Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தண்டனை!

Featured Replies

 
 
 
 
 
 
 
 
 
தண்டனை!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
E_1530856234.jpeg
 

அதிகாலை ஐந்து மணி-
முகத்தைக் கழுவி, துடைத்த துண்டை தோளில் போட்டபடி, பழைய சைக்கிளை வெளியே எடுத்தான் ரத்தினம். கட்டடம் கட்டும் மேஸ்திரி அவன். சத்தம் கேட்டு விழித்துக்கொண்டாள், அழகேஸ்வரி.
''யோவ்... நாழி வளத்தாம சீக்கிரம் போயிட்டு வா... வேல நிறைய கிடக்கு,'' பதிலுக்குத் தலையை அசைத்தபடி மெதுவாய் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். 10 நிமிடத்தில் மெயின் ரோட்டிலிருக்கும் அரச மரத்தடி டீக்கடையை வந்தடைந்தான்.
அப்போது தான் பாய்லரை பற்ற வைத்து, முதல் குவளை டீயை ஆத்தி முடித்தான் கடை மாஸ்டர். சில நொடிகளில் மரபெஞ்சில் உட்கார்ந்திருந்த கஸ்டமர்களின் கைகளில் அது இடம் மாறியது.


''என்ன ரத்தினம்... போன வாரம் நான் சொன்னதப் பத்தி யோசனை பண்ணியா... 40 வருஷமா ஒரே கம்பெனி... அப்பா - மகன் - பேரன்னு மூணு தலைமுறை முதலாளியையும் பார்த்துட்டே... ஆனா, உன் நிலைமை மட்டும் இன்னும் மாறவே இல்ல... அதே பழைய ஓட்டை சைக்கிள், லுங்கி, மட்டப்பலகை, கொலுறு... நானும், என் முதலாளிகிட்ட உன்னைப் பெருமையா சொல்லி வச்சிருக்கேன்... நீ சரின்னு ஒரு வார்த்தை சொன்னாப் போதும் உன் வாழ்க்கையே மாறிடும்,'' என்றார், சக மேஸ்திரி ஒருவர்.
பதில் ஏதும் பேசாமல், டீக்கு காசு கொடுத்துவிட்டு, மீண்டும் வீடு நோக்கி சைக்கிளை மிதித்தான். பல மாதங்களாய் எண்ணெய் காட்டாததால், மிதிவண்டியின் செயினில் துருபிடித்ததற்கான அடையாளமாய், 'கிரீச்' சத்தம் அதிகமாகவே இருந்தது.
வழியில், ''ரத்தினம்... கொஞ்சம் நில்லுப்பா, உன் கிட்டக் கொஞ்சம் பேசணும்.''
''ஐயா... நீங்க யாருன்னு தெரியலயே, என்கிட்ட என்ன பேசணும்.''
''டீக்கடையில, உங்கிட்ட இப்போ பேசினாரே ஒரு மேஸ்திரி, அந்தக் கம்பனியோட முதலாளி நான் தான். உன் திறமையைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கேன். உன் தனிப்பட்ட திறமையால மட்டும் தான், உங்க கம்பெனி நல்லா வளருதுன்னு எல்லாருக்குமே நல்லாத் தெரியும். நீ மட்டும் இல்லேன்னா அவங்க பொழப்பு நாறிப் போயிடும். நீ மட்டும் சரின்னு ஒரு வார்த்தை சொல்லு, உன் வாழ்க்கையையே மாத்திக் காட்டறேன்.''
சுற்றும் முற்றும் பார்த்த அவன் மனசு படபடத்தது, ''எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்க... யோசிச்சி சொல்றேன்,'' பெரும் குழப்பத்தில் மீண்டும் பெடலை மிதிக்க ஆரம்பித்தான்.

 


'நீ, சரின்னு ஒரு வார்த்தை சொன்னாப் போதும், உன் வாழ்க்கையையே மாத்திக் காட்டுவேன்...' இந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவன் காதில் ஒலித்து, சைக்கிளின், 'கிரீச்' சத்தத்தையே விழுங்கி விட்டது.
'அவங்க சொல்றதும் சரி தான்... இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் ஒரே கம்பெனிக்கு ஒழைச்சிக் கொட்டறது... இப்போ கட்டிக்கொண்டிருக்கும் வீட்டு வேலை இன்னும் ஒரு வாரத்துல முடிஞ்சிடும். அதுக்குள்ள முதலாளியிடம் முடிவச் சொல்லிட வேண்டியது தான். இதுதான் கம்பெனிக்கு, நான் கட்டி முடிக்கற கடைசி வீடா இருக்கணும்... வீட்டுக்குப் போனதும் அழகுவிடமும் இதப்பத்தி முதல்ல பேசிடணும்... அவ லேசுல ஒத்துக்கமாட்டா. ஏன்னா, முதலாளி மேல அளவு கடந்த விசுவாசமா இருப்பா... ஆனாலும், முடிவிலிருந்து பின் வாங்கக் கூடாது...' எண்ண ஓட்டத்திலேயே உறுதியோடு சைக்கிள் பெடலை அழுத்தி மிதித்தான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் வீடு வந்தடைந்தவன், அழகுவைத் தேடினான். தோட்டத்துக் கொட்டகையின் மேற்கூரை புகைந்து கொண்டிருந்தது. அடுப்பிலிருந்த ஈர விறகை ஊதாங்குழலால் ஊதிக்கொண்டே, புகைமூட்டத்தால் கலங்கிய கண்களில் வழிந்த கண்ணீரை புடவை முந்தானையால் துடைத்தபடி கணவனை ஏறிட்டாள்.
''என்னய்யா... ஒரு மாதிரி இருக்கே, ஏதாவது பிரச்னையா,'' மங்கலான புகை மூட்டத்திலும் அவன் முகத்தைப் பார்த்து சரியாகக் கணித்தாள் அழகு.
பதில் ஏதும் சொல்லாமல் பக்கத்தில் அமர்ந்த ரத்தினம், சிறிது நேரம் அவளையே பார்த்தான்; அவன் கண்களும் கலங்க ஆரம்பித்தன.
கலக்கமடைந்த அழகு, ''யோவ்... என்னாச்சுய்யா உனக்கு... என்னன்னு சொல்லுய்யா, வேலைக்கு வேற நேரமாகுது... அடுத்த வாரம் வீட்டை ஒப்படைக்கணும்ன்னு சின்ன முதலாளி கறாரா சொல்லிட்டார். இந்த ஒரு வாரத்துக்கு எல்லாரும் சீக்கிரம் வேலைக்கு வருவாங்க. நீ ஒரு மேஸ்திரி; சீக்கிரம் போக வேணாமா; கிளம்புயா... சாப்பாடு இன்னும் கொஞ்ச நேரத்துல தயாராயிடும்,'' அவளது பேச்சில் முதலாளி மேலிருக்கும் விசுவாசம் தெரிந்தது.

 


இத்தனை விசுவாசமாய் இருக்கும், இவளிடம் எப்படி விஷயத்தை ஆரம்பிப்பது என முதலில் தயங்கியவன், பின் மனதைத் திடப்படுத்தி, மெதுவாக ஆரம்பித்தான்.
''அழகு... நான் சொல்றத பொறுமையாக் கேளு... இப்போ நான் சொல்லப் போற விஷயத்தைக் கேட்டு கோபப்படக் கூடாது,'' என்றான் இழுத்தபடியே.
அதுவரை அலட்சியமாய் அவனைப் பார்த்த அழகு, அடுப்பில் உள்ளதை அப்படியே போட்டுவிட்டு, அவனைத் தரதரவென வீட்டினுள் இழுத்துச் சென்றாள். ''என்னய்யா... பெருசா பீடிகையெல்லாம் போடுற... என்னன்னு சொல்லி தொலையேன்,'' கொப்பளித்த கோவத்தால் வார்த்தைகள் சூடாய் வந்தன.
காலையில் நடந்ததை ஒன்று விடாமல் அழகுவிடம் ஒப்பித்தான். ''அந்தப் புதிய கம்பெனி முதலாளி நமக்கு எல்லா வசதிகளையும் செஞ்சித் தர்றதா சொல்லியிருக்கார்... நான் முடிவு பண்ணிட்டேன், நம்ம முதலாளிக்கு நாம கட்டித் தர்ற கடைசி வீடு இதுவாத்தான் இருக்கும் அழகு. அந்தக் குடும்பத்துக்கு இவ்வளவு வருஷமா உழைச்சது போதும்... கஷ்டப்பட்டு பையனைப் படிக்க வச்சிட்டோம்... இன்னும் கொஞ்ச நாள்ல அவனும் வேலைக்குப் போயிடுவான்... கடைசி காலத்திலாவது கொஞ்சம் நிம்மதியா இருக்கலாமே.''
இதை சற்றும் எதிர்பார்க்காத அழகு, மன வலியுடன் சரிந்து உட்கார்ந்தாள். 'நல்ல மனசு படைச்ச முதலாளி; நல்ல கம்பெனி; உடனே எப்படி வெலக முடியும்...' செய்வதறியாது குழப்பத்திலிருந்தாள் அழகு.
வழக்கமாக வேலைக்குப் புறப்படும் நேரம் நெருங்கியது, வேலைக்குக் கிளம்பாமல் ரத்தினம் இவ்வளவு அலட்சியமாக இதுவரை இருந்ததே இல்லை. அழகுவுக்கு கலக்கம் மேலும் அதிகமானது.
அவ்வேளை... வீட்டினுள் ஏதோ நிழல் தெரிந்து, திரும்பிப் பார்த்த அழகு, அதிர்ச்சியடைந்தாள். இதுவரை வீடு தேடி வராத சின்ன முதலாளி தான் அமைதியாய் நின்றிருந்தார்.

 


''வாங்க எஜமான்... அவருக்கு காலையில இருந்து காய்ச்சல், அதான் வேலைக்குக் கிளம்ப தாமதமாயிடுச்சு. நீங்க காபித்தண்ணி ஏதாச்சும் சாப்பிடறீங்களா,'' பதற்றமாயிருந்த அழகு, கணவனைக் காட்டிக் கொடுக்காமல் பிதற்றினாள். தோட்டத்தில் கிடந்த பழைய மர நாற்காலி ஒன்றைத் துடைத்து எடுத்து வந்து முதலாளியை அமரச் சொல்லி, அமைதியாய் தலைகுனிந்து நின்றான் ரத்தினம்.
''ரத்தினம்... நீ பேசினத எல்லாம் நான் கேட்டுகிட்டு தான் இருந்தேன். திடீரென நீ எடுத்திருக்கும் முடிவு, நான் எதிர்பார்க்காதது. ஏன்னா, ஒரு நல்ல மேஸ்திரிய கம்பெனி இழக்க வேண்டியதா இருக்கும். அத நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு. நான் வயசுல சின்னவன்; இருந்தாலும் உங்கள ஒண்ணே ஒண்ணு வேண்டி கேட்டுக்கறேன். எனக்கு வேண்டப்பட்ட முக்கியமான நண்பர் ஒருத்தருக்கு, கடைசியா உங்க கையால ஒரே ஒரு வீடு கட்டிக் கொடுத்துட்டு, அப்புறம் உங்க இஷ்டப்படி நடந்துக்குங்க,'' என்றார் சின்ன முதலாளி.
''யோவ்... தம்பி தான் சொல்லுதுல்ல, சரின்னு சொல்லுய்யா... ஒரே ஒரு வீடு தானே... அதுவும் முக்கியமான ஒருத்தருக்குன்னு சொல்றாரு.''
பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாய் நின்றிருந்த ரத்தினம், திடீரென சுறுசுறுப்பானான். மூலையில் கிடந்த பழைய பிளாஸ்டிக் ஒயர் கூடை, வேலைக்குத் தேவையான பொருட்களை நிரப்பி, ரத்தினம் அதைக் கையில் எடுத்ததும், அழகேஸ்வரியின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.
''முதலாளி... நீங்க கிளம்புங்க, உங்களுக்கு வேண்டப்பட்டவருக்கு, இவர் கையால தான் வீடு கட்டிக் கொடுப்பாரு... அதுக்கு நான் உத்தரவாதம்,'' சொல்லிக்கொண்டே முதலாளியை வழியனுப்பி வைத்தாள் அழகேஸ்வரி.
ரத்தினம் மிதிவண்டியோடு தயாராய் இருந்தான். சாப்பாட்டுக் கூடையை கையில் எடுத்துக்கொண்டு, பின் சீட்டில் மெதுவாய் ஏறி அமர்ந்தாள் அழகு. ஏதும் பேசாமல் பெடலை மிதிக்க ஆரம்பித்தான் ரத்தினம்.
''ஏன்யா, எதுவுமே பேச மாட்டேங்கறே... மூச்சு இருக்கற வரைக்கும் முதலாளிக்கு விசுவாசமா இருக்கணும்ன்னு நீதானேய்யா அடிக்கடி சொல்லுவே... முதலாளி எந்த அளவுக்கு உம் மேல மரியாதை வச்சுயிருந்தா... முக்கியமான அவரது நண்பருக்கு புது வீடு கட்டித் தர்ற வேலையை உன்னை நம்பி கொடுத்திருப்பார்... உன் முடிவ மாத்திக்கோய்யா.''

 


பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாய் இருந்தான் ரத்தினம். பேசிக்கொண்டே வந்ததில், 'கட்டட சைட்' வந்ததே தெரியவில்லை.
மணி, ஒன்பதை தாண்டி விட்டது... எப்போதும் முதல் ஆளாய், 'சைட்டு'க்கு வரும் ரத்தினம், தாமதமாக வந்ததைக் கண்ட வேலையாட்கள், ஆளாளுக்கு முணுமுணுக்க ஆரம்பித்தனர்.
அடுத்த இரண்டு நாட்களில் வீட்டை ஒப்படைக்கும் நிலையில்... மொசைக் போடுபவர், பிளம்பர், எலக்ட்ரீஷியன், பெயின்டர் என பலரும், அவ்வீட்டை முற்றுகையிட்டு, கடைசி கட்டப் பணியைச் செய்து கொண்டிருந்தனர்.
அவசரமாய் உடையை மாற்றி, பெயின்டர் போட்டிருந்த சாரத் துளைகளை சிமென்ட் கலவையை வைத்து அடைத்துக் கொண்டே வந்தான் ரத்தினம். அப்போது, கட்டடத்தைப் பார்வையிட வந்த பெரிய முதலாளி, ரத்தினத்தைக் கவனித்தார்.
அறுபது வயதைத் தாண்டியும் கை நடுக்கமின்றி கொலுறு பிடிக்கும் நேர்த்தியைப் பார்த்து ரசித்துக் கொண்டே, ''என்ன ரத்தினம்... உங்கிட்டப் பேரன் சொல்லியிருப்பானே... அடுத்த வாரம் புது வீட்டு வேலையை ஆரம்பிக்கணும்... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு விரைவா முடிச்சிக் கொடுத்தா நல்லது; பெரிய முதலாளியே இவ்வளவு இறங்கி வந்து பேசியதைப் பார்த்த வேலையாட்கள், அவரை வியந்து பார்த்தனர்.
அடுத்த இரண்டு நாட்களில், புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை போடப்பட்டது.

 


'கடைசி வீட்டைச் சீக்கிரம் கட்டி முடித்துவிட்டு, கம்பெனியிலிருந்து விரைவாய் விடுபடணும்..' என்ற எண்ணத்தில் வழக்கத்திற்கு மாறாய், தாறுமாறாக அவசர அவசரமாக வேலையைச் செய்தான் ரத்தினம். உடன் வேலை பார்க்கும் ஆட்களுக்கு, அவனது செயல்பாடுகள், ஆச்சரியமாக இருந்தது...
''என்னய்யா இது, வேடிக்கையா இருக்கு... எப்போதும் கட்டு வேலைக்கு, ஒரு மூட்டை சிமென்ட்டுக்கு, 24 பாண்டு மணல் கலக்கணும். அதுபோல பூசு வேலைன்னா, 16 பாண்டு கலக்கணும். மேஸ்திரி என்னான்னா, 30 - 40ன்னு கணக்கில்லாம மணலைக் கலக்கச் சொல்றார். கட்டடம் எப்படிய்யா ஸ்திரமா இருக்கும்.''
''இதுகூடப் பரவாயில்லைய்யா... முதலாளி கொடுத்த பிளானை மீறி இவர் இஷ்டத்துக்கு, பூஜை அறைச் சுவரையொட்டி கழிப்பறையும், குளியலறையும் எழுப்பறார். நம்ம மேஸ்திரி ஏன் தான் இப்படி நடந்துக்கறார்ன்னு புரியலயே!''
''யோவ், உனக்கு சேதி தெரியாதா... நம்ம மேஸ்திரி வேலைய விட்டு நிக்கப் போறாராம்... இந்த வீட்டைக் கட்டி முடிச்சிட்டு, ஒரு புது கம்பனியில சேரப்போறாராம்... முதலாளியும் அதுக்கு சரின்னு சொல்லிட்டு, அவருக்கு வேண்டப்பட்ட ஒருத்தருக்கு, கடைசியா ஒரே ஒரு வீடு கட்டிக் கொடுத்துட்டு போகச் சொல்லிட்டாராம். ரத்தினம் கட்டும் அந்தக் கடைசி வீடு இது தான். அதனால தான், வேண்டா வெறுப்பா அலட்சியமா வேலை செய்யறார்ன்னு தோணுது,'' - சிமென்ட் கலவையை தலையில் சுமந்துகொண்டே, இரண்டு சித்தாள்கள் பேசிக் கொண்டனர்.
கணவரின் அருகே நின்று அதை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்த அழகேஸ்வரியின் காதிலும் அது நன்றாகவே விழுந்து, கணவனை ஏறிட்டாள். அவனோ காதில் விழாதது போல வேலை செய்து கொண்டிருந்தான்.

 


அடுத்த நாள் காலை-
கட்டட வேலையைப் பார்வையிட வந்த சின்ன முதலாளி, ''என்ன ரத்தினம்... வேலையெல்லாம் எப்படிப் போகுது... நீ எதைச் செய்தாலும் சரியாத் தான் செய்வேன்னு, எங்க குடும்பத்துக்கே நல்லாத் தெரியும். இருந்தாலும், நீ கட்டற இந்த வீடு, எனக்கு வேண்டப்பட்டவருக்கு என்பத மட்டும் மறந்துடாத... எவ்வளவு சீக்கிரம் சிறப்பா முடிக்க முடியுமோ முடிச்சிடு,'' என்று கூறி, கட்டடத்தை பார்வையிட்டு, புறப்பட்டார்.
மூன்று மாதத்தில் கட்டட வேலைகள் அனைத்தும் முடிந்தன. பொதுவாகவே, எந்த ஒரு கட்டட வேலை முடிந்தாலும், உழைத்த அனைத்து வேலையாட்களுக்கும், உணவகத்தில் விருந்து கொடுப்பது முதலாளியின் வழக்கம்.
ரத்தினம் கடைசியாகக் கட்டிய வீட்டின் வேலைகள் அனைத்தும் நிறைவு பெற்றதால், வேலையாட்களுக்கு விருந்தளிக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்தார், சின்ன முதலாளி.
'கம்பெனியை விட்டு நிற்கப்போகிறோம்...' என்ற எண்ணத்தில், ஏனோதானோவென வீட்டைக் கட்டி முடித்ததால், விருந்தில் கலந்துகொள்ள ரத்தினத்துக்கு, மனம் ஒப்பவில்லை.
''ஐயா... எனக்கு மனசு சரியில்ல... நீங்க மத்தவங்கள அழைச்சிட்டுப் போங்க... விருந்துக்கு நான் வரலைங்கய்யா,'' என்றான் ரத்தினம்.
''என்ன ரத்தினம் சொல்ற... ஒரே கம்பெனியில வேலை செய்யற கொத்தனார்களைப் பார்ப்பதே அரிதான இந்த காலத்துல, 40 ஆண்டுக்கு முன், ஒரு சித்தாளா எங்க கம்பெனியில சேர்ந்த நீங்க, இன்னக்கி ஒரு முதல் நிலை மேஸ்திரியா உயர்ந்திருக்கீங்கன்னா, அதுக்குக் காரணம், வேலையில் உங்க ஈடுபாடு, விசுவாசம், முக்கியமா, பொருட்களை வீணாக்காம வேலை செய்யும் பக்குவம்... இன்னும் எவ்வளவோ சொல்லலாம்!''
அருகில் நின்றிருந்த அழகு, கணவரைப் பார்த்து முறைத்தபடி, ''யோவ்... உனக்கென்ன புத்தி கித்தி பேதலிச்சிப் போச்சா... ஐயா, இவ்வளவு சொல்றார்... நீ என்னடான்னா,'' சத்தமிட்டாள். அதற்கு மேல் மறு வார்த்தை பேசாமல் அமைதியாய் தலையசைத்து நின்றான் ரத்தினம்.

 


மறுநாள் மாலை, 7:00 மணி-
விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவக வாசலில், வேலையாட்கள் வரத் துவங்கினர்.
'என்னய்யா… இன்னும் நம்ம மேஸ்திரிய காணல...'
'ஆமா... இன்னும் என்னய்யா, நம்ம மேஸ்திரி; காலத்துக்கும் படியளக்குற முதலாளி குடும்பத்துக்கும், தொழிலுக்கும் துரோகம் செஞ்சவன்; எப்படிய்யா விருந்துக்கு வருவான்...'
'என்ன தான் புது கம்பெனியில சேரப்போறதா இருந்தாலும், கடைசியா கட்டி முடிச்ச வீட்டு விஷயத்துல அவன் செஞ்சது, கொஞ்சம் கூட சரியே இல்ல... இவனுக்கெல்லாம் சரியான தண்டனை கிடைக்கும்...'
இதுநாள் வரை ரத்தினத்தின் மேல் மதிப்பும், மரியாதையும் வைத்திருந்த வேலையாட்கள், வாய்க்கு வந்தபடி அவனை, வசைபாடினர்.
சிறிது நேரத்தில், முதலாளிகள் மூவரும் உணவகம் வந்தனர். அதுவரை வாசலின் வெளியே, குற்ற உணர்ச்சியில், ஒரு ஓரமாய் நின்றிருந்த ரத்தினம், தலைகுனிந்தவாறே, அழகுவுடன் உள்ளே வந்தான். விருந்து துவங்கியது.
வழக்கம்போல வீட்டைக் கட்டி முடிக்க பாடுபட்ட அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருந்தார் பெரிய முதலாளி. குறிப்பாக, ரத்தினத்தை வெகுவாகப் புகழ்ந்தார். வேலையாட்கள் நமட்டுச் சிரிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
அப்போது எழுந்த சின்ன முதலாளி, பேச ஆரம்பித்தார், ''நீங்க எல்லாரும் எங்களுக்காக உழைக்கிறீங்க... ஆனா, ரத்தினம் எங்க குடும்பத்துக்காகவே, வாழ்ந்தவர். புதுசு புதுசா வீட்டு வேலை எடுக்கும் போதும், கட்டுமானப் பொருட்கள கொஞ்சம் கூட வீணாக்காம, நாங்க எதிர்பார்த்ததை விட, பல மடங்கு லாபம் சம்பாதிச்சுக் கொடுத்திருக்கார்... ஆனா, அவர் சொந்த விருப்பத்தின் காரணமா நாளையிலிருந்து வேறு ஒரு கம்பெனியில வேலைக்கு சேர இருக்கிறார். அவரது இடத்தை வேறு எவராலும் நிரப்ப இயலாது. வாழ்நாளில் பெரும் பகுதியை எங்களுக்காகவே உழைத்த அவருக்கு, ஏதாவது செய்யணும்ன்னு, தாத்தாகிட்டப் பேசி ஒரு முடிவெடுத்தேன். இந்த வீட்டு வேலை துவங்கியதிலிருந்து நான் அடிக்கடி சொல்லி வந்த, 'எனக்கு ரொம்பவும் வேண்டப்பட்ட நண்பர்... வேறு யாருமல்ல, நம்ம ரத்தினம்' தான். ஆமா, கடைசியா அவரது கையால கட்டின அந்தப் புதிய வீடு, அவருக்காக தான்...''
அதிர்ச்சியில் வாயடைத்து நின்றனர் வேலையாட்கள். அப்போது பெரிய முதலாளி, ரத்தினத்தையும், அழகுவையும் அழைத்து, புதிய வீட்டின் சாவியை அவர்களின் கையில் கொடுத்தார்.

 


'என்னதான் இருந்தாலும் நம்ம ரத்தினம் அதிர்ஷ்டக்காரன்யா... போற நேரத்துல, ஒரு புது வீடு... யாருய்யா கொடுப்பாங்க...' வேலையாட்கள் ஒருமித்தமாக, சொல்லிக்கொண்டே அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அப்போது, பரபரப்பாக அங்குமிங்கும் பலர் ஓடிக்கொண்டிருந்தனர். என்னவென்று விசாரித்தபோது,
'யோவ்... சேதி கேள்விப்பட்டியா... நம்ம ரத்தினம் சேர இருந்த அந்தக் கம்பெனி கட்டிக்கொண்டிருந்த, 10 அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து தரைமட்டமாயிடுச்சாம்... அதுல வேலை பார்த்த பெரும்பாலான வேலைக்காரங்க, இடிபாடுகள்ல சிக்கிச் செத்துப் போயிட்டாங்களாம்... அந்தக் கம்பெனியோட முதலாளியை போலீஸ் கைது பண்ணிட்டாங்களாம்...' பதைபதைப்பாய் வேலையாட்கள் பேசியதைக் கேள்விப்பட்ட ரத்தினம், அதிர்ச்சியானான்.
மறுநாள் காலை விடிந்ததும்-
பெரிய முதலாளியிடமிருந்து மொபைல் போனில் அழைப்பு வந்தது.

 


''ரத்தினம்... நீ எதுக்கும் கவலைப்படாத... புது வீட்டுல பால் காய்ச்சி முடிச்சிட்டு, ஒரு வாரம் ஓய்வெடுத்துட்டு, எப்பவும் போலவே நம்ம கம்பெனிக்கே வேலைக்கு வந்துடு.''
முதலாளி சொன்ன செய்தியை அழகுவிடம் சொல்லி, அவளை அழைத்துக்கொண்டு, புதிய வீட்டிற்குச் சென்றான் ரத்தினம். அவன் முகத்தில் சிறிதும் மகிழ்ச்சி இல்லை.
''உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணிட்டேய்யா... படிச்சிப் படிச்சி சொன்னேன், நீ கேட்கல. நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு தெரியாம, தொழிலுக்கு துரோகம் செஞ்சிட்டே. ஆனா, இப்போ இதே வீட்டுல இருந்து, தினமும் நீ செஞ்ச தவறை எல்லாம் பார்த்துப் பார்த்து, வருத்தப்பட்டு வாழப்போற. அதுதான்யா நீ செஞ்ச தொழில் துரோகத்துக்கு கிடைச்சிருக்கற தண்டனை. பார்க்கறவங்களுக்கு வேணும்னா, இந்தப் புது வீடு கிடைச்சது அதிர்ஷ்டமாத் தெரியலாம். ஆனா, இதுதான் உனக்குக் கிடைச்சிருக்கற தண்டனை. இதுக்கு மேல தண்டனைன்னு ஒண்ணு உனக்கு வேணுமா என்ன?'' திட்டித் தீர்த்தாள் அழகு.
நிதானமாய் வீடு முழுக்கச் சுற்றிப் பார்த்த ரத்தினம். எல்லா இடங்களிலும் வேலையில் செய்த தவறுகளைப் பார்த்துப் பார்த்து, கண் கலங்கினான்.
அழகு சொன்னது போல, காலத்துக்கும் அந்த வீட்டில் வாழப்போவதை விட, அவனுக்கு வேறு தண்டனை வேண்டுமா என்ன!

http://www.dinamalar.com/

  • கருத்துக்கள உறவுகள்

கவலைப்படாதே ரத்தினம்......உந்த வீட்டை வித்துப்போட்டு வேறை ஒன்று வாங்கலாம். அந்த முதலாளி உனக்குத்தான் வீடு என்று முன்பே சொல்லி இருக்கலாம். மனிசி என்று இருந்தால் எப்போதும் தொணதொணப்பும் கூடவே இருக்கும். டோன்ட் வொர்ரி....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.