Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்..

Featured Replies

நாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்..

 

 

 

Mullai-fire5.jpg?resize=800%2C533

கடந்த திங்கட்கிழமை இரவு நாயாற்றுக் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், எந்திரங்கள், மீன்பிடி வலைகள் என்பன எரிக்கப்பட்டுள்ளன. எரிக்கப்பட்டவை அனைத்தும் தமிழ் மக்களுடையவை. அவற்றின் மொத்தப் பெறுமதி ஐம்பது இலட்சத்துக்கும் கூடுதலானது என்று மீனவர்கள் கூறுகிறார்கள். படகுகள் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட கொந்தளிப்பையடுத்து சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.படகுகள் எரிக்கப்படடமை தொடர்பில் குற்றம் சாட்டப்படும் நிசாந்த என்பருக்குச் சொந்தமான படகுகள் நாயாற்று இறங்குதுறையிலிருந்துஅகற்றப்பட்டுள்ளன. ஆனால் நாயாற்று முகத்துவாரத்தில் வாடியமைத்திருக்கும் சுமார் 250-300 படகுகள் அகற்றப்படவில்லை.அது போல கொக்கிளாய் முகத்துவாரத்தில் வாடியமைத்திருக்கும் சுமார் 250-300 படகுகள் அகற்றப்படவில்லை.

 

கொக்கிளாயிலும் நாயாற்றிலும் சுமார் 500 வரையான படகுகள் சகிதம் சிங்கள மீனவர்கள் தற்காலிகமாக வந்து தங்குகிறார்கள். பிரதேச செயலகத்தில் அனுமதி பெறாமலும் உள்ளுர் மீனவ சங்கங்களிடம் தெரிவிக்காமலும் அவர்கள் வாடிகளை அமைந்திருக்கிறார்கள்.இதில் பிலியந்தலையைச் சேர்ந்த நிசாந்த என்ற பெருஞ்செல்வந்தருக்குச் சொந்தமான 40 படகுகளும் அடங்கும்.சிலாபத்தில் அவர்களுடைய கடலில் மீன்பிடி சீசன் முடிந்து வடக்குக் கடலில் அது ஆரம்பமாகும் போது அதாவது வடகீழ் பருவப் பெயர்ச்சி மழைக்கு முன்பு அவர்கள் வடக்கை நோக்கி வருகிறார்கள். இங்கு வந்து தமிழ் மீனவர்;களுக்குரிய கடல்படு; அறுவடையில் பங்கு கேட்கிறார்கள். ஆழ்கடல் மீன்பிடித் தொழில் இலங்கையர்கள் யாவருக்கும் பொதுவானது என்று ஒரு விளக்கம் கூறப்படலாம்.ஆனால் கடலோரங்கள் அவ்வப்பகுதி கடற்றொழிலாளர்சங்கங்களுக்கே உரியவை.

வழமையாக ஆண்டு தோறும்மார்ச்சிலிருந்து ஒக்ரோபர் மாதத்திற்கு இடையில் சிலாபத்திலிருந்து சிங்கள மீனவர்கள்; முல்லைத்தீவு நோக்கி வருவதுண்டு. இவர்கள் ஒப்பீட்டளவிற் சிறிய தொகையினர்.(78 படகுகள்) அதோடு இங்குள்ள மீனவ சங்கங்களில் பதிவு செய்து தமது தொழிலை முன்னெடுத்து வருபவர்கள். ஆனால் இப்பொழுது வருபவர்கள் அப்படியல்ல. அவர்கள் நூற்றுக்கணக்கில் வருகிறார்கள். ஒரு பதிவும் இல்லை. கடற்தொழிலாளர் சங்கங்களிடம் அனுமதி பெறுவதுமில்லை. படைத்தரப்பே அனுமதி வழங்கி பாதுகாப்பையும் கொடுக்கிறது.நாயாற்று முகத்துவாரத்தில் கடற்படை முகாம் ஒன்று உண்டு.அந்தக் காணி கத்தோலிக்கத் திருச்சபைக்குச் சொந்தமானது. முன்பு அங்கு ஒரு யூதா ஆலயம் இருந்தது.கொக்கிளாய் முகத்துவாரத்தில் ஒரு கடற்படை முகாமும் ஒரு ராணுவ முகாமும்; உண்டு. இந்த முகாம்களிருக்கும் துணிச்சலில்தான் சிங்கள மீனவர்கள் கொக்கிளாய்,நாயாற்றை நோக்கி வருகிறார்கள்.

Mullai-fire3.jpg?resize=800%2C533
அவர்கள் கடற்றொழில் திணைக்களத்தால் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பிரயோகித்து வருகிறார்கள். வெளிச்சத்தைப் பாய்ச்சி மீன் பிடிப்பது, டைனமைற்றை வெடிக்கச் செய்து மீன் பிடிப்பது தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துவது,காவுளாய் எனப்படும் செடியைப் பயன்படுத்தி கணவாய் பிடிப்பதுபோன்ற சட்ட மீறலான மீன்பிடி முறைகளை அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அது மட்டுமல்ல கரைவலைச் சட்டத்தின் படி கரையிலிருந்து 2700 மீற்றர் வரையிலுமே தொழில் செய்யலாம். ஆனால் சிங்கள மீனவர்கள் 5000 – 6000 மீற்றர் வரை போகிறார்கள். இவ்வளவு தூரத்திற்குப் போடப்பட்ட வலையை மனிதர்கள் கரையிலிருந்து இழுக்க முடியாது. எனவே உழவு இயந்திரத்தில் வீஞ்ச் எனப்படும் ஓர் எந்திரத்தைப் பொருத்தி சிங்கள மீனவர்கள் வலையை இழுத்து வருகிறார்கள். இதனால் கடலின் அடியில் உள்ள பவளப் பாறைகள் அழிக்கப்பட்டுவிடும். அண்மை ஆண்டுகளில் சின்னப்பாடு உடப்பு போன்ற பகுதிகளில் மீன் உற்பத்தி குறைந்ததுக்கு இதுவே காரணம் என்று மீன்பிடிச் சங்கங்கள் கூறுகின்றன.கொக்கிளாய் களப்புப் பகுதியில் இறால்களின் இனப்பெருக்கம் அதிகம் என்பதால் அங்கு இயந்திரப்படகு பயன்படுத்தத் தடை உள்ளது. ஆனால் வெளியிலிருந்து வரும் மீனவர்கள் இத்தடையை மதிப்பதில்லை.

இவ்வாறு தடை செய்யப்பட்ட முறைகள் மூலம் மீன்பிடிப்பதால் சிங்கள மீனவர்கள் தமிழ் மீனவர்களுக்கு உரிய கடல் அறுவடையைப் பங்கு போடுவது மட்டுமல்ல அவர்கள் கடலின் இயற்கைச் குழலை அழிப்பது அதைவிடப் பாரதூரமானது என்று கூறுகிறார் மாகாண சபை உறுப்பினர் ரவிகரன். தடை செய்யப்படட முறைகளால் மீன்பிடிக்கும் போது ஒரு கிலோ சிறு மீன்களை பிடிக்க கிட்டத்தட்ட பதினெட்டு கிலோ குஞ்சு மீன்கள் கொல்லப்படுகின்றன என்று அவர் கூறுகிறார். ஒளி பாய்ச்சி மீன் பிடிக்கும் போது பெரிய மீன்கள் உயர போய்விடுகின்றன அதாவது கரையிலிருந்து விலகி ஆழ்கடலை நோக்கிப் போய்விடுகின்றன என்றுமவர் கூறுகிறார். குறிப்பாகக்கூடுகட்டிக் கணவாய் பிடிக்கும்போதுகாவுளாய் எனும் தாவரத்தை நீருக்கடியில் கயிற்றில் கட்டிவிடுவார்கள். அந்தக் கயிற்றில்; ஊரிகள் படிந்து அக்கயிறு காலப் போக்கில் கூராகிவிடும். இது சிறு தொழில் செய்பவர்களின் வலைகளை அறுத்துவிடும் என்றும் ரவிகரன் சுட்டிக்காட்டுகிறார்.கடந்த சில ஆண்டுகளாக ரவிகரன் போராடும் மக்கள் மத்தியிலேயே காணப்படுகிறார்.

இது தொடர்பாக நடந்த சந்திப்புக்களில் கொழும்பிலிருந்து வரும் அமைச்சரகள்; கலந்து கொண்டு வாக்குறுதிகளை வழங்கிய பின்னரும் நிலமைகள் மாறவில்லை. 2016 ஆம் ஆண்டு முல்லைத்தீவுக்கு வந்த அப்போதைய கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் வாக்குறுதிகளை வழங்கி விட்டுச் சென்றார். ஆனால் எதுவும் மாறவில்லை. அப்படித்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் இப்போதைய அமைச்சர் வந்து போனார். ஆனால் அடுத்த நாள் இரவு படகுகள் எரிக்கப்பட்ருக்கின்றன. படகுகள் எரிக்கப்பட்டதையடுத்து விவகாரம் அரசுத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி கடந்த வியாழக்கிழமை சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Mullai-fire2.jpg?resize=800%2C533
குறிப்பாக படகுகளை எரித்ததாக குற்றம் சாட்டப்படும் நிசாந்தவின் ஆட்கள் மூவர் கைது செய்யப்பட்டதோடு துறைமுகத்திலிருந்து நிசாந்தவின் படகுகள் அகற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் நிசாந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நாயாற்றுக் கடற்கரையில் செம்மலையைச் சேர்ந்த ஒரு தமிழருக்குச் சொந்தமான சுமார் ஐந்து ஏக்கர் காணியை வாங்கிவிட்டார். அப்பெரிய காணியிலிருந்துகொண்டு அவர் எதிர் காலத்தில் எப்படிப்படட தொழில் உரிமைகளை அனுபவிப்பார்?மேலும் இங்கு நிசாந்த என்ற ஒரு தனி நபர் மட்டும்தான் பிரச்சினை என்பதல்ல.கொக்கிளாய் நாயாற்று முகத்துவாரங்களில் இன்றுவரை அகற்றப் படாத சுமார் ஐநூறு படகுகளும் வாடிகளும் உண்டு.

இது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்குளாய், நாயாறு, கொக்குத் தொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற கிராமங்களுக்குரிய தமிழ் மீனவர்கள்; எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை. அதேசமயம்,வடமராட்சிக் கிழக்கிலும் கடலட்டை தொடர்பில் இது போல பிரச்சினைகள் உண்டு. பருத்தித்துறை கடலிலும் ரோலர் மீன்படி தொடர்பில் பிரச்சினைகள் உண்டு. இதில் தென்னிலங்கை மீனவர்கள் மட்டும் தான் பிரச்சினையாயிருக்கிறார்கள் என்றில்லை. இந்திய மீனவர்களும்தான்.; இந்திய மீனவர்களின் சக்திமிக்க றோலர்கள் மன்னார் வளைகுடாவில் கடற்தாயின் கர்ப்பத்தை விறாண்டிச் செல்கிறன என்று அப்பகுதி மீனவர்கள் முறையிடுகிறார்கள்.

தனது கடலை நேசிக்கும் ஒரு மீனவரைப் பொறுத்தவரை கடல் எனப்படுவது தாய் மடியைப் போன்றது.கடல்படு திரவியங்களை அறுவடை செய்யும்போது அது கடற்தாயின் மடிக்கு நோகாமலிருக்க வேண்டும் என்றே ஒரு நல்ல மீனவர் யோசிப்பார். கடலை அதன் அரசியல் ஆள்புல எல்லைகள் கருதி நாடுகளும், இனங்களும், மக்கள் கூட்டங்களும் சொந்தம் கொண்டாடலாம். தொழில் சார் நடவடிக்கைகளுக்கு அது அவசியமாகவும் இருக்கலாம். ஆனால் சுற்றுச் சூழல் நோக்கு நிலையிலிருந்து பார்க்கும் போது கடல் முழு மனித குலத்திற்கும் சொந்தமானது. தமிழ்க்கடலின் கர்ப்பம் கலைந்தால் அது சிங்களக் கடலைப் பாதிக்கும்.சிங்களக் கடலில் கடற்பூங்கா சிதைந்தால் அது தமிழ்க்கடலில் விளைச்சலைப் பாதிக்கும். இந்தியக் கடலில் கொட்டப்படும் மருந்துகள் இலங்கைக் கடற்கரையில் ஒதுங்கினவே? அப்படித்தான் கடல் எனப்படுவது யுனிவேர்சலானது. உலகளாவியது. அதில் தமிழ்க்கடல், சிங்களக்கடல் என்பதெல்லாம் அரசியல் ராணுவ ஆள்புல எல்லைப் பிரிப்புக்கள்தான்.

ஆனால் அதற்காக உள்ளுர் மீனவர் அனைத்துலகப் பரப்பிற்கு சென்று செயற்பட முடியாது. தன்னுடைய உள்ளுர்க்கடலை நேசிக்கும் போது அது உலகளாவிய நேசிப்பாகவும் அமையும். தமிழ்க் கடலைப் பாதுகாக்கும் போது அது அதன் இறுதி விளைவாக உலகக்கடற் சமநிலையைப் பாதுகாக்கும். ஒரு தமிழ் மீனவர் தனது கடற் கர்ப்பத்தைப் பாதுகாக்கும் போது அது முழு இலங்கைத் தீவுக்கும் நன்மை பயக்கும். முழு ஆசியக் கடலுக்கும் நன்மை பயக்கும். முழு உலகக் கடலுக்கும் நன்மை பயக்கும்.

Mullai-fire1.jpg?resize=800%2C533
எனவே ஒரு தமிழ் மீனவர் தனது சொந்தக்கடலை (அல்லது வேண்டுமானால் பாரம்பரியக்கடல் என்று கூறலாம்) பாதுகாப்பதென்றால் அவருக்கு தனது சொந்தக் கடலின் மீது முழு உரிமை இருக்க வேண்டும். இது எனது கடல் என்று சொல்லதக்க உரிமைகளை அவர் பெற்றிருக்கவேண்டும். தனது கடற்தாய் மடியை, கடலின் கர்ப்பத்தைப் பாதுகாக்கத் தேவையான கூட்டுரிமைகளை அவர் பெற்றிருக்க வேண்டும். இது கடலுக்கு மட்டுமல்ல காட்டுக்கும், வயலுக்கும், நிலத்துக்கும், வானுக்கும் பொருந்தும். அதாவது ஒரு தமிழ் மீனவர் தனது தாயகம் என்று கருதும் ஒரு பௌதீகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான உரிமை. இதை இன்னும் விரிவாகச் சொன்னால் தனது தாயகத்தைப் பாதுகாப்பதற்கான உரிமை. தனது தேசிய வளங்களையும், எல்லைகளையும் பாதுகாப்பதற்கான உரிமை, இதுதான் கூழலியற் தேசியவாதம.

தனது சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கான உரிமைகளைக் கொண்டிராத மக்கள் கூட்டத்தால் உலகச் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க முடியாது. சூழலியல் தேசியம் எனப்படுவது அதன் உன்னதமான உச்ச வளர்ச்சியில் அனைத்துலக வாதமாக விரியக்கூடியது. ஒவ்வொரு மக்கள் கூட்டமும் அதனதன் தேசிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் போது அது அதன் இறுதி விளைவாக உலகளாவிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கின்றது. எனவே சூழலியல் தேசியம் எனப்படுவது அதன் பிரயோகத்தில் ஒரே சமயத்தில் உள்ளுர் தன்மை மிக்கதாகவும் பூகோளத் தன்மை மிக்கதாகவும் காணப்படுகிறது.

இப்படியாகத் தமது தாயகத்தை பாதுகாப்பதற்காகவே தமிழ் மக்கள் தன்னாட்சி அதிகாரங்களைக் கேட்கிறார்கள். தமது கடலட்டைகளையும், கடற் பூங்காவையும், கடலின் கர்ப்பத்தையும் றால் விளையும் களப்புக்களையும் பாதுகாப்பதற்காகத்தான் அவர்கள் விடாது போராடி வருகிறார்கள். தமது காட்டையும், சிறுத்தைகளையும், காட்டாறுகளையும், கனிப்பொருட்களையும் மணற்திடல்களையும், வயல்களையும் பாதுகாப்பதற்காகத்தான் தன்னாட்சி அதிகாரங்களைக் கேட்கிறார்கள். ஆனால் தமிழ் மக்களின் கூட்டுரிமைகளை ஏற்றுக்கொள்ளாத இலங்கை அரசு சட்டங்களின் மூலமும் திணைக்களங்களின் மூலமும் (அதாவது நிர்வாக நடைமுறைகளுக் கூடாகவும்) பொலிஸ் மூலமும் படைகளின் மூலமும் தமிழ் மக்களுடைய தேசிய வளங்கள் அபகரிக்கப்படுவதை ஊக்குவிக்கின்றது, பாதுகாக்கின்றது.

மீனவர்களின் விடயத்தில் படைத்தரப்பும், பொலிசும்தான் சிங்கள மீனவர்களைப் பாதுகாக்கின்றன என்பதல்;ல. கடற்தொழில் திணைக்களமும் அவ்வாறே நடந்து கொள்வதாக தமிழ் மீனவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, நாயாறு போன்ற பகுதிகளில் திட்டமிட்டுக் குடியேற்றப்பட்ட சிங்கள மீனவர்களுக்கு கரைவலை உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. முன்பு தமிழர்களிடமிருந்த இந்த உரிமம் இப்பொழுது பெருமளவுக்கு சிங்கள மக்களிடம் கொடுக்கப்பட்டு விட்டதாக தமிழ் மீனவர்கள் கூறுகிறார்கள்.

Mullai-fire4.jpg?resize=800%2C533
கடற்தொழில் திணைக்களம் மீனவர்களின் முறைபாட்டை ஒன்றில் கேட்பதில்லை அல்லது மீனவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என்று மீனவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.இவ்வாறு தமது பிரச்சினைகளை கூறுவதற்காகத் திணைக்களத்தின் முன் திரண்ட நூற்றுக்கணக்கான மீனவர்களை திணைக்களத்தின் தமிழ் உயர் அதிகாரி சுமார் இரு மணித்தியாலங்கள் வெயிலில் காக்கவைத்தார் என்றும் அவர்களை மாடியில் நின்றபடி சன்னல்கள் வழியாகப் பார்த்தார் என்றும் அதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள் திணைகளைச் சொத்துக்களை சேதமாக்கியதாகவும் கூறப்படுகிறது.

எனவே சட்டங்கள், திணைக்களங்கள், பொலிஸ் மற்றும் படைத்தரப்பு போன்ற எல்லாத் தரப்புக்களும் சேர்ந்து முன்னெடுக்கும் ஒருவித கூட்டு ஆக்ரமிப்பு இது. தமிழ் மக்களுடைய தாயகத்தை இணைக்கும் கரையோரப் பாதை அமைந்திருக்கும் செழிப்பான ஒரு கடற்பகுதி இவ்வாறு ஆக்ரமிக்கப்பட்டு அதன் வளங்கள் கடற்தாயின் மடி கருகும் வரை விறாண்டி எடுத்துச்; செல்லப்படுகின்றன. இதன் மூலம் கடல் மட்டும் கபழீகரம் செய்யப்படவில்லை.தமிழ் மக்களின் தேசிய நெடுஞ்சாலை அமைந்திருக்கும் இதயமான பகுதியில் அதாவது வடக்கு – கிழக்கை இணைக்கும் பகுதியில் தமிழ் மக்கள் பலவீனமாக்கப்படுகிறார்கள். தமது தாய்க்கடலின் மீது உரிமை கொண்டாட முடியாதவர்களாக மாற்றப்படுகிறார்கள். தமது கடற்துறையில் தமது படகுகளைக் கட்ட அவர்களுக்கு இடமில்லை. வெளியார் வந்து அத்துறைமுகங்களைக் கைப்பற்றி வைத்திருக்கிறார்கள். எதிர்ப்பை ஆவேசமாகக் காட்டும் மீனவர்கள் இலக்கு வைக்கப்பட்டு அவர்களுடைய படகுகள் எரிக்கப்படுகின்றன. வடமராட்சி கிழக்கில் சில கிழமைகளுக்கு முன்பு இது நடந்தது. வடக்கில் சில மாதங்களுக்குள் மூன்றாவது தடவையாக இப்படி மீனவர்களுடைய தொழில் முதலீடுகள் எரித்தழிக்கப்பட்டுள்ளன.

பொலிஸாரைக் கேட்டால் இதில் இனப்பிரச்சினை இல்லையென்று கூறுகிறார்கள். கடற்படையினரோ இதில் தாங்கள் சம்பந்தப்படவில்லை என்பது போலக் காட்டிக்கொள்கிறார்கள். கடற்தொழில் திணைக்களமோ சட்டப்படி இயங்குவதாகக் காட்டிக்கொள்கிறது. ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படாதவை போலத் தோன்றினாலும் இவை மூன்றும் ஒரு கூட்டு மனோநிலையை பாதுகாக்கும் காவல் நாய்கள்தான். போரில் தோற்கடிக்கப்படடவர்களின் வளமனைத்தும் வென்றவர்களுக்கே சொந்தம் என்ற ஒரு கூட்டு மனோநிலை அது

இங்கு மற்றோர் உதாரணத்தைக் காட்டலாம். வவுனியா மாவட்டத்தில் வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள கோயிலை வழிபடும் மக்கள் கடந்த மாதம்; 157 மீற்றர் உயரமான மலையில் ஏறுவதற்காகப் படிகளை அமைக்க முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அப்பகுதி தொல்பொருள் திணைக்களத்திற்கு உரியது என்று கூறப்படுகிறது. அப்படிச் சொல்லித்தான் ஆரியகுளம் நாகவிகாராதிபதியின் உடலைக் கோட்டைப் பகுதியில் தகனம் செய்தார்கள். இப்படியாக தொல்பொருள் திணைக்களம்,வனவளத் திணைக்களம், கடற்தொழில் திணைக்களம் போன்ற மத்திய அரசின் கீழ் வரும் திணைக்களங்கள் யாவும் ஒரு கூட்டு மனோ நிலையின் நிர்வாகக் கட்டமைப்புக்கள் தான். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்தபின் வெற்றி கொள்ளப்பட்ட நிலத்தின் மீதும் கடலின் மீதும் காட்டின் மீதும் மக்களின் மீதும் ஒரே நாடு ஒரே தேசம் என்ற பதாதையைக் கட்டித் தொங்க விட்ட அதே கூட்டு மனோ நிலையைக் காவல் காக்கும் நிர்வாக அலகுகளே இவை. நாயாற்றில் வைக்கப்பட்ட நெருப்பு அதைத்தான் நிரூபித்திருக்கிறது. ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல்.

நிலாந்தன்..

Mullai-Nayaru1.jpg?resize=800%2C533

 

 

http://globaltamilnews.net/2018/91932/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.