Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத்தை பலப்படுத்த தவறிய தேசியப் பட்டியல் விவகாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தை பலப்படுத்த தவறிய தேசியப் பட்டியல் விவகாரம்

August 14, 2020
  • தயாளன்

தேசியப் பட்டியல் உறுப்பினர் என்ற விடயம் குறிப்பிட்ட இனங்களின், தேசியத்தின் நலன் என்பதை விட சொந்தக் கட்சிகளின் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் மருந்தாகவே உள்ளது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும் சரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாக இருந்தாலும் சரி. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை தலைமைக்குக் குழி பறிக்கும் வாய்ப்பாகக் கருதுகின்றனர் சுமந்திரனும் சீறிதரனும்.

ampara.jpg

 

சுமந்திரன் கட்சியின் தலைமை மிகமோசமாகத் தோற்றுவிட்டது அதனை அகற்றியே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தலைகீழாக உள்ளார். சிறீதரன் கட்சிக்குப் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதே எனக் கண்ணீர் வடிக்கிறார். அவரும் தலைமையை மாற்ற வேண்டுமாம். மாவையின் ஆளுமை எந்தளவு என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அவரது வரலாற்றை ஆராய்ந்தால் காசி ஆனந்தனுக்கு அடுத்தபடியாக அவரது பெயரே உச்சரிக்கப்பட்டது. தந்தை செல்வா முதற்கொண்டு பிரபாகரன் முதலானோருடன் தொடர்புபட்டவர். கொழும்பு நாலாம் மாடி முதல் மட்டக்களப்பு முதலான சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டவர். இலங்கை அரசியலில் தந்தை செல்வா, ஜீ. ஜீ, அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மட்டுமல்ல சம்பந்தன் ஐயாவும் இரு தடவைகள் தோற்றவர்தான். சுமந்திரனின் மொழியில் சொன்னால் மிக மோசமான தோல்வி.

 

1981 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலை நினைவூட்டுகிறது 2020 பொதுத்தேர்தல். இதன் முடிவுகளை விலாவாரியாக எழுத முற்பட்டால் நாங்கள் ஆயிரம் கோடி பெறுமதிமிக்க மனிதர்களாக உயர்ந்து விடுவோம். அவ்வளவு தொகை நஷ்டஈடு கேட்பதென்றால் அத்தகைய பெறுமதியைக் கட்டக்கூடியவராக எழுதுபவர் இருக்கிறார் என்பதே அர்த்தம். அதுவும் ஒருவகை கௌரவம்தான்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் பிரதிநிதித்துவம் இழந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் சுமந்திரனே என அறுதியிட்டுக் கூறலாம். கல்முனை உபபிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விவகாரம் தமிழரைப் பொறுத்தவரை ஓர் உணர்வுபூரவமான விடயம். இது சாகும் வரை உண்ணாவிரதம் என்றளவுக்குப் போனது. திருமண வீடென்றால் தான்தான் மாப்பிள்ளை; சாவீடென்றால் தான்தான் பிணம் என்ற நினைப்பிலுள்ள சுமந்திரன். குறிப்பிட்ட சில நாட்களுக்குள் இப்பிரச்னைக்குத் தீர்வு வழங்கப்படும் எனப் பிரதமர் ரணிலின் சார்பில் உறுதிமொழி வழங்கினார்.

 

அரசில் கூட்டமைப்பு அங்கம் வகிக்கவில்லை. இவ்வாறான உறுதிமொழியை அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒருவரே பிரதமரின் சார்பில் வழங்கியிருக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் இப்பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதை எதிர்க்கிறது. அக் கட்சியின் ஹாரிஸ் எம்.பி., போராட்டம் நடத்தியோருக்கு வழங்கிய உறுதிமொழி குறித்து ரணிலிடம் விசாரித்தார். ரணில் அவ்வாறான நிலைப்பாடு எதனையும் தாம் எடுக்கவில்லை எனக்குறிப்பிட் டார். எதிர்பார்த்தபடி எதுவுமே நடக்கவில்லை. விளைவு என்னவாகும்? சுமந்திரன் என்பவரை தனிமனிதனாகவா கருதுவர்? வடக்குத் தலைமை தங்களை ஏமாற்றி விட்டது என்று கிழக்குத் தேசியம் குறித்து பரப்புரை செய்வோரின் வாய்களுக்கு அவல் கிடைத்து விட்டது .

 

கருணா முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசினார். கிழக்குத் தேசியம் பேசுவோர் வடக்குத் தலைமையின் துரோகம் பற்றிப் பேசினர். முடிவு தேர்தலில் எதிரொலித்தது. பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது. அதிலும் கூட்டமைப்பைவிட கருணா கூடுதல் வாக்குகள் பெற்றார். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும்இந்நிலைமை எதிரொலிக்கும். கருணாவின் துரோகம் மறக்கப்பட்ட விவகாரமாக மாறிவிட்டது. ஆனால் எதுவும் நடக்காதது மாதிரி மாவையால்தான் கட்சிக்குத் தோல்வி என்கிறார் சுமந்திரன்.

 

அதுமட்டுமல்லாது தேசியப் பட்டியல் ஆசனம் கனடா வரவு குகதாசனுக்கே வழங்க வேண்டும் என சிறீதரனும் , சுமந்திரனும் கட்சித் தலைமையிடம் குறிப்பிட்டனர் என்று காலைக்கதிர் செய்தி வெளியிட்டது. அதேநாள் துணைச் செயலாளர் சீ. வீ. கே. சிவஞானம் முதலானோர் கட்சித் தலைமைக்கே இதனை வழங்க வேண்டுமென சம்பந்தன் ஐயாவிடம் வேண்டினர். புளொட் தலைவர் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் ஆகியோரும் மாவையையே தேசியப் பட்டியல் உறுப்பினராக்க வேண்டும் என்றனர். இதை அறிந்ததும் சிறீதரனும், சுமந்திரனும் தோசையை திருப்பிப் போட்டனர் என நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறையின் கலையரசனுக்கு இந்த ஆசனம் வழங்கப்பட்டதாக செயலர் அறிவித்தார். மரியாதைக்கேனும் தமிழரசின் தலைவரிடம் அவர் இவ்விடயத்தைத் தெரிவிக்கவில்லை என அறியமுடிகிறது. மாவை வரக்கூடாது என்பதற்காகவே திடீரென கலையரசனின் நாமத்தைக் குறிப்பிட்டார்களே தவிர, சுமந்திரன் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்ய அல்ல.

தேசியப் பட்டியல் விவகாரத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தமக்கு இதற்கும் சம்பந்தம் இல்லை என்ற தொனியில் கருத்துரைத்துள்ளார். இந்த விடயம் குறித்து கட்சியின் செயலாளரே எழுத்து மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தகவல் அனுப்பினார் என்று தனது பொறுப்பிலிருந்து நழுவுகிறார்.

உண்மையில் ஓர் இனத்தின் தலைமைக்குரிய பண்பை சம்பந்தன் ஐயா எப்படி வெளிப்படுத்தியிருக்க வேண்டும்?

சிவஞானத்தின் முன்பாகவே அம்பாறை மாவட்டத்துக்கு தேசியப் பட்டியல் நியமனம் வழங்கப்பட வேண்டிய அவசியம் பற்றி சித்தார்த்தனுக்கும், செல்வத்துக்கும் விளக்கியிருக்க வேண்டும். அப்படியானால் மாவைக்கு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாக அவர் என்ன செய்திருக்க வேண்டும் என்ற வினா எழுகிறது.

மாவை சேனாதிராசா பாராளுமன்றத்திலிருந்து கௌரவமாக விடைபெறும் வாய்ப்பை வழங்கியிருக்க வேண்டும். அம்பாறைப் பிரதிநிதியை முற்கூட்டியே சக எம்.பிக்களுக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம். பாராளுமன்றத்தில் சத்திய பிரமாணம் எடுத்துவிட்டு உரையாற்றும்போது “தமிழர்களின் அடிநாதக் கோரிக்கையான வட,கிழக்கு கோரிக்கையை இப்போதும் நான் வலியுறுத்துகிறேன். உணர்வால் வட, கிழக்கு மக்கள் ஒன்றுபட்டவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன். எனது இடத்துக்கு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இன்னார் (பெயரைக் குறிப்பிடலாம்) பதவியேற்பார்”, எனக் குறிப்பிட்டு விட்டு வெளியேறலாம். தனது ராஜிநாமா கடிதத்தை சபாநாயகருக்கோ, பாராளுமன்றத் செயலாளர் நாயகத்துக்கோ அனுப்புவதுடன் தேர்தல்கள் ஆணையாளருக்கு உடனடியாக அனுப்ப ஏற்பாடு செய்திருக்கலாம். பதவியேற்ற நாளன்றே கௌரவமாகப் பதவி விலகுவது இலங்கைக்குப் புதிதன்று. தலைமை நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கா மீண்டும் பதவியேற்று அன்றைய நாளே பதவி விலகியமை ஒரு முன்னுதாரணம்.

ஒரு மூத்த அரசியல் தலைவர் என்ற வகையில், இவர் சக பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து விடைபெறும் தருணம் நெகிழ்ச்சியாக இருந்திருக்கும். வட, கிழக்கு இணைப்புக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சக்திகளுக்கு ஒரு பாடமாக இருந்திருக்கும்.

எப்படி இருந்தாலும் தமிழினத்தின் சரியான தலைவர் என்று எல்லோரும் பாராட்டக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தை சம்பந்தன் ஐயா போட்டுடைத்துவிட்டார். ஒருவேளை மாவை ராஜினாமா செய்யாவிட்டால் என்றொரு கேள்வியும் எழலாம். அதுவும் நியாயமானதே. “பதவியைத் துறக்க தயார் தயார் என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமே ஒழிய ஒருபோதும் துறந்து விடக்கூடாது”, என அமிர்தலிங்கம் தன்னிடம் கூறினார் என்று தலைவர் பிரபாகரன் ஒரு போராளியிடம் தெரிவித்தார். (அந்த முன்னாள் போராளி இன்னமும் உயிருடன் உள்ளார்) மாவை எவ்வாறு உரையாற்றப் போகிறார் என்ற விடயத்தை மட்டும் தவிர்த்து விட்டு ராஜிநாமா செய்வார் என்பதை மட்டும் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கலாம் .

கடந்தமுறை 58,043 வாக்குகள் பெற்ற சுமந்திரன் இம்முறை இரட்டிப்பாக வாக்குப் பெறுவேன் என மார்தட்டினார். அவருக்கு 27,834 வாக்குகளே கிடைத்தன. அதாவது அரைவாசிக்கும் குறைவு. கடந்தமுறை மருதனார்மடம் கூட்டத்தில் எனது தலைவர் பிரபாகரனே என சம்பந்தர் முன்னிலையில் கூறினார் சிறீதரன். அத் தேர்தலில் 72,058 வாக்குகள் பெற்றார். இம்முறை சுமந்திரன் எமக்குத் தேவை என்றார். முதல் கிடைத்ததில் அரைப்பங்கு கூடக் கிடைக்கவில்லை. (35,884 வாக்குகள்) இந்த வாக்குகள்கூட பெரும்பாலும் தீபன், ஹில்மனை நினைத்தே போடப்பட்டன.

எனவே, கிளிநொச்சியில் என்ன நடந்தது என்பதை ஆராயாமலே விடுவோம். முடிவில் சிறீதரன், சுமந்திரன் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்றனர் என அறிவிக்கப்பட்டது.

1981 மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலின்போது அமைச்சர்கள் காமினி திஸநாயக்கா, சிறில் மத்தியூ ஆகியோர் யாழ். சுபாஸ் ஹோட்டலில் தங்கியிருந்தனர். வாக்குப் பெட்டிகள் இந்த ஹோட்டலுக்குக் கொண்டு செல்லப்பட்டன. கட்டுக் கட்டாக வாக்குகள் போடப்பட்டன. சில கட்டுக்களில் ‘றபர் பாண்ட்’ கூட கழற்றப்படவில்லை. இந்தத் தேர்தல் மோசடியாக நடத்தப்பட்டது என இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. உடனே ஜே.ஆர். 10 ஆசனங்ளையும் உங்களுக்கே தருகிறோம் என்றார். மகிழ்ச்சியுடன் திரும்பினர் கூட்டணியினர். நீதிமன்றில் தேர்தல் நீதியாக நடத்தப்பட்டது என சத்தியக் கடதாசி தாக்கல் செய்தனர்.

இறுதியில் எனக்குக் கிடைத்தது இந்த மேசை ஒன்றுதான் என சபைத் தலைவர் நடராசா கூறினார்.

இதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி திருமலையில் 2,745, மட்டக்களப்பில் 1,203,அம்பாறையில் 283 வாக்குகளைப் பெற்றது. இந்த வாக்குகள் கிடைத்திருக்காவிடில் தேசியப் பட்டியல் ஆசனம் முன்னணிக்குக் கிடைத்திருக்காது. அவர்கள் பெயரில்தான் தேசியம் உள்ளது. கஜேந்திரகுமார், கஜேந்திரன், சுகாஷ் எனத் தேசியம் பேசுபவர்கள் கட்சிக்குள் இருந்தும் எல்லாச் சிந்தனையும் குடாநாட்டுக்குள்தான்?

மாவையின் கௌரவமும் பாதுகாக்கப்பட வேண்டும். அதேவேளை கிழக்கு மாகாண மக்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளவேண்டும். இதில் சரியான முடிவு எடுக்கத் தவறினால் வரலாற்றுத் தவறைப் புரிந்தவர்கள் ஆவோம். கிழக்குத் தேசியம் பேசும் ஞானம், த.கோபாலகிருஷ்ணன், பூபாலரெத்தினம் சீவகன், அழகு குணசீலன், குழந்தைவேல் நவநீதன் போன்றோரின் கருத்துக்களை முறியடிக்கும் வகையில் நடவடிக்கை அமைய வேண்டும்.

 

http://thinakkural.lk/article/62249

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.