Jump to content

நிரஞ்சனி


Recommended Posts

பதியப்பட்டது

நிரஞ்சனி

 

 
kadhir7

நிரஞ்சன், நிரஞ்சனி. நல்ல பெயர் பொருத்தம் என்றுதான் வீட்டில் அனைவரும் சொன்னார்கள். ஆனால் வாழ்க்கை அப்படி ஒன்றும் பொருத்தமாக போய்விடவில்லை என்றே நிரஞ்சன் எண்ணினான். திருமணமாகி இன்றோடு சரியாக இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. சம்பிரதாயமாக திருமணநாளைக் கொண்டாடிவிட்டு தான் பணியாற்றிய படத்தின் இசை வெளியீட்டிற்கு கிளம்பினான். 
அவன் காரில் ஏறப்போகும் போது, நிரஞ்சனி வாசலிலேயே நின்றுக் கொண்டிருப்பதைக் கவனித்தவன், 
""என்ன?'' என்றான். 
"" வரும் போது ஏதாவது வாங்கிட்டு வா...'' நிரஞ்சனி சொன்னாள். 
""ஏதாவதுனா...?''
""ஒண்ணுமில்ல'' என்றவாறே உள்ளே ஓடிவிட்டாள். சிறிது நேரம் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன், காரை கிளப்பினான். நிரஞ்சனியைப் புரிந்து கொள்ள முடியாது. இப்படித்தான் சிறு பிள்ளை போல் திடீரென்று ஏதாவது சொல்ல வருவாள், ஆனால் முழுதாகச் சொல்ல மாட்டாள். அவளைப் பற்றி நினைக்க நினைக்க அவனுக்கு குழப்பமாக இருந்தது. எதை நினைத்து நிரஞ்சனியைத் திருமணம் செய்துகொண்டோம்? இப்போது எதை நினைத்து அவளைத் தவிர்க்கிறோம்? ஒருவேளை அவளை வெறுக்கிறோமோ? அதனால்தான் அவளை விட்டு அதிகம் விலகி இருக்க முயற்சிக்கிறோமோ? காரை விட அவனது நினைவுகள் வேகமாக ஓடின. 

நிரஞ்சன் சினிமாவில் ஒரு பெரிய திரைக்கதையாசிரியன். எழுதிய படங்கள் நிறைய புகழையும் தேவையான பணத்தையும் ஈட்டித் தந்தன. வருடத்திற்கு மூன்று படங்கள், நிறைய பயணம் என்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. கல்லூரி தொடங்கி சினிமா வரை அவன் உடன் பழகிய சிலர் அவனைக் காதலிப்பதாகச் சொன்ன போது தனக்கு லட்சியம் இருப்பதாக சொல்லி
விட்டு சிறு புன்னகை மூலம் அவர்களைக் கடந்து சென்றவன், தான் எழுதிய முதல் படம் வெளியானதும் அம்மா பார்த்து வைத்த நிரஞ்சனியை மறுவார்த்தை பேசாமல் திருமணம் செய்து கொண்டான். அம்மாவிற்கு தன் மகனை நினைத்துப் பெருமிதமாக இருந்தது. ஆனால் இவன் அம்மா சொன்னதற்காக மட்டும் அவளை திருமணம் செய்துகொள்ளவில்லை. அவனுக்கு உண்மையில் நிரஞ்சனியைப் பிடித்திருந்தது. அவள் நன்றாகப் படித்திருந்தாள். திருச்சியில் திருவானைக்கோவிலில் வைத்து முதன்முதலில் அவளைச் சந்தித்தான். 
""என்ன படிச்சிருக்கீங்க?'' 
""படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லையே!''
இப்படி ஏதோ வேலைக்கான நேர்முகத்தேர்வில் கேள்வி கேட்பது போல் அவள் வரிசையாக கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனபோது அவளை நிறையப் பிடித்தது. அப்போது அவள் சென்னையில் ஓர் ஐ.டி நிறுவனத்தில் வேலையில் இருந்தாள். 
""ஜாப் ரொம்ப ஸ்ட்ரெஸா இருக்குடா..'' நிச்சயத்திற்கு பின் அவள் சொன்னாள். 
""பேப்பர் போட்டுரு... கல்யாணத்துக்கு அப்பறம் வேற ஜாப் தேடிக்கலாம்...'' நிரஞ்சன் அறிவுரை சொன்னான். ஆனால் திருமணத்திற்கு பின் நிரஞ்சன் அவள் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று சொன்னபோது அவர்களுக்குள் பிரச்னை வந்தது. சில நாட்கள் மாறிமாறி சண்டைபோட்டுக் கொண்டாலும் இறுதியாக அவளே விட்டுக் கொடுத்தாள்.
தொடர்ந்து வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற தன் ஆசை நிறைவேறாமல் போனாலும் அவள் நிரஞ்சன் மீதோ குடும்பத்தின் மீதோ எந்த கோபத்தையும் வெளிப்படுத்தவில்லை. யாரும் அவள் மேல் எந்த குறையையும் சொல்லிவிட முடியாது என்ற வகையில் குடும்பத்தை நன்றாகக் கவனித்துக் கொண்டாள். ஆனால் அவளிடம் இருந்த பழைய உத்வேகம் குறைந்துவிட்டதாக நிரஞ்சன் கருதினான். அதற்கு தான்தான் காரணம் என்ற குற்றவுணர்ச்சி அவனிடம் எழாமல் இல்லை. அதே சமயம் நிரஞ்சனி தன்னை போல் ஓர் இன்டலெக்சுவல் இல்லை, அதனால் தான் அவள் மீது தனக்கு அதிக ஈடுபாடு வருவதில்லை என்று தனக்குதானே சொல்லிக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வான். இதனாலேயே அவர்கள் தேவையில்லாமல் பேசிக் கொள்ள
மாட்டார்கள். நிரஞ்சனி ஏதாவது டிவி நிகழ்ச்சியில் மூழ்கிவிடுவாள். நிரஞ்சன் சினிமா, பயணம் என்று தன்னை எப்போதும் பிசியாக வைத்துக் கொண்டான்.

கார் வடபழனியில் ஒரு ஸ்டுடியோவில் நின்றது. இசை வெளியீட்டு விழா சிம்பிளாக நடந்தது. வந்தவர்கள் எல்லாம் படத்தின் இயக்குநர் தீபாவையும் நிரஞ்சனையும் பாராட்டினார்கள். தீபாவிற்கு வயது ஐம்பதை தொட்டிருந்தது. சினிமாவை வெறும் கலையாக மட்டுமே நேசித்த தீபா, தனக்கு பிடித்த கதையை மட்டுமே தேர்வு செய்து இயக்கி வந்தார். அதனால் கடந்த இருபத்தைந்து வருடத்தில் ஐந்து படங்கள் மட்டுமே இயக்கி இருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு நிரஞ்சனோடு அவர் பணியாற்றிய படம் பெரிதும் பேசப்பட, இந்த படத்திற்கும் நிரஞ்சனையே திரைக்கதை எழுத சொன்னார். ஓர் எழுத்தாளனுக்கும் அவர் மனைவிக்கும் இடையே நடக்கும் பிரச்சனையே கதைக்கரு என்று தீபா சொல்லிய ஒரு மாதத்தில் நிரஞ்சன் திரைக்கதையை முடித்துக் கொடுத்துவிட்டான்.

விழாவிற்கு வந்தவர்கள் அனைவரும் கலைந்து செல்ல, நிரஞ்சன் அருகில் வந்த தீபா, ""ஏர்போர்ட்ல டிராப் பண்ண முடியுமா மிஸ்டர் நிரஞ்சன்?'' என்று கேட்டார். அவர் எல்லோரையும் மிஸ்டர் என்று தான் அழைப்பார். அவனுக்கும் வேறு வேலை எதுவும் இல்லை. போகும் வழிதான். ""சரி'' என்றான். 
கார் அசோக் பில்லரை கடந்து சென்றது. 
"" பங்க்சனுக்கு உங்க வைஃப்ப ஏன் கூட்டிட்டு வரல?'' தீபா வினவினார். 
நிரஞ்சன் அந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. என்ன சொல்வது என்று தெரியாமல் திணறினான். 
""உங்க பேமிலி மேட்டர்ல தலையிடுறேனு நினைக்காதீங்க. யூ ஆர் ஒன் குட் க்ரியேட்டர். குடும்ப வாழ்க்கை நிம்மதியா இருந்தாதான் ஒரு படைப்பாளி தொடர்ந்து இயங்க முடியும். என்ன பிரச்னை உங்களுக்குள்ள?''
""ஒன்னுமில்லையே?''என்றான் தயங்கியவாறே. 
""எனக்கு தெரியாதுன்னு நினைக்காதீங்க. நம்ம ஸ்கிரிப்ட்ல நீங்க ஒரு சீக்வன்ஸ் எழுதினீங்களே! அந்த ரைட்டருக்கும் அவர் மனைவிக்கும் பிரச்னைன்னு... அது வெறும் கதை இல்லனு எனக்கு தெரியும்''
""எழுதுற எல்லாம் உண்மையா இருக்கணும்னு அவசியம் இல்லையே மேடம்'' நிரஞ்சன் சமாளித்தான். 
""எல்லாம் கற்பனையா இருக்கணும்னும் அவசியம் இல்லையே...''
நிரஞ்சனுக்கும் தீபாவிடம் மனம்விட்டு பேச வேண்டும் என்று தோன்றியது. 
""உங்க சிஸ்டரா நினச்சு சொல்லலாம் மிஸ்டர் நிரஞ்சன்'' தீபா சொன்னாள். 
""இப்பலாம் அவகிட்ட எனக்கு எதுமே புடிக்கல. அவசரப் பட்டு கல்யாணம் பண்ணிட்டோமோனு கூட நினைச்சிருக்கேன்'' நிரஞ்சன் சொன்னான். கார் நிதானமாக நகர்ந்தது. 
""முதல அவகிட்ட உங்களுக்கு என்ன புடிச்சிது?'' தீபா கேட்க, நிரஞ்சனால் பதில் சொல்ல முடியவில்லை. 
""நம்ம எல்லார்கிட்டயும் இருக்க பிரச்னை அதான். நாம ஒருத்தர அப்டியே ஏத்துக்குறது இல்ல. ஒருத்தர் பத்தின பிம்பத்த உருவாக்கிகிட்டு அந்த பிம்பத்த மட்டுமே நேசிக்குறோம். நிஜத்துல அந்த பிம்பம் மட்டுமே அவங்க இல்லன்னு தெரியும் போது அத நம்மளால ஜீரணிக்க முடியுறது இல்ல... அவங்கள பிடிக்காம போகுது. பிம்பத்த விட்டு நிஜத்த நேசிச்சா இந்த பிரச்சனை இல்ல...''
""அவளப் பாத்ததும் அவ எனக்கு சப்போர்ட்டா இருப்பான்னு தோனுச்சு, பட் அவளுக்கு என் வேலைய பத்தி ஒண்ணுமே தெரில'' நிரஞ்சன் சொன்னான். 
""ஏன் தெரியணும்? என் ஹஸ்பண்ட் ஒரு ஃபினான்சியல் கன்சல்ட்டன்ட். அப்டினா என்னனு எனக்கு சரியா சொல்லத் தெரியாது. பட் இன்னைக்கு வரைக்கும் அவர் ஃபீல்ட் பத்தி நான் தெரிஞ்சுக்கணும்னு அவர் நினச்சது கிடையாது. என் ஃபீல்ட்ல அவர் எனக்கு உதவுனும்னு நானும் நினச்சது இல்ல. எனக்கு ஸ்கிரிப்ட்ல ஹெல்ப் வேணும்னா உங்கள மாதிரி ரைட்டரதான் தேடி வரணும். அதவிட்டுட்டு என் ஹஸ்பண்ட் எனக்கு உதவல, அவருக்கு ஸ்கிரிப்ட் பத்தி ஒன்னும் தெரிலன்னு சொல்லி அவர்கிட்ட கோச்சுகிட்டா நான் தான் பைத்தியக்காரி. உங்க வைஃப் என்ன உங்க பர்சனல் அசிஸ்டன்டா? எல்லாமே தெரிஞ்சிக்க. அவ உங்க கூட உங்கள புரிஞ்சிகிட்டு இருக்குறதே பெரிய சப்போர்ட் தானே?''
""அதுக்கு மேல எதுவுமே எதிர்ப்பார்க்க கூடாதா மேடம்?''
""ஒருத்தர்கிட்ட என்ன எதிர்ப்பார்க்கணுமோ அதை மட்டும் எதிர்ப்பார்த்தா பிரச்னை இல்லை. நமக்கு 
புடிச்சதெல்லாம் எதிர்பாக்குறதுதான் பிரச்னை. அப்பாவும் அம்மாவும் எப்டி இருந்தாலும் அப்டியே ஏத்துக்க முடியுது. அதுவே லைஃப் பார்ட்னர் கிட்ட ஏன் முடியுறது இல்ல?'' 
""காலம் பூரா கூட வாழப் போறவங்க இப்டிலாம் இருக்கணும் எல்லாருக்கும் ஆசை இருக்கும்...'' 
""ஆசையா! அவங்க நல்ல மனைவியா இருக்கணும். குடும்பத்த கவனிக்கணும், அப்பறம் உங்களுக்கு புடிச்சதெல்லாம் அவங்களுக்கும் புடிக்கணும். இதெல்லாம் வெறும் ஆசை மட்டும் இல்லையே. சுயநலமும்தானே...!'' 
""சுயநலம் இல்லாத வாழ்க்கை எங்க மேடம் இருக்கு?'' நிரஞ்சன் கோபமாக கேட்டான்.
""சுயநலம் இருக்கலாம். சுயநலம் ஒன்னு மட்டுமே இருக்கக்கூடாது. நம்ம கதைல வர மாதிரி உங்க வைப்ப வேலைக்குப் போக வேணாம்னு நீங்கதான சொன்னீங்க?''
""அது... வீட்ல இருந்தா என்ன இன்னும் நல்லா புரிஞ்சிப்பானு நினச்சேன்...''
""நீங்க அவங்கள புரிஞ்சிகிட்டீங்களா?''
நிரஞ்சன் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தான். 
""இல்லல்ல. அதான் சுயநலம். நீங்க உங்கள ஓர் இன்ட
லெக்சுவல்னு நினைக்குறீங்க. அதான் பிரச்னை. இன்டலெக்சுவல்னு சொல்றதே ஒரு மாயை தான் நிரஞ்சன். நீங்க உங்கள மாதிரியே சிந்திக்க கூடிய ஒருத்தர திருமணம் பண்ணிருக்கலாம்னு நினைக்குறீங்கதானே?''
அவன் தீபாவை ஆமோதிக்கும் வகையில் அமைதியாக இருந்தான். 
""அது எல்லாருக்கும் வரக்கூடிய எண்ணம்தான். பட் அப்டி நடந்தா நிச்சயம் கொஞ்ச நாளைக்கு அப்பறம் லைஃப் போர் அடிச்சிருக்கும். உங்ககிட்ட பேச ஒண்ணுமே இருந்திருக்காது. ரெண்டு பேருமே ஒரே டாப்பிக்க வச்சுக்கிட்டு சண்டை போட்ருப்பீங்க....''
""இப்பவும் எங்களுக்குள்ள பேச எந்த டாப்பிக்கும் இல்லையே?''
""அப்டி இல்ல. உங்களுக்குப் புடிச்ச விசயத்த மட்டும் அவங்க பேசணும்னு நீங்க நினைக்குறீங்க... அப்டி பேசலேனா அவங்கள விட்டு விலகிப் போறீங்க. உங்க மனசுலதான் மாற்றம் வேணும். என்னைக்காவது அவங்கள பேசவிட்டு கேட்ருக்கீங்களா? அவங்ககிட்ட சொல்றதுக்கு நிறைய இருக்கும். உங்க உலகத்துக்குள்ள அவங்க வரணும்னு நினைக்குற நீங்க, அவங்க உலகத்துக்குள்ளயும் போயிட்டு வரணும் தானே....!''
""உங்களுக்கு இப்ப முப்பது வயசு இருக்குமா? ஒரு நாப்பது வயசுக்கப்பறம் உங்களால எழுத முடியாமப் போலாம், உங்க கற்பனை தீர்ந்துபோக வாய்ப்பிருக்கு. அப்போ உங்கள பத்தி நீங்க உருவாக்கி இருக்க பிம்பம் உடைஞ்சு நீங்க உங்க கண்ணுக்கே, சாதாரண மனுஷனா தெரிவீங்க. அந்த நேரத்துல உங்க மனைவி நீங்க எதிர்ப்பாக்குற அளவுக்கு இன்டலெக்சுவலா மாறியிருந்தாலும் உங்களுக்கு அவங்களப் பிடிக்காது. ஏனா உங்கள பத்தின உங்க பிம்பம் உடஞ்சி உங்க எதிர்ப்பார்ப்பே மாறியிருக்கும். மனசுதான் எல்லாத்துக்கும் காரணம் நிரஞ்சன்'' 
நிரஞ்சன் யோசித்தான். 
""பொண்ணு புடிச்சிருக்கா...?'' அம்மா கேட்ட போது, ஒரு புன்னகை மட்டும் அவனுடைய பதிலாக இருந்தது. போனில் பேசும்போது அவளை அதிகம் பிடித்துப் போனது. வாழ்க்கையைப் பற்றி பெரிய கனவுகோட்டை ஒன்றை கட்டிவைத்தது அவன் மனசு. அவளுடன் வாழத் தொடங்கிய பின், அவள் அப்படியே தான் இருந்தாள். ஆனால் மனம் கட்டிய கோட்டைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் இருந்த இடைவெளி என்னும் யதார்த்தம் அவனைப் பயமுறுத்தியது. இப்போது தீபாவும் அதைதான் சொல்கிறார். பிரச்னை, நிரஞ்சனியிடம் இல்லை. கோட்டை கட்டிய தன் மனதில் இருக்கிறது. ஒரு வேளை அந்த மனக்கோட்டையை தகர்த்துவிட்டு நிரஞ்சனியோடு சேர்ந்து புதிதாக இருவருக்கும் பிடித்த ஒரு கோட்டையைக் கட்டினால்...
கார் ஆலந்தூர் சிக்னலில் நின்றது. இருவரும் மேற்கொண்டு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஒரு சிறுமி, காரின் கண்ணாடியை தட்ட, தீபா கண்ணாடியை இறக்கினார். 
""பூ வாங்கிக்கோங்க மேடம். இருபது ரூபாதான்'' என்று அவள் கையில் வைத்திருந்த கூடையைக் காண்பித்தாள். 
""வேணாம் டியர்...'' தீபா சொன்னாள். அந்த சிறுமி ""சரி'' என்று தலை அசைத்தவாறே அடுத்த வாகனத்தை நோக்கி நகர யத்தனிக்கையில், நிரஞ்சன் ""பாப்பா'' என்று அழைத்தான். தன் பர்சில் இருந்து இருபது ரூபாயை எடுத்தான். அந்த சிறுமியிடம் கொடுத்துவிட்டு, 
கனாகாம்பரம் பூவை வாங்கிக்கொண்டான். 
தீபாவிடம் அவனாகவே ""நிரஞ்சனிக்கு புடிக்கும்'' என்றான். 
தீபா புன்னகை செய்தார். 
நிரஞ்சன் வெட்கப்பட்டு தீபாவை பார்ப்பதை தவிர்த்து சாலையைப் பார்த்தான். சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தது.

 

 

http://www.dinamani.com

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தீபாவும் ஒரு பொம்பிளை நிரஞ்சனியும் ஒரு பொம்பிளை , அவங்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட்டாத்தான் பேசுவாங்க அதுக்காக அவசரப்பட்டு பூ வாங்கிட்டியே நிரஞ்சன். பரவாயில்ல விடு. பூக்காரி வீ ட்ட அடுப்பெரியட்டும்.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.