Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகன் உயிருடன் இருக்கிறாரா? தெரியாமலே தேடிக் கொண்டிருக்கும் தாய்மார்கள்

Featured Replies

மகன் உயிருடன் இருக்கிறாரா? தெரியாமலே தேடிக் கொண்டிருக்கும் தாய்மார்கள்

''மகனைத் தேடி, போகாத இடமில்லை. காணாமல் போனோர் குறித்து எங்கு கூப்பிட்டாலும் போவேன். எனக்கு எனது மகன் வேண்டும். எனது மகனின் உடல் கிடைக்கவில்லை. மகனுக்கு இறுதிச் சடங்கு எதுவும் செய்யவில்லை. என் மகன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். மகன் திரும்பி வருவான்'' என்று கூறியபோது அவரது கண்கள் குளமாகியது.

13 ஆண்டுகளாக காணாமல் போன மகனை தேடிக் கொண்டிருக்கும் தாய்

மட்டக்களப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் பிபி.சி தமிழிடம் தெரிவித்த ஆதங்கம்தான் இது.

“உறவுகளின் பிரிவு என்பது கொடுமையானது. அவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமையானது'' என்று தனது கணவரைத் தொலைத்துவிட்டு பல வருடங்களாக தேடியலையும் இன்னொரு பெண் கூறினார்.

30 வருடங்களுக்கு மேலாக தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் தேடியலையும் உறவுகள் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இன்று வியாழக்கிழமை கொழும்பில் கூடியிருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள ஜே.ஆர்.ஜயவர்தன நிலையத்தில் நடந்த நிகழ்வில் தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்துத் தரப்பிலும் உறவுகளைத் தொலைத்த குடும்பத்தினர் பங்கெடுத்திருந்தனர்.

உறவுகளைத் தொலைத்தவர்களும், சமூக அமைப்புக்களும் ''காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை'' இதுவரை காலமும் அனுசரித்து வருகின்றனர்.

இலங்கை

எனினும், அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட அலுவலகம், இலங்கையில் முதன் முறையாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை ஏற்பாடு செய்து இந்த ஆண்டு நடத்தியிருப்பது சிறப்பு அம்சமாகும்.

காணாமல் போன குடும்பங்கள், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உறவுகளைத் தொலைத்து பல வருடங்கள் கடந்திருந்தாலும் தமது உறவுகள் மீண்டும் கிடைத்துவிடுவார்கள் என்ற ஏக்கத்துடன் உறவுகளைத் தொலைத்த பெற்றோரும், உறவினர்களும் இருப்பதை அவர்களுடன் பேசியபோது அறிய முடிந்தது.

பிபிசி தமிழுடன், மட்டக்களப்பில் இருந்து வந்திருந்த, மகனைத் தொலைத்த 65 வயது தாய் ஒருவர் பேசினார்.

''2005ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எனது மகன் காணாமல் போனார். அன்று முதல் இன்று வரைத் தேடி வருகிறேன். எனது மகன் நகை வேலை செய்து வந்தார். தொழிலுக்குச் சென்றபோதுதான் காணாமல் போனார். எனக்கு இப்போது 65 வயதாகிறது. நான் சட்டிபானை செய்துதான் உழைத்து வருகிறேன். தனியாகத்தான் வாழ்கிறேன். இப்போது நிம்மதியாக ஓரிடத்தில் இருக்க வேண்டும். வறுமையில் இருக்கிறேன். வறுமையை மீறி மகனைத் தேடிக் கொண்டிருக்கிறேன். மகனைத் தேடி, போகாத இடம் இல்லை. காணாமல் போனோர் குறித்து எங்கு கூப்பிட்டாலும் போவேன். எனக்கு எனது மகன் வேண்டும். எனது மகனின் உடல் கிடைக்கவில்லை. மகனுக்கு இறுதிச் சடங்கு எதுவும் செய்யவில்லை. என் மகன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் நான் தேடிக்கெகாண்டிருக்கிறேன். மகன் திரும்பி வருவான்'' என்று கூறியபோது அவரது கண்கள் குளமாகின.

கொழும்பில் தனது மகனைத் தொலைத்த இன்னுமொரு தாய் பேசினார்.

இலங்கை

''2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எனது மகன் காணாமல் போனார். அப்போது அவருக்கு 30 வயது. எனது மகன், வாழ்க்கையில் வெற்றிபெற பல முயற்சிகளைச் செய்தான். இறுதியாக கொழும்பில் வத்தளையில், உணவகம் ஒன்றைத் திறந்தான். வியாபாரத்தை ஆரம்பித்து 17 நாட்கள் மட்டுமே நடத்த முடிந்தது.

வெள்ளை வேனில் வந்தவர்கள்தான் எனது மகனைக் கடத்தினார்கள். யார் கடத்தினார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கடத்தியவர்கள் காசு கேட்டனர். ஒரு லட்சம் ரூபா கேட்டனர். முதலில் பாதி தருவதாக ஒப்புக்கொண்டோம். கடத்தப்பட்ட போது மகனுடன் பேச வேண்டும் என மருமகள் கடத்தல்காரர்களிடம் கூறினார். ஆனால் அவர்கள் பேச வாய்ப்பளிக்கவில்லை.

எனது மகனுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது. ஆனால் பணத்திற்காகத்தான் கடத்தியிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

பணத்தைவிட மனித உயிர்களும், உறவுகளின் உணர்வுகளும் பெரிதானது என்பது இவ்வாறு பணத்திற்காக கடத்துபவர்களுக்குத் தெரியவில்லை. இன்று 14 வருடங்கள் கடந்துவிட்டன. என்னைப் பார்த்துக் கொள்ள யாருமில்லை. நிர்க்கதியாகியுள்ளேன்.'' ஆனால் எனது மகனைத் தேடுவதை நிறுத்தவில்லை.'' என்று இராஜேஸ்வரி என்ற அந்தத் தாய் கூறினார்.

''2004ஆம் ஆண்டு வீட்டில் இருந்தபோது வெள்ளை வேனில் வந்தவர்கள் மகனை கடத்திச் சென்றனர். மட்டக்களப்பு செங்கலடியில் பங்குடாவளி என்ற இடத்தில் இருந்தபோது எனது மகன் கடத்தப்பட்டான். அவருக்கு அப்போது 21 வயதுதான்.

கடத்தப்பட்டதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை. வறுமை காரணமாக வீட்டு வேலைக்கு வெளிநாடு சென்றுவிட்டேன். நான் சென்று ஒரு மாதம் 21 நாட்களுக்கு பின்னர் எனது மகன் கடத்தப்பட்டதாக அறிந்தேன். வீட்டிற்கு வேனில் வந்தவர்கள் கண்களைக் கட்டி, மகனைக் கடத்திச் சென்றதாக எனது மருமகள் கூறினாள்.

இலங்கை

யார்? எதற்காக? கடத்தினார்கள் என்று இன்றுவரைத் தெரியவில்லை. 14 வருடங்களாக தொடர்ந்து மகனைத் தேடி வருகின்றேன். பேோலீஸ், அரச அதிபர், ஆணைக்குழு என அனைத்து இடங்களிலும் தேடினேன். எனக்கு கணவரும் இல்லை. மகனும் இல்லை.'' என்று 60 வயதான சோ.புண்ணியவதி கூறினார்.

ஒரு மனிதன் வாழ்வதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும். அந்த உரிமையைப் பறிப்போறுக்கு எதிரான குரல்கள் வலுவாகப் பதியப்பட வேண்டும்'' என்று இன்றைய காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் பேசிய இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

தமது உறவுகளைத் தொலைத்த வலிகளுடன், தமது பிள்ளைகளுக்கு, உறவுளுக்கும் என்ன நடந்தது என்பது தெரியாது வாழ்வது மிகவும் கொடுமையானது என இங்கு வந்திருந்த தாய் ஒருவர் கூறினார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு என்பது பற்றி உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் இதுவரை இல்லை. இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து பல்வேறு ஆணைக்குழுக்கள், நிறுவனங்கள் வெவ்வேறு எண்ணிக்கையை கூறுகின்றன.

இலங்கை

பரணகம ஆணைக்குழுவானது 21 ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறுகிறது.

16 ஆயிரம் பேர் இலங்கையில் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 2016இல் ஆவணப்படுத்தியுள்ளது. இதில் 5,100 படையினர் காணாமல் போயுள்ளதாகவும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் நடந்த போர் காலத்திலேயே அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக இந்த முறைப்பாடுகளில் பதிவாகியுள்ளன.

இலங்கையின் தெற்கில் நடந்த கிளர்ச்சிப் போராட்டங்கள், வடக்கில் நடந்த ஆயுதப் போராட்டங்கள் ஆகியவற்றில் ஏராளமானோர் காணாமல் போயுள்ளதாக பதிவுகள் உள்ளன.

இதனைத்தவிர, பணத்திற்காக இடம்பெற்ற கடத்தல்கள் குறித்தும் பதிவுகள் உள்ளதாக ஆணைக்குழு முறைப்பாடுகளைப் பார்க்கும்போது தெரிய முடிகிறது என்று மனித உரிமை ஆர்வலர் ஒருவர் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.

மனிதன் சுதந்திரமாக வாழ்வதை உறுதிசெய்வது, அரசாங்கம், அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் கடமையென இந்த மனித உரிமை ஆர்வலர் மேலும் குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-45356524

  • தொடங்கியவர்

பிள்ளையை தந்துவிடு, இல்லையேல் என்னையும் கொன்று விடு ; ஆர்ப்பாட்டத்தில் கதறியழுத தாய் 

 

 
 

(நா.தினுஷா) 

"காணாமலாக்கப்பட்ட பிள்ளையைத் தேடி தந்து விடு, இல்லையேல் என்னையும் கொன்று விடு" என்ற அவல கோஷத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் தாய் கோட்டை புகையிர நிலையத்திற்கு முன்பாக கதறியழுதுள்ளார். 

col1.jpg

வலிந்து காணமலாக்கப்பபட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது. 

colo2.jpg

இந்த ஆர்ப்பாட்த்தினை சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்ததுடன் இதன்போது ஆர்பாட்டக்காரர்கள் 'நீதியை நிலைநாட்டு, 'வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் விபரங்களை வெளியிட வேண்டும்" போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவண்ணம் கண்ணீர் மல்க தமது கவலையையும் ஆதங்கத்தையும் வெளியிட்டிருந்தனர். 

col3.jpg

col4.jpg

மேலும் 30 வடருக்கால யுத்தத்தால் காணமாலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்னமும் வெளிப்படுத்தவில்லை, 'பொய் வாக்குறதிகளை தந்து அரசாங்கம் எம்மை ஏற்மாற்றுகின்றது" 'காணாமலாக்கப்பட்டோருக்கென கொண்டுவந்த ஆணைக்குழு பொய்யானது, அரசாங்கம் வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றுகின்றது எனவும் கோஷம் எழுப்பினர். 

காலை 10.30 மணியளவில் கொழும்பு பிரதான புகையிரத நிலையத்தின் முன்றலில் ஆரம்பமாகிய இந்த போராட்டம் 1.30 மணியளவில் முடிவுக்கு வந்தது. 11.15 மணியளவில் பிரதான புகையிரத நிலையத்திலிருந்து ஜனாதிபதி செயளகத்தை நோக்கி லோடஸ் வீதியினூடாக புறப்பட்டச்சென்ற ஆர்பாட்டக்குழு லோடஸ் சந்தியில் வைத்து கலகமடக்கும் பொலிஸரினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் சம உரிமை இயக்கத்தின் இணைப்பாளர் ரவீந்ர முதலிகே தலைமையிலான குழு  ஜனாதிபதி செயலகத்துக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மாஜரை கையளிக்க சென்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/39451

  • தொடங்கியவர்

காணாமல்போனோர் என்பது தவறாகும்:காணாமல் ஆக்கப்பட்டோர் என்பதே சரியானது

 

(நா.தனுஜா)

நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் குறிப்பிடுகையில் அநேகமானோர்  காணாமல்போனோர் எனக் குறிப்பிடுகின்றனர்.02.jpg

அவ்வாறு கூறுவது பொருத்தமற்றதாகும். தனிப்பட்ட காரணங்களுக்காக சிலர் வேறெங்கேனும் செல்வதுண்டு. ஆனால் நாட்டில் திட்டமிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல்போனோர் எனக் குறிப்பிடுவது பொருத்தமற்றாகும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகம தெரிவித்தார். 

வலிந்து காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு காணாமல்போனோர் அலுவலகத்தால் 'இனிமேலும் காணாமலாக்கப்படுவதை தடுப்போம்" எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு நேற்று ஜே.ஆர்.ஜயவர்தன நிலையத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரையாற்றிய போதே மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும்  தெரிவிக்கையில்,

மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சர்வதேச ரீதியில் முன்னிலை பெற்றுள்ளது. மனித உரிமை தொடர்பில் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமான நாடாகவே இலங்கை பார்க்கப்படுகின்றது. இலவசக்கல்வி, இலவச மருத்துவம் மற்றும் தனிமனித அபிவிருத்தி என்பவற்றில் முன்னிலையில் உள்ளது. 

எனினும் இங்கு வலிந்து காணாமலாக்கப்படுதல் எனும் பாரிய மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளமை வருந்தத்தக்க விடயமாகும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் நீதித்துறை சார்ந்த பிரச்சினையாக மாத்திரமே பார்க்கப்படுகின்றது. எனினும் அது நீதித்துறைசார் பிரச்சினை என்பதுடன் பாரியதொரு சமூகப்பிரச்சினையும் ஆகும். ஆனால் எமது சமூகத்திலே இவ்விடயம் தொடர்பில் தெளிவற்ற நிலையே உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பேசும் போது அநேகம்பேர் யுத்தத்ததை வென்ற வீரர்களுக்கு எதிராகப் பேசுவதாகவும், அவர்களை துரோகிகளாகவும் பார்க்கும் நிலையும் உள்ளது. அது முற்றிலும் தவறாகும். இவ்விடயத்தை இன, மத ரீதியாகப் பார்ப்பது நாட்டுக்குச் செய்யும் துரோகமாகும். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வேதனையை அவர்களின் நிலையிலிருந்து நோக்கினால் மாத்திரமே புரிந்துகொள்ள முடியும்.  

காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் காணாமல்போனோர் அலுவலகம் செயற்றிறன் மிக்க வகையில் செயற்பட்டு வருகின்றது. பொதுவாக எத்தனைபேர் காணாமல் போனார்கள் போன்ற எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றோம். எனினும் ஒருவருக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அது மனித உரிமைக்கான சவாலாகும். இவ்விடயத்தில் காணாமல்போனோர் அலுவலகம் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது. 

அந்தவகையில் அலுவலகத்தை மேலும் பலப்படுத்துவதுடன், இவ்விடயம் சார்ந்த ஏனைய பங்காளர்களையும் பலப்படுத்துவது அவசியமாகும். காணாமல்போனோர் அலுவலகத்திற்கு இதுவரையில் எவ்விதமான அரசியல் நெருக்கடிகளும் காணப்படவில்லை என்பதுடன், அதன் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் இருக்கவில்லை காணாமல்போனோர் அலுவலகம் மக்களுக்கானது. எனவே அதன் சுயாதீன செயற்பாடுகளுக்கு மக்கள் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/39452

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.