Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலும்  தமிழ் மக்களும்

  வீ.தனபாலசிங்கம்

இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தலுக்கான  வேட்புமனுக்கள் தாக்கல் இன்று இடம்பெறுகின்றது. 30 க்கும் அதிகமானவர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தார்கள்.எத்தனை வேட்பாளர்கள்  தேர்தல் களத்தில் நிற்கப்போகிறார்கள் என்பது நண்பகலுக்குப் பின்னர் தெரிந்துவிடும்.என்றாலும் ஜனாதிபதி தேர்தலில் இறுதியில் போட்டி இரு பிரதான வேட்பாளர்களுக்கிடையிலானதாக இருப்பதே வழமை. 

97109d2f0327ee8e0187170556d22aaac86a150b

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான  தேசிய  ஜனநாயக முன்னணியின் வேட்பாளரான வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோதாபய ராஜபக்சவுமே அந்த பிரதான போட்டியாளர்கள். 20 வருடங்களுக்கு பிறகு ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் வேட்பாளராக அதன் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவை களமிறக்கியிருக்கின்ற போதிலும், முன்னர் இரு ஜனாதிபதி தேர்தல்களில் ஜே.வி.பி.யின் வேட்பாளர்கள் ஒரு தொலைதூர மூன்றாம் இடத்துக்கு வந்தபோது   பெற்ற வாக்குவீதங்களை விடவும் கூடுதலாக அவரால் பெற பெறக் கூடியதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

     இத்தடவை ஜனாதிபதி தேர்தல்  பெரும்பான்மையினத்தவர்களான  சிங்கள பௌத்தர்களின் வாக்குகளை கூடுதல்பட்சம் பெறுவதில் இரு பிரதான வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டியாகவே இருக்கப்போகிறது என்பதே பெரும்பாலான அவதானிகளின் அபிப்பிராயமாக இருக்கிறது.  சிங்கள பௌத்தர்கள் மத்தியில் பேராதரவைக்கொண்டவராக கோதாபய நம்பப்படுகின்ற அதேவேளை, சிங்கள பௌத்தர்களின் வாக்குகளை கவர்வதில் அவருடன் நெருக்கமாக  போட்டிபோடக்கூடிய ' தகுதி ' கொண்டவர் என்று ஐக்கிய தேசிய கட்சியினரால் அடையாளம் காணப்பட்டவராக சஜித் பிரேமதாச விளங்குகிறார்.

தென்னிலங்கை அரசியலில்  பெரும்பான்மை இனக்குழுமவாதம் ( Ethnic Majoritarianism )கடுமையாக  முனைப்படைந்ததன் விளைவான ஒரு தோற்றப்பாடே  சிங்கள பௌத்தர்களின் வாக்குகளுக்கான இந்த பலப்பரீட்சை. அதனால் அந்த வாக்குகளை கூடுதல்பட்சம் கைப்பற்றுவதை உறுதிசெய்வதற்காக இரு பிரதான வேட்பாளர்களும் சிறுபான்மையின மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கான எந்தவொரு முயற்சி தொடர்பிலும் குறிப்பான கவனம் செலுத்துவது சாத்தியமில்லை.

     இத்தகையதொரு பின்புலத்தில், தமிழ் அரசியல் சமுதாயத்தின் மத்தியில் உள்ள பல பிரிவினரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழர்கள் கடைப்பிடிக்கவேண்டிய அணுகுமுறை குறித்து தங்கள் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளின் வழியில் முன்னெடுத்திருக்கின்ற விவாதத்தை நோக்கவேண்டியிருக்கிறது.

     கோதாபயவுடன் சில தமிழ்க் கட்சிகள், குழுக்கள் ஏற்கெனவே சந்திப்புக்களை நடத்தியிருக்கின்ற போதிலும், தேசிய இனப்பிரச்சினை தொடர்பான விவகாரங்களில் பெரும்பாலும் அவரின் மூத்த சகோதரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே கருத்துக்களை ' உத்தியோகபூர்வமாக ' வெளியிடும் பொறுப்பை தனதாக்கிக்கொண்டுள்ளார் போலத் தோன்றுகிறது. 

சிறுபான்மை இனத்தவர்களின் பிரச்சினைகளை இதுகாலவரையில் கையாண்ட முறை காரணமாக ராஜபக்சாக்களும் அவர்களது புதிய அரசியல் கட்சியான பொதுஜன பெரமுனவும்  தமிழ்,  முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும்பாலும் ஆதரவு இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு தற்போதைய சூழ்நிலையில் சிறுபான்மை இனத்தவர்களின் கணிசமான வாக்குகள் அவசியம் என்பதை அவர்கள் உணருவதனால்தான் அந்த சமூகங்களை அரவணைப்பது  போன்று நடந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.  

சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகள் இல்லாமலேயே ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை இனத்தவர்களின் அதிகப்பெரும்பான்மையான வாக்குகளை கைப்பற்றுவதன் மூலம் வெற்றிபெறக்கூடியதாக இருக்கவேண்டும் என்ற பேரினவாத கருத்தியலை போரின் முடிவுக்கு பின்னரான காலகட்டத்தில் முன்னிலைப்படுத்தியவர்கள் ராஜபக்சாக்களே என்பதை கவனிக்கத்தவறக்கூடாது.

      இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற பேச்சு வரும்போது எப்போதுமே அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை சுற்றியதாகவே மகிந்த ராஜபக்சவின் கதையாடல் அமைந்திருக்கும்.ஆனால், அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என்று அவர் ஒருபோதும் கூறியதில்லை. ' 13 + ' பற்றியும் அவர் பேசுவார்.ஆனால், அதை விரிவாக விளக்கவேண்டிய நிலை வந்தால்  ' செனட் சபை' யைத்தான் அவ்வாறு குறிப்பிட்டதாக கூறிவிடுவார். 

அண்மைய நாட்களில் தன்னுடன் பேச்சு நடத்திய தமிழ் அரசியல்வாதிகளிடம் பெரும்பாலும் 13 பற்றியே எதையாவது ராஜபக்ச கூறினார். அண்மையில் இந்தியாவின் ஜம்மு - காஷ்மீரில் இடம்பெற்ற நிகழ்வுகளையும் கவனத்தில் எடுக்க வேண்டியிருக்கிறது என்றும் அவர் பத்திரிகை நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.  சிங்கள பெரும்பான்மையினத்தவர்களின் சிறிய அதிருப்திக்கும் உள்ளாகிவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்துவரும்  ராஜபக்சாக்கள் ஜனாதிபதி தேர்தலில் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் உருப்படியாக எதையும் கூறப்போவதில்லை.

    அதேவேளை, சஜித் பிரேமதாசவைப் பொறுத்தவரையில்,  ஐக்கிய தேசிய கட்சி  சிங்கள பௌத்தர்கள் மத்தியில் இழந்துபோன செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்பும் ' பெரும் பொறுப்பை ' ஏற்றுக்கொண்ட அரசியல் தலைவர் என்ற வகையில் அவரும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான விவகாரங்களில் மிகுந்த ஜாக்கிரதையுடனேயே செயற்படுவார் என்பதில் சந்தேகமில்லை. அவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தபோது ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு அதிகாரப்பரவலாக்கல், தேர்தல் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியது. 

கடந்த வியாழக்கிழமை சஜித்தின் வேட்பாளர் நியமனத்தை அங்கீகரிப்பதற்காக கூட்டப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் மகாநாட்டிலும் அதே தீர்மானம்  ஏற்றுக்கொள்ளப்பட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படவேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடாக தொடர்ந்து வலியுறுத்தப்படுகின்ற போதிலும் , அது குறித்து எதையும் பேசாமல் இருந்துவரும் சஜித், அதே போன்றே அதிகாரப்பரவலாக்கல்,  அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்தும் தனது நிலைப்பாட்டை இதுவரையில் தெளிவுபடுத்தவில்லை.

     இரு பிரதான வேட்பாளர்களுமே தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வழிவகைகள் குறித்து தெளிவான வாக்குறுதிகளை வழங்க முன்வரப்போவதில்லை . 

இவர்களில் எவராவது ஒருவர் அரசியல் தீர்வு தொடர்பில் ஏதாவது யோசனையை முன்வைக்கும்பட்சத்தில் மற்றவர் அதை நாட்டின் ஐக்கியத்துக்கும் சுயாதிபத்தியத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக சிங்கள மக்கள் மத்தியில் ' பூச்சாண்டி ' காட்டுவதற்கு தயங்கமாட்டார்கள். அதுவே கடந்த கால ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் நடந்தது. 

ஜனாதிபதி  வேட்பாளர்களை எவ்வாறு அணுகுவது என்பது தொடர்பில் தமிழ் அரசியல் சமுதாயத்தின் மத்தியில் பல்வேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. சகல வேட்பாளர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்திய பிறகே தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு அணுக வேண்டும் என்பது பற்றிய தங்கள் தீர்மானத்தை அறிவிக்கப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியிருக்கிறது.

 தேர்தலை முற்றாக தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கவேண்டும் என்ற கருத்தும் ஒரு தரப்பினால் முன்வைக்கப்படுகிறது.அதேவேளை,  தமிழ்  வேட்பாளர் ஒருவரை நிறுத்தி தமிழ் மக்களை  அவருக்கு வாக்களிக்கச் செய்யவேண்டும்; அது சாத்தியப்படாத பட்சத்தில் தேர்தல் பகிஷ்கரிப்பே தமிழர்களுக்கு இருக்கக்கூடிய ஒரே தெரிவு என்ற ஒரு யோசனையும் கூறப்படுகிறது. 

 தமிழர் உரிமைப்போராட்டத்தின் அடிப்படை இலட்சியங்களை பிரதான வேட்பாளர்களுடனான பேச்சுவார்த்தைகளில் முன்வைத்து எழுத்துமூல உடன்படிக்கையொன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்யவேண்டும் ; அதைச் செய்வதற்கு கூட்டமைப்பு தவறுமானால் தமிழ் மக்கள் முற்றிலுமாக தேர்தலை பகிஷ்கரிக்கவேண்டும் என்ற யோசனையையும்  தமிழ் கருத்துருவாக்கிகள் என்ற தரப்பினரால்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேவேளை, கோதாபயவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை ஏற்கெனவே எடுத்துவிட்ட ஒரு சில தமிழ்க்கட்சிகள், குழுக்களும் தங்களது தரப்பிலான காரணங்களைக் கூறிக்கொண்டிருக்கின்றன.

     பிரதான வேட்பாளர் எவருமே தமிழ் அரசியல் கட்சிகளினால் முன்வைக்கப்படக்கூடிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு தமிழர்களின் வாக்குகளை பெற முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடியதாக தென்னிலங்கையின் அரசியல் கோலங்கள் இல்லை.இதை  நிபந்தனைகளை  முன்வைக்கத்தேவையில்லை என்று வாதிடப்படுவதாக அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை. தேர்தல் பகிஷ்கரிப்பு என்ற யோசனையைப் பொறுத்தவரை பலவந்தமாக நிர்பந்திக்கப்பட்ட ஒரு தடவையைத் தவிர மற்றும்படி மக்கள் தாமாக அதை விரும்பினார்கள் என்று கூறுவதற்கில்லை. 

    வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், இதுகாலவரையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் அனேகமானவற்றில் அவர்கள் யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்காக அன்றி யார் ஜனாதிபதியாக வரக்கூடாது என்பதற்காகவே பெரும்பாலும் தங்களது வாக்குகளை பயன்படுத்தியிருக்கிறார்கள்.  தமிழ் அரசியல் கட்சிகளும் குழுக்களும் இறுதியில்  எடுக்கக்கூடிய நிலைப்பாடு எத்தகையதாக இருந்தாலும், இத்தடவையும்  சுயாதீனமாகச் செயற்பட அனுமதிக்கப்படும் பட்சத்தில் பெரும்பாலான தமிழ் மக்கள்  அந்த விதமாகவே வாக்களிப்பதற்கு முன்வரக் கூடிய சாத்தியமே இருக்கிறது எனலாம்.

 

https://www.virakesari.lk/article/66365

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.