Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காரைநகரில் நடமாடும் ஆவணக் காப்பகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Nov132018.jpg

(ஜெரா)

இலங்கையின் வடபாகத்தின் தனித்துவங்களுக்குள் முதன்மையானவை எவை எனக் கேட்டால், யாழ்ப்பாண நகரம், ஆரியகுளம் சந்தி, யாழ்ப்பாணக் கோட்டை, நல்லூர் கோவில், வல்லிபுரம், பருத்தித்துறை, மாதகல், கந்தரோடை எனப் பல இடங்களைக் குறிப்பிடலாம். ஆனால், எம்மில் எவருக்கும் இலகுவில் நினைவுக்கு வராத வட பாகத்தின் தனித்துவ அடையாளங்கள்தான், யாழ்ப்பாணத்தைச் சூழக் காணப்படும் தீவுக் கூட்டங்கள். மண்டைதீவு, புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு, காரைநகர் என நீளும் தீவுக்கூட்டங்களுக்குள்தான், வட பாகத்தின் மனித நிலவுகைக்கான தொடக்கம் நிகழ்ந்ததென்பார், பேராசிரியர் பொ. ரகுபதி. அவரின் தொல்லியல் ஆய்வு நூலான “Early Settlement of Jaffna” (யாழ்ப்பாணத்தின் ஆரம்பகாலக் குடியேற்றம்) என்பதில், இந்த விடயம் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம்.அவரது ஆய்வின்படி, இன்றைய யாழ்ப்பாணத்துக்கும் அதன் மய்யப் பகுதிகளுக்கும், தீவுப் பகுதிகளில் இருந்தே மனித நிலவுகை பரவியது எனச் சொல்லப்பட்டிருக்கும். இந்தக் கண்டறிதலின்படி தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமையால், இந்தக் கருத்தியல் செயல்வடிவம் பெறாமல் போயிற்று. ஆனால், அக்கருத்தியலில் உண்மையில்லை என யாராலும் இலகுவில் தட்டிக்கழித்துவிட முடியாது.

தமிழர் வரலாற்றுத் தொடக்கத்தில் இவ்வளவு முக்கியத்துவம் பெறும் தீவுகளில் ஒன்றான காரைநகர், இப்போது தமிழர்களாலேயே கைவிடப்படும் நிலையை எட்டியிருக்கிறது. செல்வச்செழிப்புடன் இருந்த வீடுகள், பாழடைந்த நிலையை அடைந்துவிட்டன. கூப்பிடு தொலைவில் கூட மனித நடமாட்டத்தைக் காண முடியாதளவுக்கு, குடிமனைகள் சுருங்கிவிட்டன. நூற்றாண்டுக் கணக்கில் கைவிடப்பட்ட கிராமமொன்றுக்குள் நுழையும் உணர்வை, வீதிகள் ஏற்படுத்துகின்றன. வீதிகளில் நடமாடும் மனிதர்களில் அநேகர், நீருக்காகப் பயணிப்பவர்களாகவே இருக்கின்றனர். இப்படியாக அங்கு எச்சசொச்சமாகத் தங்கியிருக்கும் மக்கள், குடிநீருக்காகவே பெரும் போராட்டம் நடத்துவதை, அண்மையகாலச் செய்திகளில் படித்திருப்போம்.

இவ்வளவு சிரமம் மிகுந்த சூழலுக்குள்ளும், தன் ஊர், வரலாறு, அவற்றை ஆவணப்படுத்தி அடுத்த சந்ததிக்கும் எதையாவது விட்டுச்செல்ல வேண்டும் என்ற பேரார்வத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மனிதர்தான், இந்தக் கட்டுரையின் நாயகன். எப்போதும் ஆய்வுகூடங்களிலும் நூலகங்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் வைத்துப் பாதுகாக்கப்படும் வரலாற்றை விட, சாதாரண மக்களிடம் வாழும் வரலாறு, மிகுந்த உயிர்த்துடிப்புள்ளது எனச் சொல்லப்படுவதுண்டு. அதற்குச் சாட்சியமாக, இந்தக் கட்டுரையின் நாயகன் வாழ்கிறார்.

கந்தப்பு நடராஜா, 1930ஆம் ஆண்டு, காரைநகர், களபூமி பொன்னாவெளி கிராமத்தில் பிறந்தார். சுந்தரமூர்த்தி பாடசாலை, காரைநகர் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வியைக் கற்ற இவர், சுவாமி விபுலானந்த அடிகளாரின் விருப்புக்குரிய மாணவனாகவும் இருந்திருக்கிறார்.

இப்படியாக வாழ்க்கைச் சுருக்கக் குறிப்பைக் கொண்டவரிடம், எப்படியாக இந்த ஆவணப்படுத்தல் மீதான ஆசை வந்தது என்று கேட்டால், “உங்களைப் பார்த்துத்தான்” என்று சுருக்கமாகப் பதிலளிப்பவரிடம், அந்தக் கேள்விக்கு ஆழமான பதிலும் உண்டு.

“எனக்கு இந்த விடயங்களில், முதல் ஒன்றும் தெரியாது. சண்டையள் ஓய்ஞ்ச பிறகு, தெற்குப் பக்கமிருந்த வாற யாவரியளுக்கு, எங்கட வீட்டுப் பழைய சாமானுகள நிறைய வித்திருக்கிறன். பிறகு ஏன் இவங்கள் இதுகள வாங்குறாங்கள் என்று யோசிச்சன். அப்பிடிக் காரணத்த தேடிக்கொண்டு போகேக்க தான், எங்கட அன்றாடப் பாவனைப் பொருட்களின்ர முக்கியத்துவமும் தனித்துவமும் விளங்கினது. அதுக்குப் பிறகு, என்னதான் கஸ்ரம் வந்தாலும், ஒரு பொருளையும் விற்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்தன். எங்கட தோட்டந்துரவு, வயல் எண்டு கிடந்த பழைய சாமானுகள் எல்லாத்தையும் பாதுகாக்கத் தொடங்கினன்.

“என்ன செய்ய…! இந்த அறிவு, எனக்கு வயசான பிறகு தான் வந்தது. இந்தப் பொருட்கள என்னால பராமரிக்கிற அளவுக்கு வலு இல்ல. ஆனா, இதையாவது என்னோடயே பத்திரப்படுத்தி வச்சிருக்கிறனே என்ற பெருமை இருக்கு” எனத் தொடர்ந்தவரின் வார்த்தைகளில், வயதின் இயலாமையும், அதையும் தாண்டி இயலுமையை வரவழைத்துக்கொண்டு செயற்பட வேண்டும் என்ற துடிப்பும் தெரிந்தது.

அப்படியே தன்னுடைய ஓர் அறைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பழைய பொருட்களைக் காட்டுவதற்கு ஐயா நுழைந்தார்.

அது, ஆவணக் காப்பகம் ஒன்றின் பிரதான இயல்புகளைக் கொண்டிருக்கவில்லை தான். சிலந்திகளின் வசிப்பிடமாகியிருக்கும் வெண்கலப் பொருட்களில், ஒவ்வொன்றையும் அவர் தன் கையால் எடுத்து எங்களுக்கு காட்டும்போது, கூடவே அந்தப் பொருளோடு தொடர்புட்ட நினைவின் வரலாற்றையும் பேசிக்கொண்டார்.

“இந்தா, இந்த வெண்கலக் குத்துவிளக்கு, 3 சதத்துக்கு வாங்கினது. இதை வாங்கும்போது, எனக்கு 12 வயசு. அப்ப தான் ஜப்பான் ஆர்மிக்காரர், காங்கேசன்துறைக்குக் குண்டுபோட்டவங்கள். காப்பிலி (ஆபிரிக்க) இராணுவம், காரைநகருக்குள்ள வந்தது. இங்க இருந்த காரைநகர் துறைமுகம், அந்த நேரம் பிரபலமாக இருந்தது. அதனால, இதால தான் யாழ்ப்பாணத்துக்கு எல்லாச் சாமானுகளும் போகும். அப்பிடித்தான் இந்தப் பொருட்களும் குறைஞ்ச விலைக்கு வாங்குப்பட்டது அந்த நேரம். இது மட்டுமில்ல, தட்டுமுட்டுச் சாமானுகள், துணிமணிகள், மட்பாண்டங்கள், இந்தியாவிலயிருந்து கொண்டு வந்த வடக்கன் மாடுகள் எல்லாமே, இந்தத் துறைமுகத்துக்குள்ளால தான் வரும். வடக்கன் மாடுகள், நல்லா வேலை செய்யும். காரைநகர் முழுவதுமே அப்ப ரெண்டு போக (நெல் விதைப்பு பருவ காலங்கள்) விதைப்புச் செய்வினம். மரக்கறி செய்வினம். இப்ப இதைச் சொன்னால் நம்புவியளே. காரைநகர் விவசாயத்தில சிறந்திருந்த காலம் அது” என, அங்கொன்றும் இங்கொன்றுமாக சொல்லிமுடித்த நடராஜா ஐயாவின் பேச்சில், அதிகளவில் வரலாற்றுச் செய்திகள் கலந்திருப்பதை, வாசிக்கும் நீங்கள் உணரக்கூடும்.

ஐயாவின் வீட்டில் இருக்கும் பொருட்கள் அத்தனையும், நூறாண்டுகள் கடந்தவை. கிடைத்தற்கரிய நூல்கள் பலவற்றை வைத்திருக்கிறார். குறிப்பாக, யாழ்ப்பாணத்தின் சுதேசிய மருத்துவக் குறிப்புகள் அடங்கிய நூல்கள் உள்ளடங்கி இருக்கின்றன. இன்னும் அதிகளவான நூல்கள், பார்வையிட வந்தோரால் அனுமதியின்றியே எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

பாவனைப் பொருட்கள் தொடக்கம் வீட்டின் சுவர் தொடக்கம், கதவுகள், யன்னல்கள் என அனைத்திலும், யாழ்ப்பாணத்துக்கே உரித்தான கட்டடவியல் பண்பாட்டுக்கூறுகள் நிறைந்திருக்கின்றன. வீடமைப்பில், யாழ்ப்பாண குறிப்பாக தீவகச் சூழலுக்கு எல்லாவிதத்திலும் பொருந்திவரும் நுட்பம், இயல்பாகவே கையாளப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும், நடராஜா ஐயாவின் வீட்டை வடிவமைத்தவர், கட்டடவியலாளரோ, இயந்திரவியலாளரோ அல்லர். நடராஜா ஐயாவின் தந்தையார் கந்தப்புவும் அவர்தம் நண்பர்களும் தான். அவர்கள், மரபார்ந்த விவசாயிகள்.

தமிழர்களின் பண்பாட்டுக் கூடமாக இருந்திருக்கும் அந்த வீடு, இப்போது மிச்சம் பிடித்து வைத்திருப்பவற்றைப் பார்த்து நிமிர்கையில், “எப்பிடி இருக்கு?” என்ற கேள்வியைக் கேட்கிறார்.

பெரும் பிரமிப்பைத்தவிர வேறு, எதையும் நம்மால் வழங்க முடியாதுதானே? “இவ்வளவு செழிப்பையும் விடுத்து, ஏன் ஐயா மக்கள் இங்கயிருந்து வெளியேறியிருக்கினம்?” என்ற கேள்வி, எங்களிடம் மீதமிருந்தது.

“போர்” என்ற அவரின் ஒற்றைச் சொல் பதிலுக்குப் பின்னால், ஆயிரம் அர்த்தங்கள் விரவிக்கிடக்கின்றன. அதைத் தொடர்ந்தார்:

“இரண்டாம் உலகப் போர் காலத்தில, காப்பிலிகள் (ஆபிரிக்கர்கள்) வரத் தொடங்கினதிலயிருந்து, மக்கள் இங்கயிருந்து இடம்பெயரத் தொடங்கினவ. அந்த நேரம், எனக்குத் தெரிய 40,000 பேர் அளவில் இங்க இருந்திருப்பினம். அப்பிடிப் போன ஆக்கள் பதுளை, பண்டாரவளை, கொழும்பு என்று குடியேறிச்சினம். கடல் பாதையள் அதிகமா இருக்கும் தீவுக்காரர் ஆனபடியால், யாவாரம் நல்லா பிடிபட்டது. யாழ்ப்பாணத்தில இருந்து புகையிலை கொண்டு போய், தெற்குப் பக்கங்களில் கடையளப் போட்டு வளர்ந்தவ. பிறகு, வேற வேற பிஸ்னஸ்களுக்கு (வணிகங்கள்) மாறி, இப்ப காரைநகராக்கள் எண்டால், பிஸ்னஸ்காரர் என்ற பேரெடுத்துப்போட்டினம் எங்கட ஆக்கள். ஆனால் நாங்கள், பாரம்பரியமான விவசாயிகள். அந்தத் தொழிலிலதான் எங்கட தொடக்கமிருந்தது.

“பிறகு ஆர்மி – இயக்கச் சண்டையள் வந்தது. மிச்சமிருந்த சனமும் யாழ்ப்பாணம், கொழும்பு, வெளிநாடு என்று போய்த் தங்கிட்டுதுகள். இந்தப் பிரச்சினைக்குள்ள, இங்க இருந்து நான் போகேல்ல. நடக்கிறது நடக்கட்டும் என்று இருந்திட்டன். என்னோட சேர்த்து, 900 பேர் இங்க தங்கினவ. பிறகு இங்க வீட்டுத் திறப்புகள கதவிலயே விட்டிற்று வெளிய போங்கோ, ஒரு கட்சிக்காரரிட்ட (கட்சியின் பெயரை, அவரின் பாதுகாப்புக் கருதிக் குறிப்பிடப்படவில்லை) நிர்வாகத்த நடத்தக் குடுக்கப்போறம் என்று கட்டளை வந்தது. நாங்களும் நம்பி வெளியேறினம். மூன்று, நான்கு நாள்கள் கழிச்சுப் போய் வந்து பார்த்தால், வீடுகளில இருந்த பெறுமதியான கனக்கச் சாமானுகள் களவு போயிருந்தன. கதவுகளத் திறந்தும் உடைச்சும், இருந்த பெறுமதியான பொருட்கள் எல்லாத்தையும் களவாடிக்கொண்டு போயிற்றாங்கள். சில வீடுகளில் தாய்லாந்து, சிங்கப்பூர்லயிருந்து கொண்டு வந்து பொருத்தியிருந்த கதவுகளக் கூட கழற்றிக்கொண்டு போட்டாங்கள்” என, அவரின் மூச்சிறைப்பு, களவாடப்பட்ட பொருட்களின் பெறுமதியையும் அந்தச் சம்பவத்தால் அவரடைந்த துயரத்தையும் எடுத்து விளக்கப்போதுமாயிருந்தது.

“சனம் வெளியேறினதுக்கு, தண்ணீரும் ஒரு காரணம். கிணறுகளில துலா போட்டு இறைச்சு, விவசாயம் செய்யும் வரைக்கும் குடிநீர்ப் பிரச்சினை வரேல்ல. குடிக்கவும் விவசாயத்துக்கும் அளவாத் தண்ணீரப் பாவிச்சம். நல்ல தண்ணீர், அப்பிடியே இருந்தது. என்றைக்கு எங்கட விவசாயிகள், பம்ப் (இயந்திரம்) போட்டுத் தண்ணீர் இறைக்கத் தொடங்கிச்சினமோ, அண்டையில இருந்து கடல் தண்ணீர், நல்ல தண்ணீரோட கலக்கத் தொடங்கீற்றுது. இப்ப, தண்ணீருக்காக போராடவேண்டியிருக்கு. மழை பெய்தால் மட்டும்தான் விவசாயம். ம்…”.

நீண்ட பெருமூச்சோடு, தன் உரையாடலை முடித்துக்கொண்ட கந்தப்பு நடராஜா ஐயாவிடம், காரைநகரின் ஒரு தொகுதி வரலாறே அடங்கியிருக்கிறது. அதை அங்கொன்றும் இங்கொன்றுமாகவேனும் அவர் நினைவில் வைத்திருக்கிறார். இந்த வாழும் முதுசொத்திடமிருந்து, கற்றுக்கொள்ளவும் மீள நிறுவவும் பல விடயங்கள் இருக்கின்றன. அவற்றை நாமும், அடுத்த தலைமுறையும் அறிந்துகொள்வதற்காகவாவது, இந்த மாதிரியானவர்களைப் பற்றிய பதிவுகள் அவசியப்படுகின்றது. அழிந்துவரும் தமிழினத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள, இந்த மாதிரியான மனிதர்களும் மிகச் சிறந்த தேடுபொறிகளாக இருக்கின்றனர் என்பதே, இந்த நுற்றாண்டின் அதிசயம்தான்.

http://www.sooddram.com/கட்டுரைகள்/அரசியல்-சமூக-ஆய்வு/காரைநகரில்-நடமாடும்-ஆவணக/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.