Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீரமங்கை செங்கொடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரமங்கை செங்கொடி

Veeramangai-Mooddiya-Thi.jpg

 

வீரமங்கை செங்கொடி மூட்டிய தீ

“எல்லா போராட்டத்தையும் ஜனநாயக முறைப்படி செய்யறோம். அரசும் போலீசும் நம்ம போராட்டங்களுக்கு பாதுகாப்பு தர்றோங்கிற பேர்ல வேடிக்கை பார்க்குதே தவிர, நம்ம கோரிக்கைகளை புரிஞ்சுக்கறதில்ல, ஏத்துக்கறதில்ல, நிறைவேத்தறதில்ல. இது தெரிஞ்சும் நாம ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப வெவ்வேறு கோரிக்கைகளுக்காக ஒரே மாதிரி அடையாளப் போராட்டமா நடத்தி, முடிச்சுட்டு போயிடறோம். இதனால யாருக்கு என்ன பயன்? வேற போராட்ட வழிமுறைகளை நாம யோசிச்சா, செயல்படுத்தினா என்ன?”

கேட்ட செங்கொடியை உற்றுப் பார்த்தார் சந்திரசேகரன். சுருக்கமாக சேகர். செங்கொடிக்கு சித்தப்பா. குழந்தை முதல் அவர்தான் செங்கொடியை பார்த்துப் பார்த்து வளர்த்தார். 10 வயதில் தன் அப்பாவை காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்து அவருக்கு சிறைத்தண்டனை வாங்கிக் கொடுத்த அந்த விநாடி முதல், இதோ 21 வயது இளம் பெண்ணாக வளர்ந்திருக்கும் இந்த நொடி வரை, செங்கொடிக்கு எல்லாமும் சித்தப்பாதான். சகலமும் ‘மக்கள் மன்றம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம்தான். செங்கொடியின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் சேகருக்கு முழுமையாகத் தெரியும். அதனாலேயே செங்கொடி கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தார். காரணம், இதே கேள்விக்கான விடையைத் தேடிதான் அவரும் பல ஆண்டுகளாக மனதளவில் போராடிக் கொண்டிருக்கிறார்.

அவர்கள் இருவரும் ஆகஸ்ட் 26ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் கை கோர்த்த படி கலந்து கொண்டனர். இதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுவை இந்திய குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. இதனையடுத்து மூவரும் செப்டம்பர் 9ம் தேதி அன்று தூக்கில் இடப்படுவார்கள் என்று சிறை அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள்

இதனை எதிர்த்துதான் அந்த மனிதசங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில்தான் இருவரும் கலந்துக் கொண்டிருந்தார்கள். செங்கொடி கேட்ட கேள்விக்கு ஒருவேளை சற்றுத் தள்ளி கைகோர்த்தபடி நின்றிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வை.கோபால்சாமி விடையளிக்கலாம் என்ற ஆர்வத்தில் சேகர் எட்டிப் பார்த்தார். முழக்கங்கள் எழுப்புவதில் மும்முரமாக இருந்த வைகோ, இவர்களை கவனிக்கவில்லை. சரி என்று சேகரும் அமைதியாகிவிட்டார்.

ஆனால், செங்கொடி அமைதியடையவில்லை என்பதும், அவருக்குள் எழுந்த கேள்விக்கான பதிலை அடுத்த இரண்டு நாட்களில் அவரே கண்டடைவார் என்பதும், தனக்கு சரியென்று பட்ட அந்த விடையை தன் உயிரைப் பணயம் வைத்து உலகுக்கு தெரிவிப்பார் என்பதும், சித்தப்பா சேகர் அறிந்திருக்கவில்லை.

சரியாக ஆகஸ்ட் 28ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்னால் செங்கொடி தன்னைத்தானே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்டார். துடி துடித்து இறக்கும் கடைசி நொடி வரை, ‘மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவரும் அப்பாவிகள்… அவர்களை விடுதலை செய்…’ என்று முழக்கமிட்டபடியே உயிர் துறந்தார்.

“தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியதுபோல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்” – இப்படிக்கு தோழர் செங்கொடி.

என்று அவரால் எழுதப்பட்ட கடிதம் அனைவரையும் படிக்கச் சொல்லி படபடத்துக் கொண்டிருந்தது.

ஜன் லோக்பால் மசோதா கோரி 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹசாரே, தனது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அன்று காலை 10 மணியளவில்தான் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டிருந்தார். அதே தினத்தின் மாலையில்தான், தமிழக மக்களின் போராட்டங்களை ஏற்றுக் கொள்ளாத அரசை கண்டித்து செங்கொடி தன்னைத்தானே எரித்துக் கொண்டார்.

“இப்படி அவ செய்வானு நாங்க நினைச்சே பார்க்கலீங்க…” காஞ்சிபுர மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின் கட்டடத்தை வெறித்துப் பார்த்தபடியே பேச ஆரம்பித்தார் சேகர். நள்ளிரவின் அடையாளம் அந்த மருத்துவமனைக்கு நூறடி தள்ளித்தான் தெரிந்ததே தவிர, பிரேத பரிசோதனை கிடங்கின் வாசல் முழுக்க உக்கிரத்தின் வெளிச்சம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

”பதினொரு வருஷங்களுக்கு முன்னாடி, இதோ இந்த ஆஸ்பத்திரி வாசல்லதான் சரஸ்வதி அழுதுகிட்டு நின்னா. தப்புத் தப்பு செங்கொடினு கூப்பிட்டாதான் அவளுக்கு பிடிக்கும். சரஸ்வதிங்கிற தன் பேரையே அவ மறந்துட்டா. காரணம், அந்தப் பேரை வைச்சது அவ அப்பா.

ஓரிக்கை கிராமத்த சேர்ந்தவங்க நாங்க. எங்கண்ணன் பேரு பரசுராமன். செங்கொடிக்கு தங்கச்சியும், தம்பியும் பொறந்ததும் அவங்கம்மா இறந்துட்டாங்க. உடனே எங்கண்ணன் ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டாரு. ஆனா, சும்மா சொல்லக் கூடாது, வந்த மகராசி செங்கொடியையும் அவ தம்பி, தங்கச்சியையும் தன் கொழந்தைங்க போலவே பார்த்துகிட்டா. அதனாலயே செங்கொடி அந்த மகராசியை ‘சித்தி’னு கூப்பிட மாட்டா. ‘அம்மா’னுதான் வாய் நிறைய கூப்பிடுவா.

எங்கண்ணன் கூலித் தொழிலாளிங்க. நாடாறு மாசம், காடாறு மாசம்னு கிடைச்ச வேலைய செய்துட்டு இருப்பாரு. பல நேரம் வேலையே இல்லாம சும்மாவும் இருப்பாரு. சுபாவத்துல நல்லவரு. ஆனா, அதிகம் குடிப்பாரு. அதனாலயே அப்பப்ப அவருக்கு கிறுக்கு பிடிச்சுக்கும். தன் ரெண்டாவது பொண்டாட்டிய, செங்கொடிய, அவ தம்பி, தங்கச்சிய அது மாதிரி நேரத்துல அடிப்பாரு. தன்னை அடிக்கிறத கூட அந்த மகராசி தாங்கிட்டா. ஆனா, தன்னோட கொழந்தைங்களா நினைக்கிற மூத்தா தாரத்து பசங்களை எங்கண்ணன் அடிக்கிறதை அவங்களால தாங்கிக்க முடியலை.

ஒருநாள் இத தட்டிக் கேட்டாங்க. உடனே எங்கண்ணன், அந்த மகராசி மேல கெரசின் ஊத்தி கொளுத்திட்டாரு. அதிர்ந்து போய் செங்கொடியும், அவ தங்கச்சியும் இத பார்த்துட்டு நின்னாங்க. செங்கொடி சுதாகரிக்கறதுக்குள்ள அவ தங்கச்சி, ‘அம்மா’னு கத்திகிட்டே போய் அந்த மகராசிய கட்டிப் பிடிச்சிகிட்டா. இதைப் பார்த்த செங்கொடி அழுது கூச்சல் போட்டா. அக்கம் பக்கத்துல இருந்தவங்க ஓடி வந்து நெருப்பை அணைச்சு ரெண்டு பேரையும் இதோ, இதே ஆஸ்பத்திரிக்குத்தான் கூட்டிட்டு வந்தாங்க.

கடைசில செங்கொடியோட தங்கச்சியதான் காப்பாத்த முடிஞ்சுது. ‘அம்மா’னு அவ பாசமா கூப்பிட்ட அந்த மகராசிய காப்பாத்த முடியலை. சொன்னா நம்ப மாட்டீங்க. 10 வயசு பொண்ணா, தைரியமா, செங்கொடி அவ அப்பாவ போலீஸ்ல பிடிச்சு கொடுத்தா

‘மக்கள் மன்றம்’ அமைப்போட நான் ஆரம்பத்துலேந்தே தொடர்புல இருக்கேன். என் மூலமா செங்கொடிக்கும் அந்த மன்றத்தோட பழக்கம் உண்டு. அதனால நேரா அவ மன்றத்துக்கு வந்து தங்க ஆரம்பிச்சா. நாலு வருஷம் எங்கண்ணன் வேலூர் ஜெயில்ல இருந்துட்டு திரும்பி வந்தாரு. ஆனா, செங்கொடி அவரை மன்னிக்கவும் இல்ல… ஏத்துக்கவும் இல்ல. இந்த 11 வருஷங்களா தன் அப்பாகிட்ட ஒரு வார்த்த கூட அவ பேசலைனா பார்த்துக்குங்க…

அவள நினைச்சு நான் ரொம்ப பெருமை படுவேன். ஆனா, அவ ‘அம்மா’வ நெருப்புக்கு பறிகொடுத்துட்டு எந்த இடத்துல நின்னு அழுதாளோ… அதே இடத்துல அதே மாதிரி எரிஞ்சு கரிக்கட்டையான அவள பார்த்து நான் அழுவேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலைங்க…” கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்குமாக தத்தளித்தபடி அழுத சேகர், சட்டென்று மேற்கொண்டு பேச முடியாமல் கதற ஆரம்பித்தார்.

காவல்துறையின் சைரன் பொருத்தப்பட்ட வாகனம் ஒன்று ஒலி எழுப்பியபடி யாராவது பிரச்னை செய்கிறார்களா என்று பார்த்துவிட்டு நகர்ந்தது. ஆங்காங்கே சிதறியிருந்த நான்கைந்து காவலர்கள் அந்த இருட்டிலும் கண்ணாடி மூடப்பட்ட வாகனத்தை பார்த்து விறைப்பாக சல்யூட் அடித்தார்கள்.

”இருளர் சமுதாயத்துக்கு எப்படியாவது கல்வி அறிவு கொடுத்து அவங்களை முன்னேற்றணும்ங்கிறதுனுதாங்க என்னோட லட்சியம். அதுக்காகத்தான் கீழ்கதிர்பூர் கிராமத்துல ‘மக்கள் மன்ற’த்தை நடத்திகிட்டு இருக்கேன்…” நடந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் விலகாததால், மகேஷின் (மக்கள் மன்றத்தின் அமைப்பாளர், பெண்) குரல் கம்மியிருந்தது.

”காஞ்சிபுரம் மாவட்டத்துல இருளர் இன மக்கள் அதிகம். அதுல பெரும்பாலானவங்க அவங்க குழந்தைங்களோட செங்கல் சூளைல கொத்தடிமையா இருந்தாங்க. நாங்கதான் பெரிய அளவுல போராட்டம் நடத்தி அவங்கள எல்லாம் மீட்டோம். இதுக்காக சுத்து வட்டாரத்துல இருக்கிற கிராமங்களுக்கு போய் தொடர்ந்து பிரச்சாரம் செய்வோம்.

அப்படித்தான் ஓரிக்கை கிராமத்துக்கு நாங்க போயிருந்தப்ப செங்கொடி எங்களுக்கு அறிமுகமானா. அப்ப அவ 5வது படிச்சுட்டு இருந்தா. ரொம்ப சூட்டிகையான பொண்ணு. அதே நேரத்துல நிறைய கேள்விகள் கேட்டுகிட்டே இருப்பா. எல்லாமே அறிவியல் தொடர்பா இருக்கும். இந்தப் பொண்ணை நல்லா வளர்த்து ஆளாக்கணும்னு நாங்க மன்றத்துல பேசுவோம்.

இந்த நேரத்துலதான் செங்கொடியோட சித்தி இறந்து போனாங்க. அதுக்கு காரணம் அவ அப்பாங்கிறதால திரும்ப அவ தன்னோட கிராமத்துக்கு போக விரும்பலை. நேரா இங்க வந்துட்டா. எங்க அமைப்பை சேர்ந்தவங்கதான் அவள எங்க பொண்ணு மாதிரி வளர்த்தோம். ரொம்ப சாப்ட் டைப். அதே சமயத்துல ரிசர்வ்ட் டைப்பும் கூட. அவளுக்கு எழுத, படிக்கத் தெரியுங்கறதால எங்க கிட்ட வந்ததும் நாங்க வைச்சிருக்கிற புத்தகங்களை எடுத்து, புரியுதோ, புரியலையோ படிப்பா. சந்தேகத்தை கேப்பா. அவள தொடர்ந்து ஸ்கூலுக்கு அனுப்ப நாங்க முடிவு செஞ்சோம். ஆனா, தீர்மானமா பள்ளிக்கு போகறதை மறுத்துட்டா. இங்கேந்தே படிக்கிறேன்னு சொல்லிட்டா. வற்புறுத்தி பார்த்த நாங்க, அவ போக்குலயே விட்டுட்டோம். ஆனா, பிரைவேட்டா அவள படிக்க வைக்கிறதை மட்டும் நாங்க நிறுத்தலை.

எங்க கூடவே நாங்க கிராமங்கள்ல பிரச்சாரம் பண்ண போறப்ப வருவா. ‘நம்ம சமுதாயம் முன்னேறணும்னா நாம எல்லாம் படிக்கணும்’னு தன்னை விட வயசு குறைஞ்சவங்ககிட்ட பக்குவமா எடுத்து சொல்லுவா. வார இறுதில படிக்கிற பசங்களுக்கு நாங்க டியூஷன் மாதிரி எடுப்போம். அப்ப சொல்லிக் கொடுக்கறதுல முதல் ஆளா செங்கொடிதான் வந்து நிப்பா.

அவளுக்கு இசையில ஆர்வம் அதிகம். பறைய எடுத்து அடிக்க ஆரம்பிச்சானா, இன்னிக்கெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாம். எப்படிப்பட்ட வலு உள்ளவங்களும் ஒரு மணி நேரத்துக்கு மேல பறை அடிக்க மாட்டாங்க. கை வலிக்கும். ஆனா, செங்கொடி தொடர்ந்து பல மணி நேரங்கள் விடாம பறையடிப்பா. எங்களுக்கே அதை பார்க்க ஆச்சரியமா இருக்கும். இப்படி கலை மூலமா பிரச்சாரம் செய்யறது அவளுக்கு பிடிக்கும்.

அதனால மனமுவந்து அவ இதை செய்வா. ‘சென்னை சங்கமம்’ல அவளோட நிகழ்ச்சி நடந்திருக்கு. எந்நேரமும் புத்தகமும் கையுமா இருப்பா. ‘இவர்தான் லெனின்’ நூல் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். குறைஞ்சது முப்பது முறையாவது அந்த நூலை படிச்சிருப்பா. அதை மனப்பாடமா ஒப்பிப்பா. ஆனா, அர்த்தம் புரிஞ்சுதான் அவ அப்படி செய்வா.

சேகுவேரா, நெல்சன் மண்டேலா, தந்தை பெரியார், பகத்சிங் நூல்கள்னா அவளுக்கு அவ்வளவு விருப்பம். இவங்களோட புகழ்பெற்ற வாசகங்களை அப்படியே அந்தந்த நேரத்துக்கு எது சரியா இருக்குமோ அப்ப சொல்லுவா.

‘உலகத்தின் எந்த மூலையில் அநீதி நடந்தாலும், அந்த அநீதியை எதிர்த்து எவர் ஒருவர் போராடுகிறாரோ, அவரும் சே-வும் தோழரே…’ங்கிற சேகுவேராவோட வாசகம் செங்கொடிக்கு அவ்வளவு பிடிக்கும்.

ஒருமுறை ஒருத்தர் செங்கொடிகிட்ட… ‘ஏம்மா, படிப்புல இவ்வளவு ஆர்வம் காட்டறியே… பேசாம தபால்ல டிகிரி படி’னு சொன்னாரு. அதுக்கு யோசிக்காம செங்கொடி சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘நான் மக்களை படிக்கறேன். இதுதான் இருக்கிற கல்வியிலயே உயர்ந்த கல்வி. எந்த டிகிரியும் இதுக்கு ஈடாகாது. இந்தப் படிப்பு எனக்கு போதும்…’

இப்படிதான் செங்கொடி, இருந்தா… வாழ்ந்தா. இதுக்காகவே நாங்க நடத்தற அத்தனை ஆர்ப்பாட்டம், போராட்டங்கள்லயும் கலந்துகிட்டா. பத்து நாட்கள், இருபது நாட்கள், ஏன் 60 நாட்கள் கூட இதுக்காக சிறைல எங்களோட இருந்திருக்கா. புழல், வேலூர்னு செங்கொடி பார்க்காத சிறை இல்ல.

பாரதிதாசன் பாடல்கள அவ்வளவு அழகா, உணர்வோட பாடுவா. 2009- மேக்கு பிறகு அவ அதிகம் பாடி ஆடினது, ‘களத்திலிருக்கும் அம்மாவுக்கு கடிதம் எழுதுகிறேன்…’, ‘இமயத்தின் சிகரத்திலே எங்கள் விடுதலையின் முழக்கங்கள்…’

பொதுவா நாங்க இணையத்துல வினவு, கீற்று போன்ற தளங்கள்ள சமூக நிலமைகள் சார்ந்து எழுதப்படற கட்டுரைகளோட பிரிண்ட் அவுட் எடுத்து அதை படிச்சுட்டு விவாதிப்போம். அந்த விவாதங்கள் எல்லாத்துலயும் செங்கொடி பங்கேற்பா. தவறாம தன்னோட கருத்து, விமர்சனத்தை முன் வைப்பா. ஆனா, எந்தச் சூழ்நிலைலயும் நாங்க, தனி நபர் போராட்டத்தையோ அல்லது சமூக நிலை சார்ந்த தற்கொலை முயற்சியையோ ஆதரிச்சதில்ல. அவ்வளவு ஏன், செங்கொடி கூட தன்னோட கருத்தை முன்வைக்கும்போது இதைப் பத்தி பேசினதும் இல்ல. ஆதரிச்சதும் இல்ல.

முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்கு பிறகு அவ ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டா. அதுக்கு பிறகு தொடர்ச்சியா ஈழம் தொடர்பா படிக்கறது, காணொளிகளை பார்க்கறதுனு இருந்தா. ராஜீவ்காந்தி கொலை வழக்குல குற்றம் சாட்டப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தனோட கருணை மனுக்கள் ஜனாதிபதியால நிராகரிக்கப்பட்டதும் நிலை கொள்ளாம தவிச்சா. அவங்க மூணு பேரையும் எப்படியாவது காப்பாத்தணும்னு சொல்லிகிட்டே இருந்தா. அவங்களுக்காக நடந்த அத்தனை ஆர்ப்பாட்டம், போராட்டத்துலயும் கலந்துகிட்டா.

பைக் ரேலி வேலூருக்கு போனப்ப செங்கொடியும் வந்தா. ஆனா, இயக்கம் சார்பா ஒருத்தர்தான் சிறைக்குள்ள போய் அவங்க மூணுபேரையும் பார்க்க முடியும்னு நிலை இருந்ததால என்னை உள்ள அனுப்பிட்டு அவ வேலூர் சிறைக்கு வெளிலயே காத்திருந்தா. நான் திரும்பி வந்ததும் ‘அவங்க மூணு பேரும் எப்படி இருக்காங்க… மன உறுதி எப்படி இருக்கு’னு துருவித் துருவி கேட்டா.

சென்னை கோயம்பேடுல வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருக்கறதை கேள்விப்பட்டதும் அங்க போகணும்னு துடிச்சா. ஆனா, படிக்கற பசங்களுக்கு பாடம் சொல்லித் தர வேலை இருந்ததால அவள நாளைக்கி (ஆகஸ்ட் 29, திங்கள்கிழமை) கூட்டிட்டு போறதா சொல்லியிருந்தோம்…”

அதற்கு மேல் பேச முடியாமல் பல நிமிடங்களுக்கு அழுத மகேஷ், சற்றே நிதானப்பட்டதும் தொடர்ந்தார்.

தோழர் செங்கொடி: மரண தண்டனைக்கு எதிரான இறுதி உயிராக இருக்கட்டும்!

”சனிக்கிழமை அன்னிக்கி நளினி – முருகனோட மக, அரித்ராவோட குரலை டிவில கேட்டா. அதுக்கு அப்புறம் அவ தன்னோட வசத்துலயே இல்ல. ’21 வருஷங்கள்ல ஒரேயொருமுறைதான் தன் அப்பா – அம்மாவ அரித்ரா பார்த்திருக்காளா?’னு திரும்பத் திரும்ப கேட்டா.

முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தப்ப முத்துக்குமார் தன்னைத்தானே எரிச்சுகிட்டது செங்கொடி மனசுல ஆழமான தழும்பா பதிஞ்சு போச்சு. முத்துக்குமாரோட இறுதி ஊர்வலத்துல கூட எங்களோட கலந்துகிட்டா. அரித்ராவோட குரல், அவளோட தழும்பை கீறி விட்டா மாதிரி இருந்திருக்கணும். ஒரு மாதிரி மவுனமாவே இருந்தா. நாங்க அவளுக்கு உடம்புதான் சரியில்லை போலனு கோயம்பேடு உண்ணாவிரதத்துக்கு இன்னிக்கி (ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 28) காலைல கிளம்பி போனோம்.

மாலை 5 மணி போல திரும்பி வந்த எங்களுக்கு செங்கோடிய காணாதது முதல்ல பெரிசா தெரியலை. ஏன்னா, அவ பக்கத்துல இருக்கிற முந்திரிதோப்புக்கு அடிக்கடி போய் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பா. அதுமாதிரி போயிருக்கா போலனு நினைச்சோம். ஆனா, டிவிஎஸ் 50 எக்ஸ்எல் வண்டி, வழக்கமா நிக்கிற இடத்துல இல்ல. அலுவலகத்துல இருந்த பிள்ளைகளும் செங்கொடி அக்காவ ரொம்ப நேரமா காணும்னு சொன்னாங்க. அப்படியே உடம்பெல்லாம் பதறிடுச்சு. முந்திரிதோப்புக்கு வண்டில போக மாட்டா. அதனால நாங்க எல்லாரும் நாலா பக்கமும் சிதறி செங்கொடிய தேடினோம்.

அப்பத்தான்…” வார்த்தைகள் தடைப்பட, குரல் மேலும் உள்ளிரங்க வெடித்து அழுதார் மகேஷ்.

அவர் விட்ட இடத்திலிருந்து சில நிமிடங்களுக்கு பிறகு மேகலா தொடர்ந்தார். ”அப்பதான் தாலுகா ஆபீஸ்ல ஒரு பொண்ணு தன்னைத்தானே எரிச்சுகிட்டதா ஃபோன் வந்தது. பதறிப் போய் ஜி.எச்.சுக்கு ஓடினோம். அது செங்கொடிதான்னு அடையாளம் தெரிஞ்சதும் அப்படியே நாங்க நொறுங்கிட்டோம்.

தாலுகா ஆபீஸ் இருக்கிற வளாகத்துலயேதான் தீயணைப்பு நிலையமும் இருக்கு. ஆனா, எங்க தன்னோட போராட்டத்தை அணைச்சுடப் போறாங்களோனு மண்ணெண்ணெய்க்கு பதிலா பெட்ரோலை செங்கொடி பயன்படுத்தியிருக்கா. இதுக்காக தாலுகா ஆபீஸ் பக்கத்துல இருக்கிற ‘வினாயகா பெட்ரோல் பங்க்’ல பாட்டில்ல வாங்கியிருக்கா.

மக்கள்கிட்டேந்துதான் பாடம் படிக்கணும்னு சொல்லிகிட்டு இருந்தவ எதனால இப்படியொரு முடிவு எடுத்தானு தெரியல…” மேகலாவாலும் அதன் பிறகு பேச முடியவில்லை. திருமாவளவன், வைகோ, கொளத்தூர் மணி… என அடுத்தடுத்து தலைவர்கள் மகேஷை பார்ப்பதற்காக வந்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த களேபரத்தில் இன்று காலை 7 மணி அளவில் கலைந்த உடைகளுடன் வந்து சேர்ந்த ஒரு பெரியவர், மருத்துவமனையின் வாசலிலேயே அமர்ந்துவிட்டதை யாரும் கவனிக்கவில்லை.

செங்கொடியின் கடிதத்தை நகலெடுத்து அனைவருக்கும் விநியோகித்துக் கொண்டிருந்தவர்கள், அந்தப் பெரியவரின் கரங்களிலும் ஒரு நகலை திணித்துவிட்டு சென்றார்கள். அதில் எழுதப்பட்ட வாசகங்களையே உற்றுப் பார்த்த அந்தப் பெரியவர் அழுத்தம் திருத்தமாக சொன்னார்:

”உணர்ச்சிவசப்பட்டு எதுக்காக இளைஞர்கள் இப்படியொரு காரியத்தை செய்யறாங்க? இதனால யாருக்கு லாபம்? போராடறதுக்கு இதுவா வழி? எனக்கு வயசாகிடுச்சு. இல்லைனா மக்களை திரட்டி கைல துப்பாக்கிய எடுத்திருப்பேன்…”

‘அடையாளப் போராட்டத்துக்கு பதிலா வேறு போராட்ட வழிமுறையே இல்லையா…’ என்று தன் சித்தப்பாவிடம் கேள்வி கேட்ட செங்கொடி, இந்தப் பெரியவர் சொன்ன பதிலை குறித்தும் யோசிக்க வழியின்றி சாம்பலாகிவிட்டார்.

எந்த முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை தட்டி எழுப்பியதை போல் தன் உடலும் மூன்று தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படட்டும் என்று நம்பிக்கையுடன் செங்கொடியை அழுத்தம்திருத்தமாக எழுத வைத்ததோ -அந்த முத்துக்குமாரின் அப்பாதான் அந்தப் பெரியவர் என்பதை சூழ்ந்திருக்கும் தலைவர்களை கடந்து யாரால் செங்கொடியிடம் இப்போது சொல்ல முடியும்?

அரசியலற்ற அமைதியிலும், விரக்தியிலும், நம்பிக்கையின்மையிலும் மூழகடிக்கப்பட்டிருந்த தமிழகத்தை தனது தீக்குளிப்பினால் இரு ஆண்டுகளுக்கு முன்னர் தட்டி எழுப்பினார் முத்துக்குமார். இன்றும் அதே நிலமையைக் காண்கிறோம். மூவர் தூக்கை நிறுத்தமளவு நம்பிக்கையூட்டும் போராட்டங்களும், அரசியல் முழக்கங்களும் தமிழகத்தை பற்றியிருந்தால் செங்கொடி தீக்குளிக்க நேர்ந்திருக்காது. அந்த வகையில் செங்கொடி தன் மீது ஊற்றிய பெட்ரோலுடன் இன்னும் விழித்தெழாத தமிழகத்தின் அரசியலற்ற கோழைத்தனமும் சேர்ந்திருக்கிறது.

செங்கொடியின் உடலை வேண்டுமானால் பெட்ரோல் எரித்திருக்கலாம். ஆனால் அந்த இளம்பெண்ணின் உள்ளத்தை மொன்னையான தமிழக அரசியல் சூழல்தான் எரித்திருக்கிறது. ஆகவே இது வெறுமனே தீக்குளிப்பினால் நடந்த தற்கொலை மட்டுமல்ல. சரியான திசைவழியில் போராடத் துணியாத தமிழகத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு விமரிசனம். ஆனால் விலை மதிப்பற்ற விமரிசனம். அந்த விமரிசனத்தின் மதிப்பறிந்தவர்கள் தங்கள் மீது சுயவிமரிசனம் செய்து கொள்ளட்டும்.

மூவர் தூக்கிற்கு காரணமான பாசிச காங்கிரசு அரசு, பாசிச ஜெயா, அநீதியான நீதிமன்றங்கள் மீதான நமது போராட்டம் மக்கள் அரங்கில் தொடரட்டும். செங்கொடி எனும் அந்த இளம்பெண்ணின் உயிரை இனி மீட்க முடியாது. ஆனால் அந்தப் பிஞ்சு உள்ளம் கவலைப்பட்ட சூழ்நிலையையாவது மாற்றுவோம்.

தோழர் செங்கொடி சென்று வாருங்கள், உங்களைப் புரிந்து கொண்ட தோழர்கள் பலர் இங்கிருக்கிறார்கள், உயிரைக் கொடுத்து நீங்கள் எழுப்பியிருக்கும் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்ற போராடுவார்கள். உங்கள் தீக்குளிப்பு அந்தப் போராட்டத்தின் மீது ஒரு நெருப்பாய் பற்றவைக்கும், போய் வாருங்கள்!

 

https://thesakkatru.com/veeramangi-sengodi/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் நினைவிருக்கிறது காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிதறிக் கிடந்த மலர்களின் வாசம்

 

Innum-Ninaivirukkirathu.jpg

 

இன்னும் நினைவிருக்கிறது காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிதறிக் கிடந்த மலர்களின் வாசம்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரணத்திற்கு நாள் குறிக்கப்பட்டு 2011 ஆகஸ்ட் 30 செவ்வாய் அன்று இறுதி மேல்முறையீடு வரவிருக்கிறது.
வழக்கறிஞர்கள் கயல், வடிவாம்பாள், சுஜாதா ஆகிய மூவரும் சாகும் வரை உண்ணாவிரதம் கோயம்பேட்டில் மேற்கொண்டிருக்கிறார்கள்.

தமிழகம் முழுதும் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைத்தால் மட்டுமே தடுக்க முடியும் என்று அரசியல் தலைவர்கள் என அனைவரும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவோ தூக்கை ரத்து செய்ய தனக்கு அதிகாரமில்லை என்று சட்டமன்றத்தில் அறிவிக்கிறார். எல்லாம் முடிந்துவிட்டதோ என எண்ணி எல்லோரும் அதிர்ச்சியடைந்திருந்த சமயம் அது. ஈழத்திலே இழந்துவிட்டோம், இந்த மூவரையும் பலி கொடுத்தோமென்றால் இனி தமிழனென்று சொல்லிக் கொள்ள நமக்கு எந்த தகுதியுமில்லை என்ற எண்ணம் மட்டும் அனைவருக்குள்ளும் இருந்தது.

அப்போது 27 ஆகஸ்ட் சனிக்கிழமை தோழர் திருமுருகன் கோயம்பேடு உண்ணாவிரதப் பந்தலில், ஆகஸ்ட் 30ம் தேதி காலை வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு வரும் போது தமிழகம் முழுதுமிருந்து தமிழ் உணர்வாளர்கள் லட்சக்கணக்கில் உயர்நீதிமன்ற வாசலில் திரண்டு நிற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார். பிரிந்து சென்று வீடு வீடாக சென்று கதவை தட்டி செவ்வாய் கிழமை காலை நீதிமன்றத்தில் கூட வேண்டியதன் அவசியத்தை சொல்லி அழைப்போம் என அழைப்பு விடுத்தார். அப்போது நான் மே பதினேழு இயக்கத்தில் பெரிதாக என்னை இணைத்துக் கொண்டிருக்கவில்லை. அந்த இடத்தில் உச்சகட்ட கோபத்துடன் தோழர் திருமுருகன் விடுத்த அழைப்பு மற்றவர்களின் பேச்சிலிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டியது. பல குழுக்களாக பிரிந்து புறப்பட்டோம்.

ஞாயிறு மாலை தான் எவரும் எதிர்பார்க்காத அந்த அதிர்ச்சி செய்தி வந்தது.
எதோ ஒரு பெண் காஞ்சிபுரத்தில் மூவர் தூக்கை ரத்து செய்யக் கோரி கடிதம் எழுதிவிட்டு தீக்குளித்து விட்டார் என்ற செய்தி.

”தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையில் செல்கிறேன்” என எழுதி வைத்திருந்தார்.

முத்துக்குமாரின் இறுதிக் கடிதத்தை படித்து அரசியல் படிக்க ஆரம்பித்தவன் என்பதால் இந்த மரணச் செய்தி இடியாய் எனக்குள் இறங்கியது. கோயம்பேடு அரங்கத்தில் பல தோழர்கள் மூலைகளில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்கள். உயிர்த்தியாகம் செய்த பெண் யாரென்று தோழர்களிடம் கேட்ட போது 21 வயது பெண் செங்கொடி, காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தில் இருந்தவள் என்றும், தொடர்ந்து இந்த போராட்டத்தில் இழந்து நம்முடன் தான் முழக்கமிட்டுக் கொண்டிருந்தார் என தெரிவித்தனர். அப்போது என் வயதை ஒட்டிய ஒரு பெண் எப்படி இந்த முடிவினை எடுத்தாள் என்ற அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. எவருடன் செல்வதென்றெல்லாம் தெரியவில்லை. காஞ்சிபுரம் புறப்பட்டேன். காஞ்சிபுரத்தில் தோழர் செங்கொடி உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனையை அடைந்தேன். மக்கள் மன்றத் தோழர்களும், பொதுமக்களும், பல இயக்கங்களின் தோழர்களும் அங்கு குழுமியிருந்தனர்.

பல தோழர்கள் துப்பாக்கிக் குண்டுகளை தாங்குவதற்கும் தயாராக இருந்தனர். 2009 க்கு பிறகு அப்படி ஒரு எழுச்சியை பார்த்ததில்லை. ”நம்ம வீட்டு பொண்ணு போயிடுச்சிய்யா, இன்னும் என்னையா போலிஸ்காரனுங்களுக்கு பாத்துகிட்டு இருக்கீங்க, தூக்கு முடியுற வரைக்கும், சென்னையை நோக்கி நம்ம பொண்ணை தூக்கிட்டுப் போவோம், அடிப்பானா, சுடுவானா என்ன பண்ணுவானா பண்ணட்டும்” என 80 வயது மதிக்கத்தக்க ஒரு தோழர் மருத்துவமனை வாயிலில் தழுதழுத்த குரலில் கத்திக் கொண்டிருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் காஞ்சிபுரத்தை நோக்கி திரள ஆரம்பித்தது.

திங்கள் மதியம் காஞ்சிபுரம் மருத்துவமனயிலிருந்து செங்கொடி உடல் வெளியே கொண்டுவரப்பட்டது. கோபமும், கண்ணீரும் கலந்த சமூகத்தின் பெரும்பகுதி அங்கு திரண்டிருந்தது. அந்த மொத்த நிகழ்வும் இன்னும் மனதில் சேமிக்கப்பட்ட வீடியோ காட்சிகளைப் போல் மனதில் இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளின் நடுவே, காஞ்சிபுரத்தின் வீதிகளில் செங்கொடியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும் காங்கிரஸ் கட்சியின் கொடிகள் எரிக்கப்பட்டன. ஜெயலலிதாவை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற பேச்சுக்களையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு, வழி நெடுகிலும் ஜெயலலிதா எதிர்ப்பு முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. தமிழகம் முழுதும் இந்த முழக்கங்கள் பரவ ஆரம்பித்தன.

செங்கொடியின் உயிர்த்தியாகத்தின் பின்னர் ஏற்பட்ட எழுச்சி ஜெயலலிதாவை அச்சுறுத்தியது. அதன் விளைவாகத்தான் சட்டமன்றத்தைக் கூட்டி, மூவர் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். அடுத்த நாள் நீதிமன்ற வாயிலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டிருக்க தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை என்று அறிவிக்கப்பட்டது. மரணத்தையும், தோல்வியையும் மட்டுமே தொடர்ந்து சந்தித்த தமிழினம் முதன்முறையாக தன் கண் முன்னே நிகழ இருந்த பச்சைப் படுகொலையை தடுத்து நிறுத்தியது. செங்கொடியின் உடல் வீரவணக்கம் செலுத்தி அடக்கம் செய்யப்பட்டது. செங்கொடியின் தியாகம் வரலாற்றில் மறக்க முடியாதது.

ஒருவேளை அன்றைய செவ்வாய்க்கிழமை வேறொன்றாக மாறியிருந்தால், இன்று தமிழ்நாட்டின் வரலாறு வேறாகவும் மாறியிருக்கவும் கூடும்.

யாரென்றே அறிந்திராத முத்துக்குமாரும், செங்கொடியும் என் வாழ்க்கையின் முக்கியமான அங்கமாக மாறிப்போனார்கள். செங்கொடியை உயிருடன் நான் கண்டதில்லை. செங்கொடி தன் வாழ்க்கையில் என்ன கனவுகளையெல்லாம் வைத்துக் கொண்டிருந்திருப்பாள் என எண்ணிப் பார்க்கையில், செங்கொடியின் உடல் மீது போர்த்தப்பட்ட மாலைகளிலிருந்து, காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிதறிக் கிடந்த மலர்களின் வாசம் தான் நினைவிற்கு வருகிறது.

பகிர்வு: நவீன் (28.08.2007)
காஞ்சிபுரம்,
தமிழகம்.

https://thesakkatru.com/i-still-remember-the-smell-of-flowers-scattered-at-kanchipuram-hospital/

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம் தோழர் செங்கொடி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.