Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு - திமுகவை விட்டு விலகுகிறதா விசிக? - திருமாவளவன் சிறப்பு பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எம்.ஏ. பரணிதரன் பிபிசி தமிழ்
 
  •  
திருமாவளவன்

அயோத்தி விவகாரம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் சந்திப்பு, இலங்கை புதிய அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிக்குப் பிந்தைய நிலைமை உள்ளிட்டவை தொடர்பாக பிபிசி தமிழுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சிறப்புப் பேட்டியளித்தார். அதன் விவரத்தை பார்க்கலாம்.

கேள்வி : அயோத்தி நில விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்த முழுமையான, ஆழமான விமர்சனங்களை பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் தவிர்த்த வேளையில், அதை விடுதலை சிறுத்தைகள் கட்சி, அதிருப்தி கலந்த எதிர்ப்புத்தொனியில் விமர்சிப்பது ஏன்?

பதில்: அயோத்தி விவகாரம், நீண்ட காலமாக இந்திய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய பிரச்னை. இது குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு அங்கு ஒரு தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் திருப்தி ஏற்படாமல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்கள். ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அதை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வேளையில் அவர்கள் அளிக்கப்போகும் தீர்ப்பு, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. அதற்காக அனைவரும் காத்திருந்தோம்.

ஆனால், சற்றும் எதிர்பார்க்காத வகையில், உயர் நீதிமன்ற தீர்ப்பே பரவாயில்லை என்பது போல, உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமைந்திருந்தது. அதை விமர்சிக்க வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இல்லை. பொதுவாக, தீர்ப்பு எழுதுவது சட்டத்தின்படி, ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும். இதுதான் எந்த நீதிமன்றமாக இருந்தாலும் கடைப்பிடிக்கக் கூடிய மரபு. அது ஒரு சட்டப்பூர்வ கடமையும் கூட. அயோத்தி விவகாரத்தில் நிலம் இந்துக்களுக்கா, இஸ்லாமியர்களுக்கா என்பதுதான் கேள்வி.

இதை விசாரித்த அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்ற நீதிபதிகள், அந்த இடம் இஸ்லாமியர்களுக்கு அல்ல, இந்துக்களுக்கே உரியது என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள். அதற்கு அவர்கள் கவனத்தில் கொண்ட ஆதாரங்களும் தீர்ப்பின் மூலம் தெரிய வருகிறது. அங்கே பாபர் மசூதி இடிக்கப்பட்டது உண்மை, அது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் சொல்கிறது.

1949-ஆம் ஆண்டுதான் அங்கே ராமர் சிலைகள் கொண்டு வந்து வைக்கப்பட்டன. அதற்கு முன்பு இல்லை. அதுவும் சடே்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. வேறு என்ன இஸ்லாமிய தரப்பில் செய்யப்பட்ட குற்றம் என்று பார்த்தால், எதுவும் இல்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கான காரணமாக இந்து அமைப்புகள் கூறுவதை கேட்டால், ஏற்கெனவே அங்கு ராமர் கோயில் இருந்தது. அதை இடித்து விட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது.

எனவே, எங்கள் கோயில் அமைந்த இடம் எங்களுக்கே சொந்தம். அந்த இடத்தில் நாங்கள் மீண்டும் ராமர் கோயிலைக் கட்டுவோம் என்று இந்து அமைப்புகள் கூறுகின்றன.

திருமாவளவன் சிறப்புப் பேட்டிபடத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, பாபர் மசூதிக்கும் கீழே, பூமிக்கு அடியில் ஒரு கட்டட அமைப்பு இருந்தது. ஆனால், தொல்லியல் துறையின் அறிக்கையின்படி அது கோயிலும் இல்லை, அது இஸ்லாமிய கட்டுமானமாகவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே, அங்கு கோயில் இல்லை என்றால், ராமர் கோயில் இல்லை என்றுதான் பொருள். ராமர் கோயில் இல்லை என்றால், ராமர் கோயில் இடிக்கப்பட்டது என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டும் உண்மையில்லை என்றாகிறது.

ராமர் கோயில் இடிக்கப்படவில்லை என்றால், பாபர் மசூதி இடிக்கப்பட்டது குற்றம்தானே. ஒரு சமூகத்தின் வழிபாட்டுத் தலம், நீண்டகாலமாக வழிபாட்டுத் தலமாக இருந்த இடம், ஏறத்தாழ 400 ஆண்டுகால பழமை வாய்ந்த வரலாற்று சின்னத்தை இடித்தது குற்றம். அந்த வழக்கு தனியே நடக்கிறது. ஆனால், அந்த இடத்தில் இஸ்லாமியர்களே தங்களுடைய கட்டுமானத்தை எழுப்பிக் கொள்ளட்டும் என்றுதான் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், உச்ச நீதிமன்றமோ, இஸ்லாமியர்கள் தரப்பில் போதிய ஆவணங்கள் காட்டப்படவில்லை என்று கூறியுள்ளது. என்ன ஆவணங்களை எதிர்பார்த்ததோ, அது நமக்குத் தெரியவில்லை.

அப்படியென்றால், இந்துக்கள் தரப்பில் என்ன ஆவணங்கள் தரப்பட்டது என்று பார்த்தால், அவர்களும் எந்த ஆதாரங்களும் தரவில்லை. ஆனால் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், ராமர் அங்கு பிறந்தார் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. 1045 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் கிட்டத்தட்ட 160 பக்கங்கள், ராமர் எங்கே பிறந்தார் என்று சொல்வதற்கான ஆதாரங்களாக, புராணங்கள், சாஸ்திரங்களில் இடம்பெற்ற விவரங்களை மேற்கோள்காட்டுகிறார்கள். அது மட்டுமே அவர்களுக்கு ஆதரமாகியிருக்கிறது.

எனவே அவற்றை வைத்து, அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம் என தீர்ப்பு எழுதுவது சட்டத்தின்படி தீர்ப்பு அளிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு நாம் விடை தேடும்போது, சாஸ்திரங்களின்படியே தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பதை உச்ச நீதிமன்றமே ஒப்புக் கொள்கிறது. இதைத்தான் நாங்கள் சொன்னோம்.

உள்நோக்கத்துடன் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்கவில்லை. சட்டத்தின்படி தீர்ப்பு அளித்தார்களா என்ற கேள்வி எழுகிறது. சாஸ்திரங்களின்படியும் பெரும்பான்மை சமூகமாக இருக்கிற இந்து மக்களின் நம்பிக்கையின்படியும் ராமர் அங்கே பிறந்தார் என கணக்கில் கொண்டு, அந்த இடம் இஸ்லாமியர்களுக்கு இல்லை என்று தீர்ப்பு எழுதப்படுகிறது.

2.77 ஏக்கர் நிலத்தை அரசாங்கமே கையகப்படுத்திக் கொண்டு அதை ஒரு பொது இடமாக பராமரித்திருக்கலாம். இஸ்லாமியர்களுக்கு வேறு இடத்தை கொடுத்து விட்டு, இந்துக்களுக்கும் இன்னொரு இடத்தை கொடுத்து விட்டிருந்தால், ஓரளவுக்கு இந்த விவகாரத்தில் நேர்மை இருந்திருக்கலாம் என நம்மால் புரிந்து கொண்டிருக்க முடியும். ஆனால், ராமர் அங்கே பிறக்கவில்லை என்ற பிறகு, ராமர் கோயில் கட்டவில்லை என்ற பிறகு, ராமர் அங்கே பிறந்தார் என்ற சாஸ்திர அடிப்படையில் அந்த இடத்தை மத்திய அரசுக்கு வழங்கியிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், அந்த இடத்தை ஒரு இந்து அமைப்புக்கு வழங்குகிறது தீர்ப்பு. அவர்கள் தரப்பில் எந்த ஆதாரமும் காட்டப்படவில்லை.

எனவே, இயல்பாகவே எழுந்த கேள்விகளைத்தான் நாங்கள் மக்கள் முன் வைத்தோம். இதில் உள்நோக்கமோ, அச்சப்படுத்தவோ விமர்சனத்தை நாங்கள் முன்வைக்கவில்லை. மனதில் தோன்றிய கருத்தை மக்கள் வெளியில் வைத்திருக்கிறோம்.

அயோத்தி விவகாரம்படத்தின் காப்புரிமை Getty Images

கேள்வி: அயோத்தி விவகாரத்தில் இதற்கு முன்பும் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது, உங்கள் கட்சி அப்போது இதேபோன்ற ஆழமான விமர்சனத்தை வைக்கவில்லையே?

பதில்: உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தபோதே, அதை ஏற்க முடியாது, உடன்பாடு இல்லாத ஒன்று என்று நாங்கள் கூறியிருந்தோம். ராம் லல்லா, நிர்மோகி அகோரா, சன்னி வக்பு வாரியம் ஆகியவற்றுக்கு சமமாக நிலத்தை பிரித்து தரும் தீர்ப்பு, நீதிமன்ற தீர்ப்பு போல தெரியவில்லை. அது ஒரு கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு போல உள்ளது என கூறியிருந்தோம்.

இதில் நியாயத்தின்பக்கம் நின்று நாங்கள் பேசுகிறோமே தவிர, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு சாதகமாக நாங்கள் பேசவில்லை. அந்தத் தேவையும் இல்லை. நிலத்தில் இஸ்லாமியர்களுக்கு உரிமை இல்லை என்றால், அவர்களுக்கு தனியே ஐந்து ஏக்கர் நிலத்தை தர வேண்டும் என தீர்ப்பு அளிக்க வேண்டும்.

நில மூலம் யாருக்கு என்பதுதானே வழக்கு. அவர்கள் தனியாக வேறு இடத்தில் நிலம் கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார்களா அல்லது அவர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்கக் கூடிய அளவுக்கு சக்தி இல்லாமல் இருக்கிறார்களா அல்லது தங்களுக்கு பொருளாதார வசதி இல்லாததால் நீங்களே பார்த்து வேறு இடத்தில் இடத்தை ஒதுக்கித் தாருங்கள் என்று யாரேனும் மனு போட்டிருந்தார்களா?

ஆக, சமரசம் செய்வதற்கான ஒரு முயற்சியாகவே தீர்ப்பு இருக்கிறது. உச்ச நீதிமன்றம்தான் குடிமக்களின் கடைசி பாதுகாப்பு அரண். அந்த உச்ச நீதிமன்றமே மக்களுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வைத் தரவில்லை, நேர்மைத்தரத்துடன் ஒரு தீர்ப்பை வழங்கவில்லை என்ற கவலை மேலோங்குகிறது. அதனால்தான் அந்த கருத்தை நாங்கள் முன்வைத்தோம்.

கேள்வி: சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றிருக்கிறார். அவரது தேர்தல் வெற்றி அங்கு வாழும் தமிழர் மத்தியிலும் தமிழர் பகுதிகளிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கருதுகிறீர்கள்?

பதில்: குற்றம் இழைத்தவர்களே இன்றைக்கு கோளோச்சும் நிலை ஏற்பட்டிருக்கிறது. யாரை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என்று நாம் கூறி வந்தோமோ, சர்வதேச புலனாய்வு விசாரணைக்கு யாரை உட்படுத்தி தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோமோ, அந்த குற்றம்சாட்டப்பட்ட நபர்களே, இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் அமரும் நிலை இலங்கையில் ஏற்பட்டிருப்பது மிகுந்த கவலையை அளிக்கிறது.

அவர்களால் தமிழர்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்கப்போவதில்லை. மிகுந்த அச்சத்துக்கு ஆளாகியிருக்கிறது ஈழத்தமிழ்ச் சமூகம். அதிபர் பதவிக்கு போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷவும் சரி, சஜித் பிரேமதாஸாவும் சரி-இருவருமே தமிழ் சமூகத்துக்கு எதிராக செயல்பட்டவர்கள். ஆகவே, இருவரில் ஒருவர் நல்லவர் என்று தேர்வு செய்யக்கூடிய சூழல் அங்கு நிலவவில்லை. இருந்தாலும், நேருக்கு நேராக தமிழ் சமூகத்தின் மீது கொடூர தாக்குதல் நடத்தி, அப்பாவி தமிழர்கள் உள்ளிட்ட மூன்றரை லட்சம் பேரை முள்ளிவாய்க்கால் நிலப்பரப்புக்குள் இனப்படுகொலையை ராஜபக்ஷ குடும்பம் செய்தது.

மகிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ என அவர்கள் அனைவருமே அப்பாவி மக்கள் கொல்லப்பட காரணமானவர்கள். இந்த நிலையில், சஜித் பிரேமதாஸா வெற்றி பெற்றால் கூட பரவாயில்லை. கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறக்கூடாது என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போய் விட்டது. தமிழ் சமூகம் அவர்களுக்கு எதிராக வாக்களித்தபோதும், பெரும்பான்மை சமூகமாக இலங்கையில் உள்ள சிங்களர்களும், பெளத்தர்களும் வாக்களித்ததன் விளைவால், இன்றைக்கு ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்தவர் அதிபராகியிருக்கிறார். இவர்கள் எப்படி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குவார்கள்? தமிழர்களின் நிலை என்னவாகும் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குரியாகியிருக்கிறது.

திருமாவளவன் சிறப்புப் பேட்டிபடத்தின் காப்புரிமை NAMAL RAJAPAKSA TWITTER

கேள்வி: மகிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ, இலங்கை உள்விவகாரங்களில் தமிழக தலைவர்கள் தலையிடக்கூடாது என்று கூறி கடுமையான விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறாரே, அது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: மகிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ, தனது வெற்றிக் களிப்பை ஆணவத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழகத் தலைவர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி போன்றோரே தங்களுடைய வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், தமிழ்நாட்டு தலைவர்கள் சந்தர்ப்பவாத மற்றும் ஆதாயம் தேடும் அரசியலை செய்து வருவதாக கூறி, தமது ஆத்திரத்தை கொட்டியிருக்கிறார். அதில் எனது பெயரையும் அவர் இணைத்திருக்கிறார்.

ஈழத் தமிழர்களை ஆதரித்து அரசியல் ஆதாயம் பெறும் நிலை, தமிழகத்தில் கிடையாது. ஈழத் தமிழர்கள் பிரச்னையை பேசினால், தமிழ்நாட்டு மக்கள் இடையே வாக்கு வங்கி திரண்டு விடும், ஆட்சிக்கு வந்து விடலாம் என்ற சூழ்நிலை இங்கு கிடையாது. அது எதிர்மறையாக அமைந்தாலும் அமையுமே தவிர, நேர்மறையாக சாதகமாக அமையாது என்பதுதான் யதார்த்தமான உண்மை. எனவே, நாமல் ராஜபக்ஷ சொல்வதைப் போல, இந்த பிரச்னையை நாங்கள் கையில் எடுக்கவில்லை.

சிறுபான்மை சமூகமாக இருக்கும் தமிழ் சமூகத்துக்கு இலங்கைத் தீவில் பாதுகாப்பு இல்லை. அவர்களின் கல்வி, சொத்துரிமை, வாழ்வுரிமைக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில், தனி நாடு போராட்டம் அங்கு அரை நூற்றாண்டுகளாக நடந்தது. அது ஏறத்தாழ அரை இருபத்து ஐந்து, முப்பது ஆண்டுகளாக ஆயுதம் ஏந்திய போராட்டமாக நடந்தது. ஆனாலும், தமிழ் சமூகத்துக்கு அவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில், ராஜபக்ஷ குடும்பம், மறுபடியும் ஆட்சிக்கு வந்திருப்பது, தமிழர்களுக்கு நீதி வழங்குவார்கள், மறுவாழ்வு அளிப்பார்கள், அவர்களின் நிலத்தை ஒப்படைப்பார்கள், ஆக்கிரமிப்பு செய்த கோயில்களை மறுபடியும் ஒப்படைப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதை நான் விமர்சித்து அறிக்கை விட்டதற்காக நாமல் ராஜபக்ஷவுக்கு ஆத்திரம்.

ஒருபடி மேலே போய், 2009-இல் இலங்கை சென்ற இந்திய நாடாளுமன்ற குழுவில் நான் இடம்பெற்ற நிகழ்வை நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டி, அப்போது வந்த திருமாவளவன், எங்களுடன் சினேகமாக இருந்து விட்டு இன்றைக்கு எங்களுக்கு எதிராக பேசுகிறார். இது சந்தர்ப்பவாத அரசியல். எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்றெல்லாம் அவர் கூறியிருக்கிறார். உண்மையில் 2009-இல் அப்போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ஷ சந்தித்தபோது, அங்கு என்ன நடந்தது என்று நினைவூட்ட வேண்டியது எனது கடமை.

மகிந்தவை நாங்கள் சந்தித்தபோது, அவர் அமர்ந்து பேசத் தொடங்கிய சில நிமிடங்களில், என்னை நேருக்கு நேராக விரல் நீட்டி சுட்டிக்காட்டி, இவரெல்லாம் எல்டிடிஈ கருத்துகளை மட்டும் கேட்டுக் கொண்டு எங்களுக்கு எதிராக அங்கே (இந்தியாவில்) போராட்டம் நடத்தக்கூடியவர். எங்கள் தரப்பு கருத்துகளை இதுவரை கேட்டதில்லை. நாங்கள் தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதை போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள் என நீண்ட நெடிய வியாக்யானத்தை அவர் தந்தார். அவரது செயல் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்திய நாடாளுமன்ற குழுவில் இருந்த 10 பேரில், என்னை அடையாளம் கண்டு நான் எல்டிடிஈக்கு ஆதரவானவர் என்று அவர் கொண்டிருந்த நிலையைக் கண்டேன்.

ஆகவே அது ஓர் சினேகமான உரையாடலாக இல்லை. எங்களிடம் இருந்து அவர் விடைபெறும்போது குழு புகைப்படம் எடுத்து முடித்தவுடன், ராஜபக்ஷ எனது கையை பற்றியபடி, அருகே இருந்த திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலுவிடம், இவர் யார் என்று தெரியுமா? பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவர். அடிக்கடி வந்து போனவர். யுத்தம் நடக்கும்போது இவர் வன்னியிலே இருந்திருந்தால், அவரது அண்ணனுடன் சேர்ந்து மேல் உலகம் போயிருப்பார் என்று நக்கல் ஆக பேசினார்.

அப்படியென்றால் மகிந்த ராஜபக்ஷ எந்த அளவுக்கு என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவராக இருந்திருப்பார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அந்த சூழலை சமாளிக்கும் வகையில் எல்லோரும் சிரித்தார்கள். நானும் புன்னகைத்தபடி அங்கிருந்து வெளியேறினேன். ஆகவே, நாமல் ராஜபக்ஷ சொன்னது போல, சினேகமான உரையாடல் எல்லாம் அப்போது நடக்கவில்லை. அவர்கள் கொடுத்த தேநீர், காபி போன்றவற்றை யாரும் அருந்தவும் இல்லை. அப்படியொரு ஆதங்கம், வலி இலங்கை சென்றிருந்த 10 பேருக்கும் இருந்தது என்பதுதான் உண்மை.

ஆனால், இன்றைக்கு அந்த நிகழ்வை நாமல் ராஜபக்ஷ சினேக உரையாடல் என்று கூறுகிறார். அந்த காலகட்டத்தில் அவர் என்ன வயதில் இருந்திருப்பார் என எனக்குத் தெரியாது. அந்த கலந்துரையாடல் ஒரு கசப்பான கலந்துரையாடலாகவும் வலியை வெளிப்படுத்தக் கூடிய ஒரு வாய்ப்பாகவும் இருந்தது. அந்த உணர்வு, எனக்கு மட்டுமல்ல, என்னுடன் வந்த அனைவருக்கும் இருந்தது என்பதுதான் உண்மை.

இந்த நிலையில், நாமல் ராஜபக்ஷ, தமிழ்நாட்டு தலைவர்களுக்கு அறிவுறுத்தும் வகையிலும் கண்டிக்கும் வகையிலும் பேசுவது வேடிக்கையாக உள்ளது. நீங்கள் ஆட்சிக்கு வந்துள்ள சூழலில், இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களையாவது கொல்லாமல் விட்டு விடுங்கள். அவர்களுக்கு உரிய பாதுகாப்பை அளியுங்கள். ராணுவத்தை திரும்பப்பெற்றுக் கொண்டு, தமிழர்களின் நிலங்களை மக்களிடமே ஒப்படையுங்கள். சிங்கள குடியேற்றத்தையும் சிங்கள மயமாதலையும் கைவிடுங்கள், இதுதான் நாமல் ராஜபக்ஷவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நாங்கள் விடுக்கும் கோரிக்கை.

கேள்வி: தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகள், இலங்கை விவகாரம் பற்றி பேசிய இதே நேரத்தில், கொழும்பு சென்று இலங்கை அதிபருக்கு நேரில் வாழ்த்து கூறிய இந்திய வெளியுறவு அமைச்சரின் செயலையும், இந்தியாவுக்கு வருமாறு புதிய அதிபருக்கு விடுத்த அழைப்பையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஒரு இணக்கமான உறவு, காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் சரி, பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்காலத்திலும் சரி, தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. காங்கிரஸ் மட்டுமே தமிழ் இனத்தின் பகை போன்ற தோற்றமும், பாரதிய ஜனதா கட்சி நமக்கு ஏதோ சாதகமாக நடக்கும், தமிழ் ஈழம் மலரும் என்பது போன்ற தோற்றமும் இளம் தலைமுறை இடையே உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால், எனது பார்வையில் தொடக்கம் முதல் வலியுறுத்தும் கருத்தை கூறுகிறேன்.

இதில் காங்கிரஸ் அரசா, பாரதிய ஜனதா அரசா என்பது அல்ல கேள்வி. இந்திய அரசா, இலங்கை அரசா என்பதுதான் கேள்வி. ஆகவே, இந்திய அரசை பொருத்தவரை, இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் சிங்கள அரசுக்கு ஆதரவான நிலையைத்தான் எடுப்பார்கள். அதுதான் இன்றைக்கும் நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோதி, இலங்கை புதிய அதிபருக்கு வாழ்த்து கூறியது மட்டுமின்றி நமது உறவை பாதுகாப்புடன் வைத்திருப்போம் என்ற உறுதிமொழியையும் தந்திருக்கிறார்.

எனவே இவர்கள், இந்தியா வருமாறு புதிய அதிபருக்கு விடுக்கப்படும் அழைப்பு, அவர்களுக்கு உரிய மரியாதையை செய்ய விரும்புவது போன்றவை எல்லாம் அதிர்ச்சியை தரவில்லை. அது எதிர்பார்த்த ஒன்றுதான்.

கேள்வி: திமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீங்கள் நேரில் சந்தித்துப் பேசியிருப்பது, கூட்டணியில் மட்டுமின்றி அரசியலிலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறதே...

பதில்: முதல் அமைச்சர் அனைவருக்கும் பொதுவானவர். வாக்களித்தவர்களுக்கும் சரி, அவரது கட்சிக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கும் சரி, அவரே முதல்வர். அந்த அடிப்படையில்தான் அவரை சந்தித்து சில கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தேன். திமுக கூட, ஏதாவது மாநிலம் சார்ந்த கோரிக்கையை வைக்க வேண்டுமானால், முதல்வரை சந்தித்து வழங்குவதை நாம் பார்க்கிறோம். நிவாரண நிதி வழங்கும்போது கூட முதல்வரைதான் அந்த கட்சியினர் சந்தித்து வழங்குகிறார்கள். முதலமைச்சரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். அவர் பொதுவானவர்.

ஆனால், தமிழ்நாட்டில் ஒரு மரபு உருவாகியிருக்கிறது. திமுக கூட்டணியில் இருப்பவர்கள், அதிமுக கூட்டணியினரோடு பேசக்கூடாது. அதுபோல அதிமுக கூட்டணியில் இருப்பவர்கள் திமுக கூட்டணியில் இருப்பவர்களோடு பேசக்கூடாது, பழகக்கூடாது என்று வழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்கள். அந்த மரபை திருமாவளவன் உடைத்து வருகிறான்.

நான் திமுக கூட்டணியில்தான் இருக்கிறேன். இருப்பேன். ஆனாலும், அதிமுக, பாஜக போன்ற கட்சிகளை சார்ந்த தலைவர்களை நான் சந்திப்பதில் தயக்கம் காட்டியதில்லை. அவர்களுடன் ஆன நட்பு பாதிக்கப்படாத வகையில், அரசியல் விமர்சனங்களைக் கடந்து உறவாடுகிறேன். ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், அப்போது திமுக கூட்டணியில் இருந்தாலும் கூட, முதல் நபராக அவரை நான் சந்திக்கச் சென்றேன். ஆகவே, ஒரு கூட்டணியில் இருந்தால் மற்ற கூட்டணியில் உள்ளவர்களுடன் பேசவே கூடாது என்றோ, அப்படி பேசினால், அணி மாறி விடுவேன் என்றோ நினைப்பது தவறான மதிப்பீடு.

முதலமைச்சரை சந்தித்து விட்டதால், அணி மாறுவேன் என எதிர்பார்ப்பு ஏற்படுவது, அவதூறு பரப்புவது, தமிழகத்தை பொருத்தவரை வாடிக்கையாகி விட்டது. அதை நான் பொருட்படுத்தவில்லை. நான் திமுக கூட்டணியில் எந்த அளவுக்கு உறுதிப்பாட்டுடன் இருக்கிறேன் என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கே நன்றாக தெரியும். நான் அவரது கூட்டணிக்கு வந்து விட வேண்டும் என என்னிடம் பேசும் அளவுக்கு அவரும் நெறி பிறழும் அரசியலில் ஈடுபடக் கூடியவர் கிடையாது. நாங்களும் அந்த நோக்கத்துடன் அவரை சந்திக்கவில்லை.

முதல்வர் என்ற முறையில், அவரது பார்வைக்கு சில விஷயங்களை எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. குறிப்பாக உள்ளாட்சி தேர்தலில் துணைத் தலைவர் பதவிகளில் இடஒதுக்கீடு தேவை என்று கோரினோம். கிட்டத்தட்ட மூன்றாயிரத்துக்கும் அதிகமான தலைவர் பதவி உண்டு என்றால், அதற்கு சமமான துணைத் தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு தேவை. அதில் ஒருவர் கூட தலித், பழங்குடியினர் வரமுடியாத நிலை இருப்பதால் அந்த கோரிக்கையை முதல்வரிடம் முன்வைத்தோம்.

இரண்டாவதாக, தலித், பழங்குடியின மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் எனப்படும் மத்திய அரசு வழங்கக் கூடிய கல்விக்கான ஊக்கத்தொகை திடீரென பாதிக்கு பாதியாக குறைத்து விட்டது. அதில் ஒரு பகுதி மட்டுமே தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழக அரசும் தலித், பழங்குடியினருக்கு வழங்கிய நிதியை நிறுத்தி விட்டது. மத்திய அரசு நிதியை நிறுத்தி விட்டாலும் பரவாயில்லை, தலித்துகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து நிதியைப் பெற்று நிதியை வழங்கினால், பள்ளிப்படிப்பை பொருளாதார வசதியில்லாத காரணத்தால் பாதியிலேயே நிறுத்தும் நிலை தவிர்க்கப்படும் என்பதை முதல்வரிடம் எடுத்துரைத்தோம்.

மற்றொரு விஷயமாக, சென்னை மாநகராட்சியை தனித்தொகுதி ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். சென்னை மாநகராட்சியில் வேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் யாரும் கிடையாது. ஆனாலும், அந்த கோரிக்கையை முன்வைக்க முக்கிய காரணம் உள்ளது. தொடக்கத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குரல் எழுந்தது முதலே அதை தனித் தொகுதியாக ஏன் அறிவிக்கவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த உள்ளாட்சி தேர்தலின்போதும் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு 2 இவரது @thirumaofficial

முடிவு டுவிட்டர் பதிவின் 2 இவரது @thirumaofficial

எனது பெயரிலேயே உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரியும், சென்னை மாநகராட்சியை தனித்தொகுயாக அறிவிக்க உத்தரவிடக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி உயர் நீதிமன்றம் அந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணையை முடித்து வைத்தது. ஆக, தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலே நடக்காது என்று கருதப்பட்ட நேரத்தில் தற்போது, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும், அது உறுதி என்று தெரிந்தவுடன்தான் தமிழக முதல்வரிடம் அந்த கோரிக்கையை வலியுறுத்தி கோரிக்கை வைத்தோம்.

அப்போது முதலமைச்சர், ஏற்கெனவே, தூத்துக்குடி, வேலூர் ஆகியவற்றை தனித்தொகுதி ஆக தேர்வு செய்து விட்டோம். தூத்துக்குடி தாழ்த்தப்பட்டோருக்கான தனித்தொகுதி என்றும், வேலூர், தாழ்த்தப்பட்டோருக்கான பெண்கள் தொகுதி ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் விளக்கம் கொடுத்தார். இதுதான் எதேச்சையாக நடந்தது.

ஆனால், திமுக அந்த தொகுதியில் வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை எப்படியாவது தடுக்கும் நோக்குடன் அந்த கோரிக்கையை நாங்கள் வைக்கவில்லை. ஒருவேளை அந்த கோரிக்கையை வைத்த நிலையில், தமிழக அரசு சென்னையை தனித்தொகுதியாக அறிவித்தால் கூட, திமுகதான் அந்த தொகுதியில் வேட்பாளரை நிறுத்தப்போகிறது.

அதை நாங்கள் ஆதரிக்கத்தான் கடமைப்பட்டிருக்கிறோம். எனவே, விடுதலை சிறுத்தைகள், கையில் ஒரு வேட்பாளரை வைத்துக் கொண்டு இந்த கோரிக்கையை வற்புறுத்தவில்லை. இது வழக்கம் போல தமிழ்நாட்டில் நிலவும் ஒரு ஊகம்தான். எப்போதும் போல விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக கூட்டணியிலேயே இடம்பெற்றிக்கும். உள்ளாட்சி தேர்தலிலும் அது தொடரும். அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தல்வரையிலும் கூட நாங்கள் இணக்கமாகவே பயணம் செய்வோம்.

https://www.bbc.com/tamil/india-50494028

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.