Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் - தமிழ் உறவின் எதிர்காலம்

Featured Replies

முஸ்லிம் - தமிழ் உறவின் எதிர்காலம்
 
 

நகமும் சதையும் போன்ற தொடர்பைக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான உறவு, இப்போது பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.   

அபாயா விவகாரம் உள்ளடங்கலாக, இரண்டு இனங்களுடனும் தொடர்புபட்ட பல விடயங்களை, வெளிப்புறச் சக்திகள் தங்களுடைய நலனுக்காக அரசியலாக்கி, பூதாகரமாக்கி விடுகின்றமையாலும், தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளாலும் இந்த உறவில், கீறல் விழத் தொடங்கியுள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.   

 இன நல்லிணக்கம் பற்றிப் பேசிப்பேசியே உள்ளுக்குள் பகைமைத் தீயை வளர்த்துக் கொண்டிருக்கும் சமூகங்களாக, சிறுபான்மையினர் மாறியிருக்கின்றனர்.   

தமிழ் - முஸ்லிம் உறவின் ஆரம்பம் எதுவெனச் சரியாகச் சொல்ல முடியாதபடி, அவ்வுறவு தொன்மையானது. இன்றும்கூட, முஸ்லிம்களின் பல நடைமுறைகளில், தமிழ்க் கலாசாரத்தின் தாக்கம் இருப்பதைக் காணமுடியும்.   

அதேபோன்று, தமிழர் வாழ்விலும் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்களின் தாக்கம் இருக்கின்றது. எனவே, வடக்கு,  கிழக்கு போன்ற மாகாணங்களில் இரண்டறக் கலந்தும், ஏனைய பகுதிகளில் அயலவர்களாகவும் வாழ்ந்து வருகின்ற இவ்விரண்டு இனங்களுக்கும் இடையில், பரஸ்பர கலாசார ஒற்றுமைகள் சிலவும், பிரத்தியேக வேறுபாடுகள் பலவும் காணப்படுகின்றன.  

முஸ்லிம்களும் தமிழர்களும் சமூக ரீதியாகவும் வாழ்வியல் ரீதியாகவும் பல ஒற்றுமைகளைக் கொண்டிருந்ததற்குச் சமாந்திரமாக, இவ்விரண்டு இனங்களும் ஒருமித்தே, அரசியலில் பயணித்ததை மறந்துவிட முடியாது.   

காலங்காலமாக, ஐக்கிய தேசியக் கட்சியிலும் சுதந்திரக் கட்சியிலும் இணைந்து பணியாற்றியதன் மூலம், பொது அரசியலைக் கற்றுக் கொண்ட முஸ்லிம்கள், தங்களைத் தனித்துவ அடையாள அரசியலில் புடம்போட்டுக் கொள்வதற்கு, தமிழரசுக் கட்சி, ஒரு பாசறையாக அமைந்திருந்தது.  

மர்ஹூம்களான மசூர் மௌலானா, எம்.எச்.எம். அஷ்ரப் என, எத்தனையோ பேர், தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பணியாற்றினர். அதேநேரத்தில், தமிழர்கள் ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட வேளையிலும், முஸ்லிம்கள் தம்மாலான பங்களிப்புகளைச் செய்திருக்கின்றார்கள் என்பதை, யாராலும் மறுக்கவியலாது.   

எத்தனையோ முஸ்லிம் இளைஞர்கள், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கணிசமான பணஉதவிகளையும் முஸ்லிம்கள் செலுத்தியிருந்தனர். அதற்காக, நாட்டுக்கு விசுவாசமற்றவர்களாக இருக்கவில்லை; அரசாங்கத்துக்கும், நாட்டுக்கும் விசுவாசமாக இருந்து கொண்டு, தமிழர்களின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவளித்துக் கொண்டும் இருந்த ஒரேயோர் இனம், முஸ்லிம்கள் மட்டுமே என்றால் மிகையாகாது.   

ஆனால், வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, கிழக்கில் பள்ளிவாசல்களில் நடந்த படுகொலைகள், கல்முனையில் நடைபெற்ற வன்முறைகள் போன்ற இன்னோரன்ன காரணங்களால், முஸ்லிம் சமூகம் சார்ந்த அரசியல் என்பது, தனிவழியில் பயணிக்க வேண்டிய நிலை, ஏற்பட்டது என்பதே உண்மையாகும்.   

ஏதோ ஒரு காரணத்துக்காக ஆயுதம் தரித்தவர்கள், முஸ்லிம்களை மாற்றாந்தாய் மனப்பாங்குடன் பார்த்த அதேவேளையில், தனியாகத் தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ்க் கட்சிகளும், தனியாக முஸ்லிம்களுக்காக உருவான முஸ்லிம் கட்சிகளும், இந்த விரிசலை மேலும் பெரிதாக்கி, அதில் அரசியல் இலாபம் உழைத்துக் கொண்டு வருகின்றன.   

எவ்வாறிருப்பினும், அவசரத்துக்கு உதவும் அயலவன் போல, பேரினவாதத்துக்கு எதிராகக் குரல்கொடுக்கும் கூட்டாளிகள் போல, ஒரே மொழியைப் பெரும்பாலும் பேசுகின்ற சமூகங்கள் போல, பல அடிப்படைகளில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணைந்து வாழ்கின்றனர்.   

ஆனால், இதற்குள் ஒரு தரப்பினர் பிரிவினையைத் தோற்றுவித்து இனவாத, மதவாதக் கருத்துகளை எரியவிட்டு, அதில் குளிர்காய நினைக்கின்றார்கள் என்பதையே, திருகோணமலையில் தொடங்கிய அபாயா எதிர்ப்பு நடவடிக்கைகளும் அதன் எதிர்விளைவுகளும் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன.   

திருகோணமலையில் உள்ள இந்துப் பாடசாலையொன்றில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள், தங்களது கலாசார ஆடையான அபாயாவை அணிந்து பாடசாலைக்கு வரக்கூடாது என்றும் சேலையை அணிந்தே வர வேண்டும் என்றும் பாடசாலை நிர்வாகம் சொல்லியுள்ளது.   

இதையும் மீறி, அபாயாவை அணிந்து வர முற்பட்ட போது, பாடசாலைக்கு முன்பாக, முஸ்லிம்களுக்கு எதிராக ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட விவகாரம், பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது.   

ஆசிரியைகள் இன, மத பேதங்களுக்கு அப்பால், பொதுவானதோர் ஆடையைப் பின்பற்றுவது நல்லது என்ற அபிப்பிராயம் இருந்தாலும், ஆசிரியைகள் சேலை அணிந்துதான் வரவேண்டும் என்றோ அல்லது அவர்களுக்கான சீருடை என்ன என்பது குறித்தோ, எவ்வித விதிமுறைகளும் கிடையாது.   

மாறாக, ஒழுக்கத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் விதமான ஆடை என்றே, கூறப்படுவதாக விடயமறிந்தோர் கூறுகின்றனர். அத்துடன், முஸ்லிம் மாணவிகள், தங்கள் கலாசார ஆடையை அணிவதற்கு இடமளிக்கும் சுற்றுநிருபமும் இருக்கின்றது.   

அதுமாத்திரமன்றி, இலங்கையில் சேவை புரியும் ஆசிரியர்களோ அல்லது வேறு அரச உத்தியோகத்தர்களோ பெரும்பாலான நிறுவனங்களில், ஒரே மாதிரியான சீருடைபோன்ற ஆடைகளை அணிவதில்லை. 

முஸ்லிம் பாடசாலையில் கற்பிக்கும் இந்து ஆசிரியை, சேலையுடனேயே கடமைக்கு வருகின்றார். சிங்களப் பாடசாலைகளில் உள்ள முஸ்லிம், தமிழ் ஆசிரியைகள், தமது கலாசார உடையை உடுத்தியே செல்கின்றனர். 

பௌத்த துறவியோ, கத்தோலிக்க மதகுருவோ, அருட் சகோதரியோ  அரச பாடாலையில் கற்பிப்பதற்குப் போனால், அவர்களை அந்தந்தப் பாடசாலையின் இன, மதம் சார்ந்த, கலாசார உடையுடன் வருமாறு யாரும் சொல்ல முடியாது.   

சட்டத்தால் வரையறை செய்யப்படாத விடத்து, தாம் விரும்பிய ஆடையை அணிந்து செல்ல, இந்து ஆசிரியைக்கு இருக்கின்ற அதே உரிமை, முஸ்லிம் ஆசிரியைகளுக்கு இல்லாது போய்விட முடியாது. இந்து ஆசிரியைகளை, பர்தா அல்லது அபாயா அணிந்து கொண்டு வாருங்கள் என்று, யாராலும் சொல்ல முடியாது. இது முஸ்லிம் ஆசிரியைகளின் விடயத்திலும் பொருந்தும்.   

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சபையில் உரையாற்றியது போல, இந்த நாட்டில் கவர்ச்சியான ஆடை உடுத்த அனுமதி இருக்குமாயின், உடம்பை மறைக்கும் ஆடையை உடுத்த, ஏன் அனுமதி மறுக்கப்படுகின்றது என்ற கேள்வி எழுகின்றது. 

எந்தவொரு முஸ்லிம் ஆசிரியையும் அபாயாவை அணிந்து கொண்டு வந்து, ஏதாவது பிழையான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் இல்லை என்பதுடன், அவர்கள் அந்த ஆடை ஊடாக, இஸ்லாத்தைப் போதிக்க முற்படவும் இல்லை. இவ்வாறிருக்கையில், ஏன் இந்த விடயத்தைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.   

இந்துக்களின் கலாசாரமும் பண்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், இந்துப் பாடசாலைகளின் பாரம்பரிய விழுமியங்களுக்கும் முஸ்லிம்கள் மதிப்பளிக்க வேண்டும் என்பதில் மறுபேச்சில்லை. 

ஆனால் சுதந்திரமான, ஜனநாயக நாடொன்றில், ஓர் ஆசிரியை, தனக்கு விரும்பிய ஆடையை அணிந்து, உடலை மூடி வருவதை, எந்த வகையிலும் கலாசாரப் பாதிப்பாக வரையறை செய்ய முடியாது. ஆனால், திருகோணமலையில் அது நடந்திருக்கின்றது.   

உண்மையில், சரி பிழைகளுக்கு அப்பால், திருகோணமலையில் பாடசாலைக்குள் தீர்க்கப்பட வேண்டிய விடயம், இன்று பொது அரங்குக்குக் கொண்டு வரப்பட்டுள்ளமையும், இன்று வெவ்வேறு சக்திகள், அதைப் பூதாகரமாக்கி இருக்கின்றமையுமே பெரும் சிக்கல்களுக்கு வித்திட்டுள்ளன.   

முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை பற்றிய மாற்று நிலைப்பாடுகள் இருந்தால், அது உள்ளேயே தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பாடசாலை நிர்வாகத்துக்குத் தெரிந்தோ தெரியாமலோ, இவ்விவகாரம் இன்று வேறு குழுக்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது. அது இன்று, ஒரு தேசிய விவகாரமாக ஆக்கப்பட்டிருக்கின்றது.   

பாடசாலையில் நடந்த உள்ளகக் கலந்துரையாடல்கள், இரகசியமான முறையில் கசியவிடப்பட்டு, சில செயற்பாட்டுக் குழுக்களால் பெரிதுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகவும் அறிய முடிகின்றது.   

இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து வந்த, அறிக்கைகளைப் பார்க்கின்ற போது, தென்னாசியப் பிராந்தியத்தில் மையங்கொண்டுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட இனவாத, மதவாத அமைப்புகள், எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை அனுமானிக்க முடிகின்றது.   

அந்த அமைப்புகளோடு, தொடர்பில் இருப்பதாகச் சொல்லும் பொது பல சேனாவும், இதைக் கையிலெடுத்து, முஸ்லிம்களுக்கு எதிரான இன்னுமோர் ஆயுதமாக, இதைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதைக் காணலாம்.  
உண்மையில், குறித்த பாடசாலைச் சமூகம் எதை எதிர்பார்த்ததோ, அதுவன்றி வேண்டத்தகாத பல நிகழ்வுகள், அவரவர்கள் கட்டுப்பாட்டை மீறி, இடம்பெற்றுக் கொண்டிருப்பதை,  உன்னிப்பாக நோக்குவோரால் உணர்ந்து கொள்ளலாம்.   

ஒரு சிறிய விடயத்தைப் பெரிதுபடுத்தியது, குறிப்பிட்ட சில தமிழர்களின் தவறு என்றால், அதைக் கையாண்ட விடயத்தில், முஸ்லிம்களின் பக்கமும் தவறு இடம்பெற்றுள்ளதைச் சொல்லாமல் விட முடியாது.   

அதாவது, குறிப்பிட்ட பாடசாலை நிர்வாகத்துக்கும் முஸ்லிம் ஆசிரியைகளுக்கும் இடையிலான சம்பாசணையில் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் நுழைந்து, முஸ்லிம் ஆசிரியைகளின் கணவன்மார் கடுந்தொனியில் பேசியிருப்பார்கள் என்றால் அது தவறாகும்.   

அவ்வாறே, அபாயாவுக்காகக் குரல் கொடுப்பதும் அதற்காகப் போராடுவதும் முஸ்லிம்களின் உரிமையாகும். 

அதற்காகத் தமிழர் ஆடையான சேலையை விமர்சிக்க முடியாது. அந்த வகையில், அபாயாவைச் சரி காணும் முயற்சியில், முஸ்லிம் சமூகவலைத்தளப் பாவனையாளர்கள் சிலர், தமிழர்களின் பாரம்பரிய ஆடையை மட்டுமன்றி, முஸ்லிம் பெண்களாலும் இன்றுவரை அணியப்படுகின்ற சேலை பற்றிய, மோசமான விமர்சனங்களை முன்வைத்தமை பெருந் தவறாகும். 

இவ்வாறு விமர்சிக்கக் கூடாது என்று, முஸ்லிம் முற்போக்குச் சிந்தனையாளர்கள் பகிரங்கமாகக் கூறி வருகின்றமை கவனிப்புக்குரியது.   

இவ்வாறு முஸ்லிம்களின் ஆடைக்கும், தமிழர்களின் கலாசார ஆடைக்கும் இடையிலான பட்டிமன்றம் போய்க் கொண்டிருப்பதால், ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இன நல்லிணக்கத்துக்கு எதிரான சூழல், முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் மனநிலையில் பாதிப்பை ஏற்பட்டிருக்கின்றது. 

இது, எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகும் விளைவுகள் ஒருபுறமிருக்க, முஸ்லிம் அரசியல்வாதிகளின் மெத்தனமும், தமிழ் அரசியல் தலைவர்கள் தெரிவிக்கின்ற கருத்துகளும், குறிப்பிடத்தக்க எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் வல்லமையைக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.   

முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் இவ்விடயத்தில் ‘சுரணைகெட்ட’ தனமாக நடந்து கொண்டுள்ளமை, முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியில், கடுமையான ஆத்திரத்தை உண்டுபண்ணியிருக்கின்றது.   

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்துகள், முஸ்லிம்களின் மனதைக் காயப்படுத்தியுள்ளன என்பதை வெளிப்படையாகவே காண முடிகின்றது.   

ஒரு காலத்தில், ஒருமித்துப் பயணித்த முஸ்லிம் அரசியலும் தமிழர் அரசியலும், வெவ்வேறு பாதைகளில் பயணித்துக் கொண்டிருந்தாலும், தமிழ், முஸ்லிம் உறவில் சிறியதோர் இடைவெளி ஏற்பட்டிருந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து, இரு இனங்களுக்கும் இடையிலான ஒரு பரஸ்பர புரிந்துணர்வு, இருந்தே வருகின்றது.  

அபிலாஷைகளும் இனப்பிரச்சினைத் தீர்வில் மாறுபட்ட எதிர்பார்ப்புகளும் கொண்ட சமூகங்கள் என்றாலும், இணக்கப்படானதொரு சூழல் காணப்பட்டதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவற்றெயெல்லாம் அபாயா விவகாரமும் சம்பந்தனின் அறிக்கையும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்று, அச்சப்படவேண்டியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.   

சம்பந்தப்பட்ட பாடசாலையின் மரபுரிமை பற்றி, ஏற்றுக் கொள்ளத்தக்க பல விடயங்களைக் குறிப்பிட்ட சம்பந்தன், சேலை அணிந்து வருவதே பொருத்தமானது எனவும், அபாயாவுக்கு பச்சைக் கொடி காட்டாத வண்ணமும், கருத்துத் தெரிவித்திருப்பதே இதற்குக் காரணம் எனலாம்.   

அபாயாவுக்காகச் சேலை மீது வசைபாடுவது தவறு; அது எவ்வாறு தமிழர்களின் மனதைப் புண்படுத்தி இருக்கின்றதோ அதுபோலவே, அபாயா விவகாரமும் எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தும் ஒன்றிரண்டு ஊடகங்கள், இதைக் கையாண்ட விதமும் முஸ்லிம்களின் உள்ளத்தைக் காயப்படுத்தி இருக்கின்றன.   

எனவே, அபாயா விவகாரத்தைப் பெரிதாக்கி, யாரோ சில சக்திகள், அதில் இலாபம் உழைக்க முனைவது தெரிகின்றது. 

இது, தமிழ் - முஸ்லிம் உறவின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றும். எனவே, இந்தச் சதிவலைக்குள், முஸ்லிம்களும் தமிழர்களும் மாட்டிக் கொள்ளாது, ஒவ்வோர் இனத்தின், மதத்தின் கலாசார உரிமையை உறுதிப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.     

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முஸ்லிம்-தமிழ்-உறவின்-எதிர்காலம்/91-215467

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.