Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிக்கு வித்திட்ட வேங்கைகள்

 

 

The-fighters-responsible-for-the-victory-scaled.jpg

 

பூநகரி வெற்றி விடுதலைப் போரின் பரிமாணத்தை முற்றிலும் மாற்றியமைத்த வெற்றி.

“தனது பூநகரி முகாமை நாம் தாக்க எண்ணியது எதிரிக்குத் தெரிந்து விட்டது.”

“எமது எண்ணம் எதிரிக்குத் தெரிந்துவிட்டதென்பதும் எமக்குத் தெரியும்”

“தனக்குத் தெரிந்தது தெரிந்ததும், நாம் ஏற்பாடுகளைத் தொடர்வதைக் கண்ட எதிரி, தனது நிலைகளை மேலும் பலப்படுத்திய போதும், நாம் எம் திட்டத்தில் சிறு மாற்றங்கள் செய்தோமே தவிர கைவிட்டுவிடவில்லை.

எல்லாக் கவசமும் அணிந்த “கோலியாத்” ஆக பூநகரி முகாம் போர்க்கோலம் பூண்டு நின்ற போதும், இறுமாந்திருந்த அரக்கனும் சிறுவனும் போலான போதும் எம்மைக் “குறிதவறாத தாவீதாய்” ஆக்கினர் எம் வேவு வீரர்கள்.

வேவு வீரர்களாகப் பணியாற்ற எல்லோராலும் முடியாது. விடுதலைப் புலிகளிலும் எல்லோராலும் முடியாது. வேவு வீரனின் ஒவ்வொரு நாள் வாழ்வும், வாழ்வுக்கும் – சாவுக்கும் இடையேயான போராட்டம்; அந்தப் போராட்டத்தின் ஒவ்வொரு நகர்வும் – ஒவ்வொரு அசைவும் அவனது உயிர் வாழ்விற்கான சாத்தியத்தையும் அசாத்தியத்தையும் மட்டுமல்ல, எம் போராட்டத்தின் புத்துயிர்ப்பையும், எம் மக்களின் புது வாழ்வையும் தீர்மானிப்பதாய் அமைந்தன.

வேவுப் பணியில் ஈடுபடுபவர்களின் கடமை தனித்துவமான பல பண்புகளைக் கொண்டது. கடும் உழைப்புக்கு ஈடு கொடுக்கக்கூடிய உடல்வலு உள்ளவர்களாகவும், தொடர்ச்சியான – கடுமையான வாழ்க்கை முறைக்கு நின்றுபிடிக்கத்தக்க சகிப்புத் தன்மை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

நிலவில்லாத முழு இரவில், நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் இடங்களை அடையாளம் கண்டு, மைல்க் கணக்கான தூரத்தைப் பாதைகளற்ற, பாதுகாப்பானது எனத் தீர்மானிக்கும் பகுதியால், நடந்து கடக்க வேண்டும்.

குறைந்தளவிலான நேரத்தில், முழு இருட்டில் பார்;ப்பவற்றை சரியானபடி விளங்கிக்கொள்ளத்தக்க அவதானிப்புத்திறன் வேண்டும்.

அரைகுறையாகத் தெரிபவற்றை வைத்து முழு முகாம் அமைப்பையும் மதிப்பிடக்கூடியளவிலான இராணுவ அறிவுடன், திட்டமிடலுக்கான ஆலோசனை வழங்கக்கூடியவாறும், திட்டத்தின் பாதகமான அம்சங்களை வெளிப்படுத்தும் அளவிற்குமான இராணுவ வல்லமை வேண்டும்.

இவ்வளவுடனும் இலட்சியத்திற்காக உயிரைத் துச்சமெனச் செயற்படுத்தும் மனப்பக்குவம் வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக அடுத்த நாள் வாழ்வுக்கான, அடுத்த மணிநேர வாழ்வுக்கான, அடுத்த கண வாழ்வுக்கான உத்தரவாதம் ஏதுமில்லாது தொடர்ச்சியான மன இறுக்கத்துடனான வாழ்வை, ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு கொள்கைப் பிடிப்புடன், மன உறுதி கொண்டவர்களாயிருத்தல் வேண்டும்.

என்னதான் கடுமையான வாழ்க்கை எனினும், அதனை இயல்பானதாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவமும், இலட்சியப்பற்றும்தான் அவர்களை இயக்கிக் கொண்டிருந்தன. உயிர்வாழ்வின் கடைசி அத்தியாயத்தை எட்டிப் பார்த்துவிட்டு வந்த அவர்களின் பேச்சில் தொனிக்கும் நம்பிக்கை மட்டுமல்ல – நகைச்சுவையும் அலாதியானது!

இப்படித்தான் ஒருமுறை எதிரி முகாமின் ஒரு பகுதியில் வேவு வேலையில் ஈடுபட்டிருந்தான் ஒரு போராளி. ஒருபகுதியில் எதிரிகண்டுவிட்டு அடிக்கத் தொடங்க, அதில் சுட்டுத்தப்பி வேறொரு பகுதிக்குப் போய்ச் சேர, அங்கும் எதிரிகள் கண்டு சுடத்தொடங்க…… அவற்றுக்குள்ளால் மீண்டுவந்து அடுத்தநாள் அதைப் பற்றிக் கதைக்கும் போது:

“அப்பா அடிக்கிறார் என்று அம்மாட்டை ஓடினால், அம்மாவும் அடிச்சா எப்படி இருக்கும்? அப்படி இருந்தது” என்றவன், பலதடவை எதிரி முகாமுள்ளே அடிபட்டுத் தப்பி வந்து சேர்ந்தவன், ஒருமுறை வர முடியவில்லை; வரவில்லை.

அவ் வேவு வீரர்களிடம் இருந்த பொறுப்புணர்வு அற்புதமானது. குறிப்பிட்ட இராணுவ நிலை மீதான தாக்குதலைச் செய்வதற்கான அணியினரை அழைத்துச் செல்லும் பொறுப்பு, தெரிந்தெடுத்த ஓரிரு வேவுக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும்.

அதன் பின்னர் அவனது சிந்தனை எல்லாம் குறிப்பிட்ட அணியினரின் வெற்றி, மற்றும் வெற்றிக்கான பாதை திறப்பு என்ற வட்டத்தினுள் வந்துவிடும்.

‘ஒப்பரேசன் தவளை’ நடவடிக்கைக்காகத்தான் முதன் முதலில் எமது மகளிர் அணியினர் வேவு வேலையில் ஈடுபட்டனர்.

ஆரம்பத்தில் அனுபவம்மிக்க ஆண் போராளிகளின் வழிகாட்டலில் செயற்பட்ட அவர்கள், ஒரு கட்டத்தில் “ஏன் நாம் தனித்துச் செயற்படக்கூடாது” என்று குரலெழுப்பி, “மௌனமாய்ச் சிரித்த தலைவருடன் சண்டை போட்டு தனியான வேவு அணியினராக செயற்பட்டதுடன், தாக்குதலில் ஈடுபட்ட ஆண் போராளி அணிகளுக்கான வழிகாட்டிச் செல்லும் பொறுப்பையும் திறம்படச் செய்தனர்.

“அந்தப் பிள்ளையள் இல்லை எண்டா அங்கால் பக்கத்தாலை சரியாகக் கஸ்டப்பட்டிருப்பம்” என்று, அவ்வணியின் தளபதி மனமாரச் சொல்லும் வண்ணம் திறம்படச் செயற்பட்டனர்.

பூநகரிச் சமரில் எமது மகளிர் அணியின் வேவுப் பிரிவினர் நால்வர் வீரச்சாவடைந்தனர்.

சம நேரத்தில் பலமுனைகளில் தாக்குதல் திட்டமிடப்பட்டதால், எல்லா முனைகளிலிருந்தும் ஒரேயடியாக வேவு நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

ஏதாவது ஒரு பகுதியில் அனுபவக் குறைவினாலோ, திறமைக் குறைவினாலோ வேலைகள் அரைகுறையாக இருக்கும்; அல்லது வேலைகளைப் பூரணப்படுத்தவென உள்ளே சென்ற வேவு வீரன் திரும்பி வராமலே மடிந்து விட்டிருப்பான்.

அந்த வேளையில் தனது வேலையைத் திறமையாக நிறைவு செய்து காத்திருப்பவனிடம் பொறுப்புக் கைமாறும்.

தான் பார்த்த எல்லா நிலைமையையும் புதிதாய் ஒருவனுக்கு ஒவ்வொன்றாய்க் காட்டிவிட்டு தனது புதியபகுதி நோக்கி நடப்பான் அந்தப் புலிவீரன்.

சில அணிகள் ஓரிரு வேவு வழிகாட்டலிலேயே நீண்டதூர நகர்வினை மேற்கொள்ள வேண்டியிருக்கும் போது தான், அவன் தனது பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பிப்பான்.

வேவு வீரன் ஒருவனுக்கு மைன்ஸ் வெடித்துக் கால் இல்லையென்றால்? என்ற கேள்விக்கு, “துண்டுபட்ட காலை இறுக்கிக் கட்டிவிட்டு என்னைத் தூக்கினால் நான் காட்டிச் செல்வேன்” என உறுதியாகப் பதிலளித்தனர் எமது வேவு வீரர்கள்.

மிகக் குறைந்த ஓய்வுடன் தொடர்ச்சியான பணியில் ஈடுபடும் வாழ்வில், தொடர்ந்து பல நாட்களுக்கு நல்ல உணவோ ஆறுதலான தூக்கமோ அவர்களுக்கு வாய்ப்பதில்லை.

கையையும், காலையும் எறிந்துவிட்டு அவர்கள் படுத்திருப்பதைப் பார்த்தால் பாவமாய்த்தான் இருக்கும்!

இராத்திரி வேலை முடிந்து திரும்பி வந்து ‘மைப்’ வேலை எல்லாம் முடிந்து படுக்க நேரம் எப்படியும் பதினொரு மணியாகிப் போயிருக்கும்.

எழுப்பத்தான் வேண்டும், இப்ப எழுப்பினாத்தான் நேரம் சரியா வரும். எழும்பி எல்லா வேலையும் முடிந்து முதல் பார்த்ததில் உள்ள சந்தேகங்கள் எவை எனவும், புதிதாய் பார்க்க வேண்டியவை எவை எனவும் கேட்டு முடித்துவிட்டுப் புறப்படும் போது, அநேகமாய்ச் சூரியன் பூநகரிக்குப் பின்னால் மண்டைதீவுக்குள்ளே மறைந்து கொண்டிருப்பான்.

மெதுவாகச் சத்தமின்றி நகர வேண்டும். நிலையாய் நிற்பதற்கும் நகர்வதற்கும் இடையே வித்தியாசம் காணமுடியாதபடியான மெதுவான நகர்வு; சிறுதவறும் அவனையும் தோழர்களையும் ஆபத்துக்குள்ளாக்கும்இ அழித்துவிடும்.

முகாமின் வெளிக் காவலரண் வேலியை ஊடறுத்துச் செல்வதென்பது மிகவும் கடினமான பணி. ஒன்றன்பின் ஒன்றாக முட்கம்பிச் சுருள்களும் – நிலத்தின் மேல் அரையடி உயரமாய் முட்கம்பி வலைப்பின்னலும்; காலை வைத்தால் எடுக்க முடியாது.

இதைவிட ஒவ்வொரு அடி வைக்கும் போதும் – அந்த இடமும் கண்ணிவெடியாய் இருக்கலாம் – படுத்திருந்து அங்குலம் அங்குலமாகக் கண்ணிவெடியைப் பரீட்சித்தபடி நகர வேண்டும்.

இராணுவ முகாமைச் சுற்றிய எல்லாப் பகுதியும் கண்ணிவெடிகளால் சூழப்பட்டிருக்குமென்பது சாதாரண விடயம்தான். ஆனால் நிலவில்லாத முழு இரவில், சத்தம் ஏதும் இன்றி இரகசியமாய், கண்ணிகளின் ஊடே ஊர்ந்து செல்வது என்பது, அதுவும் இயந்திரத் துப்பாக்கியுடனும், பளீரென மின்னும் ஒளி விளக்குடனும் காத்திருக்கும் எதிரிக்கு முன்னே நகர்ந்து செல்வது என்பது சாதாரண விடயமல்ல.

படுத்திருந்து மெதுமெதுவாய் கையால் தொட்டுணர்ந்து, கண்ணிவெடி என நினைத்தெடுப்பது கல்லாய் இருக்கும்; கல்லென நினைத்து கவனமின்றி எடுக்க அது கண்ணியாய் இருந்து தொலைக்கும்.

வேவு வீரர்களுக்கு கண்ணிவெடி வெடிப்பது காலில் மட்டுமல்ல.

இப்படித்தான் ஒருமுறை கம்பிச் சுருள்களுக்கிடையில் எதிரியின் மைன்ஸ் ஒன்று வெடிக்கிறது. வெளிச்சத்தில் தேடிய எதிரி முன்னேற முற்பட்ட போது, அழைத்துச் சென்ற பெண் போராளியை பத்திரமாய் அனுப்பிவிட்டுஇ குப்பி கடித்தான் ஒரு போராளி.

இருளின் கவசத்தில் நகரும் புலியின் முன்னே, எதிரி. ரவையை மழைபோல் பொழியத் தயாரான இயந்திரத் துப்பாக்கியுடன்…… பளீரெனக் கண்களைப் பறிக்கும் ஒளியைப் பாய்ச்சித் தேடுவான்.

எதிரியின் ஒவ்வொரு காவலரணிலும் பிரகாசமான சிறு சிறுஇ ‘லைற்’ கள் இருந்தபோதும், முழு முகாமையும் சுற்றி இடையிடையே பெரியதும் பிரகாசமானதுமான லைற்களால் அடிக்கடி சுற்றி சல்லடை போட்டுத் தேடி அவதானிப்பான் எதிரி. அவற்றைவிடத் தனியாக ‘ஓரிடத்தில் இருந்து மறு இடத்திற்கு’ நகர்ந்துகொண்டிருக்கும் ‘சுத்துச் சென்றிக்காரன்’ தனது பங்குக்கும் எல்லா லைற்களாலும் தேடியபடி போவான்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக நாகதேவன்துறையில் ஒன்றும், ஆலடிச்சந்தியில் மற்றதுமாய், “பெரிய அரக்கனின் சூரியக் கண்கள் போல்” சுழலும் இரண்டு பெரும் தேடொளிகள்.

யாழ். குடாவின் மற்றக் கரையில் இரவுப் பயிற்சியில் கள்ளமடிக்கும் பெடியளை றெயினிங் மாஸ்ரரிடம் பிடித்துக் கொடுக்கவல்ல பிரகாசமான – அந்தச் சூரியக் கண்கள் திறக்கும்போது, அங்குள்ள முழு நிலவும் பகலாகும்.

இருளின் கவசம் அகன்று பறக்கும்.

ஒரு சாதகமான பாதையைக் கண்டுபிடிக்க வாரக்கணக்காகப் போராட வேண்டும். நகரும் பாதையில் மனித நடமாட்டத்திற்கான எந்தத் தடயத்தையும் விட்டுவிடக்கூடாது. வாரக் கணக்கில் போராடிக் கண்டுபிடித்த பாதையில் ஒரு சிறு தடயத்தை விட்டாலும் எதிரி உ~hராகிவிடுவான்; அந்தப் பாதை அடைபட்டுவிடும். அங்கே ஒரு எல்.எம். ஜீயோ ஜீ.பி.எம். ஜீயோ புதிதாக முளைத்துவிடும்.

கும்மென்ற இருட்டில், அவர்களுக்கு மட்டும் தெரிந்த குறிப்புக்களைப் பார்த்து, மணிக்கணக்காக நடக்க வேண்டும். வெளிப்படையாகத் தெரியத்தக்க எந்த அடையாளத்தையும் வைக்காது, மரத்தையும், மண்ணையும், புல்லையும் அடையாளப்படுத்தி நடக்க அதீதத் திறமை வேண்டும்.

எதிரி எங்கும் நிற்கலாம் – இரவின் முழு இருட்டை ஊடறுத்து நகர்பவனைக் காட்டும் ‘நைற்விசன்’ என்னும் இரவுப் பார்வைச் சாதனங்களுடன், ஆங்காங்கே சிறு குழுவாக எம்மவரை எதிர்கொண்டு காத்திருப்பான் – எதிரி.

இருட்டுக் கவசத்தில் செல்லும் புலிவீரனை நோக்கி எதிரியின் துப்பாக்கி அதிரும்.

எதிர்பாராத வேளையில் எதிர் பாராத திசையிலிருந்து ரவை மழையாய்ப் பொழியும்; படுத்திருந்த அரக்கன் எழுந்துவிட்டது போல் தூங்கிக் கிடந்த எதிரி முகாம் உயிர் பெறும்.

எல்லாப் பொயின்ற்றுகளிலிருந்தும் துப்பாக்கிகள் இயங்கத் தொடங்கும் போது, ஆள் இல்லையென நினைத்திருந்த பொயின்ற்றில் இருந்தும் எல்.எம்.ஜி. சடசடக்கும்.

“நல்லவேளை டம்மிப்பொயின்ற் என்று – குறூப்பை கொண்டு போயிருந்தா, நல்ல குடவை குடுத்திருப்பான்” என நினைத்தபடி ஓடிக்கொண்டிருக்கையில், பராலைற் வெளிச்சம் போதாதென்று போகஸ் லைற்றும் அடிக்கத் தொடங்கியிருப்பான்.

க்கியூ, க்கியூ என்று தலைக்கு மேலாலும், பக்கத்தாலும் காற்றைக் கிழித்துச் செல்லும் ரவைகளுக்கிடையே ஓடிவந்து பார்த்தால், சகதோழனைக் காணவில்லை.

பயிற்சி முகாமில் கண்டது முதல் இன்றுவரை – இதோ இப்போது வரை – ஒன்றாய் வாழ்ந்த நண்பன், ஒரு கோப்பையில் உண்டு, பாயில்லாமல் ஒரு பற்றையில் உறங்கி ஒன்றாய் வாழ்ந்த நண்பனைக் காணவில்லை……

இது எம் நிலந்தான். ஆனால், எதிரி முகாமின் உள்ளேயே…… “உனக்கு காயம்பட்டு விட்டதா? எங்கேயடா நிக்குறாயென் தோழனே……” என்று குரல் வைத்துக் கூப்பிட முடியாது, காத்திருந்து பார்த்திருக்கும் வேளை கொடுமையானது.

இன்னொரு வேளை “நீங்கள் இதில் நில்லுங்கள்; நான் உள்ளே போய் கிளியர் பண்ணிக் கூப்பிடுகிறேன்” என்று சொல்லிப் போவான் ஒரு தோழன்.

மரத்துடன் மரமாய், பற்றையுடன் பற்றையாய், புல்லுடன் புல்லாய், நிலத்துடன் நிலமாய், நீருடன் நீராகக் கலந்து மணிக்கணக்காக, நாட்கணக்காக – காத்திருந்து பார்த்திருந்து மீளும் வேவு வீரனை எண்ணித் தோழர்கள் காத்திருப்பர் – வெளியே.

‘என்ன இன்னும் காணவில்லை’ என நினைத்திருக்கும் வேளைஇ உள்ளே போனவன் வந்ததும் உண்டு; வராமலே விட்டதும் உண்டு.

தனிமையில் தன்னையும், கையில் உள்ள ஆயுதத்தையும், கழுத்தில் உள்ள குப்பியையும் நம்பி ஆயிரம் பகைவன் உள்ள எதிரிப் பாசறைக்குள் தன்னந் தனியாய் நுழையும் வேவு வீரனின் எண்ணங்கள் எங்கெங்கோ ஓடும். நீரில் மூழ்கி, மழையில் தோய்ந்து, ஈரத்தில் ஊறி எல்லாம் ஈரமாய் நடக்கும் வேளை, அரப்புவைத்து முழுகவிட்டு, ஈரம் துடைத்து, தலைக்குப் பவுடரும் போட்டுத் தேய்த்துக் காயவிட்டு “சாப்பிடடா மோனை” என்று கொஞ்சும் அம்மா…… நினைவுக்கு வராமலா போவாள்!

உடலெங்கும் நுளம்பு மொய்த்து கண், காது, மூக்கு என எங்கும் கடித்துத் தின்ன, கலைக்கவும் மாட்டாது குளிரில் நடுநடுங்கி வாடும்வேளை, சும்மா படுத்ததைக் கண்டு போர்வையால் மெல்லப் போர்த்து அன்பாய்த் தடவிப் போகும் அப்பா…… நினைவுக்கு வராமலா போவார்?

அதற்கும் மேலாய், எல்லாவற்றிற்கும் மேலாய் இது எங்களின் நாடு, எம்மக்களின் பூமி என்ற நினைவு மேலோங்கும்.

கடுமையான பயிற்சியும், கடினமான முயற்சியுமே வெற்றிக்கு அடிப்படை என அடிக்கடி உரைக்கும் தலைவனின் நினைவும் மேலோங்கும்.

“நீ இதில் நில், நான் உள்ளே போகிறேன் வெடிச்சத்தம் கேட்டால் நீ திரும்பிப் போ – நான் வருவேன்” என்று கூறிவிட்டுச் சென்று, வராமலே போய்விட்ட உயிர்த்தோழன் நினைவுக்கு வருவான்.

மெல்ல நகர்கையில் தடக்கி விழுத்திய வயலின் வரம்பு, ‘இப்ப முதல் உழவு உழுதிருக்க வேணும்……’ என்ற நினைப்பில் அவனை ஆழ்த்தும்.

சுதந்திரமாய் நீந்திக் குளித்த குளமும், ஏறிக் குதித்த மாமரமும் இன்று பகைவனின் பாசறையாய் ஆனதை எண்ணி நெஞ்சு கனக்கும்.

எங்களது தாய் மண்ணைப் போலவே அழகான யாழ்ப்பாணக் கடலேரி! அழகான அந்தக் கடலேரியின் உள்ளேதான் எத்தனை கொடுமையும், துயரமும்?

நேரம் நீண்டு செல்லும். தண்ணீரில் நடந்தும்இ மிதந்தும், வலித்தும் செல்லும் வேவு வீரனின் எண்ணங்கள் எங்கெங்கோ சுற்றும்.

கத்தியுடன் வந்த பகைவனைப் பார்த்துக் கும்பிட்ட அந்த அம்மா “என் அம்மாவைப் போலொரு அம்மா” – வெட்டுண்ட தலையுடன் இந்தத் தண்ணீரில் தானே மிதந்தாள்?

முத்தமிட்டு ‘டாட்டா’ காட்டிய சின்னவள் சொன்ன பொம்மையுடன் வந்த அப்பா – “என் அப்பாவைப் போலொரு அப்பா” – இந்தத் தண்ணீரில்தானே மிதந்தார்? “அப்பா எப்ப பொம்மையுடன் வருவார்?” என்ற பிள்ளையுடன் அம்மா கண்ணீரில் குளித்திருந்த போது, அப்பா இந்தத் தண்ணீரில்தானே கரைந்தார்?

எங்களது சொந்தங்களும் உறவுகளும் கலந்து கரைந்த உப்புநீர், எம்மக்களின் குருதி கலந்த நீர்; குருதியுடன் உயிரும் கலந்த நீர். எம் மக்களின் குருதியும் உயிரும் கலந்ததாலோ அந்தத் தண்ணீரில் நனைகையில் புதிய உணர்வு பிறக்கிறது!

“மேனியைத் தழுவும் தண்ணீரைத் தடவி, வாயில் எடுத்து மெதுவாய் உமிழும் போது…… உப்புக் கரிக்காது”

யாழ். நீரேரிக்கும் எம் வேவு வீரர்களுக்கும் இடையேயான உறவு ஆழமானது. அன்பு கொள்வதும் கோபப்படுவதுமாய் அவர்களின் நட்பில் பல கதைகள்……

மாலை மென்னிருட்டில், தூரத்தே தெரியும் வெளிச்சத்தை பார்த்தபடி இடுப்பளவு தண்ணீரில் நடக்கத் தொடங்கும் போது, அந்தக் கடல் மகள்…… எங்கள் யாழ்ப்பாண நீர்நங்கை அற்புதமான அழகிதான்!

கூட்டமாய்த் துள்ளும் திரளியும், வரிசையாய்ப் பறக்கும் கொக்குகளுமாய் அழகை ரசித்தபடி நடக்கையில், வழிமாறி வந்த பெரிய மீன் ஒன்று காலில் இடற, என்னவோ ஏதோவென்று பாய்ந்து விழுபவனை எல்லோரமாய்ச் சேர்ந்து தாட்டு மிதத்தி……

‘றெக்கி’ வேலை முடிந்து பசியும் களைப்புமாய் உடல் சோர்ந்து, அதிகாலையில் பிறை நிலவைப் பார்த்தபடி திரும்புகையில், அவன் பேசாமல்தான் வருவான்.

என்னில் என்ன கோபமோ என்று, கடல் மகள் மெல்லக்குமுறி ஆர்ப்பரிக்க, இடுப்பளவாய் இருந்த நீர்மட்டம் மேலேறி, மேலே மேலே ஏறி, நுனிக்காலுக்கும் எட்டாத் தண்ணீராய் மேலெழுந்து நிற்கையில், கடல் மகளின் காதல் போய் எம்வீரர் தத்தளிக்கத் தொடங்குவர்.

முகாம் வேவுப்பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்டு திரும்பி வந்த எம் வேவு அணியினர், கடலில் தம் தோழனை இழந்த சோகத்துடன், கடல் மகள் மேல் கோபத்துடன் மீண்டதும் உண்டு.

பௌர்ணமியும் அமாவாசையும், நிலவின் உதயமும் மறைவும் கடல் நீரேரியில் நிகழ்த்தும் மாற்றம் அற்புதமானது.

நிலவின் உதயத்தில் அமைதியாய் இருக்கும் கடலேரி. நேரம் செல்லச் செல்ல, பெருங்கடலில் இருந்து மெதுவாக உள்ளே வரத் தொடங்கும் நீரோட்டம்.

ஆளை இழுக்கும் வேகம் பெற்று – உச்சவேகம் பெற்று, நீர்மட்டம் உயர்ந்து மெதுவாய்த் தணியும்.

பின்னர் நிலவு மறையத் தொடங்க கொஞ்சம் கொஞ்சமாய் கடலுக்குத் திரும்பும் தண்ணீர் வேகம் பெற்றுஇ உச்ச வேகம் பெற்றுத் தணிந்து, நிலவின் அடுத்த உதயத்தைப் பார்த்துத் தணித்திருக்கும் நீரோட்டம்.

பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசையானது, நீர்மட்டத்திலும், நீரோட்டத்திலும் ஏற்படுத்தும் ஜாலத்தைத் துல்லியமாய் ரசிக்கலாம் யாழ். கடலேரியில்.

இந் நீரேரி புலிவீரர்களுடன் மட்டுமல்ல, எம் தாயகத்தின் நிலத்துடன் மட்டுமல்ல, எம்மினத்தின் நீண்ட வரலாற்றுடனும் பின்னிப் பிணைந்தது.

நீண்ட வரலாற்றின் பல்வேறு காலங்களில், அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்கொண்டது எமது மண். போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆக்கிரமித்ததும், பின்னர் அதிகார மாற்றம் ஏற்பட்டு ஈழத்தமிழர் சிங்களவர்களின் அடிமைகளாய் கைமாற்றமானதும், தொடர்ந்தும் தமிழர்கள் அடிமைகளாய் இருக்க மறுத்துப் போராடியதால் சிங்களவர்கள் தமது அதிகாரத்தை இந்தியர்களிடம் கைமாற்றிக் கொடுத்ததும்இ இந்தியர் சிங்களவர்களிடமே அதிகாரத்தைக் கொடுத்துவிட்டுப் போய்ச் சேர்ந்ததும் என, தமிழீழ மக்கள் மீதான ஆக்கிரமிப்பு நீண்ட பெரும் தொடர் வரலாறு.

போர்த்துக்கீசர் கையில் யாழ்ப்பாணமும், ஒல்லாந்தர் கையில் கொழும்புடன் பிறபகுதிகளுமாகப் பிடிபட்டிருந்ததாம். போர்த்துக்கீசர் கையிலிருந்த யாழ்ப்பாணத்தைப் பிடிக்க வந்து மன்னாரில் தரித்திருந்த ஒல்லாந்துப்படை, அடம்பன் வழியாக பூநகரி வந்து, பூநகரியில் இருந்து இந்த ‘யாழ் நீரேரி’யூடாகச் சாவகச்சேரி வந்து, பின்பக்கத்தால் போர்த்துக்கீசரை மோதி அழித்து, யாழ்ப்பாணத்தைப் பிடித்து தமிழர் மீதான அடிமைக் கைமாற்றம் நிகழ்ந்ததாம்.

எம்மை அடிமைகொள்ள வந்த அந்தியப்படை நடந்த அதே நீரேரியில், எம்மக்களை விடுவிக்க இன்று எம் வேவு வீரர்கள் நடக்கிறார்கள்.

எம்மை அடிமைகொள்ள வந்த பகைவன் நடந்த பாதையில், எம் நாடு எமக்கே சொந்தம் என்ற இறுமாப்புடன் எம் வீரர்கள் நடப்பது கண்டு, யாழ். நீர்நங்கை சிரிக்கிறாள்.

அன்று பகைவனைப் பார்த்து அஞ்சி ஒடுங்கி, அழுது நடுநடுங்கி வாழ்ந்த எம் பெண்டிரின் பேத்தியின் பேத்திகள், இன்று நிமிர்ந்த நெஞ்சுடன் வேவுப் புலி வீரராய்ப் பகைவனைத் தேடிப் புறப்படும் காட்சி கண்டு, யாழ். நீர்நங்கை சிரிக்கிறாளோ!

அந்த யாழ். நீர்நங்கை எல்லாம் அறிந்தவள். பகைவனின் கரையில் ஏறிய புலிகளில் எதிரியின் துப்பாக்கி தீ உமிழ்ந்ததும், பக்கம் ஒருவராய் நீரில் வீழ்ந்து சரிந்த எம் வீரரில் ஒருவனுடல் பகைவன் கையில் வீழ்ந்ததும்.

“அது எது” வென நெருங்கிய எம் மீனவர், “ஐயோ எம்பிள்ளை” எனத் துடித்துத் தூக்கியதும் இந்தக் கடல்மகள் அறிவாள்.

தூரத்தே எதிரி சுடும் சத்தம் கேட்டு, அது எதற்கோ……? எம்மவரைக் கண்டு சுட்டானோ……? போன எம் தோழன் வீழ்ந்துவிட்டானோ……? எனக் கலங்கிக் காத்திருந்து, காலைவரைக் காத்திருந்து……

மிதந்து வந்த தோழனை அள்ளி எடுத்தழுததும், மீண்டு வந்த தோழனை அணைத்து ஆடி மகிழ்ந்ததும், இந்தக் கடல்மகள் அறிவாள்.

வெற்றிலைக்கேணி, வளலாய், மண்கிண்டிமலை, பூநகரி என எம் ஒவ்வொரு வெற்றிக்கும் வித்திட்டவர்கள் எம் வேவு வீரர்கள்.

எம் தாயகத்தைச் சிதைத்தழிப்போம் எனச் சபதமிட்டு, யாழ் நகரைப் பிடிக்கவெனத் திட்டமிட்டுச் செயற்படுத்த முனைந்த வடபகுதியின் படைத்துறைத் தலைமையை, அராலியில் வைத்து அழித்தொழித்தவர்கள் எம் வேவு வீரர்களே.

குறிப்பாக தமிழீழ நாட்டின் பெருவெற்றியாய் அமைந்த ‘ஒப்பரேசன் தவளை’ நடவடிக்கையில் வேவு வீரர்களின் பங்கு மகத்தானது.

வெற்றிலைக்கேணி வெற்றிக்கு வித்திட்ட சிவாஜி.

மண்கிண்டிமலையின் வரலாற்றுக்கு வழிகாட்டிய றொகான், ரமணன், பனம்பாரன்.

பதவியா கொங்கேவேயவின் வெற்றிச்சிற்பிகள் மழலேஸ், நித்தி.

பூநகரி கேணல் மீதான கண்ணிவெடிக்கு தர்மேந்திராவுடன் கண்ணிவெடி சுமந்த குருவேல் என்று, பூநகரி வெற்றியில் வித்தான வேங்கைகள் பற்பலர்.

அவர்களது முயற்சியால், அர்ப்பணிப்பால் இன்று எம் தாயகம் வெற்றிக்களிப்பில் மிதக்கிறது.

வீழ்ந்த வேங்கைகளின் தோழர்கள் தம்புதிய இலக்குகளை நோக்கி, அதே இருளின் கவசத்தில், அதே தேடொளிக்கு மறைந்து நகர்கின்றார்கள். இலக்கு புதியது, கையில் உள்ள ஆயுதம் புதியது, அவர்களது அனுபவமும் புதியது.

ஆனால் நினைவில் மட்டும் அவர்களது அதே தோழர்களும், அதே இலட்சியமும் தான்!

Kapdan-Raman-.jpg

கப்டன் ராமன்
ஏரம்பமூர்த்தி டேவிட்
கன்னங்குடா, மட்டக்களப்பு
25.03.1974 – 05.01,1993

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, கல்முனைப் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வீரச்சாவு.

Lep.-Veerabandiyan-Tamilmaran-.jpg

லெப்டினன்ட் தமிழ்மறவன் / வீரபாண்டியன்
மேகவண்ணன் பூசங்கர்
ஒலுமடு, வவுனியா
27.05.1975 – 24.08.1993

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, ஞானிமடக் கடற்படை முகாமை வேவு பார்க்கச் சென்றபோது வீரச்சாவு.

Lep.-Mazhales-Mazhalesvvaran-.jpg

லெப்டினன்ட் மழலேஸ்வரன் / மழலேஸ்
செல்லத்தம்பி விநாயகர்
நெடுங்கேணி, முல்லைத்தீவு
12.06.1972 – 24.08.1993

வன்னியில் நடாத்தப்பட்ட கோன்கோவேய மினிமுகாம் தகர்ப்பிற்கு சிறப்பாக வேவு பார்த்தமைக்காகத் தமிழீழத் தேசியத் தலைவரிடம் பரிசு பெற்றவர்.

மண்கிண்டிமலை முகாம் மீதான “இதயபூமி 01” தாக்குதலுக்காக சிறப்பாக வேவு பார்த்து, வழிகாட்டியாகவும் செயற்பட்டவர்.

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, ஞானிமடப் பகுதிக்கு வேவு பார்க்கச் சென்றபோது வீரச்சாவு.

Lep.-Rasnes-Radnam-.jpg

லெப்டினன்ட் ரட்ணேஸ் / ரட்ணம்
சிறிதர் உமாச்சந்திரன்
பிரதான வீதி, மன்னார்.
07.03.1973 – 17.08.1993

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, கல்முனைப் பகுதியிலுள்ள பந்தலடி முகாமில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வீரச்சாவு.

Lep.-Kengatharan-Kangaa-.jpg

லெப்டினன்ட் கெங்காதரன் / கங்கா
கண்ணையா முத்துக்குமார்
பாரதிபுடம், மட்டக்களப்பு
03.07.1970 – 22.02.1993

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, பள்ளிக்குடாப் பகுதியை வேவு பார்க்கச் சென்றபோது வீரச்சாவு.

Lep.-Ravikkumar-.jpg

லெப்டினன்ட் ரவிக்குமார்
சிவகுரு யுவராஜா
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
19.09.1970 – 30.05.1993

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, ஞானிமடப் பகுதி வேவுவேலையை திறம்படச் செய்தவர். பின்னர் வேவுக்காக சென்றபோது மைன்ஸ் வெடித்ததால் குப்பி கடித்து வீரச்சாவு.

Lep.-Pathmasilan-.jpg

லெப்டினன்ட் பத்மசீலன்
அழகையா காந்தரட்ணம்
ஏறாவூர், மட்டக்களப்பு
09.03.1973 – 15.06.1993

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, ஞானிமடப் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வீரச்சாவு.

Lep.-Ilango-Ilanthevan-.jpg

லெப்டினன்ட் இளந்தேவன் / இளங்கோ
தர்மலிங்கம் சிறிதரன்
பூநகரி, மன்னார்
15.07.1970 – 07.091993

இவர் 1992ம் ஆண்டு இடம்பெற்ற சங்குப்பிட்டி – பூநகரி பாதையிலுள்ள “றவுண்டபோட்” பகுதியிலான தாக்குதலுக்காக சிறப்பாக வேவு பார்த்தவர்.

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி பல பகுதிகளையும் திறமையாக வேவு பார்த்தவர். பூநகரி முகாமினுள் ஊடுருவி வேவு பார்த்துவிட்டு திரும்பும்போது வீரச்சாவு.

Lep.-Aananthan-Selvan-.jpg

லெப்டினன்ட் செல்வன் / ஆனந்தன்
முருகேசுப்பிள்ளை சரவணபவன்
கலட்டி, யாழ்ப்பாணம் (காரைநகர்)
29.09.1975 – 09.091993

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, வாடியடி சந்தியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, எதிரியின் யுத்த டாங்கித் தாக்குதலில் வீரச்சாவு.

Kapdan-Rogan-Kathiravan-.jpg

கப்டன் கதிரவன் / றொகான்
வீரப்பு சந்திரன்
சேமமடு, வவுனியா
31.07.1973 – 10.09.1993

லெப். கேணல் சுபன் தலைமையிலான பள்ளிக்குடாப் பகுதி 62 காவலரண்களின் தகர்ப்பில் சிறப்பாக வேவு பார்த்தமைக்காக தமிழீழத் தேசியத் தலைவரிடம் பரிசு பெற்றவர்.

மண்கிண்டிமலை மீதான “இதயபூமி 01” நடவடிக்கைக்காக திறமையாக வேவு பார்த்து, வெற்றிக்காகப் பெரும் பங்காற்றியவர்.

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, கெளதாரிமுனைப் பகுதியில் வேவு பார்க்கச் சென்றபோது வீரச்சாவு.

2m-Lep.-Panampaaran-.jpg

2ம் லெப்டினன்ட் பனம்பாரன்
தங்கராசா சதீஸ்வரன்
கந்தர்மடம், யாழ்ப்பாணம்
20.04.1976 – 09.09.1993

மண்கிண்டிமலை மீதான “இதயபூமி 01” தாக்குதலுக்காக வேவு பார்த்தவர்.

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, வாடியடி சந்தியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, எதிரியின் யுத்த டாங்கி தாக்குதலில் வீரச்சாவு.

Lep.-Sivam-.jpg

லெப்டினன்ட் சிவம்
சின்னையா கமலேஸ்வரன்
கோப்பாய், யாழ்ப்பாணம் (வளலாய்)
17.05.1969 – 09.09.1993

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, வாடியடி சந்தியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, எதிரியின் யுத்த டாங்கி தாக்குதலில் வீரச்சாவு.

Kapdan-Nires-Aaraavamuthan-.jpg

கப்டன் ஆராமுதன் / நிரேஸ்
குலவீரசிங்கம் தேவபாலன்
மீசாலை, யாழ்ப்பாணம்
16.09.1972 – 23.09.1993

வளலாய் இராணுவ வேலியைத் தாக்கியழித்தமைக்கான வேவு, மாதகலில் இடம்பெற்ற பதுங்கித் தாக்குதலுக்கான வேவு.

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி முகாமை வேவு பார்த்துவிட்டுத் திரும்புகையில் சங்குப்பிட்டி – கேரதீவு கடலில் வீரச்சாவு.

Kapdan-Arularasan-.jpg

கப்டன் அருளரசன்
கணேசன் கருணாநிதி
களுதாவளை, மட்டக்களப்பு
10.09.1974 – 13.10.1993

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, பள்ளிக்குடா முகாமையும், கடற்கரை பகுதியையும் சிறப்பாக வேவு பார்த்து பூரணப்படுத்தியவர். பள்ளிக்குடா பகுதிக்குள் வேவுக்காக ஊடுருவிச் செல்லும்போது வீரச்சாவு.

Lep.-Saththiyaraj-Sengannan-.jpg

லெப்டினன்ட் செங்கண்ணன் / சத்தியராஜ்
முருகேசு திராவிடமுத்து
15ம் கிராமம், அம்பாறை
09.11.1973 – 24.10.1993

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, கெளதாரிமுனைப் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வீரச்சாவு.

Lep.-Neelaventhan-Nadeswaran.jpg

லெப்டினன்ட் நிலவேந்தன் / நடேஸ்வரன்
சுப்பிரமணியம் கண்ணன்
புலோலி, யாழ்ப்பாணம்
26.05.1974 – 11.11.1993

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, ஞானிமடம் முன்னணிக் காவலரண்களை வேவு பாத்ததுடன், தாக்கல் அணிக்கான வழிகாட்டியாக்க வீரச்சாவு.

Kapdan-Niragnchan-.jpg

கப்டன் நிரஞ்சன்
பாபு இராஜசிங்கம்
வற்றாப்பளை, முல்லைத்தீவு
25.07.1972 – 12.11.1993

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக கறுக்காய் பகுதியிலும், நாகதேவன்துறையிலும் வேவு நடவடிக்கையிலும், தாக்குதல் அணிக்கான வழிகாட்டியாக செயற்பட்டவர்.

Kapdan-Thulasiram-.jpg

கப்டன் துளசிராம்
சின்னமணி தாமரைச்செல்வி
கிளிநொச்சி (பருத்தித்துறை)
17.08.1974 – 11.11.1993

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி முன்னணிக் காவலரண் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், ஆண்களின் தாக்குதல் அணிக்கு வழிகாட்டியாகவும் செயற்பட்டவர்களில் இருவரும் ஒருவர்.

Lep.-Ranga-Thinniyan-.jpg

லெப்டினன்ட் திண்ணியன் / ரங்கா
கணபதிப்பிள்ளை கருணாநிதி
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
13.08.1971 – 24.10.1993

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, கெளதாரிமுனைப் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வீரச்சாவு.

Lep.-Niththi-.jpg

லெப்டினன்ட் நித்தி
துரைராஜசிங்கம் சுந்தரேஸ்வரன்
நெடுங்கேணி, முல்லைத்தீவு
25.02.1975 – 30.10.1993

மண்கிண்டிமலை இராணுவ முகாம் மீதான “இதயபூமி 01” நடவடிக்கைக்கான வேவு.

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, கெளதாரிமுனைப் பகுதி இராணுவ முகாம் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வீரச்சாவு.

Kapdan-Kuruvel-.jpg

கப்டன் குருவேல்
சற்குருதாசன் செல்வநேசன்
பாரியாரிகண்டல், மன்னர்
16.12.1970 – 11.11.1993

பூநகரி பகுதியில் ஊடுருவி கேணல் சித்திரப் புஞ்சிகேவா மீது நடாத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலுக்காக தமிழீழத் தேசியத் தலைவரிடம் பரிசு பெற்றவர். லெப். கேணல் சுபன் தலைமையில் நடாத்தப்பட்ட பள்ளிக்குடா காவலரண்கள் 62 மீதான வேவு.

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, வில்லடி முகாம் மீதான வேவுடன் வழிகாட்டியாகவும் சென்றவர்.

Lep.-Magilini.jpg

லெப்டினன்ட் மகிழினி
அருள்வாசகம் சகாயபாமா
செபஸ்ரியார் கோவிலடி, யாழ்ப்பாணம்.
30.04.1974 – 11.11.1993

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, வில்லடி முகாம் முன்னணிக் காவலரண் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், தாக்குதல் அணிக்கு வழிகாட்டியாகவும் செயற்பட்டவர்.

Lep.-Maina-Mani.jpg

லெப்டினன்ட் மைனா / மணி
செல்லையா வசந்தி
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
09.10.1976 – 11.11.1993

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, வில்லடி முகாம் முன்னணிக் காவலரண்கள் மீதான வேவிலும், தாக்குதல் அணிக்கான வழிகாட்டியாகவும் செயற்பட்டவர்.

Lep.-Ilavarasi.jpg

லெப்டினன்ட் இளவரசி
செல்லையா கலாநிதி
ஜெயந்திநகர், கிளிநொச்சி
24.08.1968 – 11.11.1993

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, வில்லடி முகாம் முன்னணிக் காவலரண்கள் மீதான வேவிலும், தாக்குதல் அணிக்கான வழிகாட்டியாகவும் செயற்பட்டவர்.

Lep.-Azhaganambi-Romiyo-.jpg

லெப்டினன்ட் அழகநம்பி / ரோமியோ
கந்தசாமி செந்தில்நாதன்
கொக்குவில், யாழ்ப்பாணம்
17.09.1976 – 13.11.1993

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, ஞானிமடம் பகுதியில் வேவு பார்த்ததுடன், தாக்குதல் உதவி அணிக்கான வழிகாட்டியாகவும் செயற்பட்டவர்.

 

லெப்டினன்ட் செய்யவன் / நேரு
கணபதிப்பிள்ளை தங்கரூபன்
பெரியப்பளை, யாழ்ப்பாணம்
13.11.1993

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி முகாம் வேவு நடவடிக்கையிலும், தாக்குதல் அணிக்கான வழிகாட்டியாகவும் செயற்பட்டவர்.

Lep.-Ramanan-.jpg

லெப்டினன்ட் ரமணன்
சிவஞானம் சிவபாலன்
பன்னாலை, யாழ்ப்பாணம்
01.04.1975 – 13.11.1993

மண்கிண்டிமலை முகாம் மீதான தகர்ப்பிற்கான “இதயபூமி 01” நடவடிக்கைக்கான வேவு நடவடிக்கையில் ஈடுபட்டவர்.

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக வேவு நடவடிக்கையில் ஈடுபட்டு, தாக்குதல் அணிக்கு வழிகாட்டியாகவும் செயற்பட்டவர்.

Mejar-Sembian-Sivaji-.jpg

மேஜர் செம்பியன் / சிவாஜி
சின்னத்தம்பி குமரலிங்கம்
செம்பியன்பற்று, யாழ்ப்பாணம்
25.02.1974 – 13.11.1993

கட்டைக்காடு மினிமுகாம் தகர்ப்பிற்கான வேவிற்காக தமிழீழத் தேசியத் தலைவரிடம் சிறப்புப்பரிசு பெற்றவர். வளலாய்ப் பகுதியில் இராணுவ வேலியைத் தாக்கி அழிப்பதற்கான வேவு.

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, பள்ளிக்குடாப் பகுதி வேவு; பின்னர் வில்லடி பிரதான கட்டளை முகாம் மீதான வேவுடன் பிரதான வழிகாட்டியாகவும் சென்றவர்.

Kapdan-Mukunthan-Kirumani-.jpg

கப்டன் முகுந்தன் / கிருமானி
பிரான்சிஸ் றொபேட் வின்சன்
குருநகர், யாழ்ப்பாணம்
29.08.1973 – 30.11.1992

“ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, கல்முனைப் பகுதியை வேவு பார்த்துவிட்டுத் திரும்பும்போது வீரச்சாவு.

“கெரில்லாப் போர் முறையில் சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தி வந்த நாம், இன்று பாரிய படைத்தளங்களைத் தாக்கி அழிக்கும் சக்தி பெற்றவர்களாக வளர்ச்சி கண்டுள்ளோம். இந்த அபாரமான முன்னேற்றத்திற்கு வேவுப்பிரிவினரின் பங்கு முக்கியமானது. மிகவும் கஸ்டமானதும், மிகவும் சாதுரியமானதும், மிகவும் ஆபத்து நிறைந்ததுமான வேவுப் பணியில் ஈடுபடும் போராளிகள் தரும் தகவல்களைக் கொண்டே தாக்குதல் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன; தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்த முடிகின்றது. வேவு வீரர்களின் துணிகர சாதனைகள் மூலமே, நாம் பூநகரியில் பெரும் சமர் புரிந்து வெற்றியீட்ட முடிந்தது.

வேவுப்பணியில் ஈடுபடும் போராளிகளின் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து நிறைந்தது; உயிருக்கு உத்தரவாதமில்லாதது. இந்தப் பணியின் போது எத்தனையோ அற்புதமான போராளிகளை நாம் பறிகொடுத்துவிட்டோம். இந்த அர்ப்பணிப்புக்களின் பயனாகவே நாம் போர்முனைகளில் பெரும் வெற்றிகளை ஈட்டிக்கொள்ள முடிகின்றது.”
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

நினைவுப்பகிர்வு:
ச.பொட்டு
புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (தை, 1994)

https://thesakkatru.com/the-fighters-responsible-for-the-victory/

  • கருத்துக்கள உறவுகள்

வீரர்களுக்கு வீரவணக்கம் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.