Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்கமோ பக்கத்தில்; தமிழர்களோ துக்கத்தில்

Featured Replies

நல்லிணக்கமோ பக்கத்தில்; தமிழர்களோ துக்கத்தில்
 
 

இலங்கைத் தீவின் பல்லின மக்கள் பலவகையாகப் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடினாலும், புதுவருடத்துக்குத் தனியிடம் உண்டு. தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பு என்றே, விழித்துக் கூறப்படுகின்றது. நாட்டின் இரு தேசிய இனங்கள் கொண்டாடும், ஒரு விழாவாகும்.   

சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் வருடப் பிறப்பு, பெருமெடுப்பில் கொண்டாடப்பட்டது. அவர்கள், பெரும் மகிழ்வுடனும் உற்சாகத்துடனும் புதுவருடத்தை வரவேற்றனர்; விருப்புடன் கொண்டாடினர்.   

மறுவளமாக, அதே புதுவருடக் கொண்டாட்டங்கள் தமிழர் பிரதேசங்களில் சிறப்பாகக் களை கட்டவில்லை. முக்கியமாகப் புதுவருடத்தைக் கொண்டாடும் வகையில், தமிழ் மக்களது மனங்களில் மகிழ்ச்சியும் இல்லை; கரங்களில் பணமும் இல்லை.   

நாளாந்தம் மனம் உள்ளே, பொங்கிப் பொசுங்கி, இறக்கும் தறுவாயில் உள்ள வேளையில், வெளியே என்ன வாழ்க்கை என்ற ஏக்கத்தில், தமிழ் மக்களது நாட்கள் வேண்டா வெறுப்பாகக் கழிகின்றன.

‘மனதுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி’ எனக் கோவிலுக்குச் சென்று, பூஜை வழிபாடுகளுடன், அமைதியான முறையில் புதுவருடத்தை வரவேற்றனர்.   இவ்வாறாகவே, நம் நாட்டின் நல்லிணக்கமும் தேசிய ஒருமைப்பாடும் பயணிக்கின்றது.   

வடக்கு மாகாண ஆளுநர், யாழ். போதனா வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை முடித்து வெளியேறும் தமிழர்களது குருதியில், சிங்கள இரத்தம் ஓடுகின்றது என பெருமிதம் கொள்கின்றார். சிங்களப் படையினர் வழங்கிய இரத்த தானத்தையே இவர் இவ்வாறாகக் கூறி, நல்லிணக்கம் வளர்க்கின்றார்.   

ஒரு தடவை கூறினால், தமிழ் மக்கள் மறந்து விடுவார்கள் என, இரண்டு தடவைகள் கூறியுள்ளார். ஆனால், இந்த கூற்றால், தமிழ் மக்கள் மனதளவில் கவலையடைகின்றனர்.    

தமிழ் மக்களுக்குப் படையினர் இப்போது குருதி வழங்கியிருக்கலாம். ஆனால், முள்ளிவாய்க்காலில் ஓடிய இரத்த ஆற்றையும் இரத்த வாடையையும் ஒவ்வொரு தமிழ் மகன(ள)து உடலில் உயிர் உள்ள வரை மறக்க முடியுமா?  

குருதிக்கொடை என்பது, ஓர் உயர்ந்த  விடயம்; உயிர்க்கொடை. அதில் சிங்கள இரத்தம், தமிழ் இரத்தம் என வேறுபாடு கிடையாது. ஆனால், குருதிக்குள்ளும் குதித்து, குந்தியிருந்து அரசியல் நடாத்துவது, துயரத்திலும் துயரம்.  

மக்களுக்கு அரச சேவையாற்ற, வவுனியா வந்த மாவட்ட செயலாளர், அரச செயலக வளாகத்தில், படையினரின் உதவியுடன் விகாரை கட்ட முற்படுகின்றார். நாட்டின் பல பாகங்களில் இருந்தும் உயர் கல்வி கற்க, வவுனியா வந்த சிங்கள மாணவர்கள், வளாகத்தில் விகாரை கட்ட முற்படுகின்றனர். ஒட்டுசுட்டானில் கோவிலை இடித்து விகாரை கட்டப்பட்டுள்ளது.   

யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் பிள்ளையார் கோவில் வளவில் விகாரை கட்டி, கோவில் மடப்பள்ளியை பிக்குவின் வீடாக்கி, ‘கமுனு விகாரை’ எனப் பெயர் சூட்டி, நிறைவில் ஆதனமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறைப் பொலிஸார் பாதுகாத்துப் பராமரித்து வருகின்றனர்.   

அந்நியரான ஐரோப்பியரின் ஆட்சிக் காலத்தில் கூட, உன்னத தியாகங்களின் மத்தியில், தமிழ் மக்கள் பாதுகாத்த கோவில்கள், சகோதர இனத்தின் ஆட்சியில் அழிக்கப்படுவதை, யார் தடுப்பார்?   
 ஆகவே இதைத் தமிழ் மக்கள், அந்நியர் ஆட்சிக்காலம் என அழைப்பதா அல்லது நல்லாட்சி என அழைப்பதா?   

அனைத்து மதங்களும் பல வழிபாட்டு முறைகளைக் கூறினாலும், அடிப்படையில் அன்பு ஒன்றே இலக்கு. மனதில் அமைதியையும் ஆனந்தத்தையும் தேடியே, அனைவரும் ஆன்மிகம் நோக்கிச் செல்கின்றனர்.   

பெரும்பான்மை இனத்தவரின் மதச் செயற்பாடுகள், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது உருக்குலைந்த உள்ளங்களை ஆற்றுப்படுத்தத் தவறி, ஆக்கிரமிப்பை நோக்கமாகக் கொண்டமைந்ததாக காட்சிகள் மேடையேறுகின்றன. ஒரு விதமான உளவியல் யுத்தத்தை, கத்தியின்றி இரத்தமின்றி நடாத்திக் கொண்டிருக்கின்றது.   

ஒரு மதத்தின் செயற்பாடுகள், நாட்டை இரண்டாக்கி விட்டன. இவ்வாறான செயற்பாடுகளால், வெட்கித் தலை குனிய வேண்டிய தலைமைகள், வீரத்துடன் பல தலைமுறைகளாகச் செய்து வருவதே, நம் நாடு கடந்து வந்த கசப்பான வரலாறு.   

வடக்கு, கிழக்கில் ஆயிரம் விகாரைகள் அமைக்கப்படும் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விஞ்ஞாபனம் ஆகும். இவ்வாறான விகாரை விவகாரங்கள், ஐ.தே.கவின் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரகாரமே,  நடைபெறுகின்றதோ என்ற சந்தேகங்களும் தமிழர்கள் மனங்களில் எழுகின்றன.   

ஆயிரம் நூலகங்கள் அமைத்து கல்வி வளர்க்கலாம்; ஆயிரம் விளையாட்டுக் கழகங்கள் அமைத்து விளையாட்டை ஊக்குவிக்கலாம். யுத்தத்தால் இல்லத்தை இழந்து, அல்லல்படும் ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் இன்னமும் பரிதவிக்கின்றன. ஆனால், ஏதோ வடக்கு, கிழக்கில் ஒரு விகாரையும் இல்லாதது போல, ஆயிரம் விகாரைகளை அமைத்து, அதன் ஊடாக, எந்த விதமான நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என, ஆட்சியாளர்கள் கருதுகிறார்களோ தெரியவில்லை.   

“இலங்கையில் வாழும் சிங்களவர்கள் நல்லவர்கள். அவர்கள் இன, மத வேறுபாடுகளைப் பார்ப்பதில்லை. ஒரு சில குழப்பவாதிகள், சிறிய பிரச்சினைகளைப் பூதாகரமாக்கி, குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்” எனக் கடந்த சில நாட்களுக்கு முன்னர், யாழ். வந்த தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்திருந்தார்.   

ஆனால், அண்மையில் ஒரு சில குழப்பவாதிகள், கண்டியில் சண்டித்தனம் புரிந்து போது, எண்ணிக்கையில் கூடிய ‘அந்த’ நல்லவர்களால், அழிவுகளை அணைக்க முடியாமல் போனது, துர்ப்பாக்கியமே.   

சிங்கள அரசியல் தலைவர்களுக்குத் தொடர் அழுத்தங்களைக் கொடுத்து, இனப்பிணக்கை தீர்க்க முடியாமல் போனபடியால், வடக்கு, கிழக்கில் யுத்த வேள்விக்காக உயிர்ப்பலி கொடுக்கப்பட்டு விட்டதே? இந்த அழிவுகளுக்குக் காரணமான பிரச்சினைகளுக்குத் தீர்வு குறித்து, நல்லவர்கள் என்ன சொல்லப் சொன்னார்கள், சொல்லப் போகின்றார்கள்?    

அமைச்சரின் கருத்து முற்றிலும் உண்மையெனின், ஒரு சில குழப்பவாதிகளின் முன்னால், ஒட்டு மொத்த நல்லவர்களும் தோற்று விட்டார்களா? ஒரு சில குழப்பவாதிகளா, ஒரு நாட்டையே குட்டிச்சுவராக்கும் பிரச்சினையின் கட்டுப்பாட்டாளர்களா?   

புதிய அரசமைப்பு ஆட்டம் கண்டு விட்டது; அதனை ஓட்டம் எடுக்கும் நிலையைக் கடும் போக்காளர்கள் ஏற்படுத்தி விட்டார்கள். நிலைமை இவ்வாறிருக்க, அமைச்சர் 2020இல் பிரச்சினைக்குத் தீர்வு என்றும் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.   

முல்லைத்தீவு, நாயாறில் சட்டவிரோதமாக நாற்பது படகுகளை வைத்து, கடற்றொழிலில் ஈடுபடும் பெரும்பான்மை இனத்தவரை, நாற்பது மாதங்களாக, ஆட்சி செய்வோரால் அசைக்க முடியாமல் உள்ளது.   

விதையை விதைத்தவன் நித்திரையானாலும் இடப்பட்ட விதை விழித்திருக்கும்; அது ஒருபோதும் உறங்காது. அதேபோலவே, அன்று விதைக்கப்பட்ட இனவாத, மதவாத விதைகள், துளிர்கள் விட்டபடியே, அசுர வேகத்தில் பலமடைந்து வருகின்றன.   

அது, ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட, மிகவும் வலுவான நிகழ்ச்சி நிரலுக்குள் வந்து, பல தசாப்தங்கள் கடந்து விட்டன. இந்த நாட்டின் அரச தலைவராக மஹிந்த வந்தாலென்ன, மைத்திரி வந்தாலென்ன, ஆக்கிரமிப்புகளும் தமிழர் விரோதப் போக்குகளும் நடந்தே தீரும் என்பது மட்டும் திண்ணம்.   

முதலாவது நபர், தமிழர் விரோத நடவடிக்கைளை அதிரடியாகவும் அடாவடியாகவும் நடாத்துவார்; நடத்தியவர். ஆனால், இரண்டாவது நபர், நாட்டில் நடக்கும் தமிழர் விரோத நடவடிக்கைகள் குறித்து, எள்ளளவும் தெரியாதது போல, அமைதியாக இருப்பார்.   

ஒட்டுமொத்தத்தில் எந்தச் சிங்களத் தலைமை ஆட்சியில் வீற்றிருந்தாலும், தமிழ் மக்களது எதிர்காலத்தை இருட்டுக்குள் தள்ளி, அந்த நிறுவனமயப்படுத்தப்பட்ட, இனவாதிகளை மகிழ்ச்சிப்படுத்துவதே, அவர்களது கடமைப் பட்டியலில் முக்கியமானது. ஆனால் அதை நல்லிணக்கம் என்றும் நல்லாட்சி என்றும் கூறி நாசுக்காக முத்திரை குத்தி நடாத்துவதையிட்டு தமிழர்கள் கவலை கொள்கின்றனர்.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நல்லிணக்கமோ-பக்கத்தில்-தமிழர்களோ-துக்கத்தில்/91-215220

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.