Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனிதனும்... மனிதமும்!

Featured Replies

மனிதனும்... மனிதமும்!

 

 
kadhir3

பச்சையப்பனிடம் பேசிவிட்டு திரும்பிய கணத்திலிருந்து மனதில் பாரம், நடையில் துவளல்.
எனக்கு வயது 62. அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு. எனது ஊர் கடற்கரையை ஒட்டிய இடம். எனது வீட்டிற்கும் கடலுக்கும் துல்லியமாக 3 கி.மீ. எனக்கு எந்தவித நோய், தொந்தி, தொப்பை எதுவும் கிடையாது. பெற்ற பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்து விட்டு ஓய்வூதியத்தில் நிம்மதியான வாழ்க்கை.
நான் தினம் காலை 4.45 க்கு எழுந்து முகச்சவரம் செய்து, பல் துலக்கி, கழிப்பறை இயற்கை உபாதை வேலையை முடித்து விட்டு சரியாய் 5.20 மணிக்கு பொல பொலவென்று விடியும் பொழுதில் என் தெரு திருப்பத்தில் இருக்கும் சாலையில் கிழக்குப் பக்கம் திரும்பி நடைப்பயிற்சியைத் தொடங்கினால்.....ஒரே நேர் கடற்கரை. அரை கிலோ மீட்டரில் ஊரைத் தாண்டியதுமே.... இந்த சாலை அனாமத்து. வாய்க்காலை ஒட்டி விவசாய நிலங்களின் நடுவே நெடு நெடுவென்று ஓடி கடலுக்கு முன் உள்ள நூறடி சாலையில் முடியும். இதன் வடக்குப் பக்கத்தில் கடற்கரைக்கு முன் அரை கிலோ மீட்டரில் 200 வீடுகள் அடங்கிய சுனாமி குடியிருப்புகள். கடலை ஒட்டிய கடற்கரை மேட்டில் குப்பம், குடிசை வீடுகள். அடுத்து உடன் கடல். அதன் ஓ.....இரைச்சல். திடும் திடுமென்று அலைகள் விழும் சத்தம், ரீங்காரம். நான் தினமும் கடலைத் தொட்டுவிட்டுத்தான் திரும்புவேன். 3ம் 3ம் ஆறு கிலோ மீட்டரை நான் நடந்து முடிக்க....சரியாய் ஒரு மணி நேரம். அந்த வேகத்தில்தான் என் நடை இருக்கும். சமானியர்கள் எனக்கு இணையாக நடப்பது சற்று சிரமம். 
ஓய்வு பெறும்வரை என் நடைப்பழக்கம் என் வீட்டிலிருந்து சிறிது தொலைவில் மேற்கிலிருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்தது. காலை நேரத்திலேயே அதில் அதிக வாகனப் போக்குவரத்து, இரண்டு மூன்று விபத்துகள் வேறு ஏற்பட்டு விட்டதால் என் மனைவி....""இனி நீங்க அந்தப் பக்கம் போக வேணாம். இந்தப் பக்கம் போங்க,'' } என்று திசை மாற்றி விட்டாள்.
இதுவும் எனக்குப் பழக்கப்பட்ட, அறிமுகம் உள்ள சாலைதான். என்றாலும்.....நடைப்பழக்கத்திற்கு வந்த பிறகுதான் இதன் வனப்பும் அழகும்......சுத்தமான காற்றும். அட அட... இத்தனை காலமாக இதை இழந்திருந்தோமே..! என்று வருத்தம் வந்தது. விவசாயக் காலங்களில் வாய்க்காலில் தண்ணீர் ஓடும். நண்டு, நத்தை, பாம்புகள் என்று தண்ணீர் ஜீவராசிகள் மட்டுமின்றி அதில் வாழும் செடி கொடிகளும் நிறைந்திருக்கும். வயல்கள் தண்ணீர் பாய்ந்திருக்கும், அடுத்து ஏர் உழுவார்கள், அடுத்து நெல் இறைப்பு, விதைத்தெளி, பறிப்பு, நடவு.....பச்சைப் பசேல், அறுவடை. அருமை. மார்கழி, தை மாத பனி, குளிர், கொக்கு மடையான்கள் படை... எல்லாம் அற்புதம். 
கோடைக்காலத்தில் எல்லாம் பொட்டல்வெளி. வாய்க்கால் கரை, வயல் வரப்புகளில் இருக்கும் மரங்களின் உதவியால் காலையில் அருமையான குளிர் காற்று எந்தவித அப்பழுக்கில்லாமல் வீசும்.
இந்த சாலை வெறும் வாய்க்கால் கரையாகத்
தானிருந்தது. சுனாமிக்குப் பின் பட்டினச்சேரி மக்கள் போக்குவரத்திற்காக தார் சாலையாக உருமாற்றம் பெற்று விட்டது. விவசாயம் உள்ளவர்கள் வண்டி, வாகனப் போக்குவரத்திற்கும் வசதியாகப் போய் விட்டது.
5.20 வீட்டை விட்டு கிளம்பும் நான் 6.10க்குக் கடற்கரையைத் தொடும்போது பொழுது சுத்தமாக விடிந்திருக்கும். அந்த வேளையில் கடலின் மேற்பரப்பில் சிற்றெறும்பு, கட்டெறும்புகளாக கட்டு மரங்கள், படகுகள் ஊறும். 
கரையில்....தொழில் முடித்து வரும் படகு, கட்டுமரங்களை டிராக்டர் கொண்டு இழுத்து கரைக்குக் கொண்டு வருவார்கள். அதிலிருந்து பிடிபட்ட மீன்களை இறக்கி தரையில் கொட்டி, சுத்தம் செய்து, ஏலம் விடுவார்கள். மீனவப் பெண்கள் அவற்றை ஏலம் எடுத்து தலைச்சுமையாக ஊருக்குள் எடுத்து வந்து..... ""நண்டு... ரால்... மீனோவ்...'' என்று விற்றுப் போவார்கள்.
தினம் காலை கடற்கரை என்பது பட்டினச்சேரி மக்களுக்கு அங்காடி, துள்ளலான தொடக்க நாள்.
வீட்டில் விருந்தாளிகள் வந்தாலும், வெளிநாடுகளிலிருந்து பேரப்பிள்ளை, மகன்கள் குடும்பங்கள் வந்து தங்கினாலும் நானும் இந்த அதிகாலை நேரத்தில் இங்கு மீன், இரால், நண்டெல்லாம் வாங்கிப் போவேன். 
நான் தினம் மீனவர்கள் கண்களில் படும் ஆள் என்பதால் கொடுக்கும் பணத்திற்குக் கூடுதலாகவே கொடுப்பார்கள். வேண்டாமென்று மறுத்தாலும் விடாமல்... ""எடுத்துப் போங்கைய்யா...'' என்று எல்லாப் படகுகாரர்களுமே வாஞ்சையாகவும், அன்பாகவும் சொல்லி அனுப்புவார்கள்.
நான் தினம் கடற்கரையை நெருங்கும் நேரமெல்லாம் பச்சையப்பன் கடலிலிருந்து துடுப்போடும், கடல் ஓரம் உள்ள சவுக்குக் காட்டில் காலைக்கடனை முடித்து... கடலில் கழுவிவிட்டு அழுக்கு வேட்டியோ, கைலியோ இறக்காமல் திறந்த பின் பக்கமாக எதிரில் வருவார்.
குப்பத்தில் உள்ள பெரும்பாலான ஆண், சிறுவர், சிறார்களுக்கு அந்த சவுக்குத் தோப்பும், கடல் ஓரமும்தான் என்றும் திறந்தவெளி கழிப்பிடம். கடல் சுத்தம் செய்யும் இடம். அது கடலுக்குள் தொழிலுக்குப் போய் வருபவர்களாய் இருந்தாலும் சரி, வீட்டில் இருப்பவர்களாய் இருந்தாலும் சரி. இவர்களுக்கு சுனாமி வீட்டில் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தும் மாறாத நிலை.
பச்சையப்பன் ஐந்தடிக்கும் குறைவான உயரம். வத்தல் தொத்தலான உருவம். ஏறத்தாழ எண்பதைத் தொடும் வயோதிகத்தில் சுருக்கம் விழுந்த தோல்கள், தேகம். வத்தலான கை, கால்கள். இடுப்பில் அழுக்கு வேட்டி, கிழிந்த பனியன், கழுத்தில் துண்டு. சவரம் இல்லாத தொங்கிய முகம். எந்த நாள் பார்த்தாலும் இதுதான் அவர் அடையாளம். நான் இந்த ஆளை இப்படி பார்ப்பேனே தவிர, பேசியது கிடையாது. 
எத்தனை நாளைக்கு நான் இவரை இப்படியே பார்க்க முடியும் ? ஓய்வெடுக்க வேண்டிய வயதில் துடுப்பும் கையுமாய் ஏன் இப்படி ? } அவரிடம் விபரம் அறிய வேண்டுமென்றே.... உடன் அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.
துடுப்புடன் எப்போதும் போல் எதிரில் வந்தவரை, ""ஐயா'' அழைத்து நின்றேன். துணுக்குற்று, "" என்னையா கூப்பிட்டீங்க ?'' நம்ப முடியாமல் கேட்டு நின்றார்.
""ஆமாம்.''
"" ஏன் ?''
""தினம் கடல்லேர்ந்து வரும்போது பின் பக்கம் வேட்டியை இறக்காமலேயே வர்றீங்க..'' என்றேன்.
""கோவணம் கட்டி இருக்கேன் ஐயா. வயசானவன் அதனால் அலட்சியம்.'' சொல்லி சாவகாசமாக வேட்டியை இறக்கி விட்டு நடந்தார். நானும் நடந்தேன்.
"" பேரு.....?''
"" பச்ச.... பச்சையப்பன்!''
"" தினம் தொழிலுக்காகப் போய் வர்றீங்க ?''
""ஆமாம்'' என்றவர் வழக்கம் போல சாலை ஓரம் உள்ள மதகில் ஒதுங்கி துடுப்பைப் பக்கத்தில் வைத்துவிட்டு, அதன் மேற்பரப்பில் அமர்ந்து முகத்தில் வடியும் வியர்வையைத் துண்டால் துடைத்தார்.
நானும் அவர் அருகில் அமர்ந்தேன்.
இந்த குப்பத்துக்காரர்களுக்கு இந்த மதகு ஒரு முக்கியமான இடம். தெற்கு வடக்காகப் பேருந்து போக்குவரத்திற்காக ஏற்பட்ட நூறடி சாலையில் இது குறுக்கால உள்ள மதகு. மேலும் அடுத்தடுத்த குப்பங்களுக்குச் செல்ல இதுதான் வசதியான சாலை. சுனாமி நகருக்காக இங்கு பேருந்து நிறுத்தமும் உண்டு. சோத்தை எவர்சில்வர் தூக்கு வாளியில் கட்டிக் கொண்டு படகுத் தொழில் கூலிக்குப் செல்வோர்கள் இங்குதான் நிற்பார்கள். தேவைப்பட்டவர்கள் அவர்களை மினி லாரியில் வந்து ஏற்றிப் போவார்கள். அடுத்து ஊர் மறியல், மாதம் ஒரு நாள் அமாவாசையில் தொழிலுக்குப் போகாமல் ஊர் கூட்டமென்று இருப்பவர்கள் காலையில் இங்குதான் கூட்டமாக நின்று, உட்கார்ந்து அளவளாவி, சோம்பல் முறித்து பிரிவார்கள். ஆக... இங்கு பத்துப் பதினைந்து தலைகள் தெரிந்தாலே ஊரில் நல்லது, கெட்டது, விசேசம் என்று தெரிந்து கொள்ளலாம்.
"" தனியாவா போறீங்க ?'' பச்சையப்பனிடம் பேச்சைத் தொடர்ந்தேன்.
"" ஆமாம்.''
"" இந்த வயசான காலத்திலா?''
"".....................''
"" ஏன்...?''
"" வயசானவன், முடியாதவன்னு யாரும் என்னை கடலுக்கு அழைக்கிறதில்லே, சேர்த்துக்கிறதில்லே. என் வயித்துக்கு நான்தானே சம்பாதிக்கணும். அதான் கட்டுமரப் பயணம்.''
"" உங்க சொந்த கட்டுமரமா?''
"" ஆமாம்.''
"" அதுல மோட்டார் இருக்கா ?''
"" முன்னாடி இருந்துச்சி. இப்போ இல்லே.''
"" ஏன் இல்லே...?''
"" வறுமை. வித்து சுட்டுட்டேன். இப்போ துடுப்புதான்.!''
"" கை வலிக்குமே...! ?''
"" வலிக்கும். வலிக்குது. இதனால கடலுக்கு ரொம்ப தூரம் போக மாட்டேன். கூப்பிடு தூரம். விடிகாலை நாலு மணிக்கு எழுந்து கடலுக்குப் போனா விடிஞ்சதும் திரும்பிடுவேன். எனக்கும் என் பொண்டாட்டிக்கும் ரெண்டு வயித்து சீவனுக்கு இதுல கிடைக்கிற மீனு... இந்த பொழைப்பு, உழைப்புப் போதும்.''
"" வேற வருமானம் ஏதாவது உண்டா ?''
அந்தப் பகுதியில் நடமாடும் குப்பத்துக்காரர்கள் எங்களைப் பார்த்துச் சென்றார்களேயொழிய இடை மறித்து ஏதும் பேச்சுக் கொடுக்கவில்லை.
"" ம்...ம்... அரசாங்கம் கொடுக்கிற முதியோர் பணம் எனக்கும் என் பொண்டாட்டிக்கும் ஆளுக்கு ரெண்டாயிரம். நாலாயிரத்துல வண்டி கொஞ்சம் ஓடும். போதாதுக்குத்தான் துடுப்பு.''
"" உங்க உதவி ஒத்தாசைக்குப் புள்ளை குட்டிங்க இல்லியா ?''
"" எல்லாம் இருந்தாங்க. இப்போ இல்லே.''
மெüனமாய் அவரைப் பார்த்தேன்.
"" ரெண்டு பையன்கள், ஒரு பொண்ணு. பசங்க....கலியாணம் முடிஞ்சி ராமேஸ்வரத்துல போய் தொழில் பார்த்தானுங்க. இலங்கைக்காரன் ஒருத்தனைச் சுட்டுக் கொன்னுட்டு இன்னொருத்தனைப் போதை மருந்து கடத்தல்ன்னு கொண்டு போய் செயில்ல வைச்சிருக்கான். இலங்கை அட்டூழியத்துக்கு அளவே இல்லே. என்னதான் போராட்டம், மறியல் பண்ணினாலும் எங்க பொழப்புதான் நாறுது. வயிறு காயுது. கேட்க நாதி இல்லே. தடுக்க வழி இல்லே.'' துக்கத்தின் தாக்கம் அந்த வயதான குரலில் அழுகையும், ஆற்றாமையும் ஒருசேர வெளிப்பட்டு விழுந்தது.
~ என்ன சொல்ல....? எனக்குள் வார்த்தைகள் தடைபட்டு கொஞ்ச நேரம் மெüனமாய் இருந்து... 
"" பொண்ணு....?'' என்றேன் மெல்ல.
"" மகனுங்க இல்லேன்னாலும் அதுதான் பக்கத்து ஊர்ல இருந்து பெத்தவங்களுக்கு உதவி, ஒத்தாசை செய்து ஆறுதலாய் இருந்துச்சி. அந்த கொடுப்பினையும் கொஞ்ச காலத்துல இல்லாமப் போச்சு.''
புரியாமல் பார்த்தேன்.
""மொத பிரசவத்துல தாயும் புள்ளையுமாய்ச் செத்துப் போச்சு. புருசன் வேறொரு கலியாணம் கட்டிக்கிட்டான். நாமளும் உதவி ஒத்தாசை கேட்க முடியாமல் அந்த இடமும் அத்துப் போச்சு'' கமறினார்.
"" மனைவி மீன் விக்கப் போவாங்களா ?''
"" மாட்டாள்''
"" ஏன் வயசாயிடுச்சு. முடியலையா ?''
"" இல்லே. வாதம் அடிச்சி பத்து மாசமா படுத்த படுக்கை....''
சட்டென்று அவர் கண்கலங்கியது.
"" ரணத்தைக் கிளறி விட்டோமா ?!''
சட்டென்று எனக்குள் வருத்தம் வந்தது.
"" சுனாமி வீடு இருக்கா ?'' அவரை மாற்ற..... பேச்சை மாற்றினேன்.
"" இருந்திச்சு. இப்போ இல்லே.'' கண்களைத் துடைத்தார்.
அதிலும் அடி. துணுக்குற்று, ""எங்கே?'' கேட்டேன்.
"" அதை வித்துதான் பொண்ணுக்குக் கலியாணம்'' என்றார் பச்சையப்பன்.
எனக்குப் பாவமாக இருந்தது. 
"" இப்போ உங்க குடியிருப்பு ?'' அடுத்து கேள்வியைக் கேட்டேன்.
"" இந்த மேடுதான். பழைய இடம். குடிசை!'' அருகிலிருக்கும் கடற்கரை மேட்டைக் காட்டினார்.
சுனாமிக்கு முன் அவர்கள் வாழ்ந்த குப்பம். இப்போதும் பத்துப் பதினைந்து குடிசை வீடுகள். பழைய குப்பம் போலவே இருந்தது. சாலையோரம் அவர்கள் வழிபட்ட கோயில் சுனாமியால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே பாழடைந்து கிடந்தது. சுனாமிக்குப் பிறகு அங்கே யாருமில்லை, மக்கள் போக்குவரத்திற்காகப் புழக்கம் வைத்திருக்கிறார்கள் என்றே நினைத்திருந்தேன்.
இப்போது இவர் இருக்கிறார் என்பதில் எனக்குக் கொஞ்சமாய் அதிர்ச்சி, ஆச்சரியம்.
"" இப்போ இன்னும் அங்கே உங்க மக்கள் இருக்கிறார்களா ?'' கேட்டேன்.
""ஏழெட்டுக் குடும்பங்கள் நிரந்தரமா இருக்கு. சட்டுன்னு கடலுக்குப் போறதுக்கு இதுதானே சுலப வழி. அதனால பெரும்பாலான வீடுகளில் புழக்கம் இருக்கு. மக்கள் இங்கே பாதியும் சுனாமி வீடுகளில் பாதியுமாய் வாழ்றாங்க. அப்புறம் எங்களுக்குக் கடலைப் பத்தி பயம் கிடையாது. சோறு போடுற தெய்வம். தெய்வத்தைப் பார்த்தால் யாராவது பயப்படுவாங்களா ? கடல் தாய்க்கு என்னவோ அன்னைக்குக் கோபம். கொப்பளிச்சு கொலைக்காரியாகிட்டாள்'' } ரொம்ப எதார்த்தமாகச் சொன்னார்.
"" இப்போ உங்க மனைவி வைத்திய செலவுக்கு என்ன வழி ?'' கேட்டேன்.
"" இந்த கைப் பொழைப்புதான். வயித்துக்கு ஆகாரம் கொடுத்தாப் பத்தாதா ?'' சொல்லி பெரு மூச்சு விட்டார். 
~ இந்த மனிதரின் வாழ்க்கையில் எத்தனை அடி, இடி. வயோதிகத்தில் வறுமை எவ்வளவு கொடுமை.! 
எனக்கு நினைத்துப் பார்க்கவே தலை சுற்றியது. மீள வழி ?
"" ஐயா ! இனியும் கஷ்டம் வேணாம். அரசாங்க முதியோர் இல்லத்துல போய் சேர்ந்துக்கோங்க. நான் உதவிப் பண்றேன்'' என்றேன்.
"" வேணாம்'' மறுத்தார்.
"" ஏன்....?''
"" வறுமைக் கொடுமை. நானும் என் மனைவியுமே கொஞ்ச காலத்துக்கு முன் போய் சேர்ந்து திரும்பி வந்துட்டோம்.''
"" ஏன் திரும்பி வந்தீங்க ?''
"" திருப்தி இல்லே. நிறைய பிச்கைக்காரங்க. அப்புறம் சோறு தண்ணி எதுவும் அங்கே சரி இல்லே. அங்கே இருக்கும் ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு சோகம். ஆறாத ரணம் புரையோடிக் கிடக்கு. அங்கே இருக்கும் ஒவ்வொரு நொடியும் மனசுக்குள் ரொம்ப பாரம். இந்த கஷ்டத்துக்கும், கவலைக்கும் ஏன் மனுச சென்மமா பிறந்தோம்ன்னு ஒவ்வொருத்தரும் மனசுக்குள்ளேயே நினைச்சி நொந்து கிடக்காங்க. மனுசன் வாலிபத்திலேயே போயிடணும் ஐயா... வயோதிகம் வரக் கூடாது. அதோடு வறுமையும் சேரக் கூடாது. இதோட சேர்ந்து நாதியத்தும் போயிடக்கூடாது என்கிற எண்ணம் சோத்தைத் தின்னுட்டு சும்மா இருக்கிறதுனால சும்மா சும்மா வந்து அடிக்கடி தாக்குச்சி. எங்களால் தாக்குப் பிடிக்க முடியலை.
கிளம்பி வந்துட்டோம். வந்த கொஞ்ச நாளையில் மனைவிக்குத் திடீர்ன்னு பக்கவாதம். இவள் படுத்த படுக்கையாகிட்டாள். என் உழைப்புல அவள் உயிர் ஓடிக்கிட்டிருக்கு.'' நிறுத்தினார்.
எனக்குள் இன்னும் பாரம் ஏறியது.
"" இப்போதைக்கு என் கவலை, வேண்டுதலெல்லாம் என் பொண்டாட்டி சீக்கிரம் செத்துப் போயிடனும் என்கிறதுதான்.'' பச்சையப்பன் நிறுத்தி நிதானமாகச் சொன்னார்.
"" என்ன ஐயா சொல்றீங்க ?''
அதிர்ச்சியில் பதறினேன்.
""நிசம்ய்யா. என் பொண்டாட்டி செத்து நான் உசுராய் இருந்தால்..... ஆம்பளை எங்காவது ஒதுங்கி பொழைச்சுப்பேன். அதுவே நான் செத்து என் பொண்டாட்டி உசுராய் இருந்தால்...? இந்த நிலையில அவ எங்கே ஒதுங்குவாள், யார் பராமரிப்பா ?'' } சொல்லும்போதே சட்டென்று குரல் உடைந்து கலங்கினார்.
""நெனைச்சுப் பார்த்தாலே பயமாய் இருக்கு.'' விசும்பினார். 
""இந்தத் தொல்லையே வேணாம். அவளைக் கழுத்தை நெரிச்சு கொன்னுட்டு நானும் தற்கொலை செய்துக்கலாம் என்கிற எண்ணம் வருது.'' சொல்லி தூரத்தை வெறித்தார்.
எனக்குள் சட்டென்று நெஞ்சு துடிக்க, "" அப்படியெல்லாம் நெனைக்காதீங்க, செய்யாதீங்க தப்பு'' பதறினேன். 
""போதும்ய்யா. தள்ளாத வயசுலேயே இந்த கஷ்டம். இன்னும் தள்ளாடி நானும் எழுந்திரிக்காமப் போனா....நெனைச்சிப் பாருங்க. தலை நடுக்குது. வேணாம்ய்யா. நடமாடும் காலத்திலேயே பொசுக்குன்னு போயிடணும்!'' } கனத்த குரலில் சொல்லி அதற்கு மேல் பேச முடியாதவராய் எழுந்து துடுப்பை எடுத்துக் கொண்டு தன் குடிசையை நோக்கி நடந்தார் பச்சையப்பன்.
நான் உறைந்து போனவனாய் கொஞ்ச நேரம் இருந்து, மீண்டு.......நடந்தேன்.
பாரம்! நடையில் பழைய வேகம் இல்லை. முகத்தில் இனம் புரியாத கவலைகள். மனசுக்குள் பச்சையப்பன் அழுது கொண்டே இருந்தார். எப்போது வீடு வந்து சேர்ந்தேன். எனக்கே தெரியவில்லை. 
"" என்ன கடற்கரைக்குப் போய் வந்ததிலிருந்து ஆள் உம்முன்னு கவலையாய் இருக்கீங்க ?'' என் மனைவி குரல் காதில் விழுந்த பிறகே எனக்கு சுயநினைவு வந்தது. வீட்டிற்குள் வந்து நாற்காலியில் உட்கார்ந்திருப்பது புரிந்தது. மலங்க மலங்க விழித்தேன்.
"" என்ன நான் கேட்கிறது புரியலையா. யார் மந்திரிச்சி விட்டா ?'' அதட்டினாள்.
நான் ஒருவாறு மீண்டு.....நடந்த விசயத்தைச் சொன்னேன். அவளுக்கும் முகம் தொங்கிப் போனது. சிறிது நேரம் உம்மென்றிருந்துவிட்டு....
"" கஷ்டமாத்தான் இருக்கு. இதெல்லாம் விதின்னு அவரும் நாமும் ஒதுக்கிவிட்டுட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்'' பெரு மூச்சொன்றை உதிர்த்துவிட்டு அகன்றாள். 
இரண்டு நாட்கள் நான் அவசர வேலையாக வெளியூர் சென்றதால் நடைப் பழக்கம் இல்லை. பச்சையப்பன் கனமும் அதிகம் இல்லை. மூன்றாம் நாள் சென்றேன். பத்துப் பதினைந்து குப்பத்து ஆண்கள் கூட்டமாக அந்த மதகடியில் நின்றும் அமர்ந்தும் இருந்தார்கள்.
அவர்கள் தொழிலுக்குப் போகவில்லை. புரிந்தது. ஊர் கூட்டமா, மறியலா.....என்ன? அருகில் சென்றேன்.
"" தம்பி... என்ன விசயம் கூட்டம் ?'' எதிரில் நின்ற நாற்பது வயது ஆளைக் கேட்டேன்.
"" பச்சையப்பன் செத்துட்டாரய்யா....!'' சொன்னான்.
எனக்குள் சின்னதாய் இடி இறங்கிய அதிர்ச்சி ! 
"" எ...எப்படி ?'' மென்று விழுங்கினேன்.
"" நேத்து வழக்கமா தொழிலுக்குப் போன மனுசன். பசி மயக்கமோ, மாரடைப்போ தெரியலை. ஆள் கட்டு மரத்துலேயே செத்து கடல்ல மிதந்தார். மீன் பிடிச்சி திரும்பி வந்த நம்ம ஆளுங்க கண்ணில் பட்டு கொண்டு வந்தாங்க. இன்னைக்கு அடக்கம்.'' மெல்ல சொன்னான்.
எனக்குள் இதயம் வேகமாக துடித்து வலித்தது.
""அ...அவர் மனைவி...?'' எச்சில் கூட்டி விழுங்கி பரிதாபமாகப் பார்த்தேன்.
"" கவலைப்படாதீங்கைய்யா. ஒரு நாளைக்கு ஒரு வீடுன்னு ஊர் பார்த்துக்க ஏற்பாடு. நாங்க பேசி முடிச்சிட்டோம். அதான் வழி !'' என்று சொல்லி நகர்ந்தான்.
அட... என்ன ஒரு மனித நேயம்! முடிவு ! எனக்குள் பளீர் வெளிச்சம். அதில் அந்த குப்பத்து மனிதர்கள் சட்டென்று கோபுரமாகத் தெரிந்தார்கள். நிம்மதி மூச்சு விட்டு கடைசியாய் பச்சையப்பன் முகத்தைப் பார்க்க அவர் வீடு நோக்கி நகர்ந்தேன்.

http://www.dinamani.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.