Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவீரர் நினைவில் - வ.ஐச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தோற்றுப் போனவர்களின் பாடல்
- வ.ஐ.ச.ஜெயபாலன்

எல்லா திசைகளில் இருந்தும் 
எழுந்து அறைகிறது 
வெற்றி பெற்றவர்களின் பாடல்.
பாடலின் உச்சம் எச்சிலாய் 
எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும்
அவர்கள் அஞ்சவே செய்வார்கள்.
ஏனா? 
அவர்களிடம் 
தர்மத்தின் கவசம் இல்லையே..

எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில் 
துளிர்க்கும் புற்களின் பாடலைப்போல
தோற்றுப் போன எங்களுக்கும்
பாடல்கள் உள்ளன.
உரு மறைந்த போராளிகள் போன்ற 
எங்கள் பாடல்களை
வென்றவர்கள் ஒப்பாரி என்கிறார்களாம்.
காவிய பிரதிக்கிணைகள் பல
புலம்பலில் இருந்தே ஆரம்பிக்கிறது.
அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்
செல்வத்தைத் தேய்க்கும் படை என்று
சொல்லப் பட்டுள்ளதே
தர்மத்தின் தோல்விகளில் இருந்து ஆரம்பிக்கிற 
மாகாவியங்களில் 
முன்னமே இதுபோல் பாடல்கள் உள்ளன.
காலம்தோறும் தோற்றுப்போன நீதியில் இருந்தே
புதிய வரலாறு ஊற்றெடுத்திருக்கிறது.
நாங்கள் இன்று தோற்றுப் போனவர்கள்.

இந்த நாட்க்களை 
அவர்கள் கொண்டாடுகிறார்கள்.
தாராளமாக எலும்புத்துண்டுகளை வீசியபடி.
அவர்கள் போதையும் உற்சாகமும்
அச்சம் தருகிறது.
இரவு எந்த முகாமில் இருந்து
விசாரணைக்காக தமிழிச்சிகளை
இழுத்துச் செல்லப் போகிறார்களோ.
அல்லது ஒரு வேடிக்கைக்காக 
எந்தக் கடலில் இந்திய தமிழர்களைச்
சுடப் போகிறார்களோ.

நாங்கள் அடக்கியே வாசிக்கிறோம்.
ஒன்பது முகத்தது இராவணனல்ல.
ஐந்து முகத்தது முருகனல்ல.
மூன்று முகத்தது ஒருபோதும் பிரம்மா அல்ல.
நாங்கள் வடக்குக் கிழக்காக
இருபுறமும் பல முகங்களைக் கொண்ட
அர்த்த நாரீஸ்வரர்கள்.
இதில் எந்த முகம் குறைந்தாலும் 
அது நாங்களல்ல.
தேர்ந்தெடுத்தாலும்கூட தப்பாகிவிடும்.

சிறைநீங்கி எங்கள் மக்களும் 
புத்தளத்துக்கு விரட்டப்பட்ட 
முஸ்லிம் சகோதரர்களும்
வீடு திரும்பவேணும்
ஒரு புதிய சகாப்தத்தைப் பிரசவிப்பதற்க்காக.

2

வென்றவர்களின் பாடல்கள் தளர்கிறது. அவர்கள் இப்பவே களைத்துப் போனார்கள்.
ஏனெனில் அதர்மம் ஒரு நோய்க்கிருமி.
எங்களிடம் தின்னக் கூடிதை எல்லாம்
தின்று விட்டார்கள். 
இனி ஒருவரை ஒருவர் தின்பார்கள்.

சுண்ணாம்பு மஞ்சளைச் குங்குமமாக்குமாப்போல 
சுயவிமர்சனம் தோல்வியை மருந்தாக்குமாம்.
எங்கள் முடக்கும் நோகளுக்கான மருந்து. 
அதுதான் எங்களுக்கிருக்கிற ஒரே தெரிவு.
சுயவிமர்சனத்தால் தோல்விகளுக்கு மந்திரத்தன்மையாம். 
நம்மைச் சுற்றி நாமும் சேர்ந்து
எழுப்பிய சுவர்கள்போய் எதிரியைச் சூழுமாம்.

பெயர்ந்த புலம் ஆகாசம்.
களம் மட்டுமே நிலம்.
புத்திசாலியின் கோட்டை
எப்பவும் நிலத்தில் ஆரம்பித்து
ஆகாசத்துள் உயர்கிறது.

தோற்றவர்களோ இரத்தத்திலும் சேற்றிலும் குல தெய்வங்களைத் தேடுகிறார்கள்.
அவர்கள் முள்ளி வாய்க்காலில் 
எரி நட்சதிரமான தீபனைப் போன்ற
கருப்ப்சாமியை காத்தவராயனை
மதுரைவீரனை கண்டெடுப்பார்கள்.
இது புதிய குலதெய்வங்களின் காலம்
பால்வதையுண்ட பெண்களின் கோபம்
அம்மன்களாய் அவதரிக்கும்.
எரிந்த காடு துளிர்ப்பதுபோல
அடங்கிய வாசிபாய் நிகழ்கிறது என் பாடல்.
ஏனேனில் முதலில் நாம் வீடு சேர்ந்தாகவேண்டும்.
இரண்டாவதகவும் மூன்றாவதாகவும்கூட 
நாம் வீடுபோய்ச் சேர்ந்தாக வேண்டும்.

3

எரிக்கப்பட்ட காடுநாம். 
ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது 
எஞ்சிய வேர்களில் இருந்து.
இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய்
தொலைந்தவர்களுக்கான அழைப்பாய்
இல்லம் மீழ்தலாய்
மீண்டும் மீண்டும் வாழும் ஆசையாய்
சுதந்திர விருப்பாய் 
தொடரும்மெம் பாடல்.
இது என் சொந்தப் பாடலல்ல என்பதை
நாழைய விமர்சகன் துப்பறிந்திடலாம்.
உஸ்…! 
தேம்ஸ் நதிக் கரைகளில் 
இலையுதிர்ந்த செறி மரங்கள் 
ஒத்திகை பார்க்கும்
வசந்தக் கனவுப் பாடலை
சுட்டே நான் இப் பாடலைப் புனைக்கிறேன்.

4

கலங்காதே தாய் மண்ணே.

வடக்குக் கிழக்காய் வீழ்ந்து கிடக்கிற
உன்னைக் காக்க
கள பலியான நம் பெண்களின் மீது
சிங்கள பைலா பாடியும் ஆடியும்
பேய்கள் புணரும் கொடும் பொழுதினிலும்
உடைந்து போகாமல்
நாளைய வழ்வின் பரணியையே பாடுக மனமே.
எரிந்த வேர்களிலும் உயிர்ப்பை 
சேர்க்கிற பாடல் அது.

வணக்கத்துக்குரிய நம் மூதாதையர்களின்
எலும்புகள்மீது எந்தத் தீயும் நிலைக்காது.
ஆதலினால் இந்தக்
கருமேகச் சாம்பல் வெளியில் இனி
வானவில்லாய் அரும் பென்று 
பல் பூக்களை அழைக்கும்
பட்டாம் பூச்சிகளின் பாடலையே பாடுக மனமே.
உறவுகளின் ஓலங்கள் அமுங்க 
இரங்கி ஒலிக்கும்
தோழ தோழியரின் முரசுகளே 
இனி வாழ்வின் பரணியை இசையுங்கள்.

அம்மா
ஈழத்து மண்ணும் நீரும் எடுத்து 
இன்பப் பொழுதொன்றில் 
நீயும் எந்தையும்
அழகுற என்னை வனைந்தீர்களே.
இதோ என் ஐம்பூதங்களால்
உனக்கு வனைவேன் ஒர் அரண். 
உன்னை உதைக்கிற
கால்களை சபிக்காமல்
என்ன மசிருக்கு இந்த பாடல்.

5

சிதறிக் காட்டினுள் ஓடிப் பதுங்காமல் 
மாயக் குழலூதி பின்னே
ஆற்றுக்குச் சென்ற எலிகளின் கதையில்
குழந்தைகளை இழந்த
ஹம்லின் நகரின் ஒப்பாரி
என் தாய் மண் எங்கும் கேட்கிறதே
என் தளரா நெஞ்சும் உடைகிறதே.

அல்லல் படும் மக்கள் 
ஆற்றாது அழுத கண்ணீரின்முன்
எது நிலைக்கும்? 
துளிர்க்கும் விடுதலைக் கனவைத் தவிர
எது நிலைக்கும்?

இன்றைய தேசங்கள்
முன்னைய சாம்ராச்சியங்களின் குப்பை மேட்டில் 
மனிதர்களால் கட்டப் பட்டவை.
இங்கு ஆயிரம் வருசத்து எல்லைகள்
எதுவும் இல்லை.

இந்த தேசங்கள் சிலதின் புதைகுழியில்
நாழைய தேசங்கள் முழைக்கும்.

தன் மக்களை மண்ணிலும் கடலிலும் 
வேட்டையாடும் தேசங்களுக்கு ஐயோ.
தன் மக்கள் மண்ணிலும் கடலிலும்
வேட்டையாடப் படுகையில் 
பிடில் வாசிக்கும் தேசங்களுக்கும் ஐயோ.
இன்றும் உங்களுக்குச் சந்தர்ப்பம் உள்ளது.
நாளை பசித்த செம் பூதங்கள் 
இந்துக் கடலிலும் கரைகளிலும் எழும். 
சின்ன மனிதர்கள்தானே என 
சூழப் பகை வளர்ப்பவருற்கு ஐயோ
அவர்களோ அச்சப்பட்ட சிறியோர் கூடிக்
கட்டிப் போட்ட கலிவர் போன்றவர்.

6 *************

நீதியற்ற வெற்றியில் 
களி கொண்ட வீடுகளில்
நாளை ஒப்பாரி எழும்.
ஆனால் வெண்புறாக்களாய்க் 
கொல்லப் படுபவர்
புலம்பி அழுத தெருக்களில்
நாளை குதூகலம் நிறையும்.
தீப்பட்ட இரும்பென் 
கண்கள் சிவந்தேன்
சபித்துப் பாடவே வந்தேன்.
முகமூடிகளும் ஒப்பனையுமற்ற
உருத்த்ர தாண்டவப் பாடலிது.

என் தமிழின் மீதும் 
என் கவிதைகள் மீதும் ஆணையிட்டு
நான் அறம் பாடுகிறேன்.
நான் எனது சமரசங்களிலாத 
சத்தியதின் பெயரால் சபிக்கிறேன்
எனது மக்களின் இரத்தத்தில் கைகளும் மனங்களும் தோய்ந்தவர்களே 
உங்களுக்கு ஐயோ.
தர்மத்தின் சேனையே
என்னை களபலியாக எடுத்துக்கொள்.

தர்ம தேவதையே 
எப்பவுமே எதிரிக்கும் போராளிக்கும்
பணியாத தலை பணிந்து
உன்னை பாடித் தொழுதிரந்தேன்.
இனக் கொலைகளுக்குத் தண்டனை கொடு.
கொன்றவர்கள்,
கத்தி கொடுத்தவர்கள்
தடுக்காதவர்கள்
தடுத்தவரைத் தடுத்தவர்கள் மீதெல்லாம்
தர்ம சங்காரம் 
ஊழித் தீயாய் இறங்கட்டும்.

7

ஆதித் தாயே கலங்காதே,
இனியும் தோற்றுப்போக 
எங்கள் வரலாறு 
முள்ளிவாய்க்கலில் கட்டிய 
மணல் கோட்டையல்ல.
அது வட கிழக்கு மக்களின் வாழும் ஆசை.
மடியாத கனவுகள்

உன் கூப்பிட்ட குரலுக்கு
மெல்போணில் இருந்து
ரொறன்ரோ வரைக்கும்
ஏழு சமுத்திரங்களிலும்
தமிழர்கள் விழிக்கின்றார். . 
உலகக் கோடியின் கடைசித் தமிழனுக்கும் 
உனது விடுதலைக் கனவுதான் தாயே.

8

சூழும் வெட்டு முள் வேலிகள் அதிர
பகலில் எங்கள் இளைஞரின் அலறலும்
இரவுகள்தோறும் இழுத்துச் செலப் படுகிற 
எங்கள் பெண்களின் ஓலமும் 
உயிரை அறுக்குது.
சிங்களப் பயங்கரம் தாளாத முத்துக்குமரனாய்
தமிழகம் தீக்குளிக்கையில்,
இனக்கொலையின் சாட்சியங்களை
உலக மன்றுக்கு
சிங்கள பத்திரிகையாளரே கடத்திச் செல்கயில்,
ஏன் ஏன் எங்கள் தாயாதிகள் 
நாடு நாட்டாய் சென்று
இனக்கொலைக்கு வக்காலத்து வாங்கினர்?
இந்தக் கொடுமையை எங்குபோய் உரைப்பேன்..
இந்தக் கயமையை எங்கனம் செரிப்பேன்.

“அவர் அறியாத்தே செய்யுன்னதன. அவர்க்கு மாப்பு நல்குக.”

9

மொழியில் வேரூன்றி
நினைவுகளில் படர்ந்து
கனவுகளில் வாழ்கிற 
புலம்பெயர்ந்த தமிழன்நான். இனி ஒரு இணையச் சொடுக்கில்
கோடி கோடியாய் 
நம் கைகள் பெருகி உயர்கிற
நாட்க்கள் வருகுது. 
வாழ்த்தாய் எழுக 
நாழைய கவிஞரின் பாடல்கள்.

நான் இன்றைப் பாடும் நேற்றைய கவிஞன்
நாளையைப் பாடும் இன்றைய கவிஞர்காள்
எங்கள் அரசன் கட்டியதென்பதால்
கடற்கரைஓரம் இடிந்து கிடக்கும்
பிழைபடக் கட்டிய 
புதை மணல் கோட்டையை
அதன் பிழையோடு 
மீழக் கட்டிக் குடிபுகும் அரசியல்
எந்த வகையில் விடுதலையாகும்?. 
தவறிய வழியில்
தொடர்ந்து செல்வோம் என்கிற விடுதலை
எந்த வகையில் அரசியலாகும்?

முஸ்லிம் என்று
புத்தளக் களரில் வீசப்பட்ட நம்
அகதிகளுடைய முன்றில்களிலும் 
தமிழர் என்று வதைக்கப் பட்டு
வன்னி விழிம்பில் சிறைபட்டிருப்பவர் 
வாசல்களிலும்
கோழி காகத்தை முந்தி நான் சென்று
குடு குடுப்பையை ஒலிப்பதைக் கேளீர்.
இது கோவில் மணியும் பள்ளிவாசலின் பாங்கும்
தேவாலயத்துப் பூசைப் பாடலும்
மீண்டும் ஒலிக்க
நல்லகாலம் வருகுது வருகுது என்று 
குறி சொல்லிப் பாடுகிற
கடைச் சாமத்தின் பாடல்
இனி பல்லியம் இசைத்தபடி
விடியலின் கவிஞர்கள் வருவார்.

10

சிறைப்பட்ட என் தாயே
தப்பி ஓடலில்லையம்மா.
ஒடுக்கப்படுகிற ஒரு இனத்தின் புலப் பெயர்வு
பின் போடப் பட்ட விடுதலைப் போராட்டம்.

நாம் உயிர்த்தெழுகிற பாடல் இதுதான்.
நாங்களும் வாழ்வோம்.
தமிழர் என்பதால் கால் நூற்றாண்டாய் 
சேதுக் கடலில் 
நாய்கள் போலச் சுடப்படுகிற
நாதியற்ற இந்தியர்களையும் காக்கவேணும்.

அன்னை மண்ணே
விடியல்கள் தோறும் 
தொடைகளில் இரத்தம் சிந்தச் சிந்த
மரங்களின்கீழே குந்தியிருந்து
மூண்டெரிகிற நம் பெண்களுடைய 
அன்னை மண்ணே,

எதிரிகளாலும் 
இன்னும் திருத்தாத தவறுகளாலும்
தோற்கடிக்கப் பட்டு 
வெட்டு முள்வேலிச் சிறைகளுள் வீழ்ந்த
அன்னை மண்ணே. 
இனக் கொலை வெறியோடு
எம்மைத் துரத்தும் 
சிங்கள எதிரியை மட்டுமல்ல
குறித்துக் கொள் 
தப்பி ஓடிய நம் மக்களைத் தடுத்தவர்
எம் மக்களுக்கெதிராய் துப்பாக்கி நீட்டியவர்
நம் அண்ணன் தம்பி ஆயினும் சபிக்கின்றேன்
உலகின் எந்த மூலையில் ஒழித்தாலும் ஐயோ.

என் மக்களுள்ளிருந்து ஊற்றெடுக்காத
அதிகாரங்களை நிராகரிக்கிறது என் பாடல். .

கழைத்தும் பசித்தும் தாகித்தும் இருக்கிற
புண்பட்ட தாயே 
முதலில் நீ வீடு திரும்ப வேண்டும்.
உனக்கு இப்ப என்ன வேண்டும் என்பதை 
ஆகாயத்தில் இருக்கிற நாங்களல்ல
களத்தின் சவால்களை எதிர்கொள்ளுகிற நீ மட்டுமே அறிவாய்.
நாளை என்ன வேண்டும் என்பதையும்
நாளை நீதான் காணுவாய்.
தாயே உன்னைப் பீடித்த பிசாசுகள் அல்ல நாம்
இனி என்றும் நாங்கள் உனது கை 
அற்புத விளக்குகள் மட்டுமே.

11

நினைவிருக்கிறதா தாயே
"எத்தனை காட்டுத் தீகளும் அணைந்தே போகும்
முகம் கொடுக்கும் புல்வெளிகளோ 
பூத்துக் குலுங்கும்" என
வியட்னாம் எரிகையில் நான் பாடிய பாடல்.
என் அன்னை மண்ணில் நெருப்பிடை நின்று
இன்றும் அப்பாடலை பாடுக என் மனசே.

2009 நவம்பர்

 
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.