Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவ மனசு அப்படி!

Featured Replies

 
 
 
 
 
 
 
 
அவ மனசு அப்படி!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
E_1532062383.jpeg
 

புயலுக்குப் பின் அமைதி என்பார்களே... அப்படி இருந்தது வீடு. மேஜை மேல் இருக்கும் டிபன் பாக்சையும், குடையையும் எடுத்துக் கொண்டு விருட்டென்று கிளம்பினாள், சாதனா.
உடம்பெல்லாம் ஆத்திரத்தில் அதிர, அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான் விவேக். 'இவளை என்ன செய்தால் தகும்' என்பது மாதிரி அவன் மனசு தகித்துக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் அவளை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டான்.
எதிர்த்து பேசாதது, பெரியவர்களுக்கு மரியாதை தருவது, என்ன கோபம் வந்தாலும் அதிர்ந்து கத்தாமல், மென்மையாக எதிர்ப்பை காண்பிப்பது, பிறருக்கு உதவுவது, பொதுநல சேவை போன்ற அவளது பல்வேறு குணங்கள் அவனுக்கு பிடித்திருந்தன. தெரியாமல் போய் விட்ட ஒரே குணம், அவளின் பிடிவாத குணம்.
இன்று காலை, அவன் கிராமத்து குலதெய்வ கொடை விழாவுக்கு இந்த ஆண்டு கட்டாயம் போகணும் என்றாள். வழக்கமாக, கிராம திருவிழாவிற்கு அவன்தான் திட்டமிடுவான். ஆனால், இந்த ஆண்டு, அலுவலக வேலை விஷயமாக, அவன் டில்லி செல்ல வேண்டியிருக்கிறது. அதைத் தவறவிட அவன் விரும்பவில்லை. ஆகவே, அடுத்த ஆண்டு போய்க் கொள்ளலாம் என்று நினைத்திருந்தான். வழக்கத்திற்கு மாறாக அவள் தலையிட்டு, 'போயே ஆகணும்...' என்று அடம்பிடித்தாள்.
ஒரு வீம்பில், 'ஆனத பாரு... நாம இந்த வருஷம் போகப் போறதில்லை... உன் வேலையை பார்த்துக் கொண்டு போ...' என்று சொல்லி விட்டானேயொழிய, மனசு கிடந்து அடித்துக் கொண்டது...

 


'சரி... நம்ம குலதெய்வம் கோவில் விழாவுக்கு தானே செல்கிறாள்... போய் வரலாம், ஆபீசில் லீவு சொல்லிக் கொள்ளலாம்...' என நினைத்து, மொபைலை எடுத்து பேச போன போது, அவன் மொபைல் ஒலித்தது. 'சாதனா' என்று தொடுதிரை சொன்னாலும், பேசியது வேறு ஒரு பெண். அவள் குரலில் பதற்றம். அவள் சொன்ன விஷயத்தால் அதிர்ச்சியுற்ற விவேக், 'ஓ மை காட்...' என்று கூவி, கோடம்பாக்கத்தில் உள்ள, 'ஷீலா நர்சிங் ஹோம்' நோக்கி பறந்தான்.
மருத்துவமனை பரபரப்பாக இருந்தது. வாசலில் இருந்த பிள்ளையாரிடம், மனம் உருக வேண்டிக் கொண்டிருந்தனர் சிலர். ஸ்ட்ரெச்சர் உருளும் சத்தம், டிராலிகளின் கட கட ஓசை, ஆரஞ்சு பழ வாசம், டெட்டால் நெடி, அனைத்தையும் கடந்து எமர்ஜென்சி வார்டுக்கு ஓடினான் விவேக். வராந்தாவில் அவனை வரவேற்றது சுதா, சாதனாவின் நெருங்கிய தோழி. 'பயப்படாதீங்க சார்... சாதனாவிற்கு ஒன்றுமில்லை... அந்த முத்தையா தெரு விஷயம் கொஞ்சம் விபரீதமாக போய் விட்டது. அங்கு இருக்கிற ஒரு பெட்டி கடையில், பசங்களுக்கு போதை சாக்லெட் விக்கிறாங்க... அந்த கடைக்காரரை நாங்க சில பெண்கள் எதிர்த்தோம்... இன்று, சாதனா ஆபீஸ் போகும்போது, யாரோ ஒருவன் கல் வீசி தாக்கிட்டு ஓடிட்டான். போலீஸ் அவனை தேடிட்டு இருக்கு... சாதனாவுக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில், சீரியஸ் ஒண்ணும் இல்லைன்னு சொல்லிட்டாங்க... இரண்டு தையல் போட்டிருக்காங்க... பார்ம்ல ஒரு கையெழுத்து போடத்தான் வரச்சொன்னோம்...' என்றாள்.
அவனுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டாலும், 'இவளுக்கு ஏன் இந்த வேலை' என்று தோன்றியது. பலமுறை கேட்டுள்ளான்... 'பின் யார் தான் அநீதிகளை கேட்பது... என் அப்பா சமூக சேவகர்... அப்பாவுக்கு தாத்தா, வெள்ளைக்காரனை எதிர்த்து, நீதி கேட்டு ஜெயிலுக்கு போனவர்... அரசாங்கம் கொடுத்த தாமிர பட்டத்தையும் வாங்க மறுத்தார். எனக்கு கொஞ்சமாவது அந்த குணம் இருக்காதா?' என்று சிரிப்பாள்.
மறுநாள் பேப்பரில் அந்த செய்தி வந்திருந்தது. சர்ச்சைக்குரிய அந்த பெட்டிக்கடையை மூடி விட்டனர் என்ற செய்தி விவேக்கிற்கு சந்தோஷமாயிருந்தது. சாதனாவோ எவ்வித சலனமுமின்றி, தலையில் கட்டுடன் அலுவலகம் கிளம்பி விட்டாள். அவளை நினைத்து வியப்பாக இருந்தது, அவனுக்கு.
கிராமம் களை கட்டி இருந்தது. திருவிழாவிற்கான அத்தனை ஏற்பாடுகளும் கன ஜோராக நடந்து கொண்டிருந்தன. விவேக்கின் பெற்றோரான, ரெங்கசாமியும், பேச்சியம்மாளும், விவேக்கையும், சாதனாவையும் அன்புடன் வரவேற்றனர். ''மருமகன்னா மருமக தான்... எப்படி என் பையனை திருவிழாவிற்கு இழுத்து வந்துட்டா பார்த்தியளா... இந்த ஆண்டு வர முடியாது... வடநாடு போறதா இருக்கேன்னு சொல்லிட்டு இருந்த பயல, கூட்டிட்டு வந்துட்டாளே... சமத்து... சக்கரைக் கட்டி...'' என்றாள்.
சாதனா சிரித்தாள்.

 


அவர்கள் வந்து இறங்கிய விஷயம் கேள்விப்பட்டு, மெல்ல மெல்ல அக்கம் பக்கத்து ஜனங்கள் வந்து விட்டனர். அவர்களிடம் குசலம் விசாரிக்க, அதுவும் பெண்கள் எல்லாரும் சாதனாவையே சுற்றி நின்று, அவளை வியப்பாய் பார்த்தனர்.
அதில் ஒருத்தி, தன் குழந்தையை அவளிடம் நீட்டி, 'தாயே... போன வருஷம் நீ வந்தப்ப, ''உனக்கு ராஜகுமாரன் பொறப்பான்னு எங்கிட்ட சொன்னியே... நீ சொன்ன மாதிரி, விக்ரகமாட்டம் ஆண் குழந்தைம்மா... நாலு நாளாச்சு... நீயே பெயரு வைச்சிரு,'' என்று சொல்ல, சாதனா, ''ஐயையோ... ஆள விடுங்க,'' என்று நழுவப் பார்க்க, அவள் விடவில்லை. பேச்சியம்மாளும் சிபாரிசு செய்யவே, 'ராமச்சந்திரன்' என்று பெயர் வைத்தாள். ''ஆ... வாத்தியாரு பேரு... நிச்சயம் இந்த பய, அவர மாதிரி நாடாள்வான்மா,'' என்று மகிழ்ந்து, ஒரு கட்டு பனங்கிழங்கை அன்புடன் கொடுத்துச் சென்றாள்.
சிறிது நேரத்தில், மேட்டுத் தெரு வேலம்மாள் வந்தாள். வந்தவள், 'அக்கா...' என்று அவள் காலில் விழுந்தாள். திடுக்கிட்டு கால்களை பின்னுக்கு இழுத்துக் கொண்ட சாதனா, அவளை அன்பாக துாக்கிவிட்டு, லேசாக கடிந்து கொண்டாள். ''அக்கா... எங்க வீட்டு லட்சுமி தொடர்ந்து காளக் கன்னாவே ஈனுச்சு... போன வருஷம் வந்தப்ப, உங்ககிட்ட கூட வருத்தப்பட்டு சொன்னேன்... நீங்க, லட்சுமிய பார்த்து, 'நல்ல லட்சணமான பசு...' என்று சொல்லி, தடவி கொடுத்தீங்க... இப்ப, பொண்ணு போட்டிருக்கா... அக்கா... உங்க கை, ராசியான கை அக்கா,'' என்று சொல்லி, சாதனாவின் கையில் முத்தம் பதித்தாள்.
விவேக்கும், ரெங்கசாமியும் மற்றும் பேச்சியம்மாளும் நடப்பதை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த வியப்பு அடங்குவதற்குள், தன் கையில் இரண்டு வெடக்கோழியுடன் வந்தாள் பேராச்சி.

 


''பட்டணத்தம்மா மகராசி... எப்படியம்மா இருக்கே... நீ போன வருஷம் வந்தப்போ, என் தோட்டத்த பார்க்க வந்தே... நெனவு இருக்கா? அப்ப நான் கோழிகள பத்தி குறை பட்டுக்கிட்டேன்... அட காக்கிற முட்டையில பாதி கூமுட்டையா போவுது... நாலு குஞ்சுகள அம்மனுக்கு நேர்ந்து விடலாம்ன்னு இருக்கேன்னு சொன்னப்போ... 'எல்லாம் சரியா போயிரும்'ன்னு சொன்னம்மா... உன் வாக்கு பலிச்சிருச்சு... இப்பல்லாம் பத்து முட்டை வச்சா, பத்தும் குஞ்சு பொரிச்சிருதும்மா... உனக்காக கொண்டு வந்தேன்; வாங்கிக்க தாயீ,'' என்று கோழிகளை கொடுத்துச் சென்றாள்.
தன் மருமகள், அன்பால் கிராமத்து மக்களுக்கு அரசியாகி விட்டதை நினைத்து விவேக்கின் பெற்றோருக்கு பெருமை தாங்கவில்லை. ''அம்மா... தாயே... சாதனா... வர உள்ளாட்சி தேர்தல்ல போட்டி போட்டா, நீ தான் சேர்மன்... நான் வேணா உனக்கு கூஜா துாக்கறேன்... சரியா!'' என்று விவேக் கேட்கவும், அந்த இடம் கலகலப்பாகியது.
திருவிழா துவங்கியது.
அம்மன் கோவிலில், 'குடி எளப்பு' ஆரம்பித்து விட்டது. கிராமத்து பெரிசுகள், தலைவர், நாட்டாமை போன்ற பலர் மறுநாள் ஆரம்பிக்க இருக்கும் கொடை விழா ஏற்பாடுகள் பற்றி விவாதித்து, முக்கிய முடிவுகள் எடுத்தனர். சென்ற ஆண்டு இருந்த, சில சிறு குறைகள் இந்த ஆண்டு மறுபடி வந்துவிடக் கூடாதென்று எச்சரித்தனர்.
மறுநாள் துவங்கிய கொடை விழாவில், அம்மன் அலங்காரம் அற்புதமாய் இருந்தது. சிவப்பு புடவையில், கையில் கடகம், காலில் தண்டை, கழுத்தில் காசு மாலை, இடுப்பில் ஒட்டியாணம் என்று பளீரென அருள் பாலித்துக் கொண்டிருந்தாள். சாமியாடிகள், கணியன்மார்கள் மற்றும் விரதமிருப்பவர்கள் என்று கூட்டம் கூட துவங்கியது. கட்டை வண்டிகளிலும், ட்ரக்குகளிலும் குடும்பம் குடும்பமாக வந்து இறங்கினர். அவர்களுடன் சமையலுக்கு வேண்டிய பொருட்கள், தட்டுமுட்டு சாமான்கள், காஸ் சிலிண்டர், வாட்டர் கேன், ஜமுக்காளம் மற்றும் வளர்ந்த ஆடு ஆகியவை கூடவே வந்தன.
உறவுகளும், நட்புகளும் சங்கமித்து ஒரே கோலாகலம்... கும்மாளம்! தற்காலிகமாக முளைத்திருந்த பஜாரில், குழந்தைகளுக்கு வேண்டிய விளையாட்டு பொருட்கள், பரவியிருந்தன.

 


சாதனா கோவிலுக்கு கிளம்பி விட்டாள். சிவப்பு புடவை. முகத்தில் திக்கான மஞ்சள், நெற்றியில் ஒரு ரூபாய் சைஸில் குங்குமப் பொட்டு... விரித்துப் போட்ட கூந்தல்... இதையெல்லாம் பார்த்த விவேக், ஒரு கணம் அதிர்ந்தே போனான். ''ஏய்... இதென்ன கோலம்... பார்க்கவே பயமா இருக்கு,'' என்று கூற, சாதனா சிரித்து, ''சிட்டியில இருக்கும்போது, ஆபீசுக்கு ஒரு டிரஸ், பார்ட்டிக்கு ஒரு டிரஸ்ன்னு போடறோம்ல அது மாதிரி, கிராமத்து கோவிலுக்கு இந்த டிரஸ்... கம்முன்னு வாங்க,'' என்று அடக்கினாள்.
இரவில், கூத்து, வில்லுப்பாட்டு என்று விழா உச்சத்தை எட்டியது. கோவில் திடலில் வரிசையாக பொங்கல் அடுப்புகள். சுள்ளிகள் போட்டு எரியும் அடுப்பின் புகை, வானத்தில் சுழன்றடித்து தகதகவென்று எரியும் கங்குகளை சந்தோஷப்படுத்தியது. தெய்வக் கணியன், தலையில் குல்லா, காலில் சலங்கையுடன் மகுடம் அடித்துக் கொண்டே ஆடி வந்து, இலையில் படைக்கப்பட்டிருந்த பழப் படையல் மீது, தன் நாக்கை கீறி சில சொட்டு ரத்தம் விட்டான்.
மேளம், தாரை தப்பட்டை ஒலி உச்சம் தொட, நிறைய பேர் சாமி வந்து ஆடினர். குழந்தைகள் மிரண்டு, அம்மாக்களின் சேலையை கெட்டியாக பிடித்துக் கொண்டன.
திடீரென கூட்டம் தெற்கு மூலை அரச மரத்தடியை நோக்கி ஓடியது.
'பேச்சியம்மா மருமவ... அந்த பட்டணத்துக்காரி, அங்க உட்கார்ந்துட்டாளாம்...'
வில்லுப் பாட்டை ரசித்துக் கொண்டிருந்த விவேக், திடுக்கிட்டான். என்ன சாதனாவா... அவனும் கூட்டம் ஓடிய திசை நோக்கி ஓடினான். அங்கு அவன் கண்ட காட்சி...
அரச மரத்தடி சின்ன சிமென்ட் மேடையில் சம்மணமிட்டு, கைகளை முட்டுகளின் மேல் நீட்டி தியானத்தில் அமர்ந்திருப்பது போல் கண் மூடி அமர்ந்திருந்தாள் சாதனா. அவளை சுற்றி கூட்டம் பணிவோடும், பக்தியோடும் நின்று கொண்டிருந்தது.
கிராமத்து முக்கிய ஜனம், தலைவர் உட்பட அங்கு ஆஜர்.
'அம்மா... இவ்வளவு நேரம் உக்கிரமா இருந்தா... இப்பத்தான் சாந்தமாயிருக்கா...' என்றாள் ஒருத்தி.
ஒருத்தி வந்து கேட்டாள், ''யாரும்மா நீ... பேச்சியா?''

 


கண் திறக்காமல் பதில் மட்டும் வந்தது.
''இல்ல...''
''இசக்கியா?''
''இல்ல...''
''முப்பிடாதியா... சந்தன மாரியா?''
''இல்ல... இல்ல...''
''பின்ன யாரும்மா நீ... உனக்கு என்ன வேணும்?''
''அப்படி கேள்... இந்த கிராமத்து வடக்கு பகுதியில சின்ன மலையாட்டம் ஒரு பாறை அடச்சிட்டு இருக்கு...''
''ஆமாம்... ஆமாம்...''
''அத வெடி வச்சு உடைக்கணும்... பாதை கிடைக்கும்... கிராமத்து எல்லா ஜாதி சனத்துக்கும், நல்லதுக்கும் கெட்டதுக்கும் பொதுவான பாதையா இருக்கணும்... அப்படி செய்தா கிராமம் செழிக்கும்.''
''சரிம்மா... சரிம்மா...'' கன்னங்களில் போட்டுக் கொண்டது கூட்டம்.


சாதனா படுத்துக் கொண்டாள்; கூட்டம் விலகிற்று.
திருவிழா முடிந்து, கிராமம் இயல்பு நிலைக்கு திரும்பியது. காப்பு அவிழ்த்து விரதம் முடித்துக் கொண்டோர் கிளம்பி விட்டனர். வடக்கு பகுதியில் இருந்த பாறை உடைக்கப்பட்டு, ஒரு அகலமான பாதை உருவாகியிருந்தது. விவேக்கும், சாதனாவும் கிளம்பி விட்டனர். திருவிழாவில் சிறப்பாக கலந்துகொண்ட திருப்தி விவேக்கிற்கு. ''நான் நன்றி சொல்ல வேண்டியது உனக்கு தான்... நீதான் என்ன அடம்பிடிச்சு கூட்டிட்டு வந்தே... ஆமா... உனக்கு எப்படி அருள்ளாம் வந்துச்சு?'' வியப்பாய் கேட்டான் விவேக்.
''எனக்கு, அம்மன் மீது பக்தி மட்டும் தான்... போன வருஷம் நடந்தது ஞாபகம் இருக்கா... நம்ம தோட்டத்துல வேல பார்க்குற அடைக்கலம் வீட்டுல ஒரு சாவு... பிணத்தை ஒரு குறிப்பிட்ட பாதை வழியா கொண்டு போக தடை... அதனால, பல மைல் சுத்தி எடுத்துட்டு போனதா சொல்லல? அது, என் மனத உறுத்திகிட்டே இருந்துச்சு... இப்ப நான் வந்தப்ப, குழந்தை பிறந்தது, மாடு கன்னு போட்டது, கோழி எல்லா முட்டையையும் குஞ்சு பொரிச்சது போன்ற எதேச்சையாக நடந்த நல்ல நிகழ்வுகளையும் என்னோடு சம்பந்தப்படுத்தி பேசவே, அதை நல்ல விஷயத்துக்காக பயன்படுத்திக் கொண்டேன், அவ்வளவு தான்!
''இப்ப எல்லா ஜாதி, சனத்திற்கும், வியாபாரத்திற்கோ, வெளியூருக்கோ, சுடுகாட்டுக்கு போகவோ, சுருக்கு வழி கிடைச்சுருச்சு,'' என்றதும், அவளது சமயோசித புத்தியை எண்ணி வியந்தான் விவேக்.

http://www.dinamalar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.