Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதத்தை வெறுப்பது… - ஆர்.அபிலாஷ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதத்தை வெறுப்பது…

religion.jpg

நேன்ஸி மொரேஜோன் எனும் க்யூபக் கவிஞரின் ‘கறுப்பினப் பெண்’ எனும் கவிதையைப் பற்றி ஒருநாள் வகுப்பில் விவாதிக்கும்போது அக்கவிஞரின் மார்க்ஸிய அரசியல் பின்னணி, மார்க்ஸியத்துக்கும் கிறித்துவத்துக்குமான தொடர்பு பற்றிக் குறிப்பிட்டேன். அந்தப் புரட்சிகர கவிதையில் சில வரிகள் விவிலியத்தின் தாக்கம் கொண்டவை என்பதை சுட்டிக் காட்டினேன். ஆனால் மாணவ, மாணவியரில் கணிசமானோருக்கு மதத்தை பற்றி விவாதிப்பதில் ஒரு அசூயை உள்ளதைக் கவனித்தேன். அதை ஒரு பழம் பஞ்சாங்கமாக, மரபின் சுவையாக அவர்கள் காண்கிறார்கள். இதன் பொருள் அவர்கள் நாத்திகர்கள் என்றோ தத்துவார்த்தமாக மதத்தை மறுப்பவர்களோ என்றில்லை. இந்த தலைமுறை சில பத்தாண்டுகளுக்கு முன்பு விடலைப் பருவத்தில் நாங்கள் இருந்ததைப் போன்றே இருக்கிறார்கள்.
மரபில் அறிந்து கொள்ள முக்கியமாக ஒன்றுமே, வாழ்க்கை தினம் தினம் புதிதாக ஒரு மலரைப் பூக்க வைக்கிறது. அதை ரசிக்காமல் ஏன் வாடிப் போன பழைய மலர்களை தொகுத்துப் பாதுகாக்க வேண்டும் என நாங்கள் பதின்வயதினராக இருந்தபோது நினைத்தோம். ஆகையால், எங்கள் வகுப்பில் பழமை மீது ஒரு விடலைத்தனமான எதிர்ப்பு எப்போதும் இருந்தது. கிறித்துவ பாதிரியாராகப் பயிலும் என் நண்பர்கள் கூட ஒருவித எதிர்ப்புடனே விவிலியத்தை வாசித்தார்கள். இன்றைய தலைமுறையைப் பொறுத்தமட்டில், மரபில் அவர்கள் ஏற்பது சாதியும் குடும்பம் வழியாக அவர்கள் பெற்ற சமூக நம்பிக்கைகளையும் மட்டுமே. மற்றபடி பழைய மொழி, பழைய சினிமா, பழைய மனிதர்கள், பழைய அன்பு, பழைய வெறுப்பு எல்லாவற்றையும் அவர்கள் அலுப்புடன் எதிர்கொள்கிறார்கள்; கைகொட்டி சிரிக்கிறார்கள். இந்த விடலைத்தனமான கலக பாவனை எங்கிருந்து வருகிறது? ஏன் இருபதின் துவக்கம் வரை நாம் வேர்களை உதறி விட்டுப் பறக்க விரும்பும் பூஞ்செடிகளாக இருக்கிறோம்? இது என்னவித மனநிலை?2000px-Religious_syms.svg_-300x300.png

நான் இதை இவ்வாறு புரிந்து கொள்கிறேன். மானிடர்களின் அடிப்படையான விழைவு உயிருடன் இருப்பதல்ல. ஏனென்றால் உயிர்வாழ்தல் ஒரு செயல் அல்ல. அது ஒரு நீரோட்டம். அதற்குத் துவக்கமோ முடிவோ உண்டென்றால் அதை வாழும் மனிதன் உணரப் போவதில்லை. வாழும் போராட்டத்தை விட காலமும் இடமும் நிர்பந்திக்கும் எல்லைகளைக் கடந்து போகும் போராட்டமே பெரிது. பிறந்த குழந்தை என்ன பண்ணுகிறது? அது அழுகிறது. “நான் இதுவல்ல, நான் இன்னொன்றாக, பசியை ஆற்றும் இருப்பாக, தாய்மையின் பாதுகாப்பை, அக்கறையை அறியும் இருப்பாக, என் சத்தத்தால் உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆற்றலாக இருக்க விரும்புகிறேன்” என்பதே அந்த அழுகையின் பொருள். இதனால்தான் குழந்தைகளே அதிக சத்தத்தில் உலகின் அத்தனை ஒலிகளையும் வெல்லுமளவுக்கு வீரிடுபவர்களாக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு சைரன் ஒலியைப் போல. பிறந்த குழந்தையுடன் மல்லாடி ஒரு தாய் களைத்துப் போகிறாள். அடுத்து அது எழுந்து நடக்கத் தொடங்க அவள் அதன்மீது கண்வைத்தே களைக்கிறாள். அடுத்து அது ஓடத் துவங்க உலகமே அதன் பின்னால் ஓடுகிறது. அது கொண்டு வரும் குதூகலம் அனைவருக்கும் தொற்றிக் கொள்கிறது. மொழியின், அன்றாடத்தின், பண்பாட்டின், காலத்தின், வெளியின் விதிகளை அது ஒவ்வொன்றாய் முறிக்கிறது; அது அப்போது காயப்படுகிறது, முட்டியை சிராய்த்துக் கொண்டு, தாயிடம் அடிவாங்கிக் கொண்டு அழுகிறது. மெல்ல மெல்ல அது முதிர்கிறது. அப்போது அது காலத்தின் கதவுகளை உடைத்து வெளியேற பல புது வழிகளைக் கண்டு கொள்கிறது – உணவு, விளையாட்டு, சிரிப்பு, வன்முறை, காமம், கலை … எதையும் முரணாக, நேர்மாறாக சிந்திப்பதில் ஒரு பேருவகை, சுதந்திரம் உண்டு என்பதை குழந்தைதான் முதலில் கண்டுகொள்கிறது. குழந்தைகளே நம் உலகில் சங்கோஜமற்று வெடித்து சிரிக்கிறவர்களாக், உடம்பை வில்லாக வளைத்து கோணல் சேஷ்டைகள் பண்ணுகிறவர்களாக, நடந்து போக வேண்டிய இடங்களுக்கு ஓடியும், ஓடிச் செல்ல வேண்டிய இடங்களுக்குத் தாவியும் செல்கிறவர்களாக இருக்கிறார்கள். இது ஒவ்வொன்றுமே கால-வெளியின் இறுக்கங்களை லகுவாக்கும் முயற்சிகளே. குழந்தைகளே நிஜமாக ஆத்மார்த்தமாக வாழ்வதாய் நமக்குத் தோன்றுகிறது. வளர்ந்த ஒவ்வொருவரும் குழந்தைகளின் சேட்டைகளைக் கண்டு பூரிக்கிறார்கள்; ஒரு குழந்தை தூங்குவதில் கூட பாசாங்கற்ற கவலையற்ற விடுதலை பாவனை உண்டு. குழந்தையின் துயிலைக் கண்டு புன்னகைத்தபடி ரசிக்கிறோம். மனதுக்குள் “ராராரோ” என முணுமுணுக்கிறோம். ஆனால் இந்தப் பூரிப்பின் பின்னால் ஒரு பொறாமை உள்ளதை நாம் உடனடியாய் உணர்வதில்லை. இந்தப் பொறாமையே குழந்தையைத் திருத்த, பாதுகாக்க நம்மைத் தூண்டுகிறது.

இதே மனநிலைதான் பதின்வயதினரைக் கண்டதும் நமக்குக் கவலையும் அலட்சியமான கேலியும் அவர்கள்பால் தோன்றக் காரணமாகிறது. புரிதலின்றி எல்லாவற்றையும் எதிர்க்கிறார்கள். கட்டுப்பாடின்றி காலத்தையும் ஆற்றலையும் வீணடிக்கிறார்களே என சாலையில் பைக்கில் சீறிப் போகும் ஒரு விடலையைக் கண்டதும் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் பதின்வயது என்பது மதலைப் பருவத்தின் நீட்சி மட்டுமே. ஒரு மதலையைப் போன்றே ஒரு பதின்வயதினன் காலத்தை ஒவ்வொரு நொடியையும் புதுமையாக, தன் விருப்பப்படி வளைக்க முடியும் என நம்புகிறான். அவன் முன்பு வளையாது நிற்பது “கடந்த காலம்” மட்டுமே. கடந்த காலத்தின் அடிப்படையில் நிகழ்காலம் மதிப்பிடப் படுவது அபத்தம் என அவனுக்குத் தோன்றுகிறது. கடந்த காலத்தை உதறுவது, பகடி பண்ணுவது, எதிர்ப்பதே அதைக் கடந்து போக தனக்கு உதவும் என அவன் நம்புகிறான்.

கடந்த காலம் இல்லாத ஒரு வாக்கியத்தைக் கற்பனை பண்ணுங்கள். “நான் சிந்திக்கிறேன்” – இது “நிகழ்காலம்” எனும்போதே இதற்கு ஒரு துவக்கப் புள்ளியும் உண்டல்லவா? கடந்த காலத்தில் காலூன்றி அல்லவா “சிந்திக்கிறேன்” எனும் வினைச்சொல் தோன்றுகிறது. நான் இதற்கு முன் சிந்திக்கவில்லை, இப்போதே “சிந்திக்கிறேன்” என்பதல்லவா இதன் மறைபொருள். மொழிக்குள் காலத்தின் இருமை நமக்கு மிகப்பெரிய சவால். எதிர்க்கலாச்சாரமும் இப்படி ஒரு மரபான கலாச்சாரத்தை எதிர்த்தே தன்னை நிலைநிறுத்துகிறது.

காலத்தைக் கடப்பது அசாத்தியம் என உணரும் போது மேலும் மூர்க்கமாய் பதின்வயதினன் அதனோடு மோதுகிறான். அப்போது தற்காலிகமாகவேனும் அவன் தன்னை “காலத்தைக் கடந்தவனாக” உணர்கிறான். “பிக்பாஸின்” ஒரு அத்தியாயத்தைப் பார்த்து ரசித்த பின் உடனடியாய் நாம் அதே அத்தியாயத்தின் உணர்ச்சிகர தருணங்களைப் பகடி பண்ணும் மீம்களை, கிண்டல் கேலிகளையும் யுடியூபில் பார்த்து ரசிக்கிறோம். இரண்டு முரணான நிகழ்ச்சிகள் – மிகை உணர்ச்சியைக் கொண்டாடும் ஒன்றும், அதை மறுத்துக் கேலி பண்ணும் மற்றொன்றும் – இணைந்து நமக்கு இரண்டு எதிரெதிர் மனநிலைகளையும் அடைய, அதன் வழி அவற்றை கடந்து செல்ல உதவுகிறது. இதுவே காலத்தை கடந்து செல்லும் பேருவகை, இதை நாம் ஒரு ஜோக்குக்காக சிரிக்கும்போதே அதிகமாக உணர்கிறோம் என்கிறார் மார்ட்டின் ஹைடெக்கர். ஒரு ஜோக் என்ன சொல்ல வருகிறது என தெரியாமலே தான் அதற்காக சிரிக்கிறோம். அதன் அர்த்தத்தை அறியாத நொடியில் நாம் கடந்த காலத்தின் லட்சுமண ரேகையை கடந்து செல்கிறோம். ஏனென்றால் நம்மைக் காலத்துடன் கட்டிப் போடுவது மொழி உருவாக்கும் அர்த்தங்கள். அர்த்தம் அனர்த்தமாகும் போது கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடைப்பட்ட ஒரு காலாதீதத்தில் உறைகிறோம். ஆனால் காலத்தின் கட்டமைப்புகளை மீறுவது கலை, பண்பாட்டு அனுபவங்களுடன் நின்று போவதில்லை. அது அரசியலிலும் நடக்கிறது.

மதத்தை மறுப்பதும் வெறும் விடலைத்தனமான கலகம் அல்ல – அது நமது இருப்பின் ஆத்மார்த்தமான அடியொழுக்கமான உயிர்வாழும் விழைவு. இங்கு உயிர்வாழ்தல் என்பது ஒவ்வொரு நொடியும் புதிதாக மலர்வது. ஆனால் இதன் துயரம் ஒன்றையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும். இந்தக் கலகவாதிகள் வயதாக ஆக தம் கலக வாழ்வின் அநிச்சயத்தை, அநிச்சயம் ஏற்படுத்தும் பயத்தை, பதற்றத்தை உணர்கிறார்கள். உறவில், வேலையில், தம் உடல்நிலையில், சமூகத்தில், பொருளாதாரத்தில் எதையொன்றையும் அவர்களால் பற்றிக் கொள்ள முடியாது போகிறது. இன்று உள்ளது நாளை இருக்காது என்பதே நிதர்சனமாகிறது அப்போது அவர்களுக்குப் பற்றுகோல் தேவையாகிறது. இப்போது அவர்கள் கடந்த காலத்தைக் கொண்டாடும் “மரபின் மைந்தர்கள்” ஆவார்கள். அவர்கள் 80s ளீவீபீs ஆகி “அழகியை”, “ஆட்டோகிராபை” பார்த்து உருகுவார்கள். 90s ளீவீபீs ஆகி நினைவேக்கம் சொட்டும், கதையே இல்லாத “96” போன்ற படங்களை ஓட வைப்பார்கள். விவீறீறீமீஸீஸீவீuனீ ளீவீபீs ஆகி பெண்களைத் தூற்றும் சூப் பாய்ஸ் பாடல்களை ரசிப்பார்கள். வாட்ஸ் ஆப் குரூப்களில் தம் நினைவுகளைப் புதுப்பித்து பழைய காதலிகளிடம் சொல்லாமல் சொல்லித் தவிப்பார்கள். அரசியல் களத்தில், இன்னொரு பக்கம், இவர்கள் இந்துத்துவாவை, தேசியவாதத்தை சார்ந்திருக்க தொடங்குவார்கள். கடந்த காலத்தை உதறிச் செல்வதே உயிர்த்திருத்தல் என நினைத்தவர்கள் பின்னுக்கு போவதே உயிர்த்திருத்தல் என இப்போது கருதுவார்கள். எப்படி கற்பனைக்கு அகப்படாத எதிர்காலம் கட்டற்றதோ அவ்வாறே நமது கடந்த காலம், வரலாறு, தொன்மம், புராதன நம்பிக்கைகள் என ஒவ்வொன்றுமே ஒரு அகப்படாத இருப்பு, அகப்படாத எதுவும் கட்டற்ற சுதந்திரத்தை நல்குவது, சமகாலத்தின் கட்டுப்பாடுகளை உடைக்க வல்லது என இவர்கள் நம்பத் தொடங்குவார்கள். தமக்கு உவகை அளிக்கும்படி கடந்த காலத்தைக் கற்பனை பண்ணி, அதை மீட்பதற்காக அணிசேர்ந்து முழங்குவார்கள். இதுவே இன்று நினைவேக்க பெருமூச்சுகளின் காலமாக, காவிப்படைகளின் மிகப்பெரிய எழுச்சியின் வரலாற்றுக் கட்டமாக உருமாற ஒரு முக்கிய காரணம்.

நம் காலத்தில் மிக அதிகமாய் நினைவேக்கம் கொள்பவர்கள் தம் இளமைக் காலத்தில் தம் சமூகத்தை, நடைமுறைகளை வெறுத்தவர்கள்; மாற்றத்துக்காக ஏங்கினவர்கள். இன்று மதவாதத்தை மிகப்பெரிய அளவில் முன்னெடுப்பவர்களில் ஒரு பகுதியினர் ஆரம்பத்தில் இருந்தே தம் மனத்தின் ஆழத்தில் இறைநம்பிக்கை அற்றவர்களாக, மதத்தை ஒரு கலாச்சார சின்னமாக, அடையாளமாக மட்டுமே காண்பவர்களாக இருக்கிறார்கள். கடவுளை நம்புகிறவன் குஜராத் வன்முறையை எப்படி நிகழ்த்தியிருக்க முடியும்? கடவுளை நம்புகிறவன் எப்படி காந்தியை சுட்டுக் கொன்றிருக்க முடியும்? கோட்ஸேயைப் பற்றி ஆய்வு செய்யும் ஆஷிஸ் நந்தி அவர் அடிப்படையில் ஒரு நாத்திகர், இந்து புராதன சடங்குகளைப் பின்பற்றாதவர், மாட்டுக்கறியை விரும்பி உண்டவர் என்கிறார். முழுக்க முழுக்க மேற்கத்திய நாத்திகத்தை, பகுத்தறிவுவாதத்தைப் பின்பற்றியவர்களிடம் இருந்தே வலதுசாரி அரசியல் தோற்றம் கொண்டது என்பதில் எந்த விநோதமும் இல்லை. விடலைகளின் உலகம் சிலநேரம் மதத்தை ஆவேசமாய் மறுப்பதில் துவங்கி அதை விட வெறியுடன் அதை இறுகப் பற்றிக் கொள்வதில்தான் போய் முடியும்.

மிகையின்றி எப்படி காலத்தின் தளைகளை அறுப்பது என இவர்களுக்குத் தெரியாது என்பதே அடிப்படையான பிரச்சினை. அதுவே நம் வரலாற்றுத் துயரம். மனித அன்பின், பிடிப்பின் பின்னுள்ள முரண்களை அறிந்து அதன் வழி காலத்தை வெல்ல அவர்கள் கற்றுக் கொள்வதில்லை. பீங்கான்கள் விற்கும் கடையில் யானை புகுந்தது போல அவர்கள் ஒரு தத்துவக்குழப்பத்துடன் நம் வரலாற்றுக்குள் வருகிறார்கள்.

மதத்தை அதன் சாரத்தில் வெறுத்துக் கைவிடுகிறவர்களே மதவாதிகள் ஆவது நம் காலத்தின் மிகப்பெரிய நகைமுரண்.

 

 

https://uyirmmai.com/article/மதத்தை-வெறுப்பது/

மதத்தை ஒரு கலாச்சார சின்னமாக, அடையாளமாக மட்டும் பார்தது அதற்குரிய Respect ஐ ஒரு மட்டுப்படுத்த கூடிய அளவில் கொடுத்து அதைக் கடந்து போவது தவறு என்று எனக்கு படவில்லை. ஆனால் அதை உண்மை என்று தீவிரத்துடன் நம்புவது,  அல்லது  தாம் உளமார அதை நம்பாமல் விட்டாலும் மக்களை நம்ப வைக்க உதவாக்கரை கட்டுக்கதைகளை தமது கற்பனை வளத்திற்கேற்ப உருவாக்குவது, மூடப்பழக்கங்களை விதைப்பது போன்றவையே தவறானவிடயங்கள் என்பதோடு மக்களை தொடர்ந்து முன்னேறாத சமுதாயமாக வைத்திருக்கும்  என்பதற்கு இன்றைய கீழைத்தேச நாடுகளே உதாரணம்.

இதனால்  அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி பாமர மக்களே. ஏனென்றால் மக்கள் மீது மதத்தையும், கட்டுக்கதை களையும் மூடத்தனங்களையும் பரப்பும் முன்னேறிய பிரிவினருக்கு அவை எல்லாம் மூடத்தனம் என்பது தெளிவாக தெரியும் என்பதால் அவர்கள் அதை ஒரு நடிப்பாக மட்டும் செய்துகொண்டு  கொண்டு தமது வாழ்க்கை  முன்னேறத்திற்காக கடவுளையை நம்பாமல் தாமே கவனித்துக்கொள்வர்.  சிவனின் தலையில் சந்திரன்  இருப்பதாக கட்டிவிடப்பட்ட கட்டுக கதையை இன்றும் பாதுகாத்துவரும் இந்தியா அதே சந்திரனுக்கு விண்கலம் அனுப்பி அதை ஆராய்வதே அதற்கு உதாரணம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/25/2019 at 9:51 AM, tulpen said:

சிவனின் தலையில் சந்திரன்  இருப்பதாக கட்டிவிடப்பட்ட கட்டுக கதையை இன்றும் பாதுகாத்துவரும் இந்தியா அதே சந்திரனுக்கு விண்கலம் அனுப்பி அதை ஆராய்வதே அதற்கு உதாரணம். 

இரவில் உணவைக் கொண்டுசெல்லும்போது கரித்துண்டு ஒன்றையும் வைத்துச் செல்லவேண்டும், இல்லையேல் பேய்பிடிக்கும் என்பது மூடத்தனமல்ல. புரிந்துகொள்ள முடியாத அப்பாவிப் பாமரமக்களுக்கான ஒரு பாதுகாப்புக்கானதே இந்தக் கட்டுக்கதை. இவ்வாறானதே பல கட்டுக்கதைகளும். ஒவ்வொருவரும் தங்கள் அறிவைக்கொண்டு ஆராயும் திறன்பெறும்போது உண்மையை அறிந்துகொள்வார்கள். இல்லையேல் கேடுகளுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலைமைகளும் ஏற்படும்.  

இந்தியா தனது அறிவைக்கொண்டு ஆராயும் நிலைக்கு இன்னமும் வரவில்லை என்பதான உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.  

அறிவைக்கொண்டு ஆராயும் நிலைக்கு நீங்கள் வந்திருப்பது கண்டு வாழ்த்துகிறேன். !!

"ஆனால் மாணவ, மாணவியரில் கணிசமானோருக்கு மதத்தை பற்றி விவாதிப்பதில் ஒரு அசூயை உள்ளதைக் கவனித்தேன். அதை ஒரு பழம் பஞ்சாங்கமாக, மரபின் சுவையாக அவர்கள் காண்கிறார்கள். இதன் பொருள் அவர்கள் நாத்திகர்கள் என்றோ தத்துவார்த்தமாக மதத்தை மறுப்பவர்களோ என்றில்லை. இந்த தலைமுறை சில பத்தாண்டுகளுக்கு முன்பு விடலைப் பருவத்தில் நாங்கள் இருந்ததைப் போன்றே இருக்கிறார்கள்."

நாத்திகர்களையும் உள்வாங்கியதால் தான் சைவம் இன்றும் வாழ்கின்றது.

 

"மதத்தை அதன் சாரத்தில் வெறுத்துக் கைவிடுகிறவர்களே மதவாதிகள் ஆவது நம் காலத்தின் மிகப்பெரிய நகைமுரண்"

இது, ஐ.எஸ் போன்ற மதவாதிகளுக்கு பொருந்தாமல் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.