Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக மகளிர் தினம்: வேலையில்லா திண்டாட்டத்திற்கு தீர்வு: கிராமப்புற பெண்ணின் ஸ்டார்ட்-அப் நிறுவனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக மகளிர் தினம்: வேலையில்லா திண்டாட்டத்திற்கு தீர்வு: கிராமப்புற பெண்ணின் ஸ்டார்ட்-அப் நிறுவனம்

சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ்
சூரிய பிரபா Image captionசூரிய பிரபா

'இன்ஜினியரிங் படித்தால் வேலை நிச்சயம்; டிப்ளோமா படித்தால் உடனே வேலை; ஹோட்டல் மேனேஜ்மேண்ட் படிக்கும்போதே சம்பாதிக்கலாம்; எட்டும் உயரத்தில் வெளிநாட்டில் மருத்துவ படிப்பு' என்று காலங்காலமாக படிப்பையும், அதையொட்டிய வேலைவாய்ப்பையும் முன்னிறுத்திய விளம்பரங்களை நாம் கேட்டும், கண்டும் வருகிறோம்.

ஆனால், மூன்று முதல் நான்காண்டுகள் படிப்பை முடித்துவிட்டு வெளியே வந்தால், "வேலை இல்லை, வேலை இல்லை, வேலை இல்லை" என்பது மட்டுமே பெரும்பாலானவர்களுக்கு கிடைக்கிறது.

குடும்ப சூழ்நிலையின் காரணமாக படித்த படிப்பிற்கு சம்பந்தமில்லாத வேலைகளை பலர் நாடிச் செல்லும் அவலநிலையும் இருந்து வருகிறது. உதாரணமாக, இன்ஜினியரிங் படித்தவர்கள் ஸ்விகி, சோமாட்டோ போன்ற அலைபேசி செயலியை அடிப்படையாக கொண்ட வீட்டிற்கு உணவுப்பொருட்களை கொண்டு செல்லும் நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர்.

"வேலைவாய்ப்பின்மை சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு கல்வியாக மட்டும் இருக்க முடியாது. அடிப்படை கல்வியில் இருந்து திறன் சார்ந்த பயிற்சியை முன்னெடுத்தால் மட்டுமே சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அந்த வகையில், கல்வித்துறை முதல் சுற்றுலாத்துறை வரை எதிர்காலத்தின் அத்தியாவசிய தேவையாக மாறப்போகும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டுசெல்வது காலத்தின் கட்டாயம்," என்று கூறுகிறார் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் யுகோட் என்னும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான சூரிய பிரபா.

தேனி மாவட்டத்தின் கிராமப்புற பகுதியில் பிறந்த தான், இளமைக்காலத்தில் பெறமுடியாத கல்வி தொடர்பான விழிப்புணர்வை இந்த எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படுத்தி கொடுக்கும் முயற்சியில் AI4KIDS என்ற பெயரில் தங்களது பணியை முன்னெடுத்துள்ளதாக கூறுகிறார்.

வேலையில்லா திண்டாட்டத்திற்கு தீர்வளிக்கும் கிராமப்புற பெண்ணின் ஸ்டார்ட்-அப் நிறுவனம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கும் வேலைவாய்ப்புக்கும் என்ன சம்பந்தம்?

மனிதனின் தலையீடு கண்டிப்பாக தேவைப்படும் செயல்பாடுகளை இயந்திரங்களை/ மென்பொருட்களை கொண்டு செய்ய வைப்பதே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படை.

உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்புவரை 'டேட்டா என்ட்ரி' என்னும் தரவுகளை கணினியில் பதிவு செய்யும் வேலை பரவலாக கிடைத்த சூழ்நிலையில், தற்போது அவற்றை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெருமளவு ஆக்கிரமித்துள்ளது.

அந்த வகையில், கணினி, திறன்பேசி போன்றவை எப்படி நமது தினசரி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளதோ, அதேபோன்று இனி வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அவசியம் எச்சத்தை எட்டும் என்று சூரிய பிரபா கூறுகிறார்.

"நகர்புறங்களில் தனியார் பள்ளி, கல்லூரிகளில் தேசிய மற்றும் சர்வதேச பாடத்திட்டங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு தற்காலம் மட்டுமின்றி, எதிர்காலத்துக்கும் தேவையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ் போன்றவை குறித்து அவர்களது பாடத்திட்டத்திலேயே உள்ளது. ஆனால், எவ்வித அடிப்படை வசதியும் இன்றி ஊரக பகுதிகளில் இருக்கும் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து பாருங்கள்" என்று கூறுகிறார் சூரிய பிரபா.

முகமறிதல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி ஒன்றில் பங்கேற்ற மாணவி Image captionமுகமறிதல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி ஒன்றில் பங்கேற்ற மாணவி

என்ன செய்கிறார்கள்?

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தங்களது ஸ்டார்ட்-அப் நிறுவனம், தற்போதைக்கு லாப-நோக்கமின்றி செய்யப்பட்டு வருவதாக கூறும் சூரிய பிரபா, தமிழகத்தின் மதுரை, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள அரசு பள்ளிகளை தேர்ந்தெடுத்து ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் ரோபோடிக்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமின்றி, பயிற்சியையும் வழங்கி வருவதாக கூறுகிறார்.

"படிக்கும் குழந்தை எங்கு படித்தாலும் வாழ்க்கையில் சாதிக்கும் என்பது உண்மைதான். ஆனால், அந்த குழந்தை எது குறித்தெல்லாம் படிப்பதற்கு வாய்ப்புள்ளது என்பது மிகவும் முக்கியம். உதாரணமாக, ரோபோடிக்ஸ் சொல்லிக்கொடுப்பதற்கான அடிப்படை உபகரணங்களை வாங்குவதற்கு மட்டுமே பல லட்சங்கள் செலவிட வேண்டும் என்ற நிலையில், ஒரு பின்தங்கிய கிராமத்தை சேர்ந்த குழந்தையால் அதற்கு மாதம் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து படிக்க முடியுமா?" என்று கேள்வியெழுப்புகிறார்.

2018ஆம் ஆண்டு மே மாதம் முதல் செயல்பட்டு வரும் யுகோட் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில், தற்போது சூரிய பிரபா, அவரது கணவர் உள்பட ஆறு பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

"மதுரை, இராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பின்தங்கிய அரசு பள்ளிகளில், குறிப்பாக தமிழ் வழி கல்வியில் பயிலும் மாணவர்கள் அதிகமுள்ள பள்ளிகளை சேர்ந்தெடுத்து, அவர்கள் பயன்பெறும் வகையில் மேற்கண்ட இரண்டு தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வையும், பயிற்சி வகுப்புகளையும் எடுத்து வருகிறோம். கிராமப்புற மாணவர்களிடம் தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்கும் எங்களது திட்டத்தை அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களும், அரசு அமைப்புகளும் பாராட்டியுள்ளதோடு, கூகுள் நிறுவனத்தின் சர்வதேச அளவிலான போட்டியிலும் பங்கு பெற்று அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி முன்னேறி வருகிறோம்" என்று கூறுகிறார்.

தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி தெரிந்துகொள்வதற்காக கிராமப்புற மாணவர்களின் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதாக யுகோட் நிறுவனத்தினர் கூறுகின்றனர். Image captionதங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி தெரிந்துகொள்வதற்காக, கிராமப்புற மாணவர்களின் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதாக யுகோட் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.

"அவள் வெற்றியும், என் வெற்றியும் ஒன்றே…"

"அடிப்படையில் நுண்ணுயிரியல் படித்த எனக்கும் தொழில்நுட்பத்துக்கு சம்பந்தமே கிடையாது. இருப்பினும், ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து உறுத்திக்கொண்டே இருந்தது. என்னுடைய படிப்பை தவிர்த்து ஏதாவது ஒன்றை கற்றுக்கொண்டு அதில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறுவதற்குள், திருமணம், குழந்தைகள் என என்னுடைய வாழ்க்கையும் பெரும்பாலான பெண்களை போன்றாகிவிட்டது" என்றும் கூறும் சூரிய பிரபா, பெண்களுக்கும் ஆண்களுக்கு நிகராக அனைத்து திறமைகளும் உள்ளது என்று உத்வேகமளிக்கும் தனது கணவரால் தற்போது தனது கனவு நனவாகியுள்ளதாக கூறுகிறார்.

கார்த்திக் கண்ணன் Image captionகார்த்திக் கண்ணன்

"அனைத்து விடயங்களிலும் பெண்கள், ஆண்களுக்கு நிகரானவர்களே என்பதை நான் முற்றிலும் ஏற்றுக்கொள்பவன். திருமணமானதிலிருந்தே 'ஏதாவது சாதிக்க வேண்டும்' என்று கூறிவந்த எனது மனைவியின் தேடலுக்கு தொழில்நுட்பம் தீனிபோடும் என்று முடிவெடுத்து, அது தொடர்பான அடிப்படை விடயங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். வெகுவிரைவில் தேர்ந்த அவர், தற்போது சுயமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு பயணித்து, திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். எனது மனைவிக்கு தேவையான தொழில் ரீதியிலான உதவிகளை புரிவதுடன், எங்களது இரு குழந்தைகளையும் நான் கவனித்து கொள்கிறேன்" என்று கூறுகிறார் சூரிய பிரபாவின் கணவர் கார்த்திக் கண்ணன்.

மாணவர்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

"ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்குவது என்பது நினைத்தவுடன் செய்யமுடியாது. அதுவும் இன்றைய காலகட்டத்தில இதுபோன்ற நோக்கத்துடன் செயல்படும் நிறுவனத்தின் மூலம் மாணவர்களுக்கு மட்டுமின்றி, சமீபத்தில் இளங்கலை படிப்பை முடித்த எனக்கு தொழில்ரீதியாக மிகவும் பயனுள்ளதாக உள்ளது" என்று கூறுகிறார் யுகோட் ஸ்டார்ட்-அப்பின் பணியாளரான மதுரையை சேர்ந்த லலித் மோகன்.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் போன்ற பாடத்திட்டத்தில் இல்லாத விடயங்களை கிராமப்புற மாணவர்களிடம் கொண்டுசெல்லும்போது, அவர்களிடம் வரவேற்பு உள்ளதா என்று அவரிடம் கேட்டபோது, "இதுவரை தொலைக்காட்சியில் பார்த்த விடயங்களை நேரிடையாக பார்ப்பதுடன், அவற்றின் இயக்கம், அமைப்புமுறை போன்றவற்றை மாணவர்களுக்கு புரியும் வண்ணம் படிப்படியாக எடுத்து கூறுவதால் எளிதாக புரிந்துகொள்வதுடன், தாங்களே செய்து பார்ப்பதற்கும் விரும்புகிறார்கள். மேலும், மாணவர்களின் விருப்பத்தை பார்க்கும் பள்ளிகள் எங்களை அடிக்கடி வந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு கூறுகிறார்கள்" என்று கூறுகிறார்.

"லாபத்தை எதிர்நோக்காமல் எதிர்கால சந்ததியினரின் முன்னேற்றை மட்டுமே கருத்திற்கொண்டு செயல்பட்டு வரும் எங்களை போன்ற ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை மத்திய, மாநில அரசாங்கங்கள் ஊக்குவிக்க வேண்டும். ஐஐடி, என்ஐடி போன்ற நாட்டின் மிகப் பெரிய கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் மட்டுந்தான் சாதிக்க முடியுமா என்ன? கிராமப்புற அரசு பள்ளிகளில் தமிழ் வழி கல்வியில் படிக்கும் மாணவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிச்சயம் சாதித்து காட்டுவோம்" என்று கூறுகிறார் சூரிய பிரபா.

https://www.bbc.com/tamil/science-47493305

சிறப்பான ஆரம்பம். இவர்களின் சேவை இன்னும் பல மகளிர் தினங்களையும் தாண்டி ஓர் முன்னுதாரணமாக அமைய வாழ்த்துவோமாக. 😊

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.