Jump to content

விற்பனைக்கு அல்ல...


Recommended Posts

பதியப்பட்டது

விற்பனைக்கு அல்ல...

 

 
k3

டவுன் பஸ் அந்த நகைக்கடைக்கு ஐம்பது அடி முன்பே பயணிகளை இறக்கி விட்டது. லக்ஷ்மி தனது கையில் சுருட்டி வைத்துக் கொண்டிருந்த மஞ்சள் பையைக் கைகளில் இறுக்கி வைத்தபடி கீழே இறங்கினாள். அது தீபாவளி சீசன் என்பதால் கூட்ட நெரிசலில் ஜேப்படி நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அவள் கையில் சுருட்டி வைத்திருக்கும் மஞ்சள் பை அவளுடைய முழு வாழ்வின் கனவு. அதனை அத்தனை எளிதில் பறிகொடுக்க அவள் தயாராக இல்லை. 
அந்த நகைக் கடையை இதே வீதியில் கடந்து செல்லும்போது பலமுறை கவனித்திருக்கிறாள். அவள் சமையல் வேலைக்குச் செல்லும் இரண்டு மூன்று வீடுகளில் அந்த வீட்டு மனிதர்கள் அந்தக் கடையின் மகாத்மியத்தைப் பற்றிக் கூறும்போது செவி மடுத்துக் கேட்டிருக்கிறாள்... மேலும் லக்ஷ்மி வீட்டில் உள்ள தனது ஒரே பொழுதுபோக்கு சாதனமான தொலைக்காட்சி பெட்டியில் தோன்றும் நகைக்கடை விளம்பரங்களில் பார்த்திருக்கிறாள். கைராசி, சேதாரம் போன்றவற்றை விட அவர்களுடைய கடை சேலத்தில் மட்டும் அதுவும் கடை வீதியில் மட்டும் இருப்பது என்னவோ லக்ஷ்மிக்கு அதன் மீது ஓர் அபிமானம் உண்டு. 
தனது வாழ்வின் லட்சியமான இரண்டு குடைகளுடன் கூடிய ஒரு நீண்ட நீலக்கல் தொங்க, வெளிப்பகுதி முழுவதும் வேலைப்பாடுடன் சின்ன சின்ன நீல மணிகளால் கோர்க்கப்பட்ட ஒரு ஜோடி அழகிய ஜிமிக்கியை அந்தக் கடையில்தான் வாங்க வேண்டும் என்பது அவளுடைய ஆசை.

"நாளைக்கு போனஸ் போடப்போறாங்க. என்ன வேணும் லக்ஷ்மி உனக்கு?'' என்றான் ரங்கன் முப்பது வருடங்களுக்கு முன்னால். அப்பாவின் சொற்ப சம்பாத்யத்தில் லக்ஷ்மிக்குக் குபேரன் மாப்பிள்ளையாக வருவதற்கு வாய்ப்பில்லை என்றாலும் ரங்கசாமி உழைப்பின் மீது நம்பிக்கையுள்ள துடிப்பான கணவன். அழகன். கம்பீரமானவன். அவனுடைய அழகிய சிகை அவன் முன் நெற்றியை மறைக்கும்போது மேலும் அழகாகத் தெரிவான். அப்போது அவள் ஒரு சில உலகங்களுக்குச் சொல்லாமல் சென்று வருவாள்.
"நீலக்கல் வச்ச ரெட்டை குடை ஜிமிக்கி'' என்றாள் ரங்கசாமியின் சிகையை அளைந்தபடி. அவனுடைய தாய் தந்தையர் அவனுடைய இரண்டு சகோதரிகளுடன் ஆறுபேர் கொண்ட மிகச் சிறிய அந்த ஒண்டுக் குடித்தனத்தில் இப்படிச் சிகையை அளைந்து அவனுடன் அவள் பேசுவதற்கு அமையும் சந்தர்ப்பங்கள் மிக மிகக் குறைவு.
"எத்தனை பவுனில்?''
"அந்த அளவுல பண்ணனும்னா குறைஞ்சது ஒன்றரை பவுன் வேணும்''
ரங்கசாமி சிரித்தான். 
"எனக்கு போனஸ் வெறும் ஆயிரம் ரூபாய். அப்பா அம்மாகிட்ட கொடுத்தது போக உனக்கு நூறோ இருநூறோ கொடுக்கலாம்னு இருந்தேன். ஏதோ புடவை கேட்பாய்ன்னு பார்த்தா ஜிமிக்கி கேக்கிறியே . அடுத்த ஜென்மத்தில் பார்க்கலாம்'' என்றான் அவள் இடையைத் தழுவியபடி.
ஒரு சராசரி மானிட வாழ்வில் பொருளாதாரத்திற்கும் தங்கத்தின் விலைக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் தங்கம் பொதுமக்களின் ஒரு முதலீடாக இருப்பதால் அதன் பயன்பாடு எளிதில் கீழ்தட்டு மக்களைச் சென்றடைவதே இல்லை. ஆனால் லக்ஷ்மியின் கனவு வெறும் பொருளாதாரம் சார்ந்ததில்லை. அவள் அந்த ஜிமிக்கியை ஒரு சாதாரணப் பெண் அதன் அழகியல் தன்மை
களில் எளிதில் கவரப்பட்டு ஆசை கொள்வாளே... அதே மாதிரிதான் ஆசைபட்டாள். 
"எங்கே புடிச்ச இந்த நீலக்கல் வச்ச ரெண்டு குடை ஜிமிக்கியை ?'' என்றான் ரங்கசாமி.
லக்ஷ்மி ஆவலுடன்,"நதியா ஒரு படத்தில் கல்யாணகோலத்தில் வந்து நிப்பா. அப்போ அவ இந்த நீலக்கல் வச்ச ஜிமிக்கி போட்டிருப்பா. அவ முகத்துக்கு அவ்வளோ நல்லா இருக்கும். அன்னிலருந்து எனக்கு அதே மாதிரி ஒரு ஜிமிக்கி வாங்கணும்னு ஆசை'' என்றாள்.
"சினிமால காட்டுவதெல்லாம் ஒரிஜினல் இல்லை. டூப்ளிகேட்''
"நான் ஒரிஜினல்தானே?''
"ரொம்ப நாள் ஆகும் லக்ஷ்மி''
"ஆகட்டும் நான் நாளைக்கே வேணும்னு கேக்கலை. கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்ப்போம். அப்புறமா வாங்கலாம். ஒருவேளை ஜிமிக்கி வாங்கணும் என்பதால் நம்மோட சேமிக்கும் பழக்கம் மேலும் வலுப்படலாமில்லையா?'' என்றாள்.

மறுநாளே அவன் லக்ஷ்மியை தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை ஒன்றிற்கு அழைத்துச் சென்றான். அவள் பெயரில் கணக்கு ஒன்றைத் தொடங்கினான். அந்தக் கணக்கில் அவளிடம் கொடுக்கலாம் என்று வைத்திருந்த இருநூறு ரூபாயைப் போட்டுக் கணக்குப் புத்தகத்தை லக்ஷ்மி கையில் கொடுத்து, " மாசா மாசம் இதில் நம்மால எவ்ளோ சேமிக்க முடியுமோ அதைப் போடுவோம். என்னிக்காவது ஒருநாள் நீ ஆசைப்பட்ட நீலக்கல் ஜிமிக்கி உன் காதில் தொங்கும் சரியா?'' என்றான்.
மறுமாத சம்பளம் ரங்கசாமி வாங்குவதற்குள் லக்ஷ்மியின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் புரட்டி போட்டது போலானது. தொடர்ந்து இரவு ஷிஃப்ட் வேலைக்குப் பனிவிழும் இரவுகளில் சைக்கிளில் அவன் தொழிற்சாலைக்கு ஐந்து கிலோமீட்டர் சென்றதால் சளி என்று கண்டறியப்பட்ட நிமோனியா காய்ச்சல் நெஞ்சில் உறைந்து ரங்கசாமியின் உயிரைக் குடித்தது. அவர்கள் இருவருக்கும் நடுவில் பல தழுவல்களைப் பெற்று ஜொலித்திருக்க வேண்டிய தாம்பத்தியம் ஒரே ஆண்டில் கருகிப் போனது.
ஒரு சராசரி பெண்ணிற்கு நேரும் அவலம் அவளுக்கும் நேர்ந்தது. மேலும் இரண்டு பெண்கள் திருமணமாகாமல் வீட்டில் இருக்கும்போது மகனை நினைவுபடுத்தியபடி மருமகள் இருப்பதை விரும்பாத ரங்கசாமியின் பெற்றோர், அவளை அவளுடைய பிறந்த வீட்டில் கொண்டு விட்டனர். மீண்டும் பிறந்தவீட்டின் இன்னல்களுடன் தனது வாழ்க்கையை ஓர் இளம் கைம்பெண் என்ற பட்டத்தையும் சுமந்து கொண்டு போராடத் தொடங்கினாள். சுயசம்பாத்தியம் இல்லை என்றால் பெண்ணிற்கு மதிப்பில்லை என்பதைப் புரிந்துகொண்டபோது, வாழ்க்கை ஒரு சவாலாக நின்றது. அவளைப் போன்ற பெண்கள் சுயசம்பாத்தியம் என்று கிளம்பினால் ஒன்று, பற்றுபாத்திரம் தேய்த்து வீட்டை பராமரிக்கும் ஒரு பணிப்பெண்ணாகவோ, அல்லது இரண்டு மூன்று இல்லங்களில் அடுப்படியில் வெந்து சமையல்காரியாகவோதான் செல்ல முடியும் என்பது முகத்தில் அறைந்தது. 
லக்ஷ்மி சமையல் வேலையைத் தேர்ந்தெடுத்தாள். சமையல் வேலையும் அவளுக்கு அதிகமாகக் கொட்டிக் கொடுத்து விடவில்லை. தனது தன்மானத்தையும் விட்டுக் கொடுக்காமல், தன் மீது விழும் பரிதாபப் பார்வைகளையும் தடுக்க முடியாமல், தனது இளமையையும் காத்துக் கொண்டு, சுடும் அடுப்புடன் மனிதர்களின் சுடுசொற்களையும் தாங்கிக் கொண்டு போராடியதில் தலை நரைத்ததுதான் மிச்சம். இரண்டு மூன்று இல்லங்களில் சமையல் வேலை செய்து பெற்றுவரும் வரும்படி ஒரு கெüரவமான வாழ்க்கையை வாழ மட்டும்தான் உறுதுணையாக இருந்தது. உறவுகள் விலகிச் செல்லச் செல்ல ஒண்டுக் குடித்தனங்களின் அக்கம்பக்கத்தினரே உறவுகள் ஆயினர். முடி நரைத்தாலும் பல வருடங்களுக்கு முன்னர் முளைத்த ஆசை மட்டும் நரைக்கவில்லை. நெஞ்சின் ஒரு மூலையில் அந்த நீலக்கல் தொங்கும் இரட்டைக் குடை ஜிமிக்கி அசைந்து கொண்டே இருந்தது. 

 
லக்ஷ்மி பணம் சேர்க்கத் தொடங்கினாள். கடைகளுக்கு இட்லி செய்து கொடுத்தால் கணிசமாகக் காசு வருகிறது என்று கேள்விப்பட்டுப் பெரிய பெரிய இட்லி குண்டானும் கொடியடுப்பும் கொண்டுவந்து போட்டு விடிகாலையில் நான்குமணிக்கு எழுந்து நூறு இட்லிகள் செய்து கடைகளுக்கு சப்ளை பண்ணத் தொடங்கினாள். தரத்தில் சிறிதும் சமரசம் செய்துகொள்ளாத அவளுடைய உழைப்பிற்குப் பலன் இருந்தது. மளமளவென்று சின்னஞ்சிறு ஓட்டல்களில் அவளுடைய இட்லிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சிரார்த்தம், சீமந்தம் போன்ற ஒருநாள் சமையல்களுக்குச் சென்று வரத் தொடங்கினாள். கையில் கொஞ்சம் பணம் சேரத் தொடங்கியது. தனது ஒரே சொத்தான பெயிண்ட் உதிர்ந்த டிரங்க் பெட்டியின் அடியில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு புதைத்து வைத்திருந்த வங்கிக் கணக்குப் புத்தகத்தை அந்த வங்கிக்கிளையில் சென்று புதுப்பித்தாள். அவர்கள் கேட்ட ஆதாரங்களையும் புகைப்படங்களையும் அளித்துப் பணம் சேர்க்கத் தொடங்கினாள். தானியங்கி பணப் பட்டுவாடா எந்திரத்தின் செயல்முறைகள் அவளை வெருட்டாமல் புரிந்து கொள்ளுதலின் ஆர்வம் காரணமாக எளிதாகவும் வியப்பூட்டுவதகவும் இருந்தது. தனக்குக் கிடைத்த ஒரு தனிமை சந்தர்ப்பத்தில் அவர்கள் கொடுத்த பிளாஸ்டிக் கார்டை தேய்த்து அவள் அந்த இயந்திரத்தை இயக்கிப் பணம் எடுத்தபோது ஒரு சிறுகுழந்தையைப் போலக் கைதட்டி குதூகலித்தாள்.
"இந்த வயசில் நீ ஜிமிக்கி மாட்டிப்பியா ?'' என்றாள் பக்கத்துக் குடித்தனத்தைச் சேர்ந்த ரேவதி. ரேவதிக்கு இவளைப்போல அடுப்பில் அல்லல் படும் அவதி இல்லை. ஒரு மகன் ஒரு மருமகள் பேரன் ஒருவன் என்ற குடும்பம் அவளுடையது என்றாலும் லக்ஷ்மியின் முழு வாழ்க்கையையும் அறிந்த தோழமையுள்ள ஜீவன். 
லக்ஷ்மி கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்த்தாள். போராட்டமும் தனிமையும் அனுபவக் கோடுகளால் முகத்தின் அழகை மறைத்து வயதைக் கூட்ட முற்பட்டாலும், அவன் பற்றி இழுத்த கரங்களின் நினைவிற்காக அந்த ஜிமிக்கியின் மீதான ஆசை மறையவில்லை என்பதை அந்தக் கண்ணாடியில் கண்டுகொண்டாள்.
"லக்ஷ்மியம்மா உங்க நதியா நடிச்ச படம் டிவியில் போடறான்''என்று ரேவதியின் மருமகள் நித்தியா கூவினாள். எப்போது டி.வியில் அந்தப்படம் போட்டாலும் தன்னை அழைக்குமாறு கூறியிருந்தாள். லக்ஷ்மி அவசரமாக அங்கு சென்றாள்.
நதியாவை மணப்பெண்ணாக அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். நெற்றிச் சுட்டி, காசு மாலை, அங்கி, ஒட்டியாணம் எல்லாம் போட்டுக் கொண்ட நதியா தனது காது தோடுகளைக் கழற்றியபடி ,"இந்தத் தோடு எடுப்பா இல்லையே'' என்றதும் அவள் தந்தை ஒரு பேழையை நீட்டுகிறார். நதியா அந்தப் பேழையைத் திறக்க உள்ளே அந்த இரட்டைக் குடை நீல ஜிமிக்கி ஜொலித்தது.
" இதுவா ?'' என்றாள் ரேவதி.
"ஆமாம்'' என்றாள் லக்ஷ்மி.
"லக்ஷ்மி வயசு என்பதை விடு. உனக்கு எதுக்கு லக்ஷ்மி ஜிமிக்கி?'' என்றதும் லக்ஷ்மிக்கு "உனக்கு' என்ற சொல்லின் பொருள் புரிந்து வலித்தது.
அதனைப் புரிந்து கொண்ட நித்தியா லக்ஷ்மியை கட்டியணைத்து ," எங்க லக்ஷ்மியம்மாவுக்கு என்ன குறை? அந்த ஜிமிக்கி நதியாவை விட லக்ஷ்மியம்மாவுக்குத்தான் இன்னும் நல்லா இருக்கும்'' என்றாள்.
"ரெண்டு பவுனுக்கு மேல இருக்கும் போலிருக்கே லக்ஷ்மி? அம்பதாயிரம் ரூபாய்க்கு மேல ஆகாது?''
"கொஞ்சமாவா இந்த நகைக்கடைக்காரனுங்க செய்கூலி சேதாரம் போடறானுங்க? கண்டிப்பா இருக்கும்'' என்றாள் நித்தியா.
"உன்னிடம் அவ்வளவு பணம் இருக்கா லக்ஷ்மி?'' ரேவதி கேட்டாள். 
"நாலு வருஷமா என்னுடைய உழைப்பு பாங்க் அக்கவுண்ட்ல அம்பதாயிரமா சேர்ந்திருக்கு ரேவதி''
முதல் நாள் இருபத்தையாயிரமும் மறுநாள் இருபத்தையாயிரமுமாக மொத்தம் ஐம்பதாயிரம் பணத்தைத் தானியங்கி பணப் பட்டுவாடா எந்திரத்தின் மூலம் எடுத்து ஒரு பழைய பர்சினுள் வைத்துக் கொண்டு அந்தப் பர்சை ஒரு மஞ்சள் பையினில் சுற்றி எடுத்துக் கொண்டு லக்ஷ்மி கூட்டம் மிகுந்த கடை வீதி நோக்கிக் கிளம்பினாள்.
 
 
உயரமான பளிங்குக் கற்களால் ஆன வாசற்படிகள். பெரிய பெரிய கண்ணாடி கதவுகள். ஒவ்வொருமுறையும் அந்தக் கதவுகள் திறந்து மூடப்படும்போது குளிர்காற்று லக்ஷ்மியின் முகத்தைத் தழுவியது.
"என்னம்மா வேணும் ?'' உயரிய ஆடை அணிந்து சென்றவர்களை எவ்வித கேள்வியும் கேட்காமல் உள்ளே அனுமதித்த வாயில்காப்போன் இவளைப் பார்த்ததும் அதட்டலாகக் கேள்வி கேட்டான்.
"ஆ ! ரெண்டு கிலோ கோதுமையும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய்யும் வாங்க வந்தேன்'' என்றாள் லக்ஷ்மி விருட்டென்று.
"நக்கலா?'' என்றான் வாயில்காப்போன்.
"நகைக் கடைக்கு எதுக்கு வருவாங்களாம்?''என்று லக்ஷ்மி உள்ளே நுழைந்தாள்.
"என்ன வாங்க வந்த?'' என்றான் அவன் ஒருமையில்.
"சொன்னாத்தான் உள்ள விடுவியா?''என்றாள் லக்ஷ்மியும் ஒருமையில்.
"அடிக்கடி வந்தா எது எது எங்க எங்க இருக்கும்னு தெரியும். நீ புதுசுதானே அதான் வளையலா... தோடா... சங்கிலியா மூக்குத்தியான்னு சொன்னா அந்த இடத்துக்கு அனுப்பி வைப்பேன். உன்னைப் பார்த்தா நகை வாங்க வந்தவ மாதிரி தெரியலை. அதான் கேட்டேன்''என்றான் அவனும் விடாமல்.
"ஜிமிக்கி பார்க்கணும்'' என்றாள். அதன்பிறகே அவன் உள்ளே ஜிமிக்கி பிரிவிற்கு அனுப்பி வைத்தான்.
அங்கும் உருவு கண்டு எள்ளுதல் நிகழ்ந்தது. அவளை ஒருவரும் அமரச் சொல்லி நிர்பந்திக்கவில்லை. பெரிய பெரிய விளக்குகளின் கண்ணைப் பறிக்கும் ஒளியில் அவள் மேலும் மங்கலாகத் தெரிந்தாள். வசதி படைத்தவர்கள் நாற்காலிகளில் அமர்த்தப்பட்டு உபசரிக்கப்பட்டதற்கு அவள் வருத்தப்படவில்லை. தன்னிடம் ஒருவார்த்தை கூடப் பேசாமல் முகம் பார்ப்பதைத் தவிர்ப்பதை எப்படி இவர்களால் இவ்வளவு கச்சிதமாகச் செய்ய முடிகிறது என்பது புரியவில்லை. அவள் வெறுத்துப் போய் நுழைவுப்பகுதியில் போடப்பட்டிருந்த சோபா ஒன்றில் அமர்ந்தாள்.
"நகைக்கடைகள் கூடப் பாவப்பட்டவங்களுக்குக் கிடையாது போலிருக்கு'' என்றாள் சற்று வருத்தப்பட்ட குரலில். தான் பேசியது ஒருவருக்கும் கேட்டிருக்காது என்றுதான் நினைத்தாள். ஆனால் அருகில் நடுத்தர வயதில் மிடுக்கான உடை அணிந்து தங்க
முலாம் போட்ட கண்ணாடி அணிந்த ஒரு நடுவயதுக்காரர், "என்ன சொன்னீங்கம்மா?'' என்றார். அவள் பதறிப் போய்த் திரும்பிப் பார்த்தாள்.
"பதறாதீங்க. நீங்க என்ன சொன்னீங்களோ அதைத் திருப்பிச் சொல்லுங்க'' என்றார்.
"பின்னே என்னங்க. நான் வந்து அரைமணி நேரமாச்சு. எனக்கு என்ன வேணும்னு யாரும் கேட்கலை. நானும் மனுஷிதானே? என்னைப் பார்த்தா திருட்டு நகை விக்க வந்தவளை மாதிரியா இருக்கு ? இந்தப் பைக்குள் சுளையா ஐம்பதாயிரம் ரூபாய் வச்சிருக்கேன்'' என்றாள்.
"என்ன வாங்க வந்தீங்க?''
"ஜிமிக்கி''
என்ன மாதிரி மாடல் ?
"நீலக்கல் வச்ச இரட்டைக் குடையுடன் கூடிய ஜிமிக்கி''
"ஏதாவது படம் வச்சிருக்கீங்களா?''
"படமெல்லாம் இல்லை. ஆனா நேத்திக்கு மதியம் நதியா நடிச்சு ஒரு படம் டி.வியில் காட்டினாங்க. அதில் நதியா கல்யாணம் பண்ணிகிறப்போ இந்த ஜிமிக்கி போட்டிருப்பா''
"ஓ... அந்தப் படமா? அந்த ஜிமிக்கி இருபது இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ரொம்பப் பிரபலமாச்சே? இப்ப அந்த மாடல் அவுட் ஆஃப் ஃபாஷன் ஆயிடுச்சேம்மா ?''
லக்ஷ்மிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 
"இருந்தா பார்க்கணும். இல்லைன்னா வேற கடைக்குப் போக வேண்டியதுதான்'' என்று முனகினாள்.
"குறிப்பா இந்த ஜிமிக்கிதான் வேணும் அப்படிங்கறதுக்கு ஏதாவது சொந்தக் காரணங்கள் உண்டாம்மா? இது உங்க சொந்த விஷயம்னா சொல்ல வேண்டாம்'' என்ற அந்த நடுத்தரவயதுக்காரரின் வினாவுதலில் ஒரு தனிப்பட்ட அக்கறை தெரிந்தது.
"என் கணவனுக்கும் இந்த ஜிமிக்கிக்கும் ஒரே வயசு. இருபத்தஞ்சு வருஷம்'' என்றாள் லக்ஷ்மி.
அந்த மனிதருக்குத் தூக்கிவாரி போட்டது. அவளுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் புரிந்துகொள்ள அந்த ஒரு வாசகம் போதுமானதாக இருந்தது என்றாலும் லக்ஷ்மி அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தனது கதையை அவரிடம் கூறத் தொடங்கினாள். கேட்டுக் கொண்டிருந்தவருக்கு இரண்டு மூன்று முறை தொண்டை கமறியது.
அந்த நடுத்தரவயதுக்காரர் தனது கைப்பேசியிலிருந்து இணையம் மூலம் ஒரு படத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை அண்மைப்படுத்தி லக்ஷ்மியிடம் காட்டினார்.
லக்ஷ்மி முகமெல்லாம் மலர "இந்த ஜிமிக்கிதான்'' என்றாள்.
சுந்தரம் வாசலில் இருந்த வாயிற்காப்போனை அழைத்தார். 
"சொல்லுங்க முதலாளி'' என்று வாயிற்காப்போன் வந்து நின்றான்.
லக்ஷ்மி தனது சேலைத் தலைப்பால் முன்நெற்றியையும், பிடரிப் பகுதியையும் துடைத்துக் கொண்டாள். இத்தனை நேரம் அவள் பேசிக் கொண்டிருந்தது அந்தக் கடைமுதலாளியிடம் என்பது புரிந்தது.
"நான் சொன்னேன்னு ஆசாரி மாணிக்கத்தைக் கூட்டிகிட்டு வா'' என்றார் அந்தக் கடை முதலாளி.
அந்த நகைக்கடையின் முதன்மை ஆசாரியான மாணிக்கம் என்பவன் உயரிய ஜீன்ஸ் பேண்டும் ஒரு டீ ஷர்டும் அணிந்தபடி இருந்தான்.
"மாணிக்கம் இதுதான் ஜிமிக்கி ஒன்றின் மாதிரி வடிவம். உன்னுடைய மெயிலுக்கு அனுப்பியிருக்கேன். எவ்வளவு நாளில் செஞ்சு முடிக்க முடியும்னு சொல்லு''
" கலை ட்ரான்ஸ்போர்ட் பாúஸôட பையன் திருமணத்துக்கு நகைகள் பண்ண ஆர்டர் இருக்கு சார். எப்படியும் ஒருவாரம் ஆகும்'' 
" ஒரு வாரம் ஆகுமாம் லக்ஷ்மியம்மா. பரவாயில்லையா?''
லக்ஷ்மி தனது மஞ்சள் பையைத் திறந்து அதிலிருந்த பர்சிலிருந்து நோட்டுக்களை எண்ணத் தொடங்கினாள்.
"உங்ககிட்ட பணம் இருக்கு என்பதை எனக்குச் சொல்லவேண்டாம் அம்மா'' என்றார் நகைக்கடை முதலாளி தனது தங்கமுலாம் பூசப்பட்ட கண்ணாடியை கழற்றி நாசூக்காகத் துடைத்தபடி.
"இல்லை அட்வான்ஸ் எதுவும் குடுக்கணுமா?''
"வேண்டாம். இன்னிக்கு வெள்ளிக்கிழமை சரியா அடுத்தவாரம் வெள்ளிக்கிழமை வாங்க. உங்க ஜிமிக்கி ரெடியா இருக்கும். இது உங்களுக்குன்னு வடிவமைத்துக் கொடுக்கபோற ஜிமிக்கி. இதுக்கு உங்க கிட்டேயிருந்து ஒரு பைசா கூடச் செய்கூலி சேதாரமா வாங்க மாட்டேன். போதுமா ?''
" அது எனக்கு ஏதோ தர்மம் பண்ணுவது போலாயிடாதா?'' என்றாள். 
கடைக்காரர் அதிசயித்துப் போனார்.
"சரிம்மா, குறைந்த அளவு சேதாரமும் செய்கூலியும் வாங்கிக்கிறேன். சம்மதமா?'' என்று கேட்டுவிட்டுச் சிரித்தார். லக்ஷ்மியும் சம்மதம் என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினாள்.
 
லக்ஷ்மி முதல் நான்கு நாட்கள் ஜிமிக்கியைப் பற்றிய நினைவு இல்லாமல் இருந்தாள். ஓரிரு சமயம் ஒரு சிறுமியைப் போலத் தான் வயதுக்கு மீறிய ஆசைகளில் மூழ்கிக் கிடக்கிறோமா என்றும் தோன்றியது. இருப்பினும் அந்த ஜிமிக்கியுடன் அவனில்லாமல் கடந்து போன தனது வாழ்க்கையின் போராட்டம் நினைவுக்கு வரும். உடனே தனக்கு அந்த ஜிமிக்கி ஒரு வெற்றியின் அடையாளம் என்று தோன்றும். வாழ்க்கை இதுபோன்ற இலக்குகளை நிர்ணயித்துப் பயணிப்பதில்லை எனினும் பெண்கள் இது போன்ற இலக்குகளை நிர்ணயித்துக் கொள்வதும், அதனை அடைவதும், அவ்வாறு அடைந்ததை நினைவுகூராமல் கடந்து விடுவதும்தான் வாடிக்கை. லக்ஷ்மிக்கு அப்படி இல்லாமல் தனது அற்ப ஆசையையும் அதனை அடையப் போராட வேண்டியிருந்ததையும் நினைத்துப் பார்க்கச் சந்தர்ப்பம் நேரிட்டிருக்கிறது.
மேலும் அது கல்யாண சீசன் என்பதால் அவளுக்கு நன்கு பரிச்சயப்பட்ட பரிசாரகரின் வேண்டுகோளுக்கிணங்கி அவருடைய கல்யாண காண்டாரக்ட் ஒன்றிற்குக் கூடமாட ஒத்தாசை செய்யும் பணி வேறு இருந்ததால் அக்கம்பக்கம் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் போனது.
ஐந்தாம் நாள் முழுவதும் அடித்துப் போட்டது போல உறங்கிக் கிடந்தவள் பக்கத்து வீட்டு ரேவதியின் வீட்டில் சப்தமே இல்லையே என்று விசாரிக்கக் கிளம்பினாள். 
" என்னவோ தெரியல லக்ஷ்மி. என் மகன் முருகேசன் போன வாரம் மூச்சு இழுக்குதுன்னு சொல்லிகிட்டே இருந்தான். நெஞ்சு வலியா இருக்கு
மோன்னு டாக்டருங்க சந்தேகப்பட்டாங்க. என்னென்னவோ வைத்தியமுறையில சிகிச்சை கொடுத்தாங்க. அவங்க பண்ணின ஒரு டெஸ்ட் அவனுக்கு ஒத்துக்காம போயி ரெண்டு சிறுநீரகமும் பழுதாயிடுச்சாம். ஏதோ டயாலிசிஸ்னு சொல்றாங்களே அது ரெண்டு மூணு வாட்டி பண்ணினா கிட்னி ரெண்டும் தானே செயல்பட ஆரம்பிச்சுடுமாம். கவர்மெண்டு ஆசுபத்திரியில் உடனே செய்ய வசதியில்லையாம். பிரைவேட் ஆசுபத்திரியில் கொறஞ்சது அம்பதாயிரம் ரூபா செலவாகுமாம். நான் அவ்வளவு பணத்துக்கு எங்க போவேன் லக்ஷ்மி?''என்று அரற்றினாள்.
லக்ஷ்மி அவசர அவசரமாக அரசு மருத்துவமனைக்கு ஓடினாள். சீரற்ற சுவாசத்துடன் நித்தியாவின் கணவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.
நித்தியாவும் இன்னும் கொஞ்சம் புரியும் மொழியில் ரேவதி கூறியதையேதான் மீண்டும் கூறினாள்.
"இப்பவே உன் புருஷனைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான ஏற்பாட்டைக் கவனி'' என்றாள் லக்ஷ்மி எவ்வித தயக்கமும் இல்லாமல்.
"மாமி கொறஞ்சது நாப்பதாயிரம் செலவாகுமாம். மருத்துவம் கூட ஏழைகளுக்கு எட்ட முடியாத உயரம் மாமி'' 
"எட்ட முடியும்'' என்று லக்ஷ்மி தனது மஞ்சள் பையை அவளிடம் நீட்டினாள்.
மாமி நித்தியாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாக்கு மேல் அண்ணத்துடன் ஒட்டிக்கொண்டது.
"இது உங்களோட இருபத்தஞ்சு வருஷக் கனவு மாமி''
"ஆனா இது உன்னோட இருபந்தஞ்சு வருஷ நிஜம் நித்தியா. என்னிக்குமே கனவு நிஜமாகும்போது உனக்கும் உன் புருஷனுக்கும் ஒரே வயசுதான் இருக்கணும். உனக்கு அம்பது வயசும் உன் புருஷனுக்கு இருபந்தஞ்சு வயசும் இருக்கக் கூடாது. இது உனக்கு இப்ப புரியாது. இல்லை இல்லை. உனக்கு இது புரியவே வேணாம். வாங்கிக்கோ. எவ்வளவு சீக்கிரம் அவனுக்கு டயாலிசிஸ் பண்ணி குணப்படுத்தறியோ அவ்வளவு சீக்கிரம் பண்ணு''என்றாள்
அடுத்த மூன்றுநாட்கள் நித்தியாவின் கணவனைத் தனியார் மருத்துவமனையில் சேர்த்து மாற்று ஏற்பாடாகச் செயற்கைச் சிறுநீரகச் சிகிச்சை அளிக்கப்பட்டு மூன்று டயாலிசிசில் அவனுடைய சிறுநீரகம் உயிர்ப்பிக்கப்பட்டு நித்தியாவின் மாங்கல்யம் காப்பாற்றப் பட்டது. நித்தியா லக்ஷ்மியின் காலில் விழுந்து அழுதாள்.
"கண்டிப்பா அவரும் நானும் எப்பாடு பட்டாவது அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்திடறோம். நீங்க கண்டிப்பா அந்த ஜிமிக்கியை போட்டுக்கணும்'' என்றாள்.
"போடி பைத்தியக்காரி. இப்பவே பாதி முடி எனக்கு நரைச்சாச்சு. நீ எப்பத் திருப்பிக் கொடுக்கிறது நான் எப்ப மாட்டிகிறது. புருஷன்தான் ஒரு பெண்ணுக்கு ஜிமிக்கி. சரியா?. அசடு கண்ணைத் துடச்சிக்க'' என்றாள்.
 
அதன்பிறகு அவள் அந்த நகைக் கடை இருந்த வீதியின் பக்கம் கூடப் போகவில்லை. ஆர்டர் கொடுத்த நகையை வாங்கவும் இல்லை; வேண்டாம் என்று நிராகரிக்கவும் இல்லை. நேரில் சொல்லாமல் இருக்கிறோமே என்று ஒரு குற்ற உணர்வு மட்டும் இருந்தது.
ஒருநாள் கடைவீதியில் வேறு வேலையாகப் போய்க் கொண்டிருந்தபோது கப்பல் போன்ற கார் ஒன்று அவள் அருகில் வந்து நின்றது. அதிலிருந்து அந்த நகைக்கடை முதலாளி வெளியில் இறங்கினார். லக்ஷ்மிக்கு குப்பென்று வேர்த்தது. இப்படி ஓர் இக்கட்டில் மாட்டிக் கொண்டு விட்டோமே என்று அவளுக்குச் சங்கடமானது. இதுபோன்ற தருணங்களில் அதிகமாக வாய் விட்டு மாட்டிக் கொள்வதைவிட மெüனமாக இருப்பது நல்லது என்ற வகையில் அவள் ஒன்றும் பேசாமல் இருந்தாள்.
"நீங்க வரமுடியாமல் போனதுக்கு உங்களுக்கு ஒரு காரணம் இருக்கலாம். அதற்குள் என்னால் தலையிட முடியாது. இருந்தாலும் அந்தக் காரணத்தை அறிஞ்சுக்க விருப்பப்படறேன். இங்க சொல்றதுக்கு உங்களுக்குக் கஷ்டமா இருந்தா எங்க நகைக் கடைக்கு வந்து சொல்லுங்க. நீங்க அந்த ஜிமிக்கியை வாங்கிக்காமப் போனதுக்கு எனக்குக் கொஞ்சம் கூட வருத்தம் இல்லை'' என்றார்.
லக்ஷ்மி மறுப்பேதும் சொல்லாமல் அவருடைய நகைக்கடைக்குச் சென்றாள். இந்தமுறை வாயில் காப்போன் அவளை ஒன்றும் கேட்காமல் உள்ளே அனுமதித்தான். பணம் வாங்கும் இடத்திற்குப் பின்னால் கண்ணாடி கதவுடன் கூடிய அறை இருந்தது. அந்த அறையிலிருந்து வெளியில் வந்த ஒரு சிப்பந்தி லக்ஷ்மியை அந்த அறைக்குள் அழைத்துச் சென்றான். உள்ளே கடையின் முதலாளி ஓர் உயர்தரப் பட்டுக் கம்பளம் போர்த்தியிருந்தாற்போன்று செய்நேர்த்தியுடன் கூடிய ஆசனத்தில் அமர்ந்திருந்தார். எதிரில் ஆசாரி என்று அறியப்பட்ட மாணிக்கமும் அமர்ந்திருந்தான். மாணிக்கத்தின் முன்பு ஓர் அழகிய பேழை . மாணிக்கம் அந்த அறையிலிருந்து வெளியேறினான்.
லக்ஷ்மி அந்தக் கடைக்காரர் சொன்னதும் அவர் முன்பிருந்த இருக்கையில் அமர்ந்தாள். அவளிடம் தயக்கம் எதுவும் இல்லை. நித்தியாவின் கணவனுக்கு ஏற்பட்ட சீர்குலைவையும் அதற்குத் தனது மொத்த சேமிப்புப் பணமும் துணை போனது குறித்தும் விவரமாகக் கூறினாள்.
"எனக்கு உங்க கிட்ட சொல்லாம இருக்கோமேன்னு வருத்தம் இருந்தது நிஜம்தான். ஆனா இதைச் சொல்ல இவ்வளவு தூரம் வரணுமான்னு ஒரு சோர்வு. என்னதா மேலோட்டமா நான் தியாகம் பண்ணிட்டதா பீத்திகிட்டாலும் இந்தக் கடையையும் இந்த ஜிமிக்கியையும் பார்க்க நேரிட்டால் உள்ளுக்குள்ள ஒரு புழுக்கம் இருக்கும் இல்லியா? அதைப் பெரிசு படுத்துவானேன்னுதான் வரலை'' 
அந்த நகைக்கடைக்காரர் பேழையைத் திறக்கப் போனார். 
"ஒருவேளை என்னுடைய செய்கையில் உங்களுக்கு ஓர் அபிமானம் ஏற்பட்டு அதன் மூலமா இந்த ஜிமிக்கையை நீங்க எனக்கு இலவசமா கூடத் தர முன்வந்துட்டா என்ன பண்ணுவதுன்னு ஒரு பயமும் என்னுடன் கூடவே இருந்ததும் ஒரு காரணம் சார். அப்படி ஒரு நினைப்பு உங்களுக்கும் என் மேல் வரக்கூடாது. நானும் அப்படி ஒரு நினைப்பை உங்களுக்கு ஏற்படுத்தக் கூடாது. இல்லீங்களா? அதனாலதான் வரலை'' 
அவளுக்குப் பதில் சொல்ல நகைக்கடை முதலாளிக்கு வார்த்தை எழவில்லை.
"நான் கிளம்பறேங்க''
சொல்லிவிட்டு லக்ஷ்மி அங்கிருந்து எழுந்து விட்டாள்.
அவளுக்குத் தெரியாமல் அவள் சென்ற திசையைப் பார்த்து நகைக்கடைக்காரர் ஒரு கும்பிடு போட்டார்.
அந்தக் கடையில் நுழைந்ததும் இடதுபுறத்தில் ஒரு நீள கண்ணாடி அறையும் அந்த அறைக்குள் பல பல பிரிவுகளில் அவர்களுடைய பல்வேறு அணிகலன்களைப் பார்வைக்கு வைத்து அதன் கழுத்தில் ஒரு அட்டையைக் கட்டி எடை மற்றும் விலையைக் குறிப்பிட்டிருப்பார்கள். 
நகைக்கடை முதலாளி அந்தப் பேழையிலிருந்து அந்த இரட்டைக் குடை நீலக்கல் பதித்து நீலமணிகளால் கோர்க்கப்பட்டிருந்த அந்த ஜிமிக்கி ஜதையை எடுத்தார். ஓரளவு சித்திரவேலைப்பாடுடன் கூடிய பீடம் ஒன்றை அந்தக் கண்ணாடி சுவர்களுக்குப் பின் வைத்தார். அந்தப்பீடத்தின் மேல் அந்த ஜிமிக்கி ஜதையை வைத்தார். ஒரு சிப்பந்தியிடம் சிறிய வாசகம் எழுதப்பட்ட பிளாஸ்டிக் பலகை ஒன்றை கொண்டுவரச் சொன்னார். அந்தப் பிளாஸ்டிக் பலகையை அந்தப் பீடத்தின் முன்பு பார்வையாளர்
களும், வாடிக்கையாளர்களும் படிக்கும்வண்ணம் சாய்த்து வைத்தார். வெளியில் வந்து அந்தப் பலகையில் எழுதியிருந்ததை வாசித்தார்.
"விற்பனைக்கு அல்ல'
அவருக்குத் தெரியும் அந்த நீலக்கல் ஜிமிக்கி விலை மதிப்பற்றது என்று. 
சத்தியப்பிரியன்
 
 

http://www.dinamani.com

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏழைகளின் ஆசைகள் நிராசையாவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அது நிறைவேறுவதற்கு ஒரு காரணம் கூட தென்படுவதில்லை.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.