Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் கால முகமூடிகளும் முகக் கவசங்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் கால முகமூடிகளும் முகக் கவசங்களும்

ஒவ்வொரு கட்சியினதும் வேட்பாளரினதும் போலி முகமூடிகளைக் கழற்றி, உண்மை முகங்களைக் கண்டறிவதுடன், சுகாதார நடைமுறைகளுக்காக, முகக் கவசங்களை அணிந்து கொள்ள வேண்டிய ஓர்  இக்கட்டான காலகட்டத்தில், இலங்கை மக்கள் இருக்கின்றனர். முஸ்லிம்களும் தமிழ் மக்களும் இந்த விடயத்தில், அதீத கரிசனை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், ஓகஸ்ட் ஐந்தாம் திகதிக்குப் பின்னர், கைசேதப்பட வேண்டி வரலாம்.   

இந்தத் தேர்தலும் அதற்குப் பின்னர் அமையப் போகின்ற நாடாளுமன்றமும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கப் போகின்றன. 

எந்தப் பெருந்தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அரசமைப்பு மறுசீரமைப்பு, எம்.சி.சி உடன்படிக்கை, அதிகாரப் பகிர்வு கோட்பாடு, மாகாண சபை முறைமை மீளாய்வு, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அடுத்தகட்டம் உள்ளடங்கலாகப் பல நகர்வுகள், உடனடியாக நடந்தேறலாம் என்ற எதிர்பார்ப்புக் காணப்படுகின்றது.   

எனவே, முஸ்லிம் சமூகம், அடுத்த நாடாளுமன்றத்தில் தமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதுடன், அந்த எம்.பிக்கள் ‘பொருத்தமானவர்’களாக, ‘தகுதியுடையவர்’களாக, சமூகசிந்தனை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் மறந்து விடக் கூடாது. அப்படியென்றால், வேட்பாளர்களின் போலி முகமூடிகளை அகற்றி, முகத்திரைகளைக் கிழித்து நோக்குவது கட்டாயமாகின்றது.   

சமகாலத்தில், சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய தேவையும் அதிகரித்துள்ளது. நாட்டை வழமைக்குத் திருப்பி, பொருளாதார ரீதியாக ஸ்திரப்படுத்தும் நோக்கத்தோடு, அரசாங்கம் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி விட்டமையாலும், இலங்கையில் வாழ்கின்ற எல்லாச் சமூகங்களைச் சேர்ந்த அடிமட்ட மக்கள் தொடக்கம், தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள் வரை, சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்காமல் செயற்பட்டமையாலும், இன்று நிலைமைகள் பாதகமாக மாறி வருகின்றன.   

ஓகஸ்ட் ஐந்தாம் திகதி, தேர்தலை நடத்துவதாக அறிவிக்கப்பட்ட பின்னரும், தொடர்ச்சியாக கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நேற்று (16) காலை நிலைவரப்படி, 2,674 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால், கொரோனா வைரஸ் பற்றிய செய்திகளை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, அரசியல்வாதிகளும் கணிசமான மக்களும் தேர்தல் பிரசாரங்களில் கவனம் செலுத்தியமையால், இன்று சமூகத்துக்குள் இருந்தும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.   

படையினருக்கும் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்குமே கொரோனா வைரஸ் தொற்று உள்ளது என்றும் சமூக மட்டத்தில் தொற்று ஏற்படாதவாறு கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகவும் அரசாங்கம் கூறிக் கொண்டிருந்தது. இந்நிலையிலேயே, கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையம் தொடக்கம், சிறைக்கைதிகள் ஈறாக, அவர்களுடன் தொடர்பிலிருந்த சமூகத்துக்குள் வாழும் நபர்கள் வரையிலும், வைரஸ் தொற்று வியாபித்து இருக்கின்றது.   

இதனால், பல மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதுடன், நூற்றுக் கணக்கானோருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுகாதார விதிமுறைகள் பற்றி, மீண்டும் காட்டமான அறிவிப்புகளைச் செய்துள்ள அரசாங்கம், பாடசாலைகளையும்  ஏனைய கல்வி நிறுவனங்களையும் மூடியுள்ளது.

ஆனால், அலுவலகங்கள் இயங்குவதுடன் போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெறுகின்றன. இதன்மூலம், இயல்புநிலை இருப்பதான தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், திடீரெனத் தொற்றாளர்கள் அதிகரித்தமை, மக்களிடையே ஒருவித அச்சத்தை உண்டுபண்ணியுள்ளதை மறைக்க முடியாது.   

“கொவிட்-19 விடயத்தில், அரசாங்கம் திருப்தியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது” என, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. ஒரு வாரத்துக்கு, தேர்தல் பிரசாரங்களை இடைநிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ள சுகாதாரத் தரப்பினர், கொரோனா வைரஸின் பரவலின் ஆபத்து, இன்னும் அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கை செய்துள்ளது.   

ஆனாலும், “இது, இரண்டாவது அலை இல்லை” என்று, இராணுவத் தளபதி சொல்லியிருக்கின்றார். இதே கருத்தைக் கூறியுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர், “கொரோனா வைரஸ் பரவுகை  கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றது” என்று, தன்பங்குக்குக் குறிப்பிட்டிருக்கின்றார்.   

நிஜத்தில், கொவிட்-19 பற்றிய அச்சம் மக்களிடையே மீளத் தலைதூக்கியிருப்பினும், சுகாதாரக் கட்டுப்பாடுகளைக் கிட்டத்தட்டக் கைவிட்டு விட்டார்கள் என்றே தோன்றுகின்றது. மக்களுக்கு முன்மாதிரியாகச் செயற்பட வேண்டிய ஆளும், எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள், பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், சில பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் கூட, சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதைப் பெரிதாகக் காண முடியவில்லை.   

இப்போது, பெரிய பொதுக் கூட்டங்கள், மக்கள் சந்திப்புகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. ஆள் எண்ணிக்கை கட்டுப்பாடுகள் கிடையாது. பிரசார மேடைகளில், சமூக இடைவெளி இல்லை. பிரசாரக் கூட்டங்களுக்கு வருகின்ற மக்கள், மிக நெருக்கமாக நிற்கின்றனர். குறிப்பாக, முஸ்லிம் பிரதேசங்களில், இந்தத் தேர்தலிலும் தலைவர்களைப் பார்ப்பதற்காகவும்  அவரது கையைத் தொடுவதற்காகவும் கட்டி அணைப்பதற்காகவும் ஆதரவாளர்கள் முண்டியடிப்பதை அவதானிக்க முடிகின்றது. சிங்கள, தமிழ் வேட்பாளர்கள் அநேகரின் தேர்தல் பிரசாரங்களும் இவ்விதமே அமைந்துள்ளன.   

கொவிட்-19 தொடர்பான ஒழுங்குவிதிகள் எல்லாம், எழுத்திலும் அறிக்கைகளிலும் மட்டுமே இருப்பதாகத் தெரிகின்றது. ஆனால், எல்லாம் கட்டுப்பாட்டில் இருப்பதாக, அரசாங்கம் கூறி வருகின்றது. தேர்தல் நடத்தும் திட்டமும் அதற்கான முன்னேற்பாடுகளும் குழம்பிவிடக் கூடாது என்பதில், ஆளும் தரப்பு மிகக் கவனமாக இருக்கின்றது என்பதையும், இத்தகைய அணுகுமுறைகள் வெளிக்காட்டுகின்றன.    

நிலைமை இவ்வாறே போனால், கொரோனா  வைரஸ் பரவலுக்காக மட்டுமன்றி, வெளியில் தெரியாத ஓரிரு காரணங்களுக்காகவும் ஒருவேளை தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு இம்மியளவு வாய்ப்புகள் இல்லாமலில்லை என்று, இரகசிய தகவல்களில் இருந்து அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. 

இருந்தபோதிலும், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு, தபால்மூல வாக்களிப்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், தேர்தல் ஒத்திவைக்கப்பட மாட்டாது என்பதையே, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளரின் ஆகப் பிந்திய அறிவிப்பு உணர்த்தி நிற்கின்றது.   

உறுதியற்ற நாடாளுமன்றம் பற்றிய கடந்தகால கசப்பான அனுபவங்களின் அடிப்படையில், இந்தமுறை அதிக ஆசனங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறவே, பிரதான கட்சிகள் பகிரதப் பிரயத்தனங்களை எடுக்கின்றன. குறிப்பாக, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற ஆளும் கட்சிக்கு, இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது, அதுவும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதே, பேரவாவாகக் காணப்படுகின்றது.   

கடந்த நாடாளுமன்றத்தில், அறுதிப் பெரும்பான்மை இல்லையென்ற நிலையிலேயே ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். பெரும்பான்மைப் பலம் இல்லாமல், எதையும் செய்ய முடியாது என்பதை ஆட்சியாளர்கள் நன்கறிவர். அதுமட்டுமன்றி, தமக்குத் தேவையான மாற்றங்களை, திருத்தங்களை, கொள்கை வகுத்தல்களை மேற்கொள்வதற்கு மூன்றிலிரண்டைப் பெற வேண்டும் என்ற திடசங்கற்பத்துடனேயே, ஆளும் தரப்பு இத்தேர்தலில் குதித்தது என்பதையும் நாமறிவோம்.  

ஸ்திரமான ஆட்சியொன்றைக் கொண்டு செல்வதற்கு மட்டுமல்லாமல், தீர்க்கமான திருத்தங்கள், தீர்மானங்களை எடுப்பதற்கு மூன்றிலிரண்டு அவசியமாகும். இருப்பினும், இத்தேர்தலில் எந்தப் பெரும்பான்மைக் கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவது சிரமம் என்றே இப்போதைக்குக் கூற முடிகின்றது. 

அப்படியென்றால், வெற்றிபெறும் பெரும்பான்மைக் கட்சியானது, பிறிதொரு பெரும்பான்மைக் கட்சியையோ, முஸ்லிம், தமிழ்க் கட்சிகளையோ இணைத்துக் கொண்டாலோ அல்லது, தனித்தனியாக எம்.பிக்களைத் தம்பக்கம் எடுத்தாலோ மாத்திரமே, மூன்றில் இரண்டு சாத்தியமாகும்.  

இந்த அடிப்படையில் நோக்கினால், எப்பாடுபட்டாவது வாக்களிப்பை நடத்தி முடிக்கும் நிலைப்பாட்டில் இருந்து, அரசாங்கம் பின்வாங்காது.  கட்டுப்பாடுகளை இறுக்கிக் கொண்டு, தேர்தலைக் கடந்து செல்ல அரசாங்கம் முனைகின்றது. அதன்படி, அவசியமான சுகாதார விதிமுறைகளை உள்ளடக்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலையும் இரு தினங்களுக்குள் அரசாங்கம் வெளியிடவுள்ளது. ஆனால், சட்டங்கள், விதிகள் ஆகியவை எழுத்தில் இருப்பதால் மட்டும், கொவிட்-19ஐக் கட்டுப்படுத்த முடியாது.   

அரசாங்கமும் தேர்தல் ஆணைக்குழுவும் தேர்தல் காலத்தில் கட்டுப்பாடுகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், மக்களும் அவ் விதிமுறைகளைக் கடைப்பிடித்துக் கொண்டே, சரியான மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய வேண்டியது, தேர்தல் கால நியதியாகியுள்ளது.   

முஸ்லிம் சமூகம், மிகவும் விழிப்புடனும் தெளிவுடனும் இந்த முறை, எம்.பிக்களைத் தெரிவு செய்வது மிக முக்கியமான விடயமாகும். முஸ்லிம் கட்சிகளிலும், பெரும்பான்மைக் கட்சிகளிலும் போட்டியிடுகின்ற முஸ்லிம் வேட்பாளர்கள் பற்றி, அந்தந்த மாவட்டங்களிலுள்ள மக்கள் போதுமானளவுக்கு அறிவார்கள்.   

இந்தத் தேர்தலில், முன்னாள் எம்.பிக்களும் புதுவரவுகளுமாக நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மக்கள் சேவையாற்றியவர்கள், சமூகத்துக்காகக் கொஞ்சமேனும் வாய் திறப்பவர்கள், புத்திஜீவிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலவிதமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.   

அதைவிட, அதிக எண்ணிக்கையில், மக்களைக் காலம்காலமாக ஏமாற்றிய அரசியல்வாதிகள், போதைப் பொருள் வியாபாரத்துக்குத் துணை நிற்பவர்கள், மது, மாது விடயத்தில் பலவீனமானவர்கள்,  முன்னர் தனக்குக் கிடைத்த எம்.பி பதவியை, சமூகத்துக்காகப் பயன்படுத்தாதவர்கள், உழைப்பதற்காக மட்டும் அரசியலுக்கு வந்தவர்கள் என்ற வகைக்குள் அடங்குவோரும் களமிறங்கியுள்ளனர்.   

எனவே, வாக்காளர்களாகிய மக்கள், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதுடன், வேட்பாளர்களின் பண்புகளைப் பிரித்தறிய வேண்டும். அவர்கள், முகக்கவசம் அணிந்து வந்தாலும் வராவிட்டாலும், மக்களாகிய நீங்கள், அவர்களது போலி முகமூடிகளைக் கிழித்து, அவர்களது உண்மையான முகத்தைப் பார்க்க வேண்டும். அதன்பின்னர், ‘இவர் பொருத்தமான பிரதிநிதியா?’ என்ற முடிவை, ஒவ்வொரு வாக்காளனும் எடுக்க வேண்டும்.   

இவ்வளவு காலமும், முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்த தவறுகள், சமூக அரசியலுக்கு உதவாத காரியங்களுக்கு அவர்களே, பிரதான பொறுப்புதாரிகள். என்றாலும், அவ்வாறான நபர்களை நம்பி, மீண்டும் மீண்டும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்தவர்கள், முஸ்லிம் மக்களே என்ற வகையில், முஸ்லிம் அரசியல் சீரழிந்து போனதில், முஸ்லிம் வாக்காளர்களுக்கும் பங்கிருக்கின்றது. எனவே, அந்தத் தவறுகளுக்குப் பிராயச் சித்தம் காண்பதற்கான சந்தர்ப்பமாக இத்தேர்தலைப் பார்க்க வேண்டும். ‘அழகான’ முகமூடிகளை அணிந்து கொண்டு, வாக்குக் கேட்டு வருகின்ற ‘அவலட்சணமான’ வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலம், கடந்த காலங்களில் விட்ட தவறை, முஸ்லிம் மக்கள் இன்னுமொரு தடவை புதுப்பித்துவிடக் கூடாது.   

இனவெறுப்பு எனும் மோசமான ஆயுதம்

இலங்கையில் பௌத்த தர்ம பாடசாலைகளை மூடச் சொல்லும் அதிகாரம், முஸ்லிம் சமூகத்துக்கு இல்லை. அதேபோல், பௌத்த தேரர்களின் காவி உடைகளை விமர்சிக்கும் உரிமையும் முஸ்லிம்களுக்கோ, வேறு எந்த இனத்தவருக்கோ இல்லை.   

image_9211778898.jpgஇந்த மத உரிமை, சிங்களப் பௌத்தர்களுக்கு மட்டுமன்றி இந்து, கிறிஸ்தவ, கத்தோலிக்க, முஸ்லிம் மக்களுக்கும் இருக்கின்றது. இந்த உரிமையை, இலங்கையின் அரசமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.   

அப்படிப் பார்த்தால், முஸ்லிம்களின் ஆடைகள் பற்றியோ, மத போதனைகள் பற்றியோ அடிப்படையற்ற விதத்தில் பேசுவதானது, மதவெறுப்பு மட்டுமன்றி, அரசமைப்பின் நியதிகளை மீறுகின்ற செயலுமாகும். ஆனால், இப்படியான சம்பவங்களை, முஸ்லிம்கள் தொடர்ச்சியாக எதிர் கொண்டு வருகின்றனர்.   

கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரான அத்துரலிய ரத்தன தேரர், “முஸ்லிம்களின் மார்க்க போதனை மயங்களான மத்ரசாக்களை மூட, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, அண்மையில் குறிப்பிட்டுள்ளார். இதற்காக, ஜம்இய்யதுல் உலமா சபைக்கு ஒருவார கால அவகாசத்தைத் தேரர் கொடுத்துள்ளார். முஸ்லிம்கள் புர்காவைத் தவிர்க்க வேண்டும் என்பதும், அவரது இன்னொரு கருத்தாகும்.   

மத்ரசாக்கள் குண்டுத்தாரிகளை உருவாக்கும் இடங்களாக மாறியுள்ளன என்ற, பாரதுரமான கருத்தொன்றைக் கூறியுள்ள அத்துரலிய தேரர், மேற்கூறப்பட்ட கோரிக்கை நிறைவேறாவிட்டால், முஸ்லிம்களின் வர்த்தகத்தைப் புறக்கணிக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.   

இவர்தான், மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் இராஜினாமாச் செய்ய வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தவராவார். இப்போது தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, இனவாதக் கருத்துகள் எனும் மோசமான ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கின்றார் என்றே கருத வேண்டியுள்ளது. இவர் போல, இன்னும் பலரும் உள்ளனர்.   

இதேவேளை, மேற்படி தேரரின் இவ்வாறான இனவெறுப்புச் செயற்பாடுகளை, வேறு சில முற்போக்குத் தேரர்கள் பகிரங்கமாகவே விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

அத்துடன், கொழும்பில் போட்டியிடும் வேட்பாளர் சுசில் கிந்தல்பிட்டிய, “தர்ம பாடசாலைகளில், பாளி மொழியைப் போதிக்க முடியுமென்றால், மத நூலான குர்ஆனை விளங்கிக் கொள்வதற்காக, மத்ரசாக்களில் அரபு போதிப்பதை எதிர்க்க முடியாது” எனக் கூறியுள்ளார்.   

தமிழர்களை அடக்கியது போன்று, முஸ்லிம்களை அடக்குவதற்காகவும் மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒருங்கிசைவாகவும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற இனவாத முன்னெடுப்புகள், இனவெறுப்புப் பேச்சுகளால் நொந்து போகும் முஸ்லிம் சமூகத்துக்கு, முற்போக்கு சிங்கள சக்திகளின் ஆதரவான கருத்துகள் ஆறுதலாக அமைகின்றன. அதுமட்டுமன்றி, சிங்கள மக்களில் பெரும்பாலானோர் இனவாதத்துக்கு எதிரானவர்கள் என்பதையும் இது உணர்த்தி நிற்கின்றது.   

எவ்வாறிருப்பினும், இத்தேர்தலில் ‘மூன்றில் இரண்டு பெரும்பான்மை’ கனவுடன் இருக்கின்ற ஆளும் தரப்பு, முஸ்லிம் மக்களின் ஆதரவையும் வேண்டி நிற்கின்ற இத்தருணத்தில், இனக்குரோதப் பேச்சுகளைப் பேசி, இனவாதத்தைத் தூண்டிவிடும் அரசியல்வாதிகள், கடும்போக்காளர்களுக்குக் கடிவாளமிட முடியாவிட்டால்.... இனங்களுக்கு இடையிலான ஐக்கியம், ‘ஒரே மக்கள் ஒரே தேசம்’ என்ற இலக்கை அடைவது சாத்தியமில்லை.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தேர்தல்-கால-முகமூடிகளும்-முகக்-கவசங்களும்/91-253366

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.