Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் ராஜதந்திரம்? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் ராஜதந்திரம்? - யதீந்திரா

ராஜதந்திரம் தொடர்பில் ஒரு பிரபலமான கூற்று உண்டு. அதாவது, ஆயுதம் இல்லாத ராஜதந்திரம் என்பது, இசைக்கருவிகள் இல்லாமல் இசையமைப்பதற்கு ஒப்பானது. ( Diplomacy without arms is like music without instruments) இது 18ம் நூற்றாண்டில், பிரட்றிக் த கிறேட் என்னும் பிரஸ்யன் அரசனால் கூறப்பட்ட வாசகம். பிற்காலத்தில் நெப்போலியன், இந்த வாசகத்திலுள்ள ஆயுதம் என்னும் சொல்லுக்கு பதிலாக பலம் (Force) என்னும் சொல்லை பயன்படுத்தியிருந்தார். அதாவது, ஒரு பலம் இல்லாத ராஜதந்திரம் என்பது இசைக்கருவிகள் இல்லாமல் இசையமைப்பதற்கு ஒப்பானது. இன்றும் உலக ராஜதந்திர அரசியலில் இந்த வாசகம் கவர்ச்சி குன்றாத ஒன்றாகவே இருக்கிறது. இந்தக் கட்டுரையில் நான் வாதிடவுள்ள விடயங்களுக்கும் மேற்படி கூற்றுக்கும் ஒரு தொடர்புண்டு.

அண்மையில் காலம் சென்ற விடுதலைப் புலிகளின் தத்துவ ஆசிரியர் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் பிறிதொரு பெயரில் நினைவுகூரப்பட்டது. அங்கு, காலம் சென்ற ஒரு தமிழ் ராஜதந்திரியை நினைக்கும் வகையில் தமிழரின் ராஜதந்திர அரசியல் தொடர்பிலும் பேசப்பட்டது. இந்த உரைகளை அவதானித்த போது இப்படியொரு தலைப்பில் எழுத வேண்டுமென்னும் எண்ணம் ஏற்பட்டது. பாலசிங்கத்தை ஒரு தமிழ் ராஜதந்திரி என்று கூறுவதற்கான முழுத் தகுதியுடன் அவர் இருந்தார் என்பது உண்மை. பாலசிங்கத்திற்கு முன்னரும், பின்னரும் பாலசிங்கத்தை போன்று ஒரு தமிழ் ராஜதந்திரியாக எவராலும் செயற்பட முடியவில்லை என்பதும் உண்மையே! இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். அவ்வாறாயின் ஏன் அவருக்கு முன்னால் அப்படியான ஆளுமைகள் உள்ள எவரும் இருந்திருக்கவில்லையா? அல்லது அப்படியானவர்கள் உருவாகுவதற்கான களநிலைமைகள் இருந்திருக்கவில்லையா? நிச்சயமாக இருந்தது. ஈரோஸ் இயக்கத்தை சேர்ந்த ரத்தினசபாபதி, புளொட் இயக்கத்தை சேர்ந்த சந்ததியார் போன்றவர்களிடம் மார்க்சிய பின்புலத்தில் விடுதலை அரசியலை முன்னிறுத்துவதற்கான அரசியல் மற்றும் தத்துவார்த்த ஆற்றல் இருந்ததாக அறியமுடிகிறது. இன்னும் பலரும் இருந்திருக்கலாம். சிவராம் இதன் பிற்பகுதியில் வந்த ஒருவர். சிவராமின் எழுத்துக்கள் அதிகம் இராணுவ விஞ்ஞான கண்ணோட்டத்தில் விடுதலைப் போராட்டத்தை ஆய்வுக்குட்படுத்தியதைவே அன்றி, விடுதலை அரசியலை பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தவை அல்ல. ஆனாலும் தமிழ் ராஜதந்திர பின்புலத்தில் சிவராமை முன்னிறுத்தி வாதிடலாம் என்று நினைப்பது பொருத்தமான ஒன்றல்ல. ஆனால் சிவராமிடம் அதற்கான ஆற்றலும் ஆளுமையும் இருந்தது என்பதை மறுக்கமுடியாது. ஆனால் ஒருவரிடம் ஆற்றல் இருக்கிறது என்பது வேறு அவரது ஆற்றலை பிரயோகிப்பதற்கான களம் என்பது வேறு. இந்த இடத்தில்தான், பாலசிங்கம் மட்டும் எவ்வாறு ஒரு தமிழ் ராஜதந்திரியாக பரிணமிக்க முடிந்தது என்பதற்கான பதிலும் இருக்கிறது. ஏனெனில் பாலசிங்கத்தின் ‘ராஜதந்திரி’ என்னும் அந்தஸ்த்து ஒரு ஆயுதபலத்தின் ஊடாக அவருக்கு கிடைத்தது. ஆயுதமே சர்வதேச அரங்குகளில் பாலசிங்கத்தை ஒரு தமிழ் ராஜதந்திரியாக்கியது. அதாவது பாலசிங்கம் இசைக்கருவிகள் இல்லாமல் இசையமைக்கச் செல்லவில்லை. எனவே பாலசிங்கத்தை முன்னிறுத்தி தமிழ் ராஜதந்திரம் பற்றி பேச முற்படுவோர், அதற்கு பின்னாலிருந்த விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை கருத்தில்கொள்ளாமல் பேசுவது தவறாகும்.

தமிழர் விடுதலை போராட்டம் ஜந்து இயக்கங்களால் பங்குபோடப்பட்டிருந்த சூழலில், அவற்றுக்கான ராஜதந்திர அந்தஸ்த்தை இந்தியா வழங்கியிருந்தது. அதாவது, இயக்கங்களை இராணுவரீதியில் வலுப்படுத்தி, அவற்றுக்கு திம்புப் பேச்சுவார்த்தையில் சிறிலங்காவுடன் சமதையாக பேசுவதற்காக சூழலையும் இந்தியா வலிந்து ஏற்படுத்தியிருந்தது. இராணுவ ரீதியில் பலப்படுத்தப்பட்ட பின்னர்தான், அந்த ராஜதந்திர அந்தஸ்த்து வழங்கப்பட்டது. 90களுக்கு பின்னர், விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவை பகைத்துக் கொண்டு, சுயாதீனமாக தங்களை இராணுரீதியில் பலப்படுத்தி, வன்னியை மையப்படுத்தி ஒரு நிழல் அரசாங்கத்தை நிறுவிய பின்புலத்தில்தான் மீண்டுமொரு ராஜதந்திர களம் திறக்கப்படுகிறது. விடுதலைப் புலிகள் சர்வதேசரீதியில் ராஜதந்திர அந்தஸ்த்தை பெறுகின்றனர். அந்த வகையில் பார்த்தால், திம்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் தமிழ் ராஜதந்திரத்தை பிரயோகிப்பதற்கான மீண்டுமொரு களம் ஒஸ்லோவில் திறக்கப்பட்டது. மேற்படி இரண்டு சந்தர்ப்பங்களையும் உற்றுநோக்கினால், இரண்டுக்கு ராஜதந்திர வாய்ப்புக்களுமே, ஆயுதங்களின் வழியாக கிடைக்கப்பெற்றதுதான். அதாவது, ஆயுதங்கள் அல்லது பலம் என்பது ராஜதந்திர அரசியலுக்கான தற்பாதுகாப்பாக இருந்தது. ராஜதந்திர நகர்வுகள் பிழைத்தால் மீளவும் யுத்தம் மூளும் என்னும் ஒரு எச்சரிக்கையுணர்வை அரசாங்கத்திற்கு கொடுத்துக் கொண்டிருந்தது.

ஒஸ்லோ பேச்சுவார்த்தைகள் முறிவடைந்த போது விடுதலைப் புலிகள் மீளவும் யுத்தத்திற்கு சென்றனர். அது தோல்வியில் முடிந்தது. அவ்வாறானதொரு முடிவு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் பாலசிங்கம் உயிரோடு இல்லை. ஒரு வேளை அவர் இருந்திருந்தால் தனது முழு ஆற்றலையும் தொடர்புகளையும் பயன்படுத்தி, விடுதலைப் புலிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பார் என்றும் ஒரு கருத்துண்டு. இதனை முற்றிலுமாகவும் நிராகரித்துவிடவும் முடியாது. ஏனெனில் பாலசிங்கம் மேற்குலக ராஜதந்திரிகளுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தார். ஏனெனில் பாலசிங்கம் தூய்மைவாத சிறைக்குள்ளிருந்து சிந்தித்த ஒருவரல்ல. இதன் காரணமாகத்தான், 2016இல், ரஜீவ்காந்தி படுகொலையை விவகாரத்தில் இந்தியாவிடம் மன்னிப்புக் கோரினார். எனெனில் இறுதி யுத்தத்தின் போது, இந்தியாவினால் மட்டும்தான் தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கமுடியும் என்பதை பாலசிங்கம் ஒரு ராஜதந்திரி என்னும் வகையில் நன்கு அறிந்திருந்தார். ஆனால் இன்று பாலசிங்கம் தொடர்பில் பேசுபவர்களும், அவரது உருவப்படத்திற்கு மலர்மாலை போடுபவர்களும், அவரிடமிருந்து எதையாவது கற்றுக்கொண்டிருக்கின்றனரா!

anton balasingam

2009இற்கு பின்னர் ராஜதந்திர போராட்டம், மென்வலு ராஜதந்திரம் என்றெல்லாம் ஏதோ கூறிக் கொண்டாலும் கூட, உண்மையில் ராஜதந்திர அரசியலுக்கான எந்தவொரு வாய்ப்பும் தமிழர்களிடம் இருந்திருக்கவில்லை. எனெனில் 2009இற்கு பின்னர் தேர்தல் மூலம் கிடைக்கப்பெற்ற பாராளுமன்ற பிரதிநித்துவம்மட்டும்தான் தமிழர்களிடமிருந்த ஒரேயொரு பலம். உண்மையில் தேர்தல் அரசியல் என்பது, ராஜதந்திர அரசியலை கையாளுவதற்கான ஒரு பலம் அல்ல. இதனை சரியாக புரிந்துகொண்டால்தான் இன்றைய சூழலில், தமிழர்களால் ராஜதந்திர அரசியலை கையாள முடியுமா என்பதையும் புரிந்துகொள்ள முடியும். ஆயுத விடுதலை இயக்கங்கள் எழுச்சிபெறுவதற்கு முன்னர் எவ்வாறானதொரு நிலைமை இருந்ததோ, அவ்வாறானதொரு நிலைமைதான் தற்போதும் இருக்கிறது. அரசியல்வாதிகளே ராஜதந்திரிகளாகவும் தொழிற்படுகின்றனர். அரசியல் வாதிகள் ராஜதந்திரிகளாக இருக்க முடியாது என்று நான் வாதிடவில்லை. திம்பு தொடக்கம் தற்போதுள்ள அரசியல் சூழல் வரையில் அனுபவம் கொண்ட அரசியல் வாதிகள் தமிழ் சூழலில் இருக்கின்றனர்தான். ஆனால் தமிழ் அரசியல் ஒரு தரப்பாக தன்னை நிருபிக்க முடியாத சூழலில் ராஜதந்திரம் என்பது வெறும் சொல்லேயன்றி, அதற்கு செயல் ரீதியில் எந்தவொரு பெறுமதியும் இருக்கப் போவதில்லை.

2009இற்கு பின்னரான சூழலில் தமிழ் தேசிய அரசியல் தன்னை ஒரு பலமாக உருத்திரட்டிக் கொள்ளவில்லை. பலமில்லை என்றால் ராஜந்திரமும் இல்லை. அந்த வகையில் நோக்கினால், இன்றைய தமிழ் அரசியல் என்பது முக்கியமாக கூட்டமைப்பின் தலைமையில் இருக்கும் அரசியல் என்பது வெறும் தரகு அரசியல்தான். அதற்காக கூட்டமைப்பிற்கு வெளியில் தங்களை அடையாளப்படுத்த முயல்பவர்களிடம் அவ்வாறானதொரு பல மையம் இருப்பதாகவும் நான் கூறவில்லை. மொத்தத்தில் இன்றைய தமிழர் அரசியல் என்பது போகுமிடம் தெரியாத அரசியல்தான்.

ராஜதந்திர அரசியல், தந்திரோபாயம், மூலோபாயம் இப்படியான சொற்கள் சாதாரண மக்களுக்குரியவை அல்ல. இது அரசியலை இலக்கு நோக்கி கையாள முற்படும் அரசியல் சக்திகளுக்குரியவை. அப்படிப் பார்த்தால் இவ்வாறான சிந்தனைகள் ஆயுத இயக்கங்களின் தோற்றங்களின் பின்னர்தான் தமிழ் சூழலுக்கு அறிமுகமானவை. மிதவாதிகள் அரசியலை தீர்மானித்த காலத்தில் இது போன்ற சிந்தனைகள் தமிழ் சூழலுக்கு சொற்களாகக் கூட பரிச்சயமாகியிருக்கவில்லை.

TNA-yaalaruvi

தமிழ் சூழலில் ராஜதந்திர ஆற்றலுள்ள அரசியல் தலைவர்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் ஏன் உருவாகவில்லை என்பதையும் நாம் ஆழமாக பரிசீலிக்க வேண்டும். மிதவாதிகளைப் பொறுத்தவரையில் அவர்களில் அனேகர் பகுதி நேர அரசியல்வாதிகளாகவே இருந்தனர். தமது அப்புக்காத்துத் தொழிலுக்கான நேரம் போக, மிகுதி நேரத்தில்தான் அரசியல் பேசினர். அவர்களிடமும் சட்ட அறிவைத்தாண்டி, அரசியல் கருத்தியல் மற்றும் தத்துவார்த்த அறிவு இருக்கவில்லை. விடுதலை அரசியல் ஒன்றை தாம் பிரதிநித்துவப்படுத்துகின்றோம் என்னும் புரிதல் அனேகரிடம் இருந்திருக்கவில்லை. 2009இற்கு பின்னர் இந்த நிலைமை மேலும் மோசமடைந்தது. ஆரம்பகால மிதவாதிகளிடம் இருந்த ஆகக் குறைந்த அரசியல் ஒழுங்கு மற்றும் நேர்மை கூட இவர்களிடம் இருக்கவில்லை. 2009இற்கு பின்னர் அரசியல் அரங்கிற்கு வந்திருக்கும் தமிழரசு கட்சியின் அரசியல் வாதிகளில் அனேகர் அரசியல் தொடர்பில் எவ்வித பயிற்சியோ படிப்போ இல்லாதவர்கள். இவர்களிடம் ராஜதந்திர ஆற்றலை எதிர்பார்க்க முடியுமா? இவர்களில் அனேகர் கல்வி திணைக்களங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள், ஏனையோர் கட்டுமான பணிகளிலும் வியாபாரங்களிலும் ஈடுபட்டவர்கள். இவர்களைப் பொறுத்தவரையில் அரசியல் என்பது கோசங்களும் சுலோகங்களுமே அன்றி, வேறில்லை. ஏனெனில் அவர்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது. இயல்பிலேயே தமிழ் சமூகத்தின் அறிவுத்தேடல் என்பது அரச உத்தியோகத்துக்குரியது. இதன் காரணமாக தமிழர்களின் அறிவுசார் தேடல் பெருமளவிற்கு திணைக்களங்கள் சார்ந்ததாகவே இருக்கிறது. நான் இதனை தமிழர்களின் திணைக்கள அறிவு (Departmental knowledge) என்று வரையறுக்கிறேன். இதனை திணைக்களத்தனம் (Depart mentality) என்றும் வரையறுக்கலாம். தமிழர்களின் செயற்பாடுகளில் இந்த திணைக்களத்தனம்தான் எல்லா இடங்களிலும் மேலோங்கிக் காணப்படுகிறது. அதாவது ஏற்கனவே இன்னொருவரால் வகுக்கப்பட்டிருக்கும் சட்டதிட்டங்களுக்குள் பணியாற்றுவதற்கான அறிவுதான் இவர்களுடையது. இவ்வாறானவர்களே பின்னர் அரசியலுக்கும் வருகின்றனர். இதன் காரணமாகவே இவர்களால் புத்ததாக்கமிக்க, தந்திரோபாயம் சார்ந்து, சூழ்நிலைகருதி முடிவெடுக்கும் திறன் சார்ந்து, செயலாற்ற முடியாமல் இருக்கிறது. இவ்வாறானவர்கள் அரசியல் அரங்கில் செல்வாக்குச் செலுத்தும் வரையில் ராஜதந்திரம் என்பது தமிழர்களை பொறுத்தவரையில் தேர்தல் அரசியல் மட்டும்தான்.

 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழர்-ராஜதந்திரம்/

Edited by கிருபன்
எழுத்துப் பிழைகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.