Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறைவை நோக்கிச்செல்லும் ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும்

Featured Replies

பி.கே. பாலச்சந்திரன்
கொழும்பு, ( நியூஸ் இன் ஏசியா)

2020 ஏப்ரல் பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இலங்கையின் பழமை வாய்ந்த பிரதான கட்சிகள் இரண்டும் உண்மையில் மறைந்து போகக்கூடிய சாத்தியம் இருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சி 1946 ஆம் ஆண்டில் டொன் ஸ்டீபன் சேனாநாயக்காவினாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 1951 ஆம் ஆண்டில் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்காவினாலும் தாபிக்கப்பட்டவை.

இவற்றில் சுதந்திர கட்சி ஏற்கனவே பயனற்றதாகப் போய்விட்டது. 2019 நவம்பர் 16 ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்ற அமோக வெற்றியை அடுத்து சுதந்திரக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் தலைமையிலான புதிய பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு சென்று விட்டார்கள்.

அதைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன 2020 ஏப்ரல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது கட்சியை பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் ஒரு கனிஷ்ட பங்காளியாக இணைத்துக்கொண்டார். இன்று சிறிசேனவுக்கேனும் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை உறுதிப்படுத்த முடியாத அளவுக்கு சுதந்திரக்கட்சி பலவீனமானதாகப் போய்விட்டது.
பொதுஜன பெரமுன பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறும் பட்சத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தடமே இல்லாத அளவுக்கு துடைத்தெறியப்படும். ஏனென்றால், பொதுஜன பெரமுனவுடனான அதன் தற்போதைய கூட்டு தொடர்ந்து அது நிலைத்திருப்பதற்கான தேவையை இல்லாமல் செய்யும்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஐக்கியம் 2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் ஏற்கனவே குலைந்திருந்தது. அக்கட்சியின் ஒரு பிரிவிற்கு தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கரமசிங்கவும் இன்னொரு பிரிவிற்கு பிரதித்தலைவரான சஜித் பிரேமதாசவும் தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பிளவுபடும் தறுவாயில் அது இப்போது இருக்கிறது. விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்திற்கு எதிராக பிரேமதாச தலைமையில் கிளர்ச்சி செய்யும் இந்தப் பிரிவி-னர் தங்களை ஐக்கிய தேசிய கட்சியென்று அல்ல ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜனபலவேகய) என்று அழைக்கிறார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு பிரிவையும், வேறு சிறிய கட்சிகள் மற்றும் ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், மனோகணேசன் போன்றவர்களின் தலைமையிலான சிறுபான்மையின் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு கூட்டணியாகும்.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது ரணிலுக்கும் சஜித்திற்கும் இடையிலான தகராறு தேர்தல் சின்னம் தொடர்பானதாகத் தெரியும். ரணிலின் விசுவாசியான ரவி கருணாநாயக்க தனக்கு சொந்தமான அன்னம் சின்னத்தை ஐக்கிய மக்கள் சக்திக்குக் கொடுப்பதற்கு மறுத்ததையடுத்து, ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தை பயன்படுத்த சஜித் விரும்பினார். ஆனால், அவ்வாறு செய்ய ரணில் அனுமதிக்கப்போவதில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவினால் ஐக்கிய மக்கள் சக்திக்கு யானை சின்னம் வழங்கப்பட்டதாக சஜித் தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், அதை ரணில் அலட்சியம் செய்கிறார். ஐக்கிய மக்கள் சக்திக்கு யானை சின்னத்தைக் கொடுத்தால் அது ஐக்கிய தேசிய கட்சி போல் தென்படும் என்பது அவரது அபிப்பிராயம்.

சஜித்திற்கு ஐக்கிய தேசிய கட்சியை ரணில் தாரைவார்க்கப் போவதில்லை. சஜித்தைப் பொறுத்தவரை யானை சின்னத்iதைப் பெறுவது மிகவும் முக்கியமானது. ஏனென்றால், பல தசாப்தங்களாக ஐக்கிய தேசிய கட்சியின் சின்னமாக விளங்கி வரும் யானை வாக்காளர்களுக்கு மிகவும் பரிச்சயமானது.

ஐக்கிய தேசிய கட்சி ரணில் பிரிவு என்றும் (உத்தியோகபூர்வ பிரிவு), சஜித் பிரிவு என்றும் (கிளர்ச்சிப் பிரிவு) என்றும் பிளவு படுமானால் அந்தக் கட்சி ஒரு முக்கிய அரசியல் சக்தி என்ற நிலையை இழந்து விடும். ஏனென்றால், ஐக்கிய மக்கள் சக்தி வெறுமனே ஒரு தற்காலிக தேர்தல் கூட்டணியாக அல்லாமல் தனித்துவமான ஒரு கட்சியாக அல்லது நிரந்தரக் கூட்டணியாக மாறுவதை நோக்கமாகக் கொண்டு செயற்படுகிறது. இதை சஜித் ஐக்கிய மக்கள் சக்தியின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் வெளிப்படையாகக் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் இந்தப் பிளவுக்கு ஒரு தத்துவார்த்த பின்னணியும் இருக்கிறது. அதாவது, உத்தியோகபூர்வ ஐக்கிய தேசிய கட்சி வலதுசாரி கொள்கையுடன் மேற்குலகுக்கு சார்பானதாக இருக்கும் என்கின்ற அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சஜித் வெளிப்படையாக் கூறியதைப் போன்று இடதுசாரி மற்றும் தேசியவாத கொள்கைகளுடன் தெளிவான சிங்கள பௌத்த தன்மை கொண்டதாகவும் விளங்கும்.

 

கடந்தகால பிளவுகள்

ஐக்கிய தேசிய கட்சியும் சுதந்திர கட்சியும் கடந்த காலத்தில் பிளவுபட்டு இருக்கின்றன. ஆனால், அந்தப் பிளவுகள் எதுவுமே ஆரம்ப அமைப்புக்கள் மறைந்து போகும் அளவுக்கு ஆபத்தைத் தோற்றுவிப்பவையாக இருந்ததில்லை.

ஐக்கிய தேசிய கட்சியில் முதல் பிளவு 1951 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. அந்தக் கட்சியின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க பிரிந்து சென்று மத்திய வலது மற்றும் சிங்கள பௌத்த தேசிய வாத கொள்கை கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஆரம்பித்தார். கிராமப்புற சிங்கள பௌத்த பெரும்பான்மை சமூகத்தின் எதிர்பார்ப்புகளையும் அபிலாசைகளையும் பிரதிபலித்த சுதந்திரக்கட்சி 1956 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது.

1951 பிளவுக்குப் பிறகு ஐக்கிய தேசிய கட்சி 1990 வரை ஒரு ஐக்கியப்பட்ட கட்சியாக தொடர்ந்தும் நிலைத்தது. 1990 களின் ஆரம்பத்தில் அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுடன் ஒத்துப்போக இயலாத நிலையில் லலித் அத்துலத்முதலி மற்றும் காமினி சேனாநாயக்கா போன்ற கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் பிரிந்து சென்றனர்.

ஆனால், அவர்களால் அமைக்கப்பட்ட புதிய கட்சியான ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி லலித் அத்துலத்முதலியும் காமினி சேனாநாயக்காவும் விடுதலைப்புலிகளினால் கொலை செய்யப்பட்டதையடுத்து நிலைகுலைந்து போனது.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் அடுத்த பெரிய பிளவு 2007 ஆம் ஆண்டில் ஏற்பட்டது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியை பலப்படுத்துவதற்கென கூறிக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் 18 சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருடன் இணைந்தார்கள். ரணில் விக்கிரமசிங்க ஒரு மேற்கத்தைய பாணி சிந்தனையைக் கொண்டவராகவும் வெகுஜன கட்சியொன்றின் தலைவராக இருப்பதற்கு பொருத்தமற்றவரென்றும் பல இளம் தலைவர்கள் உணரத் தொடங்கிய போது மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் ஐக்கியம் பாதிக்கப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க சிங்கள பௌத்த கிராமிய மக்களுடன் நெருங்கிய தொடர்பு இல்லாதவரென்று அவர்கள் கூறினர். சஜித் பிரேமதாச கொழும்பு உயர் அரசியல் வர்க்கத்தை சாராதவர் என்பதுடன் சாதாரண மக்கள் மத்தியில் பெருமளவு செல்வாக்குக் கொண்டவரெனவும் கருதப்படுவதால் விக்கிரமசிங்கவிற்கு பதிலாக கட்சித் தலைமைக்கு அவர் பொருத்தமானவரெனவும் நோக்கப்பட்டார்.

2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் களமிறங்க வேண்டுமென்று அவரது பிரிவு விரும்பிய போதிலும் ரணில் அதை எதிர்த்தார். ஆனால், இறுதி நேரத்தில் அவர் அதற்கு இணங்கிக்கொண்டார். சஜித்திற்காக ரணில் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடவில்லை. ஜனாதிபதி தேர்தலில் சஜித் தோல்வியடைந்ததையடுத்து கட்சியின் தலைவராக சஜித் வர வேண்டுமென்ற கோரிக்கை மேலும் வலுப்பெற்றது. பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அந்த கோரிக்கை மேலும் தீவிரமடைந்தது.

 

சுதந்திரக்கட்சிக்குள் பிளவுகள்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவியாக இருந்த முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமையை 7 வருடங்களுக்கு ரத்து செய்த அன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசாங்கம் பாராளுமன்றத்திலிருந்தும் அவரை வெளியேற்றிய போது 1980 ஆம் ஆண்டில் சுதந்திரக்கட்சி மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்தது. திருமதி பண்டாரநாயக்கா அவர்கள் அரசியல் ரீதியில் முடக்கப்பட்ட நிலையில் சுதந்திரக்கட்சிக்குள் உள் முரண்பாடுகள் அதிகரித்தன.

திருமதி பண்டாரநாயக்காவின் மகள் சந்திரிகா குமாரதுங்க 1984 ஆம் ஆண்டில் கட்சியிலிருந்து வெளியேறி தனது கணவரான நடிகரும் அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்கவுடன் சேர்ந்து ஸ்ரீலங்கா மகாஜன கட்சியை ஆரம்பித்தார். ஆனால், அவர் 1993 ஆம் ஆண்டில் திரும்பவும் சுதந்திரக்கட்சிக்கு வந்து 1994 ஆகஸ்ட் பாராளுமன்ற தேர்தலிலும் நவம்பர் ஜனாதிபதி தேர்தலிலும் கட்சியை வெற்றி பெற வைத்தார்.

சுதந்திர கட்சிக்குள் அடுத்த பிளவு 2005 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தெரிவு தொடர்பில் ஏற்பட்டது. அன்று கட்சியின் தலைவராக இருந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது சகோதரர் அநுரா பண்டாரநாயக்காவே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டுமென்று விரும்பினார்.

ஆனால், ஏனைய பெரும்பாலான தலைவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கும் இடதுசாரிப் போக்கும் கொண்ட மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்தார்கள். அந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதையடுத்து சந்திரிக்கா கட்சிக்குள் முற்றுமுழுதாக ஓரங்கட்டப்பட்டார்.

மஹிந்த ராஜபக்ஷ இரு பதவி காலங்களுக்கு ஜனாதிபதியாக ஆட்சியில் இருந்தார். அவரது முதலாவது பதவி காலத்தின் இறுதியில் 2009 இல் போரில் விடுதலைப்புலிகளை தோற்கடித்த ராஜபக்ஷ 2010 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றார். ஆனால், அவரது இரண்டாவது பதவிக்காலம் ஊழல் மோசடிகளும் அடாவடித்தனமும் நிறைந்ததாக அமைந்தது. அந்த சூழ்நிலையை ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான எதிரணி முழுமையாகப் பயன்படுத்தி 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக்கட்சியின் பொது செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை கட்சி மாற வைத்து எதிரணியின் பொது வேட்பாளராக நிறுத்தியது.

சிறிசேன அந்த தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றதையடுத்து மஹிந்த ராஜபக்ஷ சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவத்தை அவருக்கு கையளித்தார். ஆனால், அந்தக் கட்சி சிறிசேன - மஹிந்த முரண்பாடுகளினால் பிளவுற்றிருந்த காரணத்தால் 2015 ஆகஸ்ட் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியே வெற்றி பெற்றது. மஹிந்த ராஜபக்ஷ பிரிந்து சென்று பொதுஜன பெரமுனவை அமைத்தார்.

சிறிசேன - ரணில் கூட்டரசாங்கத்தின் உற்சாகமற்ற செயற்பாடுகள் காரணமாக பொதுஜன பெரமுன 2018 பெப்ரவரி உள்ளுராட்சி தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றது. சிறிசேனவின் சுதந்திரக்கட்சி ஒரு தொலைதூர மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த தோல்வியை அடுத்து சுதந்திரக்கட்சியிலிருந்து அரசியல்வாதிகளும் ஆதரவாளர்களும் பொதுஜன பெரமுனவுக்கு படையெடுத்தார்கள். இது சுதந்திர கட்சிக்கு சாவுமணி அடிக்கிறது.

https://www.virakesari.lk/article/77090

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.