Jump to content

உன்னை அறிவேன்  


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

உன்னை அறிவேன்  

 


 மாதத்தின் முதல் வாரம் என்பதால், அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. வித்யா டிராலியை தள்ளியபடி வர, அவள் மாமியார் சாரதா, பருப்பு பாக்கெட்டுகளை எடுத்து டிராலியில் போட்டாள். 
''வித்யா... நீ போய் சோப்பு, பவுடர் எல்லாம் எடுத்து வை; நான், பூண்டு நல்லதா பார்த்து எடுத்துட்டு வரேன்,'' என்றதும், டிராலியை தள்ளிக் கொண்டு போனாள், வித்யா. 
வித்யாவுக்கு திருமணமாகி, மூன்று மாதம் தான் ஆகிறது. படித்து முடித்தவுடன் திருமணம் என்பதால், இன்னும் அவளுக்கு எதுவும் பிடிபடவில்லை.
அமைதியாக இருப்பாள், சாரதா. வேலைக்காரியிடம் அன்பாக நடந்து கொள்வாள். மனதுக்கு தப்பு என்று தெரிந்தால், 'படபட'வென்று பேசி, கோபப்படுவாள். இதுவரை அவளிடம் அப்படி நடந்து கொள்ளவில்லை என்றாலும், உள்ளுக்குள் மாமியாரை நினைத்து, கொஞ்சம் பயம் இருக்கவே செய்தது. வீட்டு நிர்வாகம் எல்லாம் மாமியார் தான். 
'கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்; உன் மாமியார் நல்லவங்களா தான் தெரியறாங்க. அவங்க மனசு கோணாம நடந்துக்க வித்யா...' என்று அறிவுரை கூறியிருந்தாள், அம்மா.
தேவையான குளியல் சோப்புகளை எடுத்து டிராலியில் போட்டாள்.
''ஹேய் வித்யா... எப்படி இருக்கே... உன் கல்யாணத்துக்கு என்னை, 'இன்வைட்' பண்ணலயே...'' என்ற குரல் கேட்டு திரும்பியவள், அதிர்ச்சியின் உச்சத்துக்கு போனாள்.
'பிரபு... இவன் எங்கே, இங்கே...' மனம் படபடக்க, அவனையே பார்த்தாள்.
''என்ன வித்யா... காதலிக்கிறது ஒருத்தனை... கல்யாணம் பண்ணிக்கிறது இன்னொருத்தனையா... பணக்கார இடம் கிடைச்சதும், என்னை கழட்டி விட்டுட்டே அப்படித்தானே...'' என்றான், ஏளனமாக!
''இல்ல பிரபு... காதல் எல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வராதுன்னு எங்கம்மாப்பா மறுத்துட்டாங்க... அவங்களுக்கு நான் ஒரே பெண்; எதிர்த்து எதுவும் செய்ய முடியல. தயவுசெய்து, என்னை மறந்துடுன்னு சொன்னேனே... நீ இன்னுமா பழைய விஷயங்கள ஞாபகம் வச்சுருக்கே...'' என்றாள், சங்கடத்துடன்!
''எப்படி வித்யா மறக்க முடியும்... காலேஜில் படிக்கும்போது, சிரிச்சு பேச வேண்டியது... படிப்பு முடிஞ்சதும், பெத்தவங்க பாத்த பையன கல்யாணம் பண்ணிகிட்டு, 'செட்டில்' ஆக வேண்டியது... நடந்தது எதையும் நான், மறக்கல; உனக்கு பாடம் புகட்டணும்ன்னு தான் அமைதியாக இருந்தேன். நீ எப்படி சந்தோஷமா வாழ்ந்திடறேன்னு பாக்கிறேன்,'' என்றான், குரூரமாக!
''அய்யோ... அப்படியெல்லாம் எதுவும் செய்திடாதே... உன்னை கெஞ்சிக் கேட்டுக்கறேன்,'' என்று அவள் கெஞ்ச, அதற்குள் அங்கு வந்த சாரதா, யாரோ ஒரு இளைஞன், வித்யாவிடம் பேசுவதைப் பார்த்து,''யாருப்பா நீ?'' என்று கேட்டாள்.
''வணக்கம் ஆன்ட்டி... நான் வித்யாவோட காலேஜில் ஒன்னா படிச்சவன். வித்யா, என்னை, கல்யாணத்துக்கு, 'இன்வைட்' பண்ணல... அதான் விசாரிச்சுட்டு இருந்தேன்,'' ஓரக்கண்ணால் வித்யாவை பார்த்தபடி சொன்னான்.
''அதனாலென்னப்பா... கல்யாணத்துக்கு வரலைன்னா என்ன... நாளைக்கு வீட்டுக்கு வாயேன்... என் மகனும் வீட்டில் தான் இருப்பான்; 'லஞ்ச்' சாப்பிட்டு போகலாம்.''
''கட்டாயம் வரேன் ஆன்ட்டி; வித்யா கூப்பிடாட்டியும் நீங்க அன்பாக கூப்பிடறீங்களே...'' என்றான்.
அவனிடம் அட்ரஸ் கொடுத்த சாரதா.
''போகலாம் வித்யா,'' என்றாள்.
'கடவுளே... என்ன நடக்கப் போகிறதோ தெரியலயே...' என்று அவள் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்க, அவனுக்காக, வடை, பாயசத்துடன் சாப்பாடு தயார் செய்து கொண்டிருந்தாள், சாரதா.
அவள் கணவன், 'உனக்கு ரொம்ப, க்ளோஸ் பிரெண்டா... கல்யாணத்துக்கு கூப்பிடலன்னு சண்டைக்கு வந்தானா'ன்னு கேட்கறார்.
மனசு, 'படபட'வென்று அடித்தது.
என் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போடப் போகிறான்.
எதுவுமே செய்யத் தோன்றாமல், முகம் வெளிறி உட்கார்ந்திருந்தாள், வித்யா.
''வித்யா... நீ இன்னும் குளிக்கலயா... போய் குளிச்சுட்டு, நீட்டா டிரஸ் பண்ணிட்டு வா... உன் பிரெண்டு விருந்துக்கு வரப் போறான் இல்லயா... நல்லவிதமா கவனிச்சு அனுப்புவோம்,'' சாரதா சொல்ல, மவுனமாக எழுந்து போனாள்.
பெரிய பார்சலுடன் வந்தவன், அதை வித்யாவின் கணவனிடம் கொடுத்து, நீண்ட நாள் பழகியவன் போல் சிரித்து சிரித்து பேசினான்.
விருந்து உபசரிப்பு முடிந்து, ஹாலில் வந்து உட்கார்ந்தான், பிரபு.
நிலை கொள்ளாமல் தவித்தாள், வித்யா.
வித்யாவை பார்த்து சிரித்தவன், ''மாதவன்... உங்ககிட்ட முக்கியமான விஷயம் சொல்லப் போறேன். அதை, நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல... இருந்தாலும், அதை மறைப்பது தப்புன்னு என் மனசுக்கு படுது,'' என்றான் பிரபு.
தலையில் இடி விழப் போகிறது என்பது புரிய, வரும் கண்ணீரை அடக்கினாள், வித்யா.
''தம்பி... நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு தெரியல... அதுக்கு முன், நாங்க சொல்ல வந்ததை கேளுங்க...'' என்ற சாரதா, மகனை பார்த்து, ''நீ சொல்றியா இல்ல நான் சொல்லட்டுமா?'' என்று கேட்டாள்.
''நீங்களே சொல்லுங்கம்மா...''
''பிரபு... உங்கள பத்தி, வித்யா எங்ககிட்ட சொல்லியிருக்கா... காலேஜில் படிக்கும்போது, நீங்க இரண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் விரும்புனீங்களாம்... ஆனா, அதுக்கு வித்யாவின் அப்பா உடன்படலயாம்...
''யோசிச்சு பாத்தபோது, பெத்தவங்க சொல்றபடி நடப்பதுதான் நல்லதுன்னு அவளுக்கு தோணுச்சாம்... உங்கள நேரில் பாத்து மறந்துட சொல்லி, மன்னிப்பு கேட்டாளாம்... நீங்களும் மறப்பதாக சொன்னீங்களாம்... இது, ஏதோ இமாலய தப்பு போல கல்யாணம் ஆனதும் எங்ககிட்ட சொன்னா...
''இதெல்லாம் சகஜம் வித்யா... பருவ வயதில், ஈர்ப்பு ஏற்படுவது இயற்கை. எல்லா காதலும் கல்யாணத்தில் முடியிறதில்ல. கல்யாணத்துக்கு முன் நடந்தத, கனவா மறந்துட்டு, இனி, உன் கணவனுக்கு மட்டும் மனசில் இடம் கொடுத்து, வாழ்ந்தால் போதும்ன்னு சொன்னேன்.
''என்னப்பா நான் சொல்றது சரிதானே... நீயும் ஒரு நல்ல பெண்ணாக பாத்து கல்யாணம் பண்ணிகிட்டு வாழ்க்கையில் செட்டில் ஆகப்பாரு. நீ என்னமோ சொல்லணும்ன்னு சொன்னியே... இந்த விஷயமா... இல்ல வேறு ஏதாவதா?''
சாரதா, அவனை தீர்க்கமாக பார்க்க, அவனோ, உட்காரவே சங்கடப்பட்டவனாக, ''இல்ல ஆன்ட்டி... இந்த விஷயம் உங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சு, மன்னிப்பு கேட்கலாம்ன்னு...'' அவன் குரல் உள்ளே போனது.
''பரவாயில்லப்பா... நீ கிளம்பு... நீ வந்ததுல ரொம்ப சந்தோஷம்.''
அவன் வெளியேற, கண்ணீரை அடக்க முடியாதவளாய், சாரதாவை கட்டிக் கொண்டு அழுதாள், வித்யா.
''இங்கே பாரு... எதுக்கு இந்த அழுகை... நீ எந்த தப்பும் செய்யல. அவன்கிட்ட சொன்னதை தான் உனக்கும் சொல்றேன். கல்யாணத்துக்கு முன் நடந்தத மறந்துட்டு, இனி, உன் கணவனுக்கு மட்டும் மனசில் இடம் கொடுத்து, வாழ்ந்தால் போதும்; புரியுதா...'' என்றவள், ''கடைசியா அவன் உன்கிட்டே பேசினத கேட்டேன்... அவன் மனநிலை புரிந்துதான் வரச்சொன்னேன்...
''சரி சரி... போய் முகத்தை அலம்பிட்டு, மாதவனுடன் எங்காவது வெளியே போயிட்டு வா... நான் கொஞ்சம், 'ரெஸ்ட்' எடுக்கறேன்... ஆனா, ஐந்து மணிக்கு வந்துடணும் சரியா... உன் கையாலதான் நான் காபி குடிக்கணும். புரியுதா...''
அத்தையின் குரலில் கண்டிப்பை தாண்டி தெரியும் அன்பு புரிய, அவளை பார்த்து, மனம் நிறைய சிரித்தாள், வித்யா.

 நன்றி தினமலர் .. பரிமளா ராஜேந்திரன் 
 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.