Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தை அணுகுதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தை அணுகுதல் -01

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விளைவாக இலங்கையில் நிகழ்ந்துவரும் சிங்கள -முஸ்லிம் கலவரங்கள் கவலைக்குரியது.சிங்களக் காடையர்களால் நடத்தப்படும் இந்தக் காட்டுமிராண்டித்தனமான வன்முறைத் தாக்குதல்களைக் கட்டுக்குள் கொண்டுவர இலங்கை அரசாங்கம் எந்த முனைப்பையும் காட்டாது.இன்று மிகப்பதற்றமானதொரு வாழ்வை சந்தித்திருக்கும் முஸ்லிம் மக்களுக்காய் ஒரு கோவில் வாசலில் நின்று பிரார்த்தித்தேன்.அவர்கள் இப்படியான நெருக்கடிமிக்க நாட்களை இனி எதிர்கொள்ளவே கூடாது என விரும்புகிறேன்.தமிழர்கள் இத்தனை ஆண்டுகாலமாக தமது உரிமைக்காக போராடிய ஒரு அறம்சார்ந்த போராட்டத்தை சிங்கள ஆட்சியாளர்களோடு துணை நின்று ஒடுக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளும்,முஸ்லிம் மதஅடிப்படைவாதிகளும் தமது சொந்த மக்கள் எதிர்கொள்ளும் அவலத்தை போக்கவும் முயற்சிக்கவில்லை.எது எப்படியோ உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய
ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்பிற்கு எதிரான மனோநிலை என்பது இன்று இலங்கை முஸ்லிம்கள் மீது திரும்பியிருக்கிறது.சிங்கள ஆட்சியாளர்களுக்கிடையிலான அதிகாரத்திற்கான பனிப்போர் ஒன்று மீண்டும் கலவரங்களின் வாயிலாக தொடங்கியிருக்கிறது.உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இன்றைய இலங்கை அரசின் தோல்வியாக வடிவமைக்க மகிந்த ராஜபக்ச ஆதரவு சக்திகளும்,இதுவொரு கோத்தபாயவின் திட்டமிட்ட தாக்குதல் என இன்றைய இலங்கை அரசின் ஆதரவு சக்திகளும் பிரச்சாரம் செய்துவருகின்றன.ஆனால் இவற்றைக் கடந்தும் நமது கண்கள் அகல விரிந்து ஆராயவேண்டிய தேவை இருக்கிறது.

இலங்கையிலுள்ள முஸ்லிம்களின் தமிழர் விரோதப்போக்கானது என்றுமில்லாதவாறு புலிகளின் அழிவுக்கு பின்னர் மேலோங்கியது.கடந்த கால வரலாற்றில் முஸ்லிம் -தமிழர் என இருதரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த பல கசப்பான சம்பவங்களை மறுபடி மறுபடி பிரேத பரிசோதனை செய்தவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளே ஆவர்.இனப்படுகொலைக்கு பிறகான பத்து ஆண்டுகளில் தமிழர் தாயகமான கிழக்குப்பகுதியில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் மேற்பார்வையில் இந்து ஆலயத்திற்கென ஒதுக்கப்பட்டிருந்த காணியில் இஸ்லாமிய வணக்கஸ்தலம் நிறுவப்பட்டது.கிழக்கு மாகாணம் என்பதே முஸ்லிம்களுக்கானது என்கிற பெரும்பான்மைவாதம் ஹிஸ்புல்லா போன்றவர்களால் ஊக்குவிக்கப்பட்டது.தமிழர்களை எவரடித்தாலும் கேட்பதற்கு நாதியற்றவர்கள் என்கிற துணிச்சல் புலிகளின் அழிவுக்கு பிறகு சிங்கள ஆட்சியாளர்களுக்கு தோன்றியதைப் பார்க்கிலும் முஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தான் தோன்றியது.

இந்த வன்மமும் குரோதமும் அவர்களுக்கு எங்கிருந்து தோன்றியது.தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட நாட்களில் சிங்களர்களோடு சேர்ந்து சீனப்பட்டாசுகளை கொளுத்தி ஆர்ப்பரித்த முஸ்லிம் மக்களிற்காக,நாளும் பொழுதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்த கங்கணம் கட்டிநிற்கும் முஸ்லிம் சகோதரர்களுக்காக,உங்களை ஏன் மிச்சம் வைத்தார்கள் முல்லைதீவில் என்று என்னைக் கேட்ட நாற்பது வயதான கொழும்பு முஸ்லிம் ஓட்டோக்காரருக்காக,தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பதே தேவையற்ற ஒன்று -இலங்கையில் சிறுபான்மை மக்கள் இனிமேல் சுதந்திரமாக வாழமுடியுமென பொய்யையும் புரட்டையும் எழுதிக்கொண்டிருக்கும் முஸ்லிம் எழுத்தாளர்களுக்காகவும் நான் கண்ணீர் சிந்துகிறேன்.ஆனால் லட்சத்து லட்சோப மக்களை கொன்ற அத்துணை பெரிய கொலைகாரர்களுக்கு மனிதாபிமான பட்டம் வாங்கித்தருவதில்
உறுதியாக நின்ற உங்களின் கொலைப்பழியை நீங்கள் உணர்வீர்களா?

ஐ.நா அவையில் இனப்படுகொலை தீர்மானத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கம் சார்பில் உரையாற்றிய ரவூப் ஹக்கீம் அங்கு நடந்தது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று இனப்படுகொலையை மறைத்தாரே அதற்கு எதிராக உங்கள் அறம் ஏன் எழவில்லை இன்று எப்போதாவது சிந்தித்தீர்களா?ரிசாப் பதியுதீன்,ஹிஸ்புல்லா, ரவூப் ஹக்கீம் போன்ற அமைச்சர்கள் தமிழர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு செய்த காரியங்கள் எத்தனை எத்தனை! ரிசாப் பதியுதீன் மன்னாரில் தமிழ் மீனவர்களின் அனைத்து வாழ்வாதாரத்தையும் பறித்திட்ட போது உங்களில் ஒருவன் கூட ஏன் குரல் எழுப்பாது போனீர்கள்?அப்பாவி முஸ்லிம் மக்களை தமது அடிப்படைவாத கருத்துக்களால் வெறியூட்டி தமிழர்களை ஒடுக்கினாலே நாம் சுதந்திரமாக வாழமுடியுமென எண்ணிய முஸ்லிம் தரப்பு அரசியலாளர்கள் இன்று சொந்த மக்களின் அவலத்திற்கு கூட வாய்திறக்க முடியாமல் இருக்கிறார்கள்.

அப்படியாயின் ஒரு சாதாராண முஸ்லிமிடம் தமிழர் விரோதமில்லையா?மிக ஆழமாக சிலர் தமிழர்களை வெறுக்கிறார்கள்.சரணடைந்த போராளிகளை விசாரணை செய்யும் புலனாய்வுப்பிரிவில் இருந்த முஸ்லிம் வெறியர்கள் போராளிகளை அடித்து உதைத்தனர்.நெற்றியில் பூசப்பட்டிருக்கும் திருநீற்றை அழி என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தனர்.வீரச்சாவு என்று சொல்லாதே,செத்துப்போனதென்று சொல் என்றார்கள்.ஆனையிறவு வெற்றிச்சமர் என்று சொல்லாதே ஆனையிறவு சண்டையில என்று சொல் என்றார்கள்.இயக்கம் என்று சொல்லாதே எல்.ரீ.ரீ.ஈ என்று சொல் என்றார்கள்.இப்படி எத்தனையோ போராளிகளை காயப்படுத்தினர்.தமிழ் வெறுப்புவாதம் சிங்களர்களுக்கு இணையாக இவர்களிடம் மேலோங்கியிருந்தது.இதனை மறுக்க எவராலும் முடியாது.இவர்கள் காத்துவந்த இலங்கையின் பவுத்த தேசியம் இன்றைக்கு இவர்களையே வேட்டையாடத் தொடங்கியிருக்கிறது.பள்ளிவாசல்கள் தீக்கிரையாகின்றன.அப்பாவி முஸ்லிம்கள் தமது உடமைகளை இழந்து நிற்கிறார்கள்.சாம்பலாகிப்போன ஜீவிதத்தை பார்த்து கண்ணீரில் மூழ்கிறார்கள்.இந்தத் துயரம் எம்மை வருத்துகிறது.இந்த பதற்றம் எம்மையும் உலுக்குகிறது.மற்றவனின் கண்ணீரில் ஆனந்தம் அடையும் கீழ்மையான புத்தியை இதயத்தை நாம் கொண்டிருக்கவில்லை.

முஸ்லிம் எழுத்தாளர்களாக தம்மைக் காட்டிக்கொள்ளும் சிலர் ஈழ இனப்படுகொலை நடந்து சில ஆண்டுகளில் நடத்திய இலக்கிய கருத்தரங்குகளில் விவாதிக்கப்பட்டவை நினைவுக்கு வருகின்றன.ஈழம் எனும் சொல்லை வேண்டுமென புறக்கணித்து இலங்கை என்று சொல்வதும்,புலிகள் அரசியலற்று போராடினார்கள் எனவும் அவர்கள் முஸ்லிம்களை திட்டமிட்டு கொலை செய்ததாகவும் அதற்காகவே அவர்கள் தோற்கடிக்கப்பட்டர்கள் எனவும் முஸ்லிம் அறிவுஜீவிகள் உதிர்த்த கருத்துக்கள் ஏராளமானவை.முஸ்லிம் அடிப்படை வாதத்திற்கு எதிரான ஒரு இலங்கை மலாலாவாக தன்னைக் காட்டிக்கொண்ட பெண் எழுத்தாளார் எழுதிய நாவல் முழுக்க முழுக்க புலிகளின் வீழ்ச்சியை அடிப்படையாக வைத்து தமிழர்களின் விடுதலையை ஏளனம் செய்தது.தமிழ்நாட்டில் இருக்கும் இடதுசாரி கலை அமைப்பான த.மு.எ.க.ச அந்த நாவலுக்கு விருது வழங்கி தனது புலி எதிர்ப்பிற்கு புதிய கூட்டாளியை தயார் செய்தது.அ.மார்க்ஸ் போன்றவர்கள் மீண்டும் யாழ்ப்பாண வெளியேற்றத்தை எழுதி எழுதி தமது கஜானாக்களை நிறைத்துக்கொண்டிருந்தனர்.தமிழர்களும் முஸ்லிம்களும் இணைவதை சிங்கள ஆட்சியாளர்கள் விரும்பாததை விடவும் அதிகமாக இப்படியான அறிவுஜீவிகள் விரும்பவில்லை.

மதம் தான் அரசியலா? உண்மையில் நீங்கள் முன்வைக்கும் இந்து -பவுத்த மோதல் தான் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு காரணமா என கேள்வி எழுப்பும் சிலரை நான் சந்திக்கநேர்கிறது.என்றைக்கும் உலக அரசியலில் மதம் ஒரு தாக்கம் செலுத்தவல்ல காரணி.இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களை சிங்களர்களின் புனித நூலான மஹாவம்சம் இந்துக்களாகவே கூறுகிறது.இந்தியப்(இந்து)படையெடுப்பின் நீட்சியாகவே அங்குள்ள தமிழர்களைக் கருதுகிறது.இதற்கு சரியானதொரு உதாரணம் இன்றும் நடந்துகொண்டிருக்கிறது.புலிகள் இருந்த காலத்தில் இலங்கை அரசாங்கம் இவ்வாறு கூறியது.இந்த நாட்டில் அனைத்து இனத்தவருக்கும் சமத்துவ உரிமையை வழங்க நாம் தயார் ஆனால் புலிகள் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள் என்றனர்.இன்றைக்கு புலிகள் இல்லை.ஆனால் ஏன் தமிழர்களின் வழிபாட்டுத்தலங்களான இந்துக் கோவில்கள் அகற்றப்பட்டு புத்தர் சிலைகள் எழும்புகின்றன.தமிழர்களின் நிலமெங்கும் இந்துக்கோவில்களை இல்லாமலாக்கும் இந்த யுத்தம் எதன் அடிப்படையில் எழுகிறது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா?உலகம் முழுக்க மதம் தான் அரசியல்.இத்தனை மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவாலும் ஏனைய நாடுகளாலும் நடத்தப்பட்ட யுத்தம் மதம் கடந்த ஒன்று என எவராலும் சொல்ல இயலுமா?சிலுவையில் இயேசு அறையப்பட்டார்.ஈராக்கில் நடந்த அழிவுப்போரில் அமெரிக்கா கொலைச்சிலுவையில் ஏற்றிய ஈராக்கிய குழந்தைகள் சிலவேளைகளில் கிறிஸ்துவர்களாக இருந்திருப்பின் இத்தனை பெரிய கொலைகள் அங்கு நிகழ்ந்திருக்குமா? இங்கு எல்லாவற்றிலும் அரசியலுண்டு.நாளுக்கு நாள் நிகழும் கொலைகள் மதரீதியானவை அன்றி வேறேது?உலகை அச்சுறுத்தும் பயங்கரவாத அமைப்பான ஐ .எஸ் போன்ற அமைப்புக்கள எதன் வழியாக தம்மை உருவாக்கிக் கொள்கின்றன.இலங்கையில் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பு இந்துக்களின் அமைப்பு என புல்வாமா தாக்குதலின் பின்னரான நாளில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்த கருத்து எதன் அடிப்படையிலானது.அதன் பின்னணியாக உருத்திரண்டிருக்கும் தோற்றம் என்ன? இன்று உலகத்தில் நிகழ்ந்திருக்கும் இனப்படுகொலைகள் எதனாலானவை? ரோகிங்கியா முஸ்லிம்களை மியன்மார் பவுத்த பிட்சுகள் வாள்களால் வெட்டிக்கொன்றனரே! அதனுடைய பின்னணி மதமன்றி வேறேது?

இந்தியாவையும் ஈழத்தமிழர்களையும் மதரீதியாக அணுகும் சிங்கள பவுத்த பேரினவாத சக்திகள் இந்தியாவிற்கு எதிரானதொரு யுத்தத்தை தமிழர்கள் மீது தொடுத்தனர்.வரலாற்றில் இலங்கைத்தீவிற்குள் நிகழ்ந்த பல்வேறு அரசியல் சம்பவங்கள் இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கின்றன.இந்தியாவிற்கு எதிரான அனைத்துச்சக்திகளோடும் இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்கள் நெருக்கமான உறவைப் பேணுகின்றனர்.சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை இலங்கை தனது நேசசக்தியாக கொண்டிருக்கிறது.மேலும் இந்திய -பாகிஸ்தான் யுத்த காலத்தில் கூட இலங்கையின் கடற்பரப்பில் பாகிஸ்தான் கப்பல்கள் நின்றதை நாம் மறக்கவியலாது.புலிகள் இந்துக்கள் என்றதொரு கருத்தில் உடன்படுகிறோம் மறுக்கிறோம் என்பதனைத் தாண்டி இறுதி யுத்தத்தில் பாகிஸ்தானை அரவணைக்க இலங்கை அரசாங்கம் முன்வைத்த கருத்து.புலிகள் இயக்கம் என்பதே இந்துக்களின் அமைப்பு என்பதாகத்தானிருந்தது. மேலும் வடக்கை விட்டு முஸ்லிம்களை வெளியேற்றிய நிகழ்வையும் அது பாகிஸ்தானின் காதில் ஊதியிருக்கும்.இந்தியாவிற்கு எதிரான இந்துக்களுக்கு எதிரான ஒரு மதத்தன்மை பொருந்திய இனப்படுகொலைக்கு இலங்கையின் பவுத்த அரசு முஸ்லிம் நாடொன்றை தனது பக்கம் திருப்பியதன் பின்னணியை இவ்வாறு தான் விளங்கிக்கொள்ள முடியும்.இதிலொரு விநோதமான முரண்பாடு என்னவெனில் பாகிஸ்தான் இருக்கும் அதே தரப்பில் இந்தியாவின் தேசியக் கட்சியான காங்கிரஸ் அரசின் படைகளும் இருந்தன.இந்தக் கூட்டுக்கொலைக்கு காரணமானது அன்றைய காலத்தில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியே.ஆயின் உங்கள் கருத்துப்படியே இன்று ஆட்சியில் உள்ள பா.ஜ.கட்சியின் அணுகுமுறை ஈழத்தமிழர் விடயத்தில் மாறுபட்டிருக்கிறதா? என்று நீங்கள் கேட்கக் கூடும்.

உண்மையில் இதுவொரு முக்கியமான காலகட்டம்.இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகளில் சீனாவின் கரங்கள் இலங்கைத் தீவை உத்தியோகபூரவமாக முற்றுகையிட்டுள்ளன. இந்திய நிலப்பரப்பில் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய கற்பனாவாதங்களும் அதி பயங்கரமான அச்சுறுத்தல் கதைகளும் ஏராளமாக விதைக்கப்பட்டிருக்கிறது.ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம் என்பதே இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான கருத்தியல்களை கொண்டதென இந்திய அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் மீண்டும் மீண்டும் கண்களை மூடி யானையைத் தடவி சொல்லிக்கொண்டே இருந்தனர்.ஈழ ஆதரவாளர்களாக இருப்பவர்கள்,அமைப்புக்கள் இந்தியாவிற்கு எதிரான ஒரு கருத்தியல் போரட்டமாக ஈழப்போராட்டத்தை தமது மேடைகளில் முன்னிறுத்தினார்கள்.இந்தியாவின் உள்ளக அரசியலை விமர்சிக்கும் மேடைகளில் ஈழமும் அவர்களின் உயிர்வாழ்வதற்கான போராட்டமும் தமிழ்த்தனத்தின் உணர்ச்சிக் கொந்தளிப்பிற்காக பேசப்பட்டன.ஆனால் ஈழம் தமிழ்நாட்டின் எல்லையைத்தாண்டி இந்திய நிலப்பரப்பின் வேறு எந்த திசைக்கும் எடுத்துச்செல்லப்படவில்லை என்பதனை எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.ஈழம் என்பது இந்திய தேசிய நலன்களுக்கு எதிரானது எனும் சித்திரம் ஈழஆதரவு சக்திகளாலும் ஏற்படுத்தப்பட்டது.இந்தியத் தேசியக் கருத்தியல் மீது பற்றுக்கொண்ட பெருமளவிலான இந்தியர்ளையும் ஈழப்போராட்டத்தின் ஆதரவுநிலைக்கு திருப்பமுடியாமல் நிகழ்ந்துகொண்டிருந்த ஈழ ஆதரவை நொந்துகொள்வதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்? தமிழகத்தில் இருக்கும் ஈழஅகதி முகாம்களில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு கூட ஒரு கெளரவமான வாழ்வை பெற்றுக்கொடுக்க முடியவில்லையே என்ற நிதர்சனம் நான் கூறும் யாவற்றையும் உணரச்செய்யும்.

ஆனால் இன்றுள்ள இந்திய அரசுக்கும் கடந்த காங்கிரஸ் ஆட்சிக்கும் ஈழத்தமிழர் நலனில் கருத்து நிலை மாற்றங்கள் உண்டு.அடிப்படையில் காங்கிரஸ் ஈழத்தமிழர்களை கொன்றது.அது ராஜீவ்காந்தியின் அமைதிப்படையிலிருந்து மன்மோகன்சிங் ஆட்சிக்காலம் வரைக்கும் தொடர்ந்தது. என்னளவில் பா.ஜ.க போன்ற கட்சிக்கும் ஈழத்தமிழர்களுக்கும் ஒரு இயல்பான நேசம் இருக்க வாய்ப்புண்டு.அது காங்கிரசுக்கு எதிரி ஈழத்தமிழர்களுக்கு நண்பன் என்கிற சூத்திரத்தில் கூட அமையலாம்.ஆக இன்றைய இந்தியாவின் அரசானது ஈழத்தமிழர் விடயத்தில் ஒரு தீர்வை எட்ட அவர்களோடு துணை நிற்க வேண்டும்.அதனை வலியுறுத்தவல்ல ஈழத்தின் அறிவுஜீவிகள் தொடர்ச்சியாக இவர்களோடு உரையாடவேண்டும்.இது அவசியமானதொரு அரசியல் முயற்சி. எமது அறமான அபிலாஷைகளை மீண்டும் மீண்டும் நாம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதே இப்போது தேவையான ஒன்று.நான் அதனைத் தான் விரும்புகிறேன்.இந்திய நிலப்பரப்பெங்கும் வாழும் ஒவ்வொரு மனிதரும் ஈழத்தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தின் நியாயங்களை உணரும் வகையில் ஒரு சூழல் பிறக்கவேண்டும் என்பதே எனது விருப்பம்.

http://akaramuthalvan.com/ஈழத்தை-அணுகுதல்-01/

60591506_1059027620954300_85482695051035

ஈழத்தை அணுகுதல் -02

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை -அப்பர்

 

இலங்கைதீவின் இனப்பிரச்சனை குறித்து மிகத்தெளிவானதும் ஆழமானதுமான புரிதலைக் கொண்டிருப்பவர்கள் உலகம் தழுவிய எண்ணிக்கையில் மிகவும் குறைவானவர்களே.ஈழத்தமிழினத்திலும் இதுதான் எண்ணிக்கை.இலங்கையின் அரசியற்போக்கை அறிந்துகொள்ள வேண்டுமாயின் இலங்கையின் வரலாற்று அறிவு அவசியமாக தேவைப்படுகிறது. இலங்கையில் நூறாண்டுகாலமாக நடந்து வருகிற தமிழ்- சிங்கள இனப்பிரச்சனையை ஆழமாகவும் சரிவரப்புரிந்து கொள்ளாமல் இலங்கைத்தீவின் அரசியலை மிகத்தீர்மானமாக பேசுவது அரசியல்ரீதியாகவே அபத்தமான காரியம்.புவிசார் அரசியலையும் அதன் நீட்சியாக நிகழ்த்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையையும் அதனது அர்த்தத்தில் பேசவியலாமல் தமது லாவகங்களுக்கு ஏற்ப சுருக்கியும் நீட்டியும் பேசுவதானது பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரானது.

பிரித்தானியர் காலகட்டத்திலிருந்து இன்றைய காலகட்டம் வரை நீடிக்கும் சிங்களர்-தமிழர் இனமுரண்களையும் அது தோன்றும் மூலஊற்றுக்களையும் இலங்கை அரசியலோடு தொடர்புபட்ட பல்வேறு அரசியல் ஆளுமைகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.ஆயினும் மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்ததாயில்லை.இனப்பிரச்சனையின் அடிப்படையானது  சிங்கள பெளத்தர்களின்  “மஹாவம்ச” சிந்தனை.மஹாவம்ச சிந்தனை என்பது வரலாற்று ரீதியாக இந்தியப்பகைமை கொண்டது.இந்தியப்பகைமை என்பது “இந்திய நீட்சியாகப் கருதப்படும் ஈழத்தமிழருக்கு எதிரானது”.சிங்கள பெளத்தர்களின் இந்தியப்பகைமையே தமிழர்கள் மீதான படுகொலைகள்.சிங்கள பெளத்த அரசியலின் பெரும்பான்மைவாத வெற்றி இந்திய நீட்சியாக  அடையாளபடுத்தப்படும் தமிழர்களை கொன்றுகுவிப்பதன் வழியே நீடித்துவருகிறது.இதனைப்புரிய மறுப்பதாலும்,ஏற்கமறுத்து வேறொரு திசைக்கு இந்தப்பிரச்சனையை இழுத்துச்செல்வதாலும் இங்கு எவருக்கும் பயனில்லை.

அரசியல் என்பது விருப்பங்களுக்கு ஏதுவானதல்ல,மாறாக உண்மைக்கும் யதார்த்தத்திற்கும் தன்னை ஒப்புக்கொடுப்பது.ஈழத்தமிழர்கள் இந்துக்களா?சைவர்களா?என்று என்னை நோக்கி கேள்வி எழுப்பவல்ல அறிவுஜீவிகளை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது.இங்கு ஒரு ஈழத்தமிழன் தன்னை இந்துவாக கருதுகிறானா? சைவனாக கருதுகிறானா என்பதல்ல கேள்வி.அதுவல்ல இவ்விடத்தே பேசுபொருள்.பெளத்த சிங்களவர்கள் ஈழத்தமிழர்களை இந்தியர்களாகவும் இந்துக்களாகவுமே  கருதுகிறார்கள் என்பதே இக்காலத்தில் நீங்கள் காணவேண்டிய உண்மை. இந்துக்கள் யார்? இந்தியாவின் நீட்சியுடைவர்கள்.ஆகையால் அவர்கள் பெளத்திற்கும் பெளத்தர்களுக்கும் எதிரானவர்கள்.இலங்கைதீவில் இதுவரை காலமும் நிகழ்ந்த கோரமிக்க தமிழினப்படுகொலைகளுக்கு பின்னால் இருக்கவல்ல கோட்பாட்டின் முழுவுருவமும் தெரிந்த ஒருவரால் இதுபோன்ற அடிமுட்டாள்தனமிக்க எள்ளலை என்மீது வீசமுடியாது.ஈழத்தில் வாழ்பவர்கள் தீவிரசைவர்கள்- தீவிரவைணவர்கள் என்றாலும் பெளத்த சிங்கள ஆட்சியாளர்களின்          மனத்தில் அவர்கள் இந்தியத்தன்மை கொண்டவர்கள்.தமது நாட்டின் எப்போதும் படையெடுக்கவல்லவர்கள் என்பதேயாகும்.

பெளத்த தர்மத்தை தக்கவைப்பதற்கும்,செழிக்கவைப்பதற்கும் கி.மு 2500 ஆண்டில் புத்தபகவானால் தேர்ந்தெடுக்கப்பட்ட தீவே (Chosen Land) இலங்கை என்கிறது “தம்மதீப” கோட்பாடு.யூதர்களின் வாக்களிக்கப்பட்ட பூமி (promise Land) என்கிற கருத்தியலுக்கு நிகரானது இந்தக் கூற்று.சிங்கள பெளத்தர்களின் தம்மதீப கோட்பாடு வலியுறுத்தும் வகையில் இலங்கை ஒரு மதம்-ஓர்இனம்-ஓர் அரசு (சிங்களத்தில் ஆகம -பாஷவ-ரட்ட)ஓர் இனத்தன்மை கொண்ட நாடாக நிறுவப்பட்டுள்ளதோடு இதன் அடியாழத்தில் இந்திய-இந்து-ஈழத்தமிழர் எதிர்ப்பும் கட்டியமைக்கப்பட்டுள்ளது.ஆகவே தமிழருக்கு எதிராக இலங்கைதீவில் நிகழும் படுகொலைக்கு பின்னால் மஹாவம்ச மனவுலகமும்,தம்மதீப கோட்பாடும் இயங்குவதை எவராலும் மறுக்க இயலாது.இந்தப்பிரச்சனையை வெறும் இனப்பிரச்சனையாக கருதும் சக்திகள் இப்படியொரு கோரத்தனமான அரசியல் வரலாற்றை எளிதில் தவிர்க்கவிரும்புகிறார்கள்.

சில ஈழஆதரவு சக்திகள் தமக்கிருக்கும் இந்திய வெறுப்புவாத பகைமையால் வரலாறு தருவித்திருக்கும் பூரண உண்மையை பேசமறுக்கிறார்கள்.1958-2009வது ஆண்டுவரை கொன்றொழிக்கப்பட்ட தமிழ்மக்களிற்கான நீதியை பெறப்போராடும் இந்தக்கால கட்டத்தில் எமது விருப்பு வெறுப்புக்களைக் கடந்து “ஈழத்தமிழர்களுக்கு நீதி” என்ற ஒரேபுள்ளியில் பேசவிளைந்தால் மேற்கூறிய சிங்களப் படுகொலைக்கலாச்சாரத்தை கைவிட்டுவிட்டு பேசத்தொடங்கவே இயலாது.ஒரு முழுஉண்மைக்காக போராடும் தரப்பு வரலாற்றில் இருந்துதான் தனக்கு நேர்ந்த அவலங்களை எடுத்து இயம்ப முனையவேண்டும்.அப்படியெனில் ஈழத்தமிழ் ஆதரவு சக்திகள் இந்த மஹாவம்ச -தம்மதீப கோட்பாட்டின் உள்ளும் புறத்தையும் அறிந்துகொள்ளவேண்டும்.நடுநிலைமைவாதிகளாக இருப்பவர்கள், ஈழஎதிர்ப்பு -வெறுப்புதரப்பினர் ஆகியோரும் அப்பாவி ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை அதனது அர்த்தத்தில் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்திய நிலவெளியில் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் ஈழப்போராட்டம் பற்றிய கருத்துநிலைகள் நிறைந்துள்ளன.தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பளுவைத் தூக்கிச்சுமந்த எத்தனையோ பேரை ஆதரவு எனும் நிலையில் இந்தநிலம் ஈழத்திற்கு ஈந்தளித்திருக்கிறது.தமிழீழ ஆதரவு-தமிழீழ எதிர்ப்பு-ஒன்றுபட்ட இலங்கை-பிழைக்கப்போன இடத்தில் தனிநாடு கேட்பது அடாவடித்தனம் போன்ற பல சிந்தனைக்கருத்துக்களில் ஈழப்போராட்டம் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டிருக்கிறது.உலகளவில் தமிழீழ விடுதலையை நேசிக்கவல்ல பெரும்பான்மையினர் தமிழ்நாட்டிலேயே இருக்கின்றனர்.நாதியற்ற ஓரினம் ஈழத்தமிழினம் என்ற சிங்களர்களின் எண்ணத்தை அசைக்கவல்ல சனத்திரள்மிக்க போராட்டங்களை தமிழ்நாடே நிகழ்த்தியது.அப்துல் ரவூப் -முத்துக்குமார் என்ற தமிழர்கள் தம்மை தீயில் வேள்வியாக்கி உணர்வுரீதியான ஆகுதியின் மீது இந்நிலத்தில் ஈழம் -என்கிற விடுதலைச்சொல் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்பட்டுக் கொண்டேயிருந்தது.அதேவேளை இருநிலங்களிலும் (ஈழம்-தமிழகம்)தமிழ்த்தனத்தில் உணர்வுவயப்பட்ட ஒரு விடுதலைப் போராட்டமாக ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம் உருப்பெற்றது.

தமிழ்நாட்டைக் கடந்து ஈழம் என்கிற சொல் இந்தியநிலவெளியில் எவ்வாறு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என்ற கேள்வியைக் கேட்டால்,அதற்கு நம்மிடம் இருக்கும் பதில் எதுவாக இருக்கும்?இந்தக் கேள்வியின் பின்னணியில் வை.கோவின் செயற்பாடு மிகமுக்கியமானது.தமிழ்நிலவெளிக்குள்ளும்-அதனைக் கடந்து இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவையிலும் தொடர்ச்சியாக ஈழத்தை பிரகடனப்படுத்தினார்.வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் ஈழம்பற்றிய பல்வேறு ஆதரவு முடிவுகளை இந்திய ஆட்சித்தரப்பு எடுத்தமைக்கு திரு.வை.கோ அவர்களின் நடைமுறை யதார்த்தமிக்க அரசியல் அணுகுமுறைகள் செல்வாக்கு செலுத்தின.அந்த அரசில் பாதுகாப்புச்செயலராக இருந்த ஈழத்தமிழ் மக்களால் என்றும் நேசிக்கவல்ல இந்தியத்தலைவரான ஜோர்ஜ் பெர்னாண்டோ அவர்களையும் நான் இவ்விடத்தில் நினைவு கொள்ளவிரும்புகிறேன்.டெல்லிக்கும்-வன்னிக்கும் ஒரு நேசத்தை பிறப்பிக்கவேண்டிய தேவையை இந்திராகாந்தியின் அரசுக்கு பின்னர் இந்தியாவின் வாஜ்பாய் காலம்தான் விரும்பியிருந்தது என்பது உண்மை.

இந்திய பெருநிலப்பரப்பில் ஈழத்தமிழரும்-ஈழப்போராட்டமும் அரசியல் அர்த்தத்தில் உணர்ந்துகொள்ளப்படவில்லை.இந்தியாவின் ஆத்மபூர்வமான நண்பர்களாக தம்மைக் கருதும் ஈழத்தமிழர்களை இந்தியாவின் கொள்கைவகுப்பாளர்கள்,அறிவுஜீவிகள் என யாருமே தாமாக புரிந்துகொள்ளவும் முனையவில்லை.மாறாக அவர்கள் தமிழ்நாட்டிற்கும்-இந்தியத்தேசியத்திற்கும் இருக்கிற வரலாற்று அரசியல் முரண்களின் வழியாக ஈழத்தமிழர்களை பார்க்கத்தொடங்கினர். நாளாந்தமான வாழ்விற்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரு இனத்தின் அழுகுரலை உள்ளூர் அரசியலால் அணுகத்தொடங்கினர்.ஈழத்தமிழ் ஆதரவு சக்திகள் தமது அமைப்பின் செயற்பாடுகளில் இந்தியவெறுப்புவாத சுலோகங்களோடு ஈழவிடுதலைக்கான தமது தார்மீக ஆதரவையும் தெரிவித்தனர்.இந்த இருதுருவ கருத்துநிலை மோதல்களால் நேரடி விளைவை சந்தித்தது ஈழமும் -ஈழப்போராட்டமும்தான்.மேலும் இந்திய இறைமை மீது நம்பிக்கை கொண்ட,இந்தியர் என்ற உணர்வுகொண்ட ஒருவரால் ஈழவிடுதலையை புரிந்துகொள்ளமுடியாமல் போனது.ஈழம் என்பதே இந்திய இறைமைக்கு எதிரானது என்கிற ஒரு அடிப்படையற்ற சிந்தனை(Mindset)அவருக்கு எழவும்செய்திருக்கலாம்.இங்கு புரிந்துகொள்ளவேண்டிய நிறைய விடயங்கள் இருக்கின்றன.ஈழத்தமிழர்கள் மீது அன்பும் நேசமும் கொண்ட ஈழஆதரவு சக்திகள் தமது நாட்டின் உள்ளக சிக்கல்களுக்குள்ளால் ஈழப்பிரச்சனையை முன்னிறுத்தினர்.அதுவே இந்தியத்தின் மீது நம்பிக்கை கொண்ட தமிழர் ஒருவரையும் ஈழத்திற்கு எதிரான சிந்தனைக்கு திருப்பியதில் செல்வாக்கு செலுத்தியது என்று கருதமுடியும்.

இது ஆதரவுத்தரப்பை குற்றஞ்சாட்டும் நோக்கல்ல.அதேவேளை இதில் எந்தவித கற்பனையுமில்லை.ஈழத்திற்காக இன்றுவரை குரல்கொடுத்துக்கொண்டிருக்கும் ஈழஆதரவு சக்திகளையும் அவர்கள் எதிர்நோக்கும் அடக்குமுறைகளையும் நான் அறிவேன்.ஆனால் மேற்கூறிய இந்திய வெறுப்புவாதத்தையும் ஈழவிடுதலையையும் ஒரே புள்ளியில் வைக்கும் அரசியல் கலாச்சாரத்தின் மீது ஈழத்தமிழனாக எனக்கிருக்கும் முரண்பாடுகள் பற்றி நிறைய இடங்களில் குறிப்பிட்டிருக்கிறேன்.தமிழ்நிலவெளியைக் கடந்தும் இந்தியப்பெருநிலப் பரப்பெங்கும் ஈழத்தையும் அதன் நீதிசெறிந்த விடுதலைக் குரலையும் கொண்டு செல்லவேண்டும்.அதற்கு ஏதுவான முயற்சிகளை செய்யவல்லவர்களே இன்று அவசியமானவர்கள்.காலம் அவர்களுக்காகத்தான் காத்திருக்கிறது. சாமானிய இந்தியர்கள் ஈழத்தை புரிந்துகொள்ளவில்லை என்ற கவலையை எழுதிடும் இவ்வேளை இந்திய அதிகாரிகள் தமது ஈழஅரசியல் குறித்த அறிவின்மைகளை உணர்ந்து எழுதியுள்ளார்கள் என்பதனை ஞாபகப்படுத்திக் கொள்ளவிரும்புகிறேன்.

“இலங்கைத்தமிழருக்கும்-சிங்களவருக்கும் இடையே அரசியல் -பொருளாதார -சமூக காரணிகளையும் தாண்டி அவற்றிற்கும் அப்பால் ஆழமான உளவியல் ரீதியானதும்,உணர்ச்சிவசம் கொண்டதுமான அதலபாதாள வேறுபாடு இருப்பதை புரிந்துகொள்ளத் தேவையான போதியளவு அறிவு அவரிடமும்(திரு.ராஜீவ் காந்தி)மற்றும் அவருக்கு ஆலோசனை கூறிய எங்கள் அனைவரிடமும் இருக்கவில்லை”-என்கிறார் திரு.ஜே.என் தீட்சித்.1987ம் ஆண்டு இலங்கை -இந்திய ஒப்பந்தம் எழுதப்பட்டபோதும் அதற்கு முன்பின்னான காலத்திலும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானியராக இருந்தவரும் பின் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராகவும் இறுதியில் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவருமான திரு.ஜே.என் தீட்சித் கொழும்பு அசைன்மன்ட் என்ற தனது புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இந்தநிலைதான் இன்றுவரை நீடிக்கிறது.ஈழத்தமிழர்களின் அரசியல் முக்கியத்துவத்தையும் அவர்களின் புவிசார் பலத்தையும் இந்தியத்தரப்பு புரிந்துகொள்ளாமல் இருக்கிறது.கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதைப் போலவே இந்திய அதிகாரிகள் ஈழஅரசியலை அணுகி நிற்கிறார்கள்.இந்தியக் கொள்கைவகுப்பாளர்கள் ஈழநிலத்தையும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தையும் தமது நோக்கு நிலையில் அணுகினால் கூட அதனை ஆதரிக்கவேண்டிய இடத்தில இருக்கிறார்கள்.ஆனால் அந்த ஆதரவு இன்றுவரை முழுத்தோற்றத்தில் தன்னைக் காண்பிக்க துணியவில்லை.இன்றைய இந்தியாவில் மிகப்பெரும் பலம்வாய்ந்த ஆட்சியை பிடித்திருக்கும் பா.ஜ.க அரசு ஈழத்தமிழர் பிரச்சனையில் புதிய கண்ணோட்டத்தையும் அணுகுமுறையையும் கைக்கொள்ளவேண்டும் என்பதே விருப்பம்.இந்தியாவின் உண்மையான நேசசக்தியாக தென்னாசிய பிராந்தியத்தில் இருக்கவல்ல ஈழத்தமிழர்களை இந்த அரசு கருத்தில்கொள்ள வேண்டும்.துயர் தோய்ந்த தமிழ்மக்களின் அவல அத்தியாயங்களுக்கு நீதியைப் பெற்றுத்தரவல்ல முன்னேற்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டும்.

புலிகள் இயக்கம் களத்தில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் சீனா தன்னை இலங்கைதீவில் ஈன்றது.காணுமிடமெல்லாம் சீனர்கள்.சீனத்தொழில் நிறுவனங்கள் முளைத்தன.மேற்கூறியதைப் போல இந்தியாவிற்கு எதிரான மாபெரும் சக்தியோடு இலங்கை நேரடியாகவும் வெளிப்படையாகவும் தனது உறவை வளர்த்துநின்றது.இலங்கையில் சீனர்களா? சீனாவில் இலங்கையர்களா? என்று சந்தேகிக்கும் வகையில் இலங்கைதீவு முழுக்க சீனமயம் தோன்றிவிட்டது. இந்தியாவை அச்சுறுத்தும் பெளத்தக் கூட்டு தென்னாசியாவில் இலங்கை-சீனாவினால் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது.பிராந்திய சர்வதேச ரீதியாக
இந்தியாவிற்கு எதிரான சக்திகளோடு பிணைப்பை என்றுமில்லாதவாறு ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது.இந்தியாவிற்கு எதிரான எல்லாவிதமான சக்திகளும் இலங்கையில் தரித்து நிற்கின்றன என்ற பேருண்மையை இன்றைய இந்தியாவின் பலமிக்க அரசு அறிந்திருக்கும்.இப்படியொரு சூழல் ஈழத்தமிழருக்கு சாதகமானதாகவே அமையப்பெறும்.ஈழத்தமிழர் அரசியல்தரப்பினர் இந்தக் காலத்தினை சரியாக கையாளுவதன் மூலம் புதிய பெறுமானங்களை அடையலாம்.சர்வதேச-பிராந்திய அரசியலை புரிந்துகொண்டு அதனை ஈழத்தமிழ் தரப்பின் குரலாக இந்தியத் தரப்பிடம் தெளிவுபடுத்தும் ஒரு உரையாடல் வெளியை ஏற்படுத்தவேண்டும்.      செவிகள் செவிடாக இருக்கிறதென நினைத்து நாம் பாடவேண்டிய பாடல்களை பாடாமல் போவது அர்த்தமற்றது.நமது இருண்டகாலத்தின் பாடலை பாடிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற அரசியல் நிர்ப்பந்தம் ஈழ அரசியல்வாதிகளுக்கு              மட்டுமல்ல ஈழப்படைப்பாளியான எனக்குமிருக்கிறது.

அப்படியாயின் இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் அரசு ஈழத்தமிழர் விஷயத்தில் புதிய அணுகுமுறையை நடைமுறைப்படுத்தும் என எண்ணுகிறீர்களா?

இங்கு யாரின் விருப்புக்கும் அல்ல அரசியல்.ஆனால் புதிய அணுகுமுறையை இந்திய அரசு எடுக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.அப்படி நிகழுமென நான் நம்புகிறேன்.இந்த நம்பிக்கை முழுக்க முழுக்க நிகழுமென நான் எண்ணவில்லை,ஆனால் பாதியளவேனும் நிகழ்வதற்கான ஏதுக்கள் தோன்றக்கூடும். இந்திய ஆளும் சக்திகள் ஈழத்தமிழர்களை உணர்ந்துகொள்ள வேண்டிய ஒருவாய்ப்பு மீண்டும் இந்தியாவில் தோன்றியிருக்கிறது என்பேன்.இந்தத் தரப்பினர் நான் சொல்லவருவதைக் கேட்பதற்கேனும் தமது செவிகளைத் தருகிறார்கள்.

நீங்கள் இதுமாதிரியாக எழுதுவதனால் உங்கள் மீது விழுகிற இந்துத்துவ -வலதுசாரி ஆதரவு போன்ற முத்திரையிடல்களை எவ்வாறு புரிந்துகொள்கிறீர்கள்?

இலங்கையின் இனப்பிரச்சனை என்பது அடிப்படையில் சிங்கள பெளத்தர்களுக்கிருக்கும் இந்தியப்பகைமையினால் தோன்றியது எனலாம்.இந்திய விஸ்தரிப்புவாதத்திற்கான கருவியாகவே சிங்கள ஆட்சியாளர்கள் ஈழத்தமிழ் மக்களை நோக்குகிறார்கள். .வரலாற்றில் பெளத்தம் தன்னை இலங்கையில் ஸ்திரப்படுத்தும் நோக்கோடு இருக்கும் அதே நேரத்தில் இந்தியாவின் படையெடுப்புக்கும் அஞ்சியது.  மன்னர்களின் காலத்தில் நிகழ்ந்த படையெடுப்புக்கள் இந்தக் அச்சத்திற்கு அடித்தளமிட்டது.ஆயினும் ஈழத்தமிழர்கள் தமிழ் பேசக்கூடிய ஒரு இனமாகவும்,இந்துமத வழிபாடு கொண்டவர்கள் என்பதாலும் சிங்கள பெளத்த ஆட்சியாளர்களின் கண்களுக்கு எப்போதும் இந்தியர்களாவே இருந்தனர்.இதனை உறுதிசெய்யும் முகமாக ஜே.வி.பி போன்ற சிங்கள இடதுசாரி இயக்கமொன்று தனது ஐந்து வகுப்புக்களில் ஒன்றாக இந்திய விஸ்தரிப்புவாதத்திற்கு எதிராக போராடுவதை சிங்கள கடும்போக்குவாத இளைஞர்களுக்கு பயிற்றுவித்தமையை  சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்தியர்கள் மீதும் இந்தியாவின் மீது சிங்களவர்களுக்கு இருக்கும் படையெடுப்பு வரலாற்றின் அச்சமே ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதல்களுக்கு காரணமென மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.இனப்பிரச்சனை என்ற சொல்லாடல் எவ்வளவு முழுத்தீவிரமானதோ அதனைப் போன்றே பெளத்தசிங்கள -இந்திய எதிர்ப்பு வரலாற்று பகைமையும் காரணம் என்பதும் உண்மை.

நான் முன்வைக்கும் இந்தக்கருத்தியல் மீது வெறுப்பும் அதிருப்தியும் கொள்பவர்கள் தெரிந்தோ தெரியாமலோ உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.மஹாவம்ச மனவுலகம் படுகொலைகளை செய்கிறது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.அப்படி அதனை ஏற்றுக்கொண்டால் இந்த இனப்பிரச்சனையின் அடிப்படையில் பெளத்த மனோபாவம் இருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.நான் இவற்றை எழுதுவதாலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாலும் இப்படியொரு இந்துத்துவ-வலதுசாரி முத்திரையை என் மீது திட்டமிட்டு குத்தப்பார்க்கிறார்கள்.இப்படியானதொரு அடிப்படை ஆதாரமற்ற அரசியலை முன்னெடுக்கவல்லவர்களின் பலத்தையும் பலவீனத்தையும் நான் அறிவேன்.அவர்கள் சார்ந்திருக்கும் சித்தாந்தங்களும் தான் என்னைக் கொன்றது.இடதும் கொன்று வலதும் கொன்று நடுவும் கொன்றது.மேற்கும் கொன்றது கிழக்கிற்கும் கொன்றது.

இவர்களுக்கு அஞ்சி பேருண்மையை பேசாமல் இருக்கமுடியாது.கலிலியோ பூமியை உருண்டை என்று சொன்னபோது நிகழ்ந்த கிருஸ்துவச்சபைகளின் அடக்குமுறைகளை போலவே இந்த அடக்குமுறைகள் என் மீது பாய்கின்றன.அங்குநிகழ்வது சிங்கள பெளத்தத்தின் இந்திய -எதிர்ப்பு  கொலைகள் தான் என்பதை சிங்களத்தரப்பின் அறிஞர் ஒருவரே வரலாற்றில் இவ்வாறு உதிர்த்திருக்கிறார்.பாளி மொழியில் புலமை கொண்டவரும் இலங்கை தொல்பொருள்துறைத் தலைவராக இருந்தவருமான டாக்டர் ஈ.டபிள்யூ அதிகாரம் 1983ஆம் ஆண்டில் நிகழ்த்த ஜூலைப் படுகொலையை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் கருத்தைக் கூறலானார்.”இத்தகைய பெருந்துயரம் இனிமேல் மீண்டும் மீண்டும் நடைபெறாது இருக்கவேண்டுமென்றால் ஒரு பிரதியைக் கூட மிஞ்சவிடாமல்,அனைத்து மஹாவம்ச பிரதிகளையும் தீயிட்டுக் கொளுத்தவேண்டும்”அந்தளவிற்கு இனத்துவேசமும் மதத்துவேசமும் மஹாவம்சத்தினால் ஒவ்வொரு சிங்களவருக்கும் ஊட்டப்படுவதை என்னை விமர்சிக்க வல்லவர்கள் அறிய வாய்ப்பில்லை.நன்றி.

முற்றும்

உசாத்துணை நூல் -யாப்பு டொனமூர் முதல் சிறிசேனாவரை -மு.திருநாவுக்கரசு
ஓவியம் -ஓவியர் புகழேந்தி

http://akaramuthalvan.com/ஈழத்தை-அணுகுதல்-02/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.