Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பு படையினரின் வணிக மையங்களாக வடக்கு மாறிவருகிறது – தரவுகளுடன் விக்கி….

Featured Replies

பாதுகாப்பு படையினரின் வணிக மையங்களாக வடக்கு மாறிவருகிறது – தரவுகளுடன் விக்கி….

அரசாங்கம் என்ன நினைக்கும் இராணுவம் என்ன நினைக்கும் என்பதல்ல  நாம் என்ன  நினைக்கிறோம் என்பதுவே முக்கியம்…

vikki.png?resize=576%2C439

 

வாரத்துக்கொரு கேள்வி – 04.05.2018
நான் தென்னிந்தியாவில் இருந்து திரும்பியதும் எனக்கு கிடைத்த கேள்வி இது. 2018 ஏப்ரல் 29ந் திகதிய சிலோன் ஒப்சேர்வருக்கு நான் வழங்கிய செவ்வியின் அடிப்படையில் கேள்வி அமைகின்றது.

கேள்வி–வட கிழக்கில் இராணுவத்தினர் தொடர்ந்து குடியிருக்க எந்தவித காரணமும் இல்லை என்று அண்மையில் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்குக்கூறியுள்ளீர்கள். இதனால் அரசாங்கத்துடன் நீங்கள் முரண்டு பிடிப்பது மட்டுமன்றி குடியிருக்கும் இராணுவத்தினரை கோபமடையச் செய்துள்ளீர்கள். இவ்வாறான கூற்றுக்களைத் தவிர்த்திருக்கலாமே?

பதில்- ‘சண்டே ஒப்சேவர’; பத்திரிகையின் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போது பாதுகாப்புக் காரணங்கள் எதுவும் தற்போது இல்லாததால் இராணுவத்தினர் தொடர்ந்து வடகிழக்கில் குடியிருந்து வரவேண்டிய அவசியம் இல்லை என்று கூறினேன். அத்துடன் இராணுவக் கண்காணிப்பு செய்வதற்கு பயன்தரக்கூடிய காணிகளைஏக்கர் ஏக்கராய் வைத்திருக்கத் தேவையில்லை என்றும் ஒரு அறையினுள்ளே இருந்து நவீன கருவிகளைப் பாவித்து கண்காணிப்பில் ஈடுபடலாம் என்றும் கூறினேன்.

உங்கள் கேள்வி எமது தமிழ் மக்கள் பலரின் மனோநிலையை எடுத்துக்காட்டுகின்றது. போர்க்காலப் பயங்களும் பாதிப்புக்களும் இன்றும் எம்முள் அமிழ்ந்து கிடக்கின்றன என்று தெரிகின்றது. உதாரணத்திற்கு இராணுவம் வெளியேற வேண்டும் என்றால் அரசாங்கமும் இராணுவமும் எங்கள் மீது கோபம் அடைவன என்று கூறுவது போர்க்காலத்தில் பயத்தில் சிந்தித்து நாங்கள் நடந்து கொண்ட விதத்தைப் பிரதிபலிக்கின்றது. அந்தப் பயத்தை நாங்கள் தொடர்ந்து எங்கள் உள்ளங்களில் சுமந்து செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதே எனது கருத்து. தற்போது ஜனநாயக சூழல் பிறந்துள்ளது.

இவ்வாறான ஜனநாயக சூழலை ஏற்படுத்தாது இருக்கவே முன்னைய அரசாங்கம் கோதபாயவின் கீழ் ஒரு வல்லாட்சியை முடுக்கி விட்டிருந்தது. வெருட்டி ஆள்வதை அவ் வல்லாட்சி தனது குறிக்கோளாக வைத்திருந்தது. இன்று ஜனநாயகம் பிறக்கக் காரணம் வெளிப்படையாக ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் சில நாடுகளே பின்னிருந்து இன்றைய கூட்டரசாங்கத்தைப் பதவிக்கு வர உதவி புரிந்தமையே. தமிழ்ப் பேசும் மக்களும் எமது பெரும்பான்மையான வாக்குகளை அளித்தே இந்த ஜனநாயக அரசை பதவிக்குக் கொண்டுவந்தோம்.

அரசாங்கம் என்ன நினைக்கும் இராணுவம் என்ன நினைக்கும் என்பது பிழையான சிந்தனை. அரசாங்கம் என்ன செய்ய வேண்டும், இராணுவம் என்ன செய்ய வேண்டும் என்பவற்றை அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் எடுத்துக்கூறுவதே எமது கடமை. நீங்கள் கூறுவது போல் அவருக்குப் பயந்து இவருக்குப் பயந்து நாங்கள் எமது மனோநிலையை அவர்களுக்கு எடுத்துக் கூறாமல் இருந்தோமானால் ஏன் என்று கேட்க முதலே வடக்கு கிழக்காய் மாறிவிடும். இன்று வடக்கில் நடந்து வருவன பற்றி அறிந்துதான் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளீர்களா என்று சந்தேகமாக இருக்கின்றது.

ராணுவம் சுமார் 60000 ஏக்கர் காணியை வடமாகாணத்தில் பிடித்து இன்றுந் தன் கை வசம் வைத்திருக்கின்றது. கேட்டால் அவ்வளவு இல்லை என்கிறார்கள். புள்ளி விபரங்கள் ஒருவர்க்கொருவர் மாறுபடுகின்றன. இதுவரை சிறிது சிறிதாகத் திருப்பிக் கையளித்து வருங் காணிகள் தனியாருக்குச் சொந்தமான காணிகளே. இவற்றை விட பண்ணைகள், அரசாங்கக் கட்டிடங்கள், சனசமூக நிலையங்கள்,அரச காணிகள்,காடுகள் போன்ற பலவற்றையும் பிடித்து வைத்துள்ளார்கள் படையினர்.  காட்டுப்பாங்கான பிரதேசங்களில் எமது வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. விலையுயர்ந்த மரங்கள் தறிக்கப்படுகின்றன. அவை போகுமிடம் யாரும் அறியார். இத்தனைக்கும் ஆயிரக் கணக்கான போர் வீரர்கள் வன்னியில் குடிகொண்டுள்ளனர்.

கொழும்பில் வழங்கும் அனுமதிப் பத்திரங்கள் குறிப்பிடும் அளவுக்கு அதிகமாக கருங்கற்கள் வெட்டி எடுத்துச் செல்லப்படுகின்றன. இவை இராணுவ அனுசரணையுடன் நடக்கின்றன என்பதற்கு அத்தாட்சிகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.  இங்குள்ள பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடி இடங்கள் தெற்கிலிருந்து வந்தவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய மீனவர்கள் வாழ்வாதாரம் இல்லாது தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

யு9 தெருக் கடைகள் வைத்திருப்போர் பலர் இராணுவத்தினரின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் அல்லது உளவாளிகள். இராணுவம் பெருமளவில் காட்டுப் பிரதேசங்களில் கையகப்படுத்தி வைத்திருக்குங் காணிகளைச் சென்று பார்க்க முடியாது. திருமுருகண்டி ஒரு நல்ல உதாரணம். சுமார் 1702 ஏக்கர் காணியை இராணுவம் அங்கு வைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் அங்கு நாங்கள் எவரும் போகமுடியாது.

பாதுகாப்புக்காக இராணுவம் வடமாகாணத்தில் தரித்து வைக்கப்பட்டிருக்கின்றது என்பதிலும் பார்க்க வணிக நோக்குடன் இராணுவம் இயங்குகின்றது என்பதே உண்மை. இராணுவம் மட்டுமல்ல. கடற்படை, விமானப்படைகளும் இவ்வாறான வணிக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

சட்ட கோட்பாட்டுக் கற்கைகளுக்கான தெற்காசிய மையம் (South Asia Centre for Legal Studies SACLS) என்ற நிறுவனம் சென்ற மாதம் ஒரு கைநூலை வெளிக் கொண்டு வந்துள்ளது. அதில் எவ்வாறான வணிக வியாபார நடவடிக்கைகளில் இராணுவம் இதுகாறும் முழு நாட்டிலும் இயங்கி வருகின்றது என்பது பற்றிக் கூறப்பட்டுள்ளது. உணவகங்கள், சுற்றுலா புகலிடங்கள், வரவேற்பு மண்டபங்கள்ஃசிற்றுண்டிச்சாலைகள் போன்றவற்றை நடாத்துதல், சுற்றுலாப் பயணத் தொழிலில் ஈடுபடல், ஓய்வு நேர கேளிக்கைகளை நடாத்துதல்,ஃகோல்ஃப் எனப்படும் குழிப்பந்தாட்ட மையங்களை நடாத்துதல், விவசாய நிலங்கள், தோட்டங்கள், பண்ணைகளை இயக்குவது,சிவில் பாதுகாப்பு என்ற போர்வையில் இயற்றப்படும்நடவடிக்கைகள் போன்ற பலவற்றிலும் இராணுவம் மூக்கை நுழைத்துள்ளது. உதாரணத்திற்கு வடமாகாணத்தில் தல்செவண என்ற விடுமுறை தங்குமிடம் காங்கேசன்துறைக் கடற்கரையை அடுத்த ஒரு சொகுசு சுற்றுலாப் புகலிடம். 2010 ஒக்டோபரில் திறக்கப்பட்டு இன்று வரையில் நடைமுறையில் இருக்கும் தல்செவணவை அண்டிய பல ஏக்கர் கடற்கரைக் காணிகள் படையினர் வசமே உண்டு. தல்செவணவை யாழ் பாதுகாப்புப் படைகளின் தலைமைக் காரியாலயமே நடத்துவதாகக் கேள்வி. அது யாருக்குரியது, சட்டப்படி யார் நடத்துகின்றார்கள் என்பது போன்ற விபரங்கள் மர்மமாகவே உள்ளன.

மேலும் சுண்டிக்குளம் இயற்கைப் பூங்கா விடுமுறைத் தங்குமிடமானது பறவைகள் சரணாலயத்திற்கு அண்மையில் 2012ல் அமைக்கப்பட்டு அதனை இராணுவத்தினரே நடாத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த விடுமுறைத் தங்குமிடத்தையும் நடத்தும் இராணுவப் பிரிவு எது என்பதில் தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. வெளிப்படைத் தன்மையில்லாமலே இந் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் 180 ஏக்கர் காணி கொண்ட பலாலி பண்ணையில் தூவு நீர் வசதிகளுடன் இராணுவத்தினரால் பயிர்ச்செய்கைகள் நடாத்தப்பட்டு வருகின்றன. வவுனியா மெனிக் பண்ணையும் நெல், மரக்கறி பயிர்ச்செய்கைக்குப் பாவிக்கப்பட்டு வருகின்றது.

மலிமா விருந்தோம்பல் சேவைகள் என்ற நிறுவனத்தை இலங்கை கடற் படையினர் நடாத்தி வருகின்றனர். 2013ம் ஆண்டு தொடக்கம் இந் நிறுவனம் தொழிலில் ஈடுபட்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தின் தெற்குப்புற கடற்கரைக்கு அண்மையில் இருக்கும்முதலில் போர்த்துக்கேயர் பின்னர் டச்சுக்காரர் காலத்து கோட்டையான அம்மன்னல் கோட்டை ((Fort  Hammenliel))கடற்படையினரால் நடாத்தப்பட்டு வருகின்றது. கடற்படை நடாத்துவதாகக் கூறப்பட்டாலும் இந்த சேவைகளைத் தனியார் சிலரே நடாத்தி வருகின்றார்களோ என்ற சந்தேகம் இருந்து வருகின்றது. எமது சுற்றுலாவுக்குப் பயன்படக்கூடிய பல இடங்களை கடற்படையினர் தம் கைவசம் வைத்துள்ளனர்.

கடல் வளங்களைப் பார்வையிடும் சுற்றுலாப் பயணங்கள் கூட கடற்படையினராலேயே நடாத்தப்பட்டு வருகின்றது. சுற்றுலாப்பயணிகள் இதற்காகக் கட்டும் கட்டணங்கள் யாவும் அவர்களாலேயே எடுத்துக்கொள்ளப்படுகின்றன. எமது மீனவ மக்களைப் புறக்கணித்தே இவ்வாறான நடவடிக்கைகள் இயற்றப்பட்டு வருகின்றன. ஆகாயப்படை ஹெலிடுவர்ஸ் என்ற விமான சேவையை நடாத்தி வருகின்றது. இவ்வாறு படையினரால் நடத்தப்படும் வணிக நோக்குடனான செயற்பாடுகள் பற்றி மேற்படி கைநூல் விபரங்களைத் தந்துதவியுள்ளது.

படையினர் வணிக நடவடிக்கைகளில் இறங்குவதில் ஏற்படும் பாதிப்புக்கள் இந் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர் வணிகர்களுடன் நியாயமற்ற வணிகப் போட்டியில் படையினர் ஈடுபட்டு வருவது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மற்றைய கம்பெனிகள், தனியார் நிறுவனங்கள் முகம் கொடுக்க வேண்டிய பல வரிகளுக்கும் செலவுகளுக்கும் இராணுவத்தினர் முகம் கொடுக்காததால் வணிகப் போட்டி படையினருக்கு சார்பாகவே நடைபெறுவதாகக் காட்டப்பட்டுள்ளது. இது வடமாகாணத்தில் நடைபெற வேண்டிய முதலீடுகளையும் வணிகத்தையும் பாதிப்பதாய் அமைந்துள்ளன. படையினர் மக்களின் வாழ்வாதாரங்களைத் தாமே சுவீகரித்துள்ளார்கள். இராணுவத்தினரின் வணிக நடவடிக்கைகள் பொதுவான சட்ட திட்டங்களுக்கு அமைய நடப்பதில்லை.

கடைசியாக CSD எனப்படும் இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தை நோக்கினோமானால் 2016ல் நாடு பூராகவும் சுமார் 5 மில்லியன் யூ.எஸ் டொலர்கள் CSD  இலாபம் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. விவசாயம், கால்நடைகள், ஓடு உற்பத்தி போன்ற பலவற்றில் எமது இளைஞர் யுவதிகளை வேலைக்கமர்த்தி வேலை செய்வித்து இலாபம் ஈட்டுகின்றனர். ஒரு விதத்தில் பார்த்தால் கூடிய சம்பளம் கொடுத்து எமது இளைஞர் யுவதிகள் அவர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்கள்.

அண்மைக் காலத்தில் இராணுவத்தினர் தமது நடவடிக்கைகளை தந்திரோபாயமாக முன்னெடுத்து வருகின்றார்கள். வீடுகள் கட்டிக் கொடுப்பது, கிணறு வெட்டிக் கொடுப்பது, குளங்கள், கடலோரங்கள் போன்றவற்றை சுத்தப்படுத்திக் கொடுத்தல், வாழ்வாதாரங்கள் கொடுத்தல், வெசாக் பண்டிகை போன்ற தினங்களில் கௌதமரின் பெயரைச் சொல்லி களியாட்டங்களையும், உணவகங்களையும் நடாத்துவது போன்ற நடவடிக்கைகளால் மக்களைத் தம்பால் திருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இது ஒரு ஆபத்தான நடவடிக்கை. தந்து தந்து எம்மைத் தம்பால் ஈர்த்து வருகின்றார்கள். இதற்கு அவர்கள் எதிர்பார்க்கும் ‘விலை’ தம்மைத் தொடர்ந்து இங்கிருக்க எம் மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பதே. மேலும் பௌத்தத்தைப் பரப்புவதிலும் கண்ணுங் கருத்துமாக உள்ளார்கள்.அண்மையில் எமது மாகாண உயரதிகாரி ஒருவர்’கடற்படையினரை வெளியேற வேண்டும் என்று முல்லைத்தீவு மக்கள் கோரவில்லை. அரசியல் வாதிகளே கோருகின்றார்கள்’என்று கொழும்பில் போய்க் கூட்டமொன்றில் உரக்கக்கூறியுள்ளார். இவரைப்போன்றவர்கள் இருக்கும் வரையில் எம்மால் படையினரை வெளியேற்ற முடியாது. படையினரை வெளியேற்றாவிட்டால் வடக்கு கிழக்காகிவிடும்.

எனவே எம் மத்தியில் இராணுவத்தினர் இருந்து ஈடுபடும் நடவடிக்கைகள் பற்றி எல்லோருந் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பௌத்தர்கள் இல்லா இடங்களில் புத்த சிலைகளை நிறுவ உதவி புரிவது இராணுவம். மகாவலி சபையினருடன் சேர்ந்து சிங்கள குடியேற்றங்களை வடமாகாணத்தினுள் ஏற்படுத்துவது இராணுவம். தெற்கத்தையரைக் கொண்டுவந்து சட்டத்திற்குப் புறம்பான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வைப்பது படையினரே. இவ்வாறே தொடர்ந்து படையினர் வடமாகாணத்தில் நிலை கொண்டால் நடக்கப்போவது என்ன என்பதை நீங்கள் யூகித்து அறிய வேண்டும். பத்துவருடம் போதும் வடக்கைக் கிழக்காக்க. நிலைமையை நீங்கள் புரிந்து கொண்டிருந்தீர்களானால் இந்தத் தொடை நடுங்கிக் கேள்வியை என்னிடம் கேட்டிருக்க மாட்டீர்கள்!

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

 

 

http://globaltamilnews.net/2018/77748/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.