Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லாவற்றிலும் வல்லவர்களின் அரசியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றிலும் வல்லவர்களின் அரசியல்

என்.கே. அஷோக்பரன்   / 2020 ஜூன் 15

பெரும் இழுபறிகள், தேர்தல் தொடர்பான அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் மீதான, ஏறத்தாழ இரண்டு வாரங்கள் நீடித்த விசாரணை, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் தொடர்பான சர்ச்சைகள் என்பவற்றுக்குப் பிறகு, தேர்தல் ஆணைக்குழு 2020 நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி, புதன்கிழமை நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது.இந்தத் தேர்தலில், அங்கிகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் சார்பில் 3,652 பேரும் 313 சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 3,800 பேரும் என, மொத்தமாக 7,452 பேர், 196 ஆசனங்களுக்காகப் போட்டியிடுகிறார்கள். ஏறத்தாழ ஒரு நாடாளுமன்ற ஆசனத்துக்கு 38 பேர் போட்டியிடுகிறார்கள்.

பெரும்பான்மை இனத்தின் தேசிய அரசியலில், இந்தத் தேர்தல் ஒருவகையில் முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கையின் பழம்பெரும் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சி, இரண்டாகப் பிளவு பட்டுத் தேர்தலைச் சந்திக்கிறது. ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி தனியாகப் போட்டியிடும் நிலையில், ஐக்கிய தேசிய கட்சியிலும் அதன் தலைமையிலான கூட்டணியிலும் இருந்து பிரிந்த சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழு, 'சமகி ஜன பலவேகய' என்ற கட்சியின் கீழ், இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது.

இந்தப் பிரிவு, ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகளை இருகூறிட இருப்பது திண்ணம். பிளவுகள், ஐக்கிய தேசிய கட்சிக்குப் புதியதல்ல. 1952இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்து, ஆட்சியைக் கைப்பற்றினார்.

1990களில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய தூண்களாகக் கருதப்பட்ட லலித் அத்துலத்முதலியும் காமினி திஸாநாயக்கவும் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியை ஸ்தாபித்தார்கள். இந்தப் பாதையிலேயே, சஜித் பிரேமதாஸவின் பிரிவும் அமைகிறது.

சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசிய கட்சியைத் துவம்சம் செய்யும் வகையிலான வெற்றியைப் பெறுவாரா, அல்லது அரசியலில் அஸ்தமனத்தைச் சந்திப்பாரா என்பதற்குக் காலம் பதில் சொல்லும். மறுபுறத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் இந்தப் பிரிவு, ராஜபக்ஷக்களுக்குப் பெரும் வரமாக அமைந்துள்ளது. வரப்போகும் தேர்தலில், தாம் அமோக வெற்றியைப் பெறுவோம் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இந்தத் தேர்தலில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெல்லப்போவது திண்ணம்; ஆனால், அவர்கள் எத்தகையதொரு பெரும்பான்மையைப் பெறப்போகிறார்கள் என்பதுதான் இங்கு முக்கிய கேள்வி. ராஜபக்ஷக்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கும் பட்சத்தில், மீண்டும் சர்வ அதிகாரங்களும் கொண்ட அரசியல் சக்தியாக அவர்கள் ஆகிவிடுவார்கள்.

image_68db963a9e.jpg

பெரும்பான்மை இனத் தேசிய அரசியலின் நிலை இவ்வாறானதாக இருக்க, தமிழ்த் தேசியத்தின் நிலையும் பிளவுகளாலும் பிரிவுகளாலும் நீர்த்துப்போய் கிடக்கிறது. ஒரு காலத்தில், 'தமிழ்த் தேசிய கூட்டமைப்பு' என்ற பெயரால் ஒன்றித்து நின்றவர்கள் எல்லாம் இன்று, பிரிந்து தனித்தனிக் குழுக்களாகவும் தனிநபர்கள் தலைமையிலான சுயேட்சைக் குழுக்களாகவும் போட்டியிடுகிறார்கள்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்று, இன்று அறியப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆகியவை தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்று அறியப்படும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலானவர்கள் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்த ஈ.பி.ஆர்.எல்.எப்இன் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், அனந்தி சசிதரன், க. அருந்தவபாலன், க. சிவாஜலிங்கம், என். ஶ்ரீகாந்தா, முன்னாள் வடமாகாண சபை முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ. விக்னேஸ்லரன் ஆகியோர், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் மீன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

இதைத் தவிர, வீ. ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தனித்துப் போட்டியிடுகிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்த முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், ஏனைய எந்தக் கட்சியுடனும் சேராமல், தனித்த சுயேட்சைக் குழுவொன்றில் போட்டியிடுகிறார்.

'தமிழ்த் தேசிய கட்சிகள்' என்ற பதாகைக்குக் கீழே வரும் கட்சிகள், இவ்வாறு பிரிந்து நின்று தேர்தலைச் சந்திக்கிறது. மறுபுறத்தில், தேசியக் கட்சிகளும் தமிழர் பிரதேசத்தில் பிரிந்தே நிற்கிறது. ஐக்கிய தேசிய கட்சியினதும் சமகி ஜன பலவேயினதும் பிரிவு வௌிப்படையானது. ஆனால், ராஜபக்ஷக்களின் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது மொட்டுச் சின்னத்தில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடவில்லை. மாறாக, அதன் பங்காளிக் கட்சியான டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வீணைச் சின்னத்தில் போட்டியிடும் அதேவேளை, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, கைச் சின்னத்தில் போட்டியிடுகிறது.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் ஏழே ஏழு ஆசனங்களுக்காக, இத்தனை பேரும் போட்டியிடுகிறார்கள் என்பது, இங்கு கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய விடயம்.

image_567e4f7610.jpgஇலங்கைத் தமிழ் அரசியலில் மட்டுமல்ல, இன்றைய இலங்கையின் தேசிய அரசியலும் சந்தித்திருக்கிற பெரும் சவால், அரசியல்வாதிகளின் எண்ணிக்கை மிக அதிகளவில் அதிகரித்திருப்பது மட்டுமல்லாது, அவர்களின் அரசியலில் ஒரு கொள்கை அடிப்படையோ, ஒழுங்கோ, பண்பாடோ இல்லாது போயிருப்பதாகும்.

இதைவிட, மோசமான அரசியல் கலாசாரமானது, பணத்தைக் கொண்டு அரசியல் அதிகார பலத்தைக் கைப்பற்றிவிட முடியும் என்று எண்ணி, அரசியலில் குதிக்கும் போக்காகும். இது, அரசியலுக்குப் புதியதோ, புதுமையானதோ அல்ல. காலங்காலமாக இதுபோன்ற தரப்புகள் அரசியலில் இருந்தே வந்துள்ளன. ஆனால், அண்மைக் காலத்தில் இதுவே அரசியல் மய்ய ஓட்டமாக மாறியிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இது மட்டுமல்ல, கட்சிகள் கூட உள்ளூராட்சி அரசியல், மாகாண அரசியல், நாடாளுமன்ற அரசியல் என்ற பிரிவின்றி, எல்லோரும் எல்லாமும் என்ற அடிப்படையைப் பின்பற்றுகின்றனவோ என்ற எண்ணமும் உதயமாகிறது. இதில் என்ன பிரச்சினை என்று கேட்கலாம்? அரசுக் கட்டமைப்பில், உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபை, நாடாளுமன்றம் என்ற ஒவ்வொன்றினது நோக்கங்களும் வகிபாகமும் அதிகாரமும் வேறுபட்டது; அதற்கான அரசியலும் வேறுபட்டது. இந்த வேறுபாடுகள் புரியாததன் விளைவுதான், முதலாவது வடமாகாண சபை தனது செயற்பாடுகளில் பெருந்தோல்வியை அடைந்திருந்தது.

இன்று உள்ளூராட்சி மன்றங்களும் இதே பிரச்சினையை எதிர்நோக்கி இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் செய்ய வேண்டிய அரசியலை, உள்ளூராட்சி மன்றத்திலும், மாகாண சபையிலும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், அதனால் எந்தப் பயனுமில்லை. உள்ளூராட்சி மன்றங்கள் என்பவற்றின் ஊடாகச் செய்யக் கூடிய அரிய பணிகள் நிறைந்திருக்கின்றன. அதுபோலவே மாகாண சபைகளாலும் செய்யக் கூடிய அரிய பணிகள் நிறையவே இருக்கின்றன.

உள்ளூராட்சிக்கு உட்பட்ட வீதி அபிவிருத்திகள், வாழ்வாதார மேம்பாடுகள், அடிப்படைச் சுகாதார வசதிகள், வடிகால் கட்டமைப்புகள் எனப் பல்வேறு கடப்பாடுகள், உள்ளூராட்சி சபைகளுக்கு உரியவை. அதுபோலவே, மாகாண சபைகளின் கீழ், பெரும்பான்மையான பாடசாலைகள் வருகின்றன; ஆஸ்பத்திரிகள் வருகின்றன. அவற்றை மேம்படுத்துவதன் ஊடாக கல்வி, சுகாதார மேம்பாடுகளை மேற்கொள்ளத்தக்க அதிகாரங்கள் மாகாண சபையிடம் இருக்கிறது. ஆனால், தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில் எல்லா இடங்களிலும் நாடாளுமன்ற அரசியலைப் போலவே, அரசியல் நடாத்தப்படுகிறது.

image_d2521c544c.jpgஎல்லா மட்டத்திலும், தேசிய இனப்பிரச்சி னைக்கான தீர்வைப் பற்றி மட்டுமே பேசுகிறார்களே அன்றி, ஆட்சி செய்வதில் அக்கறை காட்டுவதில்லை. உண்மையில், எதிர்ப்பரசியல் என்பது இலகுவானது; ஆட்சி செய்வது கடினமானது. இதைக் குறிப்பிடுவதால், இலங்கை அரச இயந்திரம், வட மாகாண சபை இயங்குவதைத் தடுக்கும் முயற்சிகளை முன்னெடுத்து இருக்கவில்லை என்று குறிப்பிடுவதாகக் கொள்ளக் கூடாது. ஆளுநர் என்ற ரூபத்தில், ஒரு தடை இருந்து கொண்டே இருந்தது. ஆனால், அது இருந்தபோதும் கூட, செய்திருக்கக் கூடிய காரியங்கள் நிறையவே தொக்கி நின்றன என்பதுதான் உண்மை. வடமாகாண சபையும் சரி, தமிழர் பிரதேசங்களின் உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகளும் சரி, தமிழ் அரசியல்வாதிகளின் ஆட்சி செய்யும் அனுபவமின்மையை வெட்டவௌிச்சமிட்டுக் காட்டியிருக்கின்றன.

இந்த நிலை மாற வேண்டும். இதற்கான அடிப்படைகளைத் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளே முன்னெடுக்க வேண்டும். நாடாளுமன்ற அரசியலும் மாகாண சபை அரசியலும் உள்ளூராட்சி மன்ற அரசியலும் ஒன்றல்ல என்ற புரிதல், முதலில் தௌிவுற உணரவைக்கப்பட வேண்டும். அத்துடன், அவற்றுக்கு இடையேயான தௌிவான பிரிவு, உருவாக்கப்பட வேண்டும்.

தமிழ்த் தேசிய கட்சிகள், பலதசாப்தங்களாக ஆட்சியில் பங்காளிகளாக இருக்கவில்லை. அதுவே, அவர்களது ஆட்சி அனுபவமின்மைக்கு முக்கிய காரணமாகும். ஆகவே, ஆட்சிக் கலை பற்றி விளிப்புணர்வும் ஆற்றல்விருத்தியும் உள்ளூராட்சி, மாகாண சபை அரசியல்வாதிகள் இடையேயேனும் ஏற்படுத்தப்பட வேண்டும். இது செய்யப்படாத பட்சத்தில், ஒரே பெயர்களே மாகாண சபைக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஏன், மாநகரச பைக்கும் கூட போட்டியிடும் நிலை உருவாகும். இது ஆரோக்கியமானது அல்ல.

கருணாநிதியோ, எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ ஒருபோதும் இந்திய நாடாளுமன்றம் செல்ல எண்ணியதில்லை. தேசிய அரசியலுக்கும், மாநில அரசியலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. குஜராத் முதலமைச்சர் மோடியின் அரசியலும், இந்தியப் பிரதமர் மோடியின் அரசியலும் வேறு வேறானவை. அவர் தற்போது, நாடாளுமன்றம் சென்றது, குஜராத்திலுள்ள ஒரு தொகுதியிலிருந்து அல்ல; மாறாக, வாராணாசியிலிருந்து.

ஆனால், இலங்கையின் தமிழர் அரசியலைப் பொறுத்தவரையில், இங்கு பிரதேச சபையிலிருந்து, நகர சபை, மாநாகர சபை, மாகாண சபை, நாடாளுமன்றம் என ஒரே பாணியிலான அரசியல்தான் காணப்படுகின்றது. இது மாற வேண்டும்.

இன்று, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இதே பெயர்களில், வெற்றி பெற்ற ஏழு பேரைத் தவிர்த்து, ஏனையவர்களை நீங்கள் மாகாண சபைத் தேர்தலிலும் (அது நடந்தால்) காண்பீர்கள். இதில் சிலரை, நீங்கள் உள்ளூராட்சித் தேர்தலிலும் காண்பீர்கள். 'இதனை இதனான் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து, அதனை அவன்கண் விடல்' என்பார் வள்ளுவர். அதன்படி, தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள்.

ஒருவர், நல்ல மனுசன் என்பதற்காக மட்டும் வாக்களிக்காதீர்கள். ஒருவர் சுத்தமான தமிழ்த் தேசியவாதி என்பதற்காக மட்டும் வாக்களிக்காதீர்கள். அறிந்தவர், தெரிந்தவர் என்பதற்காக மட்டும் வாக்களிக்காதீர்கள். வீதி போட்டுத் தந்தார், தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தந்தார் என்பதற்காக மட்டும் வாக்களிக்காதீர்கள். இவர்தான், நாடாளுமன்றத்தில், எமது மாவட்ட மக்களின் குரலை ஒலிக்கச் செய்வார்; எமது அபிலாஷைகளை எடுத்துரைப்பார்; எமது விருப்புகளுக்கும் அபிலாஷைகளுக்கும் முரணாக எக்காரியத்தையும் செய்யமாட்டார். முழு அரசினதும் சட்டவாக்க இயந்திரமான நாடாளுமன்றத்தில் எமது மாவட்ட மக்களின் குரலாக, பிரதிநிதியாக இவரே இருக்க வேண்டும் என்று நீங்கள் யாரைக் கருதுகிறீர்களோ அவருக்கு வாக்களியுங்கள். ஏனென்றால், இது நாடாளுமன்றத் தேர்தல்.

வீதி போட்டுத் தந்தவர்; தண்ணீர் வசதி தந்தவர்; உள்ளூராட்சி மன்றத்துக்கு ஏற்புடையவர்; அவருடைய சேவை அங்கேதான் தேவை. ஆட்சிக் கலை தெரிந்த தமிழ்த் தேசியவாதி மாகாண சபைக்குத் தேவை. அரசியல் கட்சிகள் இவ்வாறு தெரிந்தெடுத்து, தேர்தலில் நியமனம் வழங்காத நிலையில், வாக்காளர்களாகிய மக்கள் இவ்வாறு தெரிந்தெடுத்து வாக்களிப்பதே உசிதமானது.
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/எல்லாவற்றிலும்-வல்லவர்களின்-அரசியல்/91-251907

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேலும் உங்களுக்கு அரசியல் தீர்வு பெற்று தருவேன் என்பவர்களுக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.