Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரந்தன் – ஆனையிறவு ஊடறுப்புச் சமர்: ஒரு வரலாற்றுத் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரந்தன் – ஆனையிறவு ஊடறுப்புச் சமர்: ஒரு வரலாற்றுத் தாக்குதல்

On Feb 1, 2020

panai-palmyrah-kaithady_1080-copy.jpgஅது 1996 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. அவ்வருடத்தின் யூலை மாதத்தில் ‘ஓயாத அலைகள்’ என்ற பெயரில் புலிகள் நடத்திய தாக்குதலில் முல்லைத்தீவுப் படைத்தளம் முற்றாகக் கைப்பற்றப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட ‘சத்ஜெய -1’ என்ற நடவடிக்கை மூலம் பரந்தனும், ‘சத்ஜெய -2,3’ நடவடிக்கைகள் மூலம் கிளிநொச்சியும் சிறிலங்கா அரச படைத்தரப்பால் கைப்பற்றப்பட்டிருந்தன. இந்நிலையில் புலிகள் தமது அடுத்த பாய்ச்சலுக்குத் தயாரானார்கள்.

ஆனையிறவை மையமாகக் கொண்ட இராணுவப் படைத்தளம் இப்போது வன்னிக்குள் தனது மூக்கை நுழைத்திருந்தது. சத்ஜெய மூலம் கைப்பற்றப்பட்ட பரந்தன், கிளிநொச்சி என்பவற்றையும் இணைத்து அது மிகப்பெரிய வல்லமையுடன் கம்பீரமாக நின்றிருந்தது. அந்தக் கம்பீரத்தின் அச்சாணியை நொருக்குவதென புலிகள் முடிவெடுத்தார்கள். ஓயாத அலைகள் -1 இல் தொடங்கி இடையறாமல் கடும் சமர் புரிந்திருந்த நிலையிற்கூட புலிகள் அசந்து போகவில்லை. கிளிநொச்சியைப் படையினர் கைப்பற்றிய சிலநாட்களிலேயே தமது அடுத்த அடிக்கான வேலைத்திட்டத்தில் புலிகள் முழு மூச்சாக இறங்கிவிட்டார்கள்.

கண்டிவீதியை மையமாக வைத்து ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி வரை சிறிலங்காப் படைகள் நிலைகொண்டிருந்தன. இந்நிலையில் கிளிநொச்சி அப்படியே இருக்கத்தக்கதாக பரந்தனையும் ஆனையிறவையும் ஊடறுத்துத் தாக்கியழிக்க புலிகள் திட்டம் தீட்டினர். இவை சரிவந்தால் கிளிநொச்சிப் படைத்தளம் நாட்டின் ஏனைய பகுதிகளுடன் நிலவழித் தொடர்புகளற்ற தனித்த படைத்தளமாகிவிடும்.

1996 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி இந்த ‘ஆனையிறவு – பரந்தன்’ கூட்டுப்படைத்தளம் மீதான ஊடுருவித் தாக்குதலுக்கான ஆயத்தங்களோடே கழிந்தது. சண்டையணிகள் பயிற்சியிலீடுபட்டிருந்தன. திட்டமிட்டதன்படி முதன்முறையே இந்தத் தாக்குதலைச் செய்ய முடியவில்லை. தாக்குதல் திட்டம் சிலதடவைகள் பிற்போடப்பட்டுக்கொண்டிருந்தன. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம். ஆனையிறவின் மையப்பகுதி மீது தாக்குதல் நடத்த வேண்டிய அணிகள் நீரேரியூடாகவும் சதுப்புநிலமூடாகவும் சிலவிடங்களில் வெட்டைகளூடாகவும் நகரவேண்டியிருந்தன. அணிகள் நகரமுடியாதளவுக்கு நீர்மட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் ஒருமுறை இத்திட்டம் பிற்போடப்பட்டது; வேறொரு காரணத்தால் இன்னொரு முறை இத்திட்டம் பிற்போடப்பட்டது. இறுதியில் தாக்குதல் நிகழ்த்தப்படாமலேயே 1996 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.

இந்நேரத்தில் எதிரியும் பெரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஒன்றுக்காகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தான். முல்லைத்தீவுத் தளம் மீதான தாக்குதலும் அதைத் தொடர்ந்து அலம்பிலில் தரையிறங்கிய இராணுவத்துடனான சமரும் ஒருபக்கம். அதன்பின்னர் சூட்டோடு சூடாக சத்ஜெய 1, 2, 3 என்று பெயரிடப்பட்டு நடத்தப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரின் நடவடிக்கையை எதிர்த்து ஒரு மாதத்துக்கும் மேலாக புலிகள் மறிப்புச் சமரை நடத்தியிருந்தமை இன்னொரு பக்கம். இவற்றுக்கெல்லாம் முன்பு யாழ்ப்பாணத்தைக் கைவிடும்போது நடந்த தொடர் சமர்கள் என்று ஒருவருட காலப்பகுதி மிக உக்கிரமான சண்டைக்காலமாக இருந்தமையால் புலிகள் இயக்கம் தனது ஆட்பலத்தைப் பொறுத்தவரை பலவீனமடைந்திருக்கும் என்ற கணிப்பு சிறிலங்கா இராணுவத் தரப்புக்கு இருந்தது. முல்லைத்தீவை இழந்தாலும் கிளிநொச்சியைக் கைப்பற்றினோம் என்றளவில் இராணுவத்தினரின் மனோதிடம் அதிகரித்திருந்தது. அதே சூட்டோடு அடுத்த நடவடிக்கையையும் செய்து வெற்றியைப் பெற்றுக்கொள்வது இலகுவென இராணுவம் கணித்தது.

அத்தோடு புலிகள் தம்மைத் தயார்ப்படுத்தும் கால அவகாசத்தைக் கொடுக்கக் கூடாதென்பதும் ஒரு முக்கிய காரணமாக அமைந்திருந்தது. இவற்றின் அடிப்படையில் ஆனையிறவை முதன்மைப் பின்தளமாகக் கொண்டு ஒரு பெரும் நடவடிக்கைக்கான அயத்தப்பணிகளில் சிறிலங்காப் படைத்தரப்பு ஈடுபட்டிருந்தது. சிறப்பணிகள் களமுனைகளில் குவிக்கப்பட்டு, ஆயுத தளபாடங்கள் பொருத்தப்பட்டு, கிட்டத்தட்ட நடவடிக்கைக்கான முன்னேற்பாடுகள் நிறைவடையும் நிலையில் இருந்தன. ஆனையிறவை மையமாகக் கொண்ட ஆட்லறித் தளம் மேலதிக பீரங்கிகளைக் கொண்டு மெருகூட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில்தான் புலிகளும் தமது பாய்ச்சலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் புலிப்படை முந்திக்கொண்டது. ஓரிரு தடவைகள் பிற்போடப்பட்ட அந்நடவடிக்கையைச் செய்ய இறுதியில் எல்லாம் கைகூடி அந்த நாளும் வந்தது. 1997 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் நாள்.

ஆனையிறவின் மையப்பகுதிகளைக் கைப்பற்றியழிப்பதும் ஆயுத தளபாடங்களைக் கைப்பற்றுவதும் ஒருபக்கம் இருக்க, பரந்தன் சந்தியை மையமாகக் கொண்டு, இரசாயணத் தொழிற்சாலை உள்ளடங்கலாக அமைக்கப்பட்டிருந்த பரந்தன் படைத்தளத்தைக் கைப்பற்றுவதும் – அதன்வழியே கிளிநொச்சி இராணுவத்தினருக்கான நேரடித் தரைத்தொடர்பைத் துண்டிப்பதும் அடிப்படைத் திட்டங்களாக இருந்தன. எல்லாம் திட்டமிட்டபடி சரிவந்தால் களநிலைமைகளைக் கருத்திற்கொண்டு தொடர் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டிருந்தன. எங்காவது பிசகினாலோ இழப்புக்கள் அதிகம் வர நேர்ந்தாலோ நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதென்பதும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஏனென்றால் இழப்புக்கள் அதிகமான நீண்ட தொடர் சமர்களைச் செய்ய இயக்கம் விரும்பவில்லை.

ஜனவரி எட்டாம் நாள் இருட்டத் தொடங்கியதும் தாக்குதலணிகள் நகரத் தொடங்கின. ஆனையிறவின் மையப்பகுதிக்குச் செல்லும் அணிகள் நீண்டதூரம் நீருக்குள்ளாலும் வெட்டைக்குள்ளாலும் நகர வேண்டும். மிகவும் சிக்கலான அதேநேரம் ஆபத்து அதிகமான நகர்வு அது. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியே ஆனையிறவின் மையத்துக்குச் சென்று ஆட்லறிகளைக் கைப்பற்றும் பணியில் ஈடுபட்டிருந்தது. எதுவித சிக்கலுமின்றி அணிகள் நகர்ந்து தமக்கான நிலைகளைச் சென்றடைந்தன. ஒன்பதாம் நாள் அதிகாலையில் திட்டமிட்டபடி சண்டை தொடங்கியது.

எதிரி திகைத்துத்தான் போனான். தனது ஆட்லறிகளைத் தகர்த்துவிட்டுப் பின்வாங்குவதற்கான அவகாசம் எதிரிக்குக் கொடுக்கக்கூடாதென்பதில் புலிகள் மிகக் கவனமாக இருந்தனர். முல்லைத்தீவில் புலிகள் ஆட்லறிகளைக் கைப்பற்றியபின்னர், கைவிடப்படும் நிலைவந்தால் தமது ஆட்லறிகளைத் தகர்த்துவிடும் ஏற்பாடுகளை இராணுவம் அறிவுறுத்தியிருந்தது. மிகவும் உச்சக்கட்டத் திகைப்புத் தாக்குதலோடு வேகமான நகர்வுகளை மேற்கொண்டு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ஆட்லறித் தளத்தைக் கைப்பற்றியது. எந்தச் சேதமுமின்றி ஒன்பது ஆட்லறிகள் கைப்பற்றப்பட்டன. திட்டமிட்டதன்படி கைப்பற்றப்பட்ட ஆட்லறிகளைக் கொண்டு எதிரிநிலைகள் மீது புலிகள் அங்கிருந்தே எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இந்நிலையில் ஏனைய களமுனைகள் சிலவற்றில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. குறிப்பாக பரந்தன் படைத்தளத்தின் மீதான தாக்குதல் முழு வெற்றியளிக்கவில்லை. கைப்பற்றப்பட்ட ஆட்லறிகளை தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குக் கொண்டு வரவேண்டுமானால் பரந்தன் படைத்தளம் கைப்பற்றப்பட வேண்டும். அப்போதுதான் அவ்வழியால் முரசுமோட்டைப் பகுதிக்கு அவற்றைக் கொண்டுவர முடியும்.

பரந்தன் படைத்தளம் மிகமிகப் பலமாகவிருந்தது. தனது நடவடிக்கைக்கென மேலதிக சிறப்புப் படைகளைக் குவித்திருந்தான் எதிரி. அதைவிட அதிகரித்த ஆயுதப் பலத்தோடும் எதிரியிருந்தான். ஆட்லறிகள் பறிபோன பின்னர் பரந்தனை விடுவதில்லையென்பதில் மிகமிக மூர்க்கமாக இருந்தான். ஏனென்றால் பரந்தன் கைவிடப்பட்டால் அவ்வளவு ஆட்லறிகளும் புலிகளின் கைகளுக்கு நிரந்தரமாகப் போய்விடுமென்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. எனவே எத்தகைய இழப்புக்கள் வந்தாலும் பரந்தன் படைத்தளத்தைக் கைவிடுவதில்லையென்பதில் எதிரி பிடிவாதமாக இருந்தான்.

விடியும்வரை சமாளித்தாற் போதும் என்ற நிலையில் இராணுவமும், விடிவதற்குள் தளத்தைக் கைப்பற்றி ஆட்லறிகளைக் கொண்டுவந்துவிட வேண்டுமென்று புலிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு சமரிட்டனர். விடிந்துவிட்டால் எதிரியின் விமானப்படை புலிகளுக்குப் பெரிய சவாலாகிவிடும். பின்னர் இருந்ததைப் போன்று அந்நேரத்தில் விமான எதிர்ப்புப் படையணி கனரக ஆயுதங்களைக் கொண்டு பலமாக இருக்கவில்லை. பகல்நேரச் சண்டைகளில் – குறிப்பாக வெட்டைச் சண்டைகளில் MI-24 தாக்குதல் வானூர்தி மிகப்பெரிய சவாலாக இருந்தது. எதிரியின் பகுதிக்குள் நீண்டதூரம் உள்நுழைந்து ஆட்லறிகளைக் கைப்பற்றியபடியிருக்கும் அணிகள் அதிக ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். பரந்தன் படைத்தளம் வீழ்த்தப்படாதவரை ஆனையிறவிற்குள் நிற்கும் புலிகள் பொறிக்குள் அகப்பட்ட நிலைதான் இருக்கும்.

புலிகள் எவ்வளவு முயன்றும் பரந்தன் படைத்தளம் வீழ்த்தப்படவில்லை. பொதுவான சண்டைகளில் இப்படிச் சிக்கல் வந்தால் அடுத்தநாள் இரவோ, மூன்றாம்நாளோ கூட மீள ஒரு திட்டத்தோடு போய் முகாம் கைப்பற்றப்படும். கொக்காவில், மாங்குளம் உட்பட அப்படியான பல வரலாறுகள் ஏற்கனவே உண்டு. ஆனால் ஓர் இரவிலேயே வெற்றியா பின்வாங்குவதா என்பது தீர்மானிக்கப்பட வேண்டிய நிலையில் பரந்தன் படைத்தளத்தின் மீதான தாக்குதல் அமைந்திருந்தது.

விடிவதற்குள் பரந்தன் படைத்தளம் கைப்பற்றப்பட முடியாதென்பது விளங்கிவிட்டது. இந்நிலையில் கைப்பற்றிய ஆட்லறிகளைக் கொண்டு எதிரிமீது எறிகணைத்தாக்குதல் நடத்தியபடியிருந்த அணிகளுக்குக் கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி அனைத்து ஆட்லறிகளையும் ஆயுதக் களஞ்சியத்தையும் தகர்த்து அழித்துவிட்டு அவ்வணிகள் பின்வாங்கின.

கைக்கெட்டியது வாய்க்கெட்டாத கணக்காக கையிற் கிடைத்த அந்த ஒன்பது ஆட்லறிகளும் அவற்றுக்கான எறிகணைகளும் அழிக்கப்பட்டன. பெரும் திகைப்புத் தாக்குதலொன்றை நடத்தி எதிரிக்குப் பலத்த ஆள், ஆயுத இழப்புக்களை ஏற்படுத்திவிட்டுப் புலிகள் பின்வாங்கிக் கொண்டார்கள்.

பெரும் வெற்றியொன்று கைநழுவிப் போனது தானென்றாலும் இயக்கமும் ஈழவிடுதலைப் போராட்டமும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுத்தது அத்தாக்குதல்தான். பெருமெடுப்பிலான ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைக்குத் திட்டமிட்டிருந்த எதிரிக்குக் கொடுக்கப்பட்ட அந்த அதிர்ச்சி வைத்தியம் சிலமாதங்களுக்குத் தமது நடவடிக்கைகளைப் பிற்போடவேண்டி சூழ்நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியது.

இயக்கம் ஆட்லறியைக் குறிவைத்து அடித்த அடுத்த அடி சரியாகவே விழுந்ததோடு ஓர் ஆட்லறியையும் பெற்றுத் தந்தது. அது தென்தமிழீழத்தில் புளுகுணாவ இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல். அதன்பின் தாண்டிக்குளச் சமரிலும் ஆட்லறிகள் குறிவைக்கப்பட்டன; ஆனால் கிடைக்கவில்லை. அதன்பின் அதேயாண்டு ஓகஸ்ட் முதலாம் நாள் ஓமந்தைப்படைத்தளம் மீதான தாக்குதலிலும் ஆட்லறிகள் மீது கண்வைக்கப்பட்டது; ஆனால் கிடைக்கவில்லை (ஈழத்து எழுச்சிப் பாடகன் மேஜர் சிட்டு இச்சண்டையில்தான் வீரச்சாவடைந்தார்).

இனிமேல் எதிரியிடமிருந்து ஆட்லறிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாதென்று இயக்கம் தானே அவற்றைத் தேடிக்கொண்டது. ஏற்கனவே பல ஆயுதங்களை எதிரிக்கு அறிமுகப்படுத்தியது போல் பல்குழல் பீரங்கியை சிறிலங்கா இராணுவத்துக்கு அறிமுகப்படுத்தியதும் புலிகள் இயக்கம்தான். பின்வந்த காலத்தில் 2000 ஆம் ஆண்டு ஆனையிறவு கைப்பற்றப்பட்டபோதுதான் இயக்கம் எதிரியிடருந்து ஐந்து ஆட்லறிகளைக் கைப்பற்றியது. ஆனால் அதற்கு முன்பே இயக்கம் இரட்டை இலக்கத்தில் ஆட்லறிப் பீரங்கிகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்தது.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
 

https://www.thaarakam.com/news/111525

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி பதிவுக்கு நன்றி.  

இக்கட்டுரையாளருக்கும் என் நன்றிகள். இக்கட்டுரையாளர் போன்ற இளம் ஆய்வாளர்களோடு சேர்ந்து எமது எதிர்கால சந்ததிக்காக போராட்டத்தின்  இராணுவ வரலாற்றை நேர்மையுடன் பதிவு செய்யும் அவா மேலெழுகிறது. நாம் அறிந்த சம்பந்தப்பட்ட பகுதிகள் பதிவு செய்யபடாமல் அழிந்து கொண்டிருப்பது கொடுமையாகும். இத்தகைய முயற்ச்சிகளில் பங்குபற்றி செயல்பட உதவுவது   தொடர்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் முடிவுவு எடுக்க வேண்டும்.

1995 க்கும் 2000 க்கும் இடையிலான காலக்கட்டத்தில் ஒரு இராணுவ புவியியல் ஆய்வு மாணவனாக  விடுதலைப்புலிகளின் இராணுவ நகர்வுகளில் அதிக ஆர்வம் காட்டினேன். பதிலுக்கு இயக்கம் என் விமர்சிக்கும் உரிமையை அங்கீகரித்தது.  குறிப்பாக, 1987 களில் இருந்தே நேரடியாகவும் பகீரங்கமாகவும் அரசியல் மனித உரிமைகள் தொடர்பான விமர்சனங்களையும் நேரடியாகவும் இரகசியமாகவும்  இராணுவம் சம்பந்தபட்ட விமர்சனங்களையும் கருத்துக்களையும்  முன் வைத்து வந்திருக்கிறேன்.  ஆனால் 1995ல் இயக்கம் என் விமர்சன உரிமையை முழுமையாக ஏற்று அங்கீகரித்தது.

நமது இராணுவ அரசியல் வரலாறு முழுமையாக எழுதப்பட வேண்டும் என்கிற துயரத்தோடுதான் வாழ்கிறேன்.. எனக்கும்கூட அந்த வரலாற்றை பதிவு செய்யும் பொறுப்புள்ளது. ஆனால் பல தேசங்களில் சிதறியுள்ள போராளிகளையும் வளவாளர்களையும் சந்தித்து முழுமையான ஆய்வுகள் செய்ய அதற்காண பணி வலைப்பின்னலோ - நெட்வேக் - வளங்களோ இப்போது என்னிடம் இல்லை.

இறுதி யுத்தத்தின்பின் குறிப்பாக ஒரு தசாப்தத்தின் பின் இக்கட்டுரையை வாசிக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இக்கட்டுரை ஆசிரியர் போன்றவர்களோடு சேர்ந்து இராணுவ வரலாற்றை பதிவு செயும் வேலைகளில் ஈடுபட விருப்பம்.  

 

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.