Jump to content

வணிகங்களின் எழுதப்படாத முடிவுநிலை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணிகங்களின் எழுதப்படாத முடிவுநிலை?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 பெப்ரவரி 17

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையும் பொருளாதார நிலையும் வணிகங்களைக் கொண்டு நடத்த மிகப்பெரும் தடையாக அமைந்துள்ளன. அதிகரித்துச் செல்லும் பணவீக்கம், வரிகள், கடனுக்கான வட்டி வீதங்கள், உலகளாவிய ரீதியிலான மாற்றங்களென அனைத்துமே, உள்ளூர் வணிகம் முதல் சர்வதேச அளவில் வணிகத்தை மேற்கொள்ளும் அனைவருக்குமே மிகப்பெரும் சிக்கலாக அமைந்திருக்கிறது. ஒருசாரார், இவை அனைத்தையும் மீறி சமூகத்தில் நிலைத்து நிற்பதே வணிகமென்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு, போட்டித் தன்மைமிக்கதும், சவால்மிக்கதுமான வணிகச்சூழலில் வெற்றி பெறுகின்ற வணிகங்களை விரல்விட்டு எண்ணக்கூடியதாகவே இருக்கின்றது.  

ஆனால், பெரும்பாலான வணிகங்களின் தோல்விக்கு, இந்தப் புறக்காரணிகளுக்கு மேலாக, வணிகத்தின் உரிமையாளர்களே காரணமாக இருப்பதை யாரும் உணர்ந்து கொள்ளுவதில்லை.

மாறாக, வணிகங்களின் தோல்விக்குப் பொருளாதார சூழ்நிலை, வங்கிகளின் செயல்பாடுகளென முக்கியமற்ற காரணங்களை அடுக்கிக்கொண்டு, தங்களைச் சீர்தூக்கிப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள். விளைவு, மற்றுமொரு வணிகத்தை ஆரம்பிக்கும்போதும், இந்தப் பரிதாபநிலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 

சந்தையை முழுமையாக அறிய முற்படாமை

வணிகத்தை ஆரம்பிக்க விரும்புகின்ற எந்தவொரு வணிக முயற்சியாளருமே, தமது வணிகத் திட்டத்துக்கு வழங்கும் முன்னுரிமையில் பாதியளவைக் கூட, சந்தை ஆய்வுக்கு வழங்குவதில்லை. பெரும்பாலான வணிக முயற்சியாளர்கள், தாங்கள் மிகக் கஷ்டப்பட்டு உருவாக்கிய வணிக முயற்சியை, மக்கள் ஏற்றுக்கொள்ளுவார்கள் என்கிற ஆதீத நம்பிக்கையில், தமது வணிகத்தை மக்களிடம் அறிமுகம் செய்து தோற்று போய்விடுகிறார்கள். 

உண்மையில், மக்கள் வணிக முயற்சியாளர்கள் வழங்குகின்ற அனைத்தையுமே ஏற்றுக்கொள்ளுவதில்லை. மாறாக, அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கான தீர்வாகவுள்ள வணிகங்களை மாத்திரமே ஏற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்.

இதனால்தான், மிகப்பெரும் பிரபலமாக வெற்றியடைந்த வணிக முயற்சியாளர்கள் கூட, சந்தை ஆய்வின் மூலமாக மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்தார்கள்.  பின், அதற்கான தீர்வைச் சிந்தித்தார்கள்.  அதை வணிகமாக்குவதை, பிற்பாடாகப் பார்த்துக் கொள்ளலாம் எனச் சொல்கிறார்கள். 

தற்போதைய நிலையில், வணிகங்களை முன்னெடுக்கவும் அதனைக் கட்டியமைக்கவும் சந்தை ஆய்வுகளும் அதனைச் சார்ந்த தரவுகளும் மிக முக்கியமானதாக அமைகின்றன. ஆனாலும், இதன் முக்கியத்துவத்தைப் பெரும்பாலான வணிக உரிமையாளர்கள் இன்னமும் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்பதே வருத்தத்துக்குரியதாக இருக்கிறது. 

வணிகத்தில் தக்கணப் பிழைத்தலிலான ஈடுபாடு 

ஒரு வணிகத்தை ஆரம்பிக்கும் வணிகத்தின் உரிமையாளரிடம், அதற்கான ஈடுபாடு இல்லாமலா ? வணிகத்தை ஆரம்பிக்கிறார்கள் என நீங்கள் கேட்பது புரிகிறது.

ஆனாலும், வணிகத்தை ஆரம்பிக்கும்போது இருக்கின்ற ஈடுபாடு, அதைகட கொண்டு நடத்துவதில் தொடர்ச்சியாக இருக்கிறதா? என்பதே மிகப்பெரும் கேள்வியாக இருக்கிறது. பெரும்பாலான வணிக உரிமையாளர்கள், தமது வணிகத்தை ஆரம்பிக்கும்போது வழங்குகின்ற ஈடுபாட்டை, வணிகத்தில் ஏதேனும் தொய்வுநிலை ஏற்படுகின்றபோது, வழங்க முன்வருவதில்லை. அதேபோல, இலங்கை போன்ற போட்டித் தன்மைமிக்க நாடொன்றின் வணிக சூழலில், மேற்கத்திய நாடுகளிலும் பார்க்க அதீத ஈடுபாட்டை, வணிக உரிமையாளர்கள் வழங்க வேண்டியது அவசியமாகும். இதன்மூலமாகவே, வணிகத்தின் நீட்சியையும் அதுசார் வெற்றியையும் உறுதி செய்துகொள்ள முடியும். 

அதேபோல, வணிகங்களானவை இன்று ஆரம்பித்து நாளையே வெற்றியை வழங்குவதாக இருக்காது. அதற்கான காலமும், நேரமும் அமைய வேண்டும். எனவே, அந்தப் பொறுமை, வணிக உரிமையாளர்களிடம் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்தப் பொறுமையின்மை நிலையானது, வணிகத்தைப் பாதிப்பதாக அமையும்.  

நிதியியல் தொடர்பான அறிவுக் குறைபாடு 

 இலங்கையின் பெரும்பாலான வணிகங்களின் தோல்விக்கு, நிதியியல் திறன் தொடர்பான குறைபாடு, மிக முக்கியமானது. காரணம், இலங்கையில் மிகமோசமாக உள்ள திறன்களில், இந்த நிதியியல் திறனும் ஒன்றாகும்.

என்னதான், வணிகத்தைத் திட்டமிடும், கொண்டு நடத்தும் திறனை உரிமையாளர்கள் கொண்டிருந்தாலும், தமது முதலீடுகளை மிகத்திறமையாகக் கையாண்டு, அதனைச் சிறப்பாகக் கொண்டு நடத்துவதில் தடுமாற்றத்தைக் கொண்டிருக்கிறார்கள். இது நிதியியல் திறன் குறைப்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது.  

குறிப்பாக, வணிகமொன்றைக் கொண்டு நடத்த தொழிற்பாட்டு மூலதனமானது அவசியமாகும். இந்த மூலதனம்தான் வணிகத்தின் நாளாந்த செயற்பாடுகளுக்கு அடிப்படையானதாகும். வணிகத்தின் வெற்றிக்கு, இந்த மூலதனம் மிக இன்றியமையாததாகும். இந்த மூலதனம்தான், வணிகத்தினைக் கொண்டு நடத்தப் பெரிதும் உதவியாக அமையும்.

ஆனால், பெரும்பாலான வணிக உரிமையாளர்கள், தமது வணிகத்தின் செயற்பாடுகளுக்குத் தனியே இந்தத் தொழிற்பாட்டு மூலதனத்தைக் கொண்டிருப்பதில்லை. இதன்காரணமாக, வணிகங்கள் தொடர்ச்சியாகச் செயற்படுவதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகின்றன.

பெரும்பாலும், வணிக உரிமையாளர்கள் தமது இலாபத்தையே, தொழிற்பாட்டு மூலதனமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால், இலாபம் எப்போதும் பண வடிவில் நம்மிடத்தில் இருப்பதில்லை என்கிற உண்மையை உணராதவராக இருக்கிறார்கள். இதன் காரணமாக, பெரும்பாலான வணிகங்கள் தொடர்ச்சியாக, நடத்திச்செல்லப் போதுமான நிதியின்மை காரணமாக தோல்வியைச் சந்திக்கின்றன. 

இதேபோல, முயற்சியாண்மை குறைபாடும், ஒருவிதத்தில் வணிகங்களைப் பாதிக்கின்றது. குறிப்பாக, வணிகத் திட்டங்களைத் திட்டமிடுவதும், அதனை கொண்டு நடத்தும் வணிக முயற்சியாளர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தமது வணிகத்தை முதலீட்டாளர்கள் மத்தியில் சமர்ப்பிக்கும் திறன் மிகக் குறைவாக இருக்கின்றது. இதன் விளைவாக, தமது வணிகத்துக்குக் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த முதலீட்டு வாய்ப்புகளைக்கூடத் தவறவிட்டு, வணிகத் தோல்வியைச் சந்திக்க நேரிடுகிறது. 

முதலீட்டுப் பற்றாக்குறை 

இலங்கையின் தொழில் முயற்சிகளுக்கு உள்ள மிகப்பெரும் தடைக்கல்லாக, முதலீடுகள் அமைந்துள்ளன. முயற்சியாளர்கள் மக்களுக்குத் தேவையான வணிகத்தை முன்னெடுக்கத் தயாராகவுள்ள நிலையிலும், பொருத்தமான முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியாதநிலை இலங்கையில் காணப்படுகிறது. 

பெரும்பாலான முயற்சியாளர்கள் நிதியியல் ரீதியான இயலுமையைக் கொண்டிராத நிலையில், முதலீடு செய்ய வருகின்ற முதலீட்டாளர்களும் தமது முதலீட்டுக்கு அதிகமான வணிகப் பங்கினை (Business Share) எதிர்பார்க்கிறார்கள். இதனால், பெரும்பாலான வணிக உரிமையாளர்கள், தமது வணிக உரிமையை இழக்க விரும்பாது, கடன் முதலீடுகளை நோக்கி நகருகின்றார்கள். இதன்போது, சில வணிகங்கள் தம்மை நிலைநிறுத்திக்கொண்டு, கடன் பொறுப்புகளை மீளச்செலுத்தி, முன்னேறிக்கொண்டிருப்பதுடன், பல வணிகங்கள் தமது கடன் பொறுப்புகளை மீளச் செலுத்த முடியாமல், தமது வணிகங்களை மூடிக்கொண்டிருக்கும் நிலை ஏற்படுகிறது.

எனவே, இந்த முதலீட்டாளர்களுக்கும், வணிகங்களுக்கும் இடையில் உருவாகியுள்ள இடைவெளியைக் குறைத்து, இந்த முதலீட்டுக் குறைப்பாட்டை நிவர்த்திக்க வேண்டியது அவசியமாகிறது. 

இது தற்போதைய நிலையில், இலங்கையின் வணிகத்துறையில் வணிகங்கள் சந்திக்கும் மிகப்பிரதானமான தோல்விக்கான காரணங்களாக அமைந்துள்ளன. இவை தவிர்ந்து, வணிகத்தில் தாக்கத்தினை செலுத்தும் புறக்காரணிகளும் அதிகமாக இருக்கின்றன.

எனவே, வணிக முயற்சியாளர்கள் இவற்றைக் கருத்தில்கொண்டு, தமது வணிகங்களை முன்னெடுத்துச் செல்வதானது, வர்த்தக ரீதியில் தங்களை நிலைநிறுத்திடு, வணிகத்தினை வெற்றி நிலைக்குக் கொண்டுசெல்ல, உதவி புரிவதாக அமையும்.   
 

http://www.tamilmirror.lk/வணிக-ஆய்வுகளும்-அறிமுகங்களும்/வணிகங்களின்-எழுதப்படாத-முடிவுநிலை/145-245616

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.