Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சூரியன்; ஒரு சந்திரன்; ஒரேயொரு சிவாஜி!

Featured Replies

ஒரு சூரியன்; ஒரு சந்திரன்; ஒரேயொரு சிவாஜி!


 

 

sivaji-ninaivu-naal

 

 

நடிகர்திலகம் சிவாஜியின் நினைவு நாள் இன்று! 

பல்லாயிரக்கணக்கான நடிகர்கள் கொண்ட தமிழ் சினிமா உலகில், 1952ம் ஆண்டுக்கு முன்பு எப்படியோ... ஆனால் அதற்குப் பிறகு, ஒரேயொருவர் பேசிய வசனங்களைக் கொண்டும் நடையைக் கொண்டும் முகபாவங்களைக் கொண்டும் நடிக்க சான்ஸ் கேட்டு வந்தார்கள் எல்லோரும். ‘எங்கே நடிச்சுக் காட்டு’ என்று சொன்னால், உடனே ஒவ்வொரும் அப்படியாகவே ஆசைப்பட்டு, உணர்ந்து, உள்வாங்கி நடித்தார்கள். சான்ஸ் கிடைத்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அந்த ஒரேயொரு நடிகர்... ஒரேயொரு சாய்ஸ்... நடிகர்திலகம் சிவாஜிகணேசன்.

 

சினிமாவிலும் சரி... வாழ்க்கையிலும் சரி... யாராவது கொஞ்சம் நடித்துவிட்டால்... ‘பெரிய சிவாஜிகணேசன்னு நெனைப்பு’ என்றுதான் சொல்லுவார்கள்; சொல்லுவோம்.

சிவாஜியை ஓவர் ஆக்டிங் என்று சொன்னவர்கள் கூட, நடிப்புக்கான முகவரியாக, நடிப்பின் கூகுளாக, நடிப்பின் டிக்‌ஷனரியாக சிவாஜியைத்தான் உதாரணம் சொல்லுவார்கள்.

சிகரம், இமயம், திலகம் என்று எதைச் சொன்னாலும் கட்டுக்குள் வராத பிரமாண்ட நாயகன் சிவாஜிகணேசன். கிட்டப்பாக்கள், சின்னப்பாக்கள், பாகவதர்கள் எனும் காலத்துக்குப் பிறகு, ஒரு நடிகருக்கு முதல் தேவை உடல்மொழி என்கிற பாடிலாங்வேஜ் என்பதை, படத்துக்குப் படம், காட்சிக்குக் காட்சி நிரூபித்து உணர்த்திய உன்னதக் கலைஞன் சிவாஜி என்பதை வரலாறு சொல்கிறது.

போடாத வேஷமில்லை. ஏழை, பணக்காரன், காதலன், கணவன், ராஜா, மந்திரி, புலவர், அப்பாவி என்று சாதாரணமாகப் பட்டியலிட்டுவிடமுடியாது. ஏழை என்றால் எதுமாதிரியான ஏழை. ஒவ்வொரு விதமான ஏழைக்கென, உடல்மொழியையே உடையாக மனதில் தைத்துப் போட்டுக்கொள்ளும் மகாகலைஞன். பணக்காரன் என்றால், கர்வமான பணக்காரனா, குடிகார பணக்காரனா, அன்பான பணக்காரனா... அதற்குத் தகுந்தமாதிரி, சிவாஜி எனும் ஐந்தடி உயரக்காரர், ஆள்மாற்றுகிற ரசவாதமெல்லாம் இந்தியதுணைகண்டம் வரை தேடினாலும் கிடைக்காதது!

பார்மகளே பார் படத்திலும் பணக்கார சிவாஜிதான். உயர்ந்த மனிதனிலும் அப்படித்தான். வசந்தமாளிகையிலும் ஒருவித பணக்காரர்தான். அவன்தான் மனிதன் பணக்காரனும் வேறுவகைதான். ஆனால், ஒரு பணக்காரக் கேரக்டரை இன்னொரு பணக்காரத்தனத்துக்குள் புகுத்தமாட்டார் என்பதுதான், சிவாஜியின் தனி ஸ்டைல்.

எந்நேரமும் போதையில் இருப்பது மாதிரியே இருப்பார், வசந்தமாளிகையில். எப்போதும் அன்பு கலந்த அப்பாவித்தனத்துடன் இருப்பார் படிக்காத மேதை ரங்கன். உள்ளம் என்பது ஆமைக்கு ஒருவிதமாக நடப்பார். ஆறுமனமே ஆறு பாடலுக்கு வேறுவிதமாக நடப்பார். மாதவிப் பொன்மயிலாள் பாட்டுக்கு தனி ராஜநடை. திருவிளையாடலில் கடற்கரையில் நடக்கும் போது அதுவொரு ஸ்பெஷல் நடை.

தெய்வமகனில் மாடிப்படி ஏறுவார். திரிசூலத்திலும் மாடிப்படி ஏறுவார். அங்கே ஒருவிதம்.. .இங்கே ஒரு ஸ்டைல் நடை. இப்படி தமிழ் சினிமாவில், இவரின் நடை, பார்வை, பேச்சு, உடல்மொழி என்று எத்தனையெத்தனை ஸ்டைல்கள். நடிப்பில் மட்டுமல்ல... சிவாஜியின் நடையைக் கூட மிஞ்ச எவருமில்லை.

பச்சை விளக்கு அண்ணன், பாசமலர் அண்ணன், அன்புக்கரங்கள் அண்ணன், அண்ணன் ஒருகோவில் அண்ணன், நான் வாழ வைப்பேன் அண்ணன். ஆனால் அண்ணன் எனும் கேரக்டரும் சிவாஜியும்தான் ஒன்று. ஆனால் ஒவ்வொருவிதமான அண்ணன்களைக் காணலாம் அங்கே. அப்படியான மாற்றங்களைச் செய்ய, இனி நூறு சிவாஜி பிறந்தால்தான் உண்டு.

பீம்சிங் சிவாஜியை ரசித்த காதலன். இவரின் பா வரிசைப் படங்கள் ஒவ்வொன்றிலும் அடிதூள்கிளப்பியிருப்பார். பி.ஆர்.பந்துலு. வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்ட கட்டபொம்மனையே பிழைக்கவைத்து, சிவாஜி வழியே உலவவிட்டவர். வ.உ.சியை, பாரதியை, பகத்சிங்கை, கொடிகாத்த குமரனை அவ்வளவு ஏன்... சாட்ஷாத் சிவபெருமானையே நம் கண்ணுக்கு முன்னே நிறுத்தி, நடிப்பின் மூலம் சந்தோஷ, உற்சாக வரங்களைத் தந்த உன்னதக் கலைஞன் சிவாஜிகணேசன்.

சினிமாவை, காமெடிப் படம் என்று பிரிக்கலாம். குடும்பப்படம் என்றும் காதல் படம் என்றும் ராஜா காலத்துப் படம் என்றும் புராணப் படம் என்றும் பழிவாங்கும் படம் என்றும் பாசத்தை உணர்த்தும் படம் என்றும் பிரிக்கலாம். இந்தப் பிரிவுகள் அனைத்திலும் சிவாஜி நடித்திருக்கிறார். அவர் நடித்ததாலேயே அது சிவாஜிபடமாயிற்று!

பீம்சிங், பந்துலு, ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், ஏ.சி.திருலோகசந்தர், சி.வி.ராஜேந்திரன், பி.மாதவன், டி.யோகானந்த் என்று சிவாஜியை திரையில் விளையாடவிட்டு, ரசித்த இயக்குநர்கள் பட்டியல் ஏராளம். அவரின் அதகளமும் ஆட்டமும் கண்டு பிரமித்துப் போனவர்கள் லட்சக்கணக்கான ரசிகர்கள்!

நாகஸ்வரக் கலைஞனாகவும் நடிப்பார். மிருதங்க வித்வானாகவும் பொளந்துகட்டுவார். எப்படி வாசிக்கவேண்டும் என்பதை பியானோ ஸ்பெஷலிஸ்ட், இவரின் புதியபறவை பார்த்துதான் வாசிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறாரோ என்று தோன்றும்.

முதல்மரியாதை சிவாஜியும் தேவர்மகன் சிவாஜியும் வேற லெவல். வேற ரகம்.

ஒரு சூரியன், ஒரு சந்திரன் போல ஒரு சிவாஜிதான். ஒரேயொரு சிவாஜிதான். அந்த மகா கலைஞனின் நினைவு நாள் இன்று (21.7.18). நடிப்புச் சக்கரவர்த்தியைப் போற்றுவோம்.

நீங்களும் நானும் போனாலும் சிவாஜி, வரம் பெற்ற கலைஞன். சாகா வரம் பெற்ற கலைஞன்.

நெஞ்சிருக்கும் வரை... அவரின் நினைவிருக்கும். அடுத்தடுத்த தலைமுறையிலும் தவப்புதல்வனெனத் திகழ்வான்... தன்னிகரில்லா கலைஞன்!

https://www.kamadenu.in/news/cinema/4190-sivaji-ninaivu-naal.html?utm_source=site&utm_medium=TTH_slider_banner&utm_campaign=TTH_slider_banner

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜியின் குணசித்திரத்தை விடுங்கள், நகைச்சுவையாக நடித்த கலாட்டா கல்யாணம், அஞ்சல் பெட்டி 520 போன்றவை மறக்க முடியுமா....!  tw_blush:

  • தொடங்கியவர்

 

 

  • தொடங்கியவர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு அஞ்சலி 

 

 
 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினமான இன்று அவரது உருவ சிலைக்கு, நடிகர் சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.

56324134.jpg

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், தலைவர் நாசர்  மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.உதயா, மனோபாலா, அயுப்கான் மற்றும்  பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்திலுள்ள அவரது உருவ சிலைக்கு  மரியாதை செலுத்தினார்கள்.

siva.jpg

http://www.virakesari.lk/article/37022

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: சிவாஜி கணேசன்- இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம்!

 

 
Sivajiganesan

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அவர்களது ரசிகர்கள் அவரைப் பற்றிய பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

jayachandhiran

 

‏ஆஸ்கர் கதவை முதலில் தட்டிய தெய்வமகன் 

அடையாறு ஆலயத்தில் கொலுவிருக்கிறார்.

சிவாஜி நினைவு தினம் இன்று... அவர் சிலைக்கு  ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு, நடிகர் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

Palkalaichelvar

‏நாமறிந்த நடிகரிலே நனிசிறந்த நாடகத்தான்!

பூமலரும் புயற்றிறமும் பொருந்திவரும் பொற்றமிழன்!

நாமலரு நயத்தமிழால் நறும்புலவர் நச்சுபவன்!

தீமொழியுந் திறவிழியால் தெரிநூறாய்த் திடவுணர்வே!

                   - நடிகர் திலகம் மறைந்தபோது பாடியது

inemakkaran Bhaboos

‏ஒரு நிலவு  ஒரு சூரியன் ஒரே நடிகர். வையகம் உள்ளவரை வாழும் அவர்தம் புகழ்!!!!!

akshmanan Ka

‏தெரியல...அவர் இறந்து விட்டார் என்பதை நம்ப மறுக்கிறது மனம். அவரின் படங்களைப் பார்க்கும்போது...

அவந்திகா தேவி 

‏நீங்கள் நடந்தால் நடை அழகு

நீங்கள் சிரித்தால் சிரிப்பழகு

நீங்கள் பேசும் தமிழ் அழகு

நீங்கள் ஒருவர் தான் அழகு

#சிவாஜி கணேசன்

Surjith Lawrence

‏ ஜூலை 21...நடிப்புப் பல்கலைகழகம்..நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் நினைவு தினம்..

Kallipattan கார்த்தி

‏நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு நினைவு அஞ்சலிகள்.

அ.மகேஸ்வரன்

‏கலைஞரின் பராசக்தி!

நடிப்பு சக்கரவர்த்தி!

நடிகர் திலகம்! செவாலியர் சிவாஜி கணேசனின் நினைவு தினம் இன்று!

தமிழகம் ஒரு நல்ல நடிகரை, நல்ல மனிதரை இழந்த தினம்.

அவந்திகா தேவி   

‏கர்ணன்

சிவபெருமான்

வீரபாண்டியகட்டபொம்மன்

மராத்தியசிவாஜி

பாரதியார்

வ.உ.சிதம்பரனார்

பகத்சிங்

இவர்கள் யாரையுமே நாம் நேரில் பார்த்ததில்லை

இப்படித்தான் இவர்கள் இருந்திருப்பார்கள் என உறுதியாக நம்மை மகிழ வைத்த "கலைத்தாயின் ஏகப் புதல்வன் சிவாஜி கணேசன் நினைவு நாளில்" அவர் பாதம் வணங்குவோம்

SwTRascal Ilavarasan

‏ஜூலை 21: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் இன்று..

இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்தின் நினைவுநாள் இன்று...

director SELVAM KARUPPIAH

‏திரையுலகப் பல்கலைக்கழகம் என போற்றப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்...

https://twitter.com/kanapraba/status/1020518029015171072 https://tamil.thehindu.com/opinion/blogs/article24481901.ece?utm_source=HP&utm_medium=hp-online

https://twitter.com/kanapraba/status/1020518029015171072

  • தொடங்கியவர்

சக்கரவர்த்தி சிவாஜி!

 

 
sivajijpg

கலைத்தாயின் தவப்புதல்வன் என்பார்கள் சிவாஜி கணேசனை! அந்தக் கலைத்தாயின் இன்னொரு அவதாரமே சிவாஜி கணேசன் என்பாரும் உண்டு. சினிமா உலகில், அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரம் கொண்டு விருந்தே படைத்துவிட்டார் நடிகர் திலகம்.

சத்ரபதி வீர சிவாஜியாக நாடகம் ஒன்றில் நடித்தார். அந்த வேடத்தில் நடித்த வி.சி.கணேசனைக் கண்டு வியந்து போன தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அன்றில் இருந்து கணேசன், சிவாஜி கணேசன் ஆனார். அதுவே காலம் சொல்லும் பெயரானது! இதைத்தவிர, நடிகர் திலகம் என்று சொல்வதெல்லாம் ‘சிவாஜி’க்குக் கிடைத்த போனஸ்.

       
 

வேடம் பார்ப்பதில்லை. வேடத்தில் பேதம் பார்ப்பதில்லை. நடிகர் திலகம் முதன்முதலில் போட்டது பெண் வேடம். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!

1952-ம் ஆண்டு. நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!

முக்கியமாக, ஏவி.மெய்யப்பச் செட்டியாரே, ‘இந்தப் பையன் வேணாமே’ என்றார். ஆனால் பெருமாள் முதலியார் அதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை. சிவாஜி மீது சிவாஜி வைத்த நம்பிக்கையை விட, சிவாஜி மீது பெருமாள் முதலியாருக்கு அப்படியொரு நம்பிக்கை!

s2jpg
 

சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமை... சினிமா டிக்‌ஷனரி... இந்த மூன்றுக்குமாக இதுவரை சிவாஜி கணேசன் பெயரைத்தான் காட்டிக்கொண்டிருக்கிறது. எல்லோரும் இன்னமும் இவரைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சின்சியாரிட்டி இருக்குமிடத்தில் ஆத்மார்த்தம் வந்துவிடும். ஒழுங்கு இருக்கும் போது, மிகுந்த லயிப்புத்தன்மையும் வந்துவிடும். நேரந்தவறாமையுடன் இருந்துவிட்டால், காலம் வாரியணைத்துக்கொள்ளும். இவற்றுக்கு உதாரணம்... சிவாஜி!

ஏழரை மணிக்கு ஷூட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷூட்டிங்குக்குச் சென்றது இல்லை!

கருணாநிதியை 'மூனா கானா' என்றுதான் அழைப்பார். எம்.ஜி.ஆரை 'அண்ணன்'என்றுதான் கூப்பிடுவார். நெருங்கியவர்கள் அழைப்பது போல, ஜெயலலிதாவை 'அம்மு' என்று கூப்பிடுவார். இப்படித்தான், ஒவ்வொருவருக்கும் அழகாய் பெயர் வைத்துக் கூப்பிடுவது அவர் ஸ்டைல். அப்போது ஸ்டில் போட்டோகிராபராக இருந்த திருச்சி அருணாசலத்தை ஆனாரூனா என்று அழைத்தார். அப்படியே எல்லோரும் கூப்பிடத் தொடங்கினார்கள்.

s3jpg
 

வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் முதலான சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி.

தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பெருமாள் முதலியார் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி.

இன்னொரு பக்கம் பக்தியிலும் முழு ஈடுபாடு காட்டிவந்தார்.

திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!

வீட்டு வாசலில் பிள்ளையார் கோயில் கட்டியிருக்கிறார். அந்தப் பிள்ளையாருக்கு தினமும் இன்றுவரை பூஜைகள் செம்மையாக நடக்கின்றன.

ssjpg
 

நடிகை மனோரமாவின் வீடு, சிவாஜி வீட்டுக்கு அருகில்தான் இருக்கிறது. மனோரமா வீட்டில் இருந்து எந்தப் பக்கம் சென்றாலும் முதலில் சிவாஜி வீட்டு வாசலில் உள்ள பிள்ளையாரை வணங்கிவிட்டுத்தான் செல்வார். அந்தப் பிள்ளையார் மீதும் சிவாஜி கணேசன் மீதும் அப்படியொரு பிணைப்பு; பந்தம்.

அதற்கொரு முக்கியமான காரணமும் உண்டு. மனோரமாவின் அம்மா இறந்தபோது, உடனிருந்து ஆறுதல் சொல்லி, எல்லா ஏற்பாடுகளையும் செய்ததுடன், மனோரமாவின் சகோதர ஸ்தானத்தில் நின்று, ஈமக்காரியங்கள் உட்பட அனைத்தையும் செய்தார் சிவாஜி.

ஆச்சி மனோரமாவுக்கும் சிவாஜிக்குமான அண்ணன் தங்கை பாசம் போலவே, லதாமங்கேஷ்கருக்கும் சிவாஜிக்கும் எந்த ஜென்மத்து பந்தமோ... சிவாஜியின் பெயரைச் சொன்னாலே, அண்ணா என உருகிவிடுவார் லதாமங்கேஷ்கர் என்கிறார்கள்.

சிவாஜி இறந்தபோது, ஓடோடி வந்த லதாமங்கேஷ்கர், ’சென்னைக்கு வந்தா எங்கியும் தங்கக்கூடாது. இங்கே உன் அண்ணன் வீடு இருக்குன்னு பிரியமா சொல்லுவீங்களேண்ணா’ என்று கதறியழுதார்.

தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜி கணேசனுக்குத்தான் என்பார்கள். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி'

sivaji1jpg

சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது! இன்றைக்கும் அவரின் வீட்டில் பத்திரமாக இருக்கிறது.

சிவாஜியின் அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜியின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துக் கொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!

ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள். அந்தநாளில், சூரக்கோட்டையே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. எல்லோரிடமும் சிகரெட் பிடித்தபடியே பேசுகிற சிவாஜி, இரண்டுபேருக்கு முன்னே சிகரெட் பிடிக்கமாட்டார். அவர்கள்... 'பராசக்தி' படத்தின் இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு .

படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார். தேவையில்லாமல், இயக்குநரின் வேலையிலோ, நடிகரின் தனித்துவத்திலோ மூக்கை நுழைக்கமாட்டார்.

காலம், இன்றைக்கும் தன் நினைவுப்பெட்டகத்தில் சிவாஜியைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது. அப்பேர்ப்பட்ட பெருமைக்கு உரிய சிவாஜிக்கு, கடிகாரங்கள் என்றால் அப்படியொரு ஆசை. விதவிதமான கடிகாரங்களை எங்கு போனாலும் வாங்கிவிடுவார். ஸ்டைலாக அணிந்துகொள்வார். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கி வைத்திருந்தார்!

ss1jpg
 

அம்மாவின் மீது அளப்பரிய அன்பு. வீட்டின் பெயர் அன்னை இல்லம். தன் தாய் ராஜாமணி அம்மாளுக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறைவேறவே இல்லை! நாம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான்!

பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னார். உடனே பதறிப் போய் மறுத்த சிவாஜி, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக! தவிர, பாலையா அண்ணன், எம்.ஆர்.ராதா அண்ணன் என்று யாரிடம் பேசினாலும் மரியாதையுடன் சொல்வது சிவாஜியின் வழக்கம்.

நன்றி, மரியாதை, தன்னடக்கம்... இவற்றில் ஒருபோதும் நடித்ததே இல்லை நடிகர் திலகம்!

சிவாஜியின் நினைவு நாள் இன்று (21.7.18). எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கும் சிவாஜி கணேசனை, இப்போதும் நினைப்போம்!

https://tamil.thehindu.com/opinion/blogs/article24481594.ece?utm_source=HP&utm_medium=hp-online

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.