Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருக்கோணேஸ்வர ஆலயம் பற்றி 189 ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்க வர்த்தமானியில் வெளியானது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோணேஸ்வர ஆலயம் பற்றி 189 ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்க வர்த்தமானியில் வெளியானது என்ன?

inimulukamkones.jpg

26.11.1831 வர்த்தமானிப் பத்திரிகையில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம் 1968 இல் சுதந்திரனில் வெளியானது. அதன் மூல தலைப்பு என்ன என்கிற விபரம் அதில் இல்லை. ஆனால் எழுதியவர் யார் என்கிற விபரங்கள் தமிழில் உள்ளது. கட்டுரையின் இறுதியில் உள்ள பெயர்களும் (இன்டியோபைலஸ், கல்பென்ரின், சி. ரெய்மரா) தமிழ்படுத்தப்பட்டிருப்பதால், சரியான ஆங்கிலப் பெயர்களையும் அறிய முடியவில்லை, ஆங்கில மூல கட்டுரையையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
ஆனால் 1849 இல் சைமன் காசிச்செட்டி The Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society யில் எழுதிய கட்டுரையில் "An account of the King Kulakkotu Maharaja founding and endowing a temple in honor of Siva or Koneswara at Trinkomalie." என்கிற கட்டுரை மேற்படி வர்த்தமானியில் தன்னால் வெளியிடப்பட்டது என்கிற குறிப்புகளைக் காண முடிகிறது. 
தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் கருவிகளாக புத்தர் சிலைகளும், அரச மரங்களுக்கும், பௌத்த விகாரைகளும் தான் பேரினவாதிகளால் பயன்படுத்தப்பட்டு வந்தன. யுத்தத்தின் பின்னர் "தொல்பொருள்" பேரால் பாரிய அளவில் நேரடியாகவும், உத்தியோகபூர்வமாகவும் அரச அனுசரணையுடன் அவ்வாக்கிரமிப்புகள் பேரெடுப்பாக கிளம்பியுள்ளன. "கோணமலை கோவில்" அல்ல "கோகர்ண விகாரை" அது என்கிற உரிமை கொண்டாடல் அரை நூற்றாண்டுக்கும் மேலாக சொல்லி வருவது தான். ஆனால் இப்போது அம் முன்னெடுப்புகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. சுதந்திரனில் வெளியான இந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் முக்கியமானது. சுதந்திரனில் வெளிவந்த அந்த மொழிபெயர்ப்புக் கட்டுரை இது.
திருமலை கோணேசுவர ஆலயம் 137 ஆண்டுகளுக்கு  முன் இலங்கை அரசாங்க வர்த்தமானியில் வெளிவாத சுவையான தகவல்கள்!

பேரறிஞர் சேர். வில் பலியம் ஜோன்ஸ் "இலங்கைத் தீவில் நினைவுக் கெட்டாத காலம் முதல் இந்து சாதியினர் வாழ்ந்து வருகிறார்கள்' என்று அபிப்பிராயம் தெரிவிப்பதற்கு காரணமாகவிருந்த இலங்கையில் காணப்படும் இந்துக்களின் பல்வேறு பழம்பெரும் நினைவுச் சின்னங்களில் திருமலையில் இருக்கும் கோவில் என்றுமே மறக்க முடியாதது.

 

மதவெறி கொண்ட போத்துக்கீயர் 1622 ம் ஆண்டு தங்களது கோட்டை ஒன்றைக் கட்டுவதற்காக இக்கோவிலை இடித்துதுத் தள்ளியும் இற்றை நாளிலும் இக் கோவில் வணக்கத்துக்குரிய புனிதஸ்தலமாக விளங்கிவருகிறது.

 

சிலகாலத்திற்கு முன் ஓர் நண்பனின் உதவியுடன் கவி ராஜவரோதயன் என்ற புலவரால் தமிழில் எழுதப்பட்ட சிறிய பாடலொன்றின் கையெழுத்துப் பிரதியைப் படிக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. இக் கவிதையில் நம்பத்தகாத சில அம்சங்கள் இருந்தாலும் இப்புனித ஆலயத்தின் ஆரம்பகாலத்தையும் வரலாற்றையும் இது விளக்குகின்றது. எனவே இக்கவிதையிற் சொல்லப்பட்ட வரலாற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் ஆவல் எனக்கேற்பட்டது. பொது மக்கள் அறிந்து கொள்வதற்காக அத்தகவலை இங்கு சமர்ப்பிக்கிறேன்..

 

சோழ மண்டலத்தை ஆண்டு கொண்டிருந்த மனு நீதி கண்ட சோழன் என்ற அரசன் கைலாச புராணத் திலிருந்து திருகோணமலையின் அற்புதங்களையும் அங்கு வாழும் மக்களின் சிறப்புக்களையும் அறிந்து அவ்விடத் துக்கு வந்தான். அவனைப் பின் தொடர்ந்து வந்த அவனது மகன் குளக்கோட்டு மகாராஜாகலியுக வருடம் 512 வது ஆண்டு (கிறிஸ்துவுக்கு முன் 1589-ம் ஆண்டு ) வைகாசி மாதம் பத்தாம் நாள் திங்கட்கிழமை, தெப்பக்குளம் போன்றவற்றை ஏற்படுத்தி இக் கோவிலைப் புனருத்தாரணம் செய்வித்தான்.

 

கோவில் கட்டி முடிக்கப்பட்ட பின் கோவிலின் நாளாந்த தேவைக்கு அரிசி மற்றும் பொருட்களை சோழ மண்டலத்திலிருந்து வரவழைப்பதிலுள்ள கஷ்டங்களை அரசன் உணர்ந்தான். அதனால் 2800 அமோனம் காணியை நெல் விளைச்சலுக்காக பண்படுத்தி அக்காணிக்கு நீர்ப்பாசன வசதி செய்வதற்காக ஓர் குளத்தையும் கட்டுவித்து கோணேசர்சுவாமிக்கு அதைக் காணிக்கையாக்கினான்.

 

அதன் பின் அவன் வடக்கேயுள்ள மருகூர் என்னும் கிராமத்திற்கு சென்று கலியுகம் 516ம் ஆண்டு பங்குனி 24ம்தேதி ஏழு வேளாள குடும்பத்தினரை திருக்கோணமலைக்கு அழைத்து வந்து குடியமர்த்தினான். அவர்களுக்கு கோவிலும் அதற்குச் சொந்தமான காணிகளும் மரபு வழியாகச் சேர வேண்டியது என்பதை உறுதிப்படுத்தினான்.

 

கோவில் சொத்துக்களை பராமரிக்கவும் வரவு செலவுகள் விழாக்கள் நடத்துதல் அரசர்களுக்கு பட்டுடை தரித்தல் போன்றவற்றை கவனிக்கும் பொறுப்புக்களும் இக்குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

tirukoneswaram_1935-edit.jpg

 

கோவில் தொண்டுகளுக்கு மேலும் ஆட்கள் தேவைப்பட்டதால், குளக்கோட்டு மன்னன், காரைக்காடு என்னும் கிராமத்துக்கு சென்று கட்டாயமாக 20 குடும்பங்களை கொண் டுந்து மேற்கூறப்பட்ட அதே ஆண்டில் வைகாசி 10ம் நாள் குடியேற்றி சிவலிங்கத்தை அலங்கரித்தல் ஆலயத்துக்கு மலர்கள் சேகரித்தல் ஆலயத்தை தினசரி பெருக்கி சுத்தமாக்குதல், அபிஷேகத்துக்கு தண்ணீர் அள்ளிக் சொடுத்தல், நெல்லுக்குத்துதல், கோவிலை' சாணி கொண்டு மெழுகுதல் தேவாரம் ஓதுதல் மேள வாத்தியம் நாதஸ்வரம் வாசித்தல், வேள்விக்கு உதவி செய்தல், விசேட கனங்களில் கொடி ஏற்றுதல் இறக்குதல், சந்தனம் அரைத்தல், கோவில் ஆபரணங்களை புடம் போடுதல் போன்ற வேலைகளுக்கு நிய மித்தான். இம்மக்களின் வாழ்க்கைக்கு வேண்டிய நிலம் அளிக்கப்பட்டதுடன், இவர்களில் ஐந்து பேர் தெரிந்தெடுக்கப்பட்டு பண்டாரத்தார்' என சிறப்பாக அழைக்கப்பட்டனர்.

 

முதல் கொண்டு வந்து குடியமர்த்தப்பட்ட ஏழு குடும்பத்தினரும் தானாட்டார்' என்றும், அதற்கு பின் குடியமர்த்தப்பட்ட 20 குடும்பத்தினரும் வாரி பட்டர்' என்றும் குறிப்பிடப்பட்டனர்.

 

"வாரிபட்டர்களுக்கும் தானாட்டாருக்குமிடைமிடையே ஏதாவது தகராறு ஏற்படும் போது நீதி வழங்குவதற்கு ஒரு வருமில்லையென்பதை உணர்ந்த அரசன், அவர்களுக்குத் தலைவராக ஒருவரை நியமனம் செய்ய முடிவு செய்தான். அதனால் மதுரை சென்று தனியுண்ண பூபாலன் என்ற பேரறிஞரை அழைத்து வந்து அவருக்கு வன்னியன் பட்டம் சூட்டி திருக்கோணமலையின் கவர்னராக நியமித்தான். குற்றவாளிகளுக்கு அபராதம் விதிக்கவும், சிறைக்கனுப்பவும் தேவையானால் மரண தண்டன விதிக்கவும், கோவில் காரியங்கள் தவறேதுமின்றி நடைபெற வேண்டிய நடவடிக்கையெடுக்கவும் அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது

Bocarro17thcenturyTrincomaleemap.png
1635 இல் வரையப்பட்ட கோணேஸ்வரர் கோவிலை சுற்றிய வரைப்படம். 

அத்துடன் கட்டுக்குளம் மக்கள் தங்கள் சேவையை கோவிலுக்கு கட்டாயமாக அளிக்க வேண்டுமென்றும், நிலா வெளிமக்கள் கோவில் விழாக்களுக்கு தலைமை தாங்க வேண்டுமென்றும், கோவிலுக்கு ஆறு அமோனம் நெல்லும், கிடைக்கும் வரிப்பணத்திலும் வாணிக வரிப்பணத்திலும் பத்திலொருபங்கும் கோவிலுக்கு கொடுக்க வேண்டுமென்றும் கொட்டியாரத்து கிராம மக்கள், கோவிலுக்கு வெ ற்றிலை, வாழைப்பழம் சந்தனக் கட்டை , தயிர், நெய், 100 அமோனம் அரிசி, ஆமணக்கு, புன்னை, இலுப்பை விதைகள் வழங்க வேண்டுமெனவும் அரசன் கட்டளையிட்டான். கடைசியில் குறிப்பிடப்பட்ட விதைகள், ஐரதீவு மக்களிடம் கொடுக்கப்பட்டு எண்ணையாக்கப்பட்டவுடன், அந்த எண்ணை செவுளி முனை தொட்டியனிடம்" தரப்படவேண்டும். அவன், எண்ணையின் அளவை கோவில் கணக்கில் பதிந்த பின்னர் எண்ணையை கோயில் களஞ்சியத்தில் ஊற்றிவைக்க வேண்டும். இவ்வெண்ணை கோவில் விளக்குகள் எரிக்கப் பயன்படுத்தப்படும்.

 

'கோவிலின் தெற்கு புறத்தில் எண்ணையை ஊற்றி வைப்பதற்காக ஏழு களஞ்சியங்கள் கட்டப்பட்டிருந்தன. இவற்றை மேற்பார்வை செய்ய ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தான்,

 

இந்த உத்தரவுகள் விடப்பட்ட பின்னர் மன்னன் கோவில் உள் விவகாரங்களைக் கவனிக்கத் தொடங்கினான். தினசரி 1000 நெய் விளக்குகளும், 11,000 எண்ணெய் விளக்குகளும் கோவிலின் உள்ளும் புறமும் ஏற்றப்பட வேண்டும் என்று கோவில் ஊழியர்களுக்கு கட்டளையிட்டான் கோவில் மண்டபமெங்கும் கஸ்தூரியும் சந்தனமம் கலந்த ரோஜாப்பூ பன்னீர்தெளிக்க வேண்டுமென்று குறிப்பிட்ட காலங்களில் நிவேதனத்துக்கு தயிர் சாதம் தயாரிக்க வேண்டுமென்றும், சுப் பிரமணியருக்கு 12 வெள்ளித் தாம்பாளங்களிலும், பிள்ளையாருக்கு 6 வெள்ளித் தாம்பாளங்களிலும், மீதியுள்ள தெய்வங்களுக்கு 128 செப்புத்தாம்பளங்களிலும் நிவேதனம் படைக்கவேண்டுமெனவும் உத்தரவிட்டான்.

 

அத்துடன் நிவேதனத்துக்கு பல ஆயிரக்கணக்கான அமுது உருண்டைகள் தயாரிக்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்ட விசேட தினங்களில் ஆயிரம் தகழிகளையுடைய கற்பூர ஆரத்தி காட்டப்பட வேண்டுமென்றும் பணித்தான்.'

 

(மேற் கூறப்பட்ட கோவில் நிறுவப்பட்ட விபரங்களையும் கோவிலில் நடை பெற்றுவந்த நிகழ்ச்சிகளையும் விளக்கமாகச கூறிய கவி ராஜவரோதயன் கோவில் சிறப்புற்றோங்குவது பற்றியும், பின்னர் வெளிநாட்டுக்காரர்களால் கைப்பற்றப்படும் என்றும் மன்னன் கூறிய தீர்க்க தரிசனங்களைக் குறிப்பிட்டு விட்டு மேலும் கூறுவதாவது)

 

அரசன் ஒரு நாள் கோவில் புனித குளத்தில் நீராடி தனது பூஜை பிரார்த்தனைகளை முடித்து விட்டு, தனது தலையில் ஓர் உருத்திராட்ச மாலையணிந்து நெற்றியில் திரு நீறணித்து, இருகைகளிலும் மலர்கள் ஏந்தியபடி கோவில் பிரசாரத்தை சுற்றி வந்து மூலஸ்தானத்துள் நுழைந்தான். உள்ளே நுழைந்த அரசன் வெகு நேரமாகியும் வெளியே வராததைக்கண்ட அவனது மெய்காப்பாளர்கள், சந்தேகங்கொண்டு உள்ளே நுழைந்த போது கடவுளின் திருவுருவத்தின் முன்னே அவன் ஓர் தாமரை மலராக உருமாறியிருந்ததைக் கண்டு பிரலாபிக்கத் தொடங்கினர்.

 

திருமூலர் மறைந்ததற்கும் அரசன் மலராக உருமாறியதற்கும் ஒரு இரத்த தொடர்பு இருக்கிறது. அதே போல குளக்கோட்டு மகாராஜாவும் கடவுளில் ஒருவராகி விட்டார். திருகோணநாதமலை மக்கள் அவருக்கு தங்கள் நன்றியைக்காட்டத் தயங்கவில்லை.

 

குளக்கோட்டு மகாராஜாவின் உருமாற்றம் நிகழ்ந்து பல வருடங்களின் பின், கஜ பாகு மகாராஜா என அழைக்கப்பட்ட மன்னன் ஒருவன் திரு கோணாமலைக்கு யாத்திரை வந்தான். வந்த இடத்தில் கோவில் அதுவரை நிர்வகித்து வந்த பாசபட்டர் (பாசுபதர்) இறந்து விட்டதையும் அவருக்கு பின் அதை ஒருவரும் கவனிக்காததையும் கண்டு துக்கித்தான் கோவில் குருக்களின்றி பூசையில்லாமலிருந்த நிலையை மாற்றியமைக்க முடிவு செய்தான்.

Swami_rock_1870-edit.jpg
1870 இல் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம்

அரசன் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கும் பொழுது இரு பிராமணச் சிறுவர்கள் கையில் வேதத்துடன் சமுத்திரத்தில் மிதந்து வருவதைக் கண்டான். அவர்களைக் கண்டவுடன் மகிழ்ச்யடைந்து, தன்னிருக்கை விட்டெழுந்து அவர்களை நோக்கி கடலில் இறங்கிச் சென்று இருகைகளிலும் ஒவ்வொருவரைப் பிடித்து கரைக்கு அழைத்து வந்தான். அவர்களை இருபாதி என்று அழைத்தான்.

 

அவர்கள் இருவரையும் கோவில் குருக்களாக நியமித்து அவர்களுக்கு மரியாதை செய்து கீழ்ப்படிந்து நடக்கும்படி வன்னியருக்கும், தானாட்டார், வாரியப் பட்டருக்கும் உத்தரவிட்ட துடன், அவர்களது சேவையை முன்போல அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டான்.

 

கஜபாகு மகராஜா, ஐந்து வகையான நகர சேவையாளர்களை (பொற் கொல்லர், மட்பாண்டம் செய்வோர், நாவிதர், வண்ணக்கர், பறையர்) திருமலையில் குடியமர்த்தி அவர்களுக்கு. நிலமும் நெல்வயலும் வழங்கினார். 

 

அடுத்ததாக மகாவலிகங்கைக்கு அணித்தாக உள்ள கொட்டியாரத்தில் ஓர் குளம் கட்டுவிக்கவும் , 6350 அமோனம் நெற் காணிகளில் விளைச்சலைப் பெருக்கவும், புன்னை இலுப்பை ஆமணக்கு, கொக்கோ மரங்களைப் பயிரிடவும் கஜபாகு ஏற்பாடு செய்தான். இவற்றின் வருமானத்தில் பத்தில் ஒரு பாகத்தை கோவிலுக்கு அளிக்க வேண்டுமெனவும் கட்டளையிட்டான்

 

சைவ வணக்க ஸ்தலத்தை இத்துத்தள்ளிவிட்டு அவ்விடத்தில் ஓர் பௌத்த ஆலயத்தை நிர்மாணிப்பதென தான் முன்பு திட்டமிட்ட பாவத்துக்கு கழுவாய் தேடிக்கொள்ளுமுகமாகவே கஜபாகு மன்னன் கோணேசர் சுவாமிக்கு மேற்கண்ட தொண்டுகளைப் புரிந்தான்.

 

அதன் பின்னர் கஜபாகு மகராஜா, நாட்டுப் பிரஜைகளை அழைத்து குளக்கோட்டு மகாராஜா ஸ்தாபித்த நிறுவவனங்களை அழித்துவிடாதபடி பாதுகாக்கும்படி கட்டளையிட்டதுடன் இரு பாதி பிராமணர்களுக்கு ராஜகுரு, என்ற பட்டமளித்ததுடன் கோவிலுக்கு சொந்தமான நகைகளையும், செல்வங்களையும் அவர்களிடமே ஒப்படைத்தான்.

 

பின்னர், தனது தலைநகராகிய அனுராதபுரம் திரும்பி நீண்டகாலம் ஆட்சிபுரிந்ததன் பின்னர் சிவனடி சேர்த்தான்''

 

குறித்த கையெழுத்துப் பாடலில் கூறப்பட்டுள்ள கருத்தை ஓரளவு மொழி பெயர்த்து மேலே தந்துள்ளேன். இலங்கையின் பழைய வரலாற்றை ஆராய்பவர்களுக்கு இது ஒரு தூண்டுதலாக அமையும் என்பது எனது நம்பிக்கை .

 

இங்ஙனம்,

தங்கள் உண்மையுள்ள

இன்டியோபைலஸ், 

கல்பென்ரின், 21 நவம்பர்,

-1831 உண்மைப் பிரதி.

ஒப்பம்: சி. ரெய்மரா

அரசாங்கப் பதிவாளர்.

குடியேற்ற நாட்டு செயலாளர் அவவலகம்,

கொழும்பு, 23 மே 1928.

 

நன்றி சுதந்திரன் - 29.09.1968

43942-6.jpg

 

43942-7j.jpg

 

இப்பத்திரிகை நூலகம் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது என்பதை நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.
 

https://www.namathumalayagam.com/2020/07/koneswaraTemple.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.