிஷேகத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்த அந்த கோயிலில், பல கல்வெட்டுகள் இருப்பதைக் கண்டோம். அவற்றில்,குலோத்துங்க சோழனின் பெரிய மெய் கீர்த்த்தியையும், அந்தக் கோயிலுக்காக 5 பசுக்களை அவன் தேவதானமாக கொடுத்த செய்தியிருந்த கல்வெட்டையும் மாத்திரம் தட்டித் தடவிப் படித்தோம்.

சிவன் இருந்த சன்னதியைக் கண்டபின், அம்பாள் சன்னதிக்குச் சென்றோம். அந்த கோயிலிலிருந்த கல்வெட்டிலிருந்து அது ஒரு 'தேவரடியார்' (தேவருக்கு அடியாராக விளங்கி, போற்றத் தக்கதொரு வாழ்க்கையை வாழ்ந்த பெண்மணியைக் குறிக்கும் சொல்லை, படிப்பவர்கள் தவறாக வேறுவிதமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன்) எழுப்பிய கோயில் என்று தெரிய வந்தது.

f_1veeraasanam_80cc5e7.jpg

கோயிலை நன்கு தரிசித்தபின் அவ்வூர்காரர் ஒருவரின் தயவால் கிடைத்த தேனீரையும், வடையையும் ஒரு பிடி பிடித்துவிட்டு, திருப்பட்டூரை நோக்கிக் கிளம்பினோம்.

ஊட்டத்தூரிலிருந்து திருச்சிக்குத் திரும்பும் வழியிலிருக்கும் திருப்பட்டூர் கோயிலில் நுழைந்தவுடன் கண்ணில் படுவது நாயக்கர் கால ஆலயம். அதற்கு அருகிலேயே அநாதையாய் ஆனால் அற்புதமாய் வீற்றிருப்பது, பல்லவர் கால "கைலாசநாதர் ஆலயம்". தெற்கிலிருக்கும் தக்ஷிணாமூர்த்தி ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டியவர். பெரும்பான்மையான கோயில்களிலிருக்கும் தக்ஷிணாமூர்த்தியைப் போலல்லாமல், ஒரு பக்கம் திரும்பியபடி கால் மேல் கால் போட்டுக் கம்பீரமாய் வீற்றிருக்கும் தக்ஷிணாமூர்த்தியைப் பலகணங்கள் கண்டு மகிழ்ந்தோம். அவர் அமர்ந்திருந்த நிலைக்கு 'வீராசனம்' என்று பெயர். அனைத்துச் சிற்பங்களும் 'sandstone'-ல் செய்யப்பட்டதென்பதால், காலத்தால் அழியாதிருக்கச் சுதை பூசப்பட்டிருக்கிறது. சில இடங்களில் தென்படும் சுதை நீங்கிய சிற்பங்கள் பிரமிப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றன

f_2sanakathimm_4eb0ad9.jpg

தக்ஷிணாமூர்த்திக்கு இடப்பக்கம் இருந்த இரு சனகாதி முனிவருள், ஒருவரின் முகத்தில் கவனம் இம்மிபிசகா வண்ணம் உபதேசம் கேட்கும் பாவத்தைத் தெளிவாகக் கொண்டு வந்திருந்த சிற்பியைப் பற்றி பலநேரம் சிலாகித்துப் பேசினோம். வீணையை மீட்டிய வண்ணம் இருந்த கின்னரர்களையும் கண்டோம். அவர்களின் கால்களைப் பறவைகளின் கால்களாகக் காட்டியிருப்பதால் அவர்களை நாம் கின்னரர்களெனக் கண்டுகொள்ளலாம். தெற்கு பக்கத்தில் சிதிலமான ஒரு பிக்ஷாடனரின் சிற்பமும் இருக்கிறது

f_3pathanjalim_a8c866f.jpg

வழக்கமாக இருக்கும் சிற்பங்களைத் தவிர பல அரிய சிற்பங்களும் இக்கோயிலில் இருக்கின்றன. குறிப்பாக, பதஞ்சலி முனிவரும், ஜலந்தரவத மூர்த்தியும் தென்புறத்தில் காணக் கிடைக்கிறார்கள். ஜலந்தரன் என்ற அரக்கனைக் கொன்ற சிவனைப் பற்றிக் கூறிய பொழுது, விஷ்ணு வைத்திருக்கும் சக்கரம் ஆதியில் சிவனிடமிருந்தது என்றும், அதனைக் கொண்டே ஜலந்தரனை அழித்தார் என்றும் டாக்டர் கூறினார். அச் சிற்பத்தில், ஜலந்தரனின் தோளில் சக்கரத்தைக் காண முடிந்தது. இந்த ஜலந்தரவத மூர்த்தி சிலையில், சிவன் கால்களைக் குறுக்கியபடி அமர்ந்திருக்கும் நிலைக்குப் பெயர் யோகாசனம் என்பது எங்களுக்குக் கிடைத்த பல புதிய தகவல்களுள் ஒன்று.

f_4jalandharam_6c397ae.jpg

தென்புறச் சுவரும் மேற்குப்புறச் சுவரும் சந்திக்கும் முனையில் இருக்கும் சிம்மம் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தன் மேலிருந்த சுதையெல்லாம் உதறி ஆக்ரோஷமாகத் தன் உண்மையான திருமேனியில் காட்சி தரும் இந்தச் சிம்மம், அக்கோயிலில் சுதையின் கீழ் ஒளிந்திருக்கும் அற்புதச் சிலைகளின் அழகைக் கோடிட்டுக் காண்பிக்கும் வகையில் உள்ளது.

f_5simmamm_b0e59a0.jpg

மேற்குப்புறத்தில் இருந்த லிங்கோத்பவரைக் கண்டதும், "பல்லவர் காலத்திலேயே மேற்குப்புறத்தில் லிங்கோத்பவர் வந்துவிட்டாரா?" என்று டாக்டரைக் கேட்டேன். என் கேள்விக்கு ஆமென்று விடையளித்த டாக்டர், 'வரலாற்று ஆய்வில் நம்மைத் தவறாகத் திசை திருப்பக்கூடிய பல தகவல்களுள் இதுவும் ஒன்று' என்றும் கூறினார்.

f_6kaalaarim_6c8cd79.jpg

வடபுறச் சுவர்களிலும் சில அரிய சிற்பங்கள் இருக்கின்றன. மார்கண்டேயனுக்கு அருள் புரிந்த காலாரி, பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறார். காலனை, 'என் காலருகே வாடா, சற்றே உன்னை மிதிக்கிறேன்' என்று பாரதி இந்தச் சிற்பத்தைப் பார்த்துத்தான் சொல்லியிருப்பானோ என்று தோன்றியது. ஒரு காலைக் காலன் மேலும், ஒரு காலைத் தூக்கியும் இருந்த சிவனையும், பரமனின் காலில் பரிதாபமாகக் கிடந்த காலனையும், பிரம்மாண்டமாகக் காண்பித்த சிற்பி, சிவனுக்கு மேல் சிறியதாக, லிங்கத்திடம் சரணாகதி அடையும் மார்க்கண்டேயனைக் காட்டியிருக்கிறான்.

f_7oorthvajaam_87853c7.jpg

ஒரு காலை சற்றே தூக்கி முட்டியை மடக்கியபடி இருக்கும் நிலைக்குப் பெயர் "ஊர்த்தவ ஜாநு". (நடராஜரைப் போல out of the plane direction-இல் தூக்கியிருப்பின் அது ஊர்த்துவ ஜாநுவாகாது). ஊர்த்துவஜாநுவில் இருந்த ஓர் அற்புதச் சிற்பம், சிவனின் முகம் முழுவதும் சிதைந்திருப்பதையும் மீறி உயிரோட்டத்துடன் இருக்கிறது. எட்டுக் கைகளும், அக்கைகளில் சூலம் உடுக்கை முதலியனவும், கஜஹஸ்தமும், தூக்கிய வலது காலும், சற்றே சாய்த்த தலையும், வளைந்த இடுப்பும், துல்லியமான 'sense of propotionality'-யுடன் அமைத்திருப்பதை இங்கு காணலாம்

http://img03.picoodle.com/img/img03/7/3/19/f_8m_a887eb0.jpg

வடபுறத்தில் இச் சிற்பங்களைத் தவிர, என்னவென்று கண்டுகொள்ள முடியாதபடி இருக்கும் சில சிற்பங்களையும் கண்டோம். ஒரு சிற்பத்தில், மண்டையோடு ஏந்திய சிவனும், சக்கரம் ஏந்திய விஷ்ணுவும் அடுத்தடுத்து நிற்க, அவர்களுக்கு நடுவில், சிறியதாய் ஓர் உருவம் தெரிந்தது. இச்சிற்பம் எதைக் குறிக்கிறது என்று கண்டுகொள்ள முடியவில்லை. ஒன்னொரு சிற்பத்தில், 4 கைகள் கொண்ட ஓர் உருவம், இரு கைகளில் ஆயுதங்கள் ஏந்தியும், ஒரு கையில் குதிரையை ஏந்தியும், இன்னொரு கையை ஒய்யாரமாக இடுப்பின் மேல் வைத்தபடியும் காட்சியளிக்கிறது. அவ்வுருவத்தின் காலடியில், வணங்கும் வகையில் மண்டியிட்டபடி இரு உருவங்கள் இருக்கின்றன.

தொடரும்

நன்றி வரலாறு

தகவலுக்கு நன்றி வானவில்..........

  • தொடங்கியவர்

இது கதையல்ல கலை - 2

டிசம்பர் சீஸன் கச்சேரிகளுக்குச் செல்லும் பொழுது, ஒரு நாளில் பல கச்சேரிகளை கேட்கும் வாய்ப்பு கிடைக்கும். சில நாட்களில் காலை 9.00 மணி கச்சேரி பிரமாதமாய் இருக்கும். மதியம் 12.30 மணி கச்சேரியைக் கேட்டால், 9.00 மணிக்கு கச்சேரி கேட்ட நினைவே இருக்காது. 2.30 மணி கச்சேரியை கேட்டவுடன், இதுதான் சுகத்தின் உச்சகட்டம், இதற்கு மேல் எதுவும் கேட்க வேண்டாம் என்று தோன்றும். ஆனாலும் 6.00 மணி ப்ரைம் டைம் கச்சேரியை விட மனது வராமல் அதையும் கேட்போம். அந்த கச்சேரி, பிரம்மானந்தமாய் அமைந்து அந்த நாளை, பொன்னேட்டில் பொறிக்கப் படவேண்டிய தினமாய் மாற்றிவிடும்.

இந்த அனுபவம் சங்கீதத்துக்கும் மட்டுமல்ல, கோயில்களுக்கும் உண்டு. ஊட்டத்தூரைக் கண்டு மயங்கிய நாங்கள், திருப்பட்டூரைக் கண்டதும், இதை மிஞ்ச வேறொன்றுமில்லை என்று நினைத்தபடி திருச்சிக்குத் திரும்பினோம். அரங்கனைக் கண்ட திருப்பானாழ்வார் "என் இனிய அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே" என்று சொன்னது போல், "திருப்பட்டூரைக் கண்ட கண்கள் (இன்று) மற்றொன்றினைக் காணாதே" என்று நினைத்து, அன்றைய மதியத்தை முனைவர் கலைக்கோவனின் இல்லத்தில் இளையராஜாவின் இசையைப் பற்றி அளவளாவியபடி கழித்தோம். அவரே, "சாயங்காலம் எங்கேயாவது பக்கத்துல போயிட்டு வரலாமா?" என்று வினவ, பேராவல் கொண்ட எங்கள் மனது வேண்டாம் என்றா சொல்லும்?

திருச்சி-கோயம்பத்தூர் நெடுஞ்சாலையில் இருக்கும் அல்லூரில், "வரப்புல இருக்கற சிவன் கோயில் எங்கே?" என்று ஊர் மக்களிடம் கேட்டால், சரியான வழி கிடைக்கும் இடத்தில் அமைந்துள்ள கோயிலை அடைந்தோம். கோயிலைச் சுற்றிலும் உயர்ந்து வளர்ந்த மரங்கள் சூழ்ந்திருக்கின்றன. நாங்கள் போன சாயங்கால வேளையில் வீசிய தென்றலில் பலத்த சலசலப்பிற்கிடையில் கோயிலை ரசிக்கத் தொடங்கினோம். இப்பொழுதெல்லாம், எந்த கோயிலுக்குச் சென்றாலும் எங்களது கழுத்து எங்களையறியாமலே வளைந்து, எங்களை மேல்நோக்க வைக்கிறது.

6 மாதங்களுக்கு முன், ஒரு கோயிலுக்குச் சென்றால், பூதவரி என்ற ஒன்றை பார்த்திருப்பதே துர்லபம். இப்பொழுது என்னடா என்றால், கோயில் கருவறையை கணக்கிலேயே சேர்த்துக் கொள்ளாமல், பூதவரிக்கே முதல் மரியாதை கொடுக்கிறோம். தென்புறத்திலிருக்கும் பராந்தக சோழனின் கல்வெட்டே, அக்கோயிலில் கிடைக்கும் கல்வெட்டுகளுள் பழமையானது. அவரைத் தவிர, சுந்தர சோழனின் கல்வெட்டும் இங்கேயிருக்கிறது.

கோயில்களில் இருக்கும் பல சிற்பங்கள் கடவுளைக் குறிக்கும் வகையிலும், அமானுஷ்யமாகவும் இருக்கும். அக்கால மக்களின் அன்றாட வாழ்க்கையைச் சித்தரிக்கும் வகையிலான சிற்பங்கள் பலவற்றை பூதவரியில் காணலாம். மேற்குப் புறச் சுவரில், மூக்கினுள் திரி போன்ற நீளமான எதையோ விட்டுக் கொண்டிருக்கும் பூதத்தைப் பார்க்கையில், ஒரு குழந்தை செய்யும் குறும்பின் சித்தரிப்பு போல எனக்குத் தோன்றியது. 'சிரட்டைக் கின்னரி' (நம்ப கொட்டாங்கச்சி வயலினைத்தான் இப்படிச் சொல்லியிருக்காங்க), 'குழல்', 'கொம்பு', 'மத்தளங்கள்', 'இலை தாளம்' (அட! அதுதாங்க நம்ப ஜால்ரா) போன்ற இசைக்கருவிகள் எல்லாம் பூதவரியில் காணக்கிடைக்கிறது. வடபுறச் சுவரில், இலக்கியங்களில் கூறப்படும், 'குடக்கூத்து' சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு பூதம் தனது ஒரு கையை நீட்டி, உள்ளங்கைக்கும் முழங்கைக்கும் இடையிலான பகுதியில் ஒரு குடத்தைத் தாங்கி நடனமாடுவது போலச் சித்தரிக்கப் பட்டிருக்கின்றது.

7_kuda-koothu.jpg

வடபுற பூதவரியில், ஒய்யாரமான நிலையில் 'சோபா செட்' போன்ற இருக்கையில் ஒரு பெண்ணிருக்கிறாள். அவள் நிலையைக் கண்ட பொழுது, அவள் கையில் ஒரு சுவாரசியமான நாவல் இருந்திருந்தால் தோதாக இருந்திருக்கும் என்று தோன்றியது. அதே வரியில், கையில் பெரிய யாழை வைத்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு உருவமும் இருந்தது. நெருங்கிச் சென்று பார்க்கையில், அது யாழல்ல, பாம்பென்று தெரிந்தது.

கிழக்குப்புற கோஷ்டத்தில் இரு பெண்மணிகள் தெரிகிறார்கள். அவர்கள் பிக்ஷாடனரின் அழகைக் கண்டு மயங்கி, தன் வேலையை மறந்து அவரைத் தொடர்ந்து வந்த பெண்மணிகள்.

1_bhikshadanar.jpg

வடக்குப்புறத்தில் நின்றபடி, விமானத்தை ஒருமுறைக் கண்டோம். ஒரு தளமும் அதன் மேல் சிகரமும் வருவதால், அது 'ஏகதள விமானம்'. சிகரம், வேசரமாக (வட்டமாக) இருப்பதால், இந்த விமானத்தை 'ஏகதள வேசரம்' எனக் கொள்ளலாம்.

கோயிலை ஒரு வலம் வந்தபின், கோயிலுக்குள் நுழையலாம் என்று எத்தனிக்கும் பொழுது, எங்கள் கண்களில் ஓர் அறிய சிற்பம் பட்டது. முனைவர் கலைக்கோவனே அந்த சிற்பத்தை அப்பொழுதுதான் முதல் முறையாகப் பார்ப்பதாகச் சொன்னார். அசோக வனத்தில் சீதை தனது நிலையை விளக்குவது போலவும், அதை அனுமன் கேட்டு அவருக்கு றுதல் கூறுவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ள இச்சிற்பத்தில்,. சீதையில் உருவத்தில் துயரமும், அனுமனின் உருவத்தில் பவ்யமும் அற்புதமாய் தெரியும் வகையில் அமைந்துள்ளது.

2_conversation.jpg

கோயிலின் வெளிபுறத்திலிருந்த சிற்பங்களைக் கண்டபின், கோயிலினுள் நுழையலாம் என எத்தனிக்கையில், அங்கிருந்த சிலர், உள்ளே பாம்புகள் இருக்கக் கூடும் என்று எச்சரித்தனர். அருகிலிருக்கும் வேதபாடசாலையிலிருந்து நிதமும் வந்து பூஜிக்கும் வேலையைச் செய்பவர்கள் கூட , கோயிலின் கதவருகே நின்று கடனே என்று பூஜித்துவிட்டு சென்றுவிடுகிறார்கள் என்ற தகவலையும் அவர்கள் கூறினார்கள். இதற்கெல்லாம் பயப்படுபவர்களா நாங்கள்? இறைவன் இருக்கிறான் என்ற தைரியம் இருந்தாலும், கொஞ்சம் அச்சத்துடந்தான் கோயிலுள் நுழைந்தோம்.

5_crew.jpg

பராந்தகன் கால நந்தியைத் தாண்டியதும், வடக்குப்புறச் சுவரிலிருக்கும் பூதவரி எங்கள் கண்ணில் பட்டது. அவ்வரியில் இருந்த பல பூதங்களில், குறிப்பாக இரண்டு பூதங்களை மறக்காமல் கவனிக்க வேண்டும். முதல் பூதத்துக்கு நாங்கள் வைத்த பெயர் 'the thinker'.

6_thinker.jpg

உட்கார்ந்த வாக்கிலிருந்த அந்த பூதம், சம்மணமிட்ட கால்களூக்கிடையில் தடி போன்ற ஒன்றை வத்துக் கொண்டும், இக்கால குழந்தைகள் (மற்றும் வயதானாலும் குழந்தையாகவே தன்னைப் பாவித்துக் கொள்ளும் சில பெண்கள்) 'teddy bear'-ஐ அணைத்துக் கொள்வதைப் போல் கைகளால் அத்தடியை அணைத்துக் கொண்டும், தன் முவாய்கட்டையை அத்தடியின் மேல் ஊன்றியபடியும் இருக்கிறது. அப்பூதத்தின் முகத்தில், தன்னை மறந்து கடந்த காலத்தில் நிகழ்ந்த அற்புத கணங்களை மீண்டும் அசைபோட்டு, கற்பனையில் காட்சியை விரித்து களிப்பில் கழிக்கும் உணர்வு, தெளிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவ்வரியிலிருந்த இன்னொரு பூதத்திற்கு நாங்கள் வைத்த பெயர் "singer".

4_singer.jpg

கர்நாடக இசைக்கச்சேரிகளில், பாடகரின் சாரீரம் வளைந்து நெளிந்து குழைவுகளையும், கமகங்களையும் வெளிப்டுத்துமா என்று உறுதியாகச் சொல்ல முடியாவிடினும், அவரது சரீரம் பலவாறாக அசைந்து சில சமயங்களில் கோணங்கித்தனத்தில் முடிவதைப் அன்றாடம் பார்க்கிறோம். பாடும் ராகத்தின் நெளிவு சுளிவிற்கேற்ப, பாடுபவரின் உடல் அசைவது இயல்பு. இப்படிப்பட்ட ஒரு பாடகரான நமது பூதம், உச்சஸ்தாயியில் பாடும் பொழுது, ஒவ்வொரு ஸ்வரஸ்தானத்தை அடையும் பொழுதும் , தன் கையையும் கழுத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்துகிறது. ஷட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம் என்று ஒவ்வொரு ஸ்வரமாய் ஏறி, தார ஸ்தாயி பஞ்சமத்தைத் தொடும்பொழுது, தலை வானத்தைப் பார்த்தபடியும், கை ஓங்கிவுயர்ந்த நிலையையும் அடைகிறது. அதை அப்படியே மனக்கண்ணில் வாங்கிய சோழதேசச் சிற்பி, நம் அகக்கண்கள் களிக்கும் வகையில் அந்த பூதவரியில் காட்டியிருக்கிறான். (பூதங்களின் மேல் வெள்ளையடிக்கப்பட்டிருப்பதா

ஆஹா, வாசிக்க ரொம்ப நேரம் செல்லும் போல இருக்கு, :lol: கொஞ்சம் தான் வாசிச்சன்.. பிறகு நேரம் கிடைக்கும் போது வாசிக்கிறன், இணைப்பிற்கு நன்றி..வானவில் ! :lol:

  • தொடங்கியவர்

ஆஹா, வாசிக்க ரொம்ப நேரம் செல்லும் போல இருக்கு, :lol: கொஞ்சம் தான் வாசிச்சன்.. பிறகு நேரம் கிடைக்கும் போது வாசிக்கிறன், இணைப்பிற்கு நன்றி..வானவில் ! :D

இரண்டாக பிரித்ததை 20ஆக பிரித்தால்தான் சரிவரும் :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.