Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயின் கண்முன் இளைஞரைத் தாக்கும் போக்குவரத்து போலீஸ்; வைரலாகும் வீடியோ

Featured Replies

தாயின் கண்முன் இளைஞரைத் தாக்கும் போக்குவரத்து போலீஸ்; வைரலாகும் வீடியோ

சென்னை தியாகராய நகரில் தாய் மற்றும் சகோதரியின் கண் முன்பாக இளைஞர் ஒருவர் போக்குவரத்துப் போலீசாரால் தாக்கப்படும் காட்சி வீடியோவில் பதிவுசெய்யப்பட்டு, சமூக வலைத் தளங்களில் தீவிரமாக பரவிவருகிறது.

தாய் முன்பாக இளைஞர் மீது தாக்குதல்; வைரலாகும் வீடியோபடத்தின் காப்புரிமைFACEBOOK/ CHENNAI TRAFFIC POLICE

சென்னை தியாகராய நகரில் திங்கட்கிழமையன்று மாலையில் தன் தாயார் மற்றும் சகோதரியுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞருக்கும் காவல்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலே இப்படி படம் பிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை சாலிக்கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவரும் அவருடைய மகன் பிரகாஷ் மற்றும் சகோதரி ஆகியோர் திங்கட்கிழமையன்று தியாகராயநகர் பகுதிக்கு பொருட்களை வாங்குவதற்காக வந்தனர். தன் இரு சக்கர வாகனத்தை ஓட்டும்போது தலைக்கவசம் அணியாமலும் ஒரே இரு சக்கர வாகனத்தில் விதிமுறைகளுக்கு மாறாக மூவர் பயணம் செய்ததாலும் பிரகாஷ் ஓட்டி வந்த வாகனத்தை போத்தீஸ் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதில் பிரகாஷிற்கும் காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பிரகாஷை காவல்துறையினர் சட்டையின் காலரைப் பிடித்து இழுத்துச்செல்ல முற்பட்டபோது, பிரகாஷ் காவல்துறை அதிகாரி ஒருவரின் சட்டையைப் பிடித்துள்ளார்.

தாய் முன்பாக இளைஞர் மீது தாக்குதல்; வைரலாகும் வீடியோபடத்தின் காப்புரிமைFACEBOOK/CHENNAI TRAFFIC POLICE

இதற்குப் பிறகு அங்கு மேலும் சில போக்குவரத்து காவலர்கள் குவிந்தனர். அதே நேரத்தில், தன் மகன் விட்டுவிடும்படி பிரகாஷின் தாய் கோரும்நிலையில், அவரைத் தள்ளிவிட்டுவிட்டு பிரகாஷை மின் கம்பம் ஒன்றோடு சேர்த்துப் பிடித்து காவல்துறையினர் தாக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

 
 

இந்த நிலையில், பிரகாஷ் மீது ஆபாசமாகப் பேசுதல், பொது ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இது குறித்து தியாகராய நகரின் போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் சுதாகரிடம் பிபிசி தொடர்புகொண்டு கேட்டபோது, "அந்த இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். வழக்கை பாண்டி பஜார் காவல் நிலையத்தின் சட்டம் - ஒழுங்கு பிரிவு விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணையில் இருப்பதால் வேறு ஏதும் சொல்ல முடியாது" என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் காவல்துறை இந்த விவகாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விதி மீறலுக்காக அபராதம் செலுத்த வேண்டுமெனக் போலீசார் கூறியபோது, அந்த இளைஞர் காவல்துறை உதவி ஆய்வாளர் சுரேஷ் என்பவரை முகத்தில் குத்தியதாகவும் அவர் வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுக்க முற்பட்டபோது, அதனைப் பிடுங்கி தரையில் போட்டு உடைத்ததாகவும் இதனால் அவர் கைதுசெய்யபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.bbc.com/tamil/india-43629890

  • தொடங்கியவர்

கொஞ்சம் மரியாதை கொடுங்க சார்; தவறாக பயன்படுத்தப்படும் போலீஸாரின் அதிகாரமும் அத்துமீறலும்: ஒரு பார்வை

 

 
download

தி.நகர் சம்பவம்

காவல்துறையில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து போன்றவற்றில் அதிகாரத்தை பயன்படுத்தும்போது போலீஸாரால் தவறாகப் பிரயோகிக்கப்படும் அதிகாரம் சாதாரண மக்களை எப்படி பாதிக்கும் என்பதை அலசவே இந்தக் கட்டுரை.

காவல்துறை பல்வேறு இக்கட்டான பணிகளுக்கு நடுவே செயல்படும் அமைப்பு. அனைத்து பிரச்சினைகளுமே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாகத்தான் அன்றாடப் பணிகளை காவலர்கள் சந்திக்கிறார்கள். காவல்துறையில் கடைகோடி காவலர்களின் உரிமைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளாலேயே மறுக்கப்படுவதும் வெளிப்படையான ஒன்று.

மிகுந்த மன அழுத்தத்தில் நாங்கள் பணி ஆற்றுகிறோம் எங்களுக்கான விடுமுறைகள் கூட இல்லை, குடும்பத்தாருடன் நேரம் செலவிடக்கூட அனுமதிப்பதில்லை என்றெல்லாம் காவலர் தரப்பில் வைக்கப்படும் வாதம்.

மன அழுத்தத்துடன் பணியாற்றும் காவலர்கள் அதை சாதாரண மக்களிடம் காண்பிக்கும் சம்பவங்கள் அதிகமாக சமீபகாலமாக அதிகரித்து வருவது நிதர்சனமான உண்மை. இதற்கு உதாரணமாக தரமணியில் மணிகண்டன் என்ற கால் டாக்ஸி ஓட்டுநர் தாக்கப்பட்டதும், பின்னர் அவர் மன உளைச்சலால் தீக்குளித்து மரணமடைந்ததையும் கூறலாம்.

அடுத்து திருச்சியில் சாதாரண போக்குவரத்து விதிமீறலுக்காக பல கிலோ மீட்டர் துரத்திச்செல்லப்பட்ட உஷா, ராஜா தம்பதிகள் மோட்டார் சைக்கிளைப் போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததால் கீழே விழுந்த உஷா மரணமடைந்த சம்பவத்திலும், இன்று தி.நகரில் போக்குவரத்து போலீஸாரால் பிரகாஷ் என்ற இளைஞர் தாக்கப்பட்டதும், பின்னர் போலீஸாரை தாக்கியதாக அவர் கைது செய்யப்பட்ட சம்பவத்திலும் நடந்தது.

போக்குவரத்து காவல்துறையினர் மட்டுமல்ல சட்டம் ஒழுங்கு போலீஸாரும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதில் பொதுமக்கள் தாக்கப்பட்டு உயிரிழப்போ, காயமோ ஏற்பட்டால் அதற்கு போலீஸார் தரப்பில் வைக்கப்படும் வாதம் நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம் ஓய்வில்லை, மன உளைச்சல் என்கின்றனர்.

இங்கு கேள்வியே உங்களுக்கு மட்டுமல்ல 120 கோடி மக்களும் ஏதோ ஒரு வகையில் மன உளைச்சலால் தான் வாழ்கின்றனர். உங்கள் மன உளைச்சலுக்கு வடிகால் அப்பாவி பொதுமக்கள் அல்லவே என்பதே வாதம். இப்படிக் கேட்டால் அடுத்து போலீஸ் தரப்பிலிருந்து இனி குற்றவாளிகளை மடக்கிப் பிடிக்காதீர்கள், குடித்துவிட்டு வந்தால் மரியாதையாக பேசி அனுப்பி வையுங்கள், குற்றவாளிகளை பிடித்தால் அவர்களுக்கு சகல மரியாதை கொடுங்கள் என்று நக்கல் கலந்த பதிவுகள் போலீஸாரிடையே வைக்கப்படுகிறது.

ஆனால் பொதுமக்கள் கேட்பதும், போலீஸாரின் அத்துமீறலைக் கண்டிப்பதும் அவர்கள் குற்றவாளிகளிடம் கடுமை காட்டுகிறார்கள் என்பதற்காகவோ, செயின் பறிப்பு குற்றவாளிகளை ஏன் மடக்கிப் பிடிக்கிறீர்கள், கை உடைக்கிறீர்கள் என்பதற்கோ அல்ல. அப்பாவிகளை ஏன் தரக்குறைவாகப் பேசுகிறீர்கள், குடும்பத்தார் பற்றி இழிவாகப் பேசுகிறீர்கள், அப்பாவி பொதுமக்களை ஏன் தாக்கி அவர்கள் மரணம், காயம்பட காரணமாக இருக்கிறீர்கள் என்ற கேள்விதான் வைக்கப்படுகிறது.

இதன் இன்னொரு அர்த்தம், அனைத்து போலீஸாரும் அப்படி நடக்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல, ஆனால் இப்படியும் நடக்கும் போலீஸார் கண்டிக்கப்பட அல்லது தண்டிக்கப்பட வேண்டும், காவல்துறை பணி சமுதாயப் பணியாகவும் மாற வேண்டும் என்பதே இதன் அர்த்தம். சாதாரண பொதுமக்களும் குற்றவாளிகளும் ஒன்றல்ல. அவர்களுக்கு தன்மானம் உண்டு, குடும்பத்தார் முன்னிலையில் அவமானப்படுத்தப்படும்போது கோபப்பட யாருக்கும் நியாயம் உண்டு.

அந்தக் கோபம் தரமணி மணிகண்டன் தீக்குளிப்பில் போய் முடிந்தது, போரூரில் தாக்கப்பட்ட இளைஞர்கள் மவுனமாக வீட்டுக்குப் போவதில் போய் முடிந்தது. பிரகாஷ் என்ற இளைஞர் போலீஸாருடன் மோதுவதில் போய் முடிந்தது. போலீஸார் பணியில் அதிகம் விமர்சிக்கப்படுவது போக்குவரத்து போலீஸார் பணியே.

காரணம் போக்குவரத்து போலீஸார் சாதாரண பொதுமக்களிடம் அதிகம் மோதக்கூடிய சூழ்நிலை உள்ள பணி. போக்குவரத்து சட்டங்கள், விதிமீறல்களில் சாதாரண பொதுமக்கள் அதிகம் ஈடுபடுகின்றனர். அது குற்றச் சம்பவம் அல்ல. குற்றம் வேறு விதிமீறல் வேறு. அதற்காகத்தான் குற்றவியல் சட்டம், போக்குவரத்து சட்டம் என்று இரண்டாகப் பிரித்து வைத்துள்ளனர்.

விதிமீறல்கள் மட்டுமே போக்குவரத்து போலீஸாரிடம் வருகிறது. ஆனால் போக்குவரத்து போலீஸார் பொதுமக்களை குற்றவாளிகள் போல் நடத்துவதே இதற்கு காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். விதிமீறல்கள் குற்றங்கள் அல்ல, வாகன ஓட்டிகள் குற்றவாளிகளாக நடத்தப்பட வேண்டியவர்கள் அல்ல என்பதே உண்மை.

ஊடகங்களும், சமூக வலைதளங்களும் இதுபோன்ற போலீஸாரின் அத்துமீறலை மட்டுமே பெரிதுபடுத்துகிறது. அவர்களின் நல்ல செயல்களை படம் பிடித்துக் காட்டுவதில்லை என்று சிலர் பொத்தம் பொதுவாக குற்றம் சாட்டுகின்றனர். உண்மையில் கொஞ்சம் நெருக்கமாக அணுகிப் பார்த்தால் அது வழக்கமான, பொய்யான குற்றச்சாட்டு என்பது தெரிந்துவிடும். இதே ஊடகங்களும், சமூக வலைதளங்களும் தான் போலீஸாரின் மனிதநேய செயல்களைத் தயக்கமில்லாமல் பாராட்டுகிறது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் மனநிலை சரியில்லாதவருக்கு லுங்கி கொடுத்த காவலர், இளைஞர்களை அடித்ததற்காக அவர்கள் வீட்டுக்கே சென்று வருத்தம் தெரிவித்த அதிகாரிகள், பொதுத்தேர்வு எழுத வேண்டிய சூழலில் தேர்வறைக்கு வராத மாணவனை 10 நிமிடங்களுக்குள் தன் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து எதிர்காலத்தை மாற்றியமைத்த காவலர் பல நல்ல விஷயங்களை மனம் உவந்து பாராட்டி செய்தியாக, வீடியோவாக வெளியிடுவதே இதே ஊடகங்களும், சமூக வலைதளங்களும்தான்.

உயர் அதிகாரிகளுக்கு எடுபிடியாக இருக்கும் காவலர்களின் நிலையை தோலுரித்துக் காட்டுவதும், ஆர்டர்லி முறை குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதும் ஊடகங்கள்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

இதை எல்லாம் வசதியாக மறந்துவிட்டு குறை சொல்லும்போது மட்டும் இந்த மீடியாவே இப்படித்தான் என கரித்துகொட்டுவது ஆரோக்கியமானதாக இருக்காது.

சென்னையில் தி.நகர் சம்பவத்தில் இளைஞர் பிரகாஷ் சட்டையைப் பிடித்தார், வாக்கி டாக்கியை பிடுங்கினார் என்றெல்லாம் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. போலீஸார் அதற்கு முன்னர் தரக்குறைவாக பேசியதும், பிரகாஷின் தாயாரைத் தள்ளிவிட்டதும் மோதல் ஆரம்பிக்க காரணமாக அமைந்தது என்பது வசதியாக மறக்கடிக்கப்படுகிறது.

காவல்துறை- பொதுமக்கள் இணக்கம் எங்கிருக்க வேண்டும். குற்றவாளிகள், குற்றமிழைப்பவர்கள் தவிர மற்ற அனைத்து பகுதி மக்களிடமும், அனைத்து இடங்களிலும் போலீஸார் பொதுமக்கள் இணக்கம் கட்டாயம் இருக்க வேண்டும். இதைத்தான் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

போலீஸாருக்கு பல்வேறு பணிச்சுமை உள்ளது, ஆனால் அதை அப்பாவிகள் எங்கள் மீது காட்டாதீர்கள் கொஞ்சம் மரியாதை கொடுங்கள் சார் என்பதே பொதுமக்களின் வாகன ஓட்டிகளின் கோரிக்கை.

இதுகுறித்து போக்குவரத்து காவல் இணை ஆணையர் சுதாகரிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் அளித்த பதில்:

போக்குவரத்து காவலர்கள் இளைஞரை தாக்கியதாக விவகாரத்தில் உங்கள் கருத்து?

சட்டம் ஒழுங்கு சார்பில் விசாரணை நடத்தி வருகிறார்கள். நீங்கள் அவர்களிடமே கேளுங்களேன்.

ஒரு சின்ன கிளாரிபிகேஷன். பொதுவாகவே மோட்டார் வைக்கிள் சட்டம் அபராதம் எச்சரிக்கையோடு போக வேண்டிய ஒன்று, போக்குவரத்து போலீஸார் இந்த விவகாரத்தில் அந்த இளைஞர் அத்துமீறியிருந்தால் கூட சட்டம் ஒழுங்கு போலீஸாரை அழைத்து ஒப்படைத்திருக்கலாம் அல்லவா? அதையும் தாண்டி இது போன்ற சம்பவங்கள் நடக்கிறதே?

தெரியவில்லை, இது விசாரணையில் உள்ளது. அது தனிப் பிரிவு, அவர்கள் போக்குவரத்து அதிகாரிகள் அல்ல.ஆகையால் விசாரணை முடிந்ததும் வரும் அறிக்கையை வைத்து நடவடிக்கை வரும்.

முறையற்ற வாக்குவாதங்களால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக தகவல் வருகிறது. அதற்கு ஏதாவது ஆலோசனை உண்டா?

இல்லை, விசாரணை அறிக்கை வரட்டும். அதன் பின்னர் முடிவு செய்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கருணாநிதியிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது.

தி.நகரில் போக்குவரத்து காவலர்கள் தாக்கிய சம்பவத்தில் போலீஸார் நடந்துகொண்ட விதம் குறித்து உங்கள் கருத்து என்ன?

நாம் பல முறை கூறியிருக்கிறோம். போக்குவரத்து விதிமீறல் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக யார் வேண்டுமானாலும் செய்யக்கூடியது. இதில் பழிவாங்கும் விதமாக போகக் கூடாது. நம்பரை வாங்கிக்கொண்டு அனுப்பி விட்டு கோர்ட்டில் கேஸ் போட்டு சம்மனை வாங்கி அபராதத்தை வாங்கிக் கட்டலாம், அல்லது சம்பந்தப்பட்ட நபரையே அபராதம் கட்டச் சொல்லலாம்.

இது குறித்து நாங்கள் பல வகுப்புகள் எடுத்திருக்கிறோம், பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு வகுப்புகள் எடுக்கிறோம். அதில் வராத அதிகாரிகள் யாராவது அப்படி நடந்திருக்கலாம். அல்லது வந்தும் புரியாத நபர்களின் நடத்தையாகவே இதைப் பார்க்கிறேன்.

இது போன்று போலீஸுக்கு ஒருவர் கீழ்படிந்து நடக்கவில்லை என்றால் போக்குவரத்து போலீஸார் அந்த இடத்தில் என்ன செய்திருக்க வேண்டும்?

அது போன்று ஒருவர் கீழ்ப்படியாமல் தகராறு செய்கிறார் என்றால் அதுபற்றி கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்து சட்டம் ஒழுங்கு போலீஸாரை வரவழைத்து இவர் தகராறு செய்கிறார், பணி செய்ய விடாமல் தடுக்கிறார் என்று புகாரளித்துப் பிடித்துக் கொடுக்கலாம்

இது போன்று சந்தர்ப்பங்களில் இளைஞரை, அவரது உறவினர்களைத் தாக்குவது சரியா?

தாக்குவதற்கு அவர்களுக்கு அதிகாரமே கிடையாது, அடிப்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article23426234.ece?homepage=true

 

  • கருத்துக்கள உறவுகள்

கேரளா போலிசுக்கு உடுபிலே கமரா போருத்திவிடுவது போல் தமிழ்நாட்டு போலிசுக்கு பொருத்தி விட்டால் 99வீதமான பிரச்சனை முடிவுக்கு வரும் அதிகபடியான வேலை அதனால் மன உளைச்சல் என்று சரடு விடும் போலிசின் சிமார்ட் போனை வேண்டி பார்த்தால் முழு வண்டவாளமும் வரும் . கர்ப்பிணி பெண்ணை திரத்தி சென்று காலால் உதைத்து விழுத்தி சாவடித்த போலிசுக்கு நீதி மன்றம் தண்டனை கொடுக்காமல் தடவிகொடுத்தது மேலும் குற்ரம் செய்ய சொல்லுது போல் இருக்கு அவர்களுக்கு .

  • தொடங்கியவர்

`வாக்கி டாக்கியால் என்னைத் தாக்கியதுதான் பிரச்னை!' - தி.நகர் சம்பவத்தை விவரிக்கும் பிரகாஷ் அம்மா

 
 

பிரகாஷ் அம்மா

 
வாக்கி டாக்கியால் என்னைத் தாக்கியதுதான் பிரச்னைக்குக் காரணமாகிவிட்டது என்று தி.நகரில் போலீஸாரால் பாதிக்கப்பட்ட பிரகாஷின் அம்மா சங்கீதா கண்ணீர்மல்க தெரிவித்தார். 

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த சங்கீதா, அவரது மகன் பிரகாஷ், மகள் ரேவதி ஆகிய மூன்றுபேரும் கடந்த 2ம் தேதி தி.நகருக்கு டூவிலரில் வந்தனர். டூவிலரை பிரகாஷ் ஓட்ட, பின்னால் சங்கீதாவும் ரேவதியும் அமர்ந்திருந்தனர். தி.நகரில் மளிகைப் பொருள்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு மூன்று பேரும் டூவிலரில் சென்றனர். அப்போது சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயராமன், பிரகாஷின் டூவிலரை வழிமறித்து எதற்காக ஹெல்மெட் அணியவில்லை என்று கேட்டுள்ளார். அதன்பிறகு பிரகாஷிக்கும் ஜெயராமனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அது, கைகலப்பாக மாறியது. இந்தக் காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவிலும் பிரகாஷ் மற்றும் போலீஸார் எடுத்த செல்போன் வீடியோக்களிலும் பதிவாகின. தற்போது, அந்த வீடியோக்கள்தான் சமூக வலைதளத்தில் வைரலாகி போலீஸாரை விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது. இந்தச் சம்பவத்தில் மாம்பலம் போலீஸார், பிரகாஷை கைது செய்தனர். தொடர்ந்து மாநில மனித உரிமை ஆணையம், `சுமோட்டா'வாக இந்த வழக்கை எடுத்து காவல்துறையிடம் விளக்கம்கேட்டு உத்தரவிட்டுள்ளது. 
 இந்தநிலையில் தி.நகர் சம்பவத்தில் என்ன நடந்தது? என்று சங்கீதாவிடம் பேசினோம். 

 ``சம்பவத்தன்று, மளிகைப் பொருள் வாங்கத்தான் ஒரே பைக்கில் நாங்கள் மூன்று பேரும் சென்றோம். பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினோம். அப்போதுதான் ஜெயராமன் என்ற போலீஸ்காரர் பைக்கை வழிமறித்தார். என்னுடைய மகன் பிரகாஷிடம், எதற்காக ஹெல்மெட் போடவில்லை? என்று கேட்டார். அதற்கு பிரகாஷ், `டிராஃபிக்காக இருக்கிறது' என்று பைக்கிலிருந்த ஹெல்மெட்டை காண்பித்தான். அடுத்து, `டிரிப்பிள்ஸ்' எப்படி வரலாம் என்று கேட்டார். அதற்கு பிரகாஷ், `அம்மாவையும் தங்கச்சியும்தான் அழைத்துச் செல்கிறேன்' என்று சொன்னார். அதற்கு, `கால்டாக்ஸி அல்லது ஆட்டோவில் போகாம எங்களை ஏன் கழுத்தை அறுக்கிறீர்கள்' என்று ஜெயராமன் கூறினார்.

பிரகாஷ்

இதைக் கேட்டவுடன் பிரகாஷ், " நீங்கள் எப்படி சார் அப்படிச் சொல்லலாம்?" என்று கேள்விகேட்டான். போலீஸை எதிர்த்தா பேசுகிறாய் என்று பிரகாஷின் சட்டையைப் பிடித்து இழுத்தார் ஜெயராமன். அதைப்பார்த்ததும் போலீஸாரிடம் என்னுடைய மகனை விட்டுவிடும்படி கெஞ்சினேன். அதற்குள் இன்னும் சில போலீஸ்காரர்கள் அங்கு வந்துவிட்டனர். அவர்கள், பிரகாஷை வலுகட்டாயமாக இழுத்துச் சென்றனர். அவர்களிடம் மீண்டும் நான் கெஞ்சினேன். அப்போது, ஒரு போலீஸ்காரர் வாக்கிடாக்கியால் என்னை ஓங்கி அடித்தார். இதைப் பார்த்ததும் பிரகாஷுக்குக் கோபம் வந்துவிட்டது.

உடனே என்னை அடித்த போலீஸ்காரரிடம் வாக்குவாதம் செய்தான். அடுத்து அவருடைய சட்டையையும் பிடித்தான். இதைப்பார்த்த மற்ற போலீஸ்காரர்கள் என் மகனை சரமாரியாக அடித்தனர். அதைத் தடுக்கச் சென்ற என்னையும் பிடித்துத் தள்ளினர். இதனால், நான் கீழே விழுந்தேன். இந்தச் சம்பவங்களைப் பார்த்த பொதுமக்களில் சிலர் போலீஸாரைத் தட்டிக்கேட்டனர். அதன்பிறகும் போலீஸ்காரர்கள் பிரகாஷை விடவில்லை.

இதையடுத்து, என் மகனை போலீஸார் அடிப்பதை பார்க்க முடியாமல் மயங்கிவிட்டேன். உடனே அங்கிருந்த சிலர் எனக்குத் தண்ணீர்கொடுத்து மயக்கத்தை தெளியவைத்தனர். பிறகு, எங்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கேயும் போலீஸ் சட்டையை எப்படி நீ பிடிக்கலாம் என்று சொல்லிக் கொண்டே பிரகாஷை அடித்தனர். அதைப்பார்த்த எனக்கு மீண்டும் மயக்கம் ஏற்பட்டது. இதனால், போலீஸார்தான் என்னை சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். அங்கு, என்னை உள்நோயாளியாக சேர்க்க ஏற்பாடு நடந்தது. அந்தச் சமயத்தில் என்னுடைய தம்பி, ஜெய்யை போனில் தொடர்பு கொண்ட போலீஸார், பிரகாஷை வெளியில் விடுவதாகக் கூறினர். அதை நம்பி அவசர, அவசரமாக போலீஸ் நிலையத்துக்கு வந்தோம். ஆனால் அங்கு பிரகாஷ் இல்லை.

பிரகாஷ் அம்மா

நான் உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படக் கூடாது என்பதற்காக போலீஸார் செய்த சதிவேலை என்று பின்னர்தான் தெரிந்தது. தொடர்ந்து, 3ம் தேதி எனக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து நேற்றிரவுதான் வீட்டுக்கு வந்தேன். சிறையில் அடைக்கப்பட்ட பிரகாஷை, என்னுடைய தம்பி ஜெய் சிறையில் சந்தித்தார். அப்போது, மாமா எனக்கு வலது கை வலிக்கிறது என்று பிரகாஷ் கூறியுள்ளான்" என்றார்.

தொடர்ந்து சங்கீதாவின் உறவினர் செந்தில் கூறும்போது, ``சங்கீதாவின் கணவர் முனுசாமி ஆட்டோ டிரைவர். இவர்களுக்கு பிரகாஷ் என்ற மகனும் ரேவதி என்ற மகளும் உள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு முனுசாமி இறந்துவிட்டார். அப்போது பிரகாஷ், கல்லூரி முதலாமாண்டு படித்தார். தந்தை இறந்ததால் குடும்பப் பொறுப்பை பிரகாஷ், கவனிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தனியார் கம்பெனியில் டிரைவர் வேலைக்குச் சென்றார். ரேவதி, பிளஸ் ஒன் படிக்கிறார். சங்கீதாவும் வீட்டு வேலை செய்து குடும்பத்தை கவனித்துவருகிறார். இந்த ஏழை குடும்பத்தினரிடம்தான் போலீஸார் தங்களுடைய வீரத்தை காட்ட வேண்டுமா. இதுவே, வி.ஐ.பி. குடும்பத்தினரிடம் போலீஸார் தைரியமாகப் பேச முடியுமா" என்றார். 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பிரகாஷ் சம்பவத்தில் சட்டப்படி நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். சம்பவத்தன்று போலீஸாரைப் பணிசெய்ய விடாமல் பிரகாஷின் குடும்பம் தடுத்துள்ளது. நடந்த சம்பவம் முழுவதும் வீடியோவாக உள்ளது. இதனால், நாங்கள் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மிகைப்படுத்தி பேசவும் வேண்டியதில்லை. மாநில உரிமை ஆணையத்திடம் அங்கு நடந்த முழு வீடியோவையும் எங்கள் தரப்பு ஆவணங்களையும் சமர்பிப்போம் "என்றனர்.  

பிரகாஷை ஜாமீனில் வெளியில் எடுக்கும் வேலைகள் நடந்துவருகின்றன. அதோடு, பிரகாஷ் தரப்பிலும் மாநில மனித உரிமை ஆணையத்திடமும் முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், தி.நகர் பிரச்னை சென்னை போலீஸாருக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

https://www.vikatan.com/news/tamilnadu/121282-traffic-police-assaulted-me-and-my-son-prakashs-mother-explains-the-tragedy.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.