Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனா: உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - சினிமா விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
கனாபடத்தின் காப்புரிமை SK PRODUCTIONS
   
திரைப்படம் கனா
   
நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன், ரமா, இளவரசு, முனீஸ்காந்த்
   
இசை திபு நைனன் தாமஸ்
   
ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன்
   
இயக்கம் அருண்ராஜா காமராஜ்

இசையமைப்பாளராக இருந்து இயக்குனராகியிருக்கும் அருண்ராஜா காமராஜின் முதல் படம் இது. தயாரிப்பாளராக நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் முதல் படம் இதுவே. ஒரு சிறு கிராமத்திலிருக்கும் பெண்ணின் கிரிக்கெட் கனவும் அது நனவாக அவர் நடத்தும் போராட்டமும்தான் ஒருவரிக் கதை.

 

குளித்தலையில் வசிக்கும் விவசாயியான முருகேசன் (சத்யராஜ்) ஒரு கிரிக்கெட் பைத்தியம். தந்தையைப் பார்த்து மகள் கௌசல்யாவுக்கும் (ஐஸ்வர்யா ராஜேஷ்) சிறு வயதிலேயே கிரிக்கெட் மீது பெரும் ஆர்வம் ஏற்படுகிறது. தன் ஊரில் இருக்கும் பையன்களுடன் சேர்ந்து விளையாட ஆரம்பிக்கிறார். முருகேசனுக்கு இது பிடித்திருந்தாலும் தாய் (ரமா) கடுமையாக எதிர்க்கிறார். ஊருக்குள்ளும் கேலிசெய்கிறார்கள். இதையெல்லாம் மீறி கௌசல்யா இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று, அணி உலகக் கோப்பையைப் பெறுவதற்கு காரணமாக மாறுவது மீதிக் கதை. அதற்கு இணையாக, முருகேசன் விவசாயத்தில் ஏதிர்கொள்ளும் பிரச்சனைகளும் சொல்லப்படுகின்றன.

விளையாட்டை பின்னணியாகக் கொண்ட கதைகளை படமாக எடுப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அந்த விளையாட்டைச் சொல்லும் விதம் சுவாரஸ்யமான திரைக்கதையாக மாறவில்லையென்றால், விளையாட்டு தெரியாதவர்கள், ஆர்வமில்லாதவர்கள் மத்தியில் படம் சுத்தமாக எடுபடாமல் போய்விடும். ஆனால், அந்த சவாலை மிக எளிதாகக் கடந்திருக்கிறார் அருண்ராஜா காமராஜ். பரவலாக எல்லோரும் அறிந்த கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து, ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையைச் சொல்லியிருப்பதோடு, காவிரி பிரச்சனை, நிலம் கையகப்படுத்துவது, கடன் பிரச்சனை போன்றவற்றை இணையாக சொல்லிக்கொண்டே போகிறார்.

 
கனாபடத்தின் காப்புரிமை SK PRODUCTIONS

கிராமத்தில் அரசுப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பெண்ணுக்கு கிரிக்கெட் மீது ஆசை வருவது, அந்த ஆசை பள்ளிக்கூடத்தைத் தாண்டுவதில் ஏற்படும் சிக்கல், கிராமத்தைத் தாண்டிய பிறகு இந்திய அணியை அடைவதில் ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என மிக துவக்கத்திலிருந்தே படம் விறுவிறுப்பாக நகர்கிறது. விளையாட்டில் ஈடுபட விரும்பும் பெண், கிராமத்தில் உள்ள இளைஞர்களுடன் மிக இயல்பாக விளையாடும் காட்சிகளும் அவர்கள் மிகுந்த நல்லுணர்வுடன் அந்தப் பெண்ணை அரவணைத்துச் செல்வதும் என நேர்மறையான காட்சிகளுடன் படம் முழுவதும் நகர்கிறது.

படத்தின் முக்கியமான பிரச்சனை, முருகேசன் விவசாயத்தில் எதிர்கொள்ளும் சிக்கலைச் சொல்லும்போது உள்ள இயல்புக்கு மாறான காட்சிகள்தான். ஒரு கட்டத்தில் இந்தக் காட்சிகள், படத்தின் மையம் எது என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றன. ஆனால், பிறகு சுதாரித்துக்கொள்கிறார் இயக்குனர்.

ஒட்டுமொத்தப் படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். நாயகிகளை மட்டும் மையப்படுத்தும் திரைக்கதைகளுக்கு என இன்னும் ஒருவர் கிடைத்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. அவரது திரைவாழ்வில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கக்கூடும்.

கனாபடத்தின் காப்புரிமை SK PRODUCTIONS

சத்யராஜ், சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் படத்தின் பிற எனர்ஜி பூஸ்டர்கள். அதிலும் நரைத்த தாடியுடன் வரும் சிவகார்த்திகேயன், தன் வழக்கமான பாணியைக் கைவிட்டுவிட்டு, பாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்.

கதாநாயகியின் தாயாக வரும் ரமா, முருகேசனின் நண்பராக நடிக்கும் இளவரசு ஆகியோருக்கும் மனதில் பதியும் கதாபாத்திரங்கள்.

இசையமைப்பாளர் திபு நைனன் தாமஸின் இசை படத்திற்கு பக்கபலம். 'சவால்' பாடல், படம் முடிந்த பிறகும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனுக்கு இது பெயர் சொல்லும் படம். குறிப்பாக கிரிக்கெட் காட்சிகளை படமாக்கியிருக்கும் விதம் அசத்துகிறது.

படத்தின் நீளம் சற்று அதிகம் என்றாலும் பார்த்து, ரசிக்கத்தக்க படம்

https://www.bbc.com/tamil/india-46618759

Edited by பிழம்பு

கனா / விமர்சனம் 

‘நகச்சுத்தி’க் காரனின் மோதிர விரலுக்குள் நறுக்கென ஒரு எலுமிச்சம் பழத்தை சொருகியிருக்கிறார் அறிமுக இயக்குனர் அருண்ராஜா காமராஜ். இந்த கனா எழுப்புகிற வினா ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்ல வேண்டியவர்கள் யாரோ... அவர்களுக்குத் தெரியும், இது வெறும் படமல்ல.... அதையும் தாண்டிய கத்திக் குத்து என்று! 

கிரிக்கெட் வெறியரான சத்யராஜின் மகள்தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தியா தோற்றுவிட்டதே என்று கண்ணீர் விடும் அப்பாவுக்காக அதே இந்தியன் டீமில் விளையாடி ‘கப்’ வென்று அப்பா முகத்தில் சிரிப்பை காண வேண்டும் என்று நினைக்கிற மகள் தன் லட்சியத்தை நிறைவேற்றினாளா? இரண்டே வரி கதைதான். ஆனால் இதற்குள் இருக்கும் போராட்டத்தை சுளீர் சுளீரென சொல்லிக் கொண்டேயிருக்கிறார் அருண்ராஜா. விவசாயத்தையும் விளையாட்டையும் ஒரு புள்ளியில் இணைக்கும் அந்த தருணம், இந்தியாவின் நிகழ்கால அரசியல் தலைகுனிய வேண்டிய தருணம்! 

ஒரு பெண் தன்னை சுற்றியிருக்கிற வேலிகளை உடைத்துக் கொண்டு முளைப்பது சாதாரண விஷயமல்ல என்பதை உணர்வும் மூச்சுமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். சாவித்ரி, பானுமதிகளை தமிழ்சினிமா இழந்துவிட வில்லை என்பதை நிரூபித்திருக்கிற ஐஸ்வர்யாவுக்கே இப்படத்தின் பெரும்பாலான பெருமைகள் போய் சேர வேண்டும். அப்படியொரு பர்பாமென்ஸ். உழைப்பு. ஒரு நிஜமான கிரிக்கெட் வீராங்கனையாகவே உருமாறியிருக்கிறார். எங்கும் எதிலும் டூப் இல்லை. இந்த வெறித்தனமான உழைப்பு... வேறெந்த நடிகைகளுக்கும் சாத்தியமில்லாததும் கூட! 

‘பாஸு பெயிலுங்கறதெல்லாம் சம்பாதிக்க நினைக்கிறவங்களுக்குதான். சாதிக்க நினைக்கிறவங்களுக்கு இல்ல’ -பெற்ற மகளின் மேல் மொத்த நம்பிக்கையும் இறக்கி வைக்கிற அப்பாவாக சத்யராஜ். விவசாயக் கடனுக்காக வீட்டையே ‘ஜப்தி’ கொடுத்துவிட்டு மகள் இந்தியாவுக்காக விளையாடுவதை ரசிக்க உட்காருகிறாரே... அங்கு பொங்குகிறது தியேட்டர். இந்தப்படத்தின் கடைசி அரை மணித் துளிகளை ஆளுக்கு கொஞ்சமாய் பங்கு போட்டுக் கொண்டு அசர விடுகிறார்கள் அப்பனும் மகளும்! 

கிரிக்கெட் கோச்சராக சிவகார்த்திகேயன். இந்த படத்தை தயாரித்து ஒரு சில காட்சிகளில் நடிக்கவும் செய்திருக்கிறார். இரண்டுக்கும் சேர்ந்த கைதட்டல்கள் நிச்சயம். “ஜெயிக்கிறேன்னு சொன்னா இந்த உலகம் கேட்காது. ஆனா ஜெயிச்சவன் சொன்னா கேட்கும்!” அழுத்தம் திருத்தமாக பேசும் சிவாகார்த்திகேயன், வெற்றி என்பது உடல் பலம் மட்டுமல்ல, உள்ளத்தின் பலமும் கூட என்று உணர்த்துகிறார். 

சத்யராஜின் மனைவியாக நடித்திருக்கும் என்னுயிர் தோழன் ரமாவுக்கு அழுத்தம் திருத்தமான ரோல். வயசுக்கு வந்த மகள் ஆம்பள பசங்க கூட கிரிக்கெட் விளையாடுகிறாளே என்கிற ஆத்திரத்தை விளக்குமாறு கொண்டு விளாசி விளாசி புரிய வைக்கிறார். ஒரு கட்டத்தில் மகளின் லட்சியத்தை அவரே புரிந்து கொள்கிற காட்சி சிலிர்ப்பு. 

நண்பன் சத்யராஜ் வாழ்க்கையே வெறுத்து ஒரு விபரீத முடிவை எடுக்கப் போகிறார் என்பதை புரிந்து கொண்டு, அதை சமயோஜிதமாக தடுக்கிற இளவரசு கேரக்டரில்தான் எவ்வளவு பக்குவம்! 

கரணம் தப்பினால் டாகுமென்ட்ரி என்கிற அபாயத்தை தன் கலகலப்பால் கரையேற்றுகிறார்கள் தர்ஷன், முனிஸ்காந்த், பாக்யராஜ், சவரிமுத்து போன்ற நடிகர்கள். 

குறிப்பாக சின்ன வயசு ஐஸ்வர்யா ராஜேஷாக ஒரு யூனிபார்ம் சிறுமி நடித்திருக்கிறாள். என்னவொரு பர்பாமென்ஸ்! 

நினன் தாமஸ் இசை அற்புதம். அதுவும் அந்த ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் சூப்பர் ஹிட் சுகம்! 

வேல்டு கப் கிரிக்கெட் போட்டியை கண்முன் கொண்டு வந்த ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனுக்கு பாராட்டுகள். 

‘விளையாட்டை சீரியஸ்சா எடுத்துக்கிற இந்தியா, விவசாயத்தை விளையாட்டா கூட எடுத்துக்க மாட்டேங்குது!’ இப்படி படம் நெடுக சுளுக்கெடுக்கும் வசனங்களை தனி தொகுப்பாகவே வெளியிடலாம்! 

வருட இறுதியில் அருளப்பட்டிருக்கும் மாபெரும் பிரசாதம் கனா! வழங்கிய உள்ளங்களுக்கு வணக்கமும் வந்தனமும்! 

-ஆர்.எஸ்.அந்தணன் 
newtamilcinema.com

https://m.youtube.com/watch?feature=share&v=50tghA6L8Tg

https://m.youtube.com/watch?feature=share&v=50tghA6L8Tg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.