Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமேசான் மழைக்காடுகள் அழிப்பு: குற்றவாளி யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமேசான் மழைக்காடுகள் அழிப்பு: குற்றவாளி யார்?

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 செப்டெம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 08:47 

  image_60a01714b5.jpgமனிதகுலம், இப்பூவுலகில் மகிழ்வாக உயிர்வாழ்வதற்கு ஏதுவாக, இயற்கை பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறது.   

மனிதகுலமோ, இயற்கை தனக்களித்த பெருங் கொடைகளை, ஒவ்வொன்றாக அழித்து, தனக்கான சவக்குழியைத் தானே தோண்டுகின்றது.   

மனிதனது இலாபவெறியும் அதிகாரத்துக்கான ஆவலும் முழு மனித குலத்தையே, அழிவின் விளிம்பை நோக்கி, நகர்த்திக் கொண்டிருக்கிறது.   

இயற்கைச் சமநிலையை, விஞ்ஞானத்தால் சரி செய்யமுடியும் என்ற மனிதனின் அசட்டுத்தனமான நம்பிக்கைக்கு, மொத்த மனித குலமும் மெதுமெதுவாகப் பலியாகிக் கொண்டிருக்கிறது.   

எமது குழந்தைகளின், பேரக் குழந்தைகளின் எதிர்காலமும் இருப்பும் கேள்விக்குறியாகி விட்ட பிறகும், நாம் இன்னமும் அமைதியாக, இந்த இயற்கை அழிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.   

கடந்த சில வாரங்களாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பேசப்பட்டது, அமேசான் மழைக்காடுகள் தீப்பிடித்து எரிவது பற்றிய செய்தியாகும்.  

கவலை கொள்வது, எதிர்ப்புத் தெரிவிப்பது, கோபப்படுவது என்ற இயல்பான உணர்வுபூர்வமான வெளிப்பாடுகளுடன், வரலாற்றின் இன்னொரு நிகழ்வு போல, இந்தக் காட்டுத் தீயும் கடந்து போய்விட்டது. இப்போது நமது பேசு பொருள்கள் வேறு; கவனங்கள் வேறு; அக்கறைகள் வேறு.   

ஆனால், ஏனைய விடயங்கள் போலன்றி, மிகவும் ஆழமாகவும் அவதானமாகவும், அமேசான் மழைக்காடுகள் தீப்பற்றி எரிவது பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. இது வெறுமனே, அமேசான் பற்றியது மட்டுமல்ல; நாம் வாழும் பூவுலகு மீதான, இயற்கை மீதான, நாம் வாழும் சமூகம் மீதான அக்கறையின் வெளிப்பாடாக, இதை நாம் பேசியாக வேண்டும்.   

இதன் துன்பியல் யாதெனில், அமேசான் காடுகள் தீப்ப‌ற்றி எரிவது பற்றித் தமிழில் கருத்து உரைப்பவர்கள், இரண்டு வாதங்களை வைப்பதை, சமூக வலைத்தளங்களில் காணமுடிகிறது.   
முதலாவது, அழிக்கப்பட்ட காடுகள் மீண்டும் வளர்ச்சி அடையும்; எனவே, அதிகம் கவலைப்படத் தேவையில்லை.   

இரண்டாவது, உலகிலுள்ள வளர்ச்சி அடைந்த நாடுகள், தங்களது காடுகளை வெட்டிவிட்டு, இப்போது பிரேசில், தனது அபிவிருத்திக்காகக் காடுகளை வெட்டுகின்ற போது, அதை எதிர்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.   

இவ்விரண்டுமே புரிதலின்றி, மேம்போக்கான, உள்ளீடற்ற வாதங்களாகும். இவ்விரண்டுக்குமான பதிலை, முதலில் சொல்லிவிட்டு, இந்த மனித குலத்துக்கு எதிரான, இச்செயலுக்கு யார் குற்றவாளி என்ற வினாவுக்குச் செல்லலாம்.   

காடுகள் அழிந்தால், மீண்டும் வளரும்; ஆனால், மழைக்காடுகள் அழிந்தால், அவை மீள உருப்பெற மாட்டா. மழைக்காடுகள், எல்லா நாடுகளிலும் இல்லை; இக்காடுகள், உலகின் வெப்ப வலயத்துக்குரிய சிறப்பியல்பு கொண்டவை. 

காடுகள் அழிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும்; அபிவிருத்தி என்பது, அதற்கான ஒரு சாட்டேயன்றி, நியாயமான காரணம் அல்ல.   

மழைக்காடுகள் என்றால் என்ன?  

அதிக மழை வீழ்ச்சியைத் தன்னகத்தே கொண்டு, தனக்கே உரித்தான விலங்குகளையும் தாவரங்களையும் பிற உயிரினங்களையும் உள்ளடக்கிய காடுகள், மழைக்காடுகள் எனப்படும்.   
இதில், அதிகமான வெப்பத்தையும் மழை வீழ்ச்சியையும் கொண்டுள்ள மழைக்காடுகளை, ‘வெப்ப மண்டல மழை காடுகள்’ (Tropical rainforests) என்றும் மிதமான வெப்பநிலையையும் மழை வீழ்ச்சியையும் கொண்டுள்ள மழைக்காடுகளை, ‘மிதவெப்ப மண்டல மழைக்காடுகள்’ (Temperate rainforests) எனவும் அழைக்கப்படும்.   

இதில், வெப்ப மண்டல மழைக்காடுகள் முக்கியமானவையாகவும் உயிர்ப் பல்வகைமையின் அடிநாதமாகவும் இருந்து வருகின்றன. வெப்ப மண்டல மழைக்காடுகள், பல இலட்சம் மில்லியன் ஆண்டுகளாகப் பூமியில் நிலைபெற்றுள்ளன. வெப்ப மண்டல மழைக்காடுகளில், உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத இலட்சக்கணக்கான தாவரங்கள், ஆயிரக்கணக்கான ஊர்வன, நூற்றுக்கணக்கான பறவைகள், விலங்குகள் என்பன உயிர்வாழுகின்றன.    

1671ஆம் ஆண்டு, கரும்பு உற்பத்திக்காக மழைக்காடுகள் அழிக்கப்பட்டதன் விளைவாக, ‘டோடோ’ பறவையினம் அழிந்து போனது. ஒரு மழைக்காட்டின் அழிவு, எவ்வளவு பெரிய சவாலாக இருக்கும் என்பது, இற்றைக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே, மனித குலத்துக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று, அமேசான் மழைக்காடுகளைக் காப்பாற்றப் போராட வேண்டியிருக்கிறது.   

அமேசான் மழைக்காடுகள், 6.7 மில்லியன் சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை உடையன. பிரேசில், பொலிவியா, கொலம்பியா, பெரு, ஈக்குவடோர், கயானா, சுரினாம், பிரெஞ்சு கயானா ஆகிய நாடுகளை அமேசான் உள்ளடக்கியுள்ளது.   

இலகுவாகச் சொல்வதாயின், தென்அமெரிக்காவின் பெரும்பான்மை நிலப்பரப்பை, அமேசான் தன்வசப்படுத்தி வைத்துள்ளது. இதில் 62 சதவீதமான மழைக்காடுகள், பிரேசிலுக்குச் சொந்தமானவை.  

 அமேசான் நிலப்பரப்பை, ஒரு நாடாகக் கருதின், நிலப்பரப்பு ரீதியாக, உலகின் ஏழாவது மிகப் பெரிய நாடாக, அமேசான் இருக்கும். ஒப்பீட்டளவில் இந்தியாவைவிட இது பெரிது.   

அமேசான் மழைக்காடுகள், வெறுமனே மழையுடனும் மரத்துடனும் மட்டும் தொடர்புபட்டவை அல்ல; இந்த மழைக்காடுகளில், 400க்கும் அதிகமான இனக்குழுக்களைச் சேர்ந்த, ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட, பழங்குடியினர் உயிர் வாழ்கிறார்கள். 

இதில், 50க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள், வெளியுலகுடன் எந்தவிதத் தொடர்பும் அற்றவர்களாக இருக்கிறார்கள். இவர்கள், 170 மொழிகளைப் பேசுகிறார்கள்.   

உலகில், இதுவரை அடையாளம் காணப்பட்ட உயிரினங்களில் அரைவாசிக்கும் மேற்பட்ட உயிரினங்கள், அமேசான் மழைக்காடுகளில் உயிர்வாழ்கின்றன. அதேவேளை, புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான மருந்துகளில், 70 சதவீதமானவை, அமேசான் காடுகளிலேயே கிடைக்கின்றன.   

image_3950e73175.jpg

இந்தக் காட்டையே, இன்று மனிதகுலம் கொஞ்சம் கொஞ்சமாகத் தீவைத்து எரித்துக் கொண்டிருக்கிறது. இக்காடுகளுக்குத் தீ வைப்பதன் மூலம், ஒருபுறம் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் அதிகம் சேருகிற அதேநேரம், மரங்கள் அழிக்கப்படுவதால், அவை உள்வாங்கிச் சேமிக்கும் காபனீரொட்சைட்டின் அளவும் குறைகின்றது.   

இது, காலநிலை மாற்றங்களின் மீது, பாரிய தாக்கத்தை உருவாக்கும். உயிர் வாழ்வதற்குத் தேவையான சுத்தமான காற்று, நமக்கு கிடைக்காமல் போவதுடன், வளிமண்டலத்தில் அதிகரித்த காபனீரொட்சைட், கடல்நீரை மேலும் அமிலமாக மாற்றிவிடும் ஆபத்தும் உள்ளது. இது, கடல்வாழ் உயிரினங்கள், பவளப் பாறைகள், தாவரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மோசமான நிலைக்குத் தள்ளி, அவற்றின் இருப்பையே அச்சுறுத்தும்.  

அமேசான் காடெரிப்பின் காரணங்கள்  

இவ்வாறு, பூமிப்பந்தின் வியத்தகு பொக்கிஷங்களில் ஒன்றான அமேசான் மழைக்காடுகளை, தீவைத்து ஏன் எரிக்கிறார்கள் என்பது, பொதுப்புத்தி மனநிலையில், வியப்புக்குரியதாக இருக்கும்.   
ஆனால், இந்தச் செயற்பாட்டுக்குப் பின்னால், பாரிய நலன்கள் ஒளிந்திருக்கின்றன. அடிப்படையில், நான்கு தேவைகளுக்காக அமேசான் மழைக்காடுகள், தீ மூட்டி அழிக்கப்பட்டு, பாவனைக்குள்ளாகின்றன.   

(1) விவசாய நிலங்களுக்காக,   

(2) கால்நடை வளர்ப்புக்குரிய நிலத்தேவைக்கு,   

(3) மரங்களுக்காக (வெட்டப்பட்டு விற்பனைக்கு),   

(4) இயற்கை வளங்களான நில   அகழ்வுக்காக   

உலகில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில், முதலாவது இடத்தில் பிரேசில் இருக்கிறது. அதேவேளை, உலகளாவிய ரீதியில், மாட்டிறைச்சிக்கான கேள்வி, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, கால்நடை வளர்ப்பை அதிகரிப்பதற்குப் புதிய நிலங்கள் தேவைப்படுகின்றன. இப்போது, மாட்டிறைச்சி ஏற்றுமதி மூலம், ஆண்டொன்றுக்கு 6.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை, பிரேசில் பெற்றுக்கொள்கிறது.   

அதேபோலவே, சோயாபீன்ஸ் உற்பத்தி செய்யும் நாடுகளில், உலகில் இரண்டாவது மிகப்பெரிய நாடாக பிரேசில் திகழ்கிறது. அண்மையில், அமெரிக்க பொருள்களுக்குச் சீனா விதித்த புதிய வரிகள், பிரேசிலின் சோயாபீன்ஸூக்கான கேள்வியை, மேலும் அதிகரித்துள்ளது. எனவே, சோயாபீன்ஸ் பயிர்ச்செய்கைக்கு நிலங்கள் தேவைப்படுகின்றன.   

உலகளாவிய ரீதியில், மரங்களுக்கான கேள்வியும் தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளது. எனவே, அமேசானில் வெட்டப்படும் மரங்களுக்கு, அதிகூடிய இலாபம் மிகுந்த சந்தை, எப்போதும் உண்டு.   

இந்த மழைக்காடுகளில், தங்கம், அலுமினியம் போன்ற கனிப்பொருள்களும் கொட்டிக்கிடக்கின்றன. அதேபோல, இன்னும் அளவிடப்படாத அளவு எண்ணை வளமும் அங்குள்ளது.   

கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, அமேசான் காடு அழிப்பு, இவ்வாண்டு 88சதவீதம் அதிகரித்துள்ளது. இப்பின்புலத்தில், யாரைக் குற்றவாளியாகக் காணமுடியும் என்கிற கேள்வியை எழுப்ப முடியும்?   

இலாபத்துக்காகச் செயற்படும் பல்தேசியக் கம்பனிகளையா? பல்தேசியக் கம்பனிகளின் நலன்களுக்காகக் காடுகளை அழிக்கும் அரசியல்வாதிகளையா? நடப்பதை எல்லாம் தொடர்ந்து, வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதோடு, மரங்களையும் பிறவற்றையும் நுகரும் பொதுமக்களையா?   

அமேசான் காடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, அதிகளவாகத் தீக்கிரையாவதில் பிரேசிலின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவானவரின் பங்கு மிக அதிகம். 

அவர், தனது தேர்தல் பரப்புரைகளின்போதே, பிரேசிலின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, அமேசான் காடுகளை அழித்து, அதன்மூலம் வேலைவாய்ப்பையும் பொருளாதார உதவிகளையும் வழங்குவேன் என உறுதியளித்திருந்தார். இன்று அவர், அதையே செய்கிறார்.   

அண்மையில், கசிய விடப்பட்ட ஆவணங்கள், அமேசானில் பல இடங்களில் பற்ற வைக்கப்பட்ட தீ, முன்னரே திட்டமிடப்பட்டன என்பதை நிரூபித்திருக்கின்றன. இப்பொழுது, தீக்கிரையாகியுள்ள பகுதிகளில், பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமிடல்கள் நடைபெற்றுள்ளள. அவற்றுக்கான அங்கீகாரத்தை, ஜனாதிபதி வழங்கியுள்ளதையும் இந்த இரகசிய ஆவணங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன.   

இந்த ஜனாதிபதியை, மக்களே தெரிந்தெடுத்தார்கள். மக்களின் விருப்புடனேயே, அவரும் பதவிக்கு வந்தார். தனது, தீவிர தேசியவாதக் கூச்சலை, மக்கள் அலையாக்கி, ஒரு தீவிர அதிவலது நிலைப்பாட்டில் நின்று, அவர் வெற்றி பெற்றார். இதை நாம் மறந்துவிடலாகாது.   

தீவிர தேசியவாதத்தால் உந்தப்பட்டு, ஒரு தவறான நபரைத் தெரிவதன் ஆபத்துகளை, பிரேசில் மக்கள் மெதுமெதுவாக உணர்கிறார்கள். அமேசான் மழைக்காடுகளைத் தீக்கிரையாக்குவதன் மூலம், ஒரு தவறான தெரிவு, முழு மனிதகுலத்துக்குமே சவாலானதாய் முடியும் என்பது, இன்னொரு முறை நிரூபணமாகியுள்ளது. ஏனெனில், இதே தேசியவாதக் ‘கூச்சல்’ தான், ஹிட்லரையும் முசோலினியையும் பதவிக்குக் கொண்டு வந்து சேர்த்தது.   

முன்னர் கேட்ட கேள்வி, இப்போது மீண்டும் அழுத்தமாய் மேலெழுகின்றது. அமேசான் மழைக்காடுகள், தீயில் எரிந்து சாம்பலாவதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார்? 
அவருக்கு வாக்களித்து தெரிவு செய்த மக்களா, தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமையா, ‘மக்களுக்காக’ என்பதன் பெயரால், அரசியல் தலைமையுடன் இணைந்து, இலாபத்தை மட்டுமே நோக்காகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களா என்பதை, ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.   

தெரிவின் முக்கியத்துவத்தையும் தவறான தெரிவின் ஆபத்துகளையும் அமேசான் மழைக்காடுகள், பாடமாகப் புகட்டி நிற்கின்றன. குற்றவாளி யார் என்பதை, நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.  

 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அமேசான்-மழைக்காடுகள்-அழிப்பு-குற்றவாளி-யார்/91-238564

  • 7 months later...

 

 

 

 

 

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.