Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போராட்ட வரலாற்றில் என்றும் எங்களுடன் சாள்ஸ்!

_18233_1546635036_F090AC3C-6D7D-43C1-915D-F47207AEEDB5.jpeg

2008 ஆம் ஆண்டின் முதல் வார நாட்கள். தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டிருந்த காலம். தளபதி பாணு அவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். மன்னாரில் எமது வழமையான பணிகளுடன், போகுமிடத்தில் பாணுவையும், களநிலவரத்தையும் கண்டு வரலாம் என்ற விருப்புடனான பயணம். பயணத்திட்டத்தை முறைப்படி தலைவருக்கு முன்வைக்கும் சந்திப்பு.

தலைவரின் புருவம் உயர்கின்றது. ~இப்ப மன்னாருக்கு ஏன் போகவேண்டும்? ” நீ இப்போது அங்கு போய் என்ன செய்யப்போகின்றாய்?” தனது வழமையான கேள்விகளுக்கான பதில்களுடன் எமது தயார் நிலையைக் கண்ணுற்ற தலைவர் கூறுகின்றார். மன்னார் களமுனையின் பின்னணியில் எதிரியின் சிறப்பு அணிகள் நிலையெடுத்துள்ளன. பிரதான வீதிகளினூடான பயணம் பாதுகாப்பானதல்ல. இவை எதிரியின் வழமையான நகர்வுகள் என்பதாக எனது கருத்துகளைச் சொல்லி பயணத்திட்டத்தை முன்னெடுக்க முற்பட, தலைவர் தீர்மானமாக கூறுகின்றார். ~அங்கு நிற்கும் பாணு, சொர்ணம் ஆகியோருக்கும் பிரதான வீதி பாதுகாப்பானதல்ல எனச் சொல்லப்பட்டுள்ளது நீ போக வேண்டாம்.

எம் மன்னார் பயணத் திட்டத்தை தலைவர் தடுத்து நிறுத்திவிட்ட மறுநாள். அன்றைய மாலைப் பொழுதைப் பரபரப்பாக்கும் வகையில் மன்னாரில் எதிரியின் கிளைமோர் தாக்குதலொன்று நடைபெற்றுவிட்ட செய்தி வந்து சேர்ந்தது.

அண்ணை சொன்ன புலனாய்வுத் தகவல் மிகச் சரியாகவே அமைந்திருந்தமை பற்றிய எண்ண ஓட்டத்துடன் எதிரியின் அத்தாக்குதலிற்கு உள்ளானவர் யார்? கேள்விக்குப் பதிலைத் தேடியபோது நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சியாகவும், வேதனைமிக்க பேரிடியாகவும் வந்து சேர்ந்தது அந்தச் செய்தி. அந்தத் தாக்குதலில் எங்களின் சாள்ஸ் வீரச்சாவு. படையப்புலனாய்வுப் பொறுப்பாளர், தளபதி சாள்ஸ் வீரச்சாவு.

அன்றைய நாளின் பின் இரவில் சாள்சின் பிரிவின் வேதனையுடன் தனிமையில் இருந்தார் தலைவர் அவர்கள். சாள்சின் வித்துடலுக்கான வீரவணக்கத்திற்கு வரச்சொல்லிக் கேட்க ~அவனைக் கடைசியாகக் கண்ட அந்த முகமே நினைவில் இருக்கட்டும்| என்றதும், “சாதித்தவன் போய்ச் சேர்ந்துவிட்டான்” என்றதுமே தலைவரின் சுருக்கமான வார்த்தைகளின் சாரம்சமாகும். அதிகம் பேசாது தலைவர் தனது சட்டைப் பையில் இருந்ததை எடுத்துத் தந்தார். அது நாலாக மடிக்கப்பட்ட கணினியில் தட்டச்சுச் செய்யப்பட்ட அறிக்கைத்தாள். மூன்று நாட்களுக்கு முன்னர் சாள்ஸ் அனுப்பியிருந்த புலனாய்வு அறிக்கை அது.

மன்னார் களமுனையின் பின்னணிச் சாலையைக் குறிவைத்து, ஊடுருவித் தாக்குதல் செய்ய எதிரியின் அணிகள் நிலையெடுத்துள்ளமையை, எடுத்து வெளிப்படுத்தி, வலியுறுத்தியிருந்தது. படையப்புலனாய்வின் முக்கிய மூலத்தில் இருந்து கிடைத்த ஆழமான தகவல்களைக் குறிப்பிட்டுத் தயாரிக்கப்பட்டிருந்த தீர்மானமான அறிக்கை அது.

மன்னாருக்கான முதன்மைச் சாலையில் எதிரியின் தாக்குதல் நடைபெறலாம் என்ற கணிப்பை முற்கூட்டியே அறிக்கையாகக் கொடுத்த சாள்ஸ், அதே சாலையில் எதிரியின் கிளைமோர்த் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டான். ஆபத்திருப்பது தெரிந்தும் அவ்விடத்தை நோக்கி அவனை பயணிக்க வைத்த சக்தி எது? அது விதியின் கொடிய கரமா?

இந்திய இராணுவம் எம் மண்ணை விட்டகன்று அமைதி நிலவிய நாட்கள். பிறேமதாசா அரசும் புலிகளும் பேச்சு நடத்தி வந்த நேரமது. எமது மக்களுக்கு ஏதோ ஒரு நன்மையைச் செய்ய பிறேமதாசா அரசு முன்வருமா? என்ற எண்ணத்தில் அனைவருமே ஆழ்ந்திருந்தனர்.

இந்திய இராணுவத்தினரின் நெருக்கடி மிக்க சுற்றிவளைப்புக் காலத்தில், பிரிந்திருந்த தலைவரின் குடும்பம் ஒன்றாகச் சேர்ந்திருந்த காலமுமதுதான் – அவ்வேளையிற்தான் அவ் அறிக்கை கிடைத்தது – எம்மவர்களால் புறக்கணிக்க முடியாத முக்கியமான அறிக்கை.

அப்போதைய சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் றஞ்சன் விஜயரட்ணாவும், பலாலியில் இருந்த சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியும் இணைந்து செயற்படுத்தும் திட்டத்தின் விபரங்கள் கிடைத்திருந்தன.

அக் காலப்பகுதியில் தலைவர் அவர்களது துணைவியார் மதியக்கா நல்லூர் கோவிலுக்குச் சென்றிருந்ததை உதயன் பத்திரிகை சிறு செய்தியாக வெளியிட்டிருந்தது. அச்செய்தியை அடிப்படையாக வைத்து அமைந்திருந்தது சிறிலங்காவின் திட்டம்; மதியக்காவை பின்தொடர்ந்து கண்காணிப்பதற்கான ஏற்பாடும், அதனைத் தொடர்ந்து தலைவரின் இடத்தைக் கண்டறிவதும், தலைவரைக் கொலை செய்வதுமான திட்டங்களை உள்ளடக்கிய அறிக்கையது.

தென்னிலங்கையில் எழுந்த ஜே.வி.பி கிளர்ச்சியை ஒடுக்கியதன் மூலம் சிறிலங்காவின் அரச இயந்திரம் புத்தூக்கம் பெற்றிருந்த காலமது. எமது விடுதலைப் போரையும் அதே வழியிற் சென்று முடக்கிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் நகர்வுகளில் இறங்கியிருந்தனர். ஜே.வி.பியை ஒடுக்குவதில் நேரடியாக முன்னின்று செயற்பட்ட பாதுகாப்பு அமைச்சர் றஞ்சன் விஜயரட்ணாவின் மிக நேரடியான வார்த்தைகளில் அமைந்திருந்தது – அவ் அறிக்கையிலிருந்த திட்டம். அறிக்கை துல்லியமானதாக, தெளிவானதாக, இறுக்கமானதாக, இருந்தது. மதியக்கா அவர்களைப் பின்தொடர்ந்து தலைவர் அவர்களது இருப்பிடத்தைக் கண்டறிந்து தலைவரைக் கொன்றுவிட வேண்டும் எனும் நேரடியான கட்டளை என்பதாகவும் அமைந்திருந்தது.

நிலைமை தெளிவாகத் தெரிந்தது. சிங்களம் உண்மையுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வஞ்சகத்தின் வழியிற் பேசுகின்றது என்பது தெளிவாகிவிட்டது. கொல்லும்வரை பேசுவோம் – ~கொல்லச் சந்தர்ப்பம் கிடைப்பதற்காகப் பேச்சுவார்த்தை நடத்துவோம்| என்பதாக அமைந்திருந்தது சிங்களத்தின் வியூகம்.

எமக்கு அதுவொரு சவால். சிறிலங்காவின் திட்டம் எமக்குத் தெரியுமென்பது இரகசியமாக வைக்கப்பட்டது.

ஆனாலும் இனிச் செய்வது என்ன? என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்தது. ஆம் அவர்களின் வழியிலேயே அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும். அதனை எப்படிச் செய்வது? யார் செய்வது?

அவர்களது தலைநகரத்தில் அவர்கள் முடக்கப்பட வேண்டும். அவர்களது செயற்பாடுகளை கொழும்பிலும் முடக்க எம்மால் முடியுமென்பது நிரூபிக்கப்படவேண்டும்.

தலைவர் தனது வார்த்தைகளில் சொன்னார் இதுதான் எமக்கொரு ஆற்றல் மிக்க புலனாய்வு அமைப்பு வேண்டுமென்று சொல்வது. நாமோ… பெயரளவிலேயே புலனாய்வு என்ற பெயர் தரித்திருந்தோம்.

அக் காலப்பகுதியில் நாம் புலனாய்வு ரீதியாக எந்தவொரு அடிப்படையையுமே உருவாக்கியிருக்கவில்லை. சொல்லப்போனால் புலனாய்வு என்ற எண்ணக்கருவை மனதிற் கொண்டிருந்தோம் என்பதற்கு மேலாக புலனாய்வு ரீதியாக நாம் எந்தவொரு கட்டமைப்பையோ அல்லது அதற்கான ஆளணிகளையோ கூடக் கொண்டிருக்காத காலமது. சாள்ஸ் நினைவிற்கு வந்தான்.

1988. யாழ். மாவட்டப் பணிக்காக, மணலாற்றில் இருந்து யாழ். நோக்கிப் பயணம் மேற்கொண்டிருந்தேன். விசுவமடுவில் உள்ள கிராமம் ஒன்றில் ஓய்விற்காக அமர்ந்திருந்தோம். எனது உதவியாளர்களில் ஒருவராய் இருந்த கிளி, சாள்சை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது சாள்ஸ் கிளிநொச்சி மாவட்டத்திற்குரிய சண்டையணிப் போராளிகளில் ஒருவர். முதலாவது அறிமுகத்திலேயே சாள்சை அடையாளம் கண்டுவிட்டேன். சாள்சின் ஆற்றலை முழுமையாக அடையாளம் கண்டுவிட்டதாகக் கூறினால் அது மிகைப்படுத்தப்பட்ட பொய். கொழும்பிற்குச் சென்று வரக்கூடிய துணிவும், அதற்குப் பொருத்தமாக சிறிலங்கா அரசால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையும் கைவசம் வைத்திருக்கும் ஒரு போராளி.

கொழும்பில் சில வேலைகள் செய்ய வேண்டி வரலாம் எனத் தலைவர் அவர்கள் கூறிவிட்டது நினைவிற்கு வர, அன்றே சாள்ஸ் என்வசம் ஆனான். ஆயுதங்கள் களைந்து பொதுமக்களின் உடை தரித்த போராளியானான்.

இந்திய இராணுவம் இங்கிருந்த காலத்திலேயே வேறு வேலையாகச் சென்று கொழும்புடன் ஓரளவு பரீட்சயத்தை ஏற்படுத்தியிருந்த சாள்ஸ் முன்வந்தான். நான் செய்கிறேன். ~என்னால் முடியும் அம்மான்| என்று முன்வந்தான்.

இருபது வயதே நிரம்பிய இளைஞன்; வஞ்சினம் பொங்கும் நெஞ்சினனாய் கொழும்பு நோக்கிப் பயணிக்கின்றான். இன்றும் நினைவில் மாறாத அன்றைய நாள். அதன்பின் யாழ்ப்பாணத்திற்கு வராமலேயே நின்றுவிட்ட அந்தப் புகையிரதம். – யாழ்;தேவி புகையிரதம் – சாவகச்சேரி நிலையத்திலிருந்து சாள்சையும் ஏற்றிக் கொழும்பு நோக்கிப் போகின்றது.

புகையிரதம் திரும்ப வரவில்லை. சாள்ஸ் மீண்டு வந்தான். வெற்றி வீரனாக, தேசத்தை நோக்கி உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த சாதனையாளனாகத் திரும்பி வந்தான்.

1990 கொழும்பில் சாள்ஸ்; அவனோ மிகவும் இளவயது இளைஞன்; கொழும்பிலோ சரியான தொடர்புகள் இல்லை. இலக்கற்ற வகையில் அலைச்சல், கொழும்பு சிங்களக் கொழும்பாக இருக்க அந்தக் கொழும்புக்குள் கால் பதிக்க முடியாமல் தனி இளைஞனாக அலைந்து திரிந்தான்.

ஆரம்பத்தில் அவனது கொழும்புப் பயணமும் கூட எல்லாம் நல்லபடியாக அமைந்துவிடவில்லை. அவனது ஆரம்பப் பயணத்திலேயே வழித்துணையாக புகையிரதம் ஏறிச்சென்ற மனிதன் கொழும்பு புகையிரத நிலையத் திலேயே தனியாக இறங்கி, மெதுவாகக் கழன்றுவிட தனித்துநின்று, பின் ஆசுவாசப்படுத்தி தெரிந்த ஓரிடத்தில் நிலைபெற்று தொடங்கியதுதான் அவனது செயற்பாடு.

உள்ளுரில் முன்னரே அறிமுகமாகியிருந்த துரோகி – நல்லவேளையாக துரோகி என்று முன்னரே அடையாளம் தெரிந்த துரோகி – கண்டுவிட்டுப் பின்தொடர சுழித்துத் தப்பியோடினான் சாள்ஸ். துரோகியானவன் தொடர்ந்து முயற்சித்தும் முடியாமற் போகும் வரை சுழித்து விட்டு, ஓடித்தப்பி மூச்சுவிட்டு முன்னேறித்தப்பியிருந்தான் சாள்ஸ். ஆனாலும் கொழும்பை விட்டுவிட்டு வர முடியாதபடி கடமை முதன்மையானது.

சாள்ஸ் மறைமுகச் செயற்பாட்டாளனாய் களத்தில் நின்ற காலத்தில் அவனுக்கு அதிர்ஷ்டம் என்று கூறப்படும் luck  உம் கொஞ்சம் உதவி செய்யாமல் இல்லை. இந்திய இராணுவம் இருந்த காலத்தில், பயணத்தில் கட்டாய ஆட்சேர்ப்பிற்கு என்று கூறி ஈ.என்.டி.எல்.எஃப். ஆல் ஒருமுறையும், பின்னர் கொழும்பிற்குப் போகையில் வவுனியாவில் வைத்து புளொட் ஆல் இன்னொரு தடவையும், கொழும்பு விமான நிலையத்தில் சிறிலங்கா புலனாய்வாளர்களினால் மீண்டும் ஒரு தடவையுமாக கைதாகிப்போன அனுபவமும் பெற்றிருந்தான்.

அவனது உரையாடற்திறனும், சொன்ன மறைப்புக் கதைகளும் அவனது luck உம் ஒன்றாய் இணைந்து அவனை விடுவித்தன. அவனது உதவியாளர்கள் எல்லோரும் உத்தமமானவர்களாகவும் அமைந்து விடவில்லை. முதலாளி ஒருவர் யாழ்ப்பாணத்தில் பெருமளவு வாக்குறுதிகள் தந்து சென்றவர். முதலாளி இங்கு நிற்கும் போது அவரைச் சந்திக்க இரவிரவாக, இரகசியமாக தொண்டமனாறு மற்றும் அச்சுவேலி நோக்கிப் போவோம். கொழும்பில் எல்லாம் செய்யலாம், வெல்லலாம் என்று அந்தமாதிரி வாக்குறுதி வழங்கினார் மனிசன்: நடவடிக்கைக்குத் தேவையான தவிர்க்க முடியாத உதவியைக்கேட்டு அவரது கடைவாசலில் தவமிருப்பான் சாள்ஸ்.

சந்திக்கும் வேளைகளில் மாலை அல்லது நாளை வாருங்கள் என்று சொன்னவர், நாளாக நாளாகச் சந்திப்பதையே தவிர்த்து காய்வெட்டித் திரியத் தொடங்கினார். நம்பிக்கை இழந்தாலும் வேறு வழியில்லாமல் கடைவாசலில் போய்க் குந்தியிருப்பான் இவன். தினமும் இவன் காத்திருப்பதைக் கண்ட பக்கத்துக்கடை முஸ்லீம் ஐயா, ‘இவனை நம்பி மினக்கெடாதீர்கள், அவன் சரியான சுத்துமாத்துப் பேர்வழி” என்று சொல்ல இறுதியாய் நம்பிக்கையிழந்து சோர்ந்துபோய் நின்றான்.

பணம் பறிப்பதிலேயே குறியாக இருக்கும் இன்னும் சில உதவியாளர்கள்; 300 ரூபா பொருளை 3000 ரூபா விலை சொல்லி பணம் கேட்கும்போது எல்லாம் தெரிந்தும் தெரியாததுபோல் பணத்தை எடுத்து கொடுப்பான் சாள்ஸ்; பணம் கேட்பவருக்குச் சிங்களக் காவற்ருறை, இராணுவத்தினரின் தொடர்பு உள்ளது சாள்சிற்குத் தெரியும். தனது பாதுகாப்பான செயற்பாட்டுத் தேவைக்கு அவரது நட்பு அவசியம் என்று உணர்ந்ததால் அதற்குக் கொடுக்கும்விலை அந்தப் பணமென்பது சாள்சினது கருத்து. ஆனால் பாவம் அந்த உதவியாளரோ வலு கெட்டித்தனமாக சாள்சை ஏமாற்றி அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்வதான நினைப்பு அவருக்குள்.

கொஞ்சம் கொஞ்சமாய் சாள்சிற்கு இடமும், ஆட்களும் பிடிபட இரகசியச் செயற்பாட்டில் முதிர்ந்தவனாகி விட்டான். யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் இருந்த அவனது தோழர்கள் தொடர்புகளை தொட்டெடுத்துக் கொடுக்க இடங்களும் ஆட்களும் நெளிவு சுழிவுகளும் கொஞ்சம் கொஞ்சமாக பிடிபட கொழும்பில் அகலச் சிறகு விரிக்கத் தொடங்கிவிட்டான் சாள்ஸ்.

கொழும்புத் தெருவெங்கும், அங்குள்ள ஒழுங்கையெங்கும், சிங்களத்துச் சேரிப்புறமெங்கும் சடசடத்து, சீறிப்பறக்கும் அவனது உந்துருளி. வீதிக்காவலர் மறிக்க நின்று கதைசொல்வதும் நிற்காமல் இழுத்து ஓடி மறைவதுமாக மாறி மாறி நடக்கும் அவனது பயணங்கள்.

கொழும்பில் நின்ற சாள்சிற்கான முகவர் ஒழுங்கு, பொருள் வழங்கல் என பின்னணிப் பணிகளைக் கவனித்தான் சுருளி. தாக்குதலிற்கான வெடிமருந்து இணைப்பை பரிசீலிக்கும் வேளையில் தவறு நடந்துவிட வெடிவிபத்தில் சுருளி வீரச்சாவு. மேஜர் சுருளியின் வீரச்சாவால் மனம் சோர்ந்து போனாலும், பணி சோராமல் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார் மாதவன் மாஸ்ரர்.

கீதனின் அறிமுகத்தில் மாதவன் மாஸ்ரர் நகர்த்திய நற்குணத்தாரும், விடுதலைப் புலிகள் ரவி அறிமுகப்படுத்திய வரதனும் சாள்சுடன் இணைந்துகொள்ள இருள் விலகி நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படத் தொடங்கியது.

~வரதன்| சாள்சிற்குக் கிடைத்த அரிய துணை. நடவடிக்கை நகர்வின் தடைகளைப் புரட்டி ஓரம்தள்ளி பாதை அமைத்துக்கொடுத்த துணையானான். முன்பு வேறொரு பின்னணியில் கொழும்புப் பரீட்சயமும், ஆளணி அறிமுகமும் கொண்ட வரதனின் புதிய வேகத்துடன் காரியங்கள் முன்னகர்ந்தன.

அதைவிட சாள்சின் தனித்த முயற்சியாலும் கணிசமான வெற்றி; இலக்கு அடையாளம் காணப்பட்டு விட்டது. அதுவும் துல்லியமாய்; இனித் திட்டமிட வேண்டியதும் செயற்படுத்த வேண்டியதும்தான் பாக்கி.

திட்டமிடல்கள்…, நகர்வுகள்…, கரும்புலிகள்…, பயிற்சிகள்;…, என்று புலனாய்வுச் சக்கரமும் – செயற்திட்டத்திற்கான சக்கரமும்- முன்னோக்கி நகர்ந்தன. நடவடிக்கையாளர்கள், மற்றும் கரும்புலிகள் சென்றனர்.

எங்களுக்கும் அது பட்டறிவுக்குறைவான காலம். நடவடிக்கைக்கென தெரிவு செய்யப்பட்ட ஆள் சறுக்கிப் பின்வாங்கிவிட, குழப்பமான நிலைமை. முன்னோக்கிய நகர்வு கீழிறங்கிவிட்ட நிலைவரம். புதிய கரும்புலிக்கு அவசர அவசரமாக பயிற்சியும், தேவையான நகர்வுகளுமாக திட்டம் முன்னகர்ந்தது. புதிய ஏற்பாடுகளுடன் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கிய முயற்சியில், கிடைத்தது வெற்றி! அந்த அரிய வெற்றி!

கொழும்பை உலகெல்லாம் திரும்பிப் பார்க்க மகிழ்ச்சிக் கடலில் மிதந்தது தமிழர் தேசம். விடுதலைப் போராட்டத்திற்கு ஆப்புவைக்க முற்பட்ட சிங்களத்தின் கொழும்பில், அவர்களது தலைநகர் கொழும்பில் வைக்கப்பட்டது வெடி, அவர்களுக்கு அது மரண அடி.

~வீழ்ந்தான் எதிரி, – வென்றான் சாள்ஸ்| என்று இங்கு அவனது தோழர்கள் ஆளையாள் கட்டித்தழுவிக் கொண்டாடி மகிழ்ந்தது தனிக் கதை.

வெற்றி தந்த மகிழ்ச்சியில், வெற்றி தந்த ஊக்கத்தில் அடுத்தடுத்த நகர்வுகள். சாள்சின் எண்ணத்திற்கு ஈடுகொடுக்க வரதனின் ஏற்பாட்டில் குவேந்தி, ரவியர், இந்திராக்கா என நல்ல பொருத்தமான உதவியாளர் வட்;டம் அமைந்து விட்டது. சாள்சின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் தளத்தில் இருந்த ஏற்பாடுகளும் அந்த மாதிரி அமைந்துவிட ~அடுத்ததும் கிடைத்தது அற்புதமான வெற்றி|.

முதலாவது சம்பவத்தைப்போல் இம்முறையும் நடவடிக்கையாளர்கள் சறுக்கிப் பின்வாங்கிவிட்ட நிலை. முன்னைய அனுபவம் தந்த பாடத்தால் அகிலாவின் ஏற்பாட்டில் முன்கூட்டியே நகர்ந்து காத்திருந்த இரண்டாவது கரும்புலி சந்திரன் முன்வந்தான். ~மனிசனாய்ப் பிறந்தவனுக்கு கொஞ்சமாவது ரோசம் இருக்கவேணும்| என்று சொல்லி சந்திரன் முன்வர தாமதமில்லாமலேயே உடனடியாக நகர்ந்தது திட்டம். தேர்ச்சி பெறாத கரும்புலிச் சாரதியான சந்திரனை அருகிருத்தி வெடிமருந்து வாகனத்தை ஓட்டிச்சென்றான் குவேந்தி. குவேந்தியை அழைத்துவரப் பின்தொடர்ந்து சென்றது சாள்சின் உந்துருளி. இம்முறை சிறிலங்கா கூட்டுப்படைத் தலைமையகம் தகர்ந்தழிந்தது.

கூட்டுப்படைத் தலைமையகத்தின் வெற்றி. எல்லோரும் வெற்றி தந்த மகிழ்வில் திளைத்திருக்க, இந்தமுறை சறுக்கியது எங்களுக்கு. ~ஆயிரம் கிலோ வெடிமருந்துடன் வெடிக்கும் வாகனத்தில் தடயம் எங்கே மிஞ்சப்போகின்றது| என நாம் நினைத்ததற்கு மாறாக எம் கரும்புலியின் வாகனத்தின் – இலக்கத்தகடு – ~முழுத்தடயமாய்க் கிடைத்தது எதிரிக்கு|. வரதன் தேடப்பட வந்தது சிக்கல். மறைப்பிடங்கள் அடையாளம் காணப்பட்டன. இந்திராக்கா மட்டத்தில் கொஞ்சப்பேர் கைதாக, கூட்டுப்படைத் தலைமையக கரும்புலி நினைவாக போராளிப் பெயராய் சந்திரனின் பெயரை தனக்குச்சூட்டிய அப்போதைய குவேந்தியை ~தப்பிப்போ| என்று அனுப்பிவிட்டு வரதன் சயனைற் அருந்தி வீரச்சாவு. புலனாய்வுச் சக்கரத்தின் மறுபக்கம், வீரச்சாவுகள்…, கைதுகள்…, சித்திரவதைகள்…, என துயரமும் வலியும் கலந்த வேதனையான மறுபக்கம். – குழம்பியது கட்டமைப்பு.

இளவயதுச் சாள்ஸ், நான்கு சகோதரர்களைக்கொண்ட ஐந்தாவது கடைசிச் செல்லப்பிள்ளை. ஓரளவு வளர்ந்து பெரியவனாகும் வரையிலும் அம்மாவின் உடையைப் பற்றிப் பின்தொடர்ந்து செல்லும் செல்லம். குடும்பத்தில் மற்றவர்களைப் போலவே படிப்பில் படுசுட்டி ஆனால் மற்றவர்களைப்போல்; படிப்பிற்கென நேரம் ஒதுக்கி மினக்கெடமாட்டான். செல்ல மகன் படிப்பில் பின்தங்கிவிடுவானோ என்று அம்மாவிற்குப் பயம்.

வயது ஏற ஏற எல்லாவற்றையும் அம்மாவிடம் கேட்டுச் செய்வது குறையத் தொடங்கிவிட்டது. அந்தக் காலத்தில் அவனது சொந்த இடமான பருத்தித்துறை இராணுவ முகாம் வடபகுதியின் பெரிய இராணுவ முகாம்களில் ஒன்று. முற்றுகைக்கு உள்ளான நிலையில் முகாமைச் சுற்றி புலிகளுடன் காவல் நின்றனர் ஊரில் உள்ள இளைஞர்கள். தனது பாடசாலைப் பருவத்தின் இளைய காலத்திலேயே இராணுவ முகாம் காவலரண் இளைஞர் அணியுடன் தொடர்பு ஏற்பட, படிப்புப் பாழாகின்றதே என்று அம்மாவிற்கு படபடப்பு. படிப்பிற்கென்று நேரம் ஒதுக்கி மினக்கெடுவது கிட்டத்தட்ட நின்றே போய்விட்டது. ~நீ இப்படியிருந்தால் அக்காமார் உத்தியோகத்திற்குப் போக நீ அவர்களுக்கு ரைவராகத்தான் போகப் போகின்றாய்| என அம்மா செல்லமும் கண்டிப்புமாய் பகிடி பண்ணுவா. அவனது க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் நல்ல பெறுபேறு வந்தபோது குடும்பத்தில் எல்லோருக்கும் பெருமைதான். அம்மாவிற்கு மட்டும் ~இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்திருந்தால்| என்ற வழமையான ஆதங்கம். க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிந்து ஒரு வாரம்கூட ஆகியிருக்கவில்லை. ~குஞ்சு கூட்டைவிட்டுப் பறந்து விட்டது.| ஆம் சாள்ஸ் இயக்கத்தில் இணைந்துவிட்டான்.

சாள்ஸ்சின் தமையனார் தனது காலத்தில் 1980களில் இயக்கத்தில் இணையவென பாடசாலை நண்பனான ஜொனியுடன் சேர்ந்து பெயர் கொடுத்திருந்ததும், அம்மாவிற்குச் சொல்லாமல் போக மனமில்லாமல் கடைசியாய் ஒருமுறை அம்மாவிடம் சொல்லிவிடடுப் போக வந்ததும், அம்மா எல்லா அம்மாமாரையும்போல அழுது மன்றாடி மகனை மறித்ததுமான நிலை சாள்சிற்கு வரவில்லை. பதினைந்து, இருபது ஆண்டுகள் கழிந்த பின்னரும் தமையனை நக்கலடிப்பான். ~இயக்கத்திற்கு போறதுக்கும் அம்மாட்டைச் சொல்லிவிட்டுப் போகவந்த ஆளிவர்| என்று.

குடும்பத்தினருடன் இவனுக்கான உறவு அதுவொரு அபூர்வமான உறவுநிலைப் பிணைப்பு. தந்தை, தாய், மகன், உறவுநிலைக்கு அப்பால் குடும்பத்தில் உள்ள அனைவரும் சாள்சின் ஆளமை வீச்சுக்குள் கட்டுப்பட்டிருந்தனர்.

இன்னும் சொல்வதானால் இவனொரு பெரிய பொறுப்பாளராகவும், அம்மா, அப்பா மற்றும் இவனது மூத்த சகோதரர்கள் அனைவரும் இயக்கத்தில் அப்போதுதான் சேர்ந்த புதிய போராளிகள் போல் ஓடுப்பட்டும், கட்டுப்பட்டும் நடப்பதைப் பார்க்க எங்களுக்கு வியப்பும், சிரிப்புமாய் இருக்கும்.

வளர்ந்து பெரியவனாகி, இயக்க முதிர்ச்சியும் சேர்ந்துவிட, சாள்ஸ் குடும்பத்தின் தலைமகனாய் ஆகிவிட்டான். குடும்பத்தினர் எல்லோரும் எதற்காகவும் அவனது ஆலோசனையைப் பெறுவது என்ற நிலைவந்து விட்டது. சாள்ஸ் தனது பெற்றோருடன், சகோதரர்களுடன் பழகுவதைப் பார்க்க அலாதியாய் இருக்கும். பெற்றோர், சகோதர உறவு என்ற நிலை அல்லாது நல்ல சினேகித வட்டம் ஒன்று ஒன்றாய்க் கூடியிருந்து பம்பலடிப்பது போலிருக்கும்.

சாள்சின் பணிகளில் இணைந்தும் சேர்ந்தும் அவனது பெற்றோர் குடும்பத்தினர் ஆற்றிய விடுதலைப் பணியும் பங்களிப்பும் இன்னொரு பக்க வரலாறாய் விரியும்…. சாள்சின் நண்பர்கள் அனைவரையும் தம் பிள்ளைகளாய், சகோதரராய் கொண்டாடி இன்பத்திலும் துன்பத்திலும் கூடி வாழ்ந்திருந்த குடும்பமது.

எம்முடன் ஒன்றாயிருந்து வீரச்சாவடைந்த எம் தோழர்கள் நினைவாக நாம் அமைதியாய் உணர்வின் மௌனமாய் இருக்கும் நாள், இயல்பில் சாள்சின் பிறந்த நாளாயும் அமைந்தது. சாள்சின் பிறந்த நாளும் எம்மோடு அமைதியாய்க் கழியும். பிறந்த நாளன்று பிள்ளைக்கு உணவூட்டி மகிழ நினைக்கும் தாயின், குடும்பத்தின் உணர்வுகளும்கூட எம் நிலை கருதி இன்னொருநாளாய் அமையும்.

விடுதலைப் போராட்டப் பற்றுணர்வை எந்தவொரு கட்டத்திலும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவன் சாள்ஸ். அவனது இள வயதுக்காதலி, உறவு முறைச் சொந்தக்காரியும்தான். இயக்க முகாமில் போராளிகளிடையே நடந்த சாதாரண விவாதம் ஒன்றில், போராளிகள் போராளிகளையே திருமணம் செய்தல் சிறந்ததாக இருக்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட, அக்கருத்தின் தாக்கத்துடன் சாள்ஸ் தன் காதலியிடம் சென்றான். அப்பெண்ணைப் போராளியாக்கும் முயற்சியில் சாள்சும், சாள்சை போராட்டத்தில் இருந்;து விலத்தி எடுக்கும் முயற்சியில் அப்பெண்ணுமாக உரையாடல் நடந்தது. அங்கு காதல் தோற்றது. இல்லையில்லை… சாள்சின் போராட்டப்பற்று வென்றது. காதற் பயணம் நின்றது. சாள்ஸ்சின் விடுதலைப் பயணம் தொடர்ந்தது.

அதன்பின் அவன் கடமைக்குள்ளேயே ஆழமாய் மூழ்கிவிட்டான். குறித்த காலம் வரை தனிப்பட்ட தனது வாழ்க்கையைப்பற்றிக் கவலைப்படவோ, காதலிக்கவோ நேரமிருக்கவில்லை அவனுக்கு.

காலம் ஓடியது. மட்டக்களப்பு சென்றுவந்து வெற்றிகரமான நடவடிக்கையாளன் என்ற வகையில் அவனது பரிமாணம் வளர்ந்திருந்த வேளையில், அவனது திருமணம் கனிந்தது.

முன்னைய அனுபவத்தாலோ அல்லது தொடர்ச்சியான பணிசார்ந்து அவனுள் உருவாக்கியிருந்த இயல்பினாலோ என்னவோ பேச்சுத்திருமணம் என்றே நின்று கொண்டான். மருத்துவப் போராளியை மனையாட்டியாய்க் கொண்டு இனிதான வாழ்க்கையில் அழகான மூன்று பிள்ளைகள். துணையைச் சமமாய் மதித்து, வாழ்வையும் பொறுப்பையும் பகிர்ந்துகொள்ளும் நல்ல குடும்பத்தலைவனாயிருந்தான்.

வாழ்க்கைத்துணை மருத்துவக் கல்விக்காய் தூர இடம் சென்றிருந்த வேளையில் பல மாதங்களாக குழந்தையைப் பராமரிக்கும் நல்ல தந்தையாக, மிக நல்ல கணவனாக விளங்கினான். பணியால் இல்வாழ்விற்கும், வாழ்வினால் பணிக்கும் இடையூறின்றி இனிதாய் நகர்ந்தது அவனது வாழ்வு.

புலனாய்வுத் தளத்தில் சாள்ஸ் ஒரு பொறுப்பாளர். எமது துறையின் வெளிக்களப் புலனாய்வின் ஒருபகுதிப் பொறுப்பாளனாய்ச் செயற்படத் தொடங்கிவிட்டான். கொழும்பில் பெற்ற வெற்றிகள் தந்த அனுபவமும், தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் தந்த ஊக்கமும் அவனது செயற்பாட்டில் துணை நின்றன.

உறுப்பினர்களைப் பயிற்றுவித்தல், மற்றும் எதிரிப் பிரதேசத்தில் தளங்களை உருவாக்குதல் என்ற வகையில் ஆரம்பித்தது சாள்சின் ஆரம்பகாலப் புலனாய்வுப் பணிகள். கொழும்பு அதிகார வர்க்கமும் எமது செயற்பாடுகளைத் தடுப்பதற்கான முறியடிப்புப் புலனாய்வு அமைப்பும் முன்புபோல் இல்லை. அவர்களது செயற்பாடுகளும் விரிவடைந்து செல்லத்தொடங்கிவிட்டது.

எமது செயற்பாட்டாளர்களுக்கு முன்புபோல் அல்லாமல் இப்போது தீவிரமான பயிற்சியும் பெருமளவான அறிவுறுத்தல்களும் தேவைப்படுகின்ற நிலைமை. பயிற்சிகள்…, புலனாய்வு வகுப்புகள்…, புதிய தந்திரோபாயங்கள்… என்று சாள்சின் ஆளுமை விரிந்து சென்றது.

கரும்புலி நடவடிக்கையாளர்களையும், உறுப்பினர்களையும் பயிற்றுவிப்பதிலும், பழகி ஊக்குவிப்பதிலும் சாள்சின் தனித்துவம் சக பொறுப்பாளர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாய் இருக்கும். பம்பலடித்து விளையாடியும், கண்டித்து அறிவுறுத்தியும் உறுப்பினர்களைப் பயிற்றுவிப்பான்.

விளையாட்டு மைதானத்திலும் உடற்பயிற்சிக் கூடத்திலும் அவர்களுடன் கூடி ஒன்றாய்ப்பழகி அவர்களை வென்றெடுப்பான்.

சாள்சின் பிரதான பயிற்சி ஆசிரியர் பிறேம்நாத் இன் பயிற்சி மைதானங்களிலும், சூட்டுக் களங்களிலுமாக கழியும் அவனது பொழுதுகள். அப் பொழுதுகளிலேயே கரும்புலிகளுடனான உறவும், மதிப்பீடுமாய் அவனது வேலை நகர்ந்திருக்கும்.

நீந்தத் தெரியாத ஒருவருக்கு இடுப்பில் கயிறு கட்டிக் கடலில் இறக்கி விடுவதாகட்டும், இளைய போராளிகளுடன் உடற்தகைமையிலும், ஆயுதத்திறனிலும் போட்டி போடுவதிலாகட்டும், ஒன்றாய் கூடி உண்டு மகிழ்வதிலாகட்டும் அவர்களுடன் பழகி அவர்களுடனேயே ஒன்றித்து விடுவான் சாள்ஸ்.

இராணுவத் திட்டமிடலிலும் கூட அவர்களது நிலையறிந்து, தகைமையறிந்து, திட்டம் வகுப்பதிலும், ஆயுத வெடிபொருளைத் தெரிவு செய்வதிலும், மொத்தமாய்க் கவனமெடுப்பான் சாள்ஸ். குறித்த ஆயுதத்தை, குறித்த முறையில், குறித்த போராளி இயக்குவானா? என்று பார்ப்பானே அல்லாமல் பொதுவான ஆயுதம் ஒன்றையெடுத்து ஆட்களிடம் கொடுத்தனுப்பி விடமாட்டான்.

அது – அதனால் – அவனுக்குப் பொருத்தம் – என்பதாய் அமையும் சாள்சின் திட்டமும் பொருட்களும். அதற்கேற்ப இருந்திருக்கும் போராளிகளுடனான அவனது பழக்கமும் மதிப்பீடும்.

சாள்சுடன் ஒன்றாயிருந்து, ஒன்றாய்ப் பயணித்து, அவனுடனேயே வீரச்சாவடைந்துவிட்ட லெப். காவலன், லெப். சுகந்தன், லெப். வீரமறவன் ஆகியோரை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் அவர்கள் அறிவும், ஆற்றலும் கொண்ட எதிர்காலச் சாதனையாளர்களாய் இருந்திருப்பர். ஏனெனில், சாள்சின் தெரிவு அப்படி இருந்திருக்கும்.

1997. நாம் யாழ்ப்பாணத்தில் இருந்து பின்வாங்கி வன்னியில் தளம் அமைத்திருந்த காலம். ஜெயசிக்குறு படைநகர்வையும் எதிரி ஆரம்பித்திருந்தான்.

கொழும்பிற்கான திட்ட நகர்வுகளைச் செய்வதற்கான களச்சூழல் வன்னியில் தடங்கல்களைச் சந்தித்தது. இதேவேளை இந்நகர்வுகளைச் செயற்படுத்தச் சாதகமான களச்சூழல் மட்டக்களப்பில் உருவாகியிருந்த நேரமது. எம்மில் ஒரு பொறுப்பாளர் மட்டக்களப்பிற்குச் சென்று அங்கிருந்து செயற்படுவதென முடிவெடுத்தோம். மட்டக்களப்பு களப்பரீட்சயம் இல்லாத சாள்சை அனுப்ப நாம் தயங்கியபோது ~என்னால் முடியும்| என்று முன்நின்றான் சாள்ஸ். வெளியக வேலைகளிற்காகவும், புலனாய்வுப் பொறுப்பாளனாகவும் சாள்ஸ் மட்டக்களப்பிற்குப் பயணித்தான்.

மட்டக்களப்பில் நிக்சனின் ஆரம்பத் தொடர்புகளில் இருந்து காந்தி உருவாக்கி வைத்த புலனாய்வுக் கட்டமைப்புத் தளத்தில் நின்று சாள்ஸ் செயற்படத் தொடங்கினான்.

மட்டக்களப்பில் இருந்த கள நிலவரத்தை தனது ஆளுமை வீச்சிற்குள் எடுத்துக்கொண்டான் சாள்ஸ். விடுதலைப் புலிகளை முற்றுகைக்குட்படுத்திய பெருமிதத்துடன் நடந்த எதிரியின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாக சிங்களத்தின் நகரங்களில் வெடித்தன குண்டுகள்; ஒன்றல்ல, இரண்டல்ல, தொடர்ச்சியாக் வீழ்ந்தன இலக்குகள்.

காந்தியும் சின்னவனுமாய் கொழும்பையும் மட்டக்களப்பையும் இணைத்ததாய் உருவாக்கிய புலனாய்வுத் தளத்தில் சாள்சின் வெற்றிப்பயணம் நடந்தது. காந்தியால் உருவாக்கப்பட்ட அந்தக் கட்டமைப்பை வெற்றியென்ற மகுடத்தில் ஏற்றி ஒளிர வைத்தது சாள்சின் ஆளுமையும், இராணுவத் திட்டமிடல்களும்.

கரடியனாற்றில் இருந்து பழுகாமம் வரை நேரகாலமின்றி ஓடித்திரியும் அவனது உந்துருளி. இளங்கோ, மதன், அருள்ராஜ், தூயமணி மாஸ்ரர் என அவனது பொறுப்பாளர்களை உசுப்பிவிடும் சாள்ஸ்சின் கேள்விகளும், கட்டளைகளும்; சாள்சின் நேரடி வழிநடத்தலில் மட்டக்களப்பில் புலனாய்வுக் கட்டமைப்பு மெருகுபெற்று வளர்ந்தது. எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் தக்க அடி கொடுத்தும் ஊடுருவியும் உருவாக்கியிருந்தான் தனது கட்டமைப்பை.

புலனாய்வின் கட்டமைப்புகள், நகர்வுகள் எவ்விதத்தில் நடந்தாலும் வெற்றிகரமான நடவடிக்கையாய் அவற்றைப் பொருத்தி நடாத்தி முடிப்பதுதான் மகுடம். இந்த மகுட வெற்றிமாலையை தொடுத்து முடிப்பதில் சாள்ஸ் ஒரு சமர்த்தன்.

~எல்லாப் பாதைகளும் ரோமுக்கே| என்பதைப்போல் எல்லா வளங்களும் வெற்றியை நோக்கியே திரும்பும். நியூட்டனின் கட்டமைப்பு திட்ட வேவு முடித்து பொருள்நகர்வு வழிதேடிக் காத்திருக்கும். பயிற்சி கொடுத்து அணியைத் தயாராக வைத்திருப்பான் அன்பு. பொருள் நகர்வின் நோக்கமாய் அமைந்த காந்தியின் கட்டமைப்பு தனக்கான பணிமுடிக்கத் தயாராக நின்றிருக்கும். தடை தாண்டி கரும்புலியை இலக்குநோக்கி நகர்த்த வழியொன்றை கைவசமாய் வைத்திருப்பார் கபிலம்மான்.

அனைத்தையும் ஒருங்கிணைத்து நடவடிக்கையை நோக்கி நகர்த்த வேண்டும். என்னமாதிரி? செய்வாயா? என்று கேட்டால் ~என்னால் முடியும்| என்றுகூறி அந்த இடத்தில் பொறுப்பேற்பான் சாள்ஸ். – வேவை, – பொருள் நகர்வை, – ஆளணிப் பயணத்தை, – ஒன்றிணைத்து, ஒருங்கிணைத்து திட்டத்தின் வெற்றிவரை ஓயமாட்டான். தொடர்புபட்ட மற்றையோரை ஓய விடவும் மாட்டான். சொன்னவர் சொன்ன பணியைச் செய்து தரும் வரை மென்மையாகவும், கடுமையாகவும் நின்று அவர்களை அப்பணியைச் செய்விக்கும் ஆற்றல் சாள்சின் தனித்துவம்.

சாள்ஸ் பெற்ற வெற்றிகளும் அவனது ஆளுமை வீச்சுமாக புலனாய்வுத்துறையினுள்ளே அவன் தனித்துவமாய் ஒளிர்ந்தான். அந்த ஒளியை நோக்கி ஆளணி மற்றும் பிற வளங்களும் இணைந்துகொண்டன. புலனாய்வின் முதன்மை வளங்கள் அனைத்தையும் தன்வசம் ஈர்த்து ~என்னால் முடியும்| என்று கூறி வெற்றிக்கான உத்தரவாதத்தை வழங்கும் ஆற்றல் சாள்சிடம் இருந்தது.

நீர்கொழும்பைச் சூழ கட்டமைப்பு உருவாகி வேவு, பொருள் மற்றும் ஆளணி நகர்வு என எல்லாம் பொருந்தி வந்துவிட்ட வேளையிலும் கூட தளத்திலும், புலத்திலுமாக விநாயகத்தின் தோளில் அழுத்திக்கொண்டிருந்தது கட்டுநாயக்கா நடவடிக்கை.

மன்னார் அரிப்பிற்கும், முல்லைத்தீவு- அன்புவின் பயிற்சி முகாமிற்குமாக இராணுவ வேலி தாண்டி மாறிமாறி அலைந்து திரிந்தார் விநாயகத்தார்.

சுற்றிவளைப்புகளில் கூடச்சென்றோர் வீரச்சாவடைகின்ற போதும் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளாமல் தனியே தானே சுமக்கும் விநாயகத்திற்கு கடிவாளம் போட்டு நட்புடன் கட்டிமேய்க்க பொருத்தமான நேரத்தில் மட்டக்களப்பில் இருந்து சாள்ஸ் வந்து சேர்ந்தான். ~நீங்கள் ஏன் ஓடித்திரிகின்றீர்கள் நான் பார்க்கின்றேன் அம்மான்| என்று தாங்கினான் சாள்ஸ்.

சாள்சின் வேகமான திட்டமிடலும், விநாயகத்துடனான நட்புரிமையான உறவும் சேர்ந்து வேலை முன்நகர்ந்தது.

அந்நேரம் பார்த்து திட்டத்தின் களப் பொறுப்பாளராக விநாயகம் நியமித்த செட்டி வீரச்சாவடைந்தபோதும் கூட, ~என்னால் முடியும் அம்மான்| என்று சாள்ஸ் முன்வந்தான். அவனது பொறுப்பின் கீழிருந்த முத்தப்பன் பொறுப்பேற்க, திட்டம் தொடர்ந்தது.

தலைவர் அவர்களது ஆலோசனைகளுடனான திட்டத்துடன், தூர வீச்சிற்கான கனரக ஆயுதப் பயன்பாடு…, இரவுச் சூட்டிற்கான தந்திரோபாயங்கள்…, பொருத்தமான வெடிமருந்துத் தெரிவுகள்…. என எங்கள் எண்ணங்கள் எல்லாவற்றையும் செயல்வடிவப் பொறுப்பேற்றான் சாள்ஸ்.

சாள்சின் கையாள்கையினால் திட்டம் புதுவேகம் பெற்றது. நடவடிக்கையென்று வந்துவிட்டால் வழமையாகச் செய்வது போல பொருளாதாரம், ஆவணம், தொழில் நுட்பம் என எல்லாக் கட்டமைப்பும் ~எள் என்று கேட்க எண்ணெய் ஆக| கை கொடுக்க நகர்வு வசமானது. தாக்குதல் அணி புது மெருகுபெற்றதும், கட்டுநாயக்காவில் எமது கரும்புலி வீரர்கள் களமாடி வென்றதும் வரலாறு.

புலனாய்வின் அடிப்படையான ~இரகசியம் காப்பாற்றுவதில்| புலியாய் இருப்பான் சாள்ஸ். அவன் பெற்ற வெற்றிகள் போலவே அவனது கோபமும் புகழ்பெற்றது. ~ரௌத்திரம்; பழகு| என்றார் பாரதியார்; இரகசியப் பாதுகாப்பிலோ புலனாய்வு மற்றும் இராணுவ முன்நகர்விலோ தவறுகள் விடுவோருடன் மென்மையாக நடந்துகொண்டு சமாளித்துப் போக நினைப்பவர்கள் – சாள்சிடம் படித்துக்கொள்ள வேண்டியது இந்த ~ரௌத்திரம்; பழகுதல்.|

இரகசியமான செய்தி ஒன்றை தொலைத்தொடர்புச் சாதனத்தில் பாதுகாப்பில்லாமல் அறிவித்துவிடுவார் யாரோ ஒருவர். உலுக்குகின்ற உலுக்கில் அவர் கொஞ்சம் எரிபொருள் தேவை என்றோ அல்லது மழைவரப்போகின்றது குடை தேவை என்றோ இருக்கக்கூடிய சாதாரண செய்திக்கே பாதுகாப்பான சங்கேதத்தாள் தேடித்தான் திரிவார்.

சிலவேளைகளில் ஒருவரையொருவர் அடையாளம் கண்டிருப்பர் அல்லது அடையாளம் காண வாய்ப்பு அங்கு இருந்திருக்கும். வெடித்துத் துளைப்பான் சாள்ஸ். குறித்த முகாமிற்குப் பொறுப்பாக இருந்தவர் ~பொறுப்பு வேண்டாம் ஆளை| விடு என்பார். அல்லது அடுத்த சந்திப்பு நேரத்தில் அன்னம், தண்ணீர் இல்லாமல் ஆளையாள் காணாதபடி காவல் காத்து நிற்பார்.

சமைக்கும்போது அவ்வப்போது கொஞ்சம் உப் புப்புளி கூடிவிடுவது போல சாள்சின் கோபமும் அவ்வப்போது கொஞ்சம் எல்லை மீறிவிடுவதுமுண்டு.

குறித்த திகதியில் தரப்படவேண்டிய ஏதாவது ஓர் அறிக்கை தரப்படவில்லையா? சம்மந்தப்பட்டவர் யாரென்று பாராமலும், முன்னுள்ளவர் எவரென்று நோக்காமலும் வார்த்தைகள் வெடிக்கும்; கோவைகள் பறக்கும். பின்னர் சமாதானம் செய்ய பொட்டம்மான்தான் தேவைப்படுவார்.

தோல்விகளைச் சந்திக்க மறுத்து, வெற்றிகளுக்காக முயன்று முன்நகர்வது சாள்சின் இரத்தத்தில் ஊறிய இயல்பு. சாதாரண நீச்சலிலோ அல்லது பந்து விளையாட்டிலோகூட அவன் தோல்விகளை ஏற்கமறுத்து முயல்வான். இந்த இயல்பே அவனது பல வெற்றிகளுக்கு அடிப்படையானதென்றாலும், நண்பர்களிடையேயும் கூட அவனது பிடிவாதம் வெளிப்பட்டு வெடித்து விடுவதுமுண்டு.

கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கும், முன்கூட்டியே முடிவெடுத்து அதனைக் கட்டளையாக வழங்குவதற்கும் இடையேயான தெரிவில் அவ்வப்போது சிக்கல் வரும் சாள்சிற்கு.

1991 இல் கூட்டுப்படைத் தலைமையக நடவடிக்கைக்கு வீடு ஒன்றை எடுத்து வைத்திருந்தார் வரதன். அந்த வீட்டில் யார் யார் தங்குவதென வரதனுடன் ஆலோசிக்காது சாள்ஸ் கட்டளையாக வழங்க வந்தது உறவுச்சிக்கல். அது போலவே, 2001 இல் கட்டுநாயக்கா நடவடிக்கை அணிக்கு பிரதான பொறுப்பாளர் கண்ணனின் கருத்தின்றி இரண்டாவது பொறுப்பாளராக இருந்த கானகனை நீக்கி, முகிலனை நியமிக்க, வந்தது சிக்கல்.

விடுதலையை விரைவுபடுத்த வெற்றியின் தேவை பற்றிய தெளிவூட்டலும், மனிதர்களைவிட நாடு வணங்க வைத்தும் நகரும் திட்டங்கள்.

இராணுவ ரீதியான திட்டங்களில் சாள்ஸ் புதிய எண்ணங்களை முதன்மைப் படுத்துவான். வழமையான வழிகளில் அல்லாது வித்தியாசமான வழியில் சிந்தித்து நடைமுறைப்படுத்துதலும் சாள்சின் இயல்பு. அவனது அந்த இயல்பு எமக்குப் பல இடங்களில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

கட்டுநாயக்கா திட்டமிடல்; சிறு வேவு அணி விமானத்தளத்திற்;குள் வெற்றிகரமாக உள்ளே சென்று வந்துவிட்டது. பெரிய அணியை உள்நகர்த்துவதிலும் பிரச்சினை இருக்காதென்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் கங்கர் எனப்படும் விமானக்கொட்டகைக்குள்ளும், வெளித்திடலிலும் நிற்கும் விமானங்களை அழிப்பதற்கான சிறந்த வழி எது என்ற விவாதம்; விமானங்களை நெருங்கிச் சென்று நேரக்கணிப்புக் குண்டுகளைப் பொருத்தலாம் என்றும், தவிர்க்கமுடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டால் உடலில் பொருத்தியிருக்கும் வெடிகுண்டின் மூலமாக விமானத்தை ஒட்டியபடி வெடிக்கவைத்து விமானத்தைத் தகர்க்கலாம் என்றும் கருத்துக் கூறப்பட்டது.

தூரத்தில் இருந்தே விமானங்களை P.முஇ பு.P.ஆ.பு மற்றும் சு.P.புகளால் அடிப்பதே பொருத்தமானதாய் இருக்கும் என்பது சாள்ஸ்சின் வாதம். ~என்னால் முடியும்|. P.முஇ சு.P.பு பயிற்சியை என்னிடமே விட்டுவிடுங்கள். என்று நின்றுகொண்டான் சாள்ஸ். நான் சாள்;சின் பக்கமே நின்று கொண்டேன். சாள்சின் கருத்தே சரியானது என்பதை கட்டுநாயக்காவின் முடிவு நிரூபித்தது.

~பலமானதொரு பாதுகாப்பிற்குள்ளும் பலவீனமான நிலையிருக்கும்| என்பதை உணர்ந்த முன்னகர்த்தல்கள்; பணிசார்ந்த நகர்வுகளுக்காக தன்னுடன் தொடர்புபடும் மானிடர்களை முடுக்கி, இறுக்கி நகர்த்துவதில் சாள்சின் திறமை வெளிப்படும். ராஜகிரிய வழிநடத்தல் இதனை வெளிப்படுத்தும்.

கண்ணிவெடி ஒன்றை நிலைப்படுத்த ராஜகிரியவில் இடம் பார்த்து அறிவிக்கின்றான் முத்தப்பன். சாள்சின் மூளையில் திட்டம் மாற்றம். அணியொன்று நிலையெடுக்கப் பொருத்தமான இடம் பார்… மறைந்திருக்க வீடு பார்…, என்று பின்னர் சாள்சிடமிருந்து முத்தப்பனுக்கு யோசனைகளும், அழுத்தமான கட்டளைகளும் சென்றன. அது கடினம் என்றும், சாத்தியமில்லை என்றும் முத்தப்பனிடமிருந்து பதில். அப்படியானால் வேறு ஆளை அனுப்பி அதனைப் பார்க்க ~என்னால் முடியும்|. என்று சாள்ஸ் கறாராக, பதில் அனுப்ப, முத்தப்பன் மீண்டும் முயற்சித்தான். சாள்சின் எதிர்பார்ப்பு சரியென்பதை நிரூபித்தன அடுத்து வந்த நாட்களும், வகுக்கப்பட்ட திட்டமும்.

சிக்கலான இராணுவத் திட்டத்தில் இக்கட்டான நிலைமைகள் தோன்றும். அவ்வேளையில் பின் விளைவுகள் தொடர்பாக எதிர்மறை எண்ணம் தென்படும்போதும் அவற்றை எதிர்கொள்ளும் துணிவுடன் நேர்மறைச் சிந்தனையை முன்நிறுத்தி திட்டத்தை நகர்த்த ஒரு இரும்பு மனம் வேண்டும். வைரம் பாய்ந்த அந்த இரும்புமனம் சாள்சிற்கு வாய்த்திருந்தது. இது சாள்சின் பல வெற்றிகளின் சூட்சுமம்.

இப்படித்தான் ஒரு சந்தர்ப்பம். 1998. சிறிலங்கா ஜெயசிக்குறு படைகள் கிளிநொச்சியை நெருங்கிவிடலாம் என்ற வகையில் முன்நகர்வில் நின்றன. அதனை ஒரு அரசியல் வெற்றியுமாக்கி சிறிலங்காவின் 50 ஆவது சுதந்திர தினத்தைத் தமிழரை வெற்றிகொண்ட எழுச்சி நாளாக்க கங்கணம் கட்டி நின்றது கண்டிச் சிங்களத்தின் தலைமை.

கண்டிச் சிங்களத்திற்கு பாடம் படிப்பிக்கத் தமிழரை அடிமைகொள்ளும் சிங்களத்தின் அதிகார மையத்திற்கு நல்லதொரு அடி கொடுக்கத் திட்டம் தயாரானது. குறுகிய அவகாசத்தில் குறுகிய நாட்களில் அது சாத்தியமா? என்று நாம் கேட்க ~என்னால் முடியும்| என்ற சாள்சின் பதிலுடன் வேகவேகமாக வகுக்கப்பட்டது திட்டம்.

முழுமையாக பயிற்சிபெற்ற கரும்புலி அணிகூட தயாராக இல்லாத நிலவரம். சாள்சின் நேரடி உதவியாளர்களும், வேறு பணிநிலைக்கு உரியோராகவும் நின்றிருந்த போராளிகளும் ஒன்றாக்கப்பட்டு அவசரக் கரும்புலி அணியும் தயாராகி விட்டது.

திட்டம் உருவம்பெற்று வெடிமருந்து வாகனம் புறப்படச் சில மணிநேர அவகாசமே இருந்த ஒரு பகற்பொழுது. சிறிலங்கா வானொலியில் மதியச் செய்தியறிக்கை சொன்னது ~மட்டக்களப்பில் விடுதலைப் புலிகள் வாகனத்தில் வெடிமருந்து பொருத்துகின்றார்கள்… இப் புலனாய்வுத் தகவலின்படி வாகனத்தைப் பிடிக்க எல்லாப் படை நிலைகளும் உசார்படுத்தப்பட்டுள்ளன|. இது செய்தியின் சாராம்சம். இப்போது இக்கட்டான நிலைமை. செய்தியிற் சொன்னதுபோல் அதே மட்டக்களப்பு பழுகாமத்தில் நின்றே வெடிமருந்து பொருத்திய வாகனத்தில் இறுதிச் சரிபார்த்தலில் ஈடுபட்டிருந்தனர் சாள்சும் அவனது நண்பர்களும்.

எம்மைக் கலங்கடித்துத் எம்மிடம் உள்ள திட்டங்களைக் கைவிடச் செய்யும் பொதுவான தந்திரோபாயமாகவும் இருக்கலாம். அல்லது உண்மையான புலனாய்வு அறிக்கை தவறுதலாக செய்தி நிறுவனத்திற்கு கசிய, அங்கு அது வெளிப்படுத்தப்பட்டு விட்டதாகவும் இருக்கலாம்.

இதே விடயத்தையொட்டிய புலனாய்வு அறிக்கையொன்றும் வேறொரு இரகசியத் தகவல் மூலத்திலிருந்தும் அதே சமநேரத்தில் கிடைத்தது. ஆக எமது திட்டத்தை முன்னறிந்து முறியடிக்க எதிரி தயாராகிவிட்டான் என்பது தெளிவாகிவிட்டது.

இதற்கிடையில் இன்னுமொரு புதிய சிக்கலாக இலக்கு நோக்கி நகர்ந்த கரும்புலிப் போராளியொருவர் எதிரிகளிடம் கைதாகி விட்டார். இலக்குப் பிரதேசத்தில் நடவடிக்கைப் பொறுப்பாளரும், மேற்படி கரும்புலியும் சந்திக்க ஓரிடத்திற்குச் சென்றிருந்தனர். தனது சந்திப்பு நேரத்திற்கு சற்று முன் – பின்னாக குறித்த போராளி கைதானதை தானே நேரில் உறுதிப்படுத்தியதாக நடவடிக்கைப் பொறுப்பாளர், சாள்சிற்கு அறிவிக்கின்றார். கைதானவருக்கு பொறுப்பாளரையும், அணியில் மற்றையோரையும் தெரியும் என்பதும், இலக்கு, திட்டம் என்பனவும் தெரியுமென்பதுமான நிலவரம். நெருக்கடியான ஆபத்தும் நிலவர அழுத்தமும் உச்சத்தில் இருந்த நேரமது.

சாதாரண மனிதர்களுக்கு திட்டத்தை இடைநிறுத்தி, பிற்போட்டுவிட பொருத்தமான நிலவரம். ஆனால் சாள்ஸ் சாதாரணமானவன் அல்ல. அவன் பின் விளைவுகளை எதிர்மறையாக அல்லாது நேர்மறையாக சிந்திக்கும் ஆற்றல் கொண்டவன். விளைவுகளுக்கு அஞ்சாத இரும்பு மனம் கொண்ட மனிதன்.

~அவசர அவசரமாகச் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் சிலவற்றுடன்| திட்டம் நகர்ந்தது. எதிரி வானொலியில் கூறிய அதே கிராமத்தில் இருந்து, எதிரி எதிர்பார்த்த அதே பாதையால், அதேநாளில், அதே திட்டம் நகர்ந்தது. – வெற்றி எமதானது.

புலனாய்வின் நீண்டகால இரகசிய நடவடிக்கையாளனும், சாள்சின் அருகிருந்து அவனையுணர்ந்த கரும்புலிகளும் இணைந்த அர்ப்பணிப்பின் வெற்றி; சாள்சின் அயராத உழைப்பிற்கும், அசராத மனத்துணிவிற்கும் கிடைத்த வெற்றி ஆனது. சாள்சின் வழிநடத்தலின் பெறுபேறாய், அவனது ஆளுமையின் அடையாளமாய் ஆனது அந்த வெற்றி!

புலனாய்வுத்துறையில் முக்கிய பொறுப்பாளராக விளங்கியவன் சாள்ஸ். நிர்வாக ரீதியாக அல்லாவிட்டாலும் நடைமுறை ரீதியாக எனக்கு அடுத்த பொறுப்புநிலையில் செயற்பட்டு, திட்டங்களை வீச்சுடனும், மூச்சுடனும் முன் நகர்த்தியவன்.

அவன் புலனாய்வுத்துறையில் இருந்து துறை மாறிச் சென்ற நினைவு பாரமாய்க் கனக்கும்.

தனிப்பட்ட உறவுகளுக்கு மேலாக, கட்டமைப்பின் மீதான பொறுப்புணர்வு மேலெழுந்தவேளை அது. எங்கள் நாட்டை சுனாமி தாக்கிய காலத்தில் எங்கள் உறவினுள்ளும் சோகம் சூழ்ந்தது.
சாள்ஸ் தீவிரமான முன் முயல்வின் அடையாளமாய் தலைவர் அவர்களின் மதிப்பைப் பெற்றிருந்தவன். ஒரு இராணுவத் திட்டம் எவ்வாறு வகுக்கப்பட வேண்டும் எனத் தலைவர் அவர்களின் மனதில் உதிக்கும் எண்ணத்திற்குச் செயல்வடிவம் கொடுக்கும் சிந்தனைத் திறனும், செயலூக்கம் கொண்டவனுமாக சாள்ஸ் வளர்ந்திருந்தான்.

தனியானதொரு நிர்வாக அலகை இயக்குவதற்குத் தேவையான ஆற்றலும், அறிவும், திறனும் கொண்டிருந்த சாள்சிற்கு தனியானதொரு பணி வழங்க தலைவர் அவர்கள் முடிவுசெய்தார்.

2002. சமாதான காலத்தின் ஒருநாள் கொழும்பில் இருந்து முதலாளி ஒருவர் பெரிய வெற்றிகளைப் பெறலாம், கொஞ்சம் காசுதான் வேண்டும் என்று கூறி வந்திருந்தார். – அவரது மொழியில் கொஞ்சக்காசு. அவர் கேட்ட தொகை மூன்று கோடிரூபா – அவர் வேறு யாருமல்ல 1991 இல் உதவி செய்யலாம் என்று எம்மை இழுத்தடித்து, கொழும்பில் சாள்சை பல தடவை சந்தித்து, அலைக்களித்து ஏமாற்றிய அதே தொண்டமனாற்று முதலாளி. இப்போது கிளிநொச்சியில் தன்னை நேரில் சந்திக்க வந்த சாள்சிடமே சொன்னார். ~என்னைப்பற்றியும், கூட்டுப்படைத் தலைமையக தாக்குதலில் எனது பங்களிப்புப்பற்றியும் அவருக்கு நான் செய்த உதவி பற்றியும் சாள்சிடம் போய்க் கேட்டுப்பாருங்கள்| என்று.

இந்த நகைச்சுவையின் பின்னே மறைந்திருந்தது நாம் சந்தித்த மனிதர்களின் ஏமாற்றுத்தனம் மட்டுமல்ல நீண்ட, நெடிய புலனாய்வு வாழ்வில் சாள்சின் அனுபவமும், வரலாறும்.

தாக்குதல்கள், இராணுவ நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு அப்பாலான ஊடுருவல், மனம் மாற்றுதல் சார்ந்த ஆழமான புலனாய்வும், அதன் தளமும் சாள்சிற்கு அந்நியமானதல்ல.

ஆழமான புலனாய்வுத் தளத்தில் செயற்படுவதற்கான அவகாசம் இல்லாதபடி இராணுவ நடவடிக்கை சார்ந்த தொடர்ச்சியான அழுத்தத்திற்குள் சாள்ஸ் ஆழ்ந்திருந்தான் என்பதே இன்னொரு உண்மையாகும்.

~வெட்டொன்று துண்டு இரண்டாய்| பேசும் அவனது இயல்பும், ~உன்னால் முடியுமா? முடியாதா? இப்போதே சொல்லு| என்று உரையாடும் அவனது பாங்கும், இதுபோன்ற ஆழமான புலனாய்வுகளில் அவன் நேரடியாய் இறங்கி நின்று செய்வதில் இடைஞ்சலாய் இருந்ததையும் மறுப்பதற்கில்லைத்தான்.

ஆனால் தனது ஆளுகையின் கீழிருந்த பொறுப்பு நிலைப் புலனாய்வாளர்களுக்கு ஆழமான புலனாய்வு பற்றிய நுட்பங்களை விளங்கவைத்து, நகர்வுகளை திட்டமிட்டு, முன்நகர்த்தி, வெற்றிமிகு பெறுபேற்றை எட்டுவதில் சாள்ஸ் கணிசமாகவே சாதித்திருந்தான்.

எதிரியின் இராணுவத் தலைமையகத்திற்குள்ளும், எதிரியின் புலனாய்வுக் கட்டமைப்பிற்குள்ளும் பயனுள்ள மனிதர்களை கண்டறிந்தோம். அவர்களை மனம்மாற்றி, விடுதலைக்கு வலுச்சேர்க்கும் பெரும் வெற்றிகளை ஈட்டியதில் சாள்சின் வழிநடத்தலும், புலனாய்வின் முன்நகர்த்தல்களும் அவனது புலனாய்வு வரலாற்றின் பொன்னான பக்கங்கள்.

புலனாய்வில் வழமையான பணிகளில் உள்ள அழுத்தத்தின் அளவும்கூடக் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல என்ற போதிலும், கூட புலனாய்வு நகர்வுகள் நடந்துகொண்டிருக்கும் போது பின்னணி நிலை அழுத்தங்கள் உச்ச நிலையில் இருக்கும்.

எதிரியின் முழுச் சுற்றிவளைப்பிலும், தேர்ந்த கண்காணிப்பாளர்களால் அமைக்கப்பட்ட நெருக்கடிக்குள்ளும், ஆயுதங்கள், வெடிபொருட்களுடனோ அல்லது வேறு திட்டங்களுடனோ நகரவேண்டியிருக்கும். அந்த நகர்வுகளின் நிலைபற்றி இங்கிருந்து சிந்தித்துக்கொண்டிருந்தால் தூக்கம் வருவதே அரிதாக இருக்கும். அதுவும் சில வேளைகளில் குறித்த கரும்புலி உறுப்பினர்கள் நகர வாழ்விற்கு அவ்வளவாக தேர்ச்சிபெறாத கிராமியத் தன்மையுடையவர்களாகவும் இருந்து விட்டாலோ சொல்லவேண்டியதில்லை.

நாம் சந்தித்த அழுத்தங்களை விபரிக்க முற்பட்டால் அவை பெரும் விவரணமாய் நீளும். இவ்வகை அழுத்தம் எப்போதாவது என்பதாக அல்லாமல், எப்போதுமே என்பதாகும்போது அவ் அழுத்தங்களின் தாங்குசக்தித் துணையொன்றை நாடும் எனது மனம். அவ் அழுத்தங்களின் தாங்குசக்தித் துணையாகச் செயற்பட்டான் சாள்ஸ்.

சாள்ஸ் நல்ல அழகியல் உணர்வு கொண்டவன். பூங்கன்றுகள் வளர்ப்பதிலும், செல்லப்பிராணிகளைப் பராமரிப்பதிலும் ஆர்வம் கொண்டவன். அதேபோல் இயல்பான ஆற்றலுடன் முகாம்கள், வீடுகள் மற்றும் கட்டடங்களை வடிவமைக்கும் திறனையும் பெற்றிருந்தான். அவனது பணி சார்ந்த இறுக்கங்கள் முன்நின்று இவற்றில் பொழுதுபோக்க விடாமல் வைத்திருந்தபோதும் கூட, கிடைக்கும் வாய்ப்புகளில் தனது அழகியல் ஆர்வத்தை வெளிப்படுத்துவான்.

தேர்ந்த வாசிப்பு ஆர்வத்தையும், சிறந்த எழுத்தாற்றலையும் கொண்டிருந்த சாள்சின் எழுத்தாக்கங்கள் எமது இளைய போராளிகளுக்கு புலனாய்வுச் செயற்பாட்டிலும், நிர்வாகவியல் ஒழுங்கமைப்பிலும் நல்ல பாடங்களாய் அமைந்திருந்தன. எமது தேசியத்தலைவர் அவர்களது 50 ஆவது அகவை மலரில் ~தலைவரது கோட்பாடு| என்ற பெயரில் சாள்ஸ் எழுதிய கட்டுரையானது இங்கு நினைவிற்கொள்ளத்தக்கது. தலைவர் அவர்கள் பற்றிய சாள்சின் புரிந்துணர்வின் அடிப்படையிலும், சாள்சின் காத்திரமான எழுத்தாற்றலை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது மேற்படி ஆக்கம்.

தன்னோடு பணிபுரிவோருக்குக் கட்டளைகளை வழங்கும்போது குறிக்கோளை நோக்கியே முழுதாய் வழி நடத்துவான் சாள்ஸ்;. மனித உணர்வுகளுக்கு ஆட்பட்டு வேறு தெரிவுகளுக்கு இடம்கொடுக்க வாய்ப்பளிக்காமல் கோடுபோட்டது போல் துல்லியமாய் அமைந்திருக்கும் சாள்சின் கட்டளைகள்.

தன்கீழ் பணிபுரிவோருக்கு போராட்டத்தை முதன்மைப்படுத்தி கட்டளைகளை வழங்குவதைப்போலவே அவன் தனது வாழ்விலும் போராட்டத்தை முதன்மைப்படுத்தியே வாழ்ந்தான். சிந்தித்தான்.

நேரடிக் களச் செயற்பாட்டாளனாகவும், பின்னணி இயக்குனராகவும் அவன் பெற்ற பட்டறிவுகள்; எண்ணற்றவை. தமிழீழப் புலனாய்வுப் பட்டறிவினதும், இராணுவச் செயற்பாட்டுப் பட்டறிவினதும் களஞ்சியமான அவன்; வாழ்ந்த காலம் முழுவதும் தேசியம் பற்றியும், தேச விடுதலை பற்றியுமே சிந்தித்தான்.

புலனாய்வு வழிமுறையில் எதிரிகளைச் செயலிழக்கச் செய்வது பற்றியே அவனது சிந்தனை சுழலும். அவனுடைய எண்ணம் முழுவதும் கரும்புலிகளும், அவர்களது வெற்றிக்குத் தேவையான திட்ட நகர்வுகளுமே நிறைந்திருந்தன.

அவன் இன்னமும் வாழ்ந்து சாதித்திருக்க வேண்டியவன். தமிழீழத்தின் திறவுகோல்களாய் அமைந்திருக்கக்கூடிய இராணுவ வெற்றிகளை நோக்கியே அவனது படையப்புலனாய்வுச் செயற்பாட்டுக்காலச் சிந்தனைகள் இருந்திருக்கும். அதற்கான அறிவும், ஆற்றலும், பட்டறிவும் அவனிடம் இருந்தது.

மன்னாருக்கான முதன்மைச் சாலையில் எதிரியின் தாக்குதல் நடைபெறலாம், என்ற கணிப்பை முன்கூட்டியே அறிக்கையாகக் கொடுத்த சாள்ஸ் அதே சாலையில் எதிரியின் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டான். ஆபத்திருப்பது தெரிந்தும் அவ்விடத்தை நோக்கி அவனை பயணிக்க வைத்த சக்தி எது? அது விதியின் கொடிய கரமா?

இல்லை. அவனால் வழிநடத்தப்பட்ட போராளிகள் தொடர்புபட்ட பணி. தாயக மண்ணிலிருந்து வெகுதூரம் சென்று எதிரியின் கோட்டைக்குள் நிலைபெற்று நின்றார்கள் அவர்கள். அவர்களது நிலையை அவன் அறிவான். அவர்களது துடிப்பை…, அவர்களுக்கான நெருக்கடியை…, அவர்களைச் சுற்றி எதிரிகளின் விய+கத்தை…, அவன் அறிவான். – நெருக்கடி ஒன்றின் பின்னால் அவர்களுக்கு தனது வழிநடத்தலின் தேவையை – அவன் அறிவான்.

எதிரியின் தலைமை மையத்தினுள் நெருக்கடிக்குள் உறைந்திருக்கும் இளைய போராளி ஒருவனுக்கு – தனது பொறுப்பாளரின் குரல் – எப்படி இருக்கின்றாய்? என்ற விசாரிப்பு – உனக்கு ஏதாவது தேவையா? என்ற கனிவான கேள்வி – எப்படியாவது செய்யத்தான் வேண்டும் என்ற கறாரான அறிவுறுத்தல் – என்பன அவனை முடுக்கி, இயக்கி விடும் மந்திரங்கள் என்பதை அவன் அறிவான்.

அந்தத் தேவை – அந்தக் கட்டாயக் கடமை – அவனை மன்னாரை நோக்கிப் பயணிக்க வைத்தது. காலம் அவனுக்கிட்ட கடமை பாதுகாப்பு நோக்கிய சிந்தனையைப் புறந்தள்ளி, அவனை மன்னாரை நோக்கிப் பயணிக்க வைத்தது.

சாள்ஸ் ஒரு இளம் செயற்பாட்டுக்கள வீரனாக கொழும்பில் நின்ற காலத்தில் திட்டத்திற்குத் தெரிவுசெய்த கரும்புலி பிசகியபோது தானே கரும்புலியாய்ச் செல்லும் தயார் நிலையில் நின்றான். தனது பணிமுடிக்க உச்ச அர்ப்பணிப்பின் தயாரான நிலை அது. அந்த நிலையிலேயே இப்போதும் தன் பணிமுடிக்க ஆபத்தைப் புறம்தள்ளி முன்நகர்ந்தான்.

வெடிமருந்து வாகனத்தில் கரும்புலியுடன் தயாராகப் போகையில் எதிர்பாராமல் இலக்குவர, ~வெடிக்கவை| என்ற சாள்சின் கட்டளையைப் புறக்கணித்து அன்று அந்தக் கரும்புலி சாள்சை எம்மிடம் அனுப்பி வைத்தான். ~இந்த வேலை தொடர்ந்து நடக்கவேணும்| என்ற அந்தக் கரும்புலியின் வார்த்தையை மெய்யாக்கி அதற்காக வாழ்ந்தான். மாவீரனாகி அவர்களோடு கலந்துவிட்டான்.

கரும்புலியாய் வாழ்ந்து…………, கரும்புலியால் வாழ்ந்து…………., கரும்புலிகளோடு வாழ்ந்து…………, கரும்புலிகளுக்காக வாழ்ந்து…………, இறுதிவரை கரும்புலிகளோடு கலந்திருந்தான். கரும்புலிகள் கண்ட தமிழீழ தேசத்தின் விடுதலைக்கனவு நனவாகி சரித்திரத்தின் நாயகனாக வாழ்வான் சாள்ஸ்.

கேணல் சாள்ஸ் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் 06.01.2008 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு அம்மான் அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து…

http://www.battinaatham.net/description.php?art=18233

  • 2 weeks later...

அஞ்சலிகள்

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சாள்ஸ் அண்ணாவுக்கும் ம‌ற்றும் அவ‌ருட‌ன் வீர‌க‌விய‌மான‌ தோழ‌ர்ளுக்கும் வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏 /

சாள்ஸ் அண்ணாவின்
தியாக‌ம் சொல்லில் அட‌ங்காத‌வை ,  

இன்றும் ம‌ற‌வோம் என்றும் ம‌ற‌வோம் / 

இந்த‌ ப‌திவை வாசித்த‌ போது தெரியுது , சாள்ஸ் அண்ணாவின்  தாக்குத‌ல் அனுகுமுறை எப்ப‌டி ப‌ட்ட‌து என்று / 
2008ம் ஆண்டு த‌மிழ் இன‌ம் இழ‌ந்த‌து மாபெரும் வீர‌னை 🙏😓/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.