Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் விரும்பிப் பருகும் தேநீரில் இரத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாம் விரும்பிப் பருகும் தேநீரில் இரத்தம்

Editorial / 2019 ஜனவரி 02 புதன்கிழமை, மு.ப. 07:14 

image_fe3c3d82c5.jpg

- ஜெரா

இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்த பகுதியில் இருக்கிறது, எந்தானை (அல்லது எந்தான) எனும் லயன். லயன் எனப்படுவது, தோட்டத் தொழிலாளர்கள் குடியமர்த்தப்பட்டிருக்கும் நெருக்கமான குடியிருப்புத் தொகுதியைக் குறிக்கும். இந்த லயனில், மலையகத் தமிழர்கள் மட்டுமே வாழ்கின்றனர்.  

மலையகத் தமிழர் யார்?

“மலையகத் தமிழர் என்போர், இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்து கூலித் தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட தமிழர்களை மட்டுமே குறிக்கும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில், போதிய கல்வி பெறமுடியாத அரசியல் அழுத்தங்களுக்கு கீழ் வாழ்பவர்கள்” என, விக்கிபீடியா விளக்கம் தருகின்றது.  

இந்த விளக்கமானது, 17ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள், தென்னிந்தியாவிலிருந்து தமிழர்களைக் கப்பலேற்றிக்கொண்டு வந்த காலம் தொட்டு, இன்று வரைக்கும் எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாமல், அப்படியே பொருந்திவருகின்றது. பதினேழாம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை, உலகம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. மானுட விழுமியங்களும் மனித நேயமும் மனித உரிமைகளும், காட்டு யுகத்திலிருந்து முற்றிலுமாக மீண்டுவிட்டனவெனச் சொல்லப்படுகிறது. எல்லாவற்றையும் விட, உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள், அவர்களின் உழைப்புக்கான ஊதியம் குறித்தெல்லாம், பெருமளவு மாற்றங்கள் நடந்துவிட்டன. அடிமைகளை வைத்து வேலைவாங்கும் எஜமானர்களின் இராச்சியம் அழிந்துவிட்டதாக நம்பப்படுகின்றது. ஆனால், மலையகத் தமிழர்கள் மத்தியில், இந்த மாற்றங்கள் எவற்றையும் அவதானிக்க முடியாது. இந்த நூற்றாண்டிலும், அடிமை யுகம் நீடிக்கிறது. உழைப்பாளர்களுக்கு வழங்கும் உரிமைகள் விடயத்தில், உலகம் எவ்வளவோ வளர்ந்துவிட்டாலும், மலையகத் தமிழர்கள், சதத்திலிருந்து இப்போதுதான் ரூபாய்க்கு வந்திருக்கிறார்கள். ஓர் ஆயிரத்தைப் பெறுவதற்கே, மிக நீண்டகாலமாகப் போராடிக் களைத்துவிட்டனர்.  

எப்படியிருக்கிறது எந்தானை? 

“வெள்ளக்காரன் கட்டிக்குடுத்த மாதிரியே இருக்குங்க” என்ற பதிலைத்தான், அங்குள்ளவர்கள் தருகின்றனர். அதாவது, அவர்கள் வாழும் குடிமனைத்தொகுதியான லயன்களை, 17ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களே அமைத்திருக்கின்றனர். அந்தக் குடிமனைத்தொகுதியில்தான், அந்த மக்கள் 4 தலைமுறையாக, எந்த மாற்றங்களுமின்றி வாழ்கின்றனர். நான்குக்கு மேற்பட்ட தலைமுறைகள், குறித்த கட்டடத் தொகுதியொன்றில் எவ்வித மாற்றங்களுமின்றி வாழமுடியுமா என்ற சந்தேகம், வாசிப்போர் மனதில் எழக்கூடும். ஆனால், ஆசியாவின் ஆச்சரியமானதொரு நாட்டில், இது சாத்தியப்பட்டிருக்கிறது என்பதை, நம்பித்தான் ஆகவேண்டும். 

இந்த ஆச்சரியத்தை, எந்தானை லயனில் வசிக்கும் நாகேஸ்வரி (37), கீழ்வருமாறு வேதனையுடன் விவரிக்கிறார்.  

“இங்க எங்களுக்குப் பிரச்சினையே, வீடு தானுங்க. மூணு குடும்பம், ஒரே வீட்டுக்குள்ள இருக்கிறம். இத்தன ஆண்டுகளா இருந்திட்டமே, நிலம் ஒரு துண்டு தாங்க, நாங்க வீடுகள் எதையும் கட்டிக்கிட்டுப் போறம்னாலும், துரைமாருங்க கண்டுக்கவே மாட்டன்கிறாங்க. மந்திரிமார், எம்.பிமார்க்கிட்ட வீடு வாசல் கட்டித்தரச்சொல்லிக் கேட்டுப்போனாலும், ‘இந்தா செய்யிறோம், அந்தா செய்யிறோம்’னு இழுத்தடிக்கிறாங்க. ‘சந்த’ (தேர்தல்காலம்) டையத்தில (நேரத்தில்) மட்டும், ‘வீடுகட்டித்தாறோம், குவார்ட்டஸ் கட்டித்தாறோம்’ங்றாங்க. அப்புறம் அதை மறந்தே போறாங்க. ‘சந்த’போட்டு, அவங்க வெத்தினா (வென்றால்), இங்க வரவேமாட்டாங்க. எங்க தாய் - தகப்பன், அவங்களோட தாய் - தகப்பன், இப்ப நாங்க எல்லாருமே, இதே லயத்தில வாழ்ந்திட்டம். எங்க புள்ளகளாவது, சொந்த வீட்ல சுதந்திரமா வாழனும்ணு ஆசைப்படுறோம். ஆனால் மலையகத் தொழிலாளர்கள், கொத்தடிமைகள்மாதிரி தோட்டத்துக்குள்ளயே வேலைசெய்யனும்ணு எதிர்பார்க்கிறாங்க” என்கிறார் அவர். 

மலையகத்தில், லயன்களில் வாழுமாறு விதிக்கப்பட்ட மக்களுக்கு, சுதந்திரமானதொரு வீடு கிடைப்பதற்கு, அரசியல்வாதிகள் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைளும் மேற்கொள்ளவில்லை எனவும், தங்களது அரசியல் வேட்டைக்காகப் பலிக்கடாவாக்கப்படுவதும், தமது கனவுகள் மீது சவாரி செய்வதும்தான், அங்கு தம்மை நிர்வாகம் செய்யும் அனைத்துத் தரப்பினரதும் திட்டம் என்று, வேதனையுடன் தொடர்கிறார் நாகேஸ்வரி. 

சம்பளப் பிரச்சினை 

உலகிலேயே மிக நீண்டகாலம் சம்பள உயர்வுகோரிப் போராட்டம் நடத்தியவர்கள் யாரெனப் பார்த்தால், மலையகத் தமிழர்கள்தான் முன்னிலை வகிப்பர் என எண்ணத் தோன்றுமளவுக்கு, அவர்கள் போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர். கடந்த 40 ஆண்டுகளுக்குள், எந்தவோர் ஆண்டிலும், மலையகத்தவர்கள் சம்பள உயர்வுகோரிப் போராட்டம் நடத்தாத ஆண்டொன்று இல்லாதளவுக்குச் செய்திகள் பதிவாகியிருக்கின்றன. ஆனால் குறித்த போராட்டங்கள் அனைத்தும், தீர்வின்றி இடைநடுவே கைவிடப்பட்டிருக்கின்றன.

கடந்த வாரத்தில், கொழும்பு கோட்டை ரயில் நிலைய முன்றலில் இடம்பெற்ற மலையக இளைஞர்களின் போராட்டம் கூட, எவ்வித முடிவுகளுமின்றிக் கைவிடப்பட்டது. நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள், மலையகத்தவரின் சம்பள உயர்வுக்காக, காலி முகத்திடலில் திரண்ட போதிலும், நாடுமுழுவதும் திரண்ட போதிலும், சம்பள உயர்வைப் பெறமுடியாதளவுக்கு, இந்த ஜனநாயக வெளி, போலியானதாக இருக்கிறது. உழைப்பவருக்குப் பொருத்தமான ஊதியத்தைப் பெற்றுக்கொடுப்பதில், அரசாங்கம் கூடப் பொறுப்பின்றி நடந்துகொள்கின்றது என்பதையே, இந்தப் போராட்டத் தோல்விகள் எடுத்துக்காட்டுகின்றன. இத்தொடர் தோல்விகளுக்கு, மலையகத்தவரின் ஒற்றுமையின்மையும், தொடர்ந்து போராடுவதற்குரிய பொருளாதாரப் பலமின்மையும், அந்த மக்களைத் திரட்டுவதற்குரிய தரப்பொன்று இல்லாதிருப்பதும், அந்த மக்கள் எல்லாவற்றையும் நம்பும் “அநியாயத்துக்கு அப்பாவி”களாக இருப்பதுமே, காரணங்களாக இருக்கின்றன. 

image_aa2b33d63f.jpg

“22 கிலோ கொழுந்து பறிச்சா, 730 ரூபாய் தருவதாகச் சொன்னாங்க. ஆனால் 22 கிலோ எடுத்தாக்கூட, 730 ரூபாய் கிடைக்க மாட்டேங்குது. சம்பளத்தில கூட்டித்தருவதாகச் சொல்றாங்க. ஆனா, சம்பளத்தக் கூட்டிப்பார்க்கும்போது, 510 ரூபாய் கணக்குத்தானுங்க வருது. இப்ப எவ்வளவு காலமா, 1,000 ரூபாய் கேட்டுப் போராடுறம் பார்க்கிறீங்க தானே? எந்த முடிவும் சொல்றாங்க இல்ல” என, சம்பளம் பெறுவதில் உள்ள பிரச்சினைகளைக் குறிப்பிடும் அங்கம்மா, 50 வயதை நெருங்கியிருப்பவர். கடந்த 22 ஆண்டுகளாக, இந்த லயனில் வசிக்கிறார். காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தோட்டத்தில் கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபடும் அவர், தேயிலைச் செடிகள் செழித்துள்ள நாளொன்றில், 40 கிலோகிராம் வரை கொழுந்து பறிப்பதாகவும், சில நாள்களில் 18 கிலோகிராமைப் பறிப்பதே பெருஞ்சவாலானதாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.  

அங்கம்மா பேசிக்கொண்டிருக்கையில், அவரின் அருகில் வந்து நின்ற, தோட்டத்தொழிலாளர்களை கண்காணிக்கும் வயதான ஒருவரும், இந்த விடயத்தை ஆமோதித்தார். “எல்லா நாள்களிலுமே, தோட்ட முதலாளிகள் எதிர்பார்க்குமளவுக்குக் கொழுந்து பறிக்க முடியாது. வானிலைக்கு ஏற்ப, கொழுந்து பறிப்பதில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். ஆனால் சம்பளம், கொழுந்து பறிக்கும் அளவுக்கே வழங்கப்படுகிறது. எனவே, எல்லா நாள்களும், இப்போது குறிப்பிடப்பட்டிருக்கும் 730 ரூபாயைச் சம்பளமாக, தோட்டத் தொழிலாளர்களால் பெறமுடியாது போகிறது. இப்போதிருக்கின்ற பொருட்களின் விலைவாசிக்கு, நாளொன்றில் 510 ரூபாயை வருமானமாகப் பெறும் ஒருவர், எப்படிச் சீவிக்க முடியும்?” என்ற கேள்வியை, தன் பதவிநிலை மறந்து, எம்மிடமே கேட்டார், மக்களைக் கண்காணிக்கும் அந்த அதிகாரி. 

“இப்ப அடிப்படைச் சம்பளம், 500 ரூபாய் தான் கெடைக்கிது. வேலைக்கு வந்தா, 30 ரூபாய் ஒண்ணு போடுறாங்க. 75 சதவீதம் வேலைக்கு வந்தா, 60 ரூபாய் ஒண்ணு குடுங்கிறாங்க. தோட்டம் குடுக்கிற கொழுந்து எல்லைக்கு எடுத்தா, 140 ரூபாய் குடுக்கிறாங்க. டார்க்கெட் (இலக்கு) எடுத்தாத்தான், மொத்தமா 730 ரூபாயையும் எடுக்க முடியும். ஆனா, இங்க இருக்கிற நிலைமைக்கு, யாராலயுமே இந்தக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வேலைசெய்ய முடியிறதில்ல” என்றார் அவர்.  

“மேலதிகமாக வேலை செய்தா, சம்பளம் தருவதாகச் சொல்றாங்க. 4.30 மணிக்குத்தான் வேலை விடணும்னு இருக்கு. ஆனா, 6.00 மணிக்குத் தான் வேலை விடுறாங்க. கேட்டா, மேலதிக நேரத்துக்கு, ‘ஓவர் டைம்’ சம்பளம் தாறதாச் சொல்றாங்க. ஆனா, சம்பளம் தரும்போது, அதைக் கணக்கிலயே எடுக்கிறாங்க இல்ல. ‘ஓவர் டைம்’ தாறதில்ல. பொய் சொல்லி, எங்கள வேலை வாங்கிறாங்க. 4.30 மணிக்கு சைன் வைக்க, ‘ரெஜிஸ்டருக்கு’ கிட்ட போகவே விடுறாங்க இல்ல. வேலைக்கு ஏத்த சம்பளம் தரணுமே.  

“இது மட்டுமில்ல, இங்க எங்களுக்கு, எந்த வசதியும் கிடைக்கிறதில்ல. அண்மையில அரசாங்கம், மலசலகூட வசதிகளச் செய்து தந்தது. எங்களுக்கு அதில் ஒண்ணு கூடக் கிடைக்கல. எல்லாத்தையும், பெரும்பான்மையின மக்கள் பதிஞ்சு, தங்களுக்கு எடுத்துக்கிட்டாங்க.  

“அதுமட்டுமில்ல. நாங்க, இவ்வள காலமா இருக்கிறம், எங்களுக்கு ஒரு காணித்துண்டு இல்ல. ஆனா, தோட்டங்களப் பெரும்பான்மையின மக்களுக்கு விற்கிறாங்க. அவுங்க, சொந்தமா வீடுகளக் கட்டியும், கடைகளப் போட்டும் இருக்க முடியும். ஆனா, தோட்டத்த உருவாக்கி, இங்கயே செத்து மடிஞ்ச எங்களுக்கு, நிரந்தரமா ஒரு வீடு கூட இல்ல” எனக் குறிப்பிடும் புவனேஸ்வரி, நடுத்தர வயதுடையவர். அவர், அத்தோட்டத்தில் வதிவது குறித்து, அதிகளவாக அதிருப்திகளை அடுக்கினார். அவையனைத்தும், அந்த மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் விடயங்களாக இருந்தன.  

கல்வி எப்படி? 

மலையகம் என்றாலே, கல்வியில் பெரும் பின்னடைவைக் கொண்டிருக்கும் இடம் என்றே அறிந்துவைத்திருக்கின்றோம் அல்லவா? எந்தானைப் பகுதியின் நிலைவரங்கள் அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

“இங்க ஒரு தமிழ் ஸ்கூல் இருக்கு. அங்க டீச்சர்ஸ்மார் மிகக் குறைவு. ஓ.எல், ஏ.எல் புள்ளைங்களக் கொண்டு, சின்ன வகுப்புப் புள்ளைகளுக்குப் படிப்புச் சொல்லிக்குடுங்கிறாங்க. அதுங்க படிப்புச் சொல்லிக்குடுத்தா, ஓ.எல், ஏ.எல் புள்ளைங்க எப்பிடிப் படிக்கிறது? அதுனாலதான், இங்க இருந்து யாருமே படிச்சி மேல வாறதில்ல. இதுவே, வேற எங்கயும் நடக்க விடுவாங்களா? இங்க பாருங்க, எவ்வள குழந்தைங்க? யாருமே ஒழுங்கா ஸ்கூல் போறதில்ல. போனாலும், படிச்சு முன்னேறிவர, இங்க என்ன வசதிவாய்ப்பிருக்கு? இந்த நாட்டோட வளர்ச்சிக்கு, நாங்க தான் பெரியளவில் உதவுறம் இல்லயா? அப்ப, எங்களோட வாழ்வாதாரத்துக்கு, இந்த அரசாங்கம் கவனிக்கணும்தானேங்க? ஆனா, இங்க எதுவும் நடக்கிறதில்ல. நாங்க படிச்சு முன்னேறிட்டா, இங்க தோட்டங்கள்ல வேல செய்ய ஆள் கெடைக்காதுங்குற காரணத்துணால தானுங்க, இப்பிடி அடிமையா எங்கள வச்சிருக்காங்க. 

“நாங்க வெளிநாடுகளுக்குப் போய் உழைச்சு வருவம்னாலும், அதுக்கும் துரை, கங்காணிமார் அனுமதிக்கமாட்டாங்க. பாஸ்போர்ட் எடுக்கவிடமாட்டாங்க. எங்களுக்குப் பாஸ்போர்ட் எடுக்க ஏன் ‘சைன்’ (கையெழுத்து) வைக்க மாட்டேங்கிறீங்கண்ணு கேட்டா, ‘நீங்கல்லாம் வெளிநாட்டுக்குப் போயிட்டா, தோட்டத்துல யார் வேலை செய்யிறது?’ண்ணு கேட்கிறாங்க. இப்பிடி, எங்கள நடத்துறவங்க, எங்க உழைப்புக்கு ஏற்ற சம்பளம் குடுக்கத்தானே வேணும்?” என, நியாயமாகக் கேள்விகளை எழுப்பும் புவனேஸ்வரியிடம், அதிகமான கோபம் உண்டு. தங்கள் மீது, தங்கள் தலைமுறை மீது, தங்களை எழவிடாது அழுத்தும் அதிகாரம் மீது, வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நம்மீது, கல்விச் சமூகம் மீதென, அவரின் கோபம் மிகப் பரந்துபட்டது.  

முகவரியற்றவர்கள்? 

இந்த நூற்றாண்டில், “ப்ரைவசி” எனப்படும் தனியுரிமம் பற்றி, அதிகம் பேசிக்கொள்வோம். அதாவது, ஒருவரின் விடயத்தில் மற்றயவர் தலையிடாதிருப்பதைத் தான், அப்படிக் கடைப்பிடிக்கிறோம். ஆனால், எந்தானைத் தோட்டத்தில் வதியும் மக்களுக்கு, எந்தத் தனியுரிமமும் இல்லை. வீடு இல்லாததுபோல, நிலமில்லாதது போல, கல்வி இல்லாதது போல, அவர்களுக்கான தனியுரிமமும் மறுக்கப்பட்டிருக்கிறது. அத்தோட்டத்தில் வசிப்பவர்களுக்கு, எங்கிருந்தாவது கடிதம் வந்தால், அக்கடிதத்தை முதலில் தோட்டமே பெற்றுக்கொள்ளும். தோட்டத்தில் அதற்குப் பொறுப்பான அதிகாரி, அக்கடிதத்தைப் படித்த பின்னரே, உரியவருக்குக் கையளிக்கும் முறை பின்பற்றப்படுகின்றது.  

இவ்வாறானதொரு நவீன அடிமை முறைதான், எந்தானையில் இப்போதும் நீடிக்கிறது. இது, மலையகத்தில் இருக்கும் தோட்டங்களில் ஒன்றுதான். இந்த ஒன்றே, பல நூறு தோட்டங்களின் நிலைமைக்கும் எடுத்துக்காட்டானது.  

இலங்கையின் அடையாளமாகவும், அதிக ஏற்றுமதி வருமானத்தைத் தருவதாகவும் இருக்கின்ற தேயிலையை உருவாக்கும் மனிதர்களை, இந்த நாடு இப்படித்தான் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. அந்த அடிமைகளின் இரத்தத்தில் உருவாகும் தேநீரைத்தான், எவ்விதக் குற்றவுணர்வுமின்றி பருகிக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும்போது...! 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நாம்-விரும்பிப்-பருகும்-தேநீரில்-இரத்தம்/91-227373

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலையக தமிழரின் வாழ்வாதார பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு அரசாங்கத்திலும் பங்கேற்கும் மலையக தமிழ் அமைச்சர்கள்   இதனை கவனிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.