Jump to content

கைபேசிக்குள் நுழைந்த கடல் திமிங்கலம்


Recommended Posts

பதியப்பட்டது

கைபேசிக்குள் நுழைந்த கடல் திமிங்கலம்

 

 
kadhir3

அப்படியொரு ராட்சச ஜந்துவை இதுவரை அவன் பார்த்ததில்லை. அதன் பிளந்த வாயில் இருந்து கூரிய பற்கள் நீட்டிக் கொண்டு இருந்தன. சற்றுமுன் அதன் வாய்க்குள் விழுந்த இரையைக் கடித்து விழுங்கியதற்கான ரத்த வாடை அவனைச் சுற்றி பரவிக் கொண்டிருந்தது. ஆனாலும் பசி தாளாமல் இவனை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது, அந்த ஜந்து.

"நிச்சயமாக இந்த ஜந்துவுக்கு இரையாகிவிடுவோம்' என்றதொரு பயம் இவனை முழுமையாகப் பிடித்திருந்தது. ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஜந்துவிடமிருந்து தப்பிக்கும் லாவகம் அவனுக்குத் தெரிந்தே இருந்தது. அதை அவன் விரும்பவில்லை. அதே சமயம் மாட்டிக்கொள்ளவும் விருப்பமில்லை. இன்னதென புரியாத ஓர் உணர்வுக்குள் தன்னை மூழ்கடித்துக் கொண்டு அவன் ஓடிக்கொண்டே இருந்தான். இவனை விட்டு விட்டு அந்த ஜந்து களைப்படையும் போதெல்லாம் வலியச்சென்று அதனைச் சீண்டினான்.

இமை திறந்து இரத்தச் சிவப்பான கண்களால் கோரப்பார்வை பார்த்தால் திரும்பவும் தலைதெறிக்க ஓடத் தொடங்குவான். உயிர் பயத்தோடு விளையாடும் இந்த உயிர் விளையாட்டு அவனுக்குப் பிடித்திருந்தது. இந்த முறை அவனால் அந்த விஷ ஜந்துவிடமிருந்து தப்பிக்க முடியவில்லை. அது இவன் கைகளையும், கால்களையும் ஒரு சேர கவ்விக்கொண்டது. எவ்வளவோ போராடிப் பார்த்தான். அது இவன் கைகளை தன் சொர சொரப்பான வாலால் இறுக்கி கட்டி நெருக்கியது. தன் கூரிய நகங்களால் அவன் தொடை சதையைக் கிழித்தது. பிறகு தன் கூரிய நகங்களால் அவன் கழுத்தை நெரிக்கத் தொடங்கிய போதுதான் ""அம்மா யாராவது காப்பாற்றுங்கள்'' என்று அலறிச் சரிந்தான்.

விஸ்தாரமான அந்த இடத்தில் கண்ணாடிப்பதுமைகள் இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒரே விதமான ஆடையை ஒரே ஒழுங்குடன் அணிந்திருந்தார்கள். அவர்கள் உதட்டிலிருந்து "இப்பவோ அப்பவோ ' வெடித்துவிடும் புன்னகைக்குச் சொந்தக்காரர்களாக இருந்தார்கள். அவர்கள் கைகளில் புத்தகங்கள் நடனமாடிக் கொண்டிருந்தன.

""மேம் நம்ம நிதின், டாய்லெட்டுக்குள் மயக்கம் போட்டு விழுந்து கெடக்கிறான் மேம்''
பிரின்சிபல் கேபினின் கண்ணாடிக் கதவுகளை வேகமாக தள்ளிக்கொண்டே உள்ளே நுழைந்த விக்னேஷ் கத்தினான்.
""எந்த க்ளாஸ்?''
""லெவன் பி செக்ஷன் மேம்''
""யாரு க்ளாஸ் டீச்சர்?'' 
""பிரவீணா மிஸ் தான் க்ளாஸ் டீச்சர் மேம்''
பிரவீணா டீச்சருக்கும், பி.இ.ட்டி. சாருக்கும் இண்டர்காமில் தகவல் சொன்னாள் பிரின்சிபல் மேடம்.
வாட்சப்பில் தகவல் குரூப் குரூப்பாக பார்வர்ட் ஆனது. காம்பவுண்ட் சுவர்களுக்கு திடீரென்று முளைத்த காதுகள் நிதின் விழுந்து கிடக்கும் செய்தியை கிசுகிசுத்துக் கொண்டிருந்தன.
""ஏம்ப்பா... யாராவது பசங்க வாத்தியாரை அடிச்சுட்டாங்களா?'' என்பது தான் பரபரப்பான விசாரணையின் முதல் கேள்வியாக பள்ளிக்கூடம் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்தது.
டாய்லெட்டின் ஈரத்தரையில் சுய நினைவின்றி கிடந்தான் நிதின். இரண்டு கைகளிலும் இரத்தம் பீறிட்டு வழிந்து கொண்டிருந்தது. அவனைக் கீறிக்கிழித்த ப்ளேடு இன்னும் அவன் விரல்களுக்கு இடையே சிக்கித் தவித்தது. கண்கள் செருகிக் கிடந்த அவன் முகத்தில் ஏதோவொரு பயங்கரத்தைப் பார்த்த மிரட்சி.
இன்னொரு கையில் ஒரு செல்போன் செல்ஃபி எடுத்த நிலையில் எல்லோரையும் பார்த்து ஏளனமாக சிரித்தது.
காற்று கூட அந்த அறையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆசிரியைகள் ஒருவர் பின் ஒருவர் வருவதும் பிரின்சிபலிடம் மாணவர்களைப் பற்றிய குறைகளை ஒப்பிப்பதுமாக இருந்தார்கள்.

""மேடம் இவர் தான் பாஸ்கர்... அவங்க மிருதுளா, நிதின் பேரண்ட்ஸ்'' அட்டெண்டர் அவசரமாக அறிமுகப்படுத்திவிட்டுச் சென்றான்.
அவள் லெகின்ஸ் பேண்ட்டும், ஸ்லீவ்லெஸ் டாப்சும் அணிந்திருந்தாள். பதற்றத்துடன் தன் கணவனின் கைகளை தோளோடு சேர்த்துப் பிடித்திருந்தாள். வெளிர் நீல ஜீன்ஸூம், டீ-ஷர்ட்டும் அணிந்திருந்த அவன் முகத்தில் பிரெஞ்சு தாடி வழிந்து கொண்டிருந்தது. 
""உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது? உங்க பையனுக்கு செல்ஃபோன் கொடுக்காதீங்கன்னு... யாரோ கேர்ள் ஃபிரண்ட் கூட பேசிட்டிருக்கான்னு நினைக்கிறேன். அதுவும் டாய்லெட்ல நின்னு பேசிட்டிருக்கான். ஒரு சமயம் அவன் கேர்ள் ஃபிரண்ட் பேசாம கூட இருந்திருக்கலாம். அதனால தான் கையைக் கிழிச்சிட்டு நிக்கறான்னு நெனக்கிறேன். ரெண்டு நாளா வயித்து வலின்னு ட்ராமா போட்டுட்டு டாய்லெட்டே கதின்னு கிடக்கறான். நாங்க அங்க போய் செக் பண்ண முடியுமா? உங்களுக்கு இது சம்பந்தமா நேத்திக்கே வாட்சப் மெசேஜ் அனுப்பினோம். நீங்க இன்னும் பார்க்கவே இல்ல.''

எடுத்த எடுப்பிலேயே எகிறினாள் பிரின்ஸிபல். 

அமைச்சரின் அதட்டலுக்கு அரண்டு போகிற ஐ.ஏ.எஸ். அதிகாரி மாதிரி கொஞ்சம் தலையைக் குனிந்து கொண்டார்கள்.

""இது மட்டுமல்ல... எப்பப் பாருங்க தனியா சிரிச்சுகிட்டே இருக்கான். மொட்டை மாடில ஏறி நின்று செல்ஃபி எடுத்துகிறான். செல்ஃபோன் டவர்ல ஏறி நின்னுகிட்டு ஹீரோயிசம் பண்றான்...இதெல்லாம் உங்க பையனைப் பத்தி எனக்கு வந்த கம்ப்ளைண்ட், இன்னைக்கு நேர்லய பாத்துட்டோம். கையில கிழிச்சுகிட்டு அதை செல்ஃபி எடுத்திருக்கான். பிழைச்சதே பெரிய விஷயம்தான் தயவு செய்து உங்க பையனை வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்க. உங்க பையன் நார்மலா இல்ல. நாளைக்கே கேர்ள்ஃபிரண்ட் பிரச்சனை, லவ் ஃபெயிலியர்னு தற்கொலை பண்ணிகிட்டான்னு வைங்க. நாங்க பொறுப்பாக முடியாது''
""..............''
""நைன்த் வரைக்கும் நல்லா படிச்சான்.... நல்லா வர வேண்டியவன்...நாங்களே அப்ரிசியேஷன் அவார்ட் கொடுத்திருக்கோமே... இப்ப அவனுக்கு ஏதோ பிரச்னை, முக்கியமா செல்போன் பெரிய பிரச்னை''
""..................''
""நீங்க அவசியமா நிதினை ஒரு நல்ல சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட அழைச்சுட்டுப் போங்க"
"".................'' 

அந்த அறையே இவர்களைப் பயமுறுத்துவதாக இருந்தது. சில பேருடைய தலையில் இருந்து அணுகுண்டுகள் வெடித்துச் சிதறும் ஓவியம் இவர்களை அச்சுறுத்தியது. சுவர்களில் ஒட்டிக்கொண்டிருந்த சிலர் பயங்கரமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் ஆவியுலகத்தோடு தொடர்பு கொள்வதற்காக வந்திருந்தார்கள்.

""ஓ... நீங்க ரெண்டு பேரும் ஐ.டி. ஸ்டாப்.., எந்த ஏரியாவுல வொர்க் பண்றீங்க?'' 

""பக்கத்துலதான் டாக்டர்... நியூ ஃபேர்லேண்ட்ஸ் ஐ.டி.பார்க்''

""நியூக்ளியர் ஃபேமிலியா? ஜாயிண்ட் ஃபேமிலியா?'' 

""தனியாதான் இருக்கோம். எங்க பேரண்ட்ஸ் கிராமத்துல இருக்காங்க..''

""எவ்வளவு நேரம் வேலை?'' 

""அது மட்டும் கணக்கு இல்ல டாக்டர். எப்பவுமே லேட் நைட் தான். சில நாட்களில் அங்கேயே ஸ்டே பண்ணிடுவோம்''

""வீட்டுக்குப் போற தேவை இருக்காதா? உங்க பையனுக்கு பிரச்சனை இருக்காதான்னு கேட்டேன்''

""அவன் பெரிய பையன் சார்... அதனால அவன் தனியாவே இருந்துப்பான்.''

""உங்க பையன் மேல உங்களுக்கு அக்கறையே இல்லையா?''

டாக்டர் கோபமாகக் கேட்டார்.

""என்ன சார் இப்படிக் கேட்கறீங்க? அவனுக்காகத்தானே சார் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம். பணம் சேர்த்து வைக்கிறோம். ஒரு வாரத்துக்கு முன்னாடி கேலக்ஸி கோர் பிரைம் நியூ என்னு ஒரு நியூ வெர்ஷன் செல்ஃபோன் கேட்டான். உடனே ஆன்லைன்ல புக் பண்ணி வாங்கி கொடுத்துட்டோம் சார்''
பத்து கை பூதம் ஒன்று முன்னால் அமர்ந்து மிரட்டிக்கொண்டே இருப்பது போல் தோன்றியது.

 

"இந்த செல்ஃபோனுக்கு இப்ப என்ன அவசரம்?' என்பது போல டாக்டர் அவர்களைப் பார்த்தார்.

""வருங்காலத்துல இவன் நல்ல டெக்னீசியனா வருவான். சாஃப்ட்வேர் இவனுக்கு நல்லா வரும்.... அதுலயே ட்ரெய்ன் பண்ணுங்கன்னு.. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி இவன் படிக்கிற ஸ்கூல்ல சொன்னாங்க சார். அதனால தான் டேப்லெட் வாங்கிக் கொடுத்தோம்''

உதட்டைப்பிதுக்கியபடி டாக்டர். இவர்களுக்கு இன்னும் நெருக்கமாக வந்தார்.

""திறமையானவன் தான். நிதின் மிகப்பெரிய மனிதவளம். ஆனா அநியாயமா அவனை ஆன்லைன் கேம் விளையாடவிட்டு ஒரு சமூக விரோதியா மாத்திட்டீங்க... அவன் முளைச்சு வர்ற விதை நெல். நீங்க அவன் மேலே பெய்த பனிக்கட்டி மழை. வெள்ளாமை எப்படி வரும்?''

""என்ன சொல்றீங்கன்னு புரியல டாக்டர்''

கணவனின் தோள்களுக்குள் புதைந்து கொண்டு பதறினாள் மிருதுளா.

""அவன்கிட்ட செல்ஃபோனை கொடுத்து அவனை ஒட்டு மொத்தமாக கெடுத்திட்டீங்கன்னு சொல்றேன் யெஸ்...'' ""ஆன்லைன் கேம் அப்படீங்கற போதைக்கு அவன் அடிக்ட் ஆயிட்டான். இப்படி இந்த செல் ஃபோன்ல கேம் விளையாட்றவங்களை மீட்குறது கஷ்டம்தான். அதுலயும் உங்க பையன் வெளையாட்றது படுமோசமான கேம்''

""யெஸ் ப்ளுவேல்ன்னு ஒரு விளையாட்டு ப்ளுவேலனா நீலத் திமிங்கலம்னு அர்த்தம். திமிங்கலத்துகிட்ட சிக்கினவங்களை எப்படி மீட்க முடியும்?''

""டாக்டர்?''

""உங்க பையன் சுடுகாட்டுல நின்னு ஒரு ராத்திரி முழுக்க கத்தியிருக்கான். மொட்டை மாடில நின்னு நான் மரிக்கணும், மரிக்கணும்னு ஒரு நாள் அழுதிருக்கான். இன்னொரு நாள் காலைல நாலு மணிக்கு எழுந்து போய் ஏரில மூழ்கியபடி போஸ் கொடுத்திருக்கான். இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?''
உறைந்து கொண்டிருந்தார்கள் பாஸ்கரும், மிருதுளாவும்..

""கவலைப்பட ஒண்ணும் இல்லைன்னு நான் சொன்னா அது பொய். சம்திங் டூ வொர்ரி. போதை மறுவாழ்வு மையம் ஆரம்பிச்சுருக்கிற மாதிரி எதிர் காலத்துல செல்போன் அடிமை மறுவாழ்வு மையம் குறிப்பா ஆன்லைன் கேம் மறுவாழ்வு மையம் மூலைக்கு மூலை ஆரம்பிச்சுடலாம்''
""..................''
""குடிகாரங்களுக்கும் இவங்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். குடிகாரங்க கண்ட எடத்துல விழுந்து கெடப்பாங்க... இவங்க கண்ட இடத்துல உட்கார்த்து இருப்பாங்க... அவ்வளவு தான். மத்தபடி சிரிப்பு, அழுகை, கோபம், வன்மம் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும். டிரிங்ஸ் பண்றவன் வீட்டுல பாத்திரத்தை உடைச்சிட்டு அழுவான்.. இவன் செல்போனை உடைச்சிட்டு அழுவான்''
"".................''
""அவன் கம்ப்யூட்டர்ல நல்லா வொர்க் பண்றான்னுதான் நீங்க சிஸ்டம் வாங்கி கொடுத்தீங்க... நவீன தொழில்நுட்பத்தை பையன் கத்துக்கணுங்கிற ஆர்வத்துல பண்ணீங்க... தப்பில்ல. ஆனா அந்த செல்ஃபோனுக்குள்ள இருந்த வேதாளம் அவனை முருங்கை மரத்துக்கு தூக்கிட்டுப்போனதை நீங்க கவனிக்கவே இல்ல''
"".............................''
""மனோவியாதியோட உச்சத்துல இருக்கறவங்க கை கால கட்டிப்போட்டு ட்ரீட்மெண்ட் கொடுப்போம் இல்லையா... அதே மாதிரி செல்ஃபோனை தொடாம இருக்கறதுக்கு உங்க பையனுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தாகணும்''
""................''
""முதல்ல வேதாளத்துக் கையிலேந்து இவனை விடுவிக்கணும். தப்பு... தப்பு... இவன் கையிலேந்து வேதாளத்தை விடுவிக்கணும்.. இல்லைன்னா... வேதாளம் இவன் ரத்தத்தை உறிஞ்சு சக்கையா... துப்பிட்டு போயிடும்''

""தப்பா எடுத்துக்காதீங்க... இது எச்சரிக்கைத்தான்''

""குடிகாரங்க குடிக்கு அடிமையாகிப் போறதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும். அதைக் கண்டுபிடிச்சு நீக்கணும். அதே மாதிரி உங்க பையன் வீடியோ கேம்ஸூக்கு அடிக்ட் ஆனதுக்கு என்ன காரணம்னு கண்டு பிடிக்கணும். அவன் ஆசைப்பட்டது கிடைக்காம போயிருந்தாலும், அந்த ஏமாற்றத்தை தவிர்க்க இந்த விளையாட்டுக்கு அடிமையாகியிருக்கலாம்''

""உங்க அஜாக்கிரதை, சுயநலம், பணத்தின் மேல உள்ள ஆசை, இதனால உங்க மகனை, நீங்க நிறைய மிஸ் பண்ணீட்டீங்க... உங்க அலட்சியம் அவனை பலி வாங்கிடுச்சுன்னு நான் தைரியமா சொல்வேன்''

""என்ன பண்ணனும் டாக்டர்? எவ்வளவு செலவானாலும் பரவால்ல... எத்தனை லட்சம் வேணும்னாலும் செலவு பண்றோம்''

பாஸ்கர் பதறினான்.

""இட்ஸ் வெரி சீரியஸ்.... உங்க பையன் அதிக நாட்கள் இங்க தங்கி ட்ரீட்மெண்ட் எடுத்துக்கணும். ஒரு பத்து நாள் பக்கத்துல இருந்து மொபைல் யூஸ் பண்ணாம பார்த்துக்கங்க... நரம்புத்தளர்ச்சி வந்த மாதிரி கத்துவான். நீங்க ஒண்ணும் பயப்பட வேண்டாம் . பத்து நாள் அவன் கையில மொபைல் இல்லாம பழகினதுக்கு அப்புறம் இங்க அழைச்சிட்டு வாங்க ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சுடலாம்''

அடுத்த பேஷண்ட்டுக்கான மணி அடிக்கப்பட்டதும், அந்த அறையில் இருந்த சில பேர் இவர்களை வார்த்தைகளால் வெளியே இழுத்து தள்ளினார்கள். அறை இழுத்துப் பூட்டிக் கொண்டது.

பாஸ்கரின் நரம்புகளில் சூன்யம் தொற்றிக் கொண்டிருந்தது. கண்ணுக்கு முன்னே வெண் திரையில் ஏதேதோ எண்கள் சுழன்று கொண்டிருந்தன. விரல்கள் விசைப்பலகையில் முறையில்லாமல் நடனமாடிக் கொண்டிருந்தன. மானிட்டரில் குடும்பம், குடும்பமாக யார், யாரோ வந்து போய்க் கொண்டிருந்தார்கள். யாரோ ஒரு பிக்பாஸ் இவனை வெளியில் விடாமல் அடைத்து வைத்திருப்பது போல ஓர் உணர்வு.

""மிருதுளா எனக்கு ஒரு யோசனை... எங்க பேரண்ட்ûஸ வரச் சொல்லலாமா?... இந்த சமயத்துல அவங்க நம்ம கூட இருந்தா ஒத்தாசையா இருக்கும்.. நிதினுக்கு ட்ரீட்மெண்ட் எடுக்கற வரைக்கும்.. நிதின் கூட இருப்பாங்க இல்லையா''
""பதினைந்து வருசத்துக்கு முன்னாடியே அவங்க. எந்த கெளரவமும் பார்க்காம நம்ம கூட வர்றேன்னுதான் சொன்னாங்க.. அப்ப நீ தான் வேணாம்னு சொன்ன.?''
அந்த வார்த்தைகள் இப்போதும் அவன் காதுக்குள் ஒலித்தன. 

""எங்களுக்கும் வயசாயிடுச்சு பாஸ்கர் கிராமத்துல இருக்க புடிச்சிருக்குத்தான் ஆனா ரெண்டு பேரும் தனியா கிடந்து என்ன பண்ணப் போறோம். நீங்க ரெண்டு பேரும் ராத்திரி பகல்னு வேலை பார்க்கறீங்க பையன் வேற பொறந்துட்டான் அவனையும் பாத்துக்குவோம்... கிரஷ்ல போய் விட்ருக்கீங்க... மனசு கேட்கல. பேசாம நாங்களும் உங்க கூடவே வந்துடறோமே'' 

பாஸ்கரிடம் கெஞ்சினாள் அம்மா.

""இல்லம்மா.. சிட்டில ரொம்ப சிரமம்.. ஒத்த ரூம் சுத்தமில்லாத காத்து... உனக்கு ஒத்துக்காதும்மா மாசம் ஒரு தடவை ஓடி வந்து பார்த்துடறேன்... அப்பப்போ பணம் அனுப்பிடறேன்மா...''

நாசூக்காக தவிர்த்தான் பாஸ்கர்.

""ஏங்க அத்தை மாமாதான் நம்ம கூட இருக்கட்டுமே'' மிருதுளாவும் சொல்லிப் பார்த்தாள்.

""ஆமா ஒண்டுக்குடித்தனத்துல அம்மாவும் அப்பாவும் கூட வச்சுகிட்டா ஆபிஸ் முடிஞ்சு வந்து ஆசை பொண்டாட்டியை எப்படிக் கட்டிக்கிறதாம் ?''
அப்போது அவன் அவள் காதுக்குள் கிசுகிசுத்தான்.

அந்த வார்த்தைகள் இப்போது தீப்பிடித்து கருகி காந்தல் அடித்தது.
""இப்போ கூப்பிட்டா வரமாட்டாங்களா மிருதுளா... கூப்பிட்டுத்தான் பார்ப்போமே! வந்துட்டாங்கன்னா உடனே பையனுக்கு ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சுடலாம்''

அம்மாவும், அப்பாவும் சொல்லாமலே புறப்பட்டு வந்துவிடுவார்கள் என்பதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. 

கணினிக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

""எப்பம்மா வந்தீங்க?. உங்களுக்கு யாரும்மா சொன்னா?''

""என்னடா ஆச்சு? ரெண்டு நாளா போன் பண்றேன். எடுக்க மாட்டேங்றே..? எடுத்தாலும் ஒழுங்கா பேசமாட்டேங்றே? உன் குரலே காட்டிக் கொடுத்துடுச்சுடா... பேரனுக்கு ஏதோ பிரச்சனைன்னு... வாடகைக்கு கார் புடிச்சு வந்து சேர்ந்திருக்கோம்''

 

 

""ஆமாம்மா... நிதினுக்கு கொஞ்சம் ட்ரீட்மெண்ட் கொடுக்க வேண்டியிருக்கு'' 
""நீங்க ரெண்டு பேரும் ஆபீஸ் போய் முதல்ல மெடிக்கல் லீவ் எழுதி கொடுத்திட்டு வாங்க. மத்ததெல்லாம் சாய்ந்திரம் பேசிக்கலாம்''

""நிதின் கிட்ட செல்போன் மட்டும் கொடுக்காதம்மா...'' அம்மாவிடம் சொல்லிவிட்டு ஆபிஸூக்குப் புறப்பட்டுச் சென்றான் பாஸ்கர். 

அந்தத் தோட்டத்தில், தேவதைகள் நிறைய பட்டாம்பூச்சிகளைக் கொண்டு வந்து நிரப்பியிருந்தார்கள். புதிதாக பூத்திருந்த பூக்கள் காற்று முழுவதும் மணம் பரப்பிக் கொண்டிருந்தன.

""லீவ் சொல்லிட்டு வர்றதுக்கு லேட் ஆயிடுச்சும்மா..'' என்று அவன் சொல்ல வந்த வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டுவிட்டன.

அம்மா நிதினுக்காக ஆனந்த ராகம் பாடிக்கொண்டிருந்தாள்.

பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவன் பாட்டியின் மடியில் படுத்து பழங்காலத்து ராஜாக்களின் கதையைக் கேட்டுக் கொண்டிருப்பான் என்று அவர்கள் நினைத்திருக்கவில்லை.

அப்படியே கேட்டாலும் இவ்வளவு ரசித்து, லயித்துப்போய் மடியில் கிடப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. அவன் உயிர் மூச்சாக வைத்திருக்கும் செல்ஃபோன் உயிரற்று போய் எங்கோ மூலையில் கிடந்தது.

இந்த உறவுதான் அவனுக்குத் தேவையாக இருந்திருக்கிறதா? ஒரு வேளை இப்படி தலைசாய்க்க மடிதேடித்தான் இவன் தவித்திருப்பானோ"

""நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருந்திடுங்கம்மா...'' அம்மாவையும், அப்பாவையும் ஓடி வந்து கட்டிக்கொண்டான் பாஸ்கர்.

திடீரென்று நடு வீட்டில் வீசிய தென்றலுக்கு பயந்து, அதுவரை சுத்தி, சுத்தி வந்த அந்த கடல் திமிங்கலம் ஓடிப்போய் கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டது.

http://www.dinamani.com

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.