Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிந்தனை செய் மனமே!

Featured Replies

சிந்தனை செய் மனமே!

 

 
k9

விமான நிலைய லவுஞ்சில் மெதுவாக நடை போட்டுக் கொண்டிருந்த போது தான் அவளைப் பார்த்தான் மூர்த்தி. காயத்ரி மாதிரி இருக்கிறதே?. அவளே தானா? பக்க வாட்டில் அவள் முகத்தைப் பார்த்த போது சந்தேகமாக இருந்தது. டேபிள் ஃபேன் திரும்புவது போல மெதுவாக முகத்தைத் திருப்பினாள். அவள் முகம் பிரகாசமாய்ப் பளிச்சிட்டது. காயத்ரி தான் அவள். செதுக்கிய மாதிரி இருக்கும் அந்த மூக்கும் அளவான நெற்றியும் அவளைத் தவிர வேறு யாருக்கு இருக்க முடியும்? எவ்வளவு நாட்கள் காவிரிக் கரையில் எட்ட நின்று அந்த அழகை ஆராதித்திருக்கிறான்.
அவள் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு நாலு வயது பையன். அவன் உடை வெளி நாட்டு ஸ்டைலில் இருந்தது. முதுகில் "புசு புசு'வென குரங்கு பொம்மை பை தொங்கிக் கொண்டிருந்தது.
"போய்ப் பேசலாமா?' அவனை அறியாமலேயே அவளை நோக்கி நடந்த கால்களுக்கு ஒரு வேகத் தடை போட்டான். அவள் அன்னியப்பட்டுப் போனவுடன் மறுபடியும் அவள் முன் போய் பழைய நினைவுகளைக் கிளறலாமா என்று சஞ்சலித்தான். எதேச்சையாக ஏற்படும் சந்திப்பு தானே இது? பேசாமலே போவது தான் அவளுக்குச் செய்யும் பெரிய துரோகம் என்று தோன்றியது. ஒரு தீர்க்கமான முடிவுடன் அவள் இருக்கும் இடத்துக்குப் போனான். அவள் முன்னால் நிற்க கூச்சப் பட்டு பக்க வாட்டில் நின்றான்.

 


"ஹலோ... நீங்க தப்பா நினச்சுக்கலேன்னா நீங்க காயத்ரிதான்னு நான் நினைக்கலாமா?'' - கொஞ்சம் பவ்வியமாகக் கேட்டான்.
காயத்ரி மூர்த்தியை ஒரு கணம் வித்தியாசமாகப் பார்த்தாள். அப்போது தான் ஆன் செய்த டி.வி மாதிரி அவளுக்குள் அவனுடைய பிம்பம் வர சற்றே நேரமானது. பத்தே செகண்டில் அவளுக்கும் பொறி தட்டியது.பழைய நினைவுகள் மின்னலடித்திருக்க வேண்டும்.
"நீங்க மூர்த்தி தானே?'' என்றாள்.
"ஆமா மூர்த்தி தான். காவிரிக் கரை மூர்த்தி தான்''
காவிரிக்கரை என்றதும் அவள் பிரகாசமடைவாள் என்று அவன் நினைத்தான். எதிர்பார்ப்பு பொய்த்தது. முகத்தில் எந்த மாற்றமும் தெரிய வில்லை.
"காயத்ரி, எப்படி இருக்கே? ஸôரி... எப்படி இருக்கீங்க?''
"நல்லா இருக்கேன் மூர்த்தி. நீ என்னை வா போன்னு ஒருமைலயே கூப்பிடலாம்''
"அது எப்படி?''
"நான் ஒன்னை இப்போ ஒருமைல கூப்பிடல்லியா?''
அவள் அருகே இருந்த சிறுவன் மூர்த்தியையே பார்த்தான். புதியவர்களைப் பார்க்கும் மிரட்சி கண்களில் தெரிந்தது.
"வா... அங்கே உக்காந்து பேசலாம்''- மிகவும் சகஜமாக காலியாக இருக்கும் இருக்கைகளைக் காட்டினாள்.
போய் இருக்கையில் அமர்ந்தான்.தோளில் தொங்கிய லேப் டாப் பையை கீழே வைத்து விட்டு கால்களை நீட்டி சாய்வாக அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான். இதே காயத்ரியுடன் அந்த கிராமத்தில் கவிதையாய் போக்கிய நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன. பால்ய பருவம் முதல் இருந்த உறவு. எவ்வளவு முயன்றாலும் அழிக்க முடியாத தடயங்கள். மனசு கொஞ்சம் பின்னோக்கிப் போனது.

 

 

காவிரிக்கரை ஓரம் இருந்த அந்த கிராமத்தில் காயத்ரியின் அப்பா சந்தானம் ஊர் பெரிய மனிதராக இருந்தார். நிறைய நிலங்கள் இருந்தன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நெற்பயிர்கள். சதுரம் சதுரமாய் பிரித்திருந்த வயல் வெளியில் பச்சை நிறம் படர்ந்திருக்கும். பல் தேய்க்கும் பிரஷ் மாதிரி நாற்றுகள் துருத்திக் கொண்டு நிற்கும்.
காயத்ரி சந்தானத்தின் ஒரே பெண். கிராமத்து தேவதையாக ஊரில் வலம் வந்து கொண்டிருந்தாள். தெய்வீகமான அழகு. பாவாடை தாவணியில் பார்த்தால் பெரியவர்களைக் கூட கையெடுத்துக் கும்பிட வைக்கும். செயற்கையில்லாத வனப்பு முகத்தில் ஒளிரும். பக்கத்தில் இருக்கும் ஒரு சிறிய நகரத்தில் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள்.
கிராமத்து ஜனங்கள் எல்லாம் அவளை தூரத்தில் வைத்தே பார்த்தார்கள். சந்தானம் மீது மரியாதை. அவளின் அழகின் மிரட்டல் வேறு. மூர்த்தி மட்டும் தான் அவளிடம் கொஞ்சம் உரிமையுடன் பழகினான். மூர்த்தி இன்னொரு சிறு நகரத்தில் கல்லூரியில் கடைசி வருடம் படித்து வந்தான். படிப்பு அவனிடம் மண்டி போட்டு அடிமையாக இருந்தது. எந்த விஷயத்தை பற்றிக் கேட்டாலும் "மட மட' வெனப் பேசுவான். அறிவார்ந்த பதில்கள் ஐப்பசி மழை மாதிரி கொட்டும்.
மூர்த்திக்கு அப்பா இல்லை. அம்மா காயத்ரியின் வீட்டில் சமையல் வேலை செய்து வந்தாள். மூன்று நாளைக்கு ஒரு தடவை உடம்பு சரியில்லையென்று படுத்து விடுவாள். அப்படி இருந்தாலும் தட்டுத் தடுமாறி சமையலை முடித்து விடுவாள். 


அம்மாவின் உடல் நிலை, ஏழ்மை எல்லாமாக சேர்ந்து மூர்த்தியின் இளமைக் கால வாழ்க்கையை போராட்டமாக ஆக்கிக் கொண்டிருந்தது. எந்த விதமான கொண்டாட்டங்களும் இல்லை. அம்மா, சந்தானம், காயத்ரி. அவ்வளவு தான் அவன் உலகம். 
காயத்ரியின் அப்பா சந்தானம் தான் அவன் படிப்பு செலவு முழுக்க ஏற்று வந்தார். அம்மா சமையல் வேலையில் இருந்ததால் காயத்ரி வீட்டுக்கு உரிமையுடன் போவான். சந்தானம் முன்னால் மட்டும் போய் நிற்க மாட்டான். எட்ட நின்று அவரை அண்ணாந்து பார்ப்பது தான் பிடித்திருந்தது. 
மாலை நேரங்களில் காவிரிக்கரைக்கு போவான்.மஞ்சள் வெயில் பட்டு காவிரி நீர் அழகாக இருக்கும். காயத்ரியும் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்வாள். அதிகம் பேச மாட்டார்கள். பேசினாலும் கல்லூரியைப் பற்றி... பத்திரிக்கைகளில் படித்த சினிமா செய்திகள் பற்றி என்று பொதுவான விஷயங்களைச் சுற்றித் தான் பேச்சு படரும். வீட்டுக்கு வந்தவுடன் அப்பா சந்தானத்திடம் தாங்கள் பேசிய விஷயங்களை இன்னொரு முறை பேசுவாள் காயத்ரி. மூர்த்தி தூணில் சாய்ந்து கொண்டு கேட்டுக் கொண்டிருப்பான். 

 


ஒரு நாள் மாலை ஐந்து மணி. காயத்ரி வந்தாள். 
"காவிரிக் கரைக்குப் போலாமா?'' என்றாள்.
"மழை வர்ர மாதிரி இருக்கே''
"அதெல்லாம் வராது. ஒன் கிட்டப் பேசணும். வா''
இருவரும் போனார்கள். மூர்த்தி முன்னால் நடந்தான். வாழைத்தோப்பை கடக்கும் போது வாழை இலைகள் முகத்தில் மோதின. சில இலைகள் காற்றின் வேகத்தில் கிழிந்திருந்தன. 
முகத்தில் முட்டிய இலைகளை தூக்கிப் பிடித்து நடந்தான். காயத்ரி கடக்கும் வரை இலைகளைத் தூக்கிப் பிடித்தான்.
"ரொம்ப தாங்க்ஸ்'' என்றாள் காயத்ரி.
"என்ன... புதுசா தாங்க்ஸ் சொல்றே?''
"ஏதோ சொல்லணும்னு தோணிச்சு''.
காவிரிக்கரைக்கு போய் ஒரு மணல் மேட்டில் அமர்ந்தார்கள். எதிரே காவிரி நதி. அரை கிலோ மீட்டர் நீளத்திற்கு அகண்டிருந்தது. முழு அகலத்திற்கும் நீர் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக நீர்த் தீவுகள். தீவுகளை இணைக்கும் மெல்லிய நீர் ரிப்பன்கள்.
சற்று நேரம் காயத்ரி ஒன்றும் பேச வில்லை. கையில் ஒரு குச்சி எடுத்து எதிரே இருக்கும் செடியை அடித்துக் கொண்டிருந்தாள். 
"பேசு'' என்றான் மூர்த்தி.
"கொஞ்சம் பெர்சனல்''
"இங்கே யாரும் இல்லையே.சொல்லு''
"ஆனா நீ இருக்கியே. எப்படி சொல்றது?''


"புரியல்லே''
"எனக்கு ஒன்னைப் பிடிச்சிருக்கு''
மூர்த்தி பதில் பேசவில்லை. காயத்ரியையே பார்த்தான். பிறகு கைகளால் தன் பின்னந்தலையைக் கட்டிக் கொண்டு மணலில் சாய்ந்தான்.
"இதுக்கு என்ன அர்த்தம் காயத்ரி?''
"நான் ஒன்னை விரும்பறேன். ஒன்னோட வாழனும்னு ஆசைப் படறேன்''
"இது தப்பு காயத்ரி''
"என்ன தப்பு?''
"ஒனக்கு இப்படி தோணக் கூடாது காயத்ரி?''
"காயத்ரின்னு இப்படி உரிமையோட கூப்பிடறியே அதனால பிடிக்குது. அப்பாவைத் தவிர வேற யார் என்னை இப்படி கூப்பிடறாங்க?''
"அப்பா' - இந்த வார்த்தையைக் கேட்டதும் மூர்த்திக்கு என்னவோ போல் இருந்தது.
"யாருமே என் கிட்ட வர மாட்டேங்கிறாங்க. உன்னைத் தவிர. நீ என்னோடவே இருந்துடேன் மூர்த்தி''
"இங்கே பாரு. உன் வாழ்க்கை முறை வேற. நான் போற வழி வேற. நான் உங்க வீட்டு சமையல்காரியோட மகன்''
"எனக்கு அது பெரிசா தோணல்லே''
"இது வேணாம் காயத்ரி'' என்று எழுந்து நடந்தான் மூர்த்தி. பின்னலேயே போனாள் காயத்ரி. இப்போது குறுக்கிட்ட வாழை இலைகளை ஒதுக்கி விடக் கூடத் தோன்றவில்லை மூர்த்திக்கு.
வீட்டுக்குப் போனதும் காயத்ரி நேராக உள்ளே போனாள். எப்போதும் மூர்த்தியிடம் பேசியதை எல்லாம் அப்பாவிடம் சொல்லி விடும் அவள் இன்று எதுவும் பேச வில்லை.
மூர்த்தி தன் வீட்டுக்குப் போனான்.


இரண்டு நாட்கள் அவன் காயத்ரி வீட்டிற்குப் போகவில்லை. தவிர்க்க வேண்டும் என்று நினத்தான். மூன்றாவது நாள் எதையோ இழந்த மாதிரி இருந்தது. காயத்ரியின் கவலையான முகம் வந்து வந்து "ஏன் வரல்லே' என்று கேட்டுப் போனது. ஏதோ தோன்றியது. சட்டையை மாட்டிக் கொண்டு காயத்ரி வீட்டுக்கு போனான்.
காயத்ரி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாள். இரண்டே நாளில் முகம் கருத்துப் போன மாதிரி இருந்தது. அவனைக் கண்டதும் "வா'' என்று கூறி விட்டு உள்ளே போனாள்.
மூர்த்தி வாசல் திண்ணையில் அமர்ந்தான். இந்த பிரிவு வலுக்கட்டாயமான பிரிவாக உணர்ந்தான். இந்த அமைதி இருட்டு மாதிரி இருந்தது. 
சிறிது நேரம் கழித்து உள்ளே போனான். 
"காயத்ரி, கொஞ்சம் பேசணும். வாசல் திண்ணைக்கு வா''
வாசல் திண்ணையில் எதிர் எதிரே அமர்ந்தார்கள்.
"காயத்ரி.நீ சொன்னதை நானும் யோசிச்சேன். எனக்கும் ஒன்னை பிடிச்சிருக்கு''
"ரெண்டு நாள் யோசிச்சாத்தான் பிடிக்குமா?'' என்று கோபப் பட்டாள் அவள். அழுகையினூடே வெட்கம் வித்தியாசமாய் இருந்தது.
"நீ சொல்றதுக்கு முன்னாலேயே எனக்கு ஒன்னெ பிடிக்கும். ஆனா... இதுல பல சிக்கல் இருக்கு. அவசரப் பட்டு பலன் இல்லே. காலம் வரும் கொஞ்சம் பொறுப்போம், நமக்கு வயசு இருக்கு''
ஒரு வாரம் கழித்து மூர்த்தியின் அம்மா திடீரென உடம்பு சரியில்லை எனப் படுக்கையில் படுத்தாள். இந்த முறை அவளால் எழுந்து சமைக்க முடியவில்லை. எல்லா அவயங்களும் ஓய்ந்து போய்க் கொண்டிருந்தது. மூர்த்திக்கு முதல் முறையாக அம்மாவைப் பற்றி பயம் வந்தது. 
பத்தே நாட்களில் அம்மா இந்த உலகத்தை விட்டுப் போனாள். மூர்த்திக்கு வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள் முழுக்க நொறுங்கிப் போனது. யாரிடமும் பேசாமல் இருந்தான். வாசல் திண்னையிலேயே சுவரில் தலை சாய்த்து சாய்வான கூரையைப் பார்த்த படி அமர்ந்திருப்பான்.
சந்தானம் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.


மூர்த்தி சடாலென எழுந்தான்.
"பரவாயில்லே. உக்காரு'' என்றார் சந்தானம்.
அவன் எதிர் திண்ணையில் போய் அமர்ந்தான்.
"இனிமே என்ன பண்ணப் போறே மூர்த்தி?''
"தெரியல்லே சார்''
"என் வீட்லயே வந்து இருந்துடேன்''
"வேணாம் சார்''
"ஒங்க அம்மா நம்ம வீட்ல இவ்வளவு நாள் இருந்தாங்க. நான் ஒரு சமையல் காரம்மாவா நினைக்கல்லே. எங்க குடும்பத்துல ஒருத்தரா நினைச்சேன். என் தங்கச்சியா நினைச்சேன். ஒனக்கு இப்போ ஒரு கஷ்டம்னா நான் பாத்துகிட்டு சும்மா இருக்க முடியுமா? நீயும் நம்ம குடும்பத்துல ஒருத்தனா இருந்துடு. போனது ஒங்க அம்மா மட்டும் தான். நம்ம பாசம் பந்தம் இல்லே. இந்த நிலமைல ஒன்னை தனியா தவிக்க விட்டா நான் மனுஷனே இல்லே'' 
பேசப் பேச அவரின் உருவம் அவன் முன்னால் பெரிதாகிக் கொண்டே போனது.
அவர் வீட்டில் அவரைக் கேட்காமல் எதையோ திருடி விட்ட குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.
"நீ மேலே படி. ஒனக்கு படிப்பு நல்லா வருது. நான் செலவு பண்றேன். நீ நிறைய படி. இந்த வீட்லயே இரு. காயத்ரி கல்யாணம் ஆகி புருசன் வீட்டுக்கு போயிட்டாலும் நீ இங்கேயே இரு''


"சார்'' என்று கை கூப்பினான் மூர்த்தி.
"சார் வேணாம். அப்பான்னு கூப்பிடு''
அந்த கணமே மூர்த்தி மனதளவில் செத்துப் போனான். அந்த புண்ணிய ஆத்மா முன்னால் ஒரு துரோகி மாதிரி உணர்ந்தான். அவன் நினைவிலிருந்து காயத்ரி ஒரு புகையாய் மறைந்து போனாள்.
"நான் மேலே படிக்கறேன் சார். ஆனா முதல்லே திருச்சி போயி ஒரு வேலை தேடிக்கிறேன். வேலைக்கு போயிகிட்டே பார்ட் டைமா மேல படிக்கிறேன்''
சொன்னபடியே திருச்சியில் ஒரு வேலை தேடிக் கொண்டான்.
ஊரை விட்டுப் போகும் போது காயத்ரி அழுதாள்.
"காயத்ரி. ஒங்க அப்பா ஒரு கடவுள் மாதிரி. கடவுளுக்கு துரோகம் செய்யற அளவுக்கு நான் கிராதகன் இல்லே. நீ பழசை எல்லாம் மறந்துடு. இதெல்லாம் ஒரு மேகம் மாதிரி. பெரிய காத்து அடிச்சா கலைஞ்சிடும். சந்தோஷமாயிரு. நான் எங்கே இருந்தாலும் நல்லா இருப்பேன். நீ நல்லா இருக்கணும்னு நெனப்பேன்''
காயத்ரி அப்பாவுக்குத் தெரியாமல் அழுதாள். மை கரைந்து கன்னத்தில் கோடு போட்டது.
"வர்ரேன் காயத்ரி'' என்று சென்றான் மூர்த்தி.

 

பழைய நினைவுகள் இவ்வளவு கோர்வையாய் வரவில்லை. ஆனால் எல்லாமே ஒன்று விடாமல் வந்தன. மூர்த்திக்கு கண்கள் ஓரம் லேசாக ஈரமானது. விமான நிலையத்தில் போர்டிங் பற்றி ஒலி பெருக்கியில் சொன்னார்கள். அவர்களுடைய விமானம் இல்லை.
"சொல்லு காயத்ரி. நான் போனதக்கு அப்புறம் நிறைய நடந்திருச்சு இல்லே?''
"ஆமா. நெறைய்ய'' என்றாள் காயத்ரி.
"ஒன் பையன் அழகா இருக்கான். அப்படியே'' தயங்கினான் மூர்த்தி.
"சொல்லு. என்னை மாதிரியே அப்படின்னு சொல்ல வர்ரே. என் மாதிரி இல்லே. அவர் மாதிரி. அவர் ரொம்ப ஸ்மார்ட்டா இருப்பாரு''
"பையன் பேர் என்ன?''
"மூர்த்தின்னு நெனைக்காதே. சச்சின். நான் ஏன் இப்படி பேசறேன்னு நெனைக்கிறியா? நான் ஒன்னெ இப்போ நெனைக்கல்லே. அது தான்''
"தட்ஸ் குட்'' என்றவன் சலனம் இல்லாமல் நின்றான்.
காயத்ரி தொடர்ந்தாள்.


"உன்னை நான் விரும்பினப்ப உன்னை மனப்பூர்வமா நெனைச்சேன். அது சத்தியம். அதே மாதிரி நீ என்னே மறந்துடுன்னு சொன்ன உடனேயும் மனசார மறந்துட்டேன். கொஞ்ச நாள் கஷ்டப்பட்டேன் தான். மறுக்கல்லே. ஆனா இது ஒனக்கு நான் கொடுத்த மரியாதை மட்டும் இல்லே. நீ தெய்வமா நெனைச்ச என் அப்பாவுக்கும் கொடுத்த மரியாதை. எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணாங்க. நல்ல இடம். இது நாள் வரைக்கும் உன்னைப் பத்தி நான் அவர் கிட்டே சொல்லல்லே. சொல்ல மாட்டேன். சொல்றதுக்கு ஒண்ணும் இல்லே. நாமளா பழகினோம். நாமளா விலகினோம்''
கூறி விட்டு மகனைப் பார்த்தாள். மகன் இவர்கள் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ தோன்றியது அவளுக்கு.
"இந்தா, இந்த ஐ பேட்ல விளையாடிகிட்டு இரு. அம்மாவை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது'' என்றாள்.
"நாங்க இப்போ அமெரிக்காவுல இருக்கோம். க்ரீன் கார்டு வந்தாச்சு. அவர் பெரிய பிசினஸ் பண்ணிகிட்டு இருக்காரு''
"சந்தோஷம்'' - காயத்ரி என்று பேர் சொல்லி அழைக்க இப்போது தயக்கமாக இருந்தது.
"நீ நல்லவன் மூர்த்தி. ஒன் மேல எனக்கு எந்த வருத்தமும் இல்லே. நீ என்னை விட்டு போனப்ப வருத்தமும் கோபமும் வந்தது. ஆனா யோசிச்சுப் பத்தா நீ என்னெ ஏமாத்திட்டுப் போகல்லேன்னு புரிஞ்சது. நீ நல்லவனாப் போனே. அதே மாதிரி நானும் நல்லவளா இருக்கணும் இல்லையா. அதான் மாறிட்டேன்''
"என்னெப் பத்தி புரிஞ்சிக்கிட்டதுக்கு பெருமைப்படறேன்'' என்றான் மூர்த்தி
"சொல்லு. நீ இப்போ என்ன பண்றே?'' கேட்டாள் காயத்ரி.


"ம்ம்ம்...' "யோசித்தவன் நல்லா இருக்கேன். டில்லில மத்திய சர்க்கார்ல பெரிய எடத்துல இருக்கேன்''
"அப்படியா?'' அவள் சந்தோஷத்தில் பொய் கலப்பில்லாத உண்மை தெரிந்தது.
"திருச்சில வேலைக்கு போயிகிட்டே போஸ்ட் கிராஜுவேட் பண்ணேன். அப்புறம் ஐ.ஏ.எஸ் டிரை பண்ணேன். ஆல் இண்டியாவுல முதல் பத்து ரேங்க்ல பாஸ் பண்ணேன்''
"நீ இப்படி எல்லாம் வருவேன்னு எனக்கு தெரியும். லேசுப்பட்ட புத்திசாலியா நீ?''
"நிறைய ஊர்ல போஸ்டிங் போட்டதக்கு அப்புறம் இப்போ டில்லில ஒரு சீனியர் போஸ்டிங்''
"ஒன் ஃபேமிலி எங்கே?''
"எனக்கு ஃபேமிலி இல்லே''
"என்ன சொல்றே? கல்யாணம் பண்ணிக்கலியா?''
"இல்லே. வேணாம்னு தோணினது''
"ஏன்?''


"ஒன்னை வேணாம்னு சொல்லிட்டு வந்தது தர்மப்படி நியாயமா பட்டாலும் உள்ளுக்குள்ளே இருக்கற சராசரி மனசு அதை ஏத்துக்கல்லே. ஒன் நினைவுகள் அடிக்கடி வந்துகிட்டே இருக்கும். மறக்க முடியல்லே. நீ வேணாம். ஒன்னோட வாழற வாழ்க்கை வேணாம்னு தான் பிரிஞ்சேன். ஆனா ஒன் நினைவுகள் மட்டும் வேணும்னு தோன்னது. நானா உன்னை வெறுத்துப் பிரியல்லே. உன் அப்பாவுக்கு துரோகம் செய்ய முடியாம மௌனமானேன். ஆனா என் மனசு விழுந்து துடிச்சுகிட்டே தான் இருந்தது.''
"நீ பைத்தியமா?''
"நான் இப்படியே இருந்துடறேனே. ஒனக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லே. ஒன்னெ பத்தி விகல்பமா நினைக்கல்லே. ஒரு உயரமான ஸ்தானத்துல ஒன்னை வெச்சு நினைக்கிறேன். அவ்வளவு தான்''
கூறி விட்டு மெதுவாக எழுந்தான். நினைவுகளில் கொஞ்சம் ப்ரேக் வேண்டும் போல இருந்தது. சின்ன சின்ன அடிகளில் நடை போட்டு விட்டு மீண்டும் வந்தான்.
"நீ செய்றது சரியில்லே மூர்த்தி''
"ஏன்?''
"காரணம் இருக்கு . சொல்றேன். உன் கிட்டே ஒரு கேள்வி''
"கேளு''
"நீ சுய நலக் காரனா... இல்லே பொது நலக் காரனா?''
"என்ன இப்படி கேக்கறே? என் பதவியைக் கூட நான் மக்கள் சேவைக்குத் தான் பயன் படுத்தறேன்''


"இல்லே. நீ ஒரு சுயநலக் காரன்''
"புரியல்லே''
"நீ ஒரு புத்திசாலி. மத்தவங்க எல்லாம் பக்கத்துல வர முடியாத அளவுக்கு அறிவு ஜீவி. அநியாயத்துக்கு நல்லவனா வேற இருக்கே. இந்த உலகத்துல நல்ல கணவன் அமையணும்னு ஒவ்வொரு பொண்ணும் எவ்வளவு ஏங்கறா தெரியுமா? யாரோ ஒரு பொண்ணுக்கு நல்ல கணவனா நீ அமையப் போறதை நீ எப்படி தடுக்கலாம். உனக்காக எவளோ ஒருத்தி பொறந்து இந்த மாதிரி ஒரு கணவன் வேணும்னு தினம் கோவில் கோவிலா வேண்டிகிட்டு இருக்கலாம். ஒரு பொண்ணுக்கு நல்ல கணவன் அமையறதை நீ தடுக்கறே. அந்த முகம் தெரியாத பொண்னொட எதிர்காலத்தை தடுக்க உனக்கு உரிமை இல்லே. இப்போ சொல்லு. நீ சுயநல வாதியா.பொது நல வாதியா?''
"இல்லே.நான் வந்து''


"நீ பேசாதே. உன் அறிவைப் பாத்து நான் எவ்வளவு நாள் வியந்து போயிருக்கேன் தெரியுமா? உன் ரத்தத்துல இன்டெலிஜென்ஸ் இயற்கையா ஓடுது. இப்போ இருக்கற சூழ்நிலைல இன்னும் அறிவு கூடியிருக்கும். ஒனக்கு பொறக்கப் போற குழந்தை எவ்வளவு புத்திசாலியா இருக்கும். யோசிச்சுப் பாத்தியா? உன்னை விட பல மடங்கு மேல இருக்கும். அப்படிப்பட்ட ஒரு ஜீவன் இந்த உலகத்துக்கு வர்ரதை நீ எப்படி தடுக்கலாம். நீ இப்போ பண்றது தான் முட்டாள் தனம். அறிவை உபயோகி. உன் உடம்புல இருக்கற ஜீன் உன்னோட அழிஞ்சு போயிடக் கூடாது. போ. இந்த உலகத்துக்கு அறிவாளிகளைக் கொடு'' கூறி விட்டு பையனை இழுத்துக் கொண்டு வேக வேகமாக வேறு இருக்கை தேடிப் போனாள்.
மூர்த்தி செயலற்று நின்றான்.
காயத்ரியை விமானத்தில் ஏறச் சொல்லி ஒலி பெருக்கி அழைத்தது. காயத்ரி நகர்ந்தாள்.
பின்னாலேயே ஓடினான் மூர்த்தி.
"காயத்ரி.ஒன் மெயில் ஐ டி கொஞ்சம் கொடேன்'' என்றான்
"எதுக்கு?''
"கூடிய சீக்கிரம் கல்யாணப் பத்திரிக்கை அனுப்புறேன்''

http://www.dinamani.com

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.